Saturday, January 30, 2010

அழகிரிசாமி சிறுகதைகள்

வாஞ்சையோடு மடியில் இருத்தி, வாத்சல்யம் ததும்பும் குரலில் கதை சொல்லும் பாட்டி தாத்தாக்களை நினைவு படுத்தும் நடை கு. அழகிரிசாமியினுடையது.

இவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று என்னிடம் இருக்கிறது. எத்தனை முறை படித்திருப்பேன் என்று கணக்கே கிடையாது. இன்று அதைக் கையிலெடுத்த போது அதைப் பற்றிப் பகிரலாமே என்று தோன்றியது.

மிக இயல்பான எளிமையான நடை. கதை மாந்தர்களும், கதைக்களமும் கூட எதார்த்தத்தை ஒட்டியே இருக்கும். ஆனால் நெஞ்சைத் தொடும் நுட்பமான விஷயங்களும் எழுதுவார். நகைச்சுவை மிளிரும் வண்ணம் நையாண்டியாகவும் எழுதுவார்.

”சிதம்பர நினைவுகள்” இல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சொன்னது நினைவுக்கு வருகிறது - “மனிதனின் யோக்யதையை நிர்ணயிப்பது கண்டிப்பாக அவனுடைய படிப்போ பாண்டித்யமோ அல்ல. பணம், அதிகாரம், பெண் ஆகிய தொன்மங்களின் மீது அவன் எடுக்கும் நிலைப்பாடு மட்டுமே”
இதில் இன்னொன்றும் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். அது, குழந்தைகள். (சொந்தக் குழந்தைகள் அல்ல.) மற்றவர் குழந்தைகளிடம், அவர்கள் பெற்றோரோ வேறு யாருமோ அருகில் இல்லாத போது நாம் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறோம் என்பது நமது மனப்பண்பைப் பெரிதும் கணிக்கும் ஒரு விஷயம்.

அழகிரிசாமி, அந்த வகையில் மிகச்சிறந்த பண்பாளர் என்பது அன்பளிப்பு என்ற கதையின் மூலம் புலனாகிறது.

எல்லாக் குழந்தைகளிடம் அதீதப் பிரியமாகவே இருக்கும் இவர் தன் மீதுள்ள அளவற்ற அன்பினால் தொல்லை செய்யும் ஒரு சிறுவனைப் பற்றிச் சொல்கிறார்.
“என்னுடைய முயற்சி இல்லாமல், என்னால் மட்டுமே ஓர் உயிர் சந்தோஷமும் திருப்தியும் கொள்ள முடிகிறது என்றால், அதை எந்தச் சமயத்திலும் தடுக்கக் கூடாது; தடுக்க முயலுவது அமானுஷிகத் தனம்...”

ராஜா வந்திருக்கிறார் என்பது அற்புதமான கதை. குழந்தைகள் உலகத்தை அதனுள்ளேயே போய் விவரிப்பது எல்லாருக்கும் கைவராத ஒன்று. குழந்தைகள் விளையாடும் “தற்பெருமை” விளையாட்டையும் அவர்களின் சிந்தனைகளையும் இயல்பாகப் படம் பிடித்திருக்கிறார். மேலும் மூன்று குழந்தைகளுடன் வறுமையில் வாழும் தாய் ஒருத்தியின் உள்ளம் எவ்வளவு செம்மையுடன் இருக்கிறது என்பதையும் மிக அழகாகக் காட்டி இருக்கிறார்.

ஏமாற்றம், ஞாபகார்த்தம் இரண்டும் இளமை ததும்பும் அழகிய காதல் கதைகள்.

இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இவ்விரண்டு கதைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை. இவ்விரண்டிலும் தான் தாம் எப்பேர்ப்பட்ட நகைச்சுவையாளர் என்பதை வெளிப்படுத்துகிறார்.

இரண்டு பெண்கள் கதையில் திருமணமாகாத ஒரு சராசரி இளைஞனின் மன ஓட்டங்களையும் நடவடிக்கைகளையும் சித்தரித்திருப்பது காலத்துக்கும் பொருந்தும்!

”மதுரையிலிருந்து திடீரென்று சென்னைக்கு என்னை மாற்றி விட்டார்கள். மனித வாழ்க்கைக்கு மதுரையென்றாலும் ஒன்று தான் சென்னையென்றாலும் ஒன்று தான். மதுரையிலும் வீட்டு வாடகை அதிகம்; சென்னையிலும் வீட்டு வாடகை அதிகம். மதுரையிலும் பொறாமைக்காரர்கள் உண்டு; சென்னையிலும் பொறாமைக்காரர்கள் உண்டு. மதுரையிலும் அயல் வீட்டுப் பெண்களோடு பிரமச்சாரிகள் பேசக்கூடாது; சென்னையிலும் அயல் வீட்டுப் பெண்களோடு பிரமச்சாரிகள் பேசக்கூடாது.”

இரண்டு ஆண்கள் கதையில் ’அல்காப் பேர்வழியாகிய’ தன் மாமாவைப் பற்றி நாயகன் சொல்கிறான்.

”...ஒரு நாள் அவர் மிகுந்த கோபாவேசத்துடன் அடிக்கக் கூடாத ஒரு சாமானை எடுத்து என் மாமாவின் முகத்தில் அடித்து விட்டார். அதனால் வலி ஏற்படாவிட்டாலும் நிச்சயம் அவமானம் ஏற்படும். ஆனால், என் மாமாவுக்கோ இரண்டும் ஏற்படவில்லை. பெரியவர் பார்த்தார். அதற்கு மறுநாளே சாப்பாடு போட முடியாதென்று பிடரியைப் பிடித்துத் தள்ளி விட்டார். உடனே மாமா தம் தங்கை வீட்டுக்கு, அதாவது எங்கள் வீட்டுக்கு வந்ர்க்ய் சேர்ந்தார். என் தாயார் ஒரு பைத்தியம்; தகப்பனாரோ ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய பைத்தியம். அதனால் “ஐயோ பாவம்” என்று மாமா மீது இரக்கம் காட்டி...”

சிரிக்க மட்டுமல்லாது சிந்திக்கவும் வைக்கும், மறக்க முடியாத வார்த்தையாடல்கள் இவரது தனிச்சிறப்பு என்றே கருதுகிறேன்.

நான் படித்ததிலே இவரது “காற்று” என்ற ஒரு சிறுகதை தான் சோகத் தன்மை வாய்ந்தது. நகர வாழ்க்கையில் ஒண்டுக்குடித்தனத்தில் வசிக்கும் சிறுமியொருத்திக்குச் சில்லென்று வீசும் காற்று கூட கிடைக்கப் பெறாத அரிய விஷயமாகிப் போவதை மனம் பதைக்கும் சோகத்துடன் சொல்லி இருப்பார். இந்த அவலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது என்பது எவ்வளவு வேதனை?

என்னிடம் இருப்பது 1952 இல் வெளிவந்த பழைய பதிப்பு. (பதிப்பகத்தின் பெயர் சக்தி காரியாலயம் என்று போட்டிருக்கிறது!)

தற்போது வானதி பதிப்பகம், சாகித்ய அகாதெமி ஆகியவை இவரது எழுத்துக்களையும் உயிர்மை இவரது கடிதங்களையும் வெளியிட்டுள்ளதாக அறிகிறேன்.

