Wednesday, May 13, 2009

தூங்குடா செல்லம்!

அம்மாக்களின் வலைப்பூக்களில் என்னையும் முல்லை ஒரு பதிவராகச் சேர்த்துப் பல நாட்களாகின்றன. இன்னும் ஒரு பதிவு கூட இட முடியவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தேன்.


ஆனால் தவறாமல் எல்லாப் பதிவுகளையும் வாசித்து வருகிறேன். இளம் தாய்மார்களுக்குப் பயனுள்ள எத்தனை குறிப்புகள்? குழந்தைகளுக்கு உணவுக்குறிப்புகள், கதைகள் என்று உண்மையில் தோட்டம் மிக அழகாகப் பூத்துக் குலுங்குகிறது. என்னையும் இங்கு கொண்டு வந்து சேர்த்த முல்லைக்கு நன்றிகள் பல!


என் மகள் நேஹாவுக்கு ஒரு வயது தான் ஆகிறது. 40 நாட்கள் முதல் நானே தான் அவளை முழு நேரமும் கவனித்து வருகிறேன். அவ்வப்போது அம்மாவும் எனது மாமியும் வந்து உதவுவது போக. ஆனாலும் எனக்கென்னவோ குழந்தை வளர்ப்பு பற்றி எதையும் எழுத ஒரு தன்னம்பிக்கை வரவில்லை. ஏனென்றால் நான் விளையாட்டுப் போக்கில், அவள் போக்கில் போய் அவளை வளர்த்துக் கொண்டு வருகிறேன். சில நாட்கள் பழகி கை கூடி வரும் உணவுப் பழக்கம் (routine) தீடீரென்று அவள் முரண்டு பிடிப்பதாலோ வேறு காரணங்களாலோ மாறி விடுகிறது. நான்கு நாட்கள் ஒழுங்காகச் சாப்பிடும் உணவை ஐந்தாம் நாள் கண்டாலே ஓடுகிறாள். இப்படி trial and error ஆக நாட்கள் ஓடுகின்றன!


அதே போல் தான் தூக்கமும். அவள் பிறந்தது முதல் பகலெல்லாம் நன்றாகத் தூங்குவாள். இரவு ஒன்பது மணிக்கு மேல் அப்படி ஒரு உற்சாகமாய் விளையாடத் தொடங்குவாள். நமக்குத் தூக்கம் சொக்கும் 12 மணியளவில் பசி எடுக்கத் தொடங்கி அழுவாள். முப்பது நாள் முதல் இவளுக்கு combination feed தான். (ஒரு வேளை தாய்ப்பால், ஒரு வேளை ஃபார்முலா) இரவு வேளை அதிகம் விழித்திருப்பதால் கண்டிப்பாக எழுந்து பால் கலக்க வேண்டி வரும். பல நாட்கள் இரவு முழுதும் விழித்திருந்தது கூட உண்டு. மாறி மாறி விழித்துப் பார்த்துக் கொள்வோம்.


அப்புறம் அவர் காலையில் வேலைக்குப் போக வேண்டுமே என்று அவளைத் தூக்கிகொண்டு ஹாலுக்கு வந்து டி.வி பார்த்துக் கொண்டிருப்பேன். ஒரே குஷியாகச் சிரித்தும் விளையாடிக் கொண்டுமிருப்பாள். அசதியில் எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியாது. குழந்தையைக் கண்டபடி திட்டுவேன். மறு நாள் காலை பட்டு போலத் தூங்கும் அவளைப் பார்த்து கஷ்டமாக இருக்கும்!
மூன்று மாதங்களுக்குப் பிறகு சரியாகி விடும் என்றார்கள். எங்கே! ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் இரவு முழுதும் தூங்க ஆரம்பித்தாள்.


அதன் பிறகு நான் கடைப்பிடித்த சில டிப்ஸ்:

1. தினமும் இரவில் கண்டிப்பாகக் குழந்தைக்கு டிஸ்போஸபில் டையபர் கட்டித் தூங்க வையுங்கள். நான் ஐந்தாம் மாதம் முதல் தான் இதைச் செய்ய ஆரம்பித்தேன். Nappy rash வராமல் இருக்க, காலையில் அதை அவிழ்த்ததும் நன்றாகத் துடைத்து விட்டு Caladryl தடவி விட்டுத் துணி நேப்பியோ ஜட்டியோ போட்டு விடுங்கள். நேஹாவுக்கு இது வரை nappy rash வந்ததே இல்லை.

