Thursday, September 10, 2009

பெண்ணியம் - ஒரு சிறு பார்வை

நண்பியிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். எனக்குப் பெண்ணிய எண்ணங்களுடன் எழுதும் யாரையும் பிடிக்கும் என்று.

அவசரமாகப் பார்த்தால் இது குறுகிய மனப்பான்மை போலத் தோன்றும். இல்லவே இல்லை. இது ஒரு மாற்றுப் பார்வை; வரவேற்கத் தக்க பார்வை. இந்தப் பார்வைக்கு உள்ள பஞ்சம் தான் இன்னும் நம் பெண்களை இரண்டாம் நிலையிலேயே வைத்திருக்கிறது.

பெண்ணியம் என்ற வார்த்தை மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதில் நமக்கு ஏக குழப்பங்கள்.

ஏதோ என் மனதில் தோன்றியதை இங்கே சொல்லி இருக்கிறேன்.

படிக்கும் சூழல் கூட இல்லாமல் குறைந்த பட்ச சுதந்திரம் கூட இல்லாமல் வளர்க்கப்படும் பெண்களைப் பற்றி எனக்குப் பேசத் தெரியவில்லை. படித்த, புத்திசாலியான, தேவையான அளவு சமூக விழிப்புணர்வுள்ள இன்றைய பெண்களை நோக்கியே இப்பதிவு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். – சுருக்கமாகச் சொன்னால் அனைத்துப் பெண் பதிவர்களையும் :-)

பொதுவாக ஒரு எண்ணம் உண்டு. திருமண வாழ்க்கை சரியாக அமையாதவர்கள், ஆண்களால் பல கஷ்டங்களைச் சந்தித்தவர்கள், சமூகத்தோடு ஒத்து வாழத்தெரியாதவர்கள் - இவர்கள் தான் பெண்ணியம் பேசுவார்கள் - அல்லது ’பெண்ணியம் பேசுபவர்கள் குடும்பத்துக்கு லாயக்கல்ல’; ’நாம் என்ன தான் பேசினாலும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது’ என்று.

நிற்க. இதை ஆண்கள் பேசினால் சட்டை செய்யாமல் இருக்கலாம்; சென்ற தலைமுறையைச் சேர்ந்த அல்லது படிக்காத பெண்கள் பேசினாலும் மன்னித்து விடலாம். ஆனால் இன்றைய படித்த, புத்திசாலிப் பெண்களில் பலர் கூட, பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்தாலும் உணர்வு ரீதியாக மன ரீதியாக ஆண்களுக்கு அடுத்த இடத்தில் தான் தங்களை வைத்துக் கொள்கிறார்கள். அதனால் பெண்ணியம் என்பது குடும்பங்களில் கலகமூட்டக் கூடிய சொல்லாகவே பார்க்கப் படுகிறது. ஆனாலும் பேசவாவது செய்வோம். அதற்குத் தடை இல்லை அல்லவா?

ஆண்களால் பாதிக்கப் படும்போது பெண்களுக்கு ஒருவரோடொருவர் உணர்வு ரீதியாக உண்மையான நெருக்கம் ஏற்படுகிறது. பெண்ணியமும் தேவைப்படுகிறது.

ஆண் வேறு பெண் வேறு தான். ஆண் செய்வதையெல்லாம் பெண் செய்ய வேண்டும்; பெண் செய்வதையெல்லாம் ஆண் செய்ய வேண்டும் என்பதில்லை.

உயிரைச் சுமக்கும் பெண்ணின் உடல் போற்றத் தக்கது; பாதுகாக்கப் பட வேண்டியது.

’ஆண் பெண் சம உரிமைன்னு சொல்லிட்டு பஸ்ஸில் தனி சீட் கேட்கிறீர்களே’ என்ற விதண்டாவாதத்தை எல்லாம் ஆண்கள் முன் வைக்கக் கூடாது.

பிள்ளை பெற்று விட்டு மூன்று மாதத்திலும் மாதவிடாயின் வயிற்றுவலியைச் சுமந்து கொண்டும் பெண்கள் வேலைக்குப் பயணிக்கக் கூடும் என்பது அவர்களுக்கு ஏன் புரிவதில்லை? அதற்காக அவர்களைப் பலவீனமானவர்கள் என்று வகைப் படுத்தவேண்டாம்.

பெண்ணின் உடலுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அதீத மரியாதை தரவேண்டும். மனதையும் உணர்வுகளையும் சமமாக நடத்த வேண்டும்.

ஆனால் கொடிய வேடிக்கையாக இங்கே நடப்பதோ தலை கீழாக இருக்கிறது. பெண்களின் உடலைக் கேளிக்கைப் பொருளாகவும் அகத்தைக் குப்பைத் தொட்டியாகவுமே பாவிக்கிறது இச்சமூகம்.

இச்சமூகத்தின் தயாரிப்பான பெண் இயல்பாகவே சுயமரியாதை இல்லாதவளாகத் தான் வார்க்கப் படுகிறாள்.

அறிவும் தன்னம்பிக்கையும் கூடிய எந்தப் பெண்ணும் திருமணத்துக்குச் சம்மதிக்கும் போது தனது சுயமரியாதையை அடகு வைத்தவளாகவே ஆகி விடுகிறாள். எல்லாரும் ஏறக்குறைய அப்படித் தான் என்பதால் அது யாருக்கும் பெரிதாக்த் தெரிவதில்லை.

காதல் திருமணத்தில் கூட, காதலிக்கும் போது பெண்ணின் கடைக்கண் பார்வையை பெற படாத பாடு படும் ஆண் திருமணத்துக்குப் பிறகு அன்புக்காக ஏங்கித் தனது குடும்பத்தாருடன் போட்டி போடும் நிலைக்குத் தானே அவளை ஆளாக்குகிறான்?

மாமியார் மருமகள் சண்டைகளுக்கு மூல காரணம் பெண்களின் உளரீதியான பாதுகாப்பற்ற உணர்வு தானே? அதைச் சுரண்டியே கொழுக்கும் ஆண் வர்க்கம் தானே? அதனால் ஆண்களின் நிம்மதியும் போகிறது என்பது பக்க விளைவு தான்.

ஆனால் இவர்கள் உத்தமர்களாகவும் பெண்களால் தான் வீட்டில் இவர்கள் நிம்மதி போகிறது என்ற ஒரு பிம்பத்தையும் நமது மூளைக்குள் திணித்து வைத்திருக்கிறார்கள்.
பெண் ஒழுங்கா இருந்தால் குடும்பம் ஒழுங்கா இருக்கும், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே. பெண் நினைத்தால் எப்படிப்பட்டவனையும் திருத்தி நல்ல வாழ்க்கை வாழலாம். இவர்களைத் திருத்துவது தான் நம் வேலையா? அவரவர் தங்கள் ஒழுங்கைப் பார்த்துக் கொண்டாலே போதும்.

பல பிரச்னைகள் பெண்களுக்கு மட்டும் இரண்டு வீடு என்ற நியதியால் பிறந்தது தானோ என்று தோன்றுகிறது.


இன்றைய நிலையில் பொருளாதாரத்திலும் சம சுதந்திரம் பெற்று விட்ட போது ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ எந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தால் என்ன?
இருவரின் பெற்றோரையும் சமமாகப் பாவித்தாலென்ன?

பெண்களும் தேவையில்லாத ’நல்ல பெயர்’களுக்காகப் பெண்ணடிமைத் தனத்தைப் பூசிக் கொள்வதை விட்டொழிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, நம் தோழிகளுடன் கல்லூரிப் பருவத்தில் பேசிய புரட்சிகரமான பேச்சுக்களை நினைத்துப் பார்போம்; (விளையாட்டாகவாவது நிச்சயம் பேசி இருப்போம்.) மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கூடுமானவரை அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவோம்.

மாமியார்கள் நம்மை விடப் பாவம் என்று உணருவோம். அடுத்த தலைமுறையினரான் நமக்கு இருக்கும் ’எக்ஸ்போஷர்’ அவர்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.

அவர்கள் நம்மை மோசமாக நடத்தினாலும் கண்டு கொள்ள வேண்டாம். நாம் புதுயுகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களையும் கைப் பிடித்து அழைத்துப் போவோம் பெண்ணடிமை அற்ற சமுதாயத்துக்கு.