Thursday, January 28, 2010

நான் ஏமாந்த கதை

நான் சிறுவயதில் ரொம்பவும் அசடாக இருந்திருக்கிறேன். (இப்ப மட்டும் என்னவாம் என்று பின்னூட்டம் போடுபவர்களுக்கு அநியாய சாபம் வழங்கப்படும்)

அதாவது யார் கட்டுக் கதை கட்டி விட்டாலும் அப்படியே நம்பிவிடுவது. கற்பனைக் குதிரை அநாயாசமாகப் பறக்கும் ரீல் மன்னர்/மன்னிகளுக்கு வாகாகக் காது கொடுப்பது நானாகத் தான் இருப்பேன்.

முதலில் என் அண்ணன். அவன் என்னை ”வெறி கொட்டி” அழ வைப்பதற்கென்றே கதைகள் விடுவான். ஏதாவது காமிக்ஸ் கதை ஒன்றைப் புனைந்து சொல்ல ஆரம்பிப்பான். அதில் வரும் ஹீரோ அவனாக்வும் ஜீரோ நானாகவும் கற்பனை செய்து, அவன் என்னை எப்படியெல்லாம் சிக்கலில் மாட்டி விடுவான் என்று ரசித்து ரசித்துக் கதை பின்னுவான். கேட்கவும் பிடிக்காமல், கேட்காமல் இருக்கவும் முடியாமல் கோபப்பட்டு கத்துவேன். அப்பா வந்து என்னவென்று கேட்கும் முன் முதுகைக் காட்டி என்னை நான்கு அடிகள் அடிக்க வைத்துச் சமரசம் செய்து விடுவான். பல சமயம் அப்பா வரும் போது நான் தான் அவனை அடித்துக் கொண்டிருப்பேன்.

அடுத்தது என் கூடப் படித்த ஒரு சிறுமி. அவள் அப்பா அம்மாவுக்குப் பல வருடங்கள் கழித்துப் பிறந்த ஒரே செல்ல மகள். செல்லமென்றால் அப்படியொரு செல்லம். படிப்பில் வெகு சுமார். ஆனால் அவள் மற்றபடி சுட்டியாகவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாள்.

நிறைய கதைப் புத்தகங்கள் படிப்பாள். அதை விட படங்கள் வரைந்து கதைகள் எழுதுவாள். அதீதக் கற்பனை உண்டு அவளுக்கு. பள்ளி முடிந்து ஒன்றாக நானும் அவளும் ஒரே ரிக்‌ஷாவில் தான் வீடு செல்வோம். அப்போது தான் அவிழ்ப்பாள் அவள் ரீல் மூட்டையை. தனக்கு மந்திர தந்திரங்கள் தெரியும் என்றும், தான் விரும்பினால் என்ன வேண்டுமானாலும் வரவழைக்க முடியும் என்றும் சொல்வாள்.

”சரி, எனக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வர வை பாப்போம்” என்றால், பரிகாசமாய்ப் புன்னகைத்து விட்டு, ”என் சக்தியெல்லாம் நான் இப்போ தீர்த்துட்டேன் பௌர்ணமி அன்னிக்குத் தவம் பண்ணித் தான் திரும்ப மேஜிக் சக்தி யெல்லாம் வர வைக்கணும்:” என்று ஏதோ சொல்வாள். (பௌர்ணமி என்னிக்குன்னு யாருக்குத் தெரியும்?) மற்றவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் அவளைக் கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்; நான் மட்டும் ஆர்வமாக நம்பினேன். எனக்கும் மந்திரம் கற்றுத் தரச் சொன்னேன். (நான் தான் அந்தச் செட்டில் வயதில் இளையவள் என்பது ஒரு சின்ன ஆறுதலே.)

கண்களைக் மூடிக் கொள்ளச் சொல்லி ஏதேதோ சொல்வாள். பின் ”ஒரு பெரிய மலை தெரியுதா, அங்க ஒரு வேடன் தெரியறானா, என்று ஏதேதோ கேட்பாள்” எனக்கு தெரியாது என்று சொல்ல வெட்கமாக இருக்கும். ”தெரியற மாதிரி இருக்கு” என்பேன்.
”கூடிய சீக்கிரம் நீயும் மந்திரம் கத்துக்கலாம். அப்போ உனக்கு நல்லாத் தெரியும்” என்பாள்.

அப்போதெல்லாம் எனக்கும் படங்கள் வரைவதில் ஆர்வமிருந்தது. அதில் எனக்கு மிகவும் பிடித்த படம், இறகுகளுடன், கிரீடமும் அழகான நீள ஆடையும் அணிந்த தேவதை வரைவது. அதைப் பார்த்த அவள், “அழகா வரைஞ்சிருக்கே, உனக்கு இதே போல ட்ரெஸ் வேணுமா” என்றாள். தலையாட்டிய என்னைப் பார்த்து, “அப்போ கோல்ட் கலர்ல ஒரு செயின் வாங்கிட்டு வா நாளைக்கு. அதைக் கழுத்தில போட்டுக்கிட்டு நான் சொல்ற மந்திரத்தைச் சொன்னா உனக்கு ஃபேரி ட்ரெஸ் கிடைக்கும்” என்றாள். மேலும், “முத்துமாலை மட்டும் வாங்காதே. அது பேயோட சிம்பல்” (?) என்றும் “இதை யார் கிட்டயும் சொல்லவும் கூடாது. சொன்னா மந்திரம் பலிக்காது“ என்றும் சொல்லிவிட்டாள்

நானும் அன்று வீட்டுக்கு வந்து அக்காவிடம் அடம் பிடித்து “மம்மி ஃபேன்ஸி” அழைத்துச் சென்று ஒரு கவரிங் செயின் வாங்கிக் கொண்டேன். “என்ன இந்தப் பெண்ணுக்குத் திடீரென்று இதில் ஆசை” என்று நினைத்திருப்பார்கள். அன்று இரவு லக்‌ஷ்மியும் அவள் அம்மாவும் எனக்காக ஃபேரி ட்ரெஸ் கொண்டு வந்து தருவது போல் கனவு வேறு.

மறு நாள் ஆசை ஆசையாக பள்ளிக்குச் சென்றால் மேடம் வரவில்லை. ஊருக்குப் போயிருப்பதாகவும் ஒரு வாரத்துக்கு வரமாட்டாள் என்றும் சொன்னார்கள். எனக்கு அழுகையே வந்து விட்டது. அன்று பள்ளி விட்டு வரும் போது சோகமாக இருந்த என்னை மற்ற பிள்ளைகள் விசாரித்த போது தாங்க முடியாமல் லக்‌ஷ்மி சொன்ன கதையெல்லாம் சொன்னேன். ஓவென்று சிரித்த அவ்ர்கள், “அட, அது ஒரு லூசுன்னா, நீ அதுக்கு மேல இருக்கே. அவளுக்கு வேலையே இது தான். இனிமே அவ பேச்சைக் கேட்காதே” என்று என்னைச் சமாதானப் படுத்தினார்கள். எனக்கு ஒரே அவமானமாகப் போய் விட்டது. அவள் ஊரிலிருந்து திரும்பி வந்ததும் சண்டையிடக் கூட மனம் வரவில்லை. அவளும் சிரித்தால் என்ன செய்வது?

ஹும்...நெடுநாள் யாரிடமும் சொல்லக் கூடத் தயங்கிய விஷயத்தை உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன். சிரிக்காதீர்கள் ப்ளீஸ்! இது போல் ஏமாந்த அல்லது ஏமாற்றிய கதை இருந்தால் நீங்களும் பகிருங்களேன்!

