Monday, March 30, 2009

அழியாத கோலங்கள் - தொடர் பதிவுநன்றி: திரு. மாதவராஜ் - “ஆண்கள் எல்லாம் கொடுத்து வச்சவங்க

இது பெண்களுக்கான ஆட்டம். வாங்க வாங்க!


அன்புள்ள கவிதா,


எப்படி இருக்கிறாய்? என்னடா திடீரென்று இத்தனை வருடங்கள் கழித்து இவள் கடிதம் போட்டிருக்கிறாள் என்று நீ வியப்புறுவது தெரிகிறது.
நேற்று வீட்டுப் பரண்களைச் சுத்தம் செய்தேன். பழைய ஆட்டோகிராஃப் நோட்டு கண்ணில் பட்டது. “Wish you a happy future", "Can never forget you" போன்ற யாரென்று மறந்தும் போன பல நூறு கையொப்பங்களுக்கு இடையில் நான்கு பக்கக்களுக்கு நீ உருகி உருகி எனக்கு வடித்திருந்த மடல்...

நீ அதை எப்போது எழுதினாய் என்று கூட எனக்கு நினைவிருக்கிறது. கடைசி செமஸ்டர் தேர்வுகளுக்கு முன், ஹாஸ்டல் ரீடிங் ரூமில், படிக்கிறோம் என்ற பேர்வழியில் நான் உன் மடியில் தலை வைத்துப் படுத்துப் பாடிக் கொண்டிருந்தேன். (டி.வி. ரிப்பேர். அதனால் தோழியர் ஒளி(யில்லாமல்) ஒலியும் கேட்டுக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த நேரம்.)
நீ மட்டும் அமைதியாக எழுதிக் கொண்டே இருந்தாய். எட்டிப் பார்த்தேன். ”இனிமேல் நீ என்று என் மடியில் படுத்துக் கொண்டு இப்படிப் பாடப் போகிறாய்? விடிய விடிய அரட்டை அடிக்கப் போகிறோம்? அதிகாலையில் எழுந்து அக்ரி காலேஜுக்குச் சைக்கிளில் சென்று என்விரான்மெண்டல் ப்ராஜெக்டுக்காக மாட்டுச் சாணம் அள்ளி வரப் போகிறோம்?...” இந்த ரீதியில் அந்த சிட்டுக்குருவிகளின் கிறீச்சிடல்களுக்கு மத்தியில் கனத்த மௌனத்துடன் உனக்கே உரிய நிதானத்துடன் எழுதிக்கொண்டிருந்தாய்.
அப்போது நான் கூட உன்னைக் கிண்டல் செய்தேன், ”ஏன்டி இப்படி எல்லாம் எனக்கு வரிஞ்சு வரிஞ்சு எழுதறே. நம்ம ரெண்டு பேரும் மத்தவங்க மாதிரியா. நாம் எங்க இருந்தாலும் எப்போவுமே இப்படி இணை பிரியாம இருப்போம்.” எனக்குத் தான் ப்ராக்டிகல் அறிவு என்பது இந்நாள் வரை கிடையாதே. உனக்கு அப்போதே புரிந்திருக்கிறது.


ஆச்சு பத்து வருடங்கள். உனக்குக் கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உண்டு என்று அறிவேன். இன்னும் நேரில் ஒருவரைக் கூடப் பார்த்ததில்லை. என் மகள் பிறந்ததை ஃபோனில் சொன்னேன். அவள் பெயர் உனக்கு நினைவிருக்குமா என்று தெரியவில்லை. கல்லூரி விட்டு ஒரிரு வருடங்களுக்கு ஆர்வத்துடன் கடிதத் தொடர்பு இருந்தது நமக்குள். செல்ஃபோன் வந்தது. நம்பர் பரிமாறிக் கொண்டோம். அதன் பின் ‘எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம்’ என்றதால் கடிதம் எழுதுவது நின்றது. செல்லில் இன்னும் உன் நம்பர் KD என்ற உன் செல்லப் பெயரில். அழுத்தத் தான் நேரம் வருவதில்லை. பேசினாலும் என்ன பேசுவது? நான் இப்போது பேசுவது என் மகளுக்கு அம்மாவாக, வைகுந்த் மற்றும் உன் இரண்டாவது மகளின் (பார், பெயர் கூட நினைவில்லை) தாயிடம். குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் நலம் இவற்றைத் தாண்டி நாம் பேசப் பொதுவாக ஒன்றுமில்லை. நாலு வார்த்தை பேசுவதற்குள் உன் மகன் காலைப் பிடித்து இழுக்கிறான். என் மகள் ஃபோனையே பிடித்து இழுக்கிறாள். அது ஒரு தனி பரவசம் தான் இல்லையா? அதனால் தான் நாம் முற்றிலும் வேறு ஆட்களாக உரு மாறி பழைய நினைவுகளை மறந்தும் போகிறோமோ?என்றாவது நேரில் பார்த்தால் மனம் விட்டுப் பேசலாம் தான். அன்று ஹாஸ்டலில் கொட்டமடித்த அந்த இரு துடிப்பான இளம் பெண்களைப் பற்றி. அவர்களைக் கொஞ்ச நேரம் உயிர்ப்பித்துப் பார்க்கலாம். சந்திக்கலாமா?
நீ எப்போது சென்னை வருகிறாய். என்ன? அவருக்கு லீவ் கிடைக்காதா? இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு ட்ரிய்னிலோ பஸ்ஸிலோ நீ தனியாக வருவது சாத்தியமே தான். இங்கேயும் அதே தானே. குழந்தையையும் அழைத்துக் கொண்டு நான் இப்போது அங்கு வருவது எதற்கு? சந்தர்ப்பம் வரும் போது பார்க்கலாம். இப்போதைக்கு இந்தக் கடிதத்துக்குப் பதிலாவது எழுதேன்!


