Tuesday, March 24, 2009

The Necklace - Part 2 (End)

“என்னம்மா, உனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கும்னு நினைச்சேன். நீ எங்கேயுமே போறதில்லயே, அதனால் இந்த விழா அழைப்பு கிடைக்க எவ்ளோ க்‌ஷ்டப்பட்டேன் தெரியுமா. எங்க இலாகாவில் எல்லா குமாஸ்தாக்களுக்கும் அழைப்பு கிடையாது. அங்கே பெரிய பெரிய ஆளெல்லாம் வருவாங்க.

பொறுமையிழந்து அவனை வெறுப்புடன் நோக்கிய அவள், “அப்ப்டி ஒரு விசேஷத்துக்கு நான் கட்டிக்கிட்டுப் போக என்ன இருக்குன்னு நினக்கிறே?”

“ஏன் நாம் நாடகத்துக்குப் போகும் போது போட்டுக்குவியே அந்த ட்ரஸ் உனக்கு ரொம்ப அழகாயிருக்கும்டா!”

அவள் அழத்தொடங்கினாள். அவன் பதறிப்போனான். “என்னடா, ஏன் அழறே சொல்லு?”

“ஒண்ணுமில்ல. நல்ல ட்ரஸ் எதுவிமில்லாம நான் வர முடியாது. அழகா ட்ரஸ் பண்ணிக்கக் கூடிய மனைவி இருக்கற உன் நண்பன் யாருக்காவது இதைக் கொடுத்துடு.”

அவன் கவலையில் ஆழ்ந்தான். “இரு மெடில்டா, ரொம்பவும் ஆடம்பரமில்லாம ஆனா நல்ல மதிப்பா ஒரு ட்ரஸ் வாங்க உனக்கு எவ்வளவு பணம் செலவாகும்? நீ டொடர்ந்து பயன்படுத்தற மாதிரி”

அவள் சற்று நேரம் சிந்தித்தாள். அவன் உடனடியாக மறுத்துவிடக் கூடாத அளவும் ஆனால் தனது தேவைகளுக்கு ஏற்றதாகவும் ஒரு தொகையைச் சொல்ல வேண்டுமே!
வெகு த்யக்கத்துடன் “என்னால சரியாச் சொல்ல முடியல. ஆனா, நானூறு ஃப்ராங்குகள் போதும்னு நினைக்கிறேன்”

அவன் கொஞ்சம் அதிர்ந்தான். அவன் ஒரு வேட்டைத் துப்பாக்கி வாங்க வேண்டுமென்று வெகு நாட்களாக விரும்பி சேர்த்து வந்த்திருந்த தொகை அவ்வளவே. ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு, “நல்லது மெடில்டா. நீ கேட்டதைத் தருகிறேன். ஆனா, நல்ல அழகான டிரஸ் வாங்கணும், என்ன”.

விழா நடைபெறும் நாளும் நெருங்கியது. அவள் ஆர்டர் கொடூத்த உடையும் தயாராகி வந்து விட்டது. இப்போது திருமதி லாய்செல்லுக்கு இன்னொரு கவலை. “இவ்வளவு அழகான உடைக்குப் பொருத்த்மா ஒரு நகை கூட என் கிட்ட இல்ல. நான் எப்படி வர முடியும்”

“ஹேய் அதனாலென்ன, அழகா பூக்கள் வாங்கி அலங்கரிச்சுக்கோ. அது தான் இப்பொ ஃபாஷன்னு நினைக்கிறேன்! “
“அதெல்லாம் நல்லா இருக்காது”

“ஹைய்யோ! நாம சரியான முட்டாள்கள். அதான் உன் தோழி மேடம். ஃபாரெஸ்டியர் இருக்காளே. அவ கிட்ட ஏதாவது இரவல் வாங்கிக்கோ. நீ அவளோட உற்ற தோழி தான் அதனால கண்டிப்பா கொடுப்பா.”

“அட ஆமாம். நல்ல ஐடியா!”

