Sunday, October 4, 2009

அம்மாவின் பிறந்த நாள்!

பிறந்த நாள் என்பது எல்லாருக்குமே மனதுக்கினிய நாள் தான். என்னதான் ’என்ன் பெரிய பிறந்த நாள், it’s just another day, அதெல்லாம் பெரிசா கண்டுக்கறது கிடையாது’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், கொண்டாடுகிறோமோ இல்லையோ,
அன்றைய தினம் நண்பர்களும் அன்புக்குரியவர்களும் நம்மை வாழ்த்தும் போது கிடைக்கிற மகிழ்ச்சியே அலாதி தான்.

ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு நம்மை இவ்வுலகுக்குக் கொண்டு வந்தவர்களின் பிறந்த நாள் தெரியும், அல்லது தெரிந்தாலும் நினைவிருக்கும்? (அவர்களின் திருமண நாள் கூட நினைவில் இருக்கும்.)

இன்று அம்மாவுக்குப் பிறந்த நாள் என்று எழுதும் போதே உண்மையில் இந்தத் தேதி தானா என்றவொரு ஐயமும் மனதில் தோன்றுகிறது.

வீட்டில் ஒவ்வொருவர் பிறந்த நாளையும் நினைவில் வைத்துப் பாயசத்துடன் விருந்து சமைத்து மகிழ்விக்கும் அம்மா தனது பிறந்த நாள் என்னவென்பதை வெகு நாட்கள் குழப்பத்திலேயே வைத்திருந்தார்.

அக்டோபர் 15 என்று தான் முதலில் ஞாபகம். பின்பு ஏதோ பழைய சான்றிதழ்களைக் கண்டெடுத்தபோது அக்டோபர் நான்கு என்று இருந்தது. எப்படி இருந்தாலும் அம்மா பிறந்த நாளை அம்மா மட்டும் அல்ல, வீட்டில் அனைவருமே எளிதாக மறந்து விடுவது தான் வழக்கமாகிறது.

அப்பா பிறந்த நாளில் அப்பாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்து அவரை வாழ்த்துவது வழக்கம். அதுவும் ஏப்ரல் மாதம், கோடை விடுமுறையில் வரும் என்பதால் அப்பா பிறந்த நாள் என்றாலே சிறு வயது முதல் வீடே களைகட்டும் குதூகலமான நாளாக மனதில் பதிந்திருக்கிறது. அது எவ்வளவு சந்தோஷமோ அதே சமயம் அம்மா பிறந்த நாளைக் குறைந்த பட்சம் பிள்ளைகளான நாங்க்ளாவது ஒழுங்காக நினைவு கூர்கிறோமா என்றால் இல்லை என்பது தான் வேதனையான உண்மை.

’அம்மாவுக்கு அதெல்லாம் பிடிக்காது. அம்மா அதையெல்லாம் பொருட் படுத்த மாட்டார்கள்’ என்று நாம் சமாதானம் கொள்ளலாம். அது உண்மையும் கூட. ஆனாலும் நினைவு வைத்திருந்து ஒரு முறை வாழ்த்துச் சொல்லிப் பாருங்களேன்.
அந்தத் தாயுள்ளம் எப்படி பூரித்து மகிழும் என்பதை.

வெட்கச் சிரிப்புடன் அன்று நாளெல்லாம், “எனக்கே நினைவில்ல... இந்தப் புள்ள ஞாபகமா ஃபோன் பண்ணுது” என்று பிறரிடம் சொல்லி மகிழும் போது நமக்குப் புரியும் எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று!

பலர் வீட்டில் அப்பாக்களுக்கும் கூட இதே நிலை தான் இருக்கும்.

