Sunday, October 25, 2009

இதெல்லாம் என்னைக்குத் தான் ஒழியுமோ!

வரதட்சணை.

எனக்குச் சில விஷயங்கள் புரிவதே இல்லை. அதில் ஒன்று:
அருமை பெருமையாய் மகளைப் பெற்று வளர்த்து விட்டு, தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுதும் கொட்டிக் கொடுத்து அவளை எவனோ ஒரு கோயான் தலையில் கட்டிவிட்டுப் (படிப்பு, நல்லவேலை, சொத்து சுகம் என்று ஆயிரம் காரணங்களுக்காக; அது பொய்யா உண்மையா என்று கூட சரியாகத் தெரியாமல்) பின்பு மகள் கஷ்டப்படும் போது தலையில் கை வைத்துக் கொள்கிறார்களே இந்தப் பெற்றோர்களை என்னவென்று சொல்வது?

இவர்கள் சொல்படி கேட்டுச் சமர்த்தாக இருந்தது தான் அப்பெண்ணின் தவறா?

பக்கத்துத் தெருவுக்குக் கூட அண்ணன் தம்பி துணையில்லாமல் என் மகள் போக மாட்டாள் என்று பொத்திப் பொத்தி வளர்த்து விட்டு எவனோ ஒரு ______ நம்பி அவளது வாழ்நாளையே மேளதாளத்துடன் ஒப்படைக்கிறீர்களே? உங்களை எல்லாம்...........
வேண்டாம்!

வரதட்சணை கொடுக்காமல் மகளைக் கட்டிவைத்தால் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் மரியாதை இருக்காது என்று ஏன் நினைக்கிறார்கள்? இது அபத்தமில்லையா?

சரி, பொருளாதாரச் சமன்பாடு அவ்வளவு முக்கியமென்றால் பெண்ணை நன்றாகப் படிக்க வைத்து சொந்தக் காலில் நிற்க வையுங்கள்.
ஆனால் அப்படிப் பட்ட பெண்களாவது வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று உறுதியாக நிற்க வேண்டும்.

”நாங்கள் வானில் பறந்தாலும், உயரங்களைத் தொட்டாலும் திருமணம் என்று வந்தால் வீட்டினர் சொல்படி தான் கேட்போம், எங்கள் ஜாதியில் ஜாதகம் பார்த்து அப்பா அம்மா சொல்ற ஆளைத் தான் கட்டிக்குவோம்” என்று சொல்வதில் இவர்களுக்கு இருக்கும் பெருமை எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை.

சரி, பெற்றோர் மனம் இணங்கத் திருமணம் செய்து கொள்வது நல்ல விஷயம் தான். எல்லாரும் காதலித்துத் திருமணம் செய்யுங்கள் என்று நான் சொல்லவில்லை. குறைந்த பட்சம், இந்த ஜாதி, ஜாதகம் இதெல்லாம் பார்க்க வேண்டாம் என்றாவது பெற்றோரிடம் சொல்லலாம் இல்லையா?

ஜோசியம், ஜாதகம், இதெல்லாம் எவ்வளவு அபத்தம் என்று புரிந்தாலும், ஒரேயடியாக விட்டொழிக்காமல் ஓரளவுக்குப் பார்த்தல் பரவாயில்லை, அதிகமானால் தான் தவறு என்று சப்பைக் கட்டுக்களுடன் ஊறுகாயைப் போலவாவது ஏன் இன்னும் தொட்டுக் கொண்டிருக்கிறோம்? அது கெட்டுப் போய் நாறுவது தெரியவில்லையா?

அடிப்படை உரிமையையே விட்டுக் கொடுத்து விட்டு, பின்னாளில் கஷ்டப்பட்டு நஷ்டப்படும் போது வாய்கிழிய உரிமைப் போராட்டம் பேசி என்ன பயன்?