Monday, January 25, 2010

பரிணாமம்

ஃபோனில் முத்தங்கள்
பிரியமாய்க் குறுஞ்செய்திகள்
”என்னடா செல்லம் பண்ற” - நொடிக்கொரு இமெயில்
எதுவுமில்லை இப்போது.
சின்னஞ்சிறு விரலுக்கு நீ நகம் வெட்டும் போதும்
உன் நெஞ்சில் சாய்ந்து அவள் உறங்கும் போதும்
நீ காதல் சொன்ன கணங்களைக் காற்றில் பறக்க விடுகிறேன்

Sunday, January 24, 2010

பார்வை இழந்தோருக்காக வாசித்தல்

ஒரே ஒரு முறை செய்திருக்கிறேன். ஏதோ ஒரு சேவை நிறுவனம் (ஸாய் ஸ்ம்ருதி என்று நினைக்கிறேன், நினைவில்லை) டி. நகரில் ஒரு பள்ளியில் நடத்துவதாக நாளிதழில் விளம்பரம் வந்திருந்தது.
சனிக்கிழமையாக இருந்ததாலும், அப்போது வேறு கமிட்மெண்ட்ஸ் இல்லாததாலும் ஆர்வத்துடன் சென்றேன்.

ஒரு கூடம் நிறைய மாணவர்கள். பல்வேறு கல்லூரிகள், துறைகளில் படிப்பவர்கள். அங்கங்கு சிலர் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவராகவோ ஒரு குழுவுக்கு ஒருவராகவோ வாசித்துக் கொண்டிருந்தனர்.

நிர்வாகி ஒருவர் வந்து முகமன் கூறி என்னை அழைத்துச் சென்றார். இளங்கலை தமிழ் பயிலும் மூன்று மாணவிகளுக்கு வாசிக்கும் படி சொன்னார். புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். முதலில் சற்றுத் தயக்கமாக இருந்தது. ”திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டுமா” என்று கேட்டேன். அவர்களோ, “நீங்க பாட்டுக்குப் படிங்க அக்கா; வேணும்னா நாங்க சொல்றோம்.” என்றனர். மேலும் அவர்கள் ஏற்கனவே படித்தது தான் என்றும் தேர்வுக்கு முன் மறுவாசிப்பு செய்வதாகவும் சொன்னார்கள்.

இரண்டரை மணி நேரம் படித்திருப்பேன். அதற்குள் என்னிடம் மிகவும் நெருங்கி விட்டனர். நான் தெளிவாகவும், அவர்களுக்கு வேண்டியது போலவும் வாசித்ததாகச் சொன்னார்கள் . அவர்களின் அந்த வார்த்தைகள் எனக்கு அதுவரை அனுபவித்தறியா மனநிறைவைத் தந்தது. பள்ளி நாட்களில் பேச்சுப் போட்டிகளில் நான் தவற விட்ட பரிசுகள் எல்லாம் ஒன்றாய்க் கிடைத்தது போல் இருந்தது.
வீட்டுக்குத் திரும்பிப் போக எனக்குச் சுலபமான வழியும் கூடச் சொன்னார்கள்.
அடிக்கடி வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதற்குப் பின் ஏனோ அழைப்பு வந்தும் செல்ல முடியவில்லை. அந்தச் சிறுமிகளின் நட்பையும் தவறவிட்டு விட்டேன்.

பாடப்புத்தகங்கள் என்றில்லை, நாம் படித்து மகிழும் எத்தனை புத்தகங்கள் பார்வையற்றோருக்கு வாய்க்கும்? ப்ரெயிலில் மிக முக்கியமான புத்தகங்கள் வருவதே அரிது தான். புத்தகம் வாசிப்பு என்பதே அகக்கண்களுக்காகத் தானே? அது இருக்கும் யாருக்குமே அந்த அனுபவம் மறுக்கப் படக்கூடாதல்லவா?

அது மட்டுமல்ல நாம் ரசித்த புத்தகத்தைப் பிறரும் ரசிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நம் மனதுக்கும் இது நிறைவாக இருக்குமே?
ஏற்கனவே செய்து கொண்டிருப்பவர்கள், விருப்பமுள்ளவர்கள் வழிகாட்டினால் தொடரலாம் என்று மிகவும் விரும்புகிறேன்.

Friday, January 22, 2010

ஜீவ ஊற்று

பிள்ளைப்பிராயத்தில் வந்ததை
மழலையின் கவிதை எனக்கொண்டேன்
பருவத்தில் வந்ததெல்லாம்
வயது செய்த ஜாலங்கள் என்றேன்
முதிர்ந்தும் தெளிந்தும் வந்ததை உறவாக்கி
உதிரத்துடன் கலந்து கொண்டேன்
இன்னும் இன்னும் என்னுள்...
நட்பென்றும், பிரியமென்றும், தாய்மையென்றும்
புதிது புதிதாய்ப் பூத்துக்கொண்டு தானிருக்கிறது... காதல்

Thursday, January 21, 2010

நேஹா நேரம்!

”டீலா...”
”நோ டீலா”

ஒரே வார்த்த..
”ஒவ்..ஓஓஓஒஓஓஓ”

”ஓடு ஓடு ஓடு ஓடு... வேட்டை....”

(சன் டிவி செய்த புண்ணியம்! )


”சுட்டிட்டீஈ...மும்பா (பும்பா)” – இதை நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பாள்.
ஆனால் அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது கையைக் காலை ஆட்டிக் கொண்டு கத்திக் குதூகலிப்பாளே ஒழிய உட்கார்ந்து ஒரு நிமிடம் பார்ப்பதில்லை.

”அப்பா எங்க... ஆப்பிச்” (கேள்வியும் அவளே. பதிலும் அவளே)

”ஜூலா.. மணி..மணி மணீஈஈஈ”...(பூங்காவில் அவளது நண்பன்)

”பாலு...காச்சி ஆஆத்தி ஊஊத்தி... ஆலிச்சு (ஹார்லிக்ஸ்)”
– பால்குக்கர் விசில் கேட்டவுடன்

எதற்காகவாவது அடம் பிடித்து அழும்போது என்ன வேண்டும் என்று கேட்டால், ஒரு நிமிடம் யோசித்து ”சாக்ளே” என்கிறாள். சாக்லெட்டே கண்ணில் காட்டாமல் இருந்தேனே. எப்படி?

உலகிலேயே அழகான உன் கண்களை உற்றுப் பார்க்கிறேன்;
உள்ளே குதித்து உயிரை விட்டு விடலாமா என்றிருக்கிறது.

Wednesday, January 20, 2010

சாலையோரம் - தொடர் இடுகை

”சாலையோரம்” என்ற தலைப்பில் தொடர் இடுகைக்கு அழைத்திருக்கிறார் முல்லை. வாகனம் ஓட்டிச் செல்லும் போது நடந்த இக்கட்டான நிகழ்வுகள் குறித்து எழுத வேண்டுமெனப் பொருள் கொள்கிறேன்.

நான் ஸ்கூட்டி ஓட்டத் தொடங்கி சில ஆண்டுகள் தான் ஆகின்றன. யார் புண்ணியமோ இது வரை (touch wood!) சுவாரசியமாக எதுவும் நிகழவில்லை.

ஆனால் அதற்கு முன் சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது தான் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பெல்லும் ப்ரேக்கும் இல்லாமல் ஓட்டிச் சென்றது அப்போது தானே?