மறுநாள் தனது தோழியைப் பார்த்து நகை வாங்கி வரப் போனாள் மெடில்டா. மேடம். ஃபாரெஸ்டியர் அலமாரியைத் திறந்து ஒரு பெரிய நகைப் பெட்டியை எடுத்து மெடில்டாவின் முன் வைத்தாள். “இந்தா எது வேணுமோ எடுத்துக்கோ.”

விதவிதமான வளையல்கள், கங்கணங்கள், முத்துச் சரங்கள், தங்கச் சங்கிலிகள், அட்டிகைகள் என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பூரித்தாள் மெடில்டா. ஆனாலும், “இவ்வளவு தானா?”

“ஓ இரு வேற சில பெட்டிகளும் எடுக்கிறேன், ஒவ்வொண்ணாப் பாரு, தரேன்”.

கடைசியாக ஒரு கறுப்பு ஸாட்டின் பெட்டியில் அதைக் கண்டாள். கண்களையும் மனதையும் பறிக்கும் அழகுடன் ஒரி வைர நெக்லஸ். அதைக் கையிலெடுத்ததும் அவளுக்குக் கைகள் நடுங்கின. இதயம் படபடவென அடித்துக் கொண்டது. மெதுவாகத் தன் கழுத்தில் அதை அணிந்து பார்த்தாள். உடனே தோழியிடம் திரும்பி, “இதை மட்டும் எனக்கு இரவல் தர்றியா, வேற எதுவும் வேண்டாம்.”

“அதுக்கென்ன, தாராளமா”

தோழியைக் கட்டியணைத்து நன்றி கூறிவிட்டுச் சிட்டாக வீட்டுக்குப் பறந்தாள்.

விழா நாளும் வந்தது. விழாவில் மேடம். லாய்செல் நட்சத்திரமாக மின்னினாள். வந்திருந்த எல்லாப் பெண்களையும் விட அழாகானவளாகவும் நளினமாகவும் விளங்கினாள், என்று எல்லாரும் அவளைப் பற்றியே பேசினர். பெரும் புள்ளிகள் அனைவரும் அவளின் அறிமுகம் வேண்டினர். அமைச்சர் கூட அவளுக்குத் தனிக் கவனம் செலுத்தினார்.

அவள் ஆனந்தமாக நடனமாடினாள். மதுவருந்தினாள். தனது அழகின் வெற்றி தந்த போதையில் திளைத்தாள். உறங்கிக் கிடந்த ஆசைகளும் கனவுகளும் நிறைவேறிய இன்பத்தில் மெய்மறந்து போனாள்.
அதிகாலை நான்கு மணி வரை கேளிக்கைகள் நீண்டன. அவளது கணவனோ தனது நண்பர்கள சிலருடன் (இவளைப் போலவே ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த சில பெண்களின் கணவன்மார்கள்) நாற்காலிகளில் அமர்ந்த படியே உறங்கத் தொடங்கி இருந்தான்.

இவள் வந்ததும் “ போலாமா” என்று அவளது கம்பளி மேலாடையை அவளுக்குப் போர்த்தி விட வந்தான். மற்ற சீமாட்டிகளின் அழகிய மேலாடைகள் போலில்லாமல் அது நைந்து பழையதாகிப் போயிருந்தது, அவளது புதிய உடைக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தாமல். அதனால் அதை மறுத்தவாறே அவள் விலகி ஓடினாள்.
“ஏய், இரு, அப்படியே வெளிய போகாதே, ரொம்பக் குளிரும்.” அவன் அவள் பின்னாடியே ஓடி வந்தான். ஒரு வழியாக ஒரு வாடகைக் கோச் வண்டி பிடித்து வீடு வந்து சேர்ந்தனர்.

’ஹீம், எல்லம் முடிஞ்சுது’ உடலும் மனமும் மிகவும் சோர்ந்தாள் அவள். அவனோ, காலையில் பத்து மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டுமே என்று கவலையுற்றான்.

