Friday, March 13, 2009

மிஷாவும் நானும்

என் சிறு வயது எண்ணற்ற கனவுகளில் இதுவும் ஒன்று! சோவியத் யூனியனுக்கு ஒருமுறையாவது சென்று வருவது. அது கனவு மட்டும் அல்ல, என் வாழ்க்கையின் தீர்மானம் என்றே நினைக்கும் படி வளர்க்கப்பட்டிருந்தேன்.என் பெற்றோருக்கு சொவியத் யூனியன் மீது அப்படியொரு பக்தி இருந்தது. வீட்டில் நிறைய பேசுவார்கள் அந்நாட்டைப் பற்றி. எப்பேர்ப்பட்ட புரட்சியின் விளைவு அது என்றும், குழந்தைகளுக்கும் உழைப்பளிகளுக்கும் பெண்களுக்கும் அது எப்படி ஒரு சுவர்க்க பூமியாக விளங்குகிறதென்றும், இந்தியாவுக்கு அது எவ்வளவு உதவிகளும் நேசக்கரஙளும் நீட்டி இருக்கிறதென்றும் இப்படி நிறைய. ஒலிம்பிக்ஸில் சோவியத் யூனியன் தங்கம் வென்றால் இந்தியாவே வென்றது போல் மகிழ்வோம்.


குழந்தைகளுக்கென பெரிய பெரிய எழுத்தில், அளவில் கலர் கலராகப் படம் போட்டு கதைப் புத்தகங்கள் வெளியிட்டது சோவியத் பதிப்பகங்கள் தாம். எங்கள் பள்ளி சின்ன பள்ளி. ஆண்டு விழா, விளையாட்டு விழா என்றால் இந்தப் புத்தகங்கள் தான் நிறய பரிசாகத் தருவார்கள். (விலையும் ரொம்பக் குறைவாக இருக்கும்)

இது போதாதென்று மிஷா என்றொரு குழந்தைகள் மாத‌ இத‌ழ் வ‌ந்து கொண்டு இருந்த‌து. ஆஹா! எவ்வ‌ள‌வு அழ‌கிய‌ வெண்ணெய் போன்ற‌ காகித‌தில் முழுக்க‌ முழுக்க‌ வ‌ண்ண‌ப் ப‌ட‌ங்க‌ளும் க‌தைக‌ளும் துணுக்குகளும், ப‌ட‌க்க‌தைக‌ளும் நிறைந்த‌ அருமையான‌ இத‌ழ‌ அது. அப்ப‌டி ஒரு குழ‌ந்தைக‌ள் இத‌ழை நான் இன்று வ‌ரை பார்க்க‌வில்லை. (உங்க‌ள் யாருக்கேனும் நினைவிருக்கிற‌தா மிஷாவை?)என் அம்மா ஓராண்டு முழுதும் வ‌ந்த‌ இதழ்களைப் பைண்டு செய்து வைத்தார்க‌ள். அதைப் பொக்கிஷ‌மாக‌ப் பாதுகாத்து வ‌ருகிறேன்.

திடீரென்று ஒரு நாள் ப‌ள்ளியிலிருந்து வ‌ந்த‌ போது வீடு இடி விழுந்த‌ மாதிரி இருந்த‌து. சோவிய‌த் யூனிய‌ன் உடைந்த‌து என்ற‌ செய்தி ப‌ர‌வி இருந்த‌து. அந்த‌ வ‌ய‌தில் அத‌ன் பின்ன‌ணியில் இருக்கும் அர‌சிய‌ல் எல்லாம் புரிய‌வில்லை என்றாலும் (இப்போ ம‌ட்டும் என்ன‌ வாழுதாம்)ரொம்ப அதிர்ச்சியாக இருந்த‌து. சோவிய‌த் யூனிய‌ன் என்ற‌ அமைப்பு இனி இல்லை. ரூபிளின் ம‌திப்பு இந்திய‌ ரூபாயை விட‌க் குறைந்து விட்ட‌து என்ப‌தெல்லா‌ம் ச‌கிக்க‌ முடியாத‌ சோக‌மாக‌ இருந்த‌து. என் க‌ன‌வு தேச‌த்துக்கு என்ன‌வாயிற்று?இதில் என்னால் புரிந்து கொள்ள‌வே முடியாத‌ ஒன்று உண்டென்றால் சோவிய‌த் யூனிய‌ன் மீது அள‌வு க‌ட‌ந்த‌ ந‌ம்பிக்கையும் ம‌திப்புன் வைத்திருந்த‌ சில‌ர் சிறிது நாட்க‌ளிலேயே அமெரிக்கா ப‌க்க‌ம் சாய்ந்து விட்ட‌து தான். உயிர் ந‌ண்ப‌ன் நோய்வாய்ப்ப‌ட்டு இற‌ந்த‌தும் "அவ‌ன் இற‌ப்பான் என்று என‌க்குமுன் கூட்டியே தெரியும் அந்த‌ அல்பாயுசை ம‌ற‌ந்து விட்டு இந்த‌ப் ப‌யில்வானோடு சினேகித‌ம் வைத்துக் கொள்" என்று கூறுவ‌து போல் இருந்த‌து சில‌ரின் பேச்சு. அதைத் தான் என்னால் ச‌கித்துக் கொள்ள‌வே முடிய‌வில்லை.


