தீபாவளி என்றாலே சிறு வயது முதல் தோன்றுவது... அதிகம் எதிர்பார்க்கவைத்து ஏமாற்றும் பண்டிகை என்பது தான்.
இரண்டு நாட்களுக்கு முன் பள்ளியில் தோழிகளைக் கட்டியணைத்து வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்ளும் போதும், கரும்பலகையில் "ஹாப்பி தீபாவளி" எழுதி அழகழகாய்ப் படம் வரைந்து வைக்கும் போது உற்சாகம் பீறிடும். வழக்காமாய்ப் பருப்பும் புளியும் கொதிக்கும் சமையலறை பலகாரங்களும் எண்ணெய் ஸ்டவ்வுமாய்ப் புதுக்கோலம் கொள்ள, அம்மாவுக்கு உதவும் போது பெருமிதம் பொங்கும். வாங்கிய ஒரே புத்தாடையைப் பத்து தடவை திறந்து பார்க்கும் போது மனம் புல்லரிக்கும். டமால் டுமீல் வெடிச்சத்தங்களுடன் பொழுது விடிவதற்க்குள் ஏனோ பண்டிகையின் மொத்த களையும் வடிந்து விடும்.
அதான் தீபாவளி வந்துடுச்சே..! இனி போகத் தானே போகுது என்று!எப்போதும் என்னிடம் ஜோராக சண்டை போடும் அண்ணனும் அவன் வெடிவெடிக்கும் அழகைப் பார்க்க, ஊதுவத்தி கொளுத்தி எடுத்து வர என்று என்னிடம் எடுபிடி வேலை வாங்குவதற்காக அன்று அன்புடன் இருப்பான். அதனால் போர் தான்! :)
அக்காவும் அங்கிளும் வந்திருந்த அவர்களின் தலை தீபாவளி தான் நாங்கள் மிகவும் சந்தோஷமாகக் கொண்டாடிய தீபாவளி. சிவப்பு நிறத்தில் எனக்கு ஒரு "கீதாஞ்சலி ட்ரெஸ்" வாங்கி வந்திருந்தார்கள். ரொம்ப அழகாக இருககும். வெகு நாட்கள் வரை அதை ஆசையாகப் போட்டுக் கொண்டிருந்தேன்.
அதற்கடுத்த் ஆண்டுகள் அவர்கள் வரவில்லை என்பதாலேயே சுரத்திழந்தது. கல்லூரியில் படித்த போது முதல் ஆண்டு தவிர தீபாவளிக்கு வீட்டுக்கே வர இயலவில்லை. சரியாக தீபாவளிக்கு அடுத்த நாள் செமஸ்டர் ப்ராக்டிகல் வைத்திருப்பார்கள். அதனால் பக்கத்து ஊர்களில் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் விடுதியிலேயே தீபாவளியைக் கழித்தோம். அதுவும் ஒரு தினுசாக நன்றாகத்தான் இருந்தது. இறுதியாண்டு டே ஸ்காலர்ஸ் வீடுகளுக்குச் சென்றோம்.
வேலைக்குச் செல்லத் தொடங்கியவுடன் எந்தப் பண்டிகையுமே ஒரு நாள் விடுமுறை என்பதைத் தவிர பெரிதாகத் தெரியவில்லை. தீபாவளிக்கென்று ஆடம்பரமாக ஆடைகள் வாங்குவதும் அற்வே பிடிக்காத ஒன்றாகி விட்டது. புதிதாக ஏதாவது அணியப் பிடிக்கும்; அது வழக்கமாக அலுவலகத்துக்கு அணிகிறாற் போல் உபயோகமாக இருந்தால் சரி. "இதுவா உன் தீபாவளி ட்ரெஸ்" என்ற கேள்விக்குப் புனனகைப்பது வெகு நாட்களுக்கு முன்பே பழ்க்கமாகி விட்டது. தொலைக்காட்சிக்கு முன் உட்காரக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே நூலகத்தில்கிருந்து புத்தகங்கள் வாங்கி வந்து நிம்மதியாக நாள் பூராவும் படித்துக் கழித்த தீபாவளிகள் உண்டு.