அதனால் இப்பதிவைப் படிப்பவர்கள் இதுவரை இல்லாவிடினும் இனி உங்கள் அம்மா அப்பா பிற்ந்த நாளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தத் தேதியில் சென்று அவர்களிடம் செல்லம் கொஞ்சிக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

(பி.கு: தவறாமல் அப்பா அம்மா பிறந்த நாளை நினைவு வைத்து அவர்களை மகிழ்விக்கும் நல்ல பிள்ளைகளுக்குச் சிறப்பு பாராட்டுக்கள். அவர்கள் தங்கள் அனுப்வங்களைப் பகிரும் படியும் கேட்டுக் கொள்கிறேன்)

20 comments:

Unknown said...

நல்ல பதிவு தீபா. உங்கள் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

எங்கள் அம்மாவுக்கு நாங்கள் சிறு வயதில் வாழ்த்துச் சொல்லியதில்லை. ஆனால், அம்மாவின் பிறந்தநாளைக் கேட்டறிந்த பிறகு தவறாமல் வாழ்த்துகிறோம். அப்பாவின் பிறந்த நாள் யாருக்குமே சரிவர தெரியவில்லை. எங்கள் தாத்தா திராவிடர் கழகப் பற்றுதலில் வீட்டில் இருந்த ஜாதக ஓலைச்சுவடிகளைக் கொளுத்திவிட்டதால் சரியான பிறந்த தேதி தெரியவில்லை என்று அப்பா சொல்வார்கள். பாட்டி உயிருடன் இருந்திருந்தால் கேட்டிருக்கலாம், அவர் நாங்கள் பிறக்கும் முன்பே இறந்துவிட்டார்.

//’அம்மாவுக்கு அதெல்லாம் பிடிக்காது. அம்மா அதையெல்லாம் பொருட் படுத்த மாட்டார்கள்’ என்று நாம் சமாதானம் கொள்ளலாம். அது உண்மையும் கூட. ஆனாலும் நினைவு வைத்திருந்து ஒரு முறை வாழ்த்துச் சொல்லிப் பாருங்களேன்.
அந்தத் தாயுள்ளம் எப்படி பூரித்து மகிழும் என்பதை.//

நிச்சயம் பூரித்து மகிழும்.

ஆயில்யன் said...

//வெட்கச் சிரிப்புடன் அன்று நாளெல்லாம், “எனக்கே நினைவில்ல... இந்தப் புள்ள ஞாபகமா ஃபோன் பண்ணுது” என்று பிறரிடம் சொல்லி மகிழும் போது நமக்குப் புரியும் எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று!///

எஸ்!!!!!

Deepa said...

நன்றி ராஜா!

//அம்மாவின் பிறந்தநாளைக் கேட்டறிந்த பிறகு தவறாமல் வாழ்த்துகிறோம்.//
வெரி குட்!

நன்றி ஆயில்யன்!
:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு தீபா. உங்கள் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

ஈரோடு கதிர் said...

இரண்டு வாரங்களுக்கு முன் வாழ்த்து சொன்னபோது வெட்கப்பட்ட என் அம்மாவை மீண்டும் நினைவூட்டியிருக்கிறது இந்த இடுகை..

உங்கள் அம்மாவுக்கு வணக்கங்களும், வாழ்த்துகளும்

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு தீபா..தேதி தெரிந்தாலும் நேரில் வாழ்த்தியதில்லை..ஆனால் காலேஜ் ஹாஸ்டல் சென்றபின் பழக்கமாயிற்று...வீட்டு ஞாபகம்ல்லாம் அப்போத்தானே வரும்!! :-)

அப்புறம் இந்த இடுகையிலே நேஹா அப்பாவுக்கு ஏதும் மெசேஜ் இருக்கா?!! ;-))

கண்மணி/kanmani said...

happy b'day wishes to ur dear mom deepa .unmaiyana unmai.ammakkalukku irukko illaiyo edho oru koocham pillaikalukkum.adhan appa amma b'day pathi ninaippadhillai.

சந்தனமுல்லை said...

தங்கள் அம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும் அன்பும்!! :-)

வல்லிசிம்ஹன் said...

