Friday, May 21, 2010

யாதெனின் யாதெனின் நீங்கியான்...

சொந்தக் கதை சோகக் கதை எழுதக் கூப்பிட்டா மொத ஆளா ஓடி வந்துடுவேங்கற நம்பிக்கையோட அம்பிகா அக்கா இந்தத் தொடர்பதிவுக்குக் கூப்பிடிருக்காங்க. எழுதிடுவோமே!

விரும்பியதும் கிடைத்ததும்

படிப்பு மற்றும் வேலை விஷயத்தில் நான் என்ன விரும்பினேன்? ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்று கனவு கண்டேன். அண்டவெளியில் கோடிக்கணக்கான காலக்ஸிக்களும் கிரகங்களும் இருப்பதாகவும் பூமியை விடப் பன்மடங்கு பெரிதான கோளங்கள் சுற்றுவதாகவும் அறிந்த போது ஏற்பட்ட பிரமிப்பு அந்த ஆசையைத் தோற்றுவித்தது. நில‌வில் கால் பதியாமல் மிதந்து செல்லும் ஆராய்ச்சியாளர்களை டிவியில் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்திருக்கிறேன்.

டாக்டர், எஞ்சினிய‌ர், வெளிநாடு க‌ன‌வெல்லாம் பெரிதாக‌ இருக்க‌வில்லை.
பள்ளி இறுதி வகுப்புகளில் ப‌டிக்கும் போது, கணினிக் க‌ல்வி ஏதாவ‌து க‌ற்று ஒரு ந‌ல்ல‌ க‌ம்பெனியில் ஓரளவு கௌரவமான சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான் யதார்த்தமான‌ ஆசையாக இருந்தது.

ஆனால் உள்ளுக்குள் வேறு கனவுகளும் இருந்தன. இசையில் ஏதாவது சாதிக்க வேண்டும். விட்டுப் போன பாட்டுப் பயிற்சியை மீண்டும் தொடங்கி மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணற்ற கனவுகள் இருந்தன.

ஆனால் அவற்றை நிறைவேற்றப் போதுமான முயற்சியும் உத்வேகமும் ஏனோ இல்லாமல் போனது. கல்லூரியில் பேராசிரியர்களே கூட "உனக்கு கேம்பஸ்ல வேலை கிடைக்காட்டிக் கூட கவலை இல்லம்மா. நீ நிச்சயம் பாடகி ஆயிடலாம்" என்ற ரேஞ்சுக்கு ஏற்றி வைத்திருந்தார்கள். ஆனால் எனக்கு என் ஸ்டான்டர்டு தெரிந்திருந்தது. இசையில் உயரங்களை எட்ட வேண்டுமானால் குரல் மட்டும் போதாது; பல ஆண்டுகள் தொடர்ந்த முறையான உழைப்பும் பயிற்சியும் வேண்டும்.

"பெர்ஃபார்ம‌ன்ஸ்" என்பது ஹாபியாக இருக்கும் போது கிடைக்கும் தன்னிறைவும் கௌரவமும் தொழிலாக ஏற்றுக் கொள்ளும் போது கிடைக்குமா என்று ஒரு பயமும் த‌ய‌க்க‌மும் வேறு என் ம‌ன‌தைக் க‌ட்டிப் போட்ட‌து.
நாம் பாடுவ‌து ந‌ம‌க்காக‌வும் ந‌ம் அன்புக்குரிய‌வ‌ர்க‌ளுக்காக‌வும் ம‌ட்டும் இருந்தால் போதுமே என்ற‌ எண்ண‌மும் என்னை அந்த‌ப் பாதையில் அடியெடுத்து வைக்க‌ விடாம‌ல் த‌டுத்து விட்ட‌து. போயிருந்தாலும் வெற்றி கிடைத்திருக்கும் என்ப‌து நிச்ச‌ய‌ம‌ல்ல‌வே. :)

நல்ல இசையை ரசிக்கவும் அனுபவிக்கவும் நம்மால் இயல்கிறது என்பதே எவ்வளவு பெரிய சந்தோஷம் என்ற ஞானம் இப்போது வந்திருக்கிறது. வேலை முடிந்து வந்து சூப்பர் சிங்கர் ஜூனியரில் குட்டீஸ் பாடுவதைக் கேட்டால் மெய்மறந்து போகிறது. மன இறுக்கத்தை வெகுவாகத் தளர்த்த வல்லது அந்த நிகழ்ச்சி. சில குறைகளை நிவர்த்தி செய்தால் இன்னும் சிறப்பாக அமையும்.

இன்னொரு விஷயம் விரும்பியும் நடக்காமல் போனது பேராசிரியை ஆக வேண்டும் என்பது. சிவில் பொறியியல் படித்து முடித்த போது எஞ்சினியராக வேலை பார்ப்பதை விடக் கல்லூரியில் பேராசிரியையாகவே விரும்பினேன்.
ஆறுமாதம் பாலிடெக்னிக்கில் வேலை பார்த்த போது அந்த அனுப‌வம் அலாதியாக இருந்தது. நாங்கள் படித்த போது முட்டி மோதிப் பயின்ற எஞ்சினியரிங் ட்ராயிங்கை மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியாக‌ இருந்தது.