உண்மையில் சைக்கிள் ஓட்டுவது ஒரு தனி சுகானுபவம். முதன் முதலில் பேலன்ஸ் கிடைத்த அந்தத் தருணத்தை மறக்க முடியுமா. கோணல் மாணலாகச் ஓட்டித் திரிந்து நேராக ஒட்டவே சில நாட்கள் ஆகும்.
அப்புறம் சில காலம் காலில் இறக்கை முளைத்தது போல் ஒரு உணர்வு. நாளெல்லாம் சைக்கிள் ஓட்டித் திரிந்தாலும் அலுக்கவே அலுக்காது; ஆசையும் தீராது. அப்படி ஒரு ஆசை ஸ்கூட்டி ஓட்ட ஆரம்பித்த போது ஏற்படவே இல்லை. (பெட்ரோல் விரயமாகுமே என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்!)

ஒன்பதாவது படிக்கும் போது தான் எனக்கென சைக்கிள் கிடைத்தது. அப்பாவுக்கு என்னைச் சைக்கிளில் பள்ளிக்கு அனுப்ப ரொம்பப் பயம். கொஞ்ச நாள் கூடவே இன்னொரு சைக்கிளில் மோகனை அனுப்பி வைத்தார் (அய்யோ!)

பிறகு முதன் முதலில் தனியாக நான் சைக்கிளில் புறப்பட, வாசலில் நின்று வழியனுப்பினார் அப்பா. நேரே சாலையை அடைத்து நான்கு பேர் சைக்கிளில். விடாமல் நான் பெல்லடித்தும் அவர்கள் நகரவில்லை. அப்பா வேறு நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாரே, என்ற டென்ஷனில் ப்ரேக் பிடிக்க மறந்து போய் இடித்து விட்டேன். கீழே விழுந்து இடது கண்ணின் கீழ் பலத்த அடி. ரொம்ப நாள் கறுப்புத் திட்டாக இருந்தது.
அதற்கு மேல் வீட்டில் திட்டும் நன்றாக விழுந்தது. “பெல்லடிச்சா உடனே நகந்துடுவானுங்களா. லூசு!”

சின்னச் சின்னதாய் இப்படி நிறைய சம்பவங்கள். டபிள்ஸ் அடிக்கத் தொடங்கிய போது பின்னால் அமர்ந்திருப்பவளைத் தள்ளி விட்டு நாம் மட்டும் சைக்கிளை பேலன்ஸ் செய்து நின்றிருப்பது உட்பட.

ஆனால் ஹைலைட்டாக ஒன்று 2001 ல் நடந்தது. இரவு ஏழரைக்கு மேல் லைப்ரரிக்குக் கிளம்பிய என்னை அம்மா வேண்டாமென்று தடுத்தார். “பக்கத்துல தானே, தோ வந்துடுவேன்மா” என்று கிளம்பினேன். திரும்பி வரும் போது வே....கமாக க்ராஸ் செய்து வலது பக்கம் திரும்பினேன். டமால்! இரண்டு நிமிடம் கழித்து நினைவு வந்த போது நடைபாதையில் அமர்ந்திருந்தேன். சுற்றிலும் யார் யாரோ. பயந்து வெளிறிப்போய் மங்கலாக ஒரு முகம் முன்னால் தெரிகிறது. “ஸாரி, ஸாரி” என்று பிதற்றியவாறு. அவன் தான் எதிர்த்திசையில் வேகமாக பைக்கில் வந்து இடித்திருக்கிறான் என்று புரிந்தது.

தாங்க முடியாமல் இடது பக்கம் மண்டை வலித்தது.
“ஹேய்... காதுலெந்து இரத்தம் வழியுதுப்பா” - ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஸாரி என்ற அந்தப் பையன், “வாங்க உங்களை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போறேன். ” என்று அதே தெருவிலிருந்த ஈ.என்.டி. ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான்.

ஒ.பி பெட்டில் படுத்திருந்த நான் வலி தாங்காமல் பயங்கரமாகக் கத்தினேன். என்ன ஆகி விட்டதோ என்று பயம் வேறு. வீட்டு டெலிஃபோன் நம்பரைச் சொன்னேன். சில நிமிடங்களில் என் அண்ணன் வந்தான். வலி குறைய ஊசி போடப்பட்டு அங்கிருந்து பெஸ்ட் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லச் சொன்னார்கள். மண்டையை ஸ்கேன் செய்யச் சொல்லி.


ஸ்கேன் ரிப்போர்டில் தெரிந்து விட்டது. ஒன்றுமில்லை என்று! (தெரியும் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று), பிரச்னை ஒன்றும் இல்லை என்று தெரிந்தது!

அந்தப் பையன் குடித்திருந்ததாகவும் அவன் மீது நடவடிக்கை எடுக்கலாமென்றும் டாக்டர் சொன்னார். ஆனால் அப்பாவுக்கு அவனைப் பார்த்துப் பரிதாபமாக இருந்தது. மேலும் ஓடி விடாமல் என்னை உரிய நேரத்தில் சிகிச்சைக்கும் அழைத்துச் சென்றானே. அதனால் வேண்டாமென்று விட்டு விட்டார்.

அடுத்த இரு நாட்கள் விடுப்பெடுத்து ஓய்விலிருந்தேன். அலுவலகம் சென்ற இரண்டாம் நாள், முகத்தின் இடது பக்கம் அசைக்கவே முடியவில்லை. பேசுவதோ சாப்பிடுவதோ, ஏன் வாய்க் கொப்பளிப்பதோ கூட முடியவில்லை. அந்தப் பக்கக் கண்ணைச் சிமிட்டவும் முடியாமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. எல்லாரும் ரொம்பப் பயந்து போனார்கள். ஆனால் பிஸியோதெரபிஸ்ட் நண்பர் ஒருவர், பயப்படத் தேவையில்லை எனவும், இரத்தம் உறைந்து முகத்தின் நரம்பின் மீது அழுத்துவதால் ஏற்பட்ட தற்காலிகக் கோளாறு தான் என்றும் சொன்னார். சூயிங்கம் மெல்லுவது விரைந்த பலனைத் தருமென்றார். அதன்படியே ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் பிரச்னை எதுவுமில்லாமல் முடிந்தது. ஆனால் என் ஆசை சைக்கிள் மட்டும் அப்பளம் போல் நொறுங்கி விட்டது.

ஆனால் இந்தச் சம்பவம் எனக்கு சாலை பாதுகாப்பு விதிகள் பற்றியும், வேகம் விவேகம் அல்ல என்பதையும் அழுத்தமாக உணர்த்தி விட்டது. ஹெல்மெட் அணியாமல் வண்டியை எடுப்பதுமில்லை. 30க்கு மேல் வேகமாகச் செல்வதுமில்லை. சிக்னலில் கோட்டைத் தாண்டி நிற்பதுமில்லை.
இருந்தாலும் எப்போதும் மனதில் ஒரு பயம் இருந்து கொண்டு தானிருக்கிறது. அது தேவை தான்.

வாகன ஓட்டிகளுக்கு நான் சொல்ல விரும்புவது இது ஒன்று தான். நம் மீது தவ்றே இல்லை என்று வாதிடுவது முட்டாள் தனம். It may not be your fault, but it's your accident. அதனால் மற்றவர்களின் தவறுக்கும் தயாராக இருங்கள்.
வேகம் வேண்டவே வேண்டாம். தரமான ஹெல்மெட் அணிவது மிக முக்கியம்.
ஆம்புலன்ஸ், போலிஸ் வண்டிகள் தவிர மற்ற வாகனங்கள் எல்லாம் 30 - 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லாதவாறு வடிவமைத்தால் என்ன?



