மணி ரிக்ஷா மேன்!
நான்கு வயது முதல் பத்து வயது வரை இவரது ரிக்ஷாவில் தான் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். எட்டரை மணியாகி விட்டால் கணகணவென்று மணியடித்துக் கொண்டு வீட்டுக்கு முன் வந்து நிற்பார். அப்போது தான் என் வாயில் அக்கா இட்லியை ஊட்டிக் கொண்டிருப்பார். இந்தப் பக்கம் அப்பாவோ மாமியோ காலில் ஷூவை மாட்டி விட்டுக் கொண்டிருப்பார்கள். "லேட் ஆயிடுச்சு ரிக்ஷாமேன் திட்டப் போறார்" என்று சிடுசிடுத்துக் கொண்டிருப்பேன். (கடைக்குட்டியாகப் பிறந்ததால் சின்ன வயசில் செல்லம் கொடுத்துக் கெடுக்கப்பட்டிருந்தேன்.)
"வாம்மா வாயாடி மங்கம்மா" என்று என்னைத் தூக்கி ஏற்றி விட்டுப் பறப்பார் ரிக்ஷாமேன். எம்.ஜி.ஆரின் பரம பக்தரான அவர் கர்ண கடூரமாக "விவசாயி..." என்று பாட ஆரம்பிப்பார்.
அவ்வளவு தான் எங்கள் ஜமா ஒன்று சேர்ந்து கொண்டு அவரைக் கலாய்க்க ஆரம்பிக்கும்.பேச்சு மட்டுமல்ல; மற்ற ரிக்ஷாக்களை முந்திக் கொண்டு செல்ல வேண்டுமென்று அவர் முதுகில் சரமாரியாக அடிப்போம்.வியர்வையில் ஊறித் திளைத்த அவர் சட்டையின் ஈரம் உள்ளங்கையில் படிந்ததது நினைவுக்கு வருகிறது.
கறுப்பாக நல்ல உடற்கட்டோடு இருப்பார். அவர் முகம் களையாக இருக்கும். சிரிக்கும் போது தெரியும் அவரது வெள்ளைப் பற்களின் அழகு இப்போதும் நினைவில் இருக்கிறது.
பெரும்பாலும் சீட்டில் அமரவே மாட்டார். பெல்லடிக்கும் முன் எங்களைப் பள்ளிக்குள் சேர்த்து விடவேண்டும் என்று மாங்கு மாங்கென்று நின்றபடியே சைக்கிள் பெடல்களை மிதிப்பார்.
ஒரு பெண் அவர் சீட்டுக்குப் பின்புறம் இருக்கும் மரச்சீட்டில் (அதாவது ரிக்ஷாவின் மெயின் சீட்டுக்கு எதிர் சீட்டில்) நின்று கொண்டு அவரது தோளைப் பிடித்த படியே வரும். எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு மிகவும் பாதுகாப்பாகவே ஓட்டுவார்.எனக்கு மிகவும் பிடித்த இடம் டாப்!அதாவது மெயின் சீட்டுக்கு மெலே, பின்னம்பக்கம் பார்த்தவாறு, மடக்கி வைக்கப்பட்டிருக்கும் ரிக்ஷாவின் டாப்புக்கு இடையில் காலை விட்டுக் கொண்டு உட்காருவது! காலையில் அங்கு உட்கார மாட்டேன். வீட்டில் பார்த்தால் திட்டுவார்கள். இப்போது நினைத்தால் பயமாக இருக்கிறது. ஆனால் ரிக்ஷாவின் மிதமான வேகம் ஆபத்துக்கு இடம் கொடுக்காது.
அடை மழையானாலும் ரிக்ஷா முழுதும் கவர் போட்டு எங்களை நனையாமல் அழைத்துச் செல்வார். (மழையில் பள்ளத்தில் மாட்டிக் கொண்டு அவர் ரிக்ஷாவை இழுக்கப் பாடுபட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது.)