யார் என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. செய்ய இடம் கொடுக்காத உயரத்தில் நம்மை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.

மேலும், கணவன், மாமனார் இவர்களிடம் நல்ல பெயரெடுக்க வேண்டி மாமியார் நாத்தனார்களுக்குக் குழி வெட்ட வேண்டாம்.
பதிலுக்கு அவர்களும் அதைச் செய்வார்கள் என்பது நினைவிருக்கட்டும். இத்தகைய செயல்களால் நம்மை அறியாமல் பெண்ணடிமைத் தனத்தை ஊக்குவிக்கிறோம்.

என்ன தான் சொன்னாலும் ஆண்களிடம் நல்ல பெயரெடுக்க வேண்டிப் பிற பெண்களை விட்டுக்கொடுப்பவர்களும் இருக்கத் தான் செய்வார்கள். அவர்களையும் கூட மன்னிக்கக் கற்றுக் கொள்வோம். After all, they are also products of the environment. Let’s take pride that we chose to be different!

இதில் தவறி எதிர்க்கையை ஓங்கினால் நாமும் சாக்கடைக்குள் அமிழ்ந்து விடுவோம்!அப்புறம் இதற்கு முடிவே கிடையாது.
பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்ற மிகப் பெரிய டின்னை நம் முதுகில் கட்டி விடுவார்கள்.

யோசித்தால் பெண்களைப் போல் ஒற்றுமையாக இருக்கவும் மனமொத்து அன்பு செலுத்தவும் ஆண்களுக்குத் தெரியாது.
பெரும்பாலான ஆண்களுக்கு மனம் விட்டுப் பேசிக் கொள்ளவே இடையே இரண்டு க்ளாஸ்களும் ஒரு ஃபுல்லும் தேவைப் படும்.
- விதிவிலக்குகள் எங்கேயும் உண்டு. :-) நமக்கு அப்படியா?

அதனால் நமது சிந்தனைகளையும் உணர்வுகளையும் ஆக்கிரமிக்கும் ஆண்களைச் சற்று மறப்போம்.

நமக்காகச் சிந்திப்போம். நம்மைப் பற்றிச் சிந்திப்போம். சேர்ந்து சிந்திப்போம்.

45 comments:

ஐந்திணை said...

//அவரவர் தங்கள் ஒழுங்கைப் பார்த்துக் கொண்டாலே போதும்//

:-)

நட்புடன் ஜமால் said...

யோசித்தால் பெண்களைப் போல் ஒற்றுமையாக இருக்கவும் மனமொத்து அன்பு செலுத்தவும் ஆண்களுக்குத் தெரியாது.]]

ஆனால் யோசிக்கனுமே

--------
பெரும்பாலான ஆண்களுக்கு மனம் விட்டுப் பேசிக் கொள்ளவே இடையே இரண்டு க்ளாஸ்களும் ஒரு ஃபுல்லும் தேவைப் படும்.
- விதிவிலக்குகள் எங்கேயும் உண்டு. :-) நமக்கு அப்படியா?]]

அப்ப சரி - இதில் நான் இல்லை (என்னா சுயநலம்)

----------------

அதனால் நமது சிந்தனைகளையும் உணர்வுகளையும் ஆக்கிரமிக்கும் ஆண்களைச் சற்று மறப்போம்.]]

யாருங்க அது - லிஸ்ட் பெருசா இருக்கும் போல

---------------

நமக்காகச் சிந்திப்போம். நம்மைப் பற்றிச் சிந்திப்போம். சேர்ந்து சிந்திப்போம். ]]

அடடடே அப்ப நான் ஒதுங்கி நின்னுக்கிறேன்.

---------------

பெண்களுக்கு சமமானவனாக தன்னை கருதும் ஒருவன் ...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

யோசித்தால் பெண்களைப் போல் ஒற்றுமையாக இருக்கவும் மனமொத்து அன்பு செலுத்தவும் ஆண்களுக்குத் தெரியாது.
///////////
உண்மை உண்மை உண்மை

வாழ்த்துக்கள் ............

வால்பையன் said...

சரியாத்தான் சொல்லியிருக்கிங்க!

கையேடு said...

//பெண் நினைத்தால் எப்படிப்பட்டவனையும் திருத்தி நல்ல வாழ்க்கை வாழலாம். இவர்களைத் திருத்துவது தான் நம் வேலையா? அவரவர் தங்கள் ஒழுங்கைப் பார்த்துக் கொண்டாலே போதும்.//

hahahaha.... உண்மையில் இந்த இடத்தில் வெடித்துச் சிரித்துவிட்டேன்.

மற்றபடி இடுகை குறித்து கருத்து எதுவும் சொல்வதற்கு முன் ஒரு சுய பரிசோதனை தேவைப்படுகிறது.. :)

மணிப்பக்கம் said...

உங்களின் சிந்தனை புரிகிறது! ஆணால், ஆணை பற்றி பேசாமலே இருந்திருந்தால் நல்ல பதிவாகி (சிந்தனையாகி) இருக்கும், நிற்க,

//பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்தாலும் உணர்வு ரீதியாக மன ரீதியாக ஆண்களுக்கு அடுத்த இடத்தில் தான் தங்களை வைத்துக் கொள்கிறார்கள்//

ஆமாம் அடுத்த இடம் தான், ஏன் என்று கடைசி வரியில் ...

//ஆனால் கொடிய வேடிக்கையாக இங்கே நடப்பதோ தலை கீழாக இருக்கிறது. பெண்களின் உடலைக் கேளிக்கைப் பொருளாகவும் அகத்தைக் குப்பைத் தொட்டியாகவுமே பாவிக்கிறது இச்சமூகம்.//

ஏன், எதனால்? பெண்களுக்கு அவர்களின் பெண்மையை போற்ற தெரிய வேண்டும் முதலில், அப்புறம் ஆணை போற்ற சொல்லலாம், காசுக்கு எல்லாவற்றையும் (குரல், உடல் வனப்பு, உடல்)விற்க கூடாது, அப்புறம், காசுக்கு கிடைக்கும் எதற்கும் உள்ள மரியாதை தெரியும்தானே?!
ஏன் விற்கிறார்கள்? கடைசி வரியில் பதில்!

// பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்ற மிகப் பெரிய டின்னை நம் முதுகில் கட்டி விடுவார்கள்.//

உண்மையே இதுதான், டின்னாவது?!

// யோசித்தால் பெண்களைப் போல் ஒற்றுமையாக இருக்கவும் மனமொத்து அன்பு செலுத்தவும் ஆண்களுக்குத் தெரியாது //

அடக்கடவுளே! இது அபாண்டம், ஆண்களுக்கு தான் நண்பர்கள் அதிகம், உறவும் அதிகம்!
காதலில் உருகி கவிதை எழுதியிருக்கிறாளா ஆணைபற்றி எந்த பெண்ணும்? ஆணை போன்று!
எந்த படைப்பிலும் இன்னும் பெண்கள் முன்னேற வில்லை! என்னை பொறுத்தவரையில் பெண்கள் எல்லாம் ஜடங்கள்!
ஆண்களை போன்று உணர்ச்சிகளால் ஆனவர்கள் அல்ல!
அரைகுறை அறிவே அவர்களை ஆள்கிறது!
அதனால்தான் சுயநலமே மிஞ்சி இருக்கிறது பெண்களிடத்தில்! விதிவிலக்கு எல்லா இடத்திலும் உண்டு, 2% இருக்கலாம் ஆணை போன்று gentle women!

//பெரும்பாலான ஆண்களுக்கு மனம் விட்டுப் பேசிக் கொள்ளவே இடையே இரண்டு க்ளாஸ்களும் ஒரு ஃபுல்லும் தேவைப் படும்.//

ஹி ஹி ... ;)

இந்த கடைசி வரி சின்னதுதான், விளக்க முடியாது, எல்லோருடைய சிந்தனைக்காகவும்!

'பெண்களுக்கு ஆணை கொண்டாட தெரியவில்லை, ஆண் பெண்ணை கொண்டாடுவது போல!, இதுதான் பெண்களுக்கு உண்டாகும் எல்லா இழிவுகளுக்கும் காரணம்'

நுகர்வோர் உலகத்தில் நுகர்வோர்தானே முக்கியம்! ஆண்களுக்கு இருக்கும் தலைகணத்துக்கான காரணம் விளங்குகிறதா?
(பாக்யராஜ் பாணியில படிங்க புரியும்!)

