Thursday, January 28, 2010

நான் ஏமாந்த கதை

நான் சிறுவயதில் ரொம்பவும் அசடாக இருந்திருக்கிறேன். (இப்ப மட்டும் என்னவாம் என்று பின்னூட்டம் போடுபவர்களுக்கு அநியாய சாபம் வழங்கப்படும்)

அதாவது யார் கட்டுக் கதை கட்டி விட்டாலும் அப்படியே நம்பிவிடுவது. கற்பனைக் குதிரை அநாயாசமாகப் பறக்கும் ரீல் மன்னர்/மன்னிகளுக்கு வாகாகக் காது கொடுப்பது நானாகத் தான் இருப்பேன்.

முதலில் என் அண்ணன். அவன் என்னை ”வெறி கொட்டி” அழ வைப்பதற்கென்றே கதைகள் விடுவான். ஏதாவது காமிக்ஸ் கதை ஒன்றைப் புனைந்து சொல்ல ஆரம்பிப்பான். அதில் வரும் ஹீரோ அவனாக்வும் ஜீரோ நானாகவும் கற்பனை செய்து, அவன் என்னை எப்படியெல்லாம் சிக்கலில் மாட்டி விடுவான் என்று ரசித்து ரசித்துக் கதை பின்னுவான். கேட்கவும் பிடிக்காமல், கேட்காமல் இருக்கவும் முடியாமல் கோபப்பட்டு கத்துவேன். அப்பா வந்து என்னவென்று கேட்கும் முன் முதுகைக் காட்டி என்னை நான்கு அடிகள் அடிக்க வைத்துச் சமரசம் செய்து விடுவான். பல சமயம் அப்பா வரும் போது நான் தான் அவனை அடித்துக் கொண்டிருப்பேன்.

அடுத்தது என் கூடப் படித்த ஒரு சிறுமி. அவள் அப்பா அம்மாவுக்குப் பல வருடங்கள் கழித்துப் பிறந்த ஒரே செல்ல மகள். செல்லமென்றால் அப்படியொரு செல்லம். படிப்பில் வெகு சுமார். ஆனால் அவள் மற்றபடி சுட்டியாகவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாள்.

நிறைய கதைப் புத்தகங்கள் படிப்பாள். அதை விட படங்கள் வரைந்து கதைகள் எழுதுவாள். அதீதக் கற்பனை உண்டு அவளுக்கு. பள்ளி முடிந்து ஒன்றாக நானும் அவளும் ஒரே ரிக்‌ஷாவில் தான் வீடு செல்வோம். அப்போது தான் அவிழ்ப்பாள் அவள் ரீல் மூட்டையை. தனக்கு மந்திர தந்திரங்கள் தெரியும் என்றும், தான் விரும்பினால் என்ன வேண்டுமானாலும் வரவழைக்க முடியும் என்றும் சொல்வாள்.

”சரி, எனக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் சாக்லேட் வர வை பாப்போம்” என்றால், பரிகாசமாய்ப் புன்னகைத்து விட்டு, ”என் சக்தியெல்லாம் நான் இப்போ தீர்த்துட்டேன் பௌர்ணமி அன்னிக்குத் தவம் பண்ணித் தான் திரும்ப மேஜிக் சக்தி யெல்லாம் வர வைக்கணும்:” என்று ஏதோ சொல்வாள். (பௌர்ணமி என்னிக்குன்னு யாருக்குத் தெரியும்?) மற்றவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் அவளைக் கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்; நான் மட்டும் ஆர்வமாக நம்பினேன். எனக்கும் மந்திரம் கற்றுத் தரச் சொன்னேன். (நான் தான் அந்தச் செட்டில் வயதில் இளையவள் என்பது ஒரு சின்ன ஆறுதலே.)

கண்களைக் மூடிக் கொள்ளச் சொல்லி ஏதேதோ சொல்வாள். பின் ”ஒரு பெரிய மலை தெரியுதா, அங்க ஒரு வேடன் தெரியறானா, என்று ஏதேதோ கேட்பாள்” எனக்கு தெரியாது என்று சொல்ல வெட்கமாக இருக்கும். ”தெரியற மாதிரி இருக்கு” என்பேன்.
”கூடிய சீக்கிரம் நீயும் மந்திரம் கத்துக்கலாம். அப்போ உனக்கு நல்லாத் தெரியும்” என்பாள்.

