Thursday, May 27, 2010

ரசவாதம்

நெஞ்சுக்கூட்டிலிருந்து வறண்டு, அடித்தொண்டையைக் கிழித்துக் கொண்டு வெளிப்பட்ட அந்த இருமல் இரவின் நிசப்தத்தில் அமானுஷ்யமாகக் கேட்டது.

சாரதா மாமிக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. மெல்ல எழுந்து கதவைத் திறந்து கொண்டு வந்தாள். அந்த நான்கடிக்கு இரண்டடி வராந்தாவில் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தான் ஆறுமுகம். பாதி இரவில் பெய்திருந்த மழையினால் காற்றும் தரையும் சில்லிட்டிருந்தது.

வெகுநேர‌ம் த‌ய‌ங்கிய‌ பின், அவ‌ன் இரும‌ல் நிற்காம‌ல் போக‌வே,
"ஏண்டாப்பா க‌ம்ப‌ளி ஏதானும் வேணுமா? இப்ப‌டிக் குளிர்ல‌ ந‌டுங்க‌றியே?
காய்ச்சலா இருக்கா?"

அவ‌னிட‌மிருந்து ப‌தில் வ‌ராம‌ல் போக‌வே உள்ளே சென்று ஒரு ப‌ழைய‌
க‌ம்ப‌ளியை எடுத்து வ‌ந்தாள். "இந்தா" என்று அவ‌ன் த‌லை மாட்டில் வைத்து விட்டு, அவ‌ன் எடுத்துப் போர்த்திக் கொள்வதை உறுதி செய்தபின் உள்ளே போனாள்.

அவ‌ள் ம‌ன‌ம் அவன் மேல் ப‌ச்சாதாப‌ப்ப‌ட்ட‌து.ஆறுமுக‌ம்! முப்பது வ‌ய‌தில் இந்த‌க் ஹ‌வுசிங் போர்டு குடித்த‌ன‌த்துக்குக் க‌ண‌வ‌னுட‌ன் வ‌ந்த போது இருவரையும் ரிக்ஷாவில் ஏற்றிக் கொண்டு ம‌யிலாப்பூர் கோவிலுக்கு அழைத்துச் சென்ற‌து முத‌ல் ரிட்டையராவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் இரண்டு கிட்னியும் ஃபெயிலியராகி அரசு மருத்துவமனையில் படுத்துக் கிடந்த கணவனை இரவெல்லாம்
விழித்துக் கூடவே இருந்து பார்த்துக் கொண்டது வரை ஆறுமுகம் அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட துணையாக இருந்திருக்கிறான் என்பதை முதன்முறையாக நினைத்துப் பார்த்தாள்.

அவ‌ளை விட‌ப் ப‌த்துவ‌ய‌து மூத்த‌வ‌னாக‌ இருந்தாலும் அவ‌ள் அவ‌னை "வாடா போடா" என்று தான் அழைப்பாள். அவ‌ன் பதிலுக்கு "அம்மா" என்று தான் அழைப்பான்.

சார‌தாவின் க‌ண‌வ‌னுக்கு முப்பது வ‌ய‌திலேயே ச‌ர்க்க‌ரை வியாதி வ‌ந்து
விட்ட‌து. அதன்பின் வ‌ரிசையாக‌ என்னென்ன‌வோ வியாதிக‌ள். அத‌ற்கேற்ற‌ ம‌ருத்துவ‌ம், ப‌ணிவிடைக‌ள் என்று ச‌ம்ப‌ள‌ம் வாங்காத‌ ந‌ர்ஸாக‌வே வாழ்க்கையைக் க‌ழித்து விட்டாள் சார‌தா.