மிஷா என்ற அந்தக் குட்டிக் கரடி இன்னும் என் க‌ன‌வுக‌ளில் வ‌ருகிற‌து. என் ம‌க‌ளின் ம‌க‌ளுட‌ன் விளையாட‌ வ‌ருவேன் என்று சொல்லுகிற‌து. :-)

27 comments:

மாதவராஜ் said...

அந்த கனவு கலைந்து போன வேதனை இன்றுவரையிலும் எனக்குள் கலந்துதான் இருக்கிறது. கிரேனில் லெனின் சிலை தூக்கப்பட்ட காட்சிகள் துடிதுடிக்க வைத்தன. உலகம் முழுவதுக்கும் இலக்கியத்தை அள்ளி அள்ளிக் கொடுத்த தேசம் அல்லவா.. இலக்கியம் மட்டுமா நம்பிக்கையையும் தானே.

இந்த பதிவு, ஏராளமான நினைவுகளை அசைபோட வைக்கிறது.

ஆயில்யன் said...

//மிஷா என்றொரு குழந்தைகள் மாத‌ இத‌ழ் வ‌ந்து கொண்டு இருந்த‌து. ஆஹா! எவ்வ‌ள‌வு அழ‌கிய‌ வெண்ணெய் போன்ற‌ காகித‌தில் முழுக்க‌ முழுக்க‌ வ‌ண்ண‌ப் ப‌ட‌ங்க‌ளும் க‌தைக‌ளும் துணுக்குகளும், ப‌ட‌க்க‌தைக‌ளும் நிறைந்த‌ அருமையான‌ இத‌ழ‌ அது. அப்ப‌டி ஒரு குழ‌ந்தைக‌ள் இத‌ழை நான் இன்று வ‌ரை பார்க்க‌வில்லை//

ஓ எனக்கு ஒரு முறை உறவினர் வீட்டிற்கு சென்றபோது மிகவும் பிரியப்பட்டு பார்த்த புத்தகம் வண்ணவண்ணமயமான படங்கள் முகப்பில் பல ரஷ்ய பெண்கள் நிற்கும் படம் கூட எனக்கு நினைவில் இருக்கிறது :)

சோவியத் யூனியன் என்ற சொல்லினை கேட்டாலே எனக்கு அந்த புத்தகம் பார்த்த ஞாபகம் மட்டுமே வரும்!

ஏன் அது உடைஞ்சது என்ன ஏதுன்னு அவ்ளோவா தெரியாட்டியும் கூட எதோ ஒரு சோகம் மனதில் படரும் :((

Subbu said...

அந்த வழவழ பேப்பர்கள்... ஓவியங்கள்! மறக்க முடியுமா மிஷாவை. எங்கள் நிறைய நாட்கள் பல மாத இதழ்களைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தோம். பின்னாட்களில் அவற்றை இழந்துவிட்டோம். சோவியத், சோவியத் நாடு போன்ற புத்தகங்களும் ஞாபகத்துக்கு வருகின்றன.

ஆதவா said...

சோவியத் என்றாலே எனக்கு புன்னகை வரும்,... (பார்க்க எனது வலைப்பூ.. (http://aadav.blogspot.com/2009/03/blog-post_08.html))

லெனின், மார்க்ஸ், குறிப்பாக எங்கெல்ஸ்.... இயக்கவியல் குறித்த எங்கெல்ஸின் புத்தகம் படித்துவிட்டு, அதைப் போன்றதொரு புத்தகத்திற்கு அலைந்த காலம் உண்டு!!... (வெறும் 5 ரூபாய்க்கு வாங்கிய புத்தகம் அது!)

