Sunday, November 29, 2009

வற்றாத கிணறும் அதே போன்ற மனிதர்களும்!


கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் குளிப்பது போல் ஒரு காட்சி டி.வியில் வந்தது. இது போல் குளித்த அனுபவம் இருக்கிறதா என்று நானும் ஜோவும் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டோம்.
சென்னையில் கோடை வந்தாலே ப்ளாஸ்டிக் குடமும் கையுமாய் அலைந்த காலங்களின் சூடு கூட முன்னொரு காலத்தின் பசுமையான நினைவுகளை உறிஞ்சிவிடவில்லை.

சிறுவயதில் கோடை விடுமுறையில் நாளெல்லாம் புழுதியிலும் மண்ணிலும் ஆசை தீர விளையாடிய பின் அந்தி சாயும் நெரத்தில் வாளி வாளியாய்க் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் குளித்த அனுபவங்களைப் பகிர்ந்து மகிழ்ந்தோம்.
ஹூம்.. பேசி முடித்து நேஹாவைப் பார்த்த போது தான் உறைத்தது. கிணறு என்பது அவளுக்கெல்லாம் காணக் கிடைக்காத ஒரு அரிய பொருளாகி விடுமல்லவா?


கிணறு என்றவுடன் எங்கள் பக்கத்து வீடு தான் நினைவுக்கு வரும். என் விளையாட்டுத் தோழியின் வீடு அது. சிறுவயதில் விடுமுறை நாட்களில் சாப்பிடவும் தூங்கவும் தவிர எந்நேரமும் அவர்கள் வீட்டிலேயே தான் இருப்பேன். அவர்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தனர். என் தோழியின் சித்தி பிள்ளைகள் தவிர அத்தை பிள்ளைகளும் விடுமுறை என்றால் வந்து விடுவார்கள். ஒரே விளையாட்டுத் தான். அப்புறம் எனக்கு மட்டும் வீட்டில் கால் தங்குமா என்ன?


அவர்கள் வீட்டில் வெகு காலத்துக்கு (2000 ஆண்டு வரை என்று நினைக்கிறேன்.) மோட்டாரும் குழாய் வசதிகளும் கிடையாது. ஒரே ஒரு கிணறு தான் உண்டு. வாளியால் இறைத்துத் தான் குளிப்பது, துணிதுவைப்பது, பாத்திரம் துலக்குவது, எல்லாமே. கார்ப்பரேஷன் தண்ணீருக்கு மட்டும் பின்னர் ஒரு அடிபம்ப் பொருத்தினார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், தெருவில் ஏனைய வீடுகளில் எல்லாம் மோட்டர் போட்டு அவரவர் கிணறுகளை வற்ற வைத்து விட்டோம். பற்றாக்குறைக்கு போர் போட்டு அதுவும் தண்டமாகத் தான் இருந்தது. ஆனால் இவர்கள் வீட்டுக் கிணறு மட்டும் இறைக்க இறைக்க ஊறும் அமுதசுரபியாக இருந்தது. யார் வந்து கேட்டாலும் தட்டாமல் தண்ணீர் தந்து உதவும் மனமும் அவர்களுக்கு இருந்தது.

கடும்உழைப்பு, எளிமை, ஒற்றுமை, அளவற்ற அன்பு என்று பல அரிய குணங்களின் எடுத்துக்காட்டு மட்டுமல்ல கருவூலமாகத் திகழ்பவர்கள் அந்த வீட்டு அங்கிளும் ஆண்டியும். பெரம்பூரில் ஐசிஎஃப் இல் வேலை பார்த்த அங்கிள் தினமும் ஆறு மணிக்கு வேலைக்குக் கிளம்புவார். அவரை அந்நேரத்துக்கு வேலைக்கு அனுப்பும் வகையில் ஆண்ட்டி எழுந்திருப்பது நான்கு மணிக்கு!

ஓய்வு நேரத்திலும் சும்மா இல்லாமல் கடை கண்ணிக்குப் போய் வருவது, வீட்டைச் சுற்றித் தோட்டம் போட்டு அதைக் கொத்திக் கொண்டிருப்பது, வீட்டில் பழுதடைந்த சாமான்களைத் தானே சரி செய்வது என்று சுறுசுறுப்பாகவே இருப்பார் அந்த அங்கிள். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது.

இன்னொரு விஷயம், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை சைக்கிள் தான் அவரது வாகனம். அப்புறம் தான் ஒரு டி.வி.எஸ் 50 வாங்கினார்.
பிள்ளைகள் எல்லாரும் சைக்கிள்களை மறந்து ஸ்கூட்டி, கார் என்று மாறி விட்டனர். ஆனாலும் இவர் பக்கத்தில் கடைத்தெருவுக்குப் போக வர, அவர்கள் கை விட்ட லேடி பேர்ட் சைக்கிளைத் தான் எடுத்துச் செல்வார். அந்த எளிமை அவரது தனித்துவம். அவரைப் பார்க்கும் போதெல்லாம் அந்த எளிமையைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பேன்.

