Friday, September 4, 2009

காலெஜ் ஆர்க்கெஸ்ட்ரா – நட்பும் இசையும்

பழைய பாடல்களைக் கேட்கும் போது நம் எல்லாருக்குமே அந்தந்த காலத்தில் நமது அனுபவங்களும் நினைவுக்கு வரும். ”இந்தப் பாட்டு நான் ஸ்கூல்ல படிச்சிட்டிருக்கும் போது செம ஹிட். இந்தப் படப் பாட்டு தான் என் கல்யாண மண்டபத்தில நாள் பூரா அலறிட்டு இருந்தது....” இப்படி நிறைய.

ஆனால் கால பேதமின்றி சில பாடல்கள் (ப்ளாக் அண்ட் ஒயிட் படமானலும் கூட) எப்போதும் என் கல்லூரியையே நினைவு படுத்தும். இல்லைங்க, எனக்கொண்ணும் கே.பி. சுந்தராம்பாள் வயசாயிடலை.

அதற்குக் காரணம், ஆர்க்கெஸ்ட்ரா. என் கல்லூரி வாழ்க்கையில் கொஞ்சமும் மறக்க முடியாத, தனித்துவம் வாய்ந்த அனுபவங்களுக்கு எங்கள் ஆர்க்கெஸ்ட்ராவுக்குத் தான் முதலிடம்.

கல்லூரியில் நடக்கும் எந்த விழாவானாலும் (ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டும் ஒரு விழா என்ற கணக்கில் ஆறேழு விழக்கள் நடக்கும்.) எல்லா விழாவிலும் பொதுவான அம்சம் இரண்டாம் நாள் இறுதியில் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவின் இசை நிகழ்ச்சி தான்.

ராகிங் பயத்தால் முதலாண்டு மாணவர்கள் ஆர்க்கெஸ்ட்ராவில் சேர்க்கத் தடை இருந்தது. ஆனால் ஆண்டு இறுதியில் நடக்கும் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அப்படிக் கலந்