Monday, March 9, 2009

என் மகளின் முதல் பிறந்தநாள்!

விழா இனிதே ந‌ட‌ந்து முடிந்த‌து. நானும் அவ‌ள் அப்பாவும் எங்க‌ள் வீட்டில் ந‌ட‌த்தும் முத‌ல் விழா எனப‌தால் பொறுப்பும் பெருமித‌மும் கூடுத‌ல் ச‌ந்தோஷ‌த்தைத் த‌ந்த‌து.
மூன்று வார‌ங்க‌ளுக்கு முன்பே திட்டமிட்டு வேலைக‌ளைத் தொட‌ங்கி விட்டோம். ஒன்றுக்கு இர‌ண்டு ப‌ட்டுப் பாவாடைக‌ள் அமை‌ந்து விட்ட‌ன‌ குட்டிக்கு. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வித‌மாக‌ அவ‌ளுக்குத் தைத்துப் போட்டுப் பார்ப்பதற்குள் டெய்ல‌ர் அக்காவுக்கு செல்லமாகி விட்டாள். "உங்க அம்மா தனக்குச் சட்டை தைக்கிறதுக்குக் கூட இவ்வளவு ந‌டை ந‌ட‌ந்த‌தில்ல‌டீ!"

வீட்டைச் சுத்த‌ப்ப‌டுத்துவ‌து, ஒழுங்குப‌டுத்துவ‌து போன்ற‌ எங்களுக்கு அறவே பிடிக்காத வேலைக‌ள் கூட‌ நேஹா பிற‌ந்தநாளை ஒட்டி செய்யும் போது சுவார‌சிய‌மாக‌ இருந்த‌து. அவள் தாத்தா பாட்டி பெரியம்மா, அக்கா, அண்ணா எல்லாரும் ஊரிலிருந்து வந்தார்கள் . மேலும் அழைத்திருந்த நண்பர்கள் உறவினர்கள் அனைவருமே அட்டென்டன்ஸ் கொடுத்து மிகவும் சிறப்பாக ந்டத்திக் கொடுத்து விட்டார்கள். ஆனால் கொஞ்ச‌ நேர‌ம் சிரித்து அழகாகப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்துக்கு மேல் அழுது கத்த ஆரம்பித்து விட்டாள். இத்தனைக்கும் கூட்டம் ரொம்பவும் இல்லை. நானும் அவளும் மட்டுமே இருக்கும் வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் ஆட்கள் தூக்கவும் கொஞ்சவும் வருவதைப் பார்த்து மிரண்டு விட்டாள். அவள் அவ்வளவு அழுது பார்த்ததே இல்லை. (ஒரே ஒரு முறை கதவிடுக்கில் கை விரல் மாட்டிய சமயம் தவிர). பிறகு இரவு திரும்பவும் கலகலப்பாகி விளையாடத் தொடங்கி விட்டாள்.

இந்த விழா ஏற்பாடு செய்ததில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால்: எங்க‌ள் தெருவில் ப‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ள் இருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் ஒன்று சேர்ந்து விளையாடி பார்த்த‌தேயில்லை. அனைவ‌ரும் அவ‌ர‌வ‌ர் வீட்டில் டி.வி.ஹோம்வொர்க் என அடைந்து கிட‌க்கிறார்க‌ள் போலும். இவ‌ர்க‌ள் ஒருவ‌ருக்கொருவ‌ர் அறிமுக‌மாகிப் ப‌ழ‌க‌ ஒரு வா‌ய்ப்பாக‌ அமைந்த‌து.

கடந்த‌ ஓராண்டு என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. ஏழு வ‌ருட‌ங்க‌ளாக‌ப் பார்த்துக் கொண்டிருந்த‌ வேலையை என் செல்ல‌த்துக்காகத் துறந்தேன். (குடும்பத்தில் வேறு யாரும் குழந்தையைப் பார்த்துக் கொள்ள இயலாத சூழ்நிலையில் இருப்பதால், கொஞ்சம் அவள் வளர்ந்ததும் வேலைக்கு மீண்டும் சென்று விடலாம் என்ற நம்பிக்கை இருப்பதால்) தூக்க‌ம் தொலைத்த‌ எத்த‌னையோ இர‌வுகளை, அவ‌ளின் ஒவ்வொரு அசைவையும், வளர்ச்சியையும் அருகிருந்து பார்த்த‌ ப‌க‌ல் பொழுதுக‌ள் ஈடு செய்த‌ன‌.

