Monday, January 18, 2010

சிதம்பர நினைவுகள்

சிதம்பர நினைவுகள் – பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
தமிழில் கே.வி. ஷைலஜா

கமலா தாஸுக்குப் பிறகு படித்து வியந்த இன்னொரு படு வெளிப்படையான சுயசரிதை. முன்னதை விடவும் அதிகம் பிடித்திருந்தது. 2003 ல் வெளியாகிப் பல பதிப்புகள் கண்டு விட்ட இந்நூலை இப்போது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு.

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்பவர் யார், எவ்வளவு பிரபலம், வேறு என்ன எழுதி இருக்கிறார் என்று எதுவும் தெரியாமல் படிக்க ஆரம்பித்தேன். தன் வாழ்க்கையையே இலக்கணங்கள் மீறிய முரட்டுத்தனமான கவிதையைப் போல் வாழ்ந்திருக்கிறார் இந்தக் கவிஞர். அந்த வாழ்க்கையைக் கூடவே இருந்து பார்த்த ஒரு நண்பனுக்கு உண்டாகும் அனுபவம் ஏற்பட்டது.

சிதம்பரம் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே சென்றவர், பிச்சையெடுத்தாவது பல நாட்கள் தங்கி எல்லாம் பார்க்க வேண்டுமென்று நினைத்தவர், கசிந்துருகி எழுதி நம்மையும் உருக வைத்திருப்பது அந்த மண்டபத்தைப் புகலிடமாகக் கொண்ட ஒரு முதிய தம்பதியின் அந்நியோன்யத்தை. கோயிலின் சிற்பங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாத அவர் இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையைக் கோபுரத்தில் கொண்டு போய் வைத்துக் கொண்டாடியதிலேயே நம் மனதுக்குள் எளிதில் நுழைந்து விடுகிறார்.

கல்லூரிக்காலத்தில் பித்துப் பிடித்துப் பின்னால் சுற்றிய அழகிய பெண்ணைத் தீயில் வெந்த முகத்துடன் சந்தித்ததை விவரித்து, அச்சந்திப்பின் இறுதியில் ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி தருகிறார்.

எந்த இலக்கணத்துக்கும் கட்டுப்படாத காட்டாற்றைப் போல் வாழ்ந்திருக்கிறார். புரட்சிகரமான சிந்தனைகளால் படிக்கும் போதே வீட்டை விட்டு வெளியேறி பட்ட பாடுகளையெல்லாம் சும்மா போகிற போக்கில் சொல்லி இருக்கிறார். நமக்குத் தான் பதைக்கிறது.

இவரைப் பற்றி மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் சொல்லி இருப்பதை அப்படியே தருகிறேன். அதை விடக்கச்சிதமாய் எனக்குச் சொல்ல வராது.
“பரவசத்தொனியில் சொல்ல வேண்டிய பெருமைகளையும் கூச்ச உணர்வோடு சொல்ல வேண்டிய சிறுமைகளையும் ஒரே தொனியில் - அலட்சிய பாவத்தோடு – அசல் தன்மையோடு வெளிப்படுத்துகிற வினோதமான நிஜ மேதை”

கல்லூரியில் தான் பார்த்துப் பிரமித்த அழகிய அறிவான சீனியர் மாணவனொருவனைக் காலமும் காதலும் அடியோடு புரட்டிப் போட்டதில் பைத்தியக்காரப் பிச்சைக்காரனாய் பஸ் ஸ்டாண்டில் பார்க்கிறார். அந்த சம்பவத்தைப் பற்றி எழுதுகையில்,

“அந்தக் கண்களில் இந்த உலகம் இல்லை
அவனுக்கு என்னை யாரெனப் புரியவில்லை”
”அவனுக்குள்ளே ஜனனத்துக்கு முன்பும், மரணத்துக்குப் பிறகுமான மௌனம் மட்டுமே இருந்தது.”

“ஒரு ஹோட்டலுக்குப் போய் உட்கார்ந்து மசால் தோசை கொண்டு வரச் சொன்னேன். சாப்பாட்டைப் பார்த்தபோது மோகனனின் கண்கள் மின்னின. பறந்து அள்ளி, அள்ளிச் சாப்பிட்டான். எத்தனை வேகம் அதில்!

பசி இல்லாமல் போக, பைத்தியத்தினால் கூட முடியவில்லையே என்ற துக்கம் என்னுள் ப்ரவாகமெடுத்தது. பசிதான் பரம சத்தியம். பைத்தியம் கூடப் பசிக்குப் பிறகு தான் என்ற உண்மை எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது.”