இப்போது நான் அழைக்க விரும்பும் நால்வர்:

அமுதா
விதூஷ்
சங்கவி
அண்ணாமலையான் - இவரை அழைக்க நினைத்தேன். ஆனால் இவர் ஏற்கனவே சாலை பாதுகாப்பு பற்றி எழுதிய இடுகை இங்கே. விரும்பினால் இன்னும் எழுதுங்கள், அண்ணாமலையான்!

Monday, January 18, 2010

சிதறல்கள் - 2

காதல்...

மீண்டும் மீண்டும் விழ ஆசை;
தஞ்சாவூர் பொம்மை போல்
உடனே எழும் விசை மட்டும் இருந்தால்...

காதல்…

முதன் முதலில் நீ வந்தபோது மழலை மாறவில்லை எனக்கு
பேதையாய், பெதும்பையாய்,
மங்கையாய், மடந்தையாய்,
பல வண்ணங்களில் வடிவங்களில்
அழகழகாய் வந்து போனாய்
தெரிவை பருவம் நான் தாண்டும் முன்
மூப்படைந்து ஏன் தளர்ந்து போனாய்?

காதல்…

செத்து வீழ்ந்தபின்னும் சலனமின்றி வெறிக்கிறேன்
புதைக்கவோ எரிக்கவோ மனமின்றி
அழுகிவிடும் என்று அறிவு சொன்னாலும்
மீண்டுவராது என்று மனம் சொன்னாலும்
நினைவுகளின் சூட்டினால் உயிரூட்ட முயன்றபடி

சிதம்பர நினைவுகள்

சிதம்பர நினைவுகள் – பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
தமிழில் கே.வி. ஷைலஜா

கமலா தாஸுக்குப் பிறகு படித்து வியந்த இன்னொரு படு வெளிப்படையான சுயசரிதை. முன்னதை விடவும் அதிகம் பிடித்திருந்தது. 2003 ல் வெளியாகிப் பல பதிப்புகள் கண்டு விட்ட இந்நூலை இப்போது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு.

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவர் யார், எவ்வளவு பிரபலம், வேறு என்ன எழுதி இருக்கிறார் என்று எதுவும் தெரியாமல் படிக்க ஆரம்பித்தேன். தன் வாழ்க்கையையே இலக்கணங்கள் மீறிய முரட்டுத்தனமான கவிதையைப் போல் வாழ்ந்திருக்கிறார் இந்தக் கவிஞர். அந்த வாழ்க்கையைக் கூடவே இருந்து பார்த்த ஒரு நண்பனுக்கு உண்டாகும் அனுபவம் ஏற்பட்டது.

சிதம்பரம் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே சென்றவர், பிச்சையெடுத்தாவது பல நாட்கள் தங்கி எல்லாம் பார்க்க வேண்டுமென்று நினைத்தவர், கசிந்துருகி எழுதி நம்மையும் உருக வைத்திருப்பது அந்த மண்டபத்தைப் புகலிடமாகக் கொண்ட ஒரு முதிய தம்பதியின் அந்நியோன்யத்தை. கோயிலின் சிற்பங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாத அவர் இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையைக் கோபுரத்தில் கொண்டு போய் வைத்துக் கொண்டாடியதிலேயே நம் மனதுக்குள் எளிதில் நுழைந்து விடுகிறார்.

கல்லூரிக்காலத்தில் பித்துப் பிடித்துப் பின்னால் சுற்றிய அழகிய பெண்ணைத் தீயில் வெந்த முகத்துடன் சந்தித்ததை விவரித்து, அச்சந்திப்பின் இறுதியில் ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி தருகிறார்.

எந்த இலக்கணத்துக்கும் கட்டுப்படாத காட்டாற்றைப் போல் வாழ்ந்திருக்கிறார். புரட்சிகரமான சிந்தனைகளால் படிக்கும் போதே வீட்டை விட்டு வெளியேறி பட்ட பாடுகளையெல்லாம் சும்மா போகிற போக்கில் சொல்லி இருக்கிறார். நமக்குத் தான் பதைக்கிறது.

இவரைப் பற்றி மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் சொல்லி இருப்பதை அப்படியே தருகிறேன். அதை விடக்கச்சிதமாய் எனக்குச் சொல்ல வராது.
“பரவசத்தொனியில் சொல்ல வேண்டிய பெருமைகளையும் கூச்ச உணர்வோடு சொல்ல வேண்டிய சிறுமைகளையும் ஒரே தொனியில் - அலட்சிய பாவத்தோடு – அசல் தன்மையோடு வெளிப்படுத்துகிற வினோதமான நிஜ மேதை”

கல்லூரியில் தான் பார்த்துப் பிரமித்த அழகிய அறிவான சீனியர் மாணவனொருவனைக் காலமும் காதலும் அடியோடு புரட்டிப் போட்டதில் பைத்தியக்காரப் பிச்சைக்காரனாய் பஸ் ஸ்டாண்டில் பார்க்கிறார். அந்த சம்பவத்தைப் பற்றி எழுதுகையில்,

“அந்தக் கண்களில் இந்த உலகம் இல்லை
அவனுக்கு என்னை யாரெனப் புரியவில்லை”
”அவனுக்குள்ளே ஜனனத்துக்கு முன்பும், மரணத்துக்குப் பிறகுமான மௌனம் மட்டுமே இருந்தது.”

“ஒரு ஹோட்டலுக்குப் போய் உட்கார்ந்து மசால் தோசை கொண்டு வரச் சொன்னேன். சாப்பாட்டைப் பார்த்தபோது மோகனனின் கண்கள் மின்னின. பறந்து அள்ளி, அள்ளிச் சாப்பிட்டான். எத்தனை வேகம் அதில்!

பசி இல்லாமல் போக, பைத்தியத்தினால் கூட முடியவில்லையே என்ற துக்கம் என்னுள் ப்ரவாகமெடுத்தது. பசிதான் பரம சத்தியம். பைத்தியம் கூடப் பசிக்குப் பிறகு தான் என்ற உண்மை எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது.”

சட்டென எல்லாம் உடைந்து அழ வைக்கும் எழுத்து.

ரத்தத்தின் விலை – தன் அன்புத் தங்கையைக் காப்பாற்ற அரசு மருத்துவமனையில் ரத்தம் விற்க வந்தவனோடு, வயிற்றுப் பாட்டுக்காகத் தன் ரத்தத்தை விற்க வந்த பாலச்சந்திரன் நட்பாகிறார்.

”பல கடைகளிலும் ஏறி இறங்கினோம். அந்த மருந்து கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு கடையில் கிடைத்தது அதன் விலை 27 ரூபாய். ”... “இரத்தம் விற்றுக் கிடைத்த பதினாறு ரூபாய் அவன் கையில் நடுங்க ஆரம்பித்தது.”

“இன்னுமொரு முறை போய் ரத்தம் குடுத்துட்டு வரட்டுமா?” அவன் கள்ளங்கபடமில்லாமல் கேட்டான்.
“ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் தான் எடுப்பாங்க” என்று
கடைசியில் தன் காசையும் அவனுக்குக் கொடுத்து விட்டு நடக்கிறார்.

