Saturday, November 14, 2009

மழை...பள்ளி...அப்பா!

எல்லோரையும் போல எனக்கும் சிறுவயது முதலே மழையில் நனைய கொள்ளை ஆசை. அதைவிட மழை நீர் தேங்கி இருக்கும் தெருக்களில் காலை அளைந்து கொண்டு வருவதென்றால்... ரொம்ம்ம்ம்ம்ப இஷ்டம்!

ஆனால் நான் குழந்தையாய் இருந்த போது இளம்பிள்ளைகளுக்கு வரும் காச நோய் வந்து படாத பாடு பட்டுப் பிழைத்தேனாம். இரண்டு மாதங்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஊசி போட்டுக் கொள்ள வேண்டி வந்தது. அப்பாவோ அக்காவோ அழைத்துச் செல்வார்கள்.

ஆனால் என் மழை ஆசையெல்லாம் அப்பாவால் நிராசை ஆகிவிடும். மழை வந்தால் பள்ளிக்கு அனுப்புவதில் அப்பா ரொம்ப சிரத்தையுடன் இருப்பார். தப்பித் தவறிக் கூட மழையில் நனைந்து விடாதவாறு ஏற்பாடு செய்துவிடுவார்.

பள்ளி விட்டு வரும் போதாவது மழையில் நனைந்து கொண்டு வரலாம் என்று நினைப்பேன். வழக்கமாகச் செல்லும் ரிக்‌ஷாக்காரர் வராவிட்டால் மற்ற பிள்ளைகளுடன் நனைந்து கொண்டு வரலாம் என்று ஆசையோடு இருப்பேன். ஆனால் அப்பாவோ மோகனைக் குடையுடன் அனுப்பிவிடுவார்.

ஆங்காரமும் அழுகையுமாய் வரும். மோகன் அவர்கள் மிகவும் கண்டிப்பு. குடையை விட்டுக் கொஞ்சம் நகர்ந்தாலும் அதட்டுவார். மீறினால் அப்பாவிடம் போட்டுக் கொடுத்து விடுவார். அப்பா அடிக்கவே மாட்டார்; ஆனாலும் ரொம்பப் பயம் இருந்தது எங்களுக்கு!

நான்காவது படித்த போது மழைக்காலத்தில் ஒரு நாள்.
மாதத்தேர்வு (தமிழ் என்று நினைக்கிறேன்) முடிந்த மதிய நேரம்.
ரிக்‌ஷாக்காரர் வரவில்லை. ஆச்சரியத்திலும் ஆச்சரியம் மோகனும் வரவில்லை. குடையுடன் என்னை அழைத்துப் போக வந்தது அப்பா!
வராத அப்பா வந்தது சந்தோஷமாக இருந்தாலும், மோகனையாவது அப்படி இப்படி ஏமாற்றி விட்டுக் குட்டைத் தண்ணியில் காலை அளையலாம். அப்பாவாச்சே... வாலைச் சுருட்டிக்கிட்டுப் போக வேண்டியது தான் என்று நினைத்தேன்.

அமைதியாக நடந்து கொண்டிருந்த போது வெள்ளக்காடாக நிரம்பியிருந்த ஒரு தெருவுக்குள் திரும்பவேண்டி வந்தது. பெருமூச்சுடன் அதைப் பார்த்த நான் அப்பா நம்மைத் திருப்பி வேறு பக்கமாகத் தான் அழைத்துப் போகப் போகிறார் என்று நின்று அவர் முகத்தைப் பார்த்தேன்!

என்ன அதிசயம்! என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே “தண்ணியில ஜல் ஜல்னு போலாமா” என்று கேட்டு, வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டார். எனக்குக் குஷி தாங்க முடியவில்லை. ஏன் நிற்கிறேன்? அப்பா மனம் மாறுவதற்குள் காலை வீசி வீசி தண்ணீரில் நடக்கலானேன். தேர்வு எழுதியது பற்றி, பள்ளியில் என்ன நடந்தது பற்றி என்று என்னென்னவோ கேட்டார்; நானும் தண்ணியில் நடக்கும் சந்தோஷத்தில் உற்சாகமாகப் பேசிக் கொண்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்து உடை மாற்றிக் கொண்ட பின்னும் வெகு நேரமான பின்னும் சில்லென்ற அந்தத் தண்ணிரின் ஸ்பரிசம் காலிலும் அப்பாவுடன் கும்மாளமடித்துக் கொண்டு வந்த அந்த கணங்கள் மனதையும் நனைத்துக் கொண்டிருந்தன.

கண்டிப்பான அப்பா, ஏராளமான விஷயங்களில் புரிபடாத அப்பா, எத்தனையோ விஷயங்களில் இலகுவாகப் பழக முடியாத அப்பாவாக இருந்தாலும் அன்று ஒரு நாள் என் குழந்தை உள்ளத்தைப் புரிந்து நடந்த அந்தச் சிறிய ஆனால் அரிய செய்கையை என்னால் என்றுமே மறக்க முடியாது.

தொடர் பதிவு என்று போட்டுப் பெயரிட்டு அழைக்கத் தோன்றவில்லை. விருப்பமுள்ளவர்கள் தங்கள் இளம் வயது மழைக்காலத்தில் இது போன்ற மறக்க முடியாத அனுபவங்களைப் பகிருங்களேன். சுவாரசியமாக இருக்கும்!

18 comments:

காமராஜ் said...

