Wednesday, June 24, 2009

சாலையோரமாய்....

Disclaimer: இது சாதத் ஹஸன் மாண்டோவின் சிறுகதைகளில் ஒன்று. அவரைப் பற்றி எனது முந்தைய பதிவு இங்கே. பாகிஸ்தான் பிரிவினை பற்றியே அதிகமாக எழுதியவர் என்ற கணிப்பை மாற்றுவதற்காகவே இச்சிறுகதையைத் தேர்ந்தெடுத்தேன். என் மொழி அவரது கதையின் வலிமையைக் குறைத்திருப்பின், அறிந்தவர்கள் மன்னிப்பீர்களாக.
*************

சாலையோரமாய்....

ஆம்! இதே பருவ காலம் தான் அப்போதும். வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே. குதூகலமானதொரு கனவைப் போல் வெயில் இதமாகக் காய்ந்து கொண்டிருந்தது. மனதை மயக்கும் மண்ணின் வாசம் என் நெஞ்சமெல்லாம் பொங்கி எழ, அவன் அருகில் கிடந்த நான் துடிக்கும் என் ஆவியை அவனுக்குச் சமர்ப்பித்தேன்.

அவன் சொன்னான்: “என் வாழ்வில் இதுவரை இருந்து வந்த பெருங்குறையை நீ நிவர்த்தி செய்து விட்டாய். அற்புதமான இந்தப் பொழுது என்னுள்ளே இருந்த வெற்றிடத்தைப் போக்கி பெரும் நிறைவை ஏற்படுத்தி இருக்கிறது. உன் காதல் மட்டும் இல்லாது போயிருந்தால் என் வாழ்வு சூன்யமாக இருந்திருக்கும், அல்லது அரைகுறையாக. உனக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பேன், நீ இன்று என்னை முழு மனிதனாக்கிவிட்டாய். இனி உன் தேவை எனக்கு இருக்காது என்றே தோன்றுகிறது.

அவன் சென்று விட்டான், திரும்ப வரவே மாட்டான் எனும்படியாக.

நான் அழுதேன். எனக்கு ஒரு பதில் சொல்லி விட்டுப் போகும்படி இறைஞ்சினேன் அவனை.
எப்படி நான் உனக்கு வேண்டாதவளாகிப் போனேன்? என் உயிரும் உடலும் உன் காதலுக்காக ஏங்கித் தீயில் எரிகிறதே? உன் வெறுமையைப் போக்கியதாக நீ சொல்லும் அதே அற்புதக் கணங்கள் என் ஆன்மாவில் மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கிச் சென்று விட்டனவே!

அவன் சொல்லி இருந்தான். “உன்னுடன் நான் பகிர்ந்த இந்தப் பொழுதில் உன் உயிரின் அணுக்கள் என்னை சேர்ந்து என்னை பரிபூரணம் அடையச் செய்து விட்டன. நம் உறவு திட்டமிட்ட ஒரு முடிவுக்கு வந்து விட்டது.”

இந்தக் குரூரமான வார்த்தைகள் என் மேல் கல்லெறிந்தது போலிருந்தன. நான் கதறியழுதேன். புலம்பினேன். ஆனால் அவன் மனம் கல்லாகி விட்டிருந்தது. நான் அவனிடம் சொன்னேன்.
“உன்னை முழுமையடையச் செய்ததாக நீ சொல்லும் அந்த உயிர் அணுக்கள் என் உடலுக்குச் சொந்தமல்லவா? நான உனக்கு அதைக் கொடுத்தேன். ஆனால் அத்துடன் நம் உறவு முடிந்து விடுமா என்ன? என்னிடம் விட்டுச் சென்ற உன் உயிருக்கும் உனக்குமான பிணைப்பை அறுத்து விட முடியுமா?

நீ முழுமை அடைந்தாய். ஆனால் என்னைப் பலவீனமாக்கி விட்டாயே? ஐயோ! உன்னைக் கடவுள் போல வணங்கினேனே!

அவன் சொன்னான், “மடலவிழ்ந்த மலர்களில் அமர்ந்து தேனருந்தும் வண்டுகள் ஒரு போதும் அந்த மலர்களை இருப்பிடமாக்கிக் கொள்வதில்லை, அவற்றின் மனக்கசப்பைப் போக்குவதுமில்லை.
ஆண்டவனே வணக்கத்துக்குரியவன். அவன் எதையும் வணங்குவதற்கில்லை. அவன் மாபெரும் சூன்யத்துடன் புணர்ந்து இவ்வுலகைப் படைத்தான். உடனே அச்சூன்யவெளி அற்றுப் போனது. பிரசவம் முடிந்ததும் தாய் இறந்து போனாள்.