மேலும், எங்கள் பள்ளிப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பக்கத்துப் பள்ளியிலும் அழைக்கச் செல்வோம். அப்போது அங்கு காத்திருக்கும் நேரத்தில் ஐந்து பைசா ஆரஞ்சு மிட்டாய்கள் எல்லாருக்கும் வாங்கித் தருவார். அதற்காக அவரைப் படாத பாடு வேறு படுத்துவோம்.
இதையெல்லாம் எங்கள் வீட்டில் சொல்லவே மாட்டார். ஒரு நாள் நான் பள்ளி செல்லாத போது குச்சி ஐஸ் வாங்கிக் கொடுத்ததாக மற்ற பிள்ளைகள் என்னை வெறுப்பேற்றினார்கள். "ரிக்ஷாமேன்! எனக்கு..?" என்று அழுதேன். "வாங்கித் தர்றேன்மா" என்று சொல்லிக் கொண்டே கடைசி வரை ஏமாற்றி விட்டார். எனக்கு அடிக்கடி சளி ஜுரம் வரும். வேண்டுமென்று தான் நான் இல்லாத நாள் பார்த்து ஐஸ் வாங்கித் தந்திருக்கிறாரோ என்று அப்புறம் யோசித்தேன்.
லீவு நாட்களில் சம்பளம் வாங்க வீட்டுக்கு வருவார். அப்போது எனக்கு அவரைப் பார்த்து ஏகக் குஷியாகி விடும். அவர் அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது காலியாக இருக்கும் ரிக்ஷாவில் ஆசை தீர ஏறி விளையாடுவது, அவரது சீட்டில் அமர்ந்து கயிற்றில் கட்டப்பட்ட அந்த மணியை இழுத்து இழுத்து அடிப்பது என்று லூட்டியடிப்பேன்.
ரிக்ஷா ரிப்பேர் ஆன நாட்களில் சைக்கிள் எடுத்துக் கொண்டு வந்து என்னை அழைத்துச் சென்றிருக்கிறார். மற்ற பிள்ளைகளின் வீட்டுக்கு முன்பே சென்று சொல்லி விடுவார். என்னை மட்டும் தான் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக ஞாபகம்.
சில சமயம் அவருக்கு உடம்பு முடியாத போது அவர் மனைவியைப் பள்ளிக்கு அனுப்பி வைப்பார். எங்கள் புத்தக்ப் பைகளைச் சுமந்து கொண்டு வீட்டுக்குப் பத்திரமாக அழைத்து வர! இப்போது நினைத்தால் ரொம்பப் பெரிய விஷயமாக்த் தெரிகிறது. தொழிலாக மட்டும் பார்க்காமல் குழந்தைகளான எங்களை அக்கறையுடனும் அன்புடனும் நேசித்திருக்கிறார் என்று புரிகிறது. அவருக்கு எத்தனை குழந்தைகள் அவர்கள் எங்கு படித்தார்கள் என்பதெல்லாம் நினைவில் இல்லை. நினைக்கையில் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
ரிக்ஷாவில் மோட்டர் பொருத்த வேண்டுமென்பது அவரது நெடுநாளைய ஆசை. அப்போது மோட்டார் ரிக்ஷாக்கள் கூடுதல் மவுசைப் பெற்றிருந்தன. (ரொம்ப பெடல் மிதிக்க வேண்டாம். வேகமாகவும் போகும்.) ஆனால் நான் பார்த்தவரை அவர் அதைச் செய்யவே இல்லை.
ஏழாவது முதல் என் தோழியுடன் நடந்தே செல்ல விரும்பியதால் ரிக்ஷா வேண்டாமென்று நானே சொல்லி விட்டேன்.
பின்பு சைக்கிளில் செல்லும் போது என்றாவது எதிரில் பார்த்தால் புன்னகைப்பார். "பாத்து ஓட்டும்மா.. வாயாடி மங்கம்மா" என்பார். சில ஆண்டுகள் வரை எதார்த்தமாக கண்களில் பட்டுக் கொண்டிருந்தவர் அப்புறம் என்னவானார் என்றே தெரியவில்லை.
மோட்டார் பொருத்தியிருப்பாரா அல்லது அந்த ரிக்ஷாவை விற்று ஆட்டோ வாங்கியிருப்பாரா? அவரது குழந்தைகளை ஒரு நாளாவது அந்த் ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருப்பாரா?