காசு கொடுத்துப் பட்டாசு வாங்கிப் பழக்கமே இல்லை வீட்டில். சிவகாசியில் இருந்த அப்பாவின் ஆருயிர் நண்பர் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே பெரிய பட்டாசுப் பொட்டலம் ஒன்றை அன்புடன் அனுப்பி விடுவார். "பட்டாஸ் அங்கிள்" என்றே சிறு வய்தில் அவரை அழைப்போம்.நாங்கள் மட்டுமே வெடித்துத் தீர்வதில்லை அது. வீட்டுக்கு வருபவர்களுக்கும் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கும் கொடுத்தும் தீர்க்க வேண்டியிருக்கும்.
வெடிச்சத்தம் எனக்குப் பிடிக்காது, வெடி வெடிக்கவும் பயம். !ஆனால் வாணங்களும் மத்தாப்புக்களும் மிகவும் பிடிக்கும். சில ஆண்டுகளாக அந்த ஆர்வமும் அற்றுப் போய் விட்டது.
"பண்டிகையை வரவேறக" என்று ஏதும் செய்யாமல் இருக்கும் இந்தச் சில ஆண்டுகளில் ப்ண்டிகைகள் அழகாக அமைதியாக் வந்து போகின்றன. இந்தத் தீபாவளி நண்பர்களும் குழந்தைகளும், போட்ட கும்மாளங்களுடன் வீட்டிலேயே இனிமையாகக் கழிந்தது.
ஆனால் வானத்தில் பூப்பூவாய் வெடித்துச் சிதறும் வாணங்களில் மனதைப் பறி கொடுக்கையில் வெடிமருந்தின் வாடையில் கருகும் பிஞ்சுகளும் பலியாகும் சகோதரர்களும் நினைவுக்கு வந்து குற்றவுணர்ச்சி கொல்கிறது.
பட்டாசுகளையே மொத்தமாகத் தடை செய்ய வேண்டுமென்றெல்லாம் வைராக்கியத்துடன் எண்ணிய நினைப்புகள், மத்தாப்புவைப் பார்த்துக் குதூகலிக்கும் குழந்தைகளின் சிரிப்பில் உடைந்து போவது சரியா தவறா என்று புரியவில்லை.
ஆனால் அப்படித் தானே நுழைகிறது ஒவ்வொரு வீட்டிலும் தீபாவளி?
6 comments:
தீபா நல்ல நினைவு கூறல்
//ஆனால் வானத்தில் பூப்பூவாய் வெடித்துச் சிதறும் வாணங்களில் மனதைப் பறி கொடுக்கையில் வெடிமருந்தின் வாடையில் கருகும் பிஞ்சுகளும் பலியாகும் சகோதரர்களும் நினைவுக்கு வந்து குற்றவுணர்ச்சி கொல்கிறது.//
உண்மை தான் தீபா. நல்ல இடுகை.
நிறைய இடங்களில் உங்களோடு ஒருமித்த கருத்துடன் இந்தப் பதிவை வழிமொழிகிறேன் :)
//டமால் டுமீல் வெடிச்சத்தங்களுடன் பொழுது விடிவதற்க்குள் ஏனோ பண்டிகையின் மொத்த களையும் வடிந்து விடும்.//
ஆஹா.. மிகச் சரியாக உணர்வுகளைச் சொல்லி இருக்கிறாய்.
இந்தப் பதிவு, நிஜமாகவே தீபாவளி குறித்த பிம்பங்களையும், நினைவுகளையும் இயல்பாகவும், உண்மையாகவும் காட்டுகிறது. தெளிவும் இருக்கிறது.
//தொலைக்காட்சிக்கு முன் உட்காரக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே நூலகத்தில்கிருந்து புத்தகங்கள் வாங்கி வந்து நிம்மதியாக நாள் பூராவும் படித்துக் கழித்த தீபாவளிகள் உண்டு.//
அற்புதம்
நல்லதொரு இடுகை
அசத்தல் போஸ்ட் தீபா!! முடித்தவிதம் மிகவும் அருமை!
அந்த கீதாஞ்சலி ட்ரெஸ் நன்றாக நினைவிருக்கிறது...எங்கள் பள்ளியிலும் அதுதான் அப்போது ஃபேமஸாக இருந்தது. :-)
Post a Comment