பெண்ணால் அழ முடியும். வாதம் செய்ய முடியாது. அவளது மிகப்பெரும் வாதமும் ஆயுதமும் அவளது கண்ணீர் தான். கண்களில் பொங்கிவரும் கண்ணீருடன் நான் சொன்னேன், “என்னைப் பார், நான் கண்ணீர் சிந்துகிறேன். நீ போய்த்தான் ஆக வேண்டுமென்றால், உன் கைக்குட்டையில் இக்கண்ணீர்த் துளிகளைச் சுற்றி எடுத்துக் கொண்டு போய் எங்காவது தகனம்
செய்துவிடு. அடுத்த முறை நான் அழும் போது அவற்றின் நினைவு வரும். என் கண்ணீருக்கு உரிய இறுதி அஞ்சலி உன்னால் செலுத்தப்பட்டது என்ற உணர்வில் திருப்தியடைவேன். எனக்காக, என் மகிழ்ச்சிக்காக இச் சிறு செயலைச் செய்வாயா?’

அவன் சொன்னான், “ நான் ஏற்கெனவே உனக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட்டேன். அதுவரை கானல் நீர் போல் இருந்த உன் வாழ்வில் மிக உன்னதமான இன்பத்தை நான் வந்ததால் நீ அடைந்தாய்.
அந்த நினைவில் உன்னால் உன் வாழ்நாளின் மிச்சத்தைக் கழிக்க முடியாதா? நான் முழுமையடைந்ததால் நீ முழுமையற்றுப் போனதாகச் சொல்கிறாயே? முழுமையற்ற நிலை தான் வாழ்வு தொடர்வதற்கான உந்துசக்தியல்லவா? நான் ஆண். இன்று நீ என்னை முழுமையாக்கினாய். நாளை அது வேறொரு பெண்ணாக இருக்கும். இதே இன்பத்தைப் பல கோடி முறை பெற்று அனுபவிக்கும் படியாக நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன். நீ நிரப்பிய வெற்றிடம் மறுபடியும் உருவாகும் போது அதை நிரப்ப வேறு யாராவது இருப்பார்கள்.

நான் அழுதுகொண்டே இருந்தேன்.

”அந்த மகத்தான பொழுது என் கையில் பிடித்து வைத்த தண்ணீர் போல வடிந்து போய் விட்டதே.

ஐயோ! ஏன் நான் அந்த மாய வலையில் கட்டுப்படச் சம்மதித்தேன்? கட்டுக்கடங்காமல் துடிதுடித்துக் கொண்டிருந்த என் ஆத்மாவைச் சிறையில் அடைத்துவிட்டேனே. ஆம் அந்தப் பரவசத்தை விளக்க வார்த்தைகளே இல்லை தான்! நாங்கள் இரண்டறத் தழுவிக் கிடந்தது ஒரு கனவு போலவே இருக்கிறது. ஆம் அது ஒரு விபத்து தான். ஆனால் அந்த விபத்திலிருந்து கொஞ்சமும் சேதமில்லாமல் முழுமையாக அவன் வெளியேறிச் சென்று விட்டான், என்னை சேதப்படுத்தி உடைத்துவிட்டு. ஏன் நான் அவனுக்கு வேண்டாதவளாகிப் போனேன்? அவன் மீது எனக்குள்ள ஆசை என் உடலையும் ஆவியையும் ஒரு சேரத் தீ வைத்து எரிக்கும் போது?

என் சக்தியை நான் அவனுக்குக் கொடுத்து விட்டேன். நாங்கள் இரண்டு மேகங்கள் போல இருந்தோம். ஒன்று கடும் மழையுடன் சூல் கொண்டு; இன்னொன்று பேரிடியையும் மின்னலையும்
வெட்டி விட்டு மறைந்து விட்டது. என்ன விதமான நீதி இது? இயற்கையின் நியதியா? அல்லது இறைவனின் நியதியா?

ஆம், இதையெல்லாம் நான் யோசித்தேன்.

