Friday, November 6, 2009

நாய்க்குட்டி!

(இது குழந்தைகளுக்கான கதை தான். பெரியவர்களும் படிக்கலாம்!)

”டேய், டேய், வேணாண்டா, பாவம் டா…”

”போம்மா, அது என் கூட எப்பிடி வெளையாடுது பாரு...”

மகேஷுக்கு ஏகக் கொண்டாட்டம் தான். அந்தச் சிறிய நாய்க்குட்டியை அவன் படுத்திய பாடுகளை அஞ்சலைக்குப் பார்க்க முடியவில்லை.

அழகான நாய் அது. வெண்பழுப்பு நிறத்தில் பளபளவென்று கருவண்டுக் கண்களோடு பொம்மை போல் இருந்தது. பள்ளி விட்டு வரும்போது எங்கிருந்தோ தூக்கிக் கொண்டு வந்திருந்தான்.

பாலை ஊத்தும்மா, சோறு போடும்மா என்று முதல் நாள் அவன் பண்ணிய அலம்பல் தாங்கவில்லை.

அதன் பிறகு மெல்ல தன் வாலை அவிழ்த்து விட்டான். சும்மாவா அந்த ஏரியாவில் அறுந்த வால் என்று பெயர் வைத்திருந்தார்கள் அவனுக்கு?

அதைத் தூக்கிக் கொண்டு போய் தண்ணி டாங்கின் மேடையில் உட்கார வைத்து விடுவான். சின்னக் குட்டியான அது இறங்க அஞ்சிச் சுற்றிச் சுற்றி வருவதைப் பார்த்துக் கை கொட்டிச் சிரிப்பான்.

ஒரு துளி டூத்பேஸ்டை எடுத்து அதன் மூக்கின் மேல் வைப்பான். அது நாக்கை நீட்டி நீட்டி நக்க முயன்று சோர்ந்து தரையில் விழுந்து பிறாண்டும்.

”அம்மா, அம்மா, இங்க வந்து பாரேன்.” வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பான்.

அக்கா தூங்கிக் கொண்டு இருக்கும் போது பொத்தென்று அவள் மீது போட்டு அலறி ஓட வைப்பான்.

எவ்வளவு திட்டினாலும் அடித்தாலும் கேட்க மாட்டான்.
சில சமயம் அவனைப் பார்த்தாலே வாலைக் கால்களுக்கிடையில் ஒடுக்கிக் கொண்டு போக ஆரம்பித்தது.

அம்மாவுக்கு அதைப் பார்த்தால் பாவமாக இருந்தது. ஆசையாக வளர்ப்பான் என்று விட்டால் அந்த வாயில்லா ஜீவனை இந்தப் பாடு படுத்துகிறானே என்று.
*******************

”மகேஷ் அம்மா!”

“யாரு?”

“நான் தாம்மா வர்ஷினி அம்மா”

“ஓ, நீங்களா, வாங்க வாங்க”

“பரவாயில்ல இருக்கட்டும். இந்த நாய்க்குட்டி ஏது?”

“அதுவா, என் பையன் தான் எங்கிருந்தோ தூக்கிட்டு வந்தான். பாடா படுத்தறான். யாராவது கேட்டா குடுத்துடலாம்னு இருக்கேன்.”

“ரொம்ப நல்லதாப் போச்சு. என் பொண்ணு இதைப் பாத்துட்டு இதே மாதிரி நாய் வேணும்னு கேட்டு அழுதா. உங்க கிட்ட கேக்கலாம்னு வந்தேன்.“

”இதையே எடுத்துக்கிட்டுப் போங்க. நல்லாயிருப்பீங்க. அந்தத் துஷ்டப்பயகிட்டேந்து தப்பிச்ச மாதிரி இருக்கும்.”

“எம்பொண்ணு ஆசையாப் பாத்துக்கும்.“ என்றபடி நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டாள் அந்த அம்மாள்.

**************

”அம்மா, மணி எங்கேம்மா?”

”ஆங்?”

“மணிம்மா, மணி நாய்க்குட்டி...எங்கேம்மா? வீட்டுக்கு வந்ததுலேர்ந்து தேடிட்டே இருக்கேன்” குரல் கம்மியது

இவனிடம் சொல்ல வேண்டாமென்று நினைத்த் அம்மா, “தெரியலடா உன் தொல்லை தாங்காம ஓடிப் போயிடுச்சு போல.”

அம்மாவை முறைத்து விட்டு வெளியில் போனான்.

இருட்டிய பின்பும் வெகு நேரம் கழித்துத் தான் திரும்பி வந்தான்.

“டேய், எங்கடா போனே? படிக்காம ஊரச்சுத்திட்டு வரியா? உங்கப்பா வரட்டும். தோலை உரிக்கச் சொல்றேன்.”
என்றவாறே திரும்பிப் பார்த்த அம்மா திடுக்கிட்டாள்.
அழுதழுது வீங்கிய முகமும் சோர்ந்து போன நடையுமாய் வந்து அமர்ந்தான் மகேஷ்.

“என்னடா கண்ணா, ஏண்டா இப்படி இருக்கே? என்ன ஆச்சு?”

“அம்மா, மணி என்னை விட்டுட்டு ஏன்மா போனான்? நான் நல்ல பையன் இல்லியா?“ என்று விசும்பியவனை அம்மா பதறி அணைத்துக் கொண்டாள்.