ஒரே ஒரு முறை தனது வெற்றிப் பிம்பத்தைப் பார்க்கும் ஆவலில், கண்ணாடி முன் நின்ற அவள் “ஆ!” வென அலறினாள்.

“என்ன, என்ன ஆச்சு?”

“நெக்சஸ், என் தோழியோட நெக்லஸ் காணோம்!”

அவளது உடையின் மடிப்புக்கள், மேலாடை, அவனது கோட் பாக்கெட்டுகள், எல்லாவற்றையும் தேடினர். ம்ஹீம். காணோம்.

“அது கோச் வண்டியில் விழுந்திருக்குமோ. வண்டி நம்பரைப் பார்த்தியா?”

“இல்ல.”

இருவரும் மிரண்டு போய் ஒருவரை ஒருவர் நோக்கினர்.

லாய்செல் மறுபடியும் உடையணிந்து கொண்டான்.

”இரு நான் போய் தெருவில் விழுந்திருக்கா பாத்துட்டு வரேன்”

“அவள் உடை மாற்றவோ வேறு எதுவும் செய்யவோ திராணியற்றுச் சிலை போல் நின்றிருந்தாள்.

ஏழு மணி வாக்கில் அவன் திரும்பி வந்தான். எங்கும் கிடைத்தபாடில்லை. மறுபடியும் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு கோச் வண்டிகளின் மையத்திலும் போய் விசர்ரித்தான்.

அவளோ நாள் முழுதும் பயமும் கலவரமுமாகக் காத்திருந்தாள். இரவு வெகு நேரம் கழித்து சோர்ந்த் முகத்துடன் வீடு திரும்பியவன் அவளை நோக்கி, “உன் தோழிக்குக் கடிதம் எழுதி நெக்லஸின் கொக்கி உடைந்து விட்டது, சரி செய்து கொண்டு தருவதாகச் சொல். நமகுக் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும்”.
அவள் உடனடியாக அவன் சொல்படி செய்தாள்.

ஒரு வாரம் சென்றதும் அவர்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்தனர். தேடாத் இடமில்லை. இதற்குள் ஐந்து ஆண்டுகள் முதியவனாகத் தோற்ரம் கொண்டு விட்ட லாய்செல் தீர்க்கமாகக் கூறினான், “நாம் எப்பாடு பட்டாவது அதே போல் ஒரு நகையை வாங்கித் திருப்பிக் கொடுக்க வேண்டும்.”

மறுநாள் அந்நகைப் பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த நகை வியாபாரியிடம் சென்றனர்.

“இந்தப் பெட்டி மேல என் கடை பேரு தான் இருக்கு. ஆனா நீங்க சொல்ற மாதிரி நெக்லசை நான் விற்கல.”

ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இறுதியில் ஒரு கடையில் அச்சு அசலாக அதே போன்றதோரு நெக்லஸைப் பார்த்தார்கள். அதன் விலை நாற்பதாயிரம் ஃப்ராங்குகள். முப்பத்து ஆறாயிரத்துக்குக் கிடைக்கலாம்.

அந்தக் கடைக்காரரிடம் அதை நான்கு நாட்களுக்கு வேறு யாருக்கும் விற்காதிருக்குமாறு கெஞ்சினார்கள். மேலும் ஒரு மாதத்துக்குள் தொலைந்து போன நகை கிடைத்து விட்டால் வாங்கிய நகையைத் திருப்பிக் கொடுத்துப் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.

லாய்செல்லுக்கு அவனது தந்தை விட்டுச் சென்ற பதினெட்டாயிரம் ஃப்ரங்குகள் இருந்தன. மிச்சத்தைக் கடன் தான் வாங்க வேண்டும்.
இங்கு ஒரு ஐந்நூறு, அங்கு ஒரு ஆயிரம் என்று நூறு இடங்களில் கடன் வாங்கினான். என்ன வட்டி இருந்தாலும் சளைக்காமல் ஒத்துக் கொண்டான். தன் கையெழுத்தில் தனது தலையெழுத்தையே அடகு வைத்தான், மீட்க முடியுமா என்று தெரியாமலே. எதிர்கலத்தைக் கடும் இருள் சூழ்வதை உணர முடிந்தது . ஆனால் அவன் நினைவில் நின்றதெல்லாம் அந்த நெக்லஸ், அதை வாங்க தேவைப்படும் முப்பத்து ஆறாயிரம் ஃப்ரங்குகள்.