இரு ஆன்மாக்கள் சந்தித்துக் கொண்ட பின் ஒ்று சாகாவரம் பெற்று விலகிச் செல்கிறது. இரு ஆன்மாக்கள் இணையும் போது பிரபஞ்சம் எனும் புள்ளியில் இரண்டும் ஒருமித்துக் கலந்துவிட வேண்டாமா?

ஆம்! இதே பருவ காலம் தான் அப்போதும். வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே. குதூகலமானதொரு கனவைப் போல் வெயில் இதமாகக் காய்ந்து கொண்டிருந்தது. மனதை மயக்கும் மண்ணின் வாசம் என் நெஞ்சமெல்லாம் பொங்கி எழ, அவன் அருகில் கிடந்த நான் துடிக்கும் என் ஆவியை அவனுக்குச் சமர்ப்பித்தேன்.

அவன் இங்கே இல்லை. அந்த மின்னல் தற்போது வேறு மழை மேகங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கக் கூடும். முழுமை அடைந்ததாகச் சொல்லி என்னை விட்டு விலகியவன் அவன். ஒரு பாம்பைப் போல் என்னக் கடித்தவுடன் நகர்ந்து சென்று விட்டான். ஆனால் இது என்ன? என் அடிவயிற்றில் என்னவோ புதிதாகத் துடிக்கிறதே. நான் முழுமை பெறுவதற்கான ஆரம்பமா இது?

இல்லை. இருக்க முடியாது. இது என் கையில் இருக்கிறது. ஆனால் ஏன் என் உடலின் வெற்றிடங்கள் நிரம்பி வருகின்றன? என்ன விதமான குப்பை இந்தப் பாழ் உடம்பை நிறைக்கிறது?
என்ன விந்தையான உணர்ச்சிகள் என் நரம்புகளில் ஓடுகின்றன? ஏன் நான் என் மொத்த ஆவியையும் திரட்டி என் வயிற்றில் இருக்கும் அந்தச் சின்ன உயிருடன் கலந்து விடத் துடிக்கிறேன்? மூழ்கும் எனது வாழக்கைக் கப்பல் எந்தப் பெருங்கடலில் உயிர்பெற்றுக் கரை சேரப் போகிறது?

என் உடலில் பற்றி எரியும் தீயில் பால் கொதிப்பதை உணர்கிறேன். வரப்போகும் அந்த விருந்தாளி யார்? யாருக்காக என் இதயம் இரத்தம் சிந்தி மென்மையான படுக்கைகள் நெய்து
கொண்டிருக்கிறது? என் மனக்கண்ணும் பல்லாயிரம் வண்ணங்களில் நூல் நூற்றுக் கண்ணைப் பறிக்கும் ஆடைகள் தைத்து அழகு பார்க்கிறதே!

யாருக்காக என் மேனி பொன் வண்ணமாக மாறி வருகிறது?

ஆம்! இதே பருவ காலம் தான் அப்போதும். வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே. ஆனால் ஏன் அந்த வானம் இப்போது என் வயிற்றின்
மீது வந்து குடை பிடிக்கிறது? ஏன் அவன் கண்களின் நீலம் என் உடலில் இரத்தமாகச் சீறிப் பாய்கிறது?

ஏன் என் உருண்ட தனங்கள் கோயில் கோபுரங்களைப் போல் புனிதமாகக் கூம்பி நிற்கின்றன?

இல்லை! இந்நிகழ்வுகளில் யாதொரு புனிதமும் இல்லை. இக்கோபுரங்களை நான் நொறுக்கி விடப் போகிறேன். வேண்டாத விருந்தாளிக்காக விருந்து சமைத்துக் கொண்டிருக்கும் என்
உடலின் நெருப்பை நான் நீரூற்றி அணைக்கப் போகிறேன். அந்த வண்ண வண்ண நூல்களைச் சிக்கலாக்கிப் பிய்த்தெறியப் போகிறேன்.

ஆம்! இதே பருவ காலம் தான் அப்போதும். வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே. ஆனால் ஏன் அவன் சுவடே மறைந்து விட்ட அந்த
இடங்களையும் பொழுதுகளையும் மீண்டும் மீண்டும் நினைவு கூர்கிறேன்? ஆனால் இது என்ன புதுச் சுவடு என் வயிற்றினுள்? ஒரு சின்னஞ்சிறு பாதமா? உண்மைதானா?

இல்லை நான் அதை அழிக்கப் போகிறேன். இது என்னைப் பீடித்திருக்கும் புற்று நோய். தீராப்பழி.