எப்படியும் திருமணம் என்று வந்தபின் ஆணும் பெண்ணும் ஓரளவு போராடித் தான் ஆக வேண்டும். அது யாராலும் உங்கள் மீது திணிக்கப் படவில்லை. உங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை நீங்களே தீர்மானித்தீர்கள் என்ற திருப்தியை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?

சுருங்கச் சொன்னால், திருமணத்துக்குத் தயாராக இருக்கிறீர்களா? கிணற்றில் விழுவதென்று தீர்மானித்து விட்டீர்கள். குறைந்த பட்சம் கண்ணைத் திறந்து கொண்டு, அடி கிடி படாமல், பாழும் கிணறாக இல்லை என்று தெரிந்து கொண்டு விழுங்கள்.

(தோழி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது தனது வாழ்க்கை தான் நினைத்த படி அமையாமல் போனதற்குத் தனது அருமைத் தந்தை தான் காரணம் என்று அவர் சொல்லி வருந்தினார். மகள் மீது உயிரையே வைத்திருக்கும் அந்தத் தந்தையைப் பற்றிச் சிந்தித்ததன் விளைவே இந்தப் பதிவு.)

44 comments:

காமராஜ் said...

//பக்கத்துத் தெருவுக்குக் கூட அண்ணன் தம்பி துணையில்லாமல் என் மகள் போக மாட்டாள் என்று பொத்திப் பொத்தி வளர்த்து விட்டு எவனோ ஒரு ______ நம்பி அவளது வாழ்நாளையே மேளதாளத்துடன் ஒப்படைக்கிறீர்களே? உங்களை எல்லாம்...........
வேண்டாம்!//

முதல் பாராவைப் படித்து உரக்கச்சிரித்தேன். தொடர்ந்து படிக்கிற போது கோபம் முற்றிலும் பற்றுகிறது. சபாஷ் தீபா.
கண்முன் நடந்த பல திருமண விபரீதங்கள் வந்துபோகிறது.

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

என்னையும் மிகவும் வேதனை படுத்துகிறது,,,மறுமணம் என்று ஏற்றுக்கொள்ள படுகிறதோ அன்று தான் இதற்கு தீர்வு ,,,
இதில் என்ன கொடுமை என்றால் divorce கேட்கும் தம்பதிகளையும் சேர்பதாக கூறி case இழுப்பது அவர்கள் மறுமணம் செய்ய தடையாக உள்ளது,,,,,

Anonymous said...

I likes.. I likes..... The last para abt jumpin into the well... திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

அம்பிகா said...

இல்லை தீபா. இந்த வரதட்சணை விஷயத்தில் பெண்ணையும், பெண்ணை பெற்றவர்களையும் குறை சொல்வது சரியில்லை என நினைக்கிறேன்.பணத்திமிருக்காக, பந்தாவுக்காக கொடுப்பவர்களை விட்டுவிடு. இதில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் நடுத்தர, அதற்கும் கீழுள்ளவர்களே`.எதைத்தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் எதைக்கொடுத்தேனும் தன் பெண்ணை கரையேற்ற துடிக்கின்றனர்.இதில் மாறவேண்டியவர்கள் ஆண்களே. வரதட்சணை என்பது தனக்கு நிர்ணயிக்கபடும் விலை. அதை வாங்குவது அவமானம் என்பதை உணர வேண்டும்......

Unknown said...

அதிகமான பெற்றொர் வேறு வழியில்லாமல்தான் வரதட்சணையை அழுகின்றனர். தன் பெண்ணுக்னு தான் விரும்பிய சீர் அல்லது பொருள் கொடுப்பதற்கும் வரதட்சணைக்கும் நிறைய வித்தியாசமுள்ளது. கேட்டுப் பெறும் சீர் வரதட்சணைதான்.

வரதட்சணைக்கு முக்கிய காரணம் பிள்ளையைப் பெற்றவர்களும் அவனுமே. வரதட்சனை பெறுவதை அவமானம் என்பதை சமுதாயம் உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்து திருந்தினால்தான் விடிவு உண்டு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பதிவு

Deepa said...

நன்றி காமராஜ் அங்கிள்!

நன்றி Boniface!

