Wednesday, January 20, 2010

சாலையோரம் - தொடர் இடுகை

”சாலையோரம்” என்ற தலைப்பில் தொடர் இடுகைக்கு அழைத்திருக்கிறார் முல்லை. வாகனம் ஓட்டிச் செல்லும் போது நடந்த இக்கட்டான நிகழ்வுகள் குறித்து எழுத வேண்டுமெனப் பொருள் கொள்கிறேன்.

நான் ஸ்கூட்டி ஓட்டத் தொடங்கி சில ஆண்டுகள் தான் ஆகின்றன. யார் புண்ணியமோ இது வரை (touch wood!) சுவாரசியமாக எதுவும் நிகழவில்லை.

ஆனால் அதற்கு முன் சைக்கிள் ஓட்டிச் செல்லும் போது தான் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பெல்லும் ப்ரேக்கும் இல்லாமல் ஓட்டிச் சென்றது அப்போது தானே?

உண்மையில் சைக்கிள் ஓட்டுவது ஒரு தனி சுகானுபவம். முதன் முதலில் பேலன்ஸ் கிடைத்த அந்தத் தருணத்தை மறக்க முடியுமா. கோணல் மாணலாகச் ஓட்டித் திரிந்து நேராக ஒட்டவே சில நாட்கள் ஆகும்.
அப்புறம் சில காலம் காலில் இறக்கை முளைத்தது போல் ஒரு உணர்வு. நாளெல்லாம் சைக்கிள் ஓட்டித் திரிந்தாலும் அலுக்கவே அலுக்காது; ஆசையும் தீராது. அப்படி ஒரு ஆசை ஸ்கூட்டி ஓட்ட ஆரம்பித்த போது ஏற்படவே இல்லை. (பெட்ரோல் விரயமாகுமே என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்!)

ஒன்பதாவது படிக்கும் போது தான் எனக்கென சைக்கிள் கிடைத்தது. அப்பாவுக்கு என்னைச் சைக்கிளில் பள்ளிக்கு அனுப்ப ரொம்பப் பயம். கொஞ்ச நாள் கூடவே இன்னொரு சைக்கிளில் மோகனை அனுப்பி வைத்தார் (அய்யோ!)

பிறகு முதன் முதலில் தனியாக நான் சைக்கிளில் புறப்பட, வாசலில் நின்று வழியனுப்பினார் அப்பா. நேரே சாலையை அடைத்து நான்கு பேர் சைக்கிளில். விடாமல் நான் பெல்லடித்தும் அவர்கள் நகரவில்லை. அப்பா வேறு நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாரே, என்ற டென்ஷனில் ப்ரேக் பிடிக்க மறந்து போய் இடித்து விட்டேன். கீழே விழுந்து இடது கண்ணின் கீழ் பலத்த அடி. ரொம்ப நாள் கறுப்புத் திட்டாக இருந்தது.
அதற்கு மேல் வீட்டில் திட்டும் நன்றாக விழுந்தது. “பெல்லடிச்சா உடனே நகந்துடுவானுங்களா. லூசு!”

சின்னச் சின்னதாய் இப்படி நிறைய சம்பவங்கள். டபிள்ஸ் அடிக்கத் தொடங்கிய போது பின்னால் அமர்ந்திருப்பவளைத் தள்ளி விட்டு நாம் மட்டும் சைக்கிளை பேலன்ஸ் செய்து நின்றிருப்பது உட்பட.

ஆனால் ஹைலைட்டாக ஒன்று 2001 ல் நடந்தது. இரவு ஏழரைக்கு மேல் லைப்ரரிக்குக் கிளம்பிய என்னை அம்மா வேண்டாமென்று தடுத்தார். “பக்கத்துல தானே, தோ வந்துடுவேன்மா” என்று கிளம்பினேன். திரும்பி வரும் போது வே....கமாக க்ராஸ் செய்து வலது பக்கம் திரும்பினேன். டமால்! இரண்டு நிமிடம் கழித்து நினைவு வந்த போது நடைபாதையில் அமர்ந்திருந்தேன். சுற்றிலும் யார் யாரோ. பயந்து வெளிறிப்போய் மங்கலாக ஒரு முகம் முன்னால் தெரிகிறது. “ஸாரி, ஸாரி” என்று பிதற்றியவாறு. அவன் தான் எதிர்த்திசையில் வேகமாக பைக்கில் வந்து இடித்திருக்கிறான் என்று புரிந்தது.

தாங்க முடியாமல் இடது பக்கம் மண்டை வலித்தது.
“ஹேய்... காதுலெந்து இரத்தம் வழியுதுப்பா” - ஒரு ஆட்டோ வந்து நின்றது. ஸாரி என்ற அந்தப் பையன், “வாங்க உங்களை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போறேன். ” என்று அதே தெருவிலிருந்த ஈ.என்.டி. ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான்.