ஆனால் ஏன் அமுதினும் இனிய மருந்தாக என் காயங்களை ஆற்றுகிறது? எந்தக் காயத்தை ஆற்ற வந்த மருந்து இது? அவன் விட்டுச் சென்ற காயத்தையா?

இல்லை நான் பிறவி எடுத்தது முதல் சுமந்து வந்திருக்கும் காயத்தை. என் கருவறையில் எப்போதும் மறைமுகமாக இருந்து வந்துள்ள காயம் அது.

ஹீம். கருவறை. என்ன அது. வேண்டாத வெறும் மண்கலம் தான் அது. அதைச் சுக்கு நூறாக்க உடைத்தெறியப் போகிறேன்.

ஆனால் என் செவிகளில் குரல்கள் ஒலிக்கின்றன. இவ்வுலகம் ஒரு நாற்சந்தி. அதன் நடுவில் உன் மண்கலத்தை உடைக்காதே. உன்னை நோக்கி விரல்கள் நீட்டப்படும்.

ஆம் இவ்வுலகம் ஒரு நாற்சந்தி தான். அவன் என்னை முடிவில்லாத இரு வீதிகளின் இடையே விட்டு சென்றுவிட்டான், கண்ணீரை மட்டுமே தந்து விட்டு.

ஒரு கண்ணீர்த்துளி நழுவி என் சிப்பியில் விழுந்து முத்தாகி இருக்கிறது. யாரை அலங்கரிக்க?
இந்தச் சிப்பி திறந்து முத்து வெளிவரும் போதும் தான் விரல்கள் நீட்டப்படும் என்னை நோக்கி.
வெறும் விரல்கள் அல்ல. அவை பாம்புகளாக மாறி இந்த முத்தைக் கடித்து விஷமேற்றப் பார்க்கும்.

வானம் கழுவி விட்ட மாதிரி தெளிந்த நீல நிறமாக இருந்தது, அவன் கண்களைப் போலவே.
ஐயோ! அது இற்று வீழக் கூடாதா இப்போது? எந்தத் தூண்கள் அதைத் தாங்கி நிற்கின்றன?
பிரளயம் வந்து இப்பூமியின் ஆதாரத்தையே அசைக்கக் கூடாதா? ஏன் அந்த வானம் என் தலை மீது குடையாக ஆதரவளிக்கிறது?

எனக்கு வியர்த்து விறுவிறுக்கிறது. என் உடலின் சகல துவாரங்களும் திறக்கின்றன. எங்கும்
தீப்பற்றி எரிகிறது. என் கலத்தில் பொன் உருக்கப்படுகிறது. தீ நாக்குகள் அதைத் தழுவத் தழுவ எரிமலைக் குழம்பாகப் பொன் உருகி வழிகிறது. அவன் கண்களின் நீல நிறம் என் நரம்புகளில் பாய்ந்தோடுகிறது. எங்கோ மணியடிக்கும் சப்தம். யாரோ ஓடி வந்து கதவடைக்கிறார்கள்.

அது வரும் நேரமாகிவிட்டது.

என் கண்களில் தூக்கத்தில் களைத்திருக்கின்றன. நீலவானம் அழுக்கடைந்தாகி விட்டது. சற்று நேரத்தில் இடிந்து வீழும்!

யாருடைய அழுகுரல் அது? தயவு செய்து அதை நிறுத்துங்கள். என் நெஞ்சில் சம்மட்டியால் அடிப்பது போல் இருக்கிறது.

என் மடி காத்திருக்கிறது. என் கரங்கள் அதைத் தழுவிக்கொள்ள நீள்கின்றன. என் உடலின் வெப்பத்தில் பால் காய்ந்து கொதித்துக் கொண்டிருக்கிறது. என் உருண்ட தனங்கள் கிண்ணங்களாக மாறியுள்ளன. என் உயிரை என்னிடம் கொண்டுவாருங்கள். இதமாக என் மடியில் கிடத்துங்கள்.

இல்லை. அதை என்னிடமிருந்து பறித்து விடாதீர்கள். எங்கே கொண்டு போகிறீர்கள்?

வேண்டாம். கடவுள் பெயரால் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

விரல்கள்..விரல்கள்..நீட்டட்டும் அவர்கள். எனக்குக் கவலை இல்லை. உலகம் நாற்சந்தியாகவே இருக்கட்டும் என் மண்கலத்தைத் தைரியமாக நான் அங்கு நின்று உடைப்பேன்.