நன்றி Mukilini!

நன்றி அம்பிகா அக்கா!

//இதில் அதிகம் பாதிக்கப் படுபவர்கள் நடுத்தர, அதற்கும் கீழுள்ளவர்களே`//
நிச்சயமாக. ஆனால் படித்து வேலைக்குச் செல்லும் பெண்களும் கூட பெரிய அளவில் பாதிக்கப் படுகிறார்கள். முதற்படியாக அவர்கள் ஏதேனும் செய்யலாமே என்பது என் கருத்து.

velji said...

படிப்பு,வசதிகள் என இருந்தாலும் பொருந்தாதிருமணங்கள் சம்மந்தப்பட்டவரை ஜீவனற்று போகச்செய்கிறது.அப்புறம் குழந்தைகளும் வளர்கிறார்கள்.

ஆதங்கமான பதிவு!

மாதவராஜ் said...

உன் மனதில் ஓடுபவைகளை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறாய். அந்த வேகமும், கோபமும் கொஞ்சமும் வடியாமல் வந்திருக்கிறது. அம்பிகா சொன்னதுபோல் பெற்றோர்கள் பல நேரங்களில் பாவமாய்த்தான் இருக்கிறார்கள். இதே பெற்றோர்கள்தான் தாங்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் சரியில்லையென்றான பிறகு, மகளை திரும்பவும் தங்கள் வீட்டில் வைத்து கவனிக்கிறார்கள். அதில் பெரும் அவமானமும், அவதியும் அடைகின்றனர்.

ஊர் எதுவும் சொல்லிவிடக்கூடாதே என்று திருமணம். ஊர் எதுவும் சொல்லிவிடக் கூடாதே என்று திருமண வாழ்வில் சமரசம். ஊர் எதுவும் சொல்லிவிடக் கூடாதே என்று திருமண வாழ்வு முறிந்த பிறகு புழுக்கமும், அவமானமும், தலைக்குனிவும்.

இங்கு எல்லாம் ஊரை முன்வைத்து நடக்கிறது. நாலு பேர் என்கிற சமூகம் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது. இந்த ஊருக்கு அப்படியெல்லாம் பார்க்கக் கூடாது என்பதை உரக்கச் சொல்லியாக வேண்டியிருக்கிறது முதலில்.

அவசியமான பதிவு.

Deepa said...

//தன் பெண்ணுக்னு தான் விரும்பிய சீர் அல்லது பொருள் கொடுப்பதற்கும் //
இதைக் கூட இருவரின் பெற்றோரும் சேர்ந்து வேறு விதமாகச் செய்யலாம்.

Deepa said...

நன்றி சுல்தான்!

நன்றி இராதாகிருஷ்ணன்!

நன்றி வேல்ஜி!

நன்றி அங்கிள்!
//ஊர் எதுவும் சொல்லிவிடக்கூடாதே என்று திருமணம். ஊர் எதுவும் சொல்லிவிடக் கூடாதே என்று திருமண வாழ்வில் சமரசம். ஊர் எதுவும் சொல்லிவிடக் கூடாதே என்று திருமண வாழ்வு முறிந்த பிறகு புழுக்கமும், அவமானமும், தலைக்குனிவும்//

:-((

நாஸியா said...

நீங்க வேற. இந்த வரதட்சணை கொடுமைய எங்க பொய் சொல்றதுன்னே தெரியல.. இஸ்லாத்தை பொறுத்த வரையில் ஒரு ஆண்தான் பெண்ணுக்கு மணக்கொடையை வழங்கிட வேண்டும்.. திருமணம் எளிதாக ஒரு பள்ளிவாசலில் நடைபெற வேண்டும், திருமணம் முடிந்த பின் மாப்பிள்ளை தான் தெரிந்தவர்களுக்கு விருந்து போட வேண்டும்.. இப்படியாப்பட்ட கோட்பாடுகளை தமிழகத்திலும் கேரளாவிலும் உள்ள பெருன்பான்மையான முஸ்லிம்கள் அறவே பின்பற்றுவதில்லை..