2. மாலை 5 மணிக்கு மேல் குழந்தையைத் தூங்க விட வேண்டாம். தூக்கம் வந்தாலும் ஏதாவது விளையாட்டுக் காட்டித் தூங்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை 9 மணிக்குள் உணவூட்டித் தூங்க வைத்து விடுங்கள். இரவ் உணவுக்குச் சாதமோ பிற திட உணவுகளோ இல்லாமல் சத்து மாவுக் கஞ்சியோ ஸெரிலாக்கோ கொடுக்கலாம். பொதுவாக அவர்கள் அடம்பிடிக்காமல் சாப்பிடும் உணவாக இருப்பது நல்லது.

3. இரவு விழித்து எழுந்தால் சூடான தண்ணீர் கொடுங்கள். தாகத்தில் தான் பெரும்பாலும் குழந்தைகள் விழிப்பது.

4. நேஹா பெரும்பாலும் பாட்டுக்கு மயங்கித் தூங்கி விடுவாள். அவளுக்கென்று பாடுவதற்குச் சில பாட்டுக்கள் வைத்திருக்கிறேன். மெலிதாக ரேடியோவும் வைக்கலாம். பாட்டு கேட்டபடி தூங்குவது மிகவும் நல்லது.

5. பகலில் தூளியில் தூங்கினாலும் இரவில் உங்கள் அருகில் தூங்குவது தான் நல்லது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையானால் கண்டிப்பாக இரவில் பாலருந்திக் கொண்டே தூங்குவதைத் தான் விரும்பும். நீங்களும் நிம்மதியாகத் தூங்கலாம். ஆனால் இப்பழக்கத்தை நிறுத்துவது கடினம். (டிப்ஸ் ப்ளீஸ்!)

6. தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் முகம் கை கால்களைத் துடைத்துப் பௌடர் போட்டு உடை மாற்றி விடுவது அவசியம். ஆனால் சாப்பிட்டவுடன் குழந்தை கண்ணயர்ந்து விட்டால் எழுப்பி இதைச் செய்ய வேண்டாம்!

7. முக்கியமாக நீங்களும் இரவில் சீக்கிரமே தூங்கிப் பழகினால் குழந்தையும் அதே போல பழகி விடும். (இந்த விஷயத்தில் சாத்தான் வேதம் ஓதுகிறேன்! என்ன செய்வது அவள் அப்பா வீட்டுக்கு வரத் தாமதம் ஆவதால் இந்த நிலை.)

8. இன்னொரு விஷயம். கொஞ்சம் பெரிய குழந்தையானதும் வீட்டில் மற்றவர்களிடமும் கொடுத்துத் தூங்கப் பழக்குங்கள். உங்களிடம் இருந்தால் தான் குழந்தை தூங்கும் என்றால் உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனாலோ அல்லது வேறு சந்தர்ப்பத்திலோ ரொம்பக் கஷ்டம். IPL ஆரம்பித்ததிலிருந்து இரவில் அவள் அப்பா மேட்ச் பார்த்தபடி நேஹாவை மடியில் வைத்துக் கொண்டுத் தூங்க வைத்து விடுகிறார். எனக்கு நிம்மதி. ஆனால் அவளும் கிரிக்கெட் ரசிகையாகி விடக் கூடாதே என்று பயமாக இருக்கிறது.


இதெல்லாம் செய்தும் சில நாட்கள் எங்கள் வீட்டுத் தேவதை ”இரவினில் ஆட்டம்” என்று ஆடுவாள். வேறு வழியின்றி அவளுடன் சேர்ந்து ஆடுவதைத் தவிர எனக்கு இப்போது வேறு வழியில்லை.

பி.கு: இவளது அப்பா, இதைப் படித்து விட்டு அம்மாமார்கள் இரவு 11, 12 வரை பதிவுலகத்தில் மிதந்து கொண்டு இருந்தால் குழந்தை எப்படித் தூங்கும் என்று கேட்கிறார். :- நான் ஒன்றும் அப்படியெல்லாம் செய்வதில்லை. நம்புங்கள்!

14 comments:

Vidhya Chandrasekaran said...

நம்பிட்டேன் தீபா. ஜூனியர் ஆறு மாதம் வரை இரவினில் ஆட்டம் தான். இரவு 8 மணியிலிருந்து விடிகாலை 5.30 மணி வரை ஒரு நிமிடம் கூட கண்ணயர மாட்டான்:(

நல்ல பதிவு:)

Unknown said...