என் வாழ்க்கை நாசமாகி விடுமா? போகட்டும். என் உயிர்ச்சதையை என்னிடம் தாருங்கள். என் ஆன்மாவை என்னிடமிருந்து பறிக்காதீர்கள். அது எனக்கு எவ்வளவு விலைமதிப்பற்றது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். என்னை முழுமையடையச் செய்த அந்த மாயக் கணங்கள் செய்த அற்புதக் கனி அது. இதுவல்லவோ என் பிறவிப்பயன்?

நம்பிக்கை இல்லாவிடில் இதோ என் காலி வயிற்றைக் கேளுங்கள். பால் நிரம்பி வழியும் என் தனங்களைக் கேளுங்கள். என் உடலின் ஒவ்வோர் அணுவும் இசைக்கும் தாலாட்டினைக்
கேளுங்கள். தொட்டிலாக ஆடத் துடிக்கும் என் கரங்களைக் கேளுங்கள்.

குற்றம் சாட்ட நீளும் விரல்கள் நீண்டு விட்டுப் போகட்டும். அவற்றை வெட்டி எடுத்து என் காதுகளை அடைத்துக் கொள்ளுவேன்; நானும் ஊமையாகி விடுவேன்; குருடும் ஆகிவிடுவேன்.
இந்தச் சின்னஞ்சிறு சிசு என்னை அறிந்து கொள்ளும். என் விரல்கலால் தடவி நான் அதை அறிந்து கொள்வதைப் போலவே.

உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். அதைக் கொண்டு சென்றுவிடாதீர்கள்.

என் பாற்செம்பைக் கவிழ்த்துக் கொட்டிவிடாதீர்கள். என் குருதியால் நான் நெய்த பட்டு மெத்தைக்குத் தீ வைத்து விடாதீர்கள். தொட்டிலாக ஆடும் என் கரங்களை வெட்டி விடாதீர்கள்.
அமுதகானமாக ஒலிக்கும் அந்த அழுகுரல் என் காதுக்கெட்டாதபடி செய்துவிடாதீர்கள்.

அதை என்னிடமிருந்து பிரித்து விடாதீர்கள்.

லாகூர், 21 ஜனவரி

புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையொன்றை இன்று போலிசார் சாலையோரத்தில் கண்டெடுத்தனர்.
அதன் பிஞ்சு உடல் ஈரத்துணியால் போர்த்தப்பட்டு, குளிரிலும் பசியிலும் இறந்து போகவேண்டும் என்ற திட்டத்தோடு கிடத்தப்பட்டிருந்தது. ஆனால் குழந்தை என்னவோ நலமுடன் பிழைத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதன் கண்கள் அழகிய நீல நிறமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

21 comments:

கே.என்.சிவராமன் said...

முதலில் கையை கொடுங்கள்... நல்ல கதையை தேர்ந்தெடுத்ததற்காகவும், அதை முடிந்த வரை தமிழாக்கம் செய்திருப்பதற்காகவும்... பதிவு முழுக்க உங்கள் உழைப்பு தெரிகிறது.

கடைசி பத்தி... நெகிழ வைத்துவிட்டது. அவ்வப்போது உங்களிடமிருந்து இதுமாதிரியான தமிழாக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Deepa said...

:-) நன்றி பைத்தியக்காரன். உடனே பார்த்து விட்டீர்களே.
இன்னொரு கதையும் செய்திருக்கிறேன். அது பிறகு.

ஆனால் உழைப்பு பற்றி நீங்கள் சொன்னது உண்மை தான். நான்கு மணி நேரங்கள் ஆனது. சரியான் வார்த்தைகளைத் தேர்வு செய்து அதை தட்டச்சு செய்து முடிக்கவும். தரத்தை நீங்கள் தான் சொல்ல வேண்டும். :-)

Nirosh said...

அழகான தமிழில் நல்ல அற்புதமான சிறுகதை. "வாழ்க உங்கள் தமிழாக்கம்... வளர்க உங்கள் கலைப்பயணம்....."
என்றும் உங்கள் புதிய நண்பன்...

நர்சிம் said...

மிக நல்ல தமிழாக்கம் தீபா. தொடருங்கள்.