எங்கள் ஊர், (நெல்லை, தூத்துக்குடி) பக்கம் குறைந்த பட்சம் நூறு பவுன் நகை போட வேண்டும்! ஆயிரம் பேருக்காவது சாப்பாடு போட வேண்டும், நிச்சயதார்த்தம் நடத்தும்போதும் அப்படி தான், பிறகு சீர்வரிசை, எல்லாம்...

கோவமா வருது! என்ன செய்ய.. :(

Romeoboy said...

எதிர்ப்பு அதிகம்தான் இருக்கிறது. ஜாதி என்பது ஒழிக்க முடியாத ஒன்று இன்றைய நிலைமையில் அதே போன்றது வரதச்சனையும் . ஒரு புறம் பெண் வீட்டாரின் பெருமை மறு புறம் மாப்பிள்ளை வீட்டாரின் கவ்ரவம் .

Sapadu to random musings.😁 said...

Nicely written.jathakam joshiyam will be there until some revolution arises in our country. Certain wrong beliefs shd be given up. But abt parents choosing their kid's life partner- its our wish to accept or not. One shd be clear enough to choose their partners and their own future. Take time to choose ur life partner.Parents can just show us way, choosing shd be ours. We are making mistakes by not talking. Blaming parents for it is not right.

சந்தனமுல்லை said...

செம ஹாட் மச்சி!! :-)
தங்களின் கோபத்தை இந்த இடுகை அப்படியே வெளிக்காட்டுகிறது. கடைசி பத்தி 'கிணறு' கலக்கல். அது உண்மையுங்கூட...கல்லூரி ஃபைனல் இயரில், “இப்போதான் ஜாலியா இருக்கமுடியும்! அடுத்த வருஷம் எந்த கிணத்துலே தள்ளிவிடபோறாங்களோ, அதை நினைச்சா இப்போவே பயமா இருக்கு” என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உண்மையில் பெண்ணின் பெற்றோர் எதெதற்கெல்லாமோ முன்கூட்டியே திட்டமிட்டு செய்பவர்கள் இந்த விஷயத்தில் எப்படியோ கோட்டை விட்டு விடுகிறார்கள். பலபெண்களுக்கு படிப்பு என்பது திருமண அழைப்பில் போட்டுக்கொள்வதோடு நின்று விடுகிறது. :(

Deepa said...

நன்றி நாஸியா!

நன்றி Romeoboy!

நன்றி Lahari!
I second your opinion.


//அம்பிகா அக்கா: இதில் மாறவேண்டியவர்கள் ஆண்களே. வரதட்சணை என்பது தனக்கு நிர்ணயிக்கபடும் விலை. அதை வாங்குவது அவமானம் என்பதை உணர வேண்டும்......
//

இதைத் தான் வெகு காலமாக் சொல்லி வருகிறோம்; மாறினார்களா? இல்லையே. அப்படியே இருந்தாலும் இப்படி வரும் மாற்றம் பெண்களுக்கு நல்லதல்ல. ஒரு ஆண் எனக்கு வரதட்சணை வேண்டாம் என்று விட்டுக் கொடுப்பதற்கும் “நான் வரதட்சணை கொடுக்க மாட்டேன்” என்று ஒரு பெண் சொல்வதில் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள்.

ஆண் விட்டுக் கொடுத்தால் அவனுக்குத் தன்னிச்சையாக ஒரு உயர்வு மனப்பான்மை வரும். அது ஆரோக்கியமான மணவாழ்க்கைக்கு ஏற்றதல்ல.
இல்லாவிட்டால் சமூகத்தில் அவனுக்கு ”ஏமாளி” பட்டம் கட்ட பலர் தயாராக இருப்பார்கள்.