உங்கள் அனுபவம்... என்னை மீண்டும் அசைபோட வைக்கிறது

butterfly Surya said...

அது ஒரு கொடிய வேதனைதான்.

நான் முதன் முதல் வாங்கிய புத்தகம் லெனின் வாழ்க்கை பற்றிய புத்தகம்தான்.

இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.


அமெரிக்காவின் டவுசர் கிழிய ஆரம்பித்துவிட்டது.. அவர்கள் செய்த கொடுமைகளுக்கெல்லாம் காலம் பதில் சொல்லும்...

வினைவிதைத்தவன் வினை அறுப்பான்..

வரலாறு மீண்டும் மாறும் என்ற நம்பிக்கையுடன்...

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

Deepa said...

Uncle!

நன்றி. நீங்கள் அசை போட்ட நினைவுகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

Deepa said...

ஆயில்யன்!

//ஏன் அது உடைஞ்சது என்ன ஏதுன்னு அவ்ளோவா தெரியாட்டியும் கூட எதோ ஒரு சோகம் மனதில் படரும் :((//

அதே தான் எனக்கும்.

Deepa said...

சுப்பு!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

ஆம். சோவியத் நாடு, சோவியத் யூனியன் போன்ற பத்திரிகைகளும் வந்தன. அவற்றிலும் சிறுவர் பகுதி என்று ஒரு பக்கம் வரும்! அதைத் தேடி படிப்போம்.

Deepa said...

ஆதவா!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
உங்கள் பக்கத்தைப் படித்தேன். என்ன சொன்னாள் நடாஷா? சீக்கிரம் சொல்லுங்கள்!

Deepa said...

வண்ணத்துப் பூச்சியாரே!

//அமெரிக்காவின் டவுசர் கிழிய ஆரம்பித்துவிட்டது.. அவர்கள் செய்த கொடுமைகளுக்கெல்லாம் காலம் பதில் சொல்லும்... //

அழ‌காக‌ச் சொல்லி இருக்கிறீர்க‌ள்!

ஆதவா said...

அதை அடுத்த பதிவிலேயே கொடுத்திருந்தேன்.. நீங்கள் அதைக் கவனிக்கவில்லையா...

அதன் லிங்க் இங்கே...

http://aadav.blogspot.com/2009/03/2.html

அகநாழிகை said...

நூலகம் சென்றவுடன் நான் எடுத்து வாசிப்பது சோவியத் யூனியன் பத்திரிகையைதான். பின்னூட்டத்தில் பலரும் சொல்லியிருப்பது போல், அது ஒரு இனிமையான கனாக்காலம்.
வில் ஸ்மித் நடித்த “The Pursuit of Happiness” படம் பற்றிய எனது கருத்தினை பதிவு செய்துள்ளேன். படித்து தங்கள் கருத்தினை கூறுமாறு அன்புடன் கோருகிறேன். நன்றி.
www.aganaazhigai.blogspot.com

- பொன். வாசுதேவன்

Deepa said...

வாருங்கள் அகநாழிகை!

(என்ன அழகான பெயர்! அர்த்தம் என்ன?) உங்கள் பதிவைப் படித்துப் பின்னூட்டம் இட்டிருக்கிறேன். பாருங்கள்.

ராம்.CM said...

அழகாக சொல்லியிருக்கீர்கள்...! வாழ்த்துகள்!.

நட்புடன் ஜமால் said...

\\அவ‌ன் இற‌ப்பான் என்று என‌க்குமுன் கூட்டியே தெரியும் அந்த‌ அல்பாயுசை ம‌ற‌ந்து விட்டு இந்த‌ப் ப‌யில்வானோடு சினேகித‌ம் வைத்துக் கொள்\\

ஹூம் என்ன செய்ய ...

’நானும்’ இருக்கும் உலகம் இப்படித்தான் போல ...

Deepa said...

நன்றி ராம்.CM!

வாங்க நட்புடன் ஜமால்!

அது என்ன ‘நானும்’ இருக்கும் உலகம்?

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல நினைவுப் பகிர்தல் தீபா

மிஷா பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் சோவியத் ரஷ்யா என்றால் ஒரு பிடித்தம் என்னிடமும் இருந்தது.