29 comments:
beautiful deepa.
read the book MOTHER,PIOUS LADY- it sketches the days that you describe in your blog, and moves on to contemporary status.
ஆஹா சூப்பர்! எனக்கு தான் அந்த குடுப்பினையே இல்லை. நடந்தே பள்ளிக்கு போக சொல்லி அப்பா அம்மா கொடுமை படுத்திட்டாங்க:-)) ஏனா பள்ளி கூடம் 10 வீடு தள்ளி தான்!
வாம்மா...வாயாடி மங்கம்மாவா...ரவுடி ராக்கம்மாவா இல்லே இருந்திருக்கே! :-)))
எனக்கும் என்னோட ஸ்கூல் டேஸ் ஞாபகத்துக்கு வந்துடுச்சு! ரிக்ஷாவிலே வர்றவங்களை ஏக்கத்தோட பார்த்திருக்கேன்...ரொம்ப ஆசையா இருக்கும்..தினமும் ரிஷாவிலே வர்றதுக்கு! ஆனா, அடுத்த தெருவிலே இருந்ததாலே பெரிம்மா காலையிலே ஸ்கூல் போகும்போது விட்டுட்டு போய்டுவாங்க! :-(
அப்புறம், ஆம்பூரிலே நான் பார்த்த ரிஷாக்காரங்க ஆட்டோக்கு மாறினதை பார்த்திருக்கேன்.
நல்ல பகிர்வு...
ஒரு நல்ல மனிதரைத் தொலைச்சீட்டீங்க :(
அழகான நினைவு கூறல் தீபா.
அந்த வயதின் விளையாட்டுகளை நினைத்துப் பார்த்தால் மகிழ்ச்சியாக உணர்வோம்.
அந்த ரிக்ஷாகாரர் என்ன ஆனார் என்ற கேள்வியை நம் வாழ்வில் வந்த பலரை நினைத்தும் கேட்டுப் பார்க்கலாம்.
"என் முதல் பாய்பிரென்ட் " அப்படியின்னு டைட்டில் பாத்து படிக்க வந்த
முதல் வரியிலேயே
மூட் அவுட் பண்ணிட்டீங்க.
இருந்தாலும் நல்ல பகிர்வு......கொஞ்சம் சென்டி...பிழிந்துவிட்டீர்கள்.
சூப்பர்!
//"என் முதல் பாய்பிரென்ட் " அப்படியின்னு டைட்டில் பாத்து படிக்க வந்த
முதல் வரியிலேயே
மூட் அவுட் பண்ணிட்டீங்க.//
ரிப்பீட்டேய்....
//அவரது குழந்தைகளை ஒரு நாளாவது அந்த் ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருப்பாரா? //
இந்த வரில இருக்குங்க இந்த கட்டுரையை கவிதையாக்குற மேஜிக்
மோட்டார் பொருத்தினாரோ, ஆட்டோ வாங்கினாரோ இல்லையோ.
இவ்வளவுதூரம் அன்புக்கு பாத்திரமாக இருந்திருக்கிறாரே அது பெரிது.
ஒரு புதிய பாதைக்கு இழுத்துச்செல்லும் பதிவு.
என்னன்னே தெரியல.. உங்களோட பல பதிவுகள் என்னுடைய சின்ன வயசு நினைவுகளையும் கிளரிட்டே இருக்கு சகோதரி!!
நானும் எல்கேஜியில இருந்து ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் ரிக்ஷாதான்.. அவரு பாலு ரிக்ஷாமேன்.. நீங்களும் ரிக்ஷாமேன்னு தான் சொல்லுவீங்களா.. :))) முதல்ல மோட்டர் இல்லாம இருந்தது, பிறகு தான் மோட்டர் பொறுத்தினார்..
எங்களுக்கு ஐஸ் வேங்கி தந்தததில்லை.. ஆனா எப்பமாச்சும் ஒரு பெட்ரோல் பங்க்ல நிறுத்தும்போது அங்கே ஒரு பெரிய புளிய மரம் இருக்கும், அதுல எங்களுக்கெல்லாம் புளியங்கா எடுத்து தருவார்..