நடைமுறையில் இது கஷ்டம் தான். ஆனால் எந்த வர்க்கமாக இருந்தாலும் பெண்கள் வேலைக்கும் போகிறார்கள், வீட்டிலும் அல்லல் படுகிறார்கள். குறிப்பாக நடுத்தர வர்க்கத்துப் பெண்கள் வேலைக்குப் போவது தான் அதிகம். அதனால் அவர்கள் துணிச்சலாக இப்படிப் பேச முன்வர வேண்டும்.
அதற்கு ஒத்துக் கொள்பவனைத் தான் திருமணம் செய்வேன் என்று சொன்னால்தான் ஆரோக்கியமான மாற்றமாக அது இருக்கும்.

Deepa said...

முல்லை!

நன்றி மச்சி! :)

அம்பிகா said...

நான் ஆண்களை விட்டுக் கொடுக்கச் சொல்லவில்லை. அவர்கள் செய்யும் தவறை உணரச் சொல்கிறேன்.
நீ கூறுவது போல் துணிச்சலாக பெண்கள் கூற அவர்கள் குடும்பத்தினரே அனுமதிப்பதில்லை. ஏனெனில் திருமணம் என்பதை அவள் ஒருத்தியின் பிரச்சனையாக மட்டும் அவர்கள் பார்ப்பதில்லை.
இப்படிக் கூறும் பெண்களுக்கும் திருமணவாழ்வில் பிரச்சனைகள் அதிகம் தான்.இந்த துணிவை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எத்தனை ஆண்களுக்கு இருக்கிறது?

கபிலன் said...

மிகவும் சரி தான்.

ஆண்களின் பெற்றோர்களும் இந்த விஷயத்தை கவனிக்கனும். அதாவது, ஒரு ஆணின் நல்ல வாழ்க்கைத் துணைக்கு, வரதட்சணை தேவையல்ல, ஜோசியம் முக்கியமுமல்ல, சாதி கூட தேவையல்ல. அதற்கு பதிலாக, அந்தப் பெண் குடும்பத்துக்கு ஏற்றவரா ? நன்றாக நடந்து கொள்வாரா ? நல்ல குணம் கொண்டவரா ? பெண்ணிய/பெண்ணாதிக்கச் சிந்தனையாளரா ? என்றெல்லாம் தீர விசாரித்து திருமணம் செய்து வைப்பது தான் ஆண்களின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய கடமையே தவிர, வரதட்சணை வாங்குவதல்ல. நம்மாளுங்க எத்தனை பேரு எப்படி புலம்புறாங்கன்னு பல பேருக்கு தெரியும்.

ஹி ஹி...ஆனா காதல் திருமணத்தை உயர்த்தி சொல்ற மாதிரி சொல்லி இருக்கீங்க......பெரும்பாலான காதல்கள் கல்யாணம் வரைக்கும் நீடிப்பதே கிடையாது...அப்படியே நீடித்து வந்த காதலும், டைவர்ஸ் கேஸ்ல முக்கால்வாசி காதல் திருமணங்கள் முடியுது. இது மிகவும் கசப்பான உண்மை. அதாவது சொந்தமா சிந்தித்ததின் விளைவு இப்படி கூட இருக்கலாம். அந்த வயசுல மூளை சொல்றதை மனசு சுத்தமா கேக்காது.....நெருப்பு சுடும்னு குழந்தை கிட்ட சொல்ற மாதிரி....

Anonymous said...

//ந்த ஜாதி, ஜாதகம் இதெல்லாம் பார்க்க வேண்டாம் என்றாவது பெற்றோரிடம் சொல்லலாம் இல்லையா?//

இன்னும் பல வருஷம் ஆகும்னு நினைக்கிறேன் இது மாதிரி நடக்க. இன்னும்கூட திருமணம்னு வந்தா மாப்பிள்ளை வீட்டார் கைதான் ஓங்கியிருக்குன்னு நினைக்கிறேன்.

பா.ராஜாராம் said...

உண்மையில் பயமாக இருக்கு தீபா.மகளை பெற்ற பயம்.மகள் திருமணத்திற்கு நிற்கிற பயம்.ஒரு மனுஷன் கிடைக்க வேணுமே என்கிற பயம்...சமீபமாக இதன் சிந்தனைதான்.நீங்கள் வேறு புளியை கரைக்கிறீர்கள்.ஈஸ்வரோ ரக்க்ஷி.