அழகிய பெண்களைக் கண்டு தடுமாறும் தனது பலவீனத்தையும் அப்பட்டமாய் எழுதி இருக்கிறார் மனுஷன். எத்தனை பேருக்கு இதை வெளிப்படுத்தும் நேர்மை இருக்கும்?

அவர் சொல்வதைப் பாருங்கள்...
”உலக சரித்திரத்தில், ரத்தநெடி அடிக்கும் யுத்த அத்தியாயங்களில், வியட்நாம் மக்களின் வீர வரலாற்றைப் படித்து, மனித் அமக்த்துவத்தின் அதி உன்னதங்களில் மனது லயித்திருந்த என்னை ஒரு பெண்ணின் அருகாமை எவ்வளவு சீக்கிரம் வெறும் ஒரு மிருகமாக மாற்றியிருக்கிறது.”

“மனிதனின் யோக்யதையை நிர்ணயிப்பது கண்டிப்பாக அவனுடைய படிப்போ பாண்டித்யமோ அல்ல. பணம், அதிகாரம், பெண் ஆகிய தொன்மங்களின் மீது அவன் எடுக்கும் நிலைப்பாடு மட்டுமே.”

இன்னும் பல வியக்க வைக்கும் (வெறும் சுவாரசியம் என்று சொல்ல மனம் வரவில்லை) அனுபவங்கள் அடங்கிய இவரது “சிதம்பர நினைவுகள்” வாசித்ததே மறக்கமுடியாத ஒரு அனுபவம் தான்.

என்னவோ மறந்து விட்டேனே. அட, ஆமாம். மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா. எப்படி நினைவிருக்கும்? கொஞ்சமும் நெருடாமல், மொழிபெயர்ப்பு நூல் படிக்கிறோம் என்பதையே மறக்க வைப்பது போல் (சத்தியமாகக் கிளிஷே இல்லை) மொழி பெயர்த்திருக்கிறார். என்ன ஒரு நேர்மையான் உழைப்பு? எழுத்தில் எப்படிப் பட்ட வீரியம்? மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியவர்களுக்குக் கற்றுத் தர ஷைலஜா அவர்களிடம் நிறைய இருக்கிறது.

தாய்மொழி மலையாளம் என்றாலும் இந்நூலைத் தமிழாக்கம் செய்யும் ஆர்வத்தினாலேயே மலையாளத்தை முதன் முதலாக எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று அறிந்த போது அசந்து போனேன்.

உங்கள் மொழியின் அற்புதமான ஒரு கலைஞனை எங்களுக்கு அறிமுகம் செய்ய நீங்கள் எடுத்துக் கொண்ட இம்முயற்சியினால் இரு மொழிகளுக்குமே அளவில்லாப் பெருமைத் தேடித் தந்து விட்டீர்கள். Proud of you Shailaja!

இவரது கவிதைகளையும் விரைவில் மொழிபெயர்த்து வெளியிடுவீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நூற்பெயர்: சிதம்பர நினைவுகள்
வெளியீடு: வம்சி புக்ஸ்
http://www.vamsibooks.com/

Saturday, January 16, 2010

சிதறல்கள்

அடர்ந்து விரிந்து எல்லையில்லாக் காடு அது.

சீராக்கிச் சுத்தம்செய்து, வேலிகட்டி, பாத்திவெட்டிப்
பூச்செடிகள் நட்டுவைத்தேன்
பறவைகளின் கூக்குரலும் பூங்காற்றும்
வேண்டுமெனக் கனிமரங்களும் சேர்த்துவைத்தேன்

பூக்களெல்லாம் உதிர்ந்த ஒரு மாலைப் பொழுதில்
பறவைகளின் பாட்டுச் சத்தம் மெல்ல அடங்கியது
கொழுகொம்பை வெட்டி எறிந்ததால்
கொடிமலர்களும் வாடி வதங்கித் தலை சாய்த்தன
தீராத வேட்கையிலே வெந்தழிந்த காடதனில்
ஆந்தைகளின் அலறல் மட்டும் நள்ளிரவில் கேட்கிறது
_______________________

வலி
உடைந்த கண்ணாடித் துண்டுகளை வேகமாகப் பொறுக்கி எடுத்தேன்
விரல் நழுவிக் கை கிழித்து இன்னும் தூளாய் உடைந்தது;
இதே போலத் தான் உன் நினைவுகளை ஆவேசமாய் மறக்க நினைப்பதும்
_______________________

ஏன்?
சிலரிடம் ஏதாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது;
சிலரிடம் ஏதாவது பேசச்சொல்லி கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது;
என்னுடன் நானே பேசிக்கொள்ளப் பயமாக இருக்கிறது!

Thursday, January 14, 2010

சுயதரிசனம்

புதையல் வேட்டை நடந்தது;
ஆளாளுக்கு முனைந்து தேடியதில்
வைரங்கள் கிடைத்தது ஓரிருவருக்கே;
கண்ணாடிக் கற்களை அள்ளிப் புதையல் என்று
சிரித்து நின்றனர் சிலர்;
குடிக்கத் தண்ணீராவது கிடைக்கட்டும் என்று
கிணறு வெட்டக் கிளம்பினர் சிலர்;
தூர் மட்டும் வாரி அமைதியாய்ச் சென்றனர் சிலர்;
ஆழத் தோண்டி அகப்பட்ட கண்ணாடியில்
முகம் மட்டும் பார்த்த திருப்தியில் நான்.

Wednesday, January 13, 2010

அவளும் இவளும்

லேசாக விலகிய சேலையில் பளீரிட்டது
ஒட்டிய வயிறும் மெல்லிய இடையும்;
”ஹூம்.. என்ன அழகு!” - பொறாமைப்பட்டாள் இவள்
கசங்கிய மடிப்புகளாய் வெள்ளைக் கோடுகள்
இவள் வயிற்றில் பார்த்து
”ஹூம், என்ன் அதிர்ஷ்டம்!” - பெருமூச்செறிந்தாள் அவள்

என் கனவுப் பொங்கல்!

சிறுவயதிலிருந்தே எனக்குக் கிராமங்கள், வயல்வெளி, திண்ணை வீடுகள் என்றால் ரொம்ப ஆசை.
கல்லூரி செல்லும் வரை நான் சென்னையை விட்டு எங்கும் சென்று தங்கியதில்லை. ஓரிரு முறை அக்கா வீட்டுக்குச் சென்றது தவிர.

அக்கா திருமணமாகிச் செல்லும் போது கூட நான் கேட்டது இது தான்; “அம்மு உங்க ஊர்ல வயல் இருக்குமா?”
அம்புலிமாமா போன்ற கதைப் புத்தகங்களில் வரும் கிராமம், ஆலமரம், குளத்தங்கரை, தோட்டம், சோலை, திண்ணை வீடு, முற்றம், இதையெல்லாம் கற்பனையிலேயே கண்டு திளைப்பதும், பெரியவளானதும் நிச்சயம் ஒரு கிராமத்தில் தான் சென்று வசிக்க வேண்டும் என்பதும் சிறுவயதில் எடுத்த தீர்மானங்களில் ஒன்று.

பொங்கல் பண்டிகையின் போது இந்த ஏக்கம் பன்மடங்கு கூடும். பாடப்புத்தகங்களில் வேறு ”பொங்கல்” என்ற தலைப்பில் பாடம் வந்தால் நம்மை வெறுப்பேற்றுவது போல் அழகிய மலையடிவாரத்தில் ஒரு வயல் படமும், திண்ணை வீடும், அதன் முன் அப்பா அம்மா சிறுவர்கள் என்று ஒரு குடும்பமும், மண்பானையில் பொங்கல் பொங்கி வழிய, அருகே கரும்புகளும், அலங்கரிக்கப்பட்ட இரு மாடுகளும் போட்டிருக்கும்.