அழுது கொண்டே தூங்கிப் போனான் மகேஷ்.

’காலையில் அவன் எழுந்திருக்கறதுக்குள்ள வர்ஷினி அம்மா கிட்ட கெஞ்சி நாய்க்குட்டியைத் திரும்ப கொண்டாந்துடணும்’ என்று நினைத்துக் கொண்டாள் அம்மா.

இரவு இடி இடித்து மழை பெய்தது. குளிரில் சுருண்டு படுத்திருந்த மகேஷ் தூக்கத்தில் ”மணி, மணி” என்றவாறே உளறிக் கொண்டிருந்தான்.

*************

“அம்மா, அம்மா, இங்க வந்து பாரேன். யார் வந்திருக்கான்னு?”

மகேஷின் கூக்குரலைக் கேட்டு விழித்தாள் அம்மா. அதற்குள் வவ் வவ் என்று பரிச்சயமான அந்தச் செல்லக் குரலும் சேர்ந்து வந்தது.

”ராத்திரியே வந்து நம்ம வீட்டு வாசலோரமா ப்டுத்திருந்திச்சும்மா.
காலையில என்னைப் பாத்தவுடனே குஷியா வாலாட்டிக்கிட்டு வந்துடுச்சி. மழையில நல்லா நனைஞ்சிருக்கு. அதுக்கு சூடா பால் கொண்டு வாம்மா!”

“என் செல்ல மணி! பட்டு மணி” என்று உற்சாகமாய் நாயைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தவனைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா.

***********

மறு நாள்...

“அம்மா இங்கே பாரேன்...”

“மணீ....ஜம்ப்!!!”

மணி தண்ணி டாங்கின் மேடையிலிருந்து அழகாய் டைவ் அடித்து ஓடி வந்தது.

அம்மா அதிசயமாய்ப் பார்த்தாள்; சந்தோஷமாகவும்!

14 comments:

Vidhoosh said...

மயிலிறகால் வருடிய உணர்வுங்க தீபா. ரொம்ப அழகான கதை.. புனைவா அனுபவமா? !

உணர்வுகள் குவிந்து கண்கள் கலங்குவதை தடுக்க முடியல.. சூப்பர்.

-வித்யா

தமிழ் அமுதன் said...

அருமைங்க...!
சிறுவனின் உணர்வையும்...
தாயின் உணர்வையும்...
ஒருகவிதையில்
அழகா சொல்லி
இருக்கீங்க..!!

ஆமா.. கதை ஒரு கவிதை போல தான் இருக்கிறது..!

Deepa said...

விதூஷ்!
ஜீவன்!

ரொம்ப நன்றி!

உங்கள் வார்த்தைகள் உற்சாகப்படுத்துகின்றன.

thiyaa said...

அருமையான கதை
சொல்லப்பட்ட விதம் தான் எனக்கு பிடிச்சிருக்கு

அமுதா said...

அருமை தீபா. உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ள கதை

Admin said...

நல்ல கதை தொடர்ந்தும் எழுதுங்கள்...

காமராஜ் said...

இந்தக்கதை நல்லா இருக்கு. அதோடு என் பின்னூட்டத்தை முடிக்க மனசில்லை. இங்கு குழந்தைகள் கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவே படுகிறது தீபா. அவர்களுக்கான எல்லா வாசலும் திறந்து விடப்படுவதில்லை. அமித்தம்மாவும், சந்தனமுல்லையும் பப்பு அமித்து பற்றி எழுதும் பதிவுகள் குழந்தைகள் உலகம். அதைப் பரவலாக்கவேண்டும். குழந்தைகள் இலக்கியம் இங்கு போதுமானதாக இல்லை. இது சீசேம் வீதி எனும் குழந்தைகள் தொடரின் நாற்பதாம் ஆண்டாம். அதை படித்த பின்புதான் நாம் எத்தனை தலைமுறை பிந்திக் கிடக்கிறோம் என்பது தெரிகிறது.

மாதவராஜ் said...

அருமையான சொற்சித்திரம்!
இயல்பாய், அழகாய் வந்திருக்கிறது.
குழந்தைகளின் அன்பை, மொழியை பெரியவர்கள் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், விலங்குகள் புரிந்துகொள்கின்றன!!
தீபா, நல்ல முயற்சி. தொடர்ந்து இது போல எழுதலாம்.

மணிநரேன் said...

நன்றாக உள்ளது.

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்கு தீபா! என் தம்பி சிறுவயதில், ஒரு நாய்குட்டியை தூக்கிக்கொண்டு செய்த அலும்பல்களை நினைவூட்டுகிறது இந்த இடுகை! :-)
பாசிடிவ் முடிவு எனக்கு பிடிச்சிருக்கு!

நாகா said...

அருமையான புனைவு தீபா. ஆரூரனின் இந்தக் கவிதையும் அங்குள்ள புகைப்படமும் இந்தப் புனைவுக்கு மிகவும் பொறுத்தமாக இருக்குமென்று எண்ணுகிறேன்.

http://arurs.blogspot.com/2009/11/blog-post_07.html

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல வாசிப்பனுபவத்தை தந்த இடுகை தீபா!

தினேஷ் ராம் said...

:D

மணிகண்டன் said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு தீபா.