நீங்க சொன்ன அதே மழை நாட்களில் முழுசா கவர் செய்யப்பட்ட ரிக்ஷா, சின்ன வயசில தூக்கிட்டு போனது, எல்லாமே எனக்கும் நடந்திருக்கு.. :)
Same pinch :))
ஹையா...நான் கூட ரொம்ப நாள் ரிக்க்ஷாலே ஸ்கூல் போயிருக்கேன்!
நல்ல சரளமா ஒரு nostalgic பதிவு .. எங்கள் ரிக்க்ஷா வாலா பாபு படம் பாத்துட்டு பண்ணின அளப்பர இருக்கே ஸ்கூல் லேந்து கிளம்பியவுடன் எங்கள் அரவை மெஷின் ஆரம்பித்து விடும் .ஒரே பாட்டும் ஆட்டமுமாய் என்ன மாதிரி இனிய நாட்கள் அவை .
நன்றி தீபா,ஞாபகப் படுத்தியதிற்கு
ரிக்க்ஷா!அன்றைய மெட்ராசின் அடையாளம் இல்ல!
ஆஹா..... கலக்கல்....
சிறு வயது விளையாட்டை அசைபோட அசைபோட அதன் நினைவுகளில் இருந்து மீள சிறிது நேரம் ஆகும்....
ஜெயகாந்தன் சிறுவயதில் வேலை செய்யும் சமயத்தில் ஒரு கிழவியிடம் அக்கவுண்ட் வைத்து தினமும் சோறு வாங்கி சாப்பிட்டதாகவும், திடீரென்று ஒரு நாள் அவளைக் காணவில்லை என்றும், அவளுக்கு என்ன ஆனதோ என்றும் மிகவருத்தத்துடன் எழுதியிருந்ததை நினைவு கூறும் வகையில் உங்கள் அனுபவம் இருக்கிறது. அந்தப்பெண்ணுக்கு தான் சோற்றுக்கடன்பட்டுள்ளதாகக் கூட சொல்லுவார். நீங்க அந்த ரிக்ஷாக்காரருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள்
தீபா, தேடிப்பாருஙகள் கிடைக்கலாம்..
முதல் ஃப்ரெண்ட் நிஜமாவே இவர் தான்.நல்ல பதிவு...
மிக அருமையா நினைவு கூறல்
கனமான கடைசி வரிகள்
மிக நல்லதொரு பதிவு
மிக நெகிழ்வான பதிவு தீபா.
கண் கலங்கியது. எதுக்குன்னு தெரியாது..
"அந்த ரிக்ஷாகாரர் என்ன ஆனார் என்ற கேள்வியை நம் வாழ்வில் வந்த பலரை நினைத்தும் கேட்டுப் பார்க்கலாம்."
I go along with Sa. Sendhilvelan. So many such people come across in our lives even today: Have you seen a bus conductor having a special concern for the regular passenger?
அழகான பதவு தீபா. Nice narration too, very good flow
மலரும் நினைவுகள் :-)
நெகிழ்வான இடுகை. எங்களை பள்ளிக்கு அழைத்துச்சென்ற இரண்டு நபர்களின் முகம் கண்முன் வந்துசென்றது.மறந்து போனவர்களை நினைவூட்டிவிட்டீர்கள்.மகிழ்ச்சியும் நன்றியும்.)
நிச்சியமாக அவர் இன்று நல்ல நிலையில்தான் இருப்பார்..
அந்த மனிதரின் எளிமை உங்கள் எழுத்திலும் தெரிந்தது, படித்து முடித்ததும் என் உடம்பு புல்லரித்து போய் விட்டது.அருமை தீபா
வாயாடி மங்கம்மா :))))
மனதை நெகிழ வைத்த பதிவு.
தீபா,
உன்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
முதல் போய் பிறண்ட்.. ஆர்வத்தைத் தூண்டும் அசத்தலான பதிவு..நன்றாக இருக்கு.
Post a Comment