”மாட்டுப் பொங்கலன்று மக்கள் தம் மாடுகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்துப் பொங்கலும் பழமும் ஊட்டுவர், பின்பு தம் மாடுகளை ஊர்வலமாக அழைத்துச் செல்வர்” என்று படித்து விட்டு அம்மாவிடம் சென்று ”இந்தப் பொங்கலுக்கு எனக்கு ஒரு மாடு வாங்கி வந்தா தான் ஆச்சு” என்று அடம்பிடித்ததும் அம்மா, ”நம்ம பால்காரரை அவரோட மாட்டைக் கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கேன், (அவர் பாக்கெட் பால் போடுபவர்) நீ பொங்கல் ஊட்டலாம்” என்று ஏமாற்றிச் சமாதானப் படுத்தியதும் ஞாபகம் வருகிறது.

என்றாவது ஒரு நாள் அந்தப் பாடப்புத்தகத்தில் இருப்பது போல் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நினைத்து இத்தனை வருடங்கள் ஓடி விட்டன.

ஹும், சூரியனின் கண்ணில் படுகிற மாதிரி பொங்கலும் வைத்ததில்லை, மாடுகளுக்குப் பொங்கல் ஊட்டியதுமில்லை.
இதில் என் மகளுக்குப் பொங்கல் பண்டிகை என்றால் என்ன என்று நான் சொல்லித் தருவது?

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

Saturday, January 9, 2010

அம்மாவின் அலமாரி

அலமாரியை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள் அம்மா...

சேலைகள், புத்தகங்கள், சின்னச் சின்னப் பெட்டிகள், புகைப்பட ஆல்பங்கள், வாசனைத் திரவியங்கள்....ஒடி வந்த நான் சந்தோஷக் கூச்சலிட்டேன்...

அறை முழுதும் சிதறிக் கிடந்த சாமான்களில் அம்மாவின் வாசனை...

பாவாடைச் சட்டையில் பள்ளியில் நடனமாடிய அம்மாவின் படம், பூப்போட்ட புடவையில் பாட்டியின் படம், முதன் முதலில் அப்பா அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்த (இப்போது ஓடாத) கைக்கடிகாரம், எஸ்.எஸ். எல்.சி சான்றிதழ் - ஒவ்வொன்றாய்ப் பார்த்து அதிசயித்தேன்...

”கலைக்காதே.. அந்தப் பக்கம் போ...” அதட்டிக் கொண்டே அம்மா வேலையை முடித்தாள்; ஒவ்வொன்றாய் உள்ளே வைத்து அலமாரியை மூடினாள்.

சுத்தமான அறையைப் பார்த்து ஏனோ எனக்கு அழுகை வந்தது.

Friday, January 8, 2010

என் இனிய‌ மீட்ப‌ர்!

வேலி தாண்டி ஓடி விளையாடிய கல்லா மண்ணாக்கள்,
குப்புற‌க் கிட‌ந்து தரை தேயக் கிறுக்கிய சித்திரங்கள்,
"ரெட், ப்ளூ, கிரீன்..."ஆடிய ஸ்கிப்பிங் கயிறுகள்,
சோப்புத் தண்ணீர் கலக்கி ஊதிய கலர் குமிழ்கள்,
தையற்கடையில் துண்டுத் துணி பொறுக்கித் தைத்த பொம்மைச் சட்டைகள்,
தாயாகும் த‌குதி வந்ததும் இழ‌ந்த இதையெல்லாம்...
தாயான‌ பிற‌கு மீட்டெடுக்கிறேன், க‌ண்ணே உன்னாலே!

Wednesday, January 6, 2010

புத்த‌க‌க் க‌ண்காட்சி -‍ இர‌ட்டிப்பு ம‌கிழ்ச்சி!

ஹையா! புத்தகக் கண்காட்சிக்குப் போயிட்டு வந்தாச்சு! அதுவும் ஒன்றில்லை இரண்டு முறை!முதலில் ஜோவுடன் ச‌னிக்கிழ‌மை. அப்புறம்...guess who!?? நம்ம ஆச்சியுடன்! It was just like renewing our youthful days! பஸ்ஸிலும் ஆட்டோவிலுமாகப் பயணம் செய்த‌தும் கையில் பாப்கார்னும் வாய் ஓயாத அரட்டையுமாய் ஸ்டால்களை வலம் வந்ததும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

இரு நாட்களிலும் வாங்கிய‌தும் பார்த்த‌தும்:
வ‌ம்சி புக்ஸ்: க‌ண்காட்சிக்குச் சென்ற‌வுட‌ன் முத‌லில் தேடிய‌து இந்தப் ப‌‌திப்ப‌க‌த்தைத் தான். பூக்க‌ளிலிருந்த‌ வ‌ந்த‌ புத்த்க‌ங்க‌ள் அனைத்துமே மிக‌ நேர்த்தியாக் இருந்த‌ன‌. class ஆன‌ அட்டைப் ப‌ட‌ங்க‌ள், வெகு அழ‌கான‌ வ‌டிவ‌மைப்பு என்று அச‌த்தி இருந்தார்க‌ள். வாங்கியவை: பெருவெளிச்ச‌ல‌ன‌ங்க‌ள், கிளிஞ்ச‌ல்க‌ள் ப‌ற‌க்கின்ற‌ன‌, மாத‌வ‌ராஜ் அங்கிளின் சொற்சித்திர‌ங்க‌ள் (குருவிக‌ள் ப‌ற‌ந்து விட்ட‌ன‌...), அய்ய‌னாரின் த‌னிமையின் இசை, உரையாட‌லினி, கேவி. ஷைல‌ஜா அவ‌ர்க‌ள் மொழிபெய‌ர்ப்பில் சித‌ம்ப‌ர‌ நினைவுக‌ள் (ம‌லையாள‌ சிறுக‌தைக‌ள்).

ப‌ழ‌னிய‌ப்பா பிர‌தர்ஸுக்குச் சென்றதும் சிறுவயது நினைவுகள் அலைமோதின‌. உல‌க‌ நாடோடிக் க‌தைகள் வாங்கினேன்.

இருவாட்சி ப‌திப்ப்ப‌க‌த்தில் கவிஞர் வெண்ணிலாவின் "பெண் எழுதும் கால‌ம்" வாங்கினேன். செம்ம‌ல‌ர் இத‌ழில் இவ‌ர‌து எழுத்துக்க‌ளைப் ப‌டித்திருக்கிறேன்.

கீழைக்காற்று: ஏனோ நான் ஒவ்வொரு முறையும் அதிக‌ நேர‌ம் செல‌விடுவ‌து இந்த‌ப் ப‌திப்ப‌க‌த்தில் தான். இவ‌ர்க‌ள் வெளியிடும் நூல்க‌ள் அனைத்துமே மிர‌ட்ட‌லாக‌ இருக்கும். சில சிறு நூல்களைக் கையிலெடுத்தால் நேர‌ம் போவ‌து தெரியாம‌ல் வாசித்து முடித்தே விடுவேன்! இம்முறை அப்ப‌டி வாசித்து உட‌ல் ந‌டுங்கிய‌து பிலகிஸ் பானோவின் அநீதிக்கு எதிரான் போராட்ட‌த்தை ப‌ற்றிய‌ புத்த‌க‌ம். வாங்கிய‌வை: "நாங்க‌ள் சும்மா இருந்தாலும் நாடு விடுவ‌தாயில்லை" என்ற‌ க‌விதைத் தொகுப்பும், லெனின் வாழ்கிறார் என்ற‌ புத்த‌க‌மும்.