அப்போதெல்லாம் எனக்கும் படங்கள் வரைவதில் ஆர்வமிருந்தது. அதில் எனக்கு மிகவும் பிடித்த படம், இறகுகளுடன், கிரீடமும் அழகான நீள ஆடையும் அணிந்த தேவதை வரைவது. அதைப் பார்த்த அவள், “அழகா வரைஞ்சிருக்கே, உனக்கு இதே போல ட்ரெஸ் வேணுமா” என்றாள். தலையாட்டிய என்னைப் பார்த்து, “அப்போ கோல்ட் கலர்ல ஒரு செயின் வாங்கிட்டு வா நாளைக்கு. அதைக் கழுத்தில போட்டுக்கிட்டு நான் சொல்ற மந்திரத்தைச் சொன்னா உனக்கு ஃபேரி ட்ரெஸ் கிடைக்கும்” என்றாள். மேலும், “முத்துமாலை மட்டும் வாங்காதே. அது பேயோட சிம்பல்” (?) என்றும் “இதை யார் கிட்டயும் சொல்லவும் கூடாது. சொன்னா மந்திரம் பலிக்காது“ என்றும் சொல்லிவிட்டாள்

நானும் அன்று வீட்டுக்கு வந்து அக்காவிடம் அடம் பிடித்து “மம்மி ஃபேன்ஸி” அழைத்துச் சென்று ஒரு கவரிங் செயின் வாங்கிக் கொண்டேன். “என்ன இந்தப் பெண்ணுக்குத் திடீரென்று இதில் ஆசை” என்று நினைத்திருப்பார்கள். அன்று இரவு லக்‌ஷ்மியும் அவள் அம்மாவும் எனக்காக ஃபேரி ட்ரெஸ் கொண்டு வந்து தருவது போல் கனவு வேறு.

மறு நாள் ஆசை ஆசையாக பள்ளிக்குச் சென்றால் மேடம் வரவில்லை. ஊருக்குப் போயிருப்பதாகவும் ஒரு வாரத்துக்கு வரமாட்டாள் என்றும் சொன்னார்கள். எனக்கு அழுகையே வந்து விட்டது. அன்று பள்ளி விட்டு வரும் போது சோகமாக இருந்த என்னை மற்ற பிள்ளைகள் விசாரித்த போது தாங்க முடியாமல் லக்‌ஷ்மி சொன்ன கதையெல்லாம் சொன்னேன். ஓவென்று சிரித்த அவ்ர்கள், “அட, அது ஒரு லூசுன்னா, நீ அதுக்கு மேல இருக்கே. அவளுக்கு வேலையே இது தான். இனிமே அவ பேச்சைக் கேட்காதே” என்று என்னைச் சமாதானப் படுத்தினார்கள். எனக்கு ஒரே அவமானமாகப் போய் விட்டது. அவள் ஊரிலிருந்து திரும்பி வந்ததும் சண்டையிடக் கூட மனம் வரவில்லை. அவளும் சிரித்தால் என்ன செய்வது?

ஹும்...நெடுநாள் யாரிடமும் சொல்லக் கூடத் தயங்கிய விஷயத்தை உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன். சிரிக்காதீர்கள் ப்ளீஸ்! இது போல் ஏமாந்த அல்லது ஏமாற்றிய கதை இருந்தால் நீங்களும் பகிருங்களேன்!

24 comments:

manjoorraja said...

சின்ன வயதில் இப்படி ஏமாறுவதும், அதற்காக அசடு வழிவதும், அழுவதும் சகஜம் தானே!.

கவலையெ விடுங்க

இப்ப சாமியார்கள் என ஒரு கூட்டம் இருக்குது அவர்களிடம் ஏமாறாமல் இருக்கணும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))))) வீரர்களுக்கு இதெல்லாம் ஜகஜமப்பா (ஏன்னா நாங்களும் நிறைய ஏமாந்துருக்கோமுல்ல)

thiru said...

You brought out the child's innocence of you nicely in the blog...Happy to read and recall moments of innocence and wonder of childhood..thanks and Keep It up...

☀நான் ஆதவன்☀ said...

//னக்கு தெரியாது என்று சொல்ல வெட்கமாக இருக்கும். ”தெரியற மாதிரி இருக்கு” என்பேன்.//

:)))))அப்ப நீங்களும் தான் அவங்கள (தெரியற மாதிரி நடிச்சு) ஏமாத்தி இருக்கீங்க. அதை நினைச்சு சந்தோஷப்படுங்க :)

Vidhoosh said...

same blood.. :))
வீராதி வீரர்களில் இணைஞ்சுட்டோம் :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

சந்தனமுல்லை said...

:-))))ரொம்ப ரசித்தேன் தீபா!
என் தம்பி மற்றும் கஸின்ஸ்கிட்டே நிறைய ரீல் விட்டு இருக்கேன்...ஆனா, ஸ்கூல்லே என்னை ஏமாத்தறதுக்கு நிறைய கும்பல் இருந்தது!

மறக்க முடியாதது ஒன்னு வந்து - தனி மடல்லே சொல்றேன்! :-)))

அண்ணாமலையான் said...

அய்யோ அய்யோ... பாவம்

சந்தனமுல்லை said...