Deepa said...

நன்றி ஐந்திணை!

நன்றி நண்பர் ஜமால்!

//யாருங்க அது - லிஸ்ட் பெருசா இருக்கும் போல//
பொதுவாகச் சொன்னேன்.

நன்றி உலவு.காம்!

நன்றி கையேடு!

//மற்றபடி இடுகை குறித்து கருத்து எதுவும் சொல்வதற்கு முன் ஒரு சுய பரிசோதனை தேவைப்படுகிறது.. :)//

ஆஹா, பதிவின் நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு பெருமைப்படுத்தி விட்டீர்கள்.
கண்டிப்பா திரும்பி வாங்க.

வாங்க மணிப்பக்கம்,
உங்கள் மனதுக்குப் பட்டதை நேர்மையாகச் சொன்னதற்கு நன்றி.

//ஆணால், ஆணை பற்றி பேசாமலே இருந்திருந்தால் நல்ல பதிவாகி (சிந்தனையாகி) இருக்கும், //
:-)))))))))


//'பெண்களுக்கு ஆணை கொண்டாட தெரியவில்லை, ஆண் பெண்ணை கொண்டாடுவது போல!, //

சத்தியமா முடியலங்க.. சான்ஸே இல்ல!
:-))))))))

Vidhoosh said...

அன்பின் தீபா
நீங்கள் என்னுடைய பதிவுகளை படிக்கிறீர்களா என்று தெரியவில்லை. நேரம் கிடைக்கும் போது ஆயிரம் காலத்து அழுகல் பயிர் என்றொரு தொடர் பதிவிட்டு வருகிறேன். படிக்கவும்.

உங்கள் கருத்துக்களை ஒப்புக் கொள்கிறேன், ஆனால், நான் "ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும்" என்றொரு பதிவில் சொன்னது போல, "ஆணோ, பெண்ணோ, எங்கே மெல்லிய உணர்வுகள் நசுக்கப்படுகிறதோ, அங்கே வன்முறை வெடிக்கிறது. புரட்சி, போராட்டம், எதிர்ப்பு என்றெல்லாம் எந்தப் பெயர் வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளலாம். குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் அரவணைப்பு, அவர்களால் தத்தம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இருந்தாலே போது, தனிநபருக்கு சமூகத்தின் அங்கீகாரம் என்ற ஒன்று பற்றிய கவலை கூட வராது. குடும்பத்தின் அரவணைப்பே, அவனுக்கு தன்னம்பிக்கை பெற்றுத் தரும். தன்னம்பிக்கை உடைய யாருமே மனதுக்கு தவறென்று தெரியும் செயல்களைச் செய்வதில்லை.

இதெல்லாம் சாத்தியப்பட ஒன்றே ஒன்று மட்டும் போதும், அது நம்மை சார்ந்தவர்களின் "மெல்லிய உணர்வுகளை மதிப்பது" - நடக்குமா? என்பது million dollar question?"

நல்ல ஒரு விவாத களம் இது.

இன்னும் பேசலாம், இப்போது நேரமில்லை. மீண்டும் நாளை காலை வருகிறேன். Good night.

--வித்யா

Deepa said...

வருகைக்கும் விரிவான பகிர்வுக்கும் மிக்க நன்றி வித்யா.

கண்டிப்பா வாங்க, பேசலாம்.
:-)

சந்தனமுல்லை said...

சிறு பார்வையானாலும் தீர்க்கமான பார்வை, தீபா! நிறைய பேர் பெண்ணியம் என்பதை ஆணுக்கு எதிரியாகத்தான் பார்க்கிறார்கள்..புரிந்துக்கொள்கிறார்கள்! ஒருவேளை சம உரிமையாகிவிட்டால் அவர்கள் இல்லாது போய்விடுவார்களென்ற பயம் காரணமாக இருக்கக் கூடும்!

மேலும், நமது உரிமைகளை நாம் பயன்படுத்தினாலும் அது பெண்ணியமாகிவிடுகிறது - சம உரிமை என்றுச் சொன்னாலே அது பெண்ணியமாகி விடுகிறது! :))

Deepa said...

@விதூஷ்: நானும் உங்கள் பதிவைப் படித்து விட்டு வருகிறேன்.Good night.

ஈரோடு கதிர் said...

//மாமியார்கள் நம்மை விடப் பாவம் என்று உணருவோம். அடுத்த தலைமுறையினரான் நமக்கு இருக்கும் ’எக்ஸ்போஷர்’ அவர்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.//

இது போதுமே

Deepa said...

வாங்க முல்லை!

//நிறைய பேர் பெண்ணியம் என்பதை ஆணுக்கு எதிரியாகத்தான் பார்க்கிறார்கள்..புரிந்துக்கொள்கிறார்கள்//

மிகச்சரியாகச் சொன்னீர்கள். நான் பதிவில் சொல்லத் தவறிய முக்கியமான விஷயம் இது.
மிக்க நன்றி.

அமர பாரதி said...

கட்டுரையில் இருப்பது ரெடிமேட் டெம்ப்ளேட் வாசகங்கள் தான். ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்வுடன் அடிமைத்தனத்தை சம்பந்தப்படுத்தி பெண்ணீயத்தை செல்ல முடியுமா?

//யோசித்தால் பெண்களைப் போல் ஒற்றுமையாக இருக்கவும் மனமொத்து அன்பு செலுத்தவும் ஆண்களுக்குத் தெரியாது// எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்?

//சேர்ந்து வாழ எந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தால் என்ன// பொதுவாக திருமணமானவுடன் உத்யோகத்தின் பொருட்டு தனியாக வாழ்வதே பெரும் பான்மையாக இருக்கிறது.

//மாமியார் மருமகள் சண்டைகளுக்கு மூல காரணம் பெண்களின் உளரீதியான பாதுகாப்பற்ற உணர்வு தானே? அதைச் சுரண்டியே கொழுக்கும் ஆண் வர்க்கம் தானே// மாமியார் மருமகள் சண்டையில் எதைச் சுரண்டி ஆண் வர்க்கம் கொழுக்கிறது?

//நம் தோழிகளுடன் கல்லூரிப் பருவத்தில் பேசிய புரட்சிகரமான பேச்சுக்களை நினைத்துப் பார்போம்// கொஞ்சம் விளக்கமாக புரட்சி என்றால் என்னவென்று சொல்ல முடியுமா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிறப்பான பதிவு தீபா. பெண்கள் படிக்க வேண்டிய பதிவும் கூட. மாமியார் - மருமகள் பற்றிய எண்ணங்கள் அழகு. இந்தப் பின்னூட்டமிடும் பொழுது என் மனைவி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் தானே என்ற எண்ணம் வருகிறது.

தொடர்ந்து எழுதுங்கள் இது போன்ற பதிவுகளை.

Anna said...

Very nicely written.

One of my favorite quote about the subject is "feminism is the radical notion that women are human beings".

Our patriachial culture has always failed to accept it.

"ஆனால் இன்றைய படித்த, புத்திசாலிப் பெண்களில் பலர் கூட, பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்தாலும் உணர்வு ரீதியாக மன ரீதியாக ஆண்களுக்கு அடுத்த இடத்தில் தான் தங்களை வைத்துக் கொள்கிறார்கள். "

Again couldn't agree with you more.

"ஆண் வேறு பெண் வேறு தான். ஆண் செய்வதையெல்லாம் பெண் செய்ய வேண்டும்; பெண் செய்வதையெல்லாம் ஆண் செய்ய வேண்டும் என்பதில்லை."

This is another point that normally people get it so wrong. Just because we promote equality, it doesn't mean that we say men and women are the same. They are not. There are quite a numbe rof qualities/abilities that many men have that women do not and vice versa. We normally complement eachother in life.

But all we are saying is that just because we are different, it DOES NOT MEAN that one of us is better than the other.

Boys and girls are brought up differently right from when they are born. Boys are brought up to be independent, emotionless, free, responsible human beings and they are taught from the beginning about standing on their own two feet. Girls are brought up to be dependent, suppressed and to be subordinate to her husband. She is constantly being told about the importance of marriage and child bearing. She is taught that she will be worthless if she is not married and doesn’t have any children.