ஆறுமுக‌ம் சின்னவயதிலேயே மனைவியை இழந்து விட்டான். இர‌ண்டு பைய‌ன்க‌ள். பெரிய‌வ‌ன் டெய்லர்; திரும‌ண‌மாகி மூன்று குழ‌ந்தைக‌ள் இருக்கிறார்க‌ள். சின்ன‌வ‌ன் தத்தாரி. ஏதோ சினிமா ந‌டிக‌ரின் ஆஸ்தான‌ ர‌சிகனாக‌ "ந‌ற்ப‌ணி" செய்து கிட‌ப்ப‌தே அவ‌ன் தொழில். இருவ‌ருமே அப்ப‌னை வ‌ந்து க‌ண்டு கொள்வ‌து கிடையாது.

ம‌றுப‌டியும் இரும‌ல் ச‌ப்த‌ம் கேட்ட‌து. மாமி அடுப்ப‌டிக்குச் சென்று
ப‌ம்ப் ஸ்ட‌வ்வை மெல்ல‌ப் ப‌ற்ற‌ வைத்தாள். சுக்குக் க‌ஷாய‌ம் போட்டுத்
தர‌லாமென்று சுடுத‌ண்ணீர் வைத்தாள்.

'கிர‌சின் தீர்றாப்ப‌ல‌ இருக்கு. காலையில ஆறுமுக‌த்தை அனுப்பி வாங்கிட்டு வ‌ர‌ச் சொல்ல‌ணும்' என்று நினைக்கும் போதே அவன் இருக்கும் நிலைமையில் திடீரென்று ஜுர‌த்தில் ப‌டுத்து விட்டால் என்ன‌ செய்வ‌து என்று யோசித்தாள்.

இதற்குள் லேசாக‌ விடிய‌த் தொட‌ங்கி இருந்த‌து. அவனுக்குக் காப்பி
கொடுக்கும் அலுமினிய‌ லோட்டாவில் க‌ஷாய‌த்தை ஊற்றி எடுத்து வெளியே வ‌ந்த‌ போது ஆறுமுக‌ம் எழுந்து உட்கார்ந்திருந்தான்.

லேசாக‌ நிம்ம‌தியுற்ற‌ சார‌தா, "இந்தா, ஆறுமுக‌ம் இந்த‌க் க‌ஷாய‌த்தைக்
குடி. பாவ‌ம், நெஞ்செல்லாம் காஞ்சு போயிருக்கும்." அவ‌ன‌ருகில் த‌ரையில் வைத்தாள்.

கொதிக்கும் அந்த‌ப் பாத்திர‌த்தைக் காய்த்துப் போன‌ உள்ள‌ங்கைக‌ளில்
அநாயாச‌மாக ஏந்தி அவ‌ன் குடிப்ப‌தைப் பார்த்தாள் சார‌தா.

"உன் ம‌க‌னோட‌ போய் இருந்துக்கோயேன். உன் ம‌ரும‌க உன‌க்கு ரெண்டு வேளை சோறு போட‌மாட்டாளா? வய‌சான‌ கால‌த்துல‌ இப்ப‌டி க‌ஷ்ட‌ப்ப‌ட‌ற‌யே" கொஞ்ச நாளாக அவனைப் பார்த்தால் பாடும் பல்லவியை மீண்டும் தொடங்கினாள்.

ஆறுமுக‌ம் ப‌தில் பேசாம‌ல் சிரித்தான். அவ‌ன் போக‌ மாட்டான் என்று
அவ‌ளுக்கும் தெரியும். அவ‌ன் போய்விட்டால் த‌ன‌க்கு யாரும் துணையில்லை என்ப‌தும் தெரியும். ஆனாலும் அதையெல்லாம் தெரிந்த‌து போல் அவளும் காட்டிக் கொள்வதில்லை, அவனும் சொல்லிக்கொள்வதில்லை.

...கம்பெனியில் சுமாரான சம்பளத்தில் வேலை பார்த்து வந்தான் சாரதாவின் கணவன்.குழ‌ந்தைக‌ள் கிடையாது. க‌ண‌வ‌னோடு வாழ்ந்த‌ கால‌த்தை விட‌க் கொடுமையான‌து அவ‌ன் பெற்றோர் உயிருட‌ன் இருந்த கால‌ங்க‌ள். பொதுவான‌ வீட்டு வேலைகள், நாத்தனார் அதிகாரங்கள், கொடுமைகளுடன் 'ம‌ல‌டி ம‌ல‌டி' என்று வாய் ஓயாம‌ல் தூற்றுவ‌தைப் பொறுக்க‌ முடியாம‌ல் ஒரு நாள் ந‌டுக்கூட‌த்தில் நின்று வெடித்தாள்.