ஒ.பி பெட்டில் படுத்திருந்த நான் வலி தாங்காமல் பயங்கரமாகக் கத்தினேன். என்ன ஆகி விட்டதோ என்று பயம் வேறு. வீட்டு டெலிஃபோன் நம்பரைச் சொன்னேன். சில நிமிடங்களில் என் அண்ணன் வந்தான். வலி குறைய ஊசி போடப்பட்டு அங்கிருந்து பெஸ்ட் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லச் சொன்னார்கள். மண்டையை ஸ்கேன் செய்யச் சொல்லி.


ஸ்கேன் ரிப்போர்டில் தெரிந்து விட்டது. ஒன்றுமில்லை என்று! (தெரியும் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று), பிரச்னை ஒன்றும் இல்லை என்று தெரிந்தது!

அந்தப் பையன் குடித்திருந்ததாகவும் அவன் மீது நடவடிக்கை எடுக்கலாமென்றும் டாக்டர் சொன்னார். ஆனால் அப்பாவுக்கு அவனைப் பார்த்துப் பரிதாபமாக இருந்தது. மேலும் ஓடி விடாமல் என்னை உரிய நேரத்தில் சிகிச்சைக்கும் அழைத்துச் சென்றானே. அதனால் வேண்டாமென்று விட்டு விட்டார்.

அடுத்த இரு நாட்கள் விடுப்பெடுத்து ஓய்விலிருந்தேன். அலுவலகம் சென்ற இரண்டாம் நாள், முகத்தின் இடது பக்கம் அசைக்கவே முடியவில்லை. பேசுவதோ சாப்பிடுவதோ, ஏன் வாய்க் கொப்பளிப்பதோ கூட முடியவில்லை. அந்தப் பக்கக் கண்ணைச் சிமிட்டவும் முடியாமல் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. எல்லாரும் ரொம்பப் பயந்து போனார்கள். ஆனால் பிஸியோதெரபிஸ்ட் நண்பர் ஒருவர், பயப்படத் தேவையில்லை எனவும், இரத்தம் உறைந்து முகத்தின் நரம்பின் மீது அழுத்துவதால் ஏற்பட்ட தற்காலிகக் கோளாறு தான் என்றும் சொன்னார். சூயிங்கம் மெல்லுவது விரைந்த பலனைத் தருமென்றார். அதன்படியே ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் பிரச்னை எதுவுமில்லாமல் முடிந்தது. ஆனால் என் ஆசை சைக்கிள் மட்டும் அப்பளம் போல் நொறுங்கி விட்டது.

ஆனால் இந்தச் சம்பவம் எனக்கு சாலை பாதுகாப்பு விதிகள் பற்றியும், வேகம் விவேகம் அல்ல என்பதையும் அழுத்தமாக உணர்த்தி விட்டது. ஹெல்மெட் அணியாமல் வண்டியை எடுப்பதுமில்லை. 30க்கு மேல் வேகமாகச் செல்வதுமில்லை. சிக்னலில் கோட்டைத் தாண்டி நிற்பதுமில்லை.
இருந்தாலும் எப்போதும் மனதில் ஒரு பயம் இருந்து கொண்டு தானிருக்கிறது. அது தேவை தான்.

வாகன ஓட்டிகளுக்கு நான் சொல்ல விரும்புவது இது ஒன்று தான். நம் மீது தவ்றே இல்லை என்று வாதிடுவது முட்டாள் தனம். It may not be your fault, but it's your accident. அதனால் மற்றவர்களின் தவறுக்கும் தயாராக இருங்கள்.
வேகம் வேண்டவே வேண்டாம். தரமான ஹெல்மெட் அணிவது மிக முக்கியம்.
ஆம்புலன்ஸ், போலிஸ் வண்டிகள் தவிர மற்ற வாகனங்கள் எல்லாம் 30 - 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லாதவாறு வடிவமைத்தால் என்ன?இப்போது நான் அழைக்க விரும்பும் நால்வர்:

அமுதா
விதூஷ்
சங்கவி
அண்ணாமலையான் - இவரை அழைக்க நினைத்தேன். ஆனால் இவர் ஏற்கனவே சாலை பாதுகாப்பு பற்றி எழுதிய இடுகை இங்கே. விரும்பினால் இன்னும் எழுதுங்கள், அண்ணாமலையான்!

12 comments:

அண்ணாமலையான் said...

இன்னும் எழுத வேண்டிய, சாலைகளில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியதற்கான விஷயங்கள் நிறய இருக்கிறது. நன்பர்கள் புத்தம் புது கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தினால் படிக்க, பின் பற்ற ஆவலுடன் உள்ளேன்.

sathishsangkavi.blogspot.com said...

தீபா நீங்கள் சைக்கிள் ஓட்டிய அனுபவமும், பைக் ஓட்டிய அனுபவமும் அருமை..
ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தது போல் இருந்தது..

தொடர் இடுக்கைக்கு என்னை அழைத்து இருக்கறீர்கள் நன்றி எனது மற்றொரு வலைப்பூவான கிராமத்துக்காரனில் இதைப்பற்றியான பதிவை பதிய இருக்கிறேன்..
அங்க வந்து பாருங்க..
http://sangamess.blogspot.com/

Dr.Rudhran said...

well written.. can make it a poem too..... foryour collection

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\\மேலும் ஓடி விடாமல் என்னை உரிய நேரத்தில் சிகிச்சைக்கும் அழைத்துச் சென்றானே. அதனால் வேண்டாமென்று விட்டு விட்டார்.//
ம்...சில பேர் இதுக்கு நேர்மாறா அடிபின்னிடுவாங்க கேஸாகிடும்ன்னு தான் அப்படியே விட்டுட்டுப் போய் அடிபட்டவங்க கவலைக்கிடமாகிடறாங்க.. நல்ல வேளை ஒன்னுமாகலை..