ஆண்டியும் அன்பு செலுத்துவதில் அலாதியானவர். நான் கல்லூரியில் படித்த் போது செமஸ்டர் லீவுக்கு வந்திருந்தேன். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பத்து நாட்கள் முன்னதாகவே புறப்பட்டுச் செல்ல வேண்டி வந்தது. எனக்கு மிகவும் பிடித்த ஒரு பலகாரத்தை, முன்கூட்டியே எனக்காகச் செய்து கட்டிக் கொடுத்தார்கள் அனுவும் ஆண்டியும். என்னால் மறக்கவே முடியாத செயல் அது.

என் திருமணத்துக்குப் பின்பு அதே தெருவில் வேறு வீட்டில் ஜோவும் நானும் இருக்கிறோம். ஒரு வாரத்துக்கு முன் இரவு பத்து மணிக்கு ஆண்ட்டி வீட்டுக்கு வந்தார். ”காஸ் சிலிண்டர் இருக்காம்மா? தீர்ந்து விட்டது. புக் பண்ணி இரண்டு வாரம் ஆகிறது என்றார்”

அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு அப்போது தான் வந்திருந்தது. பழைய சிலிண்டர் தீரவும் எங்களுக்கு இன்னும் நாள் இருந்தது. ஜோவும் அங்கிளும் எடுத்துக் கொண்டு போய் அவர்கள் வீட்டில் வைத்து விட்டனர்.

சரியாக நான்கு நாட்களில் ஆண்ட்டியும் அங்கிளும் புது சிலிண்டரொன்றைத் தூக்கிக் கொண்டு வீட்டுக் கதவைத் தட்டினார்கள். பதறிப் போய் அவர்களைக் கடிந்து கொண்டேன். வேண்டிய போது நாங்களே வந்து எடுத்து வந்திருப்போம், இப்போது என்ன அவசரம் என்று.
”சின்னக் குழந்தையை வைத்திருக்கிறாய். திடீரென்று தீர்ந்து போனால் என்ன செய்வாய்” என்றார்கள். மேலும் சமயத்துக்குத் தந்ததாகச் சொல்லி நன்றி சொன்னவர்களை இடைமறித்து ஊருக்கெல்லாம் ஓடோடி உதவும் அவர்களுக்கு அந்தச் சின்ன உதவி செய்ய முடிந்தது எங்களுக்குத் தான் மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது என்றேன்.

இன்னும் எவ்வளவோ எழுதலாம், இது போல் தூய்மையான அன்பினால் நம் மனதில் உயர்ந்தவர்களைப் பற்றி. கையில் தான் வலிமை வேண்டும்!

10 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

தூய அன்பு இப்பொழுதெல்லாம் காணக்கிடைப்பதரிதாகிவிட்டது
சகோ...

நல்லதொரு அனுபவப்பகிர்வு..

அமுதா said...

/*கிணறு என்பது அவளுக்கெல்லாம் காணக் கிடைக்காத ஒரு அரிய பொருளாகி விடுமல்லவா?*/
:-(

/*இன்னும் எவ்வளவோ எழுதலாம், இது போல் தூய்மையான அன்பினால் நம் மனதில் உயர்ந்தவர்களைப் பற்றி. கையில் தான் வலிமை வேண்டும்*/
தூய்மையான அன்புள்ளங்களுக்காக தான் மழை இன்னும் பொய்க்காது பெய்கிறது.

நேசமித்ரன் said...

தூய அன்பு இந்த சொல்லே கேட்கக் கிடைக்காததாக இருக்கிறது இப்பொதெல்லாம் ...

மிக்க நல்ல பதிவு

அமிர்தவர்ஷினி அம்மா said...

அமுதாவை வழிமொழிகிறேன்.

Dr.Rudhran said...

deepa, kalki is organizing meet on dec 6th..check and let me know if you and your friends are coming

பூங்குன்றன்.வே said...

பாஸிடிவ் பதிவு,அருமை.

சந்தனமுல்லை said...

மிகவும் ரசித்த இடுகை..தீபா!
சென்னையிலிருப்பவர்கள் குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள் என்று பொதுவாக மற்றவர் சொல்ல கேட்டிருக்கிறேன்...ஏனோ அது நினைவுக்கு வந்தது இங்கு! மேலும், சமூகம் , சமூகம் என்று நாம் சொல்வது வேறு எங்கும் இல்லை.நமது அக்கம் பக்கத்து வீடுகள்தான் சமூகம் என்று பெரிம்மா சொன்னதும் கூடவே நினைவுக்கு வந்தது! அருமையான இடுகை!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பகிர்வு

அமிர்தவர்ஷினி அம்மா said...

பதிவு போடுங்க மேடம், பதிவு போடுங்க :)

அன்புடன் அருணா said...

அருமையான பகிர்வு! பூங்கொத்து!