"இதோ பாருங்கோ... நான் மாசாமாசாம் மூலையில ஒதுங்கிண்டு தான் இருக்கேன். நான் பொம்மனாட்டிங்கறதுக்கு இதுக்குமேல சர்ட்டிஃபிகேட் வேணும்னா ஆஸ்பத்திரிக்கு அழைச்சிண்டு பொய் டெஸ்ட்பண்ணுங்கோ. ஆனா அதே மாதிரி ஒரு சோதனைக்கு உங்க பிள்ளை தயாரான்னு கேளுங்க்கோ."

அவ்வளவு தான்! முக‌மெல்லாம் ஜிவுஜிவுக்க "...நாயே அவ்வளவு திமிராடி உனக்கு" என்று ஒடி வ‌ந்து அவ‌ள் நெஞ்சில் மிதித்துத் த‌ன் "ஆண்மையை" நிரூபித்தான் அவ‌ள் க‌ண‌வ‌ன். ஆனாலும் குட்டு வெளிப்ப‌ட்டு விட்ட‌பின் அவ‌ள‌து மாம‌னார் மாமியார் வாயைப் பொத்திக் கொண்டு விட்டன‌ர்.

இய‌ந்திர‌ம் போல் வாழ்க்கையை ந‌ட‌த்த‌ க‌ண‌வ‌ன் ம‌னைவி இருவருக்கும்
பரஸ்பரம் தேவையாயிருந்த‌ப‌டியால், பழக்கத்தினால் வாழ்ந்து
கொண்டிருந்தார்கள். குறிப்பாக‌ த‌ன் இடுப்புத் துணி அவிழ்ந்தாலே க‌ட்டி
விட‌க் கைக‌ள் தேடும் அள‌வு சோம்பேறியான‌ அவ‌ள் க‌ண‌வ‌ன் அவ‌ளைச் ச‌தா பேசிச் சித்ர‌வ‌தை செய்தாலும் இவ‌ளால் ஏனோ அவ‌னை விட்டு விட‌ முடிய‌வில்லை. ப‌டிப்ப‌றிவும் இல்லாத, உற‌வுக‌ளும் இல்லாத‌ நிலையில் ஒரு ஏழைப் பெண் எங்கு போக‌ முடியும் என்று நினைத்தாள்?

வீட்டில் ஊறுகாய் போட‌வும் அப்ப‌ள‌ம் வ‌டாம் இடுவ‌தையும் இத்த‌னை
வ‌ருட‌ங்க‌ளில் ஒரு நிலையான தொழிலாக ஏற்றுக் கொண்டு விட்டதால், இதோ கணவன் போன பின்னும் இடிந்து விடாமல் இரண்டு வேளை சாப்பிட முடிகிறது. அவள் மனதிலும் பலவிதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது.

சார‌தாவின் க‌ண‌வ‌ன் சீக்காளியாக‌ இருந்தாலும் ம‌காக்கொடுமைக்கார‌னாக‌
இருந்தான். ப‌டுத்த‌ ப‌டுக்கையாக‌ அவ‌ன் ஆனபின்னும் கூட நூதனமாக அவன் செய்த கொடுமைகளை எழுத முடியாது.
படுக்கையிலிருந்தபடியே கேட்கக்கூடாத வசவுகளைப் பொழிந்து கொண்டிருக்கும் கணவனை நலுங்காமல் தூக்கிச் சுத்தப் படுத்தி உடை மாற்றி விட்டுத் திரும்புவதற்குள், ஓசைப் படாமல் அந்தத் துணிகளை எடுத்துச் ச‌ல‌வை செய்து போட்டிருப்பான் ஆறுமுகம்.