//அவன் சொன்னான், “மடலவிழ்ந்த மலர்களில் அமர்ந்து தேனருந்தும் வண்டுகள் ஒரு போதும் அந்த வண்டுகளை இருப்பிடமாக்கிக் கொள்வதில்லை, அவற்றின் மனக்கசப்பைப் போக்குவதுமில்லை.
ஆண்டவனே வணக்கத்துக்குரியவன். அவன் எதையும் வணங்குவதற்கில்லை. அவன் மாபெரும் சூன்யத்துடன் புணர்ந்து இவ்வுலகைப் படைத்தான். படைத்தான். உடனே அச்சூன்யவெளி அற்றுப் போனது. பிரசவம் முடிந்ததும் தாய் இறந்து போனாள்.
//

எப்படி மொழிபெயர்த்தீர்கள்? அற்புதம்

மாதவராஜ் said...

தீபா!
அசந்து போய் நிற்கிறேன்.
கவிதையாய் வந்திருக்கிறது.
படைப்பின் மனமும், வலியும் எழுத்துக்களில் நிறைந்திருக்கின்றன. மொழியாக்கத்தின் வெற்றி.
கதை....இன்னும் என்னைப் பிழிந்து
கொண்டு இருக்கிறது.
பாராட்டுக்கள்... பாராட்டுக்கள்...பாராட்டுக்கள்.

Deepa said...

நன்றி நர்சிம்!

நன்றி அங்கிள்!

பாராட்டுக்கள் மாண்டோவுக்குத் தான்!
தாய்மையை இவ்வளவு வலியோடும் உணர்ச்சியோடும் நான் வேறெங்கும் படித்ததில்லை. நிதானமாகப் படித்துக் மொழிபெயர்ப்பில் உள்ள குறைகளையும் கூறவும். :-)

Deepa said...

Nirosh!

தங்கள் முதல் வருகைகும் பகிர்வுக்கும் மிக்க நன்றி!

அமிர்தவர்ஷினி அம்மா said...

படித்து முடித்தபின் ப்ரமித்து போய்விட்டேன் தீபா

நாங்கள் இரண்டு மேகங்கள் போல இருந்தோம். ஒன்று கடும் மழையுடன் சூல் கொண்டு; இன்னொன்று பேரிடியையும் மின்னலையும்
வெட்டி விட்டு மறைந்து விட்டது. என்ன விதமான நீதி இது? இயற்கையின் நியதியா? அல்லது இறைவனின் நியதியா?

இது போன்ற நிறைய மொழிபெயர்ப்புகளை படையுங்கள் தீபா.
அருமையாக இருக்கிறது உங்கள் கைவண்ணத்தில்.

மயாதி said...

உங்கள் கைவண்ணம் அருமையான தமிழ் வண்ணம்.

Deepa said...

நன்றி அமித்து அம்மா!

நன்றி மயாதி!

வேத்தியன் said...

அருமையா இருக்கு...

மிகவும் ரசித்தேன்...

Deepa said...

நன்றி வேத்தியன்!

Dr.Rudhran said...

very good..also try writing your own stories, you can

யாத்ரா said...

மிக அருமையான கதையை மிக அருமையாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள், மொழி பெயர்ப்பு கதையை வாசிக்கிறோம் என்ற உணர்வே ஏற்படவில்லை, சரளமான அழகான நடையில் உங்கள் மொழி பெயர்ப்பு. மிகவும் நன்றி, அருமையான கதையை மொழிபெயர்த்து வாசிக்க அளித்தமைக்கு.

சந்தனமுல்லை said...

ரசித்தேன் தீபா! தொடரட்டும்...

Deepa said...

நன்றி டாக்டர் ருத்ரன்!

நன்றி யாத்ரா!

நன்றி முல்லை!

ராம்.CM said...

அழகான தமிழாக்கம். அருமையான கதை. நல்ல தேர்ந்தெடுப்பு.வாழ்த்துகள்.

துபாய் ராஜா said...

/அழகான தமிழாக்கம். அருமையான கதை. நல்ல தேர்ந்தெடுப்பு.வாழ்த்துகள்/

பட்டாம்பூச்சி said...

மிக அற்புதம் தீபா.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல முயற்சியில் வெற்றியும் பெற்றுவிட்டீர்கள். தொடருங்கள்.... வாழ்த்துக்கள்!

Deepa said...

நன்றி பட்டாம்பூச்சி!
நன்றி உழவன்!