பார‌தி புத்த‌கால‌ய‌ம். இதுவும் ம‌ன‌துக்கு நெருக்க‌மான‌ ஒரு ப‌திப்ப‌க‌ம். மாத‌வ‌ராஜ் அங்கிள் எழுதிய‌ சே குவேரா ‍ப‌ற்றிய‌ புத்த‌க‌மும் ச‌.த‌மிழ்ச்செல்வ‌ன் அவ‌ர்க‌ளின் "அர‌சிய‌ல் என‌க்குப் பிடிக்கும்" புத்த‌க‌மும் தொட‌ர்ந்து ப‌திப்பாகிக் கொண்டு வ‌ருகின்றன‌. ச‌ந்தோஷ‌மாக‌ இருந்த‌து.
மேலும் குழ‌ந்தைக‌ளுக்காக‌க் குற‌ந்த‌ செல‌வில் ஏராள‌மான‌ சிறு புத்த‌க‌ங்க‌ளை வெளியிட்டிருக்கிறார்க‌ள்.கைநாட்டுச் சித்திரங்களுடன் அழகிய வண்ணங்களில் "தம் தம் தம்பி - தங்கி" புத்தகத் தொகுப்பு மழலைகளுக்கு ஏற்றது. முல்லை ப‌ரிந்துரைத்த‌ "ஆயிஷா" அருமையான‌ புத்த‌க‌ம். குழ‌ந்தைக‌ளைக் கொண்டாடுவோம், ச‌. த‌மிழ்ச்செல்வ‌னின் இருளும் ஒளியும், சிங்கிஸ் ஐத்மத்தாவின் "முதல் ஆசிரியர்", அப்புறம், குழந்தைக்குக் கதை சொல்லலாமென்று நில‌வும் குர‌ங்கும், ஐந்து சீன‌ ச‌கோத‌ர‌ர்க‌ள், ஆகிய‌வை வாங்கினேன்.

Navneet publishers ல் குழ‌ந்தைக‌ளுக்கான‌ நிறைய‌ activity books ம் ஆங்கில‌க் க‌தைப் புத்த‌க‌ங்க‌ள் ம‌ற்றும் charts, board books கிடைக்கின்ற‌ன‌.

Rare books library - பெய‌ரைப் பார்த்து ஆசையுட‌ன் சென்றால் ஏமாற்ற‌ம் தான். It's just an old books stall. அது கூடப் போகட்டும், வ‌ளாக‌த்துக்கு வெளியில் ந‌டைபாதையில் ப‌த்து ரூபாய்க்கு விறகும் புத்த‌க‌ங்க‌ள் இங்கு முப்ப‌திலிருந்து ஐம்ப‌து ரூபாய் வ‌ரை. ஏமாந்து விடாதீர்க‌ள். :‍) குழந்தைகளுக்கான board books கூட நடைபாதையிலேயே அழகாய் வாங்கலாம்.
உண்மையில் rare books என்று ப‌ழைய‌ வார‌ மாத‌ இத‌ழ்க‌ள், குழ‌ந்தைக‌ள் ப‌த்திரிகைக‌ள், (ஹ்ம்.. ரத்னபாலா....) கையெழுத்துப் பிர‌திக‌ள் போன்றவை எங்குமே கிடைக்க‌வில்லை.

நியூ செஞ்சுரி புக்ஸ் ல் ப‌ல‌ கால‌மாய் நான் கேட்டுக் கொண்டிருந்த, டால்ஸ்டாயின் "புத்துயிர்ப்பு" கிடைத்த‌து. அருமையான‌ பைண்டிங்கில், கிருஷ்ண‌ய்யாவின் மொழிபெய‌ர்ப்பில்; அள்ளிக் கொண்டேன். எப்போது ப‌டிக்க‌ ஆர‌ம்பிக்க‌ப் போகிறேன் என்று தெரிய‌வில்லை.

க்ரியா ப‌திப்ப‌க‌த்தில் குட்டி இள‌வ‌ர‌ச‌ன் என்ற சிறு புத்த‌க‌த்தைப் புர‌ட்டிக் கொண்டிருந்தேன். 200 மொழிக‌ளுக்கு மேல் பெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ அருமையான‌ நூல், சிறுவ‌ர் முத‌ல் பெரிய‌வ‌ர்க‌ள் வ‌ரைப் ப‌டித்துச் சிந்திக்க‌ விஷ‌ய‌ம் உள்ள‌து என்று சிலாகித்து வாங்க‌ வைத்து விட்டார்க‌ள். வீண் போக‌வில்லை. மிக‌ வித்தியாச‌மான‌ அருமையான‌ புத்த்கம். (ப‌டித்து விட்டுத் தான் சொல்கிறேன்) வாங்க‌லாம்.

க‌ண்காட்சி மிக‌ அருமையாக‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து.
சில‌ யோச‌னைக‌ள்:
வீட்டிலிருந்து ஒரு பெரிய‌ துணிப்பையை எடுத்துச் செல்லுங்க‌ள். ப‌ல‌ ப‌திப்ப‌க‌ங்க‌ளில் வாங்கிய புத்த்க‌ங்க‌ளைத் தனித்தனிக் க‌வ‌ர்க‌ளில் சும‌ந்து செல்வ‌து க‌ஷ்ட‌மாக‌ இருக்கும்.

நிர்வாக‌த்தின‌ருக்கு: டிக்கெட் கொடுக்கும் இடத்தில், கேட்ப‌வ‌ர்க‌ளுக்கு இர‌வ‌லாக‌ ஒரு சாக்குப் பை (Big shopper) கொடுக்க‌லாம். (வாடகைக்குத் தான்!)
முல்லைக்கு ட்ராலியே வேண்டி இருக்கும்! அப்படி ஒரு புத்தகப் ப்ரியை :)

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ம‌ட்டுமே கான்ட்ராக்ட் எடுத்திருக்கிறார்க‌ள். த‌ர‌ம் ஓகே என்றாலும் விலை ரொம்ப‌ அதிக‌ம். நியாய‌மான‌ விலையில் த‌ர‌மான‌ உண‌வ‌ளிக்க‌க் கூடிய‌ ஒன்றுக்கு மேற்ப‌ட்ட‌ கேட்ட‌ர‌ர்ஸுக்குக் கொடுக்க‌லாமே. (முன்பு அப்ப‌டித்தான் இருந்த‌தாக‌ ஞாப‌க‌ம்.)

முல்லையின் வாசிப்பு அனுபவம் ஆழமாக இருந்தது. பல நல்ல பதிப்பகங்களையும் அருமையான‌ நூல்களையும் எனக்கு அறிமுகம் செய்தார். ஜோவின் ஆர்வம் சரித்திரப் புத்த்கங்கள், self help books, மேலும் அவர் துறைக்குச் சம்பந்தமான‌ டெக்னிக்கல் புத்த்கங்கள் என்று இருந்தது.
இருவேறு ரசனைகள் உடையவர்களுடன் இரு முறை சென்றது சுவார‌சிய‌மாக‌ இருந்த‌து.