"நீ ஏன் இதையெல்லாம் செய்றே" என்று கோபப்ப‌ட்டாலும் ஆஸ்ப‌த்திரி வீடு என‌ சோர்ந்து போகும் அவ‌ளுக்கு அவ‌ன் இது போல் சொல்லாம‌ல் செய்யும் எத்த‌னையோ செய‌ல்க‌ள் பேருத‌வியாக‌ இருக்கும்.

அதோ, ப‌தினைந்து வ‌ருட‌ங்க‌ளாக‌ ச‌ம‌ர்த்தாக‌ ஓடிக் கொண்டிருந்த‌ அந்த‌
கிரைண்ட‌ர் நேற்று ம‌க்க‌ர் ப‌ண்ணிய‌ போது ரிப்பேர் செய்ய‌ வ‌ருப‌வ‌ன்
கேட்கும் போது தான் நினைவு ப‌டுத்திப் பார்த்தாளே; அதை எப்போது
வாங்கினோம், என்ன‌ விலைக்கு வாங்கினோம், என்ன‌வெல்லாம் அரைத்திருக்கிறோம் என்று.
அதே போல் இய‌ந்திர‌மாய் ஆறுமுக‌ம் சுழ‌ன்று சுழ‌ன்று வேலை பார்த்த போது யோசிக்காத‌தையெல்லாம் அவ‌ன் இதோ காய்ச்ச‌லில் ப‌டுத்து விட்ட‌ பின் தான் ச‌க‌ ம‌னித‌னாக‌ அவ‌னைப் ப‌ற்றி எண்ண‌மிட‌ ஆர‌ம்பித்தாள் சார‌தா.

அவனுக்கு ஊர் சென்னையை அடுத்திருக்கும் எத்தனையோ கிராமங்களில் ஒன்று.விவசாயக் குடும்பம். தரித்திரம் துரத்தவே சென்னைக்கு வந்து ரிக்ஷா ஓட்டிப் பிழைக்கத் தொடங்கி நகரவாசியான எத்தனையோ ஏழைக் குடிமகன்களில் ஒருவன். ஆனால் கடும் உழைப்பாளி. கிராமத்தின் மண்மணம் மாறாத வெள்ளை மனசு; குடிப்பான். ஆனாலும் "குடிச்சுட்டு அம்மா வூட்ல‌ போய்ப் படுக்கக் கூடாது" என்பதில் உறுதியாக இருப்பான்.

ரிக்ஷா ஓட்டுவது மட்டுமல்லாமல் வீட்டைச் சுத்தம் செய்வது, இ.பி பில் கட்டுவது, ரேஷன் கடைக்குப் போவது என்று வீட்டின் இன்றியமையாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்களின் இயல்பு வாழ்க்கையை இலகுவாக்கினான். அவன் வாங்கி அடுக்கி வைத்தது தான் வராந்தா ஒராத்தில் இருக்கும் இந்த ரோஜாப் பூந்தொட்டிகள் எல்லாம்.

அவ‌னுக்கென்ன‌ இந்த‌ வீட்டின் மீது அப்ப‌டி ஒரு அக்க‌றை? அவ‌ள் க‌ண‌வ‌ன் நாராய‌ண‌னை ஆஃபிசுக்கு அழைத்துச் சென்று மாலை கூட்டி வ‌ருவ‌து அவ‌ன் வேலையாக‌ மாத‌ச் ச‌ம்ப‌ள‌த்துக்கு நிய‌மித்தார்க‌ள். சவாரி இல்லாத நேரமெல்லாம் அவன் அலுவலகத்துக்கு வெளியில் தான் வண்டியை நிறுத்தி விட்டுப் படுத்துக் கிடப்பான். சனிக்கிழமை ஆஸ்பத்திரிக்குப் போக, ஞாயிற்றுகிழமைகளில் வெளியில் போக, என்று பெரும்பாலும் கூடவே இருக்க ஆரம்பித்தான்.
அவனுக்கும் குடும்பம் கூட‌ இல்லாததால், இந்த ஒண்டுக் குடித்தன வராண்டாவில அவனுக்கு நிரந்தரமான இடமொன்று ஏற்பட்டிருந்தது.