"அறிவும் தன்னம்பிக்கையும் கூடிய எந்தப் பெண்ணும் திருமணத்துக்குச் சம்மதிக்கும் போது தனது சுயமரியாதையை அடகு வைத்தவளாகவே ஆகி விடுகிறாள். எல்லாரும் ஏறக்குறைய அப்படித் தான் என்பதால் அது யாருக்கும் பெரிதாக்த் தெரிவதில்லை."
Again, well said. I have seen manry marriages where even if the wife is equally educated as her husband, her family is still expected to pay so much dowry and dance to every tune the grrom and his family members make.

The women have to wake up and realise how they are being treated and then refuse to tolerate such treatments. It's only then the situation will strat to change.

Anonymous said...

//ஆண் வேறு பெண் வேறு தான். ஆண் செய்வதையெல்லாம் பெண் செய்ய வேண்டும்; பெண் செய்வதையெல்லாம் ஆண் செய்ய வேண்டும் என்பதில்லை.//
இது ஆண் பெண் இரு பாலாருக்கும் புரிந்தால் போதும். புரிதல்தான் வாழ்க்கையே. அது இல்லாத போதுதான் இதுமாதிரி பிரச்சனைகள்
நல்ல பதிவு தீபா

ஆரூரன் விசுவநாதன் said...

ஒருஆணுக்கு பெண்ணைப் பற்றியும், ஒரு பெண்ணுக்கு ஆணைப் பற்றியுமான புரிதல் இங்கு மிககுறைவு.

கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் மதிக்க கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். "சகி" என்ற வார்த்தையின் பொருள் சகித்துக் கொள்பவள் என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி, அவரவர்களுக்கென்று ஒரு விருப்பமும், ஆசையும், மனதும் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

i recall the words of "the prophet"



you were born together, and together yous hall be for evermore

you shall be together when the white wings of death scatter u r days

you shall be together even in the silent memory of god

but let there be space in your togetherness

let the winds of the heaven dance between you

love one another, but make not a bond of love

let it rather be moving sea between the shores of your soul

fill each others cup, but drink not from one cup

give one another of your bread, but eat not from the same loaf

sing, dance together, and be joyous, but let each one of u alone

even as the strings of a lute are alone though they quiver with the same music

give your hearts, but not into each other's keeping

stand together yet not too near together

for the pillars of the temple stand apart

and the oak tree and the cypress grow not in each others shadow

இது புரிந்தால், இங்கு ஒரு "இய" த்திற்கும் அவசியமிருக்காது.

வரும் தலைமுறைக்காவது புரியவைப்போம்.

நாம் புரிந்துகொள்ளவில்லை என்பது உண்மைதான்......


அன்புடன்
ஆரூரன்.

VINCY said...

மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள். ஒரு பெண் உடல் ரீதியாக எத்தனை துன்பங்களை அனுபவிக்கிறாள் என்பது இந்த ஆண்களுக்கு புரியவா போகிறது. என்னுடைய வலைதளத்தையும் பாருங்கள்.


http://womenrules-menobeys.blogspot.com/

thiyaa said...

நல்ல படைப்பு


நான் ஜமாலுடைய கருத்துடன் ஒத்துப் போகிறேன்

//யோசித்தால் பெண்களைப் போல் ஒற்றுமையாக இருக்கவும் மனமொத்து அன்பு செலுத்தவும் ஆண்களுக்குத் தெரியாது.//

Vidhoosh said...

//அதனால் பெண்ணியம் என்பது குடும்பங்களில் கலகமூட்டக் கூடிய சொல்லாகவே பார்க்கப் படுகிறது. //

வந்துட்டேன் தீபா. good morning. :)

பெண்ணியவாதங்கள் பல பெண்ணியவாதிகளால் சரியான திசையில் இட்டு செல்லப்படாமல் வலுவிழந்து வருகிறது என்றே நினைக்கிறேன்.

நாம் சந்திக்கும் முதல் ஆண்களான, தந்தை மற்றும் சகோதரர்கள், அப்புறம் நண்பர்கள். இவர்களில் யார் பெண்களாகிய நம் உணர்வுகளை அதிகம் மதிக்கிறார்கள்?

முக்கால்வாசி பெண்களுக்கு தடையாக இருப்பதே குடும்பம்தான். அதற்காக, குடும்பம் என்ற சிஸ்டம் உடைபட விடமுடியுமா?

பெண்கள் தன் உணர்வுகளை, என்னிக்கி வெட்கத் திரை மற்றும் sentiment என்ற முட்டாள்தனமான திரைகளை உடைத்தெறிந்து, தீர்மானமாய் "எனக்கு இது சரியென படுகிறது" என்று வாதிக்கவும், ஆலோசனைகளை பரிசீலித்து, ஏற்கவோ மறுக்கவோ, தயாராகிறார்களோ அன்று தான், உண்மையான பெண்ணியம் உருவாகும்.

:)


///பெண் நினைத்தால் எப்படிப்பட்டவனையும் திருத்தி நல்ல வாழ்க்கை வாழலாம். இவர்களைத் திருத்துவது தான் நம் வேலையா? அவரவர் தங்கள் ஒழுங்கைப் பார்த்துக் கொண்டாலே போதும்.///

சரி, ஒரு வேளை முரணாக கணவனின் குணம் அமைந்து விட்டால்...? என்ன செய்வது? உறவிலிருந்து விலகுவது சரியா? எனக்கு இந்த இடத்தில் நீங்கள் சொல்ல வருவது புரியவில்லை.

///பெண்ணுக்கு பெண் தான் எதிரி என்ற மிகப் பெரிய டின்னை நம் முதுகில் கட்டி விடுவார்கள்.//

பெண்ணுக்கு வேறு யாருமே எதிரி இல்லை, தானே தான். ஒருமுறை, என் மாமியாரை (அவருக்கு பெண் குழந்தை கிடையாது) என் மாமனார் கணவர், கொழுந்தனார் மூன்று பெரும் சேர்ந்து திட்டிக் கொண்டிருந்தனர். எதற்கு தெரியுமா, இரவில் வாயிற்கதவை தாளிடாமல் உறங்கி விட்டாராம். எனக்கு வந்த ஆத்திரத்தில் மூன்று பேரையும் திட்டிவிட்டேன். ஏன்? இவர்களும் ஒரு முறை பார்க்கக் கூடாதா? சரி, என்னவாக இருந்தாலும், இப்படி மூன்று பேர் சூழ்ந்து நின்று இப்படியா திட்டுவது என்று? என் மாமியார் அதற்கு, "ரெண்டு திட்டு திட்டுவாரு. அப்புறம் சாயந்திரமே ஒரு புடவையும், நெக்லசும் வரும்" என்றார். திடுக்கிட்டு போனேன் நான். இதற்கு என்ன சொல்வது? By the way, என் மாமியாரிடம் ஏறத்தாழ நாற்பது நெக்லஸ் இருக்கு :)) போட்டுக் கொண்டிருப்பதோ ஒரே ஒரு செயின் மட்டும் தான். ஐயோ பெண்ணே! என்று நொந்து கொண்டேன் நான்.

கையை பிடித்து அழைத்து செல்வது பெரிய காரியமில்லை. ஆனால் இந்த நப்பாசைகளை பெண்கள் என்று துறப்பார்கள்?




--வித்யா

Vidhoosh said...

///சுருக்கமாகச் சொன்னால் அனைத்துப் பெண் பதிவர்களையும் :-)///

எத்தனை பெண் பதிவர்கள், தம் எண்ணங்களை, சமையலறையையும், குழந்தைகளையும் தாண்டி, தொழில்/அறிவு/கல்வி சார்ந்த விஷயங்களை பதிவிடுகிறோம். சமையலும், குழந்தை வளர்ப்பும் மிக மிக முக்கியமான ஒன்றுதான்.

அதையும் தாண்டி, ஒவ்வொரு பெண்ணுக்கும் சுயம் என்று ஒன்று இருக்கிறதே! நம்முடைய முகம், அதற்கு எத்தனை பூச்சுக்கள்?

ஆரோக்கிய விவாதங்கள், பகிர்தல்கள், இலக்கியம், அறிவியல், உலகம் என்ற விஷயங்களைப் பற்றி ஏன் இந்த பெண் பதிவர்கள் தம் பதிவுகளில், பேசுவதே இல்லை? விஷய ஞானம் இல்லாமல் இல்லை, தெளிந்த பார்வை, விமர்சனங்களை ஏற்கும் தன்மை, யாராவது தப்பா நினைத்துவிட்ட என்ன செய்வது என்ற தயக்கம்... வேறென்ன சொல்ல?