அதற்கு முந்தைய செமஸ்டர் வரை பாதிக்கும் மேல் தோல்வியுற்ற அப்பாடத்தில் அனைத்து மாணவர்களும் பிள்ளைகளும் 80க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து முழுத் தேர்ச்சியடைந்ததும் சீனியர் பேராசிரியைகள் வியந்து பாராட்டியதும் ம‌ற‌க்க‌ முடியாத‌ நினைவுக‌ள். ந‌ல்ல‌ வேலை கிடைக்க‌வில்லையே என்ற‌ குறையை ம‌ற‌க்கடித்துப் புதுத்தெம்பூட்டிய‌ ப‌ருவ‌ம் அது.

ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் சிவிலுக்கு ரொம்பவும் மதிப்பு இல்லாததால் கல்லூரிகளிலும் பேராசிரியை வேலை வாய்ப்புகள் இருக்கவில்லை. அதனால் கணனித் துறைக்குத் தடம் மாறிய கதையை ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். (கற்றது சிவில்)

பாட்டைத் தொலைத்த‌தை விட‌வும் ஏமாற்ற‌ம் ஆசிரிய‌ர் துறையைத் த‌வ‌ற‌ விட்ட‌து தான். இப்போது வேலை செய்யும் இட‌ங்க‌ளில் ஜூனியர்களுக்குப் பயிற்சி கொடுப்ப‌து போன்ற‌ ப‌ல‌ரும் விரும்பாத‌ வேலைக‌ளை அதனால் தான் விரும்பிச் செய்கிறேனோ என்ன‌வோ.

வேலை, சம்பளம், பதவி இதிலெல்லாம் பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாததாலும், கொஞ்சம் 'பேக்கு' என்று அறியப்பட்டாலும் என் மனதின் சந்தோஷமும் நிம்மதியும் எதில் இருக்கிறது என்பதில் எனக்குத் தெளிவு இருப்பதாலும், நான் விரும்பியவையே எனக்குக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானவை அன்பும் நட்பும்.

மேலும் நாம் விரும்பியதெல்லாம் கிடைத்து விடாமலிருப்பதும் ஒரு வரம் தான்! என் அம்மா சொல்லி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த குறளை இங்கு நினைவு கூர்வதை அவசியமெனக் கருதுகிறேன்.

"யாதெனின் யாதெனின் நீங்கியான் நோத‌ல்
அத‌னின் அத‌னின் இல‌ன்"


எதையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்று வருந்துகிறோமோ அவற்றுடன் சேர்ந்து வரும் துன்பங்களையும் நாம் இழக்கிறோம் என்று உணர்ந்து நிம்மதியுற வேண்டும். (இது எனது படு சுமாரான விளக்கம். பொறுத்தருள்க!)

13 comments:

Radhakrishnan said...

//வேலை, சம்பளம், பதவி இதிலெல்லாம் பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாததாலும், கொஞ்சம் 'பேக்கு' என்று அறியப்பட்டாலும் என் மனதின் சந்தோஷமும் நிம்மதியும் எதில் இருக்கிறது என்பதில் எனக்குத் தெளிவு இருப்பதாலும், நான் விரும்பியவையே எனக்குக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானவை அன்பும் நட்பும்.//

நெகிழ வைத்த இடுகை. மிகவும் அருமை.

அன்புடன் அருணா said...

நல்லாவே விளக்கியிருக்கீங்க!

அ.முத்து பிரகாஷ் said...

யாதெனின் எனக்கு ரொம்ப பிடிச்ச குறள் தீபா .....
உங்க விளக்கம் கொஞ்சம் வித்யாசமா இருக்கு ...
ED class இப்படி எடுத்தாத் தான் எல்லாத்துக்கும் புரியும் ...

அம்பிகா said...

உன் இனிமையான பாடல்களை பதிவு நினைவு படுத்துகிறது தீபா.
\\கொஞ்சம் 'பேக்கு' என்று அறியப்பட்டதாலும்\\
ஏனிப்படி ?
அருமையான பதிவு தீபா. உடனடியாக பதிவிட்டதற்கு நன்றிமா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல குறள் .. :) நல்லா விளக்கி இருக்கீங்க..

bandhu said...

//என் மனதின் சந்தோஷமும் நிம்மதியும் எதில் இருக்கிறது என்பதில் எனக்குத் தெளிவு இருப்பதாலும்//
You will be always happy in life! You have the Gnanam.

இனியா said...

good one!

Romeoboy said...

நல்லா இருக்கு பதிவு ..

Uma said...

//மேலும் நாம் விரும்பியதெல்லாம் கிடைத்து விடாமலிருப்பதும் ஒரு வரம் தான்!// உண்மை.

நாஸியா said...

நல்லா இருந்தது படிக்க. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

பாற்கடல் சக்தி said...

adadaa kural, (thiru)kural rendume nallaa valayuthunga

சந்தனமுல்லை said...

அன்பு தீபா,

தங்களுக்கு விருது இங்கே

http://sandanamullai.blogspot.com/2010/05/blog-post_27.html

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com