இன்னும் ஒரு சில ஆண்டுகள் சென்றால் நம்மிருவருக்கும் அப்போது இருந்ததைப் போல் இருமடங்கு வயதாகி இருக்கும். என்ன சொல்வது?அப்போது நாம் இருவருமே குழந்தைகள் தானோ? அந்த வயதில் இப்போது யாரையாவது பார்த்தால் குழந்தைகளாகத் தான் தோன்றுகிறார்கள். அது தானே பதின்மவயதின் பிரச்னையே. குழந்தைகளா பெரியவர்களா என்று அவர்களுக்கும் தெரிவதில்லை. புரிந்து வழிநடத்த வேண்டிய பெரியவர்களுக்கும் பல சமயம் புரிவதில்லை.
அதை விடு. உனக்கு நினைவிருக்கிறதா அந்த நாள்? ஒரு பதினெட்டு வயதுக் குழந்தையின் இதயத்தை ஒரு பதினேழு வயதுக் குழந்தை குத்திக் கிழித்த அந்த நாள். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு தான் கள்ளம் கபடமில்லாமல் அன்பு பெருகி வழிந்து கொண்டிருந்தது இரு உள்ளங்களிலும்.
நாம் ஒருவரையொருவர் பார்த்தாலே பரவசம் கொள்ளத் தொடங்கினோம். என் லேப் நோட்டில் ரீடிங் எழுதிய உன் அழகான கையெழுத்தும் நான் உனக்கு எழுதிக் கொடுத்த அசைன்மென்டும் பரஸ்பரம் விலை மதிப்பில்லாத சொத்தாகின. நட்பா, ப்ரியமா, காதலா, "ம்...சீக்கிரம் முடிவெடு ஏதாவது ஒன்று" என்று அவசரத்துக்குள் நம்மைத் தள்ளியது எது?
ஆளுக்கு ஒன்றாக, எப்படியும் தவறாகத் தேர்ந்தெடுத்ததில் சிதறிப் போனது அந்த அழகான நாட்கள். நாம் அதுவரை பார்த்தறிந்தவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ, இம்மாதிரியான சூழலில் மற்றவர்கள் முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்குச் சொல்லப் பட்டிருந்ததோ அப்படி மாறத் தொடங்கினோம்.
நீ என்னை ஓயாமல் துரத்தத் தொடங்கினாய். நான் உன்னை விஷம் போல் வெறுக்கத் தொடங்கினேன். வெற்றிகரமாக இந்தப் பாத்திரங்களுக்குள் நாம் இயல்பாகப் பொருந்திப் போனோம். நான் உன்னை வெறுக்கவே இல்லையென்பது நிரந்தரமாய் உன்னைப் பிரிந்ததுமே புரிந்து போனது.வேறெதுவும் இல்லாவிட்டாலும் அழகான நட்பாக மலர்ந்திருக்க வேண்டிய நம் உறவைச் சிதைத்ததில் நம் பங்கு எவ்வளவு?
அப்போது அறிவில்லை, அனுபவம் இல்லை, பக்குவமும் இல்லை. ஆனால் வானம்பாடிகளாய்ச் சஞ்சரித்த அந்தப் பதின்மகாலத்தில் ஈரம் காயாத மனதில் உண்டான அந்த அன்பு சுத்தமான பாலைக் கடைந்து எடுத்த முதல் அமுதம் போன்றதல்லவா? முடிவுறாத கனவாக அதன் சுவை என் நினைவலைகளில் சுழன்று கொண்டே இருக்கிறது; சில சமயம் இனிதாகவும் சில சமயம் லேசாகக் கசப்பாகவும்...
அன்பான கணவனாக, தந்தையாக உன்னை என்றாவது காண நேர்ந்தால் அந்தக் கனவு இனிதே முற்றுப் பெற்று விடும். அன்பு நண்பனே, அந்நாளை எதிர்பார்த்து...
16 comments:
இவ்வளவு அருமையா எழுதிக்கிட்டு சொல்ல தெரியலன்னா எப்படி...
புனைவு நல்லா இருக்கு தீபா.
// அப்போது அறிவில்லை, அனுபவம் இல்லை, பக்குவமும் இல்லை. ஆனால் வானம்பாடிகளாய்ச் சஞ்சரித்த அந்தப் பதின்மகாலத்தில் ஈரம் காயாத மனதில் உண்டான அந்த அன்பு சுத்தமான பாலைக் கடைந்து எடுத்த முதல் அமுதம் போன்றதல்லவா? முடிவுறாத கனவாக அதன் சுவை என் நினைவலைகளில் சுழன்று கொண்டே இருக்கிறது; சில சமயம் இனிதாகவும் சில சமயம் லேசாகக் கசப்பாகவும்...
அன்பான கணவனாக, தந்தையாக உன்னை என்றாவது காண நேர்ந்தால் அந்தக் கனவு இனிதே முற்றுப் பெற்று விடும். அன்பு நண்பனே, அந்நாளை எதிர்பார்த்து... //
சொல்லத் தெரியல... nice feeling deepa.
All the best!!! :)
பதின்மத்தின் சுபாவங்களை, சலனங்களை, அழகாக பதிந்திருக்கிறாய் தீபா.
பதிவு மிக இயல்பாய், இயற்கையாய், அழகாய் வந்திருக்கிறது.
வாழ்க்கை முடிவுறாத கனவாய்
இருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்?
நல்ல நினைவுகள...!!
"ஒரு பதினெட்டு வயதுக் குழந்தையின் இதயத்தை ஒரு பதினேழு வயதுக் குழந்தை" :-)
புனைவு நல்லா இருக்கு.
மிகவும் அருமையா எழுதிருக்கிங்க...
இப்படி சிந்திக்க தெரிந்தால், எதற்கு இந்த கனவு?
நன்றி வெறும்பய!
இது என்னன்னு சொல்லத் தெரியலன்னு சொன்னேன்!..:)
நன்றி காமராஜ் அங்கிள்!
நன்றி அகிலா!
நன்றி கோகுல்!
எதுக்கு ஆல் த பெஸ்டு?
நன்றி அம்பிகா அக்கா!
நன்றி மதுமிதா!
நல்லாவா இருக்கும்? தெரியலியே!
எப்டியோ முடிஞ்சிடும்கறது கூட நல்லாத் தான் இருக்கு.
நன்றி ஜெய்லானி!
நன்றி சின்னப்பயல்!
(நல்ல பேரு)
நன்றி சே.குமார்!
நன்றி மேனகாசத்யா!
பத்மா!
சரியான கேள்வி தான் கேட்டிருக்கீங்க.
என்னிடம் பதிலில்லை!
:)
//எதுக்கு ஆல் த பெஸ்டு?//
கனவு இனிதே முடிவுற...
கோகுல் கண்ணா!
லேபிலை ஒழுங்காப் பாரும்மா.
இது ஒரு புனைவு. (fiction)
:-)
ஹ்ம்ம்... தவறை உணர்ந்து தான் இரண்டாவது முறை ஏதோ adjust செய்ய முயன்றேன். பலனில்லையோ? :)
சே..சே! கோகுல், தவறு எல்லாம் இல்ல.
உன் கமென்டை ரசித்துத் தான் பதில் போட்டேன்.
:)
Post a Comment