இல்லை எனக்குதான் அப்படிப்பட்ட பெண் பதிவர்களை தெரியவில்லையோ? இங்கு பதிவிடும் ஒவ்வொரு பெண்ணும், ஏதோ ஒரு துறையில் சிறந்தவர்களாகவே இருக்க வேண்டும். ஏன் அது போன்ற விஷயங்களையும் பகிரக் கூடாது நாம்?

நம் பெண்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கும்,
--வித்யா

அமுதா said...

நன்கு தீர்க்கமாக யோசித்து தெளிவாக எழுதி இருக்கிறீர்கள்.


/*பெண்ணின் உடலுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அதீத மரியாதை தரவேண்டும். மனதையும் உணர்வுகளையும் சமமாக நடத்த வேண்டும்*/
உண்மை..


/*’ஆண் பெண் சம உரிமைன்னு சொல்லிட்டு பஸ்ஸில் தனி சீட் கேட்கிறீர்களே’ என்ற விதண்டாவாதத்தை எல்லாம் ஆண்கள் முன் வைக்கக் கூடாது.*/
அவர்கள் எடுத்துக்கொள்ளும் ஆயுதம்...

ஈகோ இன்றி புரிந்துகொள்ளலுடன் ஆண்களும் பெண்களும் பழகினாலே, பெண்ணியம் பேச தேவைப்படாது. ஆனால் சிறு வயதில் இருந்தே "பெண் என்றால்..." என்ற ஒரு கருத்தோடு வளர்க்கப்படுவதால் பல பிரச்னைகளைச் சந்திக்க நேருகிறது.

அமுதா கிருஷ்ணா said...

” ஒரு பெண் உடல் ரீதியாக எத்தனை துன்பங்களை அனுபவிக்கிறாள் என்பது இந்த ஆண்களுக்கு புரியவா போகிறது.”

பெண்களுக்கே பெண்களுக்கு வலி இருக்கும் என்பது பல சமயங்களில் மறந்து போகிறது.. அப்புறம் எங்கே ஆண்களுக்கு புரியும்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

பேசப் பேச முடிவே இல்லாத விஷயமாக கருதப்படும் பெண்ணியத்திற்கு சிறு விதையிட்டால் போல
இந்தக் கட்டுரை.

எல்லா விஷயத்திற்கு ஆரம்பமே புரிதல் தான் என்பது என் கருத்து

என்னால் என் மாமியாரை புரிந்துகொள்ளமுடியும், ஆனால் அவர்கள் என்னைப் புரிந்துகொள்வார்களா என்பது சந்தேகமே !

என் மாமனார் மாமியாருக்கு டீ போட்டுக் கொடுப்பது இயல்பாக அவர்களால் எடுத்துக்கொள்ளப்படும், ஆனால் என் கணவர் எனக்கு உதவி செய்ய நேர்ந்தால்
போய் உட்காருடா, இதெல்லாம் போய் நீ செஞ்சிக்கிட்டு என்றுதான் வளர்த்திருக்கிறார்கள்.

போன தலைமுறை விவகாரமென்று நாம் டேக் இட் ஈஸி பாலிஸி என்று ஒதுக்கி விட்டு நாம் நம் வேலையை செய்யலாம்,ஆனால் இதைப் பார்த்து
வளரும் என் பெண் ஆயா இப்படி சொல்றாங்க, ஆனா நம்ம அம்மா வேற மாதிரி சொல்றாங்களே என குழம்பும்.

படித்தே இருந்தால் கூட நிறைய பெண்களுக்கு நாம் அவர்களுக்கான குறைந்த பட்ச உரிமையை வழங்கினால் கூட, ஹைய்யோ இதெல்லாம் எனக்குத் தெரியாது, அவர் வரட்டும், வந்து பார்த்துக்கட்டும் என்ற
ரேஞ்சில் தானே இருக்கிறது.

முந்தைய தலைமுறையைப் பார்த்து வளர்ந்த நாம், இன்றைய தலைமுறையில் வளர்ந்த பின் புரிந்துகொண்டிருக்கிறோம், அடுத்த தலைமுறை குழந்தைகளை எந்தக் குழப்பங்களும் இல்லாமல்
வளர்க்க, ஆயா ஒன்னு சொல்ல, அம்மா இன்னொன்னு சொல்ல, அப்பா வேற மாதிரி சொல்ல என்று இல்லாமல் ஒருமித்த கருத்துகளோடு வாழ, வளர நமது குடும்ப சூழலும், சமுதாயமும் என்று அமைகிறதோ அன்றுதான் எல்லாக் கருத்துக்களும் முழுமையடைந்ததாக அர்த்தம்.

இன்னொன்றும், ஆணோ, பெண்ணோ அறுபதுக்கு அப்புறம் பார்த்தீங்கன்ன அந்த ஈகோ கொஞ்சம் கூட இல்லாமப் போயிடும், ஆரம்ப காலத்துல அவர் ஷூ வைக் கூட இந்தம்மா துடைச்சு வெச்சிருப்பாங்க, எச்சில் கைய கழுவுற வேலைய மட்டும்தான் அவர் செய்திருப்பார்.
ஆனா கடைசி காலத்தில் அவர்கள் பாரபட்சமில்லாமல் காட்டும் அன்பிருக்கிறதே,அப்போ எல்லாமும் பொடிப்பொடியா போயிடும்.

நாஞ்சில் நாதம் said...

//மாமியார்கள் நம்மை விடப் பாவம் என்று உணருவோம். அடுத்த தலைமுறையினரான் நமக்கு இருக்கும் ’எக்ஸ்போஷர்’ அவர்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.//

எந்த தவறிலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு தவறை திருப்பி செயாமல் இருந்தாலே பாதி பிரச்சனையை தீர்ந்து விடும். கல்யாணமான எல்லோரும் மருமகன் / மருமகள் நிலயை தாண்டி தான் மாமனார் / மாமியார் நிலையை அடைகின்றனர்

//யோசித்தால் பெண்களைப் போல் ஒற்றுமையாக இருக்கவும் மனமொத்து அன்பு செலுத்தவும் ஆண்களுக்குத் தெரியாது.//

இந்த இடத்தில மட்டும் முரண்படுகிறேன்.

பெரியார் சொன்ன மாதிரி பெண்ணியம் மனைவிக்கு மட்டுமல்ல தனது தாய் மகள் சகோதரிக்கும் சேர்த்துதான் என்பதை புரிந்து கொண்டால்...............:)))

கபிலன் said...

’பெண்ணியம் பேசுபவர்கள் குடும்பத்துக்கு லாயக்கல்ல’

இது ஓரளவுக்கு நிஜம் தான். நிஜ உலக உதாரணங்களை எடுத்துக்கொள்ளுங்கள். பெண்ணுரிமையில் முதன்மையான, முன்னோடியாக இருக்கும் பெண்களுக்கு குடும்பமே இருக்காது.

ஆண், பெண் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு குணங்கள் உண்டு. இது இயற்கை. அதனைப் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, அன்பு செலுத்தி வாழ்வதே வாழ்க்கை.

இந்த காலத்துல பெண்ணுரிமைன்னு சொல்லி வாழ்க்கையை தொலைத்துக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
பெண்ணுரிமை பேசி பெண்மையையும் தொலைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பாரதி கண்ட புதுமைப் பெண் நிச்சயமாக நீங்கள் சொல்லும் பெண்ணுரிமை கோஷ்டிகளை அல்ல!

கபிலன் said...

’பெண்ணியம் பேசுபவர்கள் குடும்பத்துக்கு லாயக்கல்ல’

இது ஓரளவுக்கு நிஜம் தான். நிஜ உலக உதாரணங்களை எடுத்துக்கொள்ளுங்கள். பெண்ணுரிமையில் முதன்மையான, முன்னோடியாக இருக்கும் பெண்களுக்கு குடும்பமே இருக்காது.

ஆண், பெண் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு குணங்கள் உண்டு. இது இயற்கை. அதனைப் புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து, அன்பு செலுத்தி வாழ்வதே வாழ்க்கை.