'ஃப்ரென்டுன்னு சொல்வாங்களே, அந்த இலக்கணத்துக்குத் தகுந்த மாதிரி இந்த உலகத்துல முதலும் கடைசியுமா இவன் தானே இருக்கான்? உள்ளதிலேயே உசந்ததுன்னு சொல்லிக்கற நான் பொறந்த ஜாதியில ஒரு ஜென்மம் இத்தனை நாள் எனக்குத் துணைன்னு இருந்ததே, அதையும் இவனையும் ஒப்பிட்டுப் பார்த்தா? ஹூம்!'

இப்படிப்பட்ட சிந்தனைகள் முதன் முதலாக சாரதாவின் மனதில் துளிர்விட்டவுடன் கூண்டிலிருந்து வெளிப்பட்ட மிருகம் தினவு கொள்வது போல் அவ‌ள் உடம்பெல்லாம் சிலிர்த்தது.

'அவ‌னுக்குப் மகன்கள் இருந்தும் இப்ப‌டி அநாதையாக் கிட‌க்கானே?
- அநாதையா? உன‌க்குத் துணையாக‌ப் பிடிவாத‌மாய் இங்கு இருக்கும் அவ‌னை அநாதை என்கிறாயே' என்று இடித்த‌து ம‌ன‌து. க‌ண்க‌ளிலிருந்து
புத்த‌ம்புதிய‌ க‌ண்ணீர் பெருக்கெடுத்து ஓட‌ப் புது ம‌னுஷியாக‌
உண‌ர்ந்தாள் சார‌தா.

எழுந்து பரபரவென்று வேலைக‌ளை முடித்தாள். கடமையே என்று சமையலை முடித்த‌வ‌ள் வெளியில் மீண்டும் வ‌ந்து பார்த்தாள். அவ‌ன் அருகே சென்ற‌துமே காய்ச்ச‌லின் வெப்பத்தை உண‌ர‌ முடிந்த‌து. உள்ளே சென்று அல‌மாரியைத் திற‌ந்தாள். மேல் தட்டில், அது இருப்பதே மறந்து போன, திரும‌ண‌மான‌ புதிதில் அவ‌ள் அம்மா வாங்கி கொடுத்திருந்த‌ அந்த ஆறுக‌ஜ‌ம் நைல‌க்ஸ் சேலையை எடுத்தாள். மடிசாரைத் தவிர எதுவும் கட்டக் கூடாது என்று அவள் மாமியார் அதைச் சுருட்டிப் பரணில் தூக்கி எறிந்தது நினைவுக்கு வந்தது. ந‌முட்டுச் சிர்ப்பு சிரித்துக் கொண்டாள். வ‌ன்ம‌த்துட‌ன் மடிசாரைக் க‌ழ‌ற்றி எறிந்து நைல‌க்ஸ் சேலையை உடுத்தினாள்.

வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியில் விறுவிறுவென‌ ந‌ட‌ந்தாள்.
சில நிமிடங்களில் ஆட்டோவில் திரும்பி வ‌ந்தாள். ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்த ஆட்டோக்காரனின் உத‌வியுட‌ன் வ‌ண்டியில் ஆறுமுகத்தை ஏற்றிக் கொண்டாள். துவ‌ண்ட‌ அவ‌ன் த‌லையை ம‌டியில் சாய்த்துக் கொண்டாள். மீண்டும் அதிர்ச்சியுட‌ன் திரும்பிப் பார்த்தான் ஆட்டோக்கார‌ன்.

"சீக்கிர‌ம் போப்பா..." என்றாள் இயல்பாக. ஈரம் காயாத மரங்களிலிருந்து சில்லென்று காற்று வீசியது.