உன் அன்புள்ள,


மீனா


(கவிதாவாகப் பதிலெழுத நான் அழைப்பது திருமதி. சந்தனமுல்லை அவர்களை. )

Labels: ,

13 Comments:

At March 31, 2009 at 2:04 AM , Blogger நட்புடன் ஜமால் said...

அட நல்லாக்கீதே!

நிறைய கடிதங்கள் எழுதுங்க

 
At March 31, 2009 at 2:11 AM , Blogger உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

 
At March 31, 2009 at 2:25 AM , Blogger வித்யா said...

மாளா நினைவுகள்:)

 
At March 31, 2009 at 2:49 AM , Blogger Deepa said...

நட்புடன் ஜமால்!
டாங்ஸு பா!


வித்யா!
நீங்களும் எழுதலாமே.

 
At March 31, 2009 at 5:05 AM , Blogger வேத்தியன் said...

நல்லா இருக்குங்க...
வாழ்த்துகள்...
பட்டாம்பூச்சி விருதுக்கும் வாழ்த்துகள்...
தொடர்ந்து எழுதுங்க...

 
At March 31, 2009 at 5:55 AM , Blogger Deepa said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வேத்தியன்!

 
At March 31, 2009 at 9:53 AM , Blogger ஆ.முத்துராமலிங்கம் said...

நல்ல மடல் உணர்வுகளோடு உள்ளது
இம்மடல் இன்னும் பெருகி அஞ்சல்பெட்டிகள் நிறைய வேண்டும்.
வாழ்துக்கள் தீபாக்கா.
அடுத்து சந்தனமுல்லை அவர்களுக்கும்
முன் வாழ்த்துக்கள்

 
At March 31, 2009 at 10:20 AM , Blogger Deepa said...

திருத்தம்:

//இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு ட்ரிய்னிலோ பஸ்ஸிலோ நீ தனியாக வருவது சாத்தியமே “இல்லை” தான்//

ஒரு சின்ன சொல் தவறியதால் பொருளே மாறிவிட்டது. சுட்டிக்காட்டிய சந்தனமுல்லைக்கு நன்றி. (http://sandanamullai.blogspot.com)

 
At March 31, 2009 at 11:52 AM , Blogger மாதவராஜ் said...

This comment has been removed by the author.

 
At March 31, 2009 at 11:54 AM , Blogger மாதவராஜ் said...

அழியாத கோலங்கள் நல்ல தலைப்பு.
தினமும் வாசலில் போடும் கோலங்கள் அழிந்து விடும். என்றோ மனதில் போட்ட கோலங்கள் அழிவதில்லை. உண்மைதான்.

தீபா, சரி வேகம். வாழ்த்துக்கள். ரசிக்கும்படியான, உள்ளத்தைத் தொடும் நடை. சந்தனமுல்லையிடமிருந்து ஆவலுடன் எதிர் பார்ப்பவர்களில் ஒருவனாக இருக்கிறேன்.

 
At March 31, 2009 at 6:02 PM , Blogger ஷீ-நிசி said...

என்னதான் செல்ஃபோன், இமெயில், கடிதம் இருந்துவிட்டாலும், அவை எதுவுமே ஒருவரை அதிகம் இணைத்துவிடாது.. மாறாக உள்மன அன்பு இருக்கிறதே... அது ஒருநாளும் மறந்துபோகாது.. இது எதுவுமே இல்லாமல் போனாலும்,

கவிதையில் மன வேதனை, ஏமாற்றம், நிதர்சனம் என அனைத்தும் அப்படியே கண்முன் விரிகிறது...

வாழ்த்துக்கள் தீபா!

பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்!

 
At March 31, 2009 at 7:22 PM , Blogger மாதவராஜ் said...

அடடா..! சொல்ல மறந்துவிட்டேனே..
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

 
At March 31, 2009 at 11:08 PM , Blogger சந்தனமுல்லை said...

தீபா...

பதிவு போட்டாச்சு! சுட்டி இங்கே!
http://sandanamullai.blogspot.com/2009/04/blog-post.html அழைத்தமைக்கு நன்றி!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home