இந்த காலத்துல பெண்ணுரிமைன்னு சொல்லி வாழ்க்கையை தொலைத்துக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
பெண்ணுரிமை பேசி பெண்மையையும் தொலைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பாரதி கண்ட புதுமைப் பெண் நிச்சயமாக நீங்கள் சொல்லும் பெண்ணுரிமை கோஷ்டிகளை அல்ல!

Deepa said...

நன்றி கதிர்!

நன்றி அமரபாரதி!

//கட்டுரையில் இருப்பது ரெடிமேட் டெம்ப்ளேட் வாசகங்கள் தான். //

யாருமே சொல்லாத புதிய விஷயத்தைச் சொன்னதாக நான் நினைக்கவில்லையே!

//ஒரு குறிப்பிட்ட நிகழ்வுடன் அடிமைத்தனத்தை சம்பந்தப்படுத்தி பெண்ணீயத்தை செல்ல முடியுமா?//

:-) வானத்தில் நட்சத்திரங்களை எண்ண உங்களால் முடியுமா?

விதூஷ்!

உங்கள் பதிலையும் படித்தேன். பதிவுகளையும் படித்தேன். இன்றைய குடும்பச் சூழலில் பிரச்னைகளைக் கையாண்டு ஓரளவு சுமுகமாக வாழ்க்கையை நடத்திச் செல்ல வழிமுறைகளைச் சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். வரவேற்கத்தக்கது.
நாம் எல்லோருமே அதைத் தான் செய்ய முயற்சி செய்து வருகிறோம்.

ஆனால் எவ்வளவு காலம் தான் நாம் இந்த அமைப்பைச் செப்பனிடும் வேலையையே செய்து கொண்டிருப்பது? எத்தனை பெண்களுக்கு அது சாத்தியமும் ஆகிறது?

We have to take steps to change the system...atleast one step at a time, it will take years, decades, but let's step towards it, atleast.

So, let's atleast accept that most women are living a substandard life (compared to the men folk in their family), despite how happy we may be according to today's standards.

வெட்கமில்லாமல் அதை ஒத்துக் கொள்வது தான் முதல் படி என்று நினைக்கிறேன்.

Deepa said...

நன்றி செந்தில்வேலன்!

பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும், அதற்கு உண்மையாக முயல்பவர்களின் குடும்பத்தில் பெண்கள் சந்தோஷமாகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள்.

Thank you, The Analyst!

//She is constantly being told about the importance of marriage and child bearing. She is taught that she will be worthless if she is not married and doesn’t have any children.//

Very true.

நன்றி ஆரூரன்!

கலீல் கிப்ரானின் அந்த வாசகங்கள் கணவன் மனைவி என்றும் மனதில் கொள்ள வேண்டியவை.
//இது புரிந்தால், இங்கு ஒரு "இய" த்திற்கும் அவசியமிருக்காது.//
உண்மை.

நன்றி Vincy!

ஆனால் முல்லை இங்கே சொல்லி இருப்பது போல் பெண்ணியம் ஆணுக்கு எதிரானது அல்ல. உண்மையான ஆண் பெண் சமத்துவத்தினால் இரு பாலருக்குமே ஆரோக்கியமாஅ நன்மை உண்டாகும்.

பொத்தாம் பொதுவாக ஆண்களைக் கேவலப் படுத்துவதோ எதிர்ப்பதோ பெண்ணியம் ஆகாது.

அது ஒரு அல்ப சந்தோஷம் தானே ஒழிய நம்பிக்கை தரும் மாற்றங்களை எதிர்காலத்தில் கொண்டு வராது. ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் சமமாகத் தேவை.

நன்றி தியாவின் பேனா!

நன்றி அமுதா!

//சிறு வயதில் இருந்தே "பெண் என்றால்..." என்ற ஒரு கருத்தோடு வளர்க்கப்படுவதால் பல பிரச்னைகளைச் சந்திக்க நேருகிறது.
// உண்மை

நன்றி அமுதா கிருஷ்ணா!
:-)

Vidhoosh said...

///:-) வானத்தில் நட்சத்திரங்களை எண்ண உங்களால் முடியுமா?///

ரொம்ப சரிதான். :) ஆனால் என்னால் இங்கு பெருமூச்சு விட முடியவில்லை. அதாவது, ஹும்ம்..என்ன செய்வது, என்று கையை பிசைவது?, என்னால் என்றுமே இயலாத காரியம்.

இதற்கு என்ன செய்வது? என்ன செய்தால் இது மாறும்? ஒத்துக் கொள்வதோடு நிற்காமல், நாம் எதை எதிர் பார்கிறோமோ அதை மற்றவருக்கு தருவது - சுதந்திரம் - அதை குடும்பத்தில் உள்ளவருக்கு நாமே அளிக்க வேண்டும்.

சுதந்திரம் வேண்டுமா, முதலில் குழந்தைகளையும், கணவரையும் வீட்டு வேலைகளை பகிர பழக்குங்கள். அது வேலைக்கு போய் சம்பாதித்து வரும் பெண்ணாக இருந்தாலும் சரி, homemaker-"தான்" என்று நொந்து கொண்டே சொல்லும் பெண்ணாக இருந்தாலும் சரி.

வீட்டுக்குள் சாப்பாடே இல்லை என்றாலும், நீ சாப்டு, நான் பாத்துகறேன் என்று சொல்லாமல், பெரிய்ய தியாகியாகாமல், ஒன்று புதியதாக செய்வது, இல்லை எல்லோரும் சமமாக பகிர்வது என்று பழக்குங்கள். அம்மாக்களின் "தியாகம்" மகன்களை நிச்சயம் பாழாக்கும். சில அம்மாக்கள் குழந்தைக்கு ஐந்து வயதான பின்னும் ஊட்டி விடுவார்கள். இது நிச்சயம் அவனை/அவளை கையாலாகதவர்களாகவே ஆக்கும். அந்த மகன்/மகள் பின்னாளில் சின்ன வேலைக்கும் அடுத்தவரிடம் தொங்கும் நிலை வரும்.

பெண்களின் ஆத்தில ஒரு கால் சேத்தில ஒரு கால் என்று அலுவலகம் மற்றும் வீட்டை சமாளித்து, கயிற்றின் மேல் நடக்கும் tension மிகுந்த, துக்ககரமான, இந்நிலையை, நாம் நினைத்தால், இந்த தலைமுறையை நிச்சயம் பண்பட்ட ஒன்றாக மாற்றமுடியும்.

இன்றிலிருந்தே, கணவர்களை அவரவர் வேலைகளை செய்து கொள்ள பழக்குங்கள், சொல்லுங்கள், ஆனால் இதமாக. குடும்பங்களை பேணுவோம், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர் மற்றவரின் துணை அவசியம். விடுதலை என்ற பெயரில் "விட்டுத் தொலை" என்று என்றுமே சொல்லிவிட வேண்டாம்.

திருமணத்திற்கு பின் பாதி பெண்கள் புத்தகம் படிப்பதையே விட்டு விடுகிறார்கள். குடும்ப வாழ்க்கைக்குள் போகும் பெண்கள், குடும்பத்திலேயே சுத்தி சுத்தி உழலாமல்,நிறைய புத்தகம் படியுங்கள். உங்களை பட்டாம்பூச்சியாக்கும். :)

அன்புடன்,
--வித்யா

Deepa said...

நன்றி அமித்து அம்மா!

//இன்னொன்றும், ஆணோ, பெண்ணோ அறுபதுக்கு அப்புறம் பார்த்தீங்கன்ன அந்த ஈகோ கொஞ்சம் கூட இல்லாமப் போயிடும், //
அப்படிப்பட்டவர்களைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை. :-(

அப்புறம், நமது கருத்துப் பிரசாரத்தில் குழந்தைகள் குழம்பாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம். சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றி நாஞ்சில் நாதம்!

//பெரியார் சொன்ன மாதிரி பெண்ணியம் மனைவிக்கு மட்டுமல்ல தனது தாய் மகள் சகோதரிக்கும் சேர்த்துதான் என்பதை புரிந்து கொண்டால்...............:)))//

ஆஹா...!

நன்றி கபிலன்!
உங்கள் அக்கறைக்கும் கவலைக்கும் ரொம்ப நன்றி.

காமராஜ் said...