ஒரு வழியாக மெடில்டா புதிய நெக்லஸை எடுத்துக் கொண்டு அவளது தோழியிடம் சென்ற போது, அவள் கடிந்து கொண்டாள். “எவ்வளவு நாளாச்சு. எனக்கு இடையில் எதுக்காச்சும் தேவைப்பட்டிருந்தால்?”
மெடில்டாவோ, அவள் இது வேறு நகை என்று கண்டுபிடித்து விடக் கூடாதே என்று பயந்து செத்தாள். தெரிந்தால் தன்னை என்ன நினைப்பாளோ.

இப்போது அவள் முற்றிலும் புதிய வாழ்வுக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டாள். எதிர்கொள்ளப் போகும் சவாலில் தனது பங்கைத் தைரியமாக ஆற்ற வேண்டுமென்று உணர்ந்தாள். அந்தப் பயங்கரமான கடஙளை அடைத்தாக வேண்டுமே.

அவர்கள் தாங்கள் இருந்த வீட்டை விட்டு வேறு ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் புகுந்தனர். வீட்டுப் பணிப்பெண்ணை நிறுத்டியாகி விட்டது. சகல வீட்டு வேலைகளையும் கணவனைப் பராமரிப்பதையும் ஒண்டி ஆளாகச் செய்யத் டொடங்கினாள் அவள். பத்து தேய்த்தாள். தனது அழ்கான பிங்க் நகங்களால் அண்டா குண்டாக்களைச் சுரண்டித்தேய்த்தாள். அழுக்குத் துணிகளை அவளே வெளுத்தாள். ஒவ்வொரு நாளும் நான்கு மாடி இறங்கி குப்பை கொட்டினாள். அதே போல் தண்ணிர் குடங்கள் சுமந்து நான்கு மாடி எறினாள். படு எளிமையாக உடுத்த ஆரம்பித்தாள். மளிகைக்கடையிலும் காய்கறிக்கடையிலும் கூச்சமில்லாமல் காலணாவுக்குக் கூட பேரம் பேச ஆரம்பித்தாள்.

அவள் கணவன் இரவு பகலாக உழைத்தான். சில இரவுகளில் பக்கத்துக்கு ஐந்து ”சோ”க்களுக்காகக் கூடக் கணக்கு எழுதும் வேலை செய்தான்.
இப்படியே பத்து ஆண்டுகள் கழிந்தன.

இறுதியாக எல்லாக் கடங்களும் அடைக்கப்பட்டு விட்டன. சேர்ந்திருந்த அசுரத்தனமான வட்டி முதற்கொண்டு.
மேடம். லாய்செல் இப்போது வயது முதிர்ந்தவளாகி விட்டாள். முன் போல் மென்மையாக இல்லாமல் அவள் உடல் உறுதியும், உரமும் பெற்று காட்டில் வேலை செய்யும் பெண்களை ஒத்திருந்தது. பரட்டைத் தலையும் அழுக்குப் பாவாடையும், வெயிலில் சிவந்த சருமமுமாகத் திகழ்ந்தாள். உரத்த குரலில் பேசினாள்.
எப்போதாவது சில நாட்கள் பகலில் வேலைகளெல்லாம் ஓய்ந்த பிறகு, ஞன்னலருகே அமர்ந்து அந்த அமைச்சர் வீட்டு விழாவை நினைத்துக் கொள்வாள். பேரழகாக அன்று தான் விளங்கியதும், அனைவரும் தன்னைப் புகழந்ததும் நினைவுக்கு வரும். அந்த நெக்லஸை மட்டும் அன்று அவள் தவற விடாமல் இருந்தால்? யாருக்குத் தெரியும். வாழ்க்கை தான் எவ்வளவு விந்தையானது? எப்படிப்பட்ட மாற்றங்கள் நிறைந்தது? ஒரு கண நேரப்பிசக அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டதே!