சட்டென எல்லாம் உடைந்து அழ வைக்கும் எழுத்து.

ரத்தத்தின் விலை – தன் அன்புத் தங்கையைக் காப்பாற்ற அரசு மருத்துவமனையில் ரத்தம் விற்க வந்தவனோடு, வயிற்றுப் பாட்டுக்காகத் தன் ரத்தத்தை விற்க வந்த பாலச்சந்திரன் நட்பாகிறார்.

”பல கடைகளிலும் ஏறி இறங்கினோம். அந்த மருந்து கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு கடையில் கிடைத்தது அதன் விலை 27 ரூபாய். ”... “இரத்தம் விற்றுக் கிடைத்த பதினாறு ரூபாய் அவன் கையில் நடுங்க ஆரம்பித்தது.”

“இன்னுமொரு முறை போய் ரத்தம் குடுத்துட்டு வரட்டுமா?” அவன் கள்ளங்கபடமில்லாமல் கேட்டான்.
“ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் தான் எடுப்பாங்க” என்று
கடைசியில் தன் காசையும் அவனுக்குக் கொடுத்து விட்டு நடக்கிறார்.

அழகிய பெண்களைக் கண்டு தடுமாறும் தனது பலவீனத்தையும் அப்பட்டமாய் எழுதி இருக்கிறார் மனுஷன். எத்தனை பேருக்கு இதை வெளிப்படுத்தும் நேர்மை இருக்கும்?

அவர் சொல்வதைப் பாருங்கள்...
”உலக சரித்திரத்தில், ரத்தநெடி அடிக்கும் யுத்த அத்தியாயங்களில், வியட்நாம் மக்களின் வீர வரலாற்றைப் படித்து, மனித் அமக்த்துவத்தின் அதி உன்னதங்களில் மனது லயித்திருந்த என்னை ஒரு பெண்ணின் அருகாமை எவ்வளவு சீக்கிரம் வெறும் ஒரு மிருகமாக மாற்றியிருக்கிறது.”

“மனிதனின் யோக்யதையை நிர்ணயிப்பது கண்டிப்பாக அவனுடைய படிப்போ பாண்டித்யமோ அல்ல. பணம், அதிகாரம், பெண் ஆகிய தொன்மங்களின் மீது அவன் எடுக்கும் நிலைப்பாடு மட்டுமே.”

இன்னும் பல வியக்க வைக்கும் (வெறும் சுவாரசியம் என்று சொல்ல மனம் வரவில்லை) அனுபவங்கள் அடங்கிய இவரது “சிதம்பர நினைவுகள்” வாசித்ததே மறக்கமுடியாத ஒரு அனுபவம் தான்.

என்னவோ மறந்து விட்டேனே. அட, ஆமாம். மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஷைலஜா. எப்படி நினைவிருக்கும்? கொஞ்சமும் நெருடாமல், மொழிபெயர்ப்பு நூல் படிக்கிறோம் என்பதையே மறக்க வைப்பது போல் (சத்தியமாகக் கிளிஷே இல்லை) மொழி பெயர்த்திருக்கிறார். என்ன ஒரு நேர்மையான் உழைப்பு? எழுத்தில் எப்படிப் பட்ட வீரியம்? மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியவர்களுக்குக் கற்றுத் தர ஷைலஜா அவர்களிடம் நிறைய இருக்கிறது.

தாய்மொழி மலையாளம் என்றாலும் இந்நூலைத் தமிழாக்கம் செய்யும் ஆர்வத்தினாலேயே மலையாளத்தை முதன் முதலாக எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று அறிந்த போது அசந்து போனேன்.

உங்கள் மொழியின் அற்புதமான ஒரு கலைஞனை எங்களுக்கு அறிமுகம் செய்ய நீங்கள் எடுத்துக் கொண்ட இம்முயற்சியினால் இரு மொழிகளுக்குமே அளவில்லாப் பெருமைத் தேடித் தந்து விட்டீர்கள். Proud of you Shailaja!

இவரது கவிதைகளையும் விரைவில் மொழிபெயர்த்து வெளியிடுவீர்கள் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நூற்பெயர்: சிதம்பர நினைவுகள்
வெளியீடு: வம்சி புக்ஸ்
http://www.vamsibooks.com/

15 comments:

sathishsangkavi.blogspot.com said...

ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப்படுத்தி இருக்கறீர்கள் நன்றி...

அமிர்தவர்ஷினி அம்மா said...

!!!!!!