நல்ல அர்த்தமுள்ள பதிவு. செரிவான பின்னூட்டங்கள்.
மிகத்தாமதமாக படிக்க நேர்கிறது. யாராவது ஒரு
மெகாத்தொடர் இயக்குநருக்கு நான் இந்தப்பக்கத்தை
சிபாரிசு செய்கிறேன். ஒரு இஞ்ச் அளவாவது சிந்தனை
மட்டத்தை உயர்த்த உதவும்,.

Deepa said...

@விதூஷ்:

//ஒரு குறிப்பிட்ட நிகழ்வுடன் அடிமைத்தனத்தை சம்பந்தப்படுத்தி பெண்ணீயத்தை செல்ல முடியுமா?//

//:-) வானத்தில் நட்சத்திரங்களை எண்ண உங்களால் முடியுமா?///

எத்தனையோ அன்றாட நிகழ்வுகள், அவற்றைக் குறிப்பிட இயலாது என்ற அர்த்தத்தில் சொன்னது.

Radhakrishnan said...

நல்லதொரு அலசலுக்கு மிக்க நன்றி தீபா. பின்னூட்டங்கள் மூலமும் விசயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

அதுவும் எனக்கு ரொம்ப நாளாச் சந்தேகம் இருந்தது, பெண்ணியம் அப்படின்னா என்னனு? இப்போ புரிந்தது. மிக்க நன்றி.

யாராவது பின்நவீனத்துவம் பத்தி எழுதுவாங்கனு எதிர்பார்த்துட்டு இருக்கேன்.

அமர பாரதி said...

//:-) வானத்தில் நட்சத்திரங்களை எண்ண உங்களால் முடியுமா?// முடியாது. கேள்விக்கு நன்றி. மேடைப்பேச்சு பாணியில் விவாதம் செய்ய முடியாது. சொற்களின் அலங்காரத்தில் பதில் சொல்லாமல் விலகும் யுக்தியை கடை பிடிக்கிறிர்கள்.

//பெண்களின் ஆத்தில ஒரு கால் சேத்தில ஒரு கால் என்று அலுவலகம் மற்றும் வீட்டை சமாளித்து, கயிற்றின் மேல் நடக்கும் டென்சிஒன் மிகுந்த, துக்ககரமான, இந்நிலையை// ஆண்கள் இதைத்தானே காலங்காலமாம செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பச்சாதாப்படும் அளவுக்கு நிலைமை இல்லை.

Vidhoosh said...

///ஒரு குறிப்பிட்ட நிகழ்வுடன் அடிமைத்தனத்தை சம்பந்தப்படுத்தி பெண்ணீயத்தை செல்ல முடியுமா?/////:-) வானத்தில் நட்சத்திரங்களை எண்ண உங்களால் முடியுமா?// முடியாது. கேள்விக்கு நன்றி. மேடைப்பேச்சு பாணியில் விவாதம் செய்ய முடியாது. சொற்களின் அலங்காரத்தில் பதில் சொல்லாமல் விலகும் யுக்தியை கடை பிடிக்கிறிர்கள். ////////////

அமரபாரதி, இதென்று ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு ஒன்றுக்கொன்று குறைந்தது அல்ல சில பெண்கள் படும் வேதனைகள். உதாரணத்துக்கு, தங்க கூண்டில் கிளியை அடைததமாதிரி வாழும் சில மேல்தட்டு பெண்களும், கூண்டே இல்லாமல் சிறைப்பட்டு கிடக்கும் சில பெண்கள் கிராமங்களில் நிர்வாண பஞ்சாயத்துக்களில் படும் அவலமும் வார்த்தைகளால் சொல்லவே முடியாதது.
வெறும் சினிமாவிலும், பெருநகர மால்களிலும், குட்டை பாவாடைகளை பார்த்து, பெண் விடுதலை பெற்று விட்டாள் என்று பறைசாற்றி கொண்டிருப்பது நீங்கள் சொல்வது போல, மேடை பேச்சுக்கு வேண்டுமானால் ஒத்து வரும்.
வானில் நட்சத்திரங்கள் எப்படி நிலவின் ஒளி இல்லாமல் மறைகிறதோ, அப்படியே, இந்த பெண்களும், எல்லாமிருந்தும் இல்லாமலே இருட்டில் இருக்கிறார்கள்.


--வித்யா

Vidhoosh said...

//பெண்களின் ஆத்தில ஒரு கால் சேத்தில ஒரு கால் என்று அலுவலகம் மற்றும் வீட்டை சமாளித்து, கயிற்றின் மேல் நடக்கும் டென்சிஒன் மிகுந்த, துக்ககரமான, இந்நிலையை// ஆண்கள் இதைத்தானே காலங்காலமாம செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு பச்சாதாப்படும் அளவுக்கு நிலைமை இல்லை. ////

என்னங்க. சும்மா குமுதம் ஜோக் மாதிரி சொல்றீங்க. காலையில் எட்டு மணிக்கு எழுந்து "டிபன் ரெடியா"ன்னு கேட்டு அலுவலகம் செல்லும் ஆண்கள் இன்று எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். முன்னால் பெண்கள் கணவன்களை அலுவலகம் அனுப்பிவிட்டு மதியம் வீட்டு வேலைகளை செய்தாள். இன்றோ காலையிலேயே எல்லாத்தையும் முடித்து விட்டு அவளும் அலுவலகம் செல்கிறாள். அதான் வித்தியாசம். இதில் பச்சாதாபம் எதுவும் இல்லை.

அந்த டென்ஷன் பட்டால் மட்டுமே தெரியும். முடிந்தால் பகிர்ந்து பாருங்களேன் வீட்டுப் பெண்மணிகளின் சுமைகளை, அவர்கள் கணவர்களின் பொருளாதாரச் சுமைகளை பகிர்வது போலவே...

:)

வித்யா

Deepa said...

நன்றி வித்யா!

//அந்த டென்ஷன் பட்டால் மட்டுமே தெரியும். முடிந்தால் பகிர்ந்து பாருங்களேன் வீட்டுப் பெண்மணிகளின் சுமைகளை, அவர்கள் கணவர்களின் பொருளாதாரச் சுமைகளை பகிர்வது போலவே...
//

நச்!
:)

:-)

அமர பாரதி said...

//இதில் பச்சாதாபம் எதுவும் இல்லை. // Interesting.

Then what does //கயிற்றின் மேல் நடக்கும் டென்சிஒன் மிகுந்த, துக்ககரமான, இந்நிலையை// this mean?

I do not want to continue this. I want to stop this with one comment, which is "Still you have not answered by giving one particular incident".

Thank you.

Deepa said...

நன்றி அமரபாரதி!

நீங்கள் “கோட்” செய்திருப்பது வித்யாவின் பின்னூட்டத்திலிருந்து வரிகளை.

அடுத்து கேட்டிருப்பது யாரை என்று விளங்கவில்லை.

ஆனால் நான் முன்னமே குறிப்பால் பதில் சொன்னேன். நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. போகட்டும்;
ஒரே நிகழ்வை மட்டுமே, அல்லது ஒரு சில சாம்பிள் மனிதர்களை வைத்து விளக்கும் அளவு நுண்ணிய பிரச்னை அல்ல இது.

உங்களைச் சுற்றி, அதாவது உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை, தோழிகள் என்று யாரையாவது நீங்களே கேட்டுப் பாருங்களேன்!
பேசுங்கள் பெண்களின் மனதுடன்.
உங்களுக்கே புரியும்.

//I do not want to continue this.//

பொதுவாக ஆண் சமூகத்தின் மீது உள்ள கோபத்தைத் தான் சில கடுஞ்சொற்களில் வெளிப்படுத்துகிறோமே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல.

தொடர்வதும் நிறுத்துவதும் உங்கள் விருப்பம்.
இதுவரை வந்து கருத்து பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

மாதவராஜ் said...

ஆண் பெண் இருவருமே இச்சமூகத்தின் உருவாக்கங்கள் என்பது இருபாலாருக்கும் உறைக்க வேண்டும். இருவருக்குமான இயல்புகளும், அடையாளங்களும் இங்கு இந்த அமைப்பினால்தான் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இருவருக்கான ஒழுக்கங்கள், நடத்தைகள் என காலம் காலமாய் பொதுப்புத்தியில் பல கருத்துக்களை இந்த அமைப்புத்தான் செலுத்தி வைத்திருக்கின்றன. அமைப்புக்கு, ஆணாதிக்க மனோபாவம் என்பது ஒரு முக்கியக் கூறாக இருக்கிறது. இந்தப் புரிதலோடு பேச வேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்.