அம்மாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் எங்கள் சார்பாகச் சொல்லுங்கள்.
அம்மா அப்பா பிறந்த நாளைக் கண்டு பிடிக்க எனக்கு வயது இருபது ஆக ,
வேண்டியிருந்தது. அதுவும் என் மாமா சொல்லித்தான் தெரியும்.,

அடடா வேண்டாமே என்று சொல்லியே சமாளிப்பார்கள். பூங்கொத்து கொடுத்து விட்டால் மிகவும் மகிழ்ச்சி!!

Deepa said...

நன்றி TV இராதாகிருஷ்ணன்!

நன்றி கதிர்!

நன்றி முல்லை!
//அப்புறம் இந்த இடுகையிலே நேஹா அப்பாவுக்கு ஏதும் மெசேஜ் இருக்கா?!! ;-))//

:-))
ஏம்பா சும்மா இருக்கறவரை வம்புக்கு இழுக்கறீங்க?? அதெல்லாம் ஒண்ணுமில்ல. (நம்பமாட்டியே!)

நன்றி கண்மணி!
ஆம், தேவையற்ற சில கூச்சம் அன்பை வெளிப்படுத்துவதில் தயக்கம் கொண்டு வரும்.

காமராஜ் said...

அம்மாவுக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள் தீபா.
உங்களுக்கான எனது வாழ்த்துக்களை வாங்கிக்கொள்ளுங்கள்.
புழக்கத்திலிருக்கும் மறதிகளை எடுத்து வெளியே போடுகிற எழுத்து அழகு.

மாதவராஜ் said...

நல்லதொரு முக்கியமான இடுகை. இந்த சமூகத்தை நோக்கி முக்கியமான கேள்வியையும் முன்வைக்கிறது. மனசாட்சியை குறுகுறுக்க வைக்கிற பதிவு.

அம்மாவுக்கு வாழ்த்துக்களை நான், அம்மு, பிரித்து சொன்னோம். சந்தோஷப்பட்டார்கள்.

Babu (பாபு நடராஜன்} said...

small things makes the world happy

அமிர்தவர்ஷினி அம்மா said...

//வெட்கச் சிரிப்புடன் அன்று நாளெல்லாம், “எனக்கே நினைவில்ல... இந்தப் புள்ள ஞாபகமா ஃபோன் பண்ணுது” என்று பிறரிடம் சொல்லி மகிழும் போது நமக்குப் புரியும் எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று!///

உண்மை உண்மை உண்மை

தங்களின் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

(பி.கு. என் அம்மாவின் பிறந்தநாள் கேட்டுப் பார்த்து மண்டையை குடைந்த பின்னரும் அவருக்கு தெரியாத காரணத்தால் எனக்கும் தெரியவில்லை, யாராவது என் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் போது மறக்காமல் என் அம்மாவை நினைத்துக்கொள்வேன். இப்படியாவது அம்மாவுக்கு வாழ்த்துக்கள் சென்று சேரட்டுமே என்று :) :(

கபிலன் said...

"வெட்கச் சிரிப்புடன் அன்று நாளெல்லாம், “எனக்கே நினைவில்ல... இந்தப் புள்ள ஞாபகமா ஃபோன் பண்ணுது” என்று பிறரிடம் சொல்லி மகிழும் போது நமக்குப் புரியும் எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கிறோம் என்று! "

ரொம்ப நிஜம் !
அருமையான பதிவு!

கலையரசன் said...

அம்மாவ பத்தி எழுத ஒரு இடுகை போதாதுங்க...
தங்களின் அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

நேசமித்ரன் said...

உங்கள் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

அமுதா said...

அருமையாகச் சொன்னீர்கள். belated wishes to your mom

பின்னோக்கி said...

எனக்கு என்னமோ இந்த பிறந்த நாட்களின் மேல் பெரிய மரியாதை இருந்ததில்லை.

Sapadu to random musings.😁 said...

I liked this post very much. A feel good post.. :)