சிறுவயதிலிருந்தே எனக்குக் கிராமங்கள், வயல்வெளி, திண்ணை வீடுகள் என்றால் ரொம்ப ஆசை.
கல்லூரி செல்லும் வரை நான் சென்னையை விட்டு எங்கும் சென்று தங்கியதில்லை. ஓரிரு முறை அக்கா வீட்டுக்குச் சென்றது தவிர.
அக்கா திருமணமாகிச் செல்லும் போது கூட நான் கேட்டது இது தான்; “அம்மு உங்க ஊர்ல வயல் இருக்குமா?”
அம்புலிமாமா போன்ற கதைப் புத்தகங்களில் வரும் கிராமம், ஆலமரம், குளத்தங்கரை, தோட்டம், சோலை, திண்ணை வீடு, முற்றம், இதையெல்லாம் கற்பனையிலேயே கண்டு திளைப்பதும், பெரியவளானதும் நிச்சயம் ஒரு கிராமத்தில் தான் சென்று வசிக்க வேண்டும் என்பதும் சிறுவயதில் எடுத்த தீர்மானங்களில் ஒன்று.
பொங்கல் பண்டிகையின் போது இந்த ஏக்கம் பன்மடங்கு கூடும். பாடப்புத்தகங்களில் வேறு ”பொங்கல்” என்ற தலைப்பில் பாடம் வந்தால் நம்மை வெறுப்பேற்றுவது போல் அழகிய மலையடிவாரத்தில் ஒரு வயல் படமும், திண்ணை வீடும், அதன் முன் அப்பா அம்மா சிறுவர்கள் என்று ஒரு குடும்பமும், மண்பானையில் பொங்கல் பொங்கி வழிய, அருகே கரும்புகளும், அலங்கரிக்கப்பட்ட இரு மாடுகளும் போட்டிருக்கும்.
”மாட்டுப் பொங்கலன்று மக்கள் தம் மாடுகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்துப் பொங்கலும் பழமும் ஊட்டுவர், பின்பு தம் மாடுகளை ஊர்வலமாக அழைத்துச் செல்வர்” என்று படித்து விட்டு அம்மாவிடம் சென்று ”இந்தப் பொங்கலுக்கு எனக்கு ஒரு மாடு வாங்கி வந்தா தான் ஆச்சு” என்று அடம்பிடித்ததும் அம்மா, ”நம்ம பால்காரரை அவரோட மாட்டைக் கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கேன், (அவர் பாக்கெட் பால் போடுபவர்) நீ பொங்கல் ஊட்டலாம்” என்று ஏமாற்றிச் சமாதானப் படுத்தியதும் ஞாபகம் வருகிறது.
என்றாவது ஒரு நாள் அந்தப் பாடப்புத்தகத்தில் இருப்பது போல் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நினைத்து இத்தனை வருடங்கள் ஓடி விட்டன.
ஹும், சூரியனின் கண்ணில் படுகிற மாதிரி பொங்கலும் வைத்ததில்லை, மாடுகளுக்குப் பொங்கல் ஊட்டியதுமில்லை.
இதில் என் மகளுக்குப் பொங்கல் பண்டிகை என்றால் என்ன என்று நான் சொல்லித் தருவது?
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!