ஆணுக்குத் தான் உயர்ந்தவன் என்னும் எண்ணம் இருப்பதும், பெண்ணுக்கு தான் தாழ்ந்தவள் என்னும் எண்ணம் உருவாவதும் அரூபமாய் நிகழ்வது போல நம் சமூகத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கல்லானாலும் கணவன் என்பதெல்லாம் யாரோ செலுத்தியதுதானே. அதிலிருந்து மீளமுடியாமல், அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்ந்து தீர்த்தார்கள்.

பல நூற்றாண்டுகளாய், மக்கி, கெட்டியாகி பாறைகள் போலிருக்கும் அழுக்குகளில் பெரும் உடைப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.
இந்தக் காரியத்தை இருவருமேச் சேர்ந்து செய்யத் துணியும்போதுதான் எளிதாகும். அதற்கு, ஆணுக்கு அவன் உயர்ந்தவன் இல்லை என்பதையும், பெண்ணுக்கு அவள் தாழ்ந்தவள் இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டியிருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் இருவரில் யாரும் யாரையும் விட உயர்ந்தவர்களும் இல்லை, யாரும் யாருக்கும் தாழ்ந்தவர்களும் இல்லை என்ற பிரக்ஞையை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.

இதில்தான் சில சிக்கல்கள் உருவாவதாக நான் நினைக்கிறேன்.
சென்ற நூற்றாண்டின் மிக முக்கியமானச் சிறப்புகளில் ஒன்று, புரையோடிப்போன இந்த அசமத்துவத்திற்கு எதிராக கேள்விகள் எழும்பியதும் ஆகும். இந்தக் கேள்விகள் இன்று சில விரிசல்களை உருவாக்க முடிந்திருக்கிறது என்பதெல்லாம் சரிதான். அதே நேரம் சில தவறான புரிதல்களுக்கும் இட்டுச் சென்றிருக்கின்றன.

அமைப்புக்கு எதிரான கோபமாக இல்லாமல், அமைப்புக்கு எதிரான போராட்டமாக இல்லாமல் ஆண்வர்க்கத்துக்கு எதிரான கோபமாக மட்டும் அது சுருங்கியும் போகிறது. தன் அருகில் இருக்கும் ஆண்தான் ஒரு பெண்ணுக்கு, கண்ணுக்குத் தெரிந்த எதிரியாகிறான். இது தவிர்க்க முடியாது எனினும், அந்த ஆண் இந்த அமைப்பின் ஒரு கருவியே என்கிற சிந்தனையும் பெண்ணுக்கு கூடவே வர வேண்டும். அவன் இந்த அமைப்பினால் ஆட்டுவிக்கப்படுகிறவன் என்கிற தெளிவும் வரவேண்டும்.

சில ஆண்களின் இரக்கமற்ற, வக்கிரமான குற்றங்களுக்கு, கடும்தண்டனைகள் கொடுப்பதன் மூலமே இந்த அமைப்பை அதிர வைக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதையும் இதர ஆண்களும், பெண்களும் சேர்ந்தே செய்ய வேண்டும். இப்படியான கூட்டு நடவடிக்கைகள் மூலமே ஆண், பெண் இருவருமே ஒரு பரஸ்பர புரிதலுக்கு ஆட்பட முடியும். அதை விட்டு விட்டு, ஆணும் பெண்ணும் எப்போதும் எதிரெதிரே நிற்க வைக்கிற தொனியை, பெண்ணியம் பேசிகிற பலரிடம் பார்க்க முடிகிறது. இதில் குழப்பங்கள் நீடிக்கத்தான் செய்கின்றன.

தீபாவின் இந்தப் பதிவும், அப்படியொரு பார்வையைச் சில இடங்களில் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பெண்களின் ஒற்றுமையை மட்டுமே பேசுவதாக இருக்கிறது.

Deepa said...

மிக்க நன்றி அங்கிள்!

// உண்மையான ஆண் பெண் சமத்துவத்தினால் இரு பாலருக்குமே ஆரோக்கியமாஅ நன்மை உண்டாகும்.
//

ஒருவரின் பின்னூட்டத்துக்கான பதிலில் இப்படியும் சொல்லி இருக்கிறேன்.

நீங்கள் எனக்கு சொல்லத் தெரியாமல் இருந்த பல விஷயங்களையும் எனக்கும் குழப்பமாக இருந்த பல விஷயங்களையும் மிக அழகாகத் தெளிவு படுத்தி விட்டீர்கள்.

//தீபாவின் இந்தப் பதிவும், அப்படியொரு பார்வையைச் சில இடங்களில் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. //

கொஞ்சம் உண்மை தான். என் பதிவை மறு வாசிப்பு செய்த போது தவறான புரிதல்களுக்கு இடம் கொடுக்கும் சில இடங்கள் இருப்பது புரிந்தது.

கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டு எழுத்தை வடித்ததால் வந்த வினை!


//இப்படியான கூட்டு நடவடிக்கைகள் மூலமே ஆண், பெண் இருவருமே ஒரு பரஸ்பர புரிதலுக்கு ஆட்பட முடியும். //
100/100 சரி.

//பெண்களின் ஒற்றுமையை மட்டுமே பேசுவதாக இருக்கிறது.//

:-) நான் தான் பதிவிலேயே சொன்னேனே இது பெண்களை நோக்கித் தான் முக்கியமாகப் பேசும் பதிவு என்று. பெண்களுக்குள் ஓரளவுக்கு ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்பு தானே ஆண்களைத் துணைக்கு அழைக்கலாம். (நிச்சயம் எதிர்க்க அல்ல!)

ஏனென்றால் பல ஆண்கள் இதையெல்லாம் பேச்சளவிலும் எழுத்தளவிலும் முழுக்க முழுக்க ஒத்துக் கொள்வார்கள். நடைமுறையில் மிகப் பெரிய இடை வெளி இருக்கும்.

நடை முறையில் சாத்தியப் பட வேண்டுமென்றால் முதலில் பெண்கள் என்ன செய்ய வேண்டுமென்று கலந்து ஆலோசிக்க நினைத்தேன்.
தவறில்லையே?

:-)

கபிலன் said...

"Vidhoosh/விதூஷ் said...
...சுதந்திரம் வேண்டுமா, முதலில் குழந்தைகளையும், கணவரையும் வீட்டு வேலைகளை பகிர பழக்குங்கள்."

ஹாஹா...ஓவர் பில்ட் அப்....நல்ல காமெடி....
இப்பொழுதெல்லாம் குடும்பப் பெண்களுக்கு இருக்கும் வேலைகள் பெரிதும் குறைவு. துணி துவைக்க ஒரு ஆள், பாத்திரம் கழுவ ஒரு ஆள், வீடு பெருக்க ஒரு ஆள் என பெண்களின் வேலைகள் மிக மிகக் குறைவு. ஆகையால், அந்த காலத்துப் பெண்களையும், இப்பொழுதைய நிலையையும் ஒப்பிட வேண்டாம். நங்கு வளர்ந்த நாடுகளில், இன்றும் கூட பெண்கள் தான் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, குடும்ப வேலைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர். இன்றைய நாகரிகப் பெண்கள் செய்யும் ஒரே வேலை சமையல் மட்டும் தான், அதையும் ஆண்கள் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். அது தானே....செஞ்சிட்டா போச்சு : )

Unknown said...

Excellant write up Deepa..அமித்தும்மா சொல்லி இன்றுதான் வாசித்தேன். பின்னூட்டங்களை வாசிக்க இன்னொரு நாள் தேவைப்படும் போலிருக்கிறது;))) சிமென்-டி.பவா (Simonede Beauvoir) எழுதியுள்ள Second Sex (இரண்டாம் பாலினம்) எனும் நூலை நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும். விரைவில் ஆழிப் பதிப்பகம் & பனிக்குடம் அதன் தமிழ்ப் பதிப்பை வரும் புத்தக் கண்காட்சிக்குள் பதிப்பிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்கள் (என்னுடைய சிறு பங்களிப்பும் அதில் உள்ளது) வாசித்து, விவாதித்து நாம் அறிந்து கொள்ள வேணிடிய விதயங்கள் நிறைய உள்ளன தோழி...
பகிர்விற்கு நன்றி தீபா.