ஒரு குழந்தைத் திமிரும் ஒரு தந்தை கண்டிப்பும் நெகிழ்ந்துபோகிற இடத்தில் ஜில்லெனும் உலகம் விரியக்கிடந்ததை அப்படியே சின்னக்குழந்தையாய் சொல்லியிருக்கிறாய் தீபா. ரொம்ப இதமாக இருக்கு. ஜன்னல் வழியே வரும் தூறல் வாசிப்பில் கிடைக்கிறது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகான நினைவு கூறல் தீபா... அனைவருக்கும் மழை ஒவ்வொரு நினைவை ஏற்படுத்தியிருக்கிறது தான்..

மாதவராஜ் said...

ஒரு வார இடைவெளிக்குக்குப் பின்னரான பதிவு என்றாலும், மழையால் நெய்யப்பட்ட அருமையான முத்துக்கள் இந்த எழுத்துக்கள்.அப்பாவோடும், உன்னோடும் நாங்களும் ஜல் ஜல்லென நடந்தது போலிருந்தது. எல்லோருக்குள்ளும் இருக்கிற குழந்தைகளை மழை மீண்டும் ஒரு பிரசவிக்க வைத்து, குதியாட்டம் போட வைக்கிறது அல்லவா! நல்ல அனுபவம். நானும் எழுத முயற்சிக்கிறேன்.

ஜெயந்தி said...

கண்டிப்பு குழந்தை நன்றாக இருக்க வேண்டுமென்பதற்காக. விட்டுக்கொடுப்பு குழந்தையின் உள்ளம் மகிழச்சியடைய வேண்டும் என்பதற்காக.

Anonymous said...

சின்ன வயசில் மழை என்றதும் பஸ்சில் எங்களை இலவசமாக வீட்டுக்கருகில் கொண்டுவந்து விடுவார்கள். அந்த ஞாபகம் வந்து விட்டது.

குடுகுடுப்பை said...

ஆனால் நான் குழந்தையாய் இருந்த போது இளம்பிள்ளைகளுக்கு வரும் காச நோய் வந்து படாத பாடு பட்டுப் பிழைத்தேனாம். இரண்டு மாதங்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஊசி போட்டுக் கொள்ள வேண்டி வந்தது. அப்பாவோ அக்காவோ அழைத்துச் செல்வார்கள்.//

primary complex தானே, நானும் உங்கள மாதிரி ஒரு நாள் விட்டு ஒரு ஒரு நாள் ஐம்பது ஊசி போட்டுக்கொண்டவன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான நினைவு கூறல்

thiyaa said...

நல்லாயிருக்கு தீபா

அமுதா said...

அழகான மழைக்கால நினைவு.

/*என் குழந்தை உள்ளத்தைப் புரிந்து நடந்த அந்தச் சிறிய ஆனால் அரிய செய்கையை என்னால் என்றுமே மறக்க முடியாது*/
எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் சின்ன சின்ன நினைவுகள் தான் மனதை விட்டு அகலாமல் சில்லென்று மனதை என்றும் நனைக்கும்

சந்தனமுல்லை said...

சூப்பரா இருக்கு தீபா! எந்த ஜோடிப்புகளும் இல்லாமல் ஒரு குழந்தையின் மனதிலிருந்து வருவதைப் போல் மிக இயல்பாக வந்திருக்கிறது!!
எனது மழைக்கால நினைவுகளையும் கிளறிவிட்டது!

கடந்தவருடம் எழுதியதன் சுட்டி இது.
http://sandanamullai.blogspot.com/2008/10/blog-post_23.html
நேரம் இருக்கும்போது வாசித்து பாருங்கள்!

இளவட்டம் said...

அழகான இடுகை தீபா.
மழைகால நினைவுகள் எப்போதுமே பசுமையானவை.
மிக அழகாக நினைவுபடுத்திஇருக்கிறிர்கள்

Deepa said...

நன்றி காமராஜ் அங்கிள்!

நன்றி செந்தில்வேலன்!

நன்றி அங்கிள்!

நன்றி ஜெயந்தி!

நன்றி சின்ன அம்மிணி!

நன்றி குடுகுடுப்பை!
ஆமாம், அதே தான்.

நன்றி T.V. Radhakrishnan!

நன்றி தியாவின் பேனா!

நன்றி அமுதா!

நன்றி முல்லை!
உங்கள் பதிவைப் படித்தேன். பின்னூட்டம் அங்கேயே!

நன்றி இளவட்டம்!

Anonymous said...

//primary complex தானே, நானும் உங்கள மாதிரி ஒரு நாள் விட்டு ஒரு ஒரு நாள் ஐம்பது ஊசி போட்டுக்கொண்டவன்.//

ஒரு க்ரூப்பே இருக்கும்போல. நானும்தான் :)

velji said...

நன்றாய் சொல்லியிருக்கிறீர்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மழையைப்போலவே அழகான பகிர்வு.

என்ன அதிசயம்! என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே “தண்ணியில ஜல் ஜல்னு போலாமா” என்று கேட்டு, வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டார். எனக்குக் குஷி தாங்க முடியவில்லை. //

வருடங்கள் தாண்டி நீங்கள் இதை எழுதினாலும் அப்போதைய உங்கள் உணர்வு அப்படியே வெளிப்பட்டு இருக்கிறது.

பா.ராஜாராம் said...

ரொம்ப நெகிழ்வான பதிவு,பகிர்வு தீபா.எனக்கு ரெண்டும் ரொம்ப தூரம் இப்போ.அப்பா,மழை...:-(

CS. Mohan Kumar said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

லெமூரியன்... said...

இயல்பில் நாமனைவரும் மழைக் காதலர்களே...! அருமையான மழை நியாபகம். நல்ல இருக்கு தீபா..!