"அம்மா, அன்னிக்கு நீங்களும் ராஜேஷ அம்மாவும் வித‌வைப் பென்ஷ‌ன் அப்ளை ப‌ண்ண‌னும்னு சொல்லிட்டு இருந்தீங்க‌ளே. ப‌ண்ணிட்டீங்க‌ளா." - யதார்த்தமாய்ப் பேச்சுக் கொடுத்தான் ஆட்டோக்காரன்.

"சீ, யாருக்கு வேணும் அந்த‌ப் பிச்சைக் காசு. என‌க்கு வேண்டாம்."
என்றவளின் கைகள் அநிச்சையாக ஆறுமுகத்தின் நெற்றியை வருடிக் கொண்டிருந்தன.

பி.கு:அனுராதா ரமணனின் சிறை கதையின் தாக்கம் இருப்பதாக நினைப்பவர்கள் அதற்கும் இதற்கும் இருக்கும் வேறுபாட்டை உணர்வீர்களானால் மிக்க‌ நன்றியுடையவளாவேன். :-)

8 comments:

Uma said...

//'ஃப்ரென்டுன்னு சொல்வாங்களே, அந்த இலக்கணத்துக்குத் தகுந்த மாதிரி இந்த உலகத்துல முதலும் கடைசியுமா இவன் தானே இருக்கான்? உள்ளதிலேயே உசந்ததுன்னு சொல்லிக்கற நான் பொறந்த ஜாதியில ஒரு ஜென்மம் இத்தனை நாள் எனக்குத் துணைன்னு இருந்ததே, அதையும் இவனையும் ஒப்பிட்டுப் பார்த்தா? ஹூம்!'//
Wow! ரசித்துப் படித்தேன். நன்றி.

Aba said...

டெம்ப்ளேட் பிரமாதம். கதையும் சூப்பர்.

Radhakrishnan said...

:) சிறை கதை படித்தது இல்லை. ரசவாதம் நன்றாகவே இருக்கிறது. சக மனிதருக்கு உதவி செய்வதில் என்ன வேஷம் வேண்டி கிடக்கிறது ;)


நல்லா எழுதி இருக்கீங்க தீபா.

ஈரோடு கதிர் said...

ரொம்ப அருமையா இருக்குங்க தீபா

Dr.Rudhran said...

very well expressed. keep going.

ponraj said...

அருமையான பதிவு!!!

சபாஷ் மாமி!!!!

பாற்கடல் சக்தி said...

///ச‌ம‌ர்த்தாக‌ ஓடிக் கொண்டிருந்த‌ அந்த‌
கிரைண்ட‌ர் நேற்று ம‌க்க‌ர் ப‌ண்ணிய‌ போது ரிப்பேர் செய்ய‌ வ‌ருப‌வ‌ன்
கேட்கும் போது தான் நினைவு ப‌டுத்திப் பார்த்தாளே; அதை எப்போது
வாங்கினோம், என்ன‌ விலைக்கு வாங்கினோம், என்ன‌வெல்லாம் அரைத்திருக்கிறோம் என்று.
அதே போல் இய‌ந்திர‌மாய் ஆறுமுக‌ம் சுழ‌ன்று சுழ‌ன்று வேலை பார்த்த போது யோசிக்காத‌தையெல்லாம் அவ‌ன் இதோ காய்ச்ச‌லில் ப‌டுத்து விட்ட‌ பின் தான் ச‌க‌ ம‌னித‌னாக‌ அவ‌னைப் ப‌ற்றி எண்ண‌மிட‌ ஆர‌ம்பித்தாள்////

///உள்ளதிலேயே உசந்ததுன்னு சொல்லிக்கற நான் பொறந்த ஜாதியில ஒரு ஜென்மம் இத்தனை நாள் எனக்குத் துணைன்னு இருந்ததே////

கூடுதல் வார்த்தைகள் எதுவும் தேவை இல்லை... மிக அழகான பதிவு

ஜெய்லானி said...

மனச தொட்ட கதை...

:-))