Tuesday, March 17, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்

சில நாட்களுக்கு முன் இந்தத் தலைப்பில் அருமையாக எழுதி தொடங்கி வைத்து யார் வேண்டுமானாலும் தொடரலாம் என்று குறிப்பிட்டு இருந்தார், அமிர்தவர்ஷினி அம்மா.  அதனால் என் பதிவு இதோ!

1. மோகன்

எங்கள் வீட்டில் அப்பாவுக்கு உதவியாளராக இருந்தவர்.  அவருக்கென்று குடும்பம் இல்லை. தம்பி குடும்பம் தான் இருந்தது.  நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என் அப்பாவிடம் வேலை பார்த்து வந்தார். அவருக்குச் சம்பளமெல்லாம் கிடையாது. எங்கள் வீட்டில் ஒருவ்ராக இருந்து கொண்டு எல்லா வேலைகளும் செய்தார்.

வெடவெடவென்று வெகு ஒல்லியான உருவம். வெண்ணிற தலை முடியும் தாடியும், கழுத்தில் சில ஜெப மாலைகள் என்று  ஒரு ரிஷி போலவே இருப்பார்.

கடை கண்ணிக்குப் போய் வருவது, டெலிபோன், எலக்ட்ரிசிட்டி பில் கட்டுவது, பாங்குக்குப் போவது, இது போன்ற வழக்கமான வேலைகள் தவிர ஒரு காலகட்டத்தில் அப்பாவின் துணிகளைத் துவைப்பது, தண்ணீர் தட்டுப்பாடு இருந்த போது நாலு தெரு தள்ளிப் போய் குடங்களில் தண்ணீர் பிடித்து வருவது உட்பட மாடாக உழைத்திருக்கிறார்.

எங்கள் வீட்டுக்கு மட்டுமல்ல, எங்கள் தெருவில் பல வீடுகளில் பில் கட்டுவது வங்கிக்குப் போவது போன்ற பல வேலைகளுக்கு இவரை நம்பி இருந்தனர். பதிலுக்கு அவர்கள் எது கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கிக் கொள்வார்.

ஆனால் குசும்பும் கொஞ்சமும் குறையாதவர். குறிப்பாக என்னைச் சீண்டிக் கோபப்படுத்துவது அவருக்கு மிகவும் பிடிக்கும்.   எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். எங்கிருந்தோ ஒரு கறுப்பு நாய்க்குட்டி ஒன்றைக் கொண்டு வந்தார்.  அது என்னவென்று நான் கேட்க ”இது முயல் குட்டி, வளர்ந்த பின்பு தான் முயல் மாதிரி அழகாக  இருக்கும். ” என்று சொல்லிவிட்டார்.  நானும் அக்கம்பக்கத்து சிறுவர்களை ”முயல்குட்டியை”ப் பார்க்க அழைத்து அசட்டுப்பட்டம் கட்டிக் கொண்டேன்.

அந்த நாய்க்குட்டி பத்து வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்தது. இவருக்குத் தான் அது மிகவும் செல்லம்.

எப்போதாவது சில நாட்கள் தண்ணியைப் போட்டு விட்டு மொட்டைமாடியில் போய்ப் படுத்துக் கொண்டு பாட ஆரம்பிப்பார்.  அதுவும் சின்ன வயதில் தான் மதிக்காமல் போய்விட்ட தன் அம்மாவை நினைத்துக் கொண்டு.  அது தான் கொஞ்சம் தாங்க முடியாது. அப்பா போய் அதட்டிய பிறகே கச்சேரி நிற்கும்.

எது எப்படியோ, குழந்தைகளான எங்கள் மீது ரொம்பப் பாசம் வைத்திருந்தார்.  வீட்டுக்கு வருபவர்கள் அவரிடம் பேச்சுக் கொடுத்தால் எங்களைப் பற்றித் தான் ஆசையோடு பேசிக் கொண்டிருப்பார்.

பத்து வருடங்களுக்கு முன் உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் போய் விட்டது. கண் பார்வையும் போய் சிகிச்சை பலனளிக்காமல் காலமாகி விட்டார்.  அவரைப் போல் ஒரு மனிதரை இனி பார்க்கவே முடியாது.

(அவருடம் எடுத்த போட்டோ ஒன்று உள்ளது.  தேடி எடுத்து இப்பதிவில் போடுகிறேன். )

13 comments:

நட்புடன் ஜமால் said...

நல்லா சொல்லியிருக்கீங்க

நீங்க சொன்ன விதத்துல அவரை அறிய முடிகிறது.

ஆண்ட்ரு சுபாசு said...

உணர்வுகளோட ஒட்டி போய் விட்ட ஒருவராய் இருந்திருக்கிறார் ..எனக்கு சிலர் இப்படி இருந்து இருக்கிறார்கள் ..அவர்களை நினைக்கும் நிமிடங்களில் கண்ணீர் துளிகள் தானாய் வரும்..

Deepa said...

நன்றி நட்புடன் ஜமால்!

வாங்க ஆண்ட்ரு சுபாசு!
எனக்கும் இவரை நினைத்தால் அப்படித் தான் இருக்கும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவரோட போட்டோவாவது பார்க்கிறோம்,

தேடிப் பதிவிடுங்க தீபா.

இப்படித்தான் ஒரு சிலர் அவரது செயல்களால் நம் உணர்வுகளில் கலந்துவிடுகிறார்கள்.

ராஜ நடராஜன் said...

கவர்ந்தது.

Deepa said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா!

அவர் போட்டோ எங்க அக்கா கல்யாண ஆல்பத்தில் தான் இருக்கும். கிடைத்தவுடன் கண்டிப்பா வெளியிடுறேன்.

நன்றி ராஜ நடராஜன்!

மாதவராஜ் said...

தீபா!

அவரைப்பற்றித் தெரிந்திருந்தாலும், உனது எழுத்துக்கள் நெகிழ வைத்தன.

Deepa said...

வாங்க அங்கிள்! ரயிலேறிட்டீங்களா மறுபடி?

அகநாழிகை said...

//அவரைப் போல் ஒரு மனிதரை இனி பார்க்கவே முடியாது.//

‘என்னைக் கவர்ந்தவர்கள்‘ என ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாய் பதிவுகள் போட்டிருந்தனர். அதில் வித்யாசமானது உங்களது பதிவு. உங்களுடனே இருந்து, உதவிய நல்இதயத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டது மிகவும் நல்ல விஷயம். பாராட்டுவது, பழகுவது, பாசத்துடன் இருப்பது என எல்லாவற்றிற்கும் ஒரு மனது வேண்டும். அந்த மனம் உங்களுக்கு வாய்த்திருக்கிறது.

- பொன். வாசுதேவன்

narsim said...

நெகிழ்வான வரிகளில் நேர்த்தியான வாக்கியங்கள்..

நல்லா எழுதியிருக்கீங்க..

ராம்.CM said...

அழகாக சொல்லியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள். எனக்கு பிடித்திருந்தது.

பட்டாம்பூச்சி said...

:))

Deepa said...

வாசுதேவன்!
(அகநாழிகை)
உங்கள் வார்த்தைகள் ரொம்பவும் நெகிழ்த்தி விட்டன. நீங்கள் சொல்வது போல் மனம் இருக்கவேண்டும் என்று தான் முயல்கிறேன். மிக்க நன்றி.

நர்சிம்,
ராம் C.M,
பட்டாம்பூச்சி,

நன்றி, நன்றி, நன்றி!