நல்லா இருக்கட்டும் மகாலக்ஷ்மி என நினைத்து கொள்ளுங்கள்!

வேறு ஒன்னும் கேட்பதாக இல்லை.கடவுளிடமும்,கடவுள் மாதிரியான நண்பர்களிடமும்.நல்ல சிந்தனை.

SurveySan said...

good one deepa.

இப்பெல்லாம், கேக்கரது out of fashion ஆயிடுச்சு, அவங்களே குடுக்கரத குடுக்கட்டும்னு விட்டுடறாங்களாமே?

குடுக்கலன்னா, ப்ரச்சன பண்ணுவாங்களோ?

Sabarinathan Arthanari said...

வரதட்சிணை / சாதி தவறானது இதை எடுத்துரைக்கும் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள். ஜாதகம் பற்றிய உங்களது கருத்துக்களை நான் முழுமையாக நிராகரிக்கிறேன்.
ஜாதகம் தவறல்ல. ஜாதகம் பார்க்கும் முறை தான் தவறு. உங்களுக்கான பதில் விரைவில் (இன்று) வெளியிடுவேன்.

உண்மைகளை வெளிப்படுத்த தூண்டியமைக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

Sabarinathan Arthanari said...

திருமண சாதக பொருத்தம் மூட நம்பிக்கையா ? (match making)
http://www.tamilscience.co.cc/2009/10/match-making.html

தருமி said...

என் இளம் வயதில் இந்த தொல்லை என் வயதான காலத்தில் நீர்த்துப் போய் விடும் என்று நினைத்திருந்தேன். பிரச்சனைகள் பெரிதாகி விட்டன. எந்த நல்ல மாற்றமும் - கல்வி, பொருளாதாரம் எல்லாம் கூடிவிட்டாலும் - இதுவரை கண்ணில் படவேயில்லை.

இந்த பதிவுக்கு எதிர்வினையாக இன்னொரு பதிவைப் பார்த்து இங்கு வந்தேன்.

அப்பதிவில் கிடைக்கும் பதில்கள், அந்த இடுகையின் பெயர் எல்லாமே "விளையாட்டாகப்" போய்விட்டது!!

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

ஒருவருக்கு திருமணம் வரதச்சனை வாங்க வேண்டாம் என சொனால் அவர்கள் தங்கைக்கு குடுத்தார்களாம் அதை எப்படி திரும்ப பெறுவது என்கிறார்கள்,,,பாதிக்க பட்டவர்களே இப்படி செய்தால் பின் எப்படி????

thirunarayanan said...

சகோதரி நீங்கள் கோபப்படுவதில்
அர்த்தம் இருக்கிறது.இதற்கு
தீர்வு என்ன?
பெண்கள் கலப்பு மணம் புரிய‌
தயார் ஆக வேண்டும்.
வரதட்சணை கொடுக்க மறுக்க வேண்டும்.
தன்காலிலேயே நிற்க உறுதி கொள்ள வேண்டும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:( வருத்தமே மிஞ்சுகிறது.

Unknown said...

ம்ம்ம்ம்.... என்னைக்கு ஒழியும்னு நினைக்கிறீங்க? பெண்னை பெற்றவர்களை குறை கூறுவதை விட ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடுன்னு சொல்லல்லாம், எல்லாம் புரட்சி நடந்துடுச்சு, ஆணும் பெண்ணும் சமம்ன்னு சொல்கிற நேரத்திலும் ஸ்டவ் வெடிச்சு பெண்கள் இறக்கிற செய்தியை படிச்சுக்கிட்டுதான் இருக்கிறோம்.

எப்ப வரதட்சனை வாங்க/கொடுக்க மாட்டோம், சட்டபடி தவறுன்னு கல்யானம் செய்யப்போகும் ஆணும் பெண்ணும் அவர்களின் பெற்றோர் நினைப்பார்களோ அப்ப இது எல்லாம் ஓரளவு குறையலாம்.