ஏமாற்றிய கதைகளும் பல உண்டு - முக்கியமாக காலேஜில். ஒரு அக்கா எதை சொன்னாலும் நம்பி விடுவார். ரொம்ப இன்னொசன்ட். அடர்த்தியாக (அப்போ!) இருந்த தலைமுடியைப் பார்த்து என்ன போடுகிறாய் என்று கேட்க ஃபாக்டம்பாஸ் என்றேன். அவரும் நம்பிவிட்டு எங்கே கிடைக்கும் என்றார் அப்பாவியாக. இப்படி அப்பாவிகளை ஏமாற்றுவதில் எந்த சுவாரசியமும் இல்லாததால் நானே உண்மையைச் சொல்லிவிட்டேன்! (:-( போடணுமா..:-) போடணுமா?!)

andal said...

நான் சின்ன வயதில் எங்கள் ஊர்(சிதம்பரம்)மார்க்கெட் தான் மெட்ராஸ் என நம்பி(என் அண்ணனின் உபயம்) அனைவரிடமும் மெட்ராஸ் சென்று வந்ததாக பெருமையடித்ததும் உண்டு. இனிய நினைவுகள் அருமை

ஐந்திணை said...

//சிறுவயதில் ரொம்பவும் அசடாக இருந்திருக்கிறேன். (இப்ப மட்டும் என்னவாம் //

ஒத்துகிட்டா சரி!!!

பா.ராஜாராம் said...

:-)

இன்னும் மாது வரலையா?மாதுக்கு இது திருவிழா...

:-))

அமுதா said...

:-))) இதெல்லாம் சகஜம்பா...

Radhakrishnan said...

:) தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம்தான் உங்களை ஏமாற்றத்தில் தள்ளிவிட்டது. அந்த ஆர்வத்திற்காக உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.

மனிதர்களை அநியாயத்துக்கும் நம்புபவராகவே (இருந்து) இருக்கிறீர்கள்.

எனக்குத் தெரிந்தே ஏமாறிவிடும் பழக்கம் உண்டு. ஏமாறப் போகிறோம் என்றே ஏமாறுவதில் சுவாரஸ்யமும் உண்டு. எங்கேனும் எழுதி வைத்திருப்பேன், விரைவில் இணைக்கிறேன்.

அண்ணாமலையான் said...

@ andal : ஒரு உள்ளூர் காரவுக இன்னொரு உள்ளுர் காரவுகள கண்டுக்காம போறீகளே நியாயமா?

ஈரோடு கதிர் said...

என்னையும் ஒருத்தன் இப்படித்தான் ஏமாத்தினான்...

மாதவராஜ் said...

இப்படி ஏமாறுவதற்கு கொடுத்து வைத்திருக்கணும்.

ரசம் அழியா நினைவுகள்!

Deepa said...

நன்றி மஞ்சூர் ராஜா!
:))

நன்றி அமித்து அம்மா!
நீங்களுமா? :)

நன்றி திரு!

நன்றி நான் ஆதவன்!
எப்படிங்க இப்ப்டி ஒரு பாஸிட்டிவ் திங்கிங்? எங்கெயோ போயிட்டிங்க!

நன்றி விதூஷ்!
:)

நன்றி டிவி.இராதாகிருஷ்ணன்!

நன்றி முல்லை!
மடலுக்கு வெயிட்டிங்

நன்றி ஆண்டாள்!
ரசித்துச் சிரித்தேன். :)

நன்றி ஐந்திணை!
சந்தோஷமா?

நன்றி ராஜாராம்!
:)

நன்றி அமுதா!

நன்றி இராதாகிருஷ்ணன்!

நன்றி அண்ணாமலையான்!

நன்றி ஈரோடு கதிர்!
சேம் பிளட்?

நன்றி அங்கிள்!
க்கும்..இதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணுமா? :)

அம்பிகா said...

\\மாதவராஜ் said...
இப்படி ஏமாறுவதற்கு கொடுத்து வைத்திருக்கணும். \\

அப்படியா???

Anonymous said...

சகோதரி, நானும் ஏமாந்த கதைய பதிவு செஞ்சிருக்கேன்.. நேரம் இருந்தா வந்து பாத்துட்டு போங்க‌

http://biriyaani.blogspot.com/2010/01/blog-post_31.html

Jaleela Kamal said...

இது போல சின்ன வயசுக்கு போய் அப்ப பேசினது எல்லாம் நினைத்து பார்த்தா ரொம்ப வே சிரிப்புவரும், அந்த முத்து மாலை பேயோட சிம்பல் ஹி ஹி

Sakthi said...

சிரிக்காதீர்கள் ப்ளீஸ்! //

control pannikiren..!

நட்புடன் ஜமால் said...

நான் ஏமாந்த வரலாறு-ன்னு தலைப்பு வச்சிருக்கனும் - பாகம்-1,2 இப்படி எழுதுகிட்டேயிருக்கலாம்.

---------------------

ரொம்ப அசடாக இருந்திருக்கிறேன்னு புரியற அளவுக்கு இப்ப அசடில்லையோ அல்லது அதை இன்னும் சொல்லுமலவுக்கு அசடோ

(இதுக்கு சாபம் கிடையாதே )

Ahamed irshad said...

இந்த கதைய படிச்சிட்டு மறுபடியும்(?) யாரும் ஏமாறாம இருந்தா சரி...