Thursday, May 28, 2009

அற்புதங்களின் உறைவிடங்கள்!

என் நாத்தனார் மகள் சூர்யாவுக்கு நான்கு வயதாகிறது. பேச்சு என்றால் அப்படி ஒரு வயதுக்கு மீறிய பேச்சு. ஒன்றரை வயதிலேயே பேசத் தொடங்கி விட்டாள் அவள்.

சென்ற வாரம் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ஒரு சின்ன சிக்கல் என்ன வென்றால் நாத்தனாரும் அவரது கணவரும் சில பிரச்னைகளின் காரணமாக சில காலமாகப் பிரிந்து இருக்கிறார்கள். இணைத்து வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவது அந்தப் பிஞ்சு உள்ளம் தான்.
சூர்யாவும் போன வருடம் வரை தனது நறுக்கென்ற பேச்சினாலும் அதீத பிடிவாதத்தினாலும் “குணசாலி” என்று குடும்பத்தில் பெயரெடுத்திருந்தாள். நேஹா பிறந்த போது ஜோவை அவளைத் தூக்கவே விடவில்லை. யார் கொஞ்சினாலும் அழுவாள்.

அதனால் இம்முறை அவள் முன் நேஹாவை ரொம்பக் கொஞ்ச வேண்டாம் என்றும் இருவருக்கும் ஒரே மாதிரி கவனம் செலுத்துவோம் என்றும் ஜோவிடம் சொல்லி வைத்திருந்தேன்.
ஆனால் என்ன ஆச்சரியம் அவர்கள் உள்ளே நுழைந்தது தான் தாமதம். சூர்யாவைப் பார்த்த வுடன் “பாப்ப்ப்ப்ப்பா! என்ற கூச்சலுடன் நேஹா என் இடுப்பை விட்டு இறங்கி ஓடி விட்டாள்.” குழந்தைகளென்றால் அதீத பரவசம் கொள்கிறாள் நேஹா இப்போதெல்லாம். பெரியவர்களிடம் அப்படிப் போகவே மாட்டாள்.

சூர்யாவும் “நேஹாப் பாப்பா!” என்று ஆரத்தழுவிக் கொண்டு, ”வா வெளிய போய் விளையாடலாம்” என்று நேஹாவின் சிறு வண்டியையும் தூக்க மாட்டாமல் தூக்கிக் கொண்டு வெளியே சென்று விட்டாள்.
அடுத்த இரண்டு மணி நேரம் இருவருமே பெரியவர்கள் யாரையுமே தேடவில்லை. கீச் மூச் சென்ற சத்ததுடன் நேஹா மழலை பேசுவதும் பெரியமனுஷி தோரணையில் சூர்யா அவளைக் கொஞ்சுவதும் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தன.
ஜோ அலுவலகம் புறப்படத் தயாரான போது, நேஹா அழத் தொடங்கினாள். அவளை கேட்டினருகே அழைத்து வந்த சூர்யா, ”அப்பா சாயங்காலம் வந்துடுவார்டா செல்லம். அழாம டாட்டா சொல்லு” என்ற போது என்னால் கண்ணில் துளிர்த்த நீரைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

அற்புதமானவர்கள் குழந்தைகள்.

பி.கு: வெளியில் போன போது சூர்யா கையிலிருந்த பிஸ்கட்டை அவளது தாத்தா கேட்டார். “ஊம்.. நேஹா பாப்பாக்குப் பசிக்கும்ல? சினேஹா சினேஹான்னு கொஞ்சுறீங்க.. அப்புறம் பாப்பா பிஸ்கட்டைக் கேக்குறீங்க..” என்றாளே பார்க்கலாம். தாத்தாவுக்கு ”நேஹா” என்று சரியாக உச்சரிக்க வருவதில்லை என்று எப்போதுமே கிண்டலடிப்பது அவள் வழக்கம்!

8 comments:

வடுவூர் குமார் said...

இது அவர்கள் உலகம்,அப்படித்தான் இருக்கும்.
கொடுக்கல் வாங்களில் எதுவும் எதிர்பார்ப்பு இருக்காது.

Vidhya Chandrasekaran said...

பெரியவர்கள் தான் பிரச்சனை, மனஸ்தாபமென அடித்துக்கொள்கிறோம். குழந்தைகளுக்கு இருக்கும் பொறுப்பும், பாசமும் amazing:)

சந்தனமுல்லை said...

சுவாரசியம் தீபா! அவர்கள் உலகமே தனிதான்!

//“ஊம்.. நேஹா பாப்பாக்குப் பசிக்கும்ல? சினேஹா சினேஹான்னு கொஞ்சுறீங்க.. அப்புறம் பாப்பா பிஸ்கட்டைக் கேக்குறீங்க..” என்றாளே பார்க்கலாம்.//

:-))

மணிநரேன் said...

அற்புதமானது அவர்கள் உலகம்...
பி. கு .... :)

மாதவராஜ் said...

கனத்திருந்த மனதுக்கு உன் பதிவு இதமாயிருந்தது. குழந்தைகள் போன்று சமாதானம் செய்பவர்களும், சமாதானமாய் இருப்பவர்களும் வேறு யார்? பதிவுக்கு மிக்க நன்றி. நேஹாவுக்கும், சூர்யாவுக்கும் என் அன்பு.

ஸ்ரீ.... said...

குழந்தைகளின் நடவடிக்கை குறித்த அழகான பதிவு.

ஸ்ரீ....

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் தலைப்பே சொல்கிறதே குழந்தைகள் அற்புதங்களின் உறைவிடங்கள் என்று.

சர்வ நிச்சயமாய் அவர்களின் உலகமே தனியானதுதான். அதனை நம்மால் கற்பனைக் கூட செய்ய முடியாது. வேண்டுமென்றால் அவர்களோடு நாம் கொஞ்ச தூரம் பயணிக்கலாம். அவ்வளவே.

சூர்யா க்ரேட்.

Deepa said...

நன்றி வடுவூர்குமார்! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

வாங்க வித்யா! சரியாச் சொன்னீங்க :-)

பகிர்வுக்கு நன்றி முல்லை!

வாங்க மணி நரேன்!

அங்கிள் உங்கள் மனதை மாற்ற முடிந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அது நேஹாவும் சூர்யாவும் செய்தது.

நன்றி ஸ்ரீ!

//அவர்களின் உலகமே தனியானதுதான். அதனை நம்மால் கற்பனைக் கூட செய்ய முடியாது.//

ரொம்ப சரி அமித்து அம்மா! பகிர்வுக்கு நன்றி!