பசி இல்லாமல் போக, பைத்தியத்தினால் கூட முடியவில்லையே என்ற துக்கம் என்னுள் ப்ரவாகமெடுத்தது. பசிதான் பரம சத்தியம். பைத்தியம் கூடப் பசிக்குப் பிறகு தான் என்ற உண்மை எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது.” //

ப்பா, என்ன சொல்றதுன்னே தெரியலை.

பகிர்வுக்கு நன்றி. அடுத்த பு.காட்சிக்கு வாங்கற லிஸ்ட்ல சேர்த்து வெச்சுட வேண்டியதுதான் ;)))

மாதவராஜ் said...

இந்தப் புத்தகத்தில் பல பக்கங்களை எத்தனை முறை படித்திருப்பேன் என்று சொல்ல முடியாது.

அளவாகவும், அடர்த்தியாகவும் இருக்கிறது உன் அறிமுகம். வாசிப்பின் வழி, பக்குவமும், தெளிவும் அறியமுடிகிறது.

மனித மனதை இரத்தமும் சதையுமாக இப்படியெல்லாம் சொல்லமுடிகிறதே என்ற் வியப்பு இன்னும் விலகவில்லை என்னிடமிருந்து....

மிக அருமையான பகிர்வு தீபா!

சந்தனமுல்லை said...

பகிர்வுக்கு நன்றி தீபா! வாசிக்கத்தூண்டுகிறது...(இப்படி எழுதினா அடுத்த தடவை பார்க்குமபோது புத்தகத்தை கொடுக்கணும்னு அர்த்தம்! ) :-))

அண்ணாமலையான் said...

நல்ல பதிவு. எளிமையான வார்த்தைகளில் அழுத்தமான உணர்வுகள்..பகிர்வுக்கு நன்றி..

அமுதா said...

பகிர்வுக்கு நன்றி தீபா. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொன்றும் மனதைத் தொட்டு என்னவோ செய்கின்றது. நினைவில் வைத்துக்கொள்கிறேன் அடுத்த முறை வாங்கி படிக்க

Deepa said...

நன்றி சங்கவி!

நன்றி அமித்து அம்மா!

நன்றி அங்கிள்!

நன்றி முல்லை!
நீங்க ட்ரீட் வைக்கப்போறீங்க இல்ல.. அங்க வந்து புத்தகத்தைத் தர்றேன் ஒகே? :-)

நன்றி அண்ணாமலையான்!

நன்றி அமுதா!

அபி அப்பா said...

மிகவும் அற்புதமான அறிமுகம். கண்டிப்பாக படித்து விட்டு நானும் விமர்சனம் எழுத ஆசை வருகின்றது.நன்றி தீபா!

க.பாலாசி said...

மிக நல்ல பகிர்வு... படிக்கவேண்டும்...

Ayyanar Viswanath said...

நல்லதொரு பகிர்வு. ஷைலஜாவின் மொழி பெயர்ப்பில் வெளிவந்த சர்மிஷ்டா வும் மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும் அவருடைய சமீபத்திய சூர்ப்பனகைத் தொகுதியில் சூர்ப்பனகையை மட்டுமே வாசித்திருக்கிறேன். நேரமிருந்தால் மற்ற இரண்டையும் வாசித்துப் பகிருங்கள்.

Deepa said...

நன்றி அபி அப்பா!

நன்றி பாலாசி!

நன்றி அய்யனார்!
சர்மிஷ்டா படித்திருக்கிறேன். சூர்ப்பனகை படிக்க வேண்டும்.

நட்புடன் ஜமால் said...

கல்லூரிக்காலத்தில் பித்துப் பிடித்துப் பின்னால் சுற்றிய அழகிய பெண்ணைத் தீயில் வெந்த முகத்துடன் சந்தித்ததை விவரித்து, அச்சந்திப்பின் இறுதியில் ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி தருகிறார்.]]

இதற்காக படிக்கனும். நன்றிங்க நல்ல பகிர்வு.

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வு தீபா.

Dr.Rudhran said...

read three stories. thank you.

கிருஷ்ண மூர்த்தி S said...

/“மனிதனின் யோக்யதையை நிர்ணயிப்பது கண்டிப்பாக அவனுடைய படிப்போ பாண்டித்யமோ அல்ல. பணம், அதிகாரம், பெண் ஆகிய தொன்மங்களின் மீது அவன் எடுக்கும் நிலைப்பாடு மட்டுமே/

இந்த வரிகளைப் படித்ததுமே, புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் வலுவாக எழுந்தது நிஜம்!