சோவிய‌த் யூனிய‌ன் உடைந்த‌து என்ற‌ செய்தி ப‌ர‌வி இருந்த‌து. அந்த‌ வ‌ய‌தில் அத‌ன் பின்ன‌ணியில் இருக்கும் அர‌சிய‌ல் எல்லாம் புரிய‌வில்லை என்றாலும் (இப்போ ம‌ட்டும் என்ன‌ வாழுதாம்)ரொம்ப அதிர்ச்சியாக இருந்த‌து.//

எனக்கும் அது போன்ற அதிர்ச்சியே.

உயிர் ந‌ண்ப‌ன் நோய்வாய்ப்ப‌ட்டு இற‌ந்த‌தும் "அவ‌ன் இற‌ப்பான் என்று என‌க்குமுன் கூட்டியே தெரியும் அந்த‌ அல்பாயுசை ம‌ற‌ந்து விட்டு இந்த‌ப் ப‌யில்வானோடு சினேகித‌ம் வைத்துக் கொள்" என்று கூறுவ‌து போல் இருந்த‌து சில‌ரின் பேச்சு.
நல்ல உதாரணம்


மிஷா என்ற அந்தக் குட்டிக் கரடி இன்னும் என் க‌ன‌வுக‌ளில் வ‌ருகிற‌து. என் ம‌க‌ளின் ம‌க‌ளுட‌ன் விளையாட‌ வ‌ருவேன் என்று சொல்லுகிற‌து. :-)
அப்படியா,
கனவு மெய்ப்படட்டும்....

சந்தனமுல்லை said...

wow..நீங்களும் மிஷா ரீடரா?!! நானும் தான். அத்தனை பிரதிகளையும் பத்திரமாக வைத்து உள்ளேன்..மூன்று வருடங்களுக்கு மேலாக உள்ள பதிப்புகள்! நானும் அதைப் பற்றி ய பதிவு எழுதி ட்ராப்ட்-ல் இருக்கிறது..!!

சந்தனமுல்லை said...

நீங்கள் ஆர்குட்டில் இருந்தால், மிஷாவுக்கான ஒரு கம்யூனிட்டி இருக்கிறது. அதிலிருந்து ஒரு மின்பதிப்பை இணையம் மூலம் பெற்றேன்! இது ஒரு FYI!

Deepa said...

வாங்க சந்தன முல்லை!

நீங்கள் மூன்று வருடங்களுக்கு மேலான பிரதிகள் வைத்திருக்கிறீர்களா? சபாஷ்!
உங்கள் பதிவைப் படிக்க ஆவலாக இருக்கிறது. விரைவில் வெளியிடுங்கள்.
நானும் ஆர்குட்டில் போய்ப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

சந்தனமுல்லை said...

Hi Deepa,

posted here..

http://sandanamullai.blogspot.com/2008/10/misha.html

நசரேயன் said...

நல்ல மலரும் நினைவுகள்

காஞ்சி கோபி said...

மிஷா, இன்னும் அந்த வார்த்தை இனிய நினைவுகளை மீட்டெடுக்கிறது. எவரேனும் இன்னும் பத்திரபடுத்தி வைத்திருந்தால் வாங்கி பார்த்து அவ்ரை தொழ வேண்டும் போல் இருக்கிறது.சோவியத் உடைந்திருக்கலாம், ஆனால் மிஷா அதை உய்ர்ப்பிக்கிறது இன்னும் நினைவில். நன்றி மிஷா நினைவிற்கு

ஆ.ஞானசேகரன் said...

உண்மையான டச்...

வடுவூர் குமார் said...

எழுத்தில் அட்டகாசமான முன்னேற்றம் தெரிகிறது.
வாழ்த்துக்கள்.
எனக்கும் சோவியத்யூனியனை பற்றி அவ்வளவாக தெரியாது.

Anonymous said...

எதேச்சயாக படிக்க நேர்ந்த பதிவு. பழைய இனிய சோவியத் யூனியன் நினைவுகளை மீண்டும் ஒரு முறை நினைத்துப்பார்க்கத் தூண்டியது. பதிவோடு ஒத்த கருத்துள்ள பலர் பின்னூட்டங்கள் கண்டு பெருமகிழ்ச்சி.
பதிவுக்கு நன்றி!! வாழ்த்துகள்!! :-)