\\ It may not be your fault, but it's your accident. //
உண்மை. நாம் இன்னும் கவனமா இருந்திருக்கலாம்..

Vidhoosh said...

நல்ல பதிவு. அழைப்புக்கு நன்றி. நிச்சயம் எழுதுகிறேன்.

காதுக்கு அருகில் அடி பட்டிருந்தால் நிச்சயம் இன்னொரு முறை செக் அப் செய்து கொள்ளுங்கள். எப்படியும் எந்த நோயானாலும், பெண்கள் குழந்தைப் பேறின் போது நலமாக இருந்திருந்தால் பிரச்சினை இல்லை என்பார்கள். இருந்தாலும்... கவனம்.:)

நாளைக்கே எழுதிடறேன். ஒண்ணா ரெண்டா... வண்டி அனுபவம். :))

Vidhoosh said...

///ஆம்புலன்ஸ், போலிஸ் வண்டிகள் தவிர மற்ற வாகனங்கள் எல்லாம் 30 - 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லாதவாறு வடிவமைத்தால் என்ன?///

ரொம்ப கஷ்டம்ங்க.. என்னை மாதிரி கடைசி நிமிஷ சோம்பேறி கழுதைகளுக்கு... :( வீட்டை விட்டு வெளியில் புறப்பட அவ்வளவு பிடிக்காது... :(

கோமதி அரசு said...

தீபா,
உங்கள் சாலையோர அனுபவம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை உணர்வை தரும்.

”வேகம் விவேகம் அல்ல ’என்று தொடர் பதிவு எழுதியிருக்கிறேன்.

Radhakrishnan said...

//வாகன ஓட்டிகளுக்கு நான் சொல்ல விரும்புவது இது ஒன்று தான். நம் மீது தவ்றே இல்லை என்று வாதிடுவது முட்டாள் தனம். It may not be your fault, but it's your accident. அதனால் மற்றவர்களின் தவறுக்கும் தயாராக இருங்கள்.
வேகம் வேண்டவே வேண்டாம். தரமான ஹெல்மெட் அணிவது மிக முக்கியம்.
ஆம்புலன்ஸ், போலிஸ் வண்டிகள் தவிர மற்ற வாகனங்கள் எல்லாம் 30 - 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லாதவாறு வடிவமைத்தால் என்ன?//

நான் மிதிவண்டி ஓட்டித் திரிந்த காலங்களை நினைவுக்கு கொண்டு வந்தது தங்களின் பதிவு.

தங்களின் வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு யோசனை மிகவும் அருமையாக இருக்கிறது. இதைவிட எளிதானது, மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளும் மனக்கட்டுப்பாடு.

பிறரின் தவறுக்கு நாமும் காரணமாக அமைகிறோம்.

அமுதா said...

//வாகன ஓட்டிகளுக்கு நான் சொல்ல விரும்புவது இது ஒன்று தான். நம் மீது தவ்றே இல்லை என்று வாதிடுவது முட்டாள் தனம். It may not be your fault, but it's your accident. அதனால் மற்றவர்களின் தவறுக்கும் தயாராக இருங்கள்.
வேகம் வேண்டவே வேண்டாம். தரமான ஹெல்மெட் அணிவது மிக முக்கியம்.
ஆம்புலன்ஸ், போலிஸ் வண்டிகள் தவிர மற்ற வாகனங்கள் எல்லாம் 30 - 40 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லாதவாறு வடிவமைத்தால் என்ன?//
நன்றாகச் சொன்னீர்கள். அழைப்புக்கு நன்றி.

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2010/01/blog-post_22.html

எழுதியாச்சு. நன்றிங்க. :)

Deepa said...

நன்றி அண்ணாமலையான்!

நன்றி சங்கவி!
படித்து விட்டு வருகிறேன்.

நன்றி டாக்டர்!
உங்கள் கிண்டலுக்கு அளவில்லாமல் போய் விட்டது! :)

நன்றி விதூஷ்!
நீங்க சோம்பேறியா? நம்ப முடியவில்லை.

நன்றி கோமதி அரசு!
உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.

நன்றி இராதாகிருஷ்ணன்!

//இதைவிட எளிதானது, மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளும் மனக்கட்டுப்பாடு// அது தான் நியாயம். ஆனால் அது எளிது என்றா நினைக்கிறீர்கள்?

நன்றி அமுதா!
எழுதுங்கள். படிக்க ஆவலாய் இருக்கிறேன்.

படிச்சாச்சு விதூஷ்!
பின்னூட்டமும் போட்டாச்சு.

எறும்பு said...

சாலையோரம் தொடர் இடுகை


http://yerumbu.blogspot.com/2010/01/blog-post_25.html