ஒரு ஞாயிறு மாலை சாம்ப்ஸ் எலிசீஸ் சாலையில் சற்று ஓய்வாக உலாவப் போனாள். அப்போது எதிரே ஒரு மெண் தனது குழந்தையுடன் வருவதைக் கண்டாள். அவள் மேடம். ஃபாரெஸ்டியர். இன்னும் அதே அழகுடன், இளமையுடன், நேர்த்தியாக உடையணிந்தபடி. அவளுடன் பேசுவதா வேண்டாமா என்று ஒரு கணம் தயங்கினாள். பின்பு சுதாரித்துக் கொண்டாள். எல்லாம் முடிந்து கடனும் அடைக்கப்பட்டு விட்டதே. எல்லாவற்றையும் அவளிடம் சொல்லி விடுவது என்று முடிவெடுத்தாள்.

அவளை நெருங்கி, “வந்தனம் ஜீன்!”

அவள் தோழிக்கு அவளை அடையாளம் தெரியவைல்லை. யாருடா இவள், ஒரு சாதரணக் குடியனவப் பெண் தன்னை இவ்வளவு நெருக்கத்துஅன் அணுகிப் பேசுவது என்று துணுக்குற்றாள். தட்டுத் தடுமாறி, “மேடம்..நீ..நீங்க யாருன்னு தெரியலையே!”

“என்னைத் தெரியல? நான் தான் மெடில்டா லாய்செல்.”

அவள் தோழி வியப்பில் கூவிவிட்டாள், “அட என் பரிதாபப் பெண்ணே! மெடில்டா..நீ எப்படி மாறி விட்டாய்?”

“ஆமாம், உன்னைக் கடைசியாகச் சந்தித்த பின் என் வாழ்வில் பல கஷ்டங்களைச் சந்தித்தேன். எல்லாம் உன்னால் தான்.”

“என்னாலேயா? என்ன சொல்கிறாய்?”

“உன்னிடம் நான் இரவல் வாங்கிய வைர நெக்லஸ நினைவிருக்கிறதா?”

“ஆமாம், நல்லா நினைவிருக்கு.”

”அதை நான் தொலைச்சிட்டேன்.

“அப்புறம் திருப்பிக் கொடுத்தியே, எப்படி?”

“அதே மாதிரி என்னொன்று வாங்கிக் கொடுத்தேன். அந்தக் கடனை அடைக்கத் தான் எங்களுக்குப் பத்து வருஷம் ஆச்சு. ஒண்ணுமில்லாத எங்களுக்கு அது கஷ்டம்னு புரியும்னு நினைக்கிறேன். ஆனா இப்போ எல்லாக் கடனும் தீர்ந்தது, நிம்மதியாவே இருக்கோம்.

மேடம் ஃபாரஸ்டியர் அவளை இடைமறித்தாள், “நீ என்ன சொல்ற? என் நெக்லஸைத் திருப்பித் தருவதற்காக ஒரு வைர நெக்லஸ் வாங்கினீர்களா?”

“ஆமாம். நீ கண்டுபிடிக்கவே இல்லியா? அப்படியே அதே மாதிரி இருந்தது இல்லியா?” சின்னப் பெருமையுடன் புன்னகைத்தாள்.

சட்டென்று நெகிழிந்து தோழியின் கரங்களை இரு கைகளாலும் பற்றிய மேடம் ஃபாரெஸ்டியர் சொன்னாள், “அய்யோ என் பாவப் பட்ட பெண்ணே! என்னோடது கண்ணாடிக் கல் நெக்லஸ். ஐந்நூறு ஃப்ரங்குகள் கூடப் பெறாது!”

12 comments:

நட்புடன் ஜமால் said...

மீண்டும் படிச்சிட்டு வாறேன் ...