ஆனாலும் சில‌ நேர‌ம் த‌லை காட்டும் சுய‌ இர‌க்க‌மும், சோர்வும் அவ‌ள‌து அழ‌கிய‌ குறுஞ் சிரிப்பில், சின்ன‌ஞ்சிறு விர‌ல்க‌ளின் இத‌மான‌ ஸ்ப‌ரிச‌த்தில், இன்னும் இன்னும் எத்த‌னையோ சொல்லி மாளா இன்பங்களில் ச‌ட்டென‌ மறைந்ததுண்டு! அவ‌ள் வ‌ந்த பிற‌கு தான் உண்மையில் என்னையே நான் புரிந்து கொள்ள‌வும் அவ‌ள் பொருட்டு என் எத்த்னையோ குறைக‌ளைக் களை‌ந்து சீராக்கிக் கொள்ள‌ முய‌ல‌வும் ஒரு ப‌க்குவ‌ம் வ‌ந்திருக்கிற‌து. மேலும், இத்தனை வருடங்களாக Taken for granted ஆகப் பார்த்த அம்மாவை ஒரு புதிய‌ க‌ண்ணோட்ட‌த்தில் பார்க்க‌ வைத்தாள். நேஹா! நான் உன்னை வ‌ள‌ர்ப்ப‌து இருக்க‌ட்டும் நீ இன்னும் எத்த‌னையோ வித‌த்தில் என்னைப் புதிது புதிதாக‌ வார்க்க‌ப் போகிறாய் என்றே தோன்றுகிறது. நன்றி க‌ண்ணே!

10 comments:

மாதவராஜ் said...

//"உங்க அம்மா தனக்குச் சட்டை தைக்கிறதுக்குக் கூட இவ்வளவு ந‌டை ந‌ட‌ந்த‌தில்ல‌டீ!"//

//இத்தனை வருடங்களாக Taken for granted ஆகப் பார்த்த அம்மாவை ஒரு புதிய‌ க‌ண்ணோட்ட‌த்தில் பார்க்க‌ வைத்தாள்.//

இந்த இரண்டு வரிகளும் இந்தப் பதிவின் அர்த்தமாகவும், அற்புதமான உறவுகளின் விந்தையாகவும் இருந்தன.

நேஹாவுக்கு என் வாழ்த்துக்கள்.

Deepa said...

Thanks uncle!

ஆயில்யன் said...

//ஒன்றுக்கு இர‌ண்டு ப‌ட்டுப் பாவாடைக‌ள் அமை‌ந்து விட்ட‌ன‌ குட்டிக்கு. //

எத்தனையோ விதவிதமான மாடர்ன் டிரெஸ்கள் வந்தாலும் பலரும் விரும்பினாலும் கூட இந்த பட்டு பாவாடை பட்டுச்சட்டை தரும் அழகே தனிதான் :))

நேஹாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும் சொல்லிக்கிறேன் :)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நேஹாவிற்கு

அவ‌ள் வ‌ந்த பிற‌கு தான் உண்மையில் என்னையே நான் புரிந்து கொள்ள‌வும் அவ‌ள் பொருட்டு என் எத்த்னையோ குறைக‌ளைக் களை‌ந்து சீராக்கிக் கொள்ள‌ முய‌ல‌வும் ஒரு ப‌க்குவ‌ம் வ‌ந்திருக்கிற‌து.//
மிகவும் உண்மை தீபா. குழந்தைகள் வந்தபிறகுதான் நமக்கான உலகமே நமக்கு புலப்படுகிறது.

நான் உன்னை வ‌ள‌ர்ப்ப‌து இருக்க‌ட்டும் நீ இன்னும் எத்த‌னையோ வித‌த்தில் என்னைப் புதிது புதிதாக‌ வார்க்க‌ப் போகிறாய் என்றே தோன்றுகிறது. நன்றி க‌ண்ணே!
இதே விதமான நன்றிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் எனது அமித்து செல்லத்திடம்.

தாய்மை என்ற உணர்வுகளால் ஒன்றானோம் தோழி.

நேஹாவிற்கு எனது அன்பு முத்தங்கள்

Deepa said...

ஆயில்யன்!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை. பட்டுப் பாவாடைக்கு இருக்கும் அழகே தனி தான்.

Deepa said...

அமித்து அம்மா!

உங்க‌ள் அன்பான‌ வாழ்த்துக்க‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி. நேஹாவும் உங்க‌ளுக்கு முத்த‌ங்க‌ள் அனுப்புகிறாள். அமித்துக் குட்டியை பார்க்க‌ வேண்டும் போல் இருக்கிற‌து.

//தாய்மை என்ற உணர்வுகளால் ஒன்றானோம் தோழி.//
:) ஆமாம். ப‌திவுல‌க‌த்துக்கு ரொம்பவும் ந‌ன்றி சொல்ல‌த் தோன்றுகிற‌து!

Thamiz Priyan said...

கொஞ்சம் லேட்டா இருந்தாலும் நேகாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Deepa said...

ரொம்ப நன்றி தமிழ் பிரியன்!

சந்தனமுல்லை said...

நேஹாவுக்கு வாழ்த்துகள்...தங்களுக்கும்:-) நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!! பப்புவின் முதல் பிறந்தநாளை என் மனதிற்குள் ஃப்ளாஷ் அடித்தது, இந்தப் பதிவைப் படிக்கும்போது!

வடுவூர் குமார் said...

லேட்டாகிவிடலையே!
குழந்தைக்கு என் வாழ்த்துகள்.