என் குழந்தையும் இப்படி தான் ஆட்டம் போடுறாள். நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன் அவள் இரவில் தூங்க குறைந்த 2மணி ஆகுது. நீங்கள் செய்வது போல் செய்துப் பார்கிறேன்.

Deepa said...

வித்யா!

ஹா ஹா! ஜூனியரும் மினி ரௌடி தான் போல!
உங்கள் அனுபவம் எனக்கு உண்மையில் ஆறுதலாகவே இருக்கிறது! (sorry) நான் மட்டும் தான் ஏதோ தவறு செய்து குழந்தையை இப்படிப் பழக்கி விட்டதாக எண்ணி இருந்தேன்! இப்போதெல்லாம் ஆவரேஜாக 12 மணிக்குத் தூங்குகிறாள்.

Mrs. Faizakader!

உங்கள் குழந்தையின் வயதென்ன? முதல் மூன்று மாதங்கள் தூக்கம் விழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கப்புறம் என்றால் இந்த வழிமுறைகள் நிச்சயம் ஓரளவு பயன் தரும்.

செந்தில்குமார் said...

நல்ல பதிவு தீபா !

என்னோட பின்னூட்டத்த அங்கே விரிவா போட்டிருக்கேன்...

மாதவராஜ் said...

இதே காலங்கள், இன்னும் சில வருடங்கள் கழித்து சந்தோஷமான நினைவுகளாக வலம் வரும்.

கலையரசன் said...

பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com

நர்சிம் said...

ம்

Deepa said...

நன்றி செந்தில்குமார்!
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தேன்.

ஆமாம் அங்கிள்!
நிகிலைத் தூங்க வைக்க நீங்களும் அம்முவும் என்ன பாடு படுவீர்கள் என்று நினைவுக்கு வருகிறது. நேஹா எவ்வளவோ பரவாயில்லை.

கலையரசன்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் தனித்தெல்லாம் இல்லை, பதிவெழுது நேரத்தை விடப் பிறர் பதிவுகளைப் படிக்கும் நேரம் தான் அதிகம். உங்கள் பதிவுக்கும் நிச்சயம் வருகிறேன்.

நர்சிம்!
ஏன் இவ்ளோ நீஈஈஈளமான பின்னூட்டம்? படிக்க ஆயாசமாக உள்ளது

பட்டாம்பூச்சி said...

சுகமான சுமைகளை நீங்கள் விளக்கும் விதம் அருமை :)

சந்தனமுல்லை said...

நல்வரவு தீபா, பயனுள்ளக் குறிப்புகளுடன் வந்திருக்கிறீர்கள்! நன்றி! உங்கள் பதிவு பப்புவுடனான நாட்களை நினைவூட்டுகிறது! பப்புவும், இரவினில் ஆட்டம், பகலில் தூக்கம் ரகம்தான்! ஆனால், முகில் தான் பெரும்பாலான் இரவுகளில் பார்த்துக் கொண்டது! மேலும், இளம்பிராயத்தில், தூக்கம் வந்தால் தூங்க விட்டு விடுவோம். அவர்கள் தூக்கத்தை நாமாகக் கெடுக்கக் கூடாது என்பது எனது ஆயாவின் சட்டம்! இன்றுவ்ரை நாங்கள் அதைக் கடைப்பிடிக்கிறோம். :-)

நட்புடன் ஜமால் said...

பி.கு.

மிக நியாயம்.

ivingobi said...

inga AMMA kal ellorum nalla team a irukkinga nall;a visayam ithu niraya tips pagirnthukalaam..... nalla visayam nadantha nallathu thaan.... enakku enna sollanum nu theriyalai but inga oru nalla pathivu podanum nu ninaikkaraen male ku permission unda... ?

Deepa said...

நன்றி ஜமால்!

நன்றி ivingobi!
அம்மாக்களின் வலைப்பூக்கள் பற்றி அறிய சந்தனமுல்லையை அணுகுங்கள். http://sandanamullai.blogspot.com

CS. Mohan Kumar said...

நன்றாக உள்ளது இந்த பதிவு. வேறு சில பதிவுகளும் நன்றாகவே உள்ளன. பா. ரா. blog-ல் தங்களை ஒரு தொடர் அழைப்புக்கு கூபிட்டதை வைத்து இங்கு வந்தேன். மழை பற்றிய கட்டுரையும் நன்று. முடிந்தால் என் வலை பக்கமும் வந்து எட்டி பாருங்கள்