மாதவராஜ் said...

நன்றாகவே மொழியாக்கம் செய்திருக்கிறாய். சந்தோஷமாயிருக்கிறது.
ஏற்கனவே படித்திருந்தாலும் சுவராஸ்யமாகவே இருந்தது.
சின்னச் சின்ன எழுத்த்துப் பிழைகள்.

Deepa said...

ரொம்ப நன்றி அங்கிள்!

இதன் முந்தைய பதிவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. கொஞ்சம் பெரிய கதையும் கூட. ஆனாலும் வந்து படித்த ஒரு சிலருக்காக முனைந்து இதை மொழியாக்கம் செய்து முடித்தேன்.

ஆமாம், நிறைய எழுத்துப் பிழைகள்.
தமிழில் வேகமாகத் தட்டும் போது தவிர்க்கவே முடிவதில்லை. சரி பார்க்க நேரம் இல்லை. :-)

சந்திப்பு said...

என்னைக் கவர்ந்த கதைகளில் ஒன்று "தி நெக்லஸ்". சாதாரண மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டிய கதையிது. பகட்டுப் பண்பாட்டை உருவாக்கியுள்ள சமூகத்தில் அணிகளன்களே ஆசிர்வதிக்கப்பட்டதாய் மாறிவிட்டதால் ஏற்பட்ட சோகத்தை என்னவென்று சொல்வது. வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்களது நன்முயற்சியை.

Deepa said...

நன்றி சந்திப்பு!
உங்கள் வார்த்தைகள் மிகுந்த ஊக்கம் அளிக்கின்றன.

நட்புடன் ஜமால்!
படிச்சிட்டு திரும்பி வாங்க.

சந்தனமுல்லை said...

:-) இந்தக் கதை படித்தமாதிரி ஒரு ஃபெமிலியரா இருக்கிறது..நன்றி..ஒரு நல்ல கதையை தமிழாக்கம் செய்ததற்கு!
மூலக்கதை படித்த அனுபவத்தை தந்திருக்கிறீர்கள்!!

Deepa said...

நன்றி சந்தனமுல்லை!

அமிர்தவர்ஷினி அம்மா said...

சுவாரஸ்யமாக இருந்தது, 2 பதிவுகளும் ஒரு சேரப் படித்ததால்.

இது போன்ற பிறமொழிகளின் மொழிபெயர்ப்பை நான் அவ்வளவாக படித்ததில்லை.
ஆனால் நீங்கள் நன்றாகவே மொழிபெயர்த்திருக்கிறீர்கள். கதையும் நல்ல அர்த்தப் பொதிவுடன்.

Deepa said...

கதை பிடித்ததா?
ரொம்ப நன்றி அமித்து அம்மா!

இன்னும் நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் நிறைய கதைகள் உள்ளன. நேரம் தான் வெண்டும் மொழியாக்கம் செய்ய.

ராம்.CM said...

நல்ல கதை , நல்ல மொழியாக்கம். அருமை . நல்லாயிருந்தது. வாழ்த்துக்கள்.

ஆ.சுதா said...

கதையை முழுவதும் படித்தேன் மிக அருமையான கதை. நன்றாக மொழிபெயர்த்துள்ளீர்கள். கொஞ்சம் வேகமாக தட்டச்சு செய்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
இப்படி ஒரு உலகபுகழ் பெற்ற கதையை படிக்க சிரமம் பாராமல் மொழிபெயர்த்து அதை நாங்களும் படிக்க பதிவிட்டதற்கு மிக்க நன்றி தீபா.
இப்படிபட்ட உலகப் புகழ்பெற்ற, அல்லது சிறந்த கதைகளை இன்னும் நீங்கள் எழுத கேட்டுக் கொள்கின்றேன்.

Deepa said...

ராம்.CM,

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி

முத்துரமலிங்கம்!

மிக்க நன்றி. கண்டிப்பாக மேலும் நிறைய கதைகள் மொழிபெயர்த்து வெளியிட முயல்கிறேன்.