நேசமித்ரன் said...

அவசியமான பதிவு.

மிக முக்கியமான பதிவும் கூட .... பற்றி பேசுவது என்னை கண்ணியக் குறைவான சொற்களை பேச வைத்து விடும் ஆகையால் உங்களின் இந்த இடுகையை வழி மொழிந்து .போகிறேன்

Deepa said...

நன்றி கபிலன்!

நன்றி சின்ன அம்மிணி!


நன்றி ராஜாராம்!
கவலைப்படாதீர்கள். உங்கள் மனம் கலக்கமுறும் வகையில் நான் ஏதாவது எழுதி இருந்தால் மன்னித்து மறந்து விடுங்கள்.

//நல்லா இருக்கட்டும் மகாலக்ஷ்மி என நினைத்து கொள்ளுங்கள்!//
கண்டிப்பாக. உங்கள் மகளுக்கு என் அன்பு.

நன்றி SurveySan(நல்ல பெயர்!)

//குடுக்கலன்னா, ப்ரச்சன பண்ணுவாங்களோ?//
பண்றாங்களே!

நன்றி சபரிநாதன்!

உங்கள் இடுகையைப் பார்த்தேன்.
ஸாரி, எனக்கு நம்பிக்கை வரவில்லை. it's alright. உங்களுக்கு மறுஜென்மங்களிலும் நம்பிக்கை இருந்தால் அப்போதாவது என்னைப் போன்றவர்களுக்கு ஜாதகம், ஜோசியம் இதிலெல்லாம் நம்பிக்கை பிறக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள்.


நன்றி Boniface!

:) ஹூம்!


நன்றி திருநாராயணன்!
அப்படியே வழிமொழிகிறேன்!

நன்றி மஸ்தான்!

நன்றி அமித்து அம்மா!

நன்றி நேசமித்ரன்!

Anonymous said...

You wont believe, in 98 if am not mistaken a doc to doc gave 1big C as dowry.. my aunt got pissed to hear that.she went asked the groom if he would finish countin before he sleeps with the gal. doc to doc one C. I was a little gal.. I felt like shooting the gals dad tat time...

abt the love marriage, i strongly disagree with Kabilan abt love marriage. The stupid movies show some shitty stuff as love n ppl believe that is luv n say they are in luv.

True luv wud never fail. My parents - the best example for love marriage. though mom denied that theirs were not. You can check the article abt success of life in my blog for more details Kabilan.

குடுகுடுப்பை said...

கல்யாணத்தை தடை செஞ்சா ஆண்கள், பெண்கள் இரண்டு பேரும் தப்பிச்சிக்கலாம்.

இராஜ ப்ரியன் said...

நல்ல பதிவு .....................

இராஜ ப்ரியன் said...

நல்ல பதிவு .....................

☀நான் ஆதவன்☀ said...

:(

அமுதா said...

nalla pathivu Deepa. ungal kobathai azakaaha vaarthaiyil vadiththulleerhal


/*எப்படியும் திருமணம் என்று வந்தபின் ஆணும் பெண்ணும் ஓரளவு போராடித் தான் ஆக வேண்டும். அது யாராலும் உங்கள் மீது திணிக்கப் படவில்லை. உங்கள் வாழ்க்கைப் போராட்டத்தை நீங்களே தீர்மானித்தீர்கள் என்ற திருப்தியை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?
*/
unmai thaan. aanal manitha manam ovvoru muraiyum ovvoru maathiri yosikkum. complex :-)

/*சுருங்கச் சொன்னால், திருமணத்துக்குத் தயாராக இருக்கிறீர்களா? கிணற்றில் விழுவதென்று தீர்மானித்து விட்டீர்கள். குறைந்த பட்சம் கண்ணைத் திறந்து கொண்டு, அடி கிடி படாமல், பாழும் கிணறாக இல்லை என்று தெரிந்து கொண்டு விழுங்கள்.
*/
I agree... but... therindhu kolvathu thaan complexity palarukku...

Deepa said...

அம்பிகா அக்கா!

ஸாரி. சில கமெண்டுகளை இப்போது தான் பார்த்தேன். உங்களுடையதும் மிஸ் ஆகி இருக்கிறது.


//நீ கூறுவது போல் துணிச்சலாக பெண்கள் கூற அவர்கள் குடும்பத்தினரே அனுமதிப்பதில்லை. ஏனெனில் திருமணம் என்பதை அவள் ஒருத்தியின் பிரச்சனையாக மட்டும் அவர்கள் பார்ப்பதில்லை.
இப்படிக் கூறும் பெண்களுக்கும் திருமணவாழ்வில் பிரச்சனைகள் அதிகம் தான்.இந்த துணிவை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எத்தனை ஆண்களுக்கு இருக்கிறது?//

100% உண்மை. ஒத்துக் கொள்கிறேன்.
கடைசி வரி நிதர்சனம்!

Deepa said...

நன்றி அமுதா!

//*/
I agree... but... therindhu kolvathu thaan complexity palarukku...//

:-)))

அம்பிகா said...

அன்பு தீபா,
நகர்புறங்களை விட கிராமபுறங்களில் இந்த அவலங்கள் அதிகம் என்பதால் கொஞ்சம் அனுபவரீதியாக யோசிக்க
தோன்றுகிறது. நன்றி தீபா.

Anna said...

Excellent post.

This is one of those topics that make my blood boil everytime I think about it.

I always have a hard time understanding the logic behind the parents' decision to save money to pay somebody to marry their daughter, rather than spend that money to educate their daughter so that she can be independent, think for herself and most importantly have some SELF WORTH in her to completely deny a person who wants to be paid to be married.

Deepa said...

துளசி கோபால் said:

என்ன கபிலன் ஒரேதா காதல் திருமணங்கள் எல்லாம் தோற்றுப்போகுதுன்னு சொல்றீங்க!

உண்மைக் காதல் ஜெயிச்சுருக்கேப்பா.

ஜாதி, மதம், மொழி, படிப்பு இப்படி எதுவுமே பார்க்காம முதல் பார்வையில் ஏற்பட்டக் காதல் இருபதே ரூபாயில் கல்யாணம் செஞ்சு இப்போ 35 வருசம் முடிஞ்சுருக்கு.

தீபா,

காதல் கல்யாணங்கள் பெருகினால் வரதட்சிணை மட்டுமில்லை, இந்த்ச் சாதிச் சனியனும் ஒழிஞ்சுரும்.

கபிலன் said...

"துளசி கோபால் said:

என்ன கபிலன் ஒரேதா காதல் திருமணங்கள் எல்லாம் தோற்றுப்போகுதுன்னு சொல்றீங்க!

உண்மைக் காதல் ஜெயிச்சுருக்கேப்பா.

ஜாதி, மதம், மொழி, படிப்பு இப்படி எதுவுமே பார்க்காம முதல் பார்வையில் ஏற்பட்டக் காதல் இருபதே ரூபாயில் கல்யாணம் செஞ்சு இப்போ 35 வருசம் முடிஞ்சுருக்கு."

இதே போல கூடிய விரைவில் அரை சதம் அடிக்க வாழ்த்துக்கள் துளசி கோபால் !

ஆனால்,35 வருடங்களுக்கு முன்பு இருந்த காதலும், இப்பொழுது நிலவுகின்ற காதலும் ஒன்றுங்களா ?
மணம் நிறைந்த ரோசாப் பூவையும் , மணமில்லா காகிதப் பூவையும் ஒப்பிடுவது போல தான்.

அதே போல, முதல் பார்வையில் காதல் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

Unknown said...

Hello mam, i am navaneethan from 'DEVATHAI' which is a tamil
bi-monthly magazine. in our magazine, we have a separate page for lady
bloggers. we planned to publish your blog in this issue. i want just
your o.k. and a recent photograph.
my mobile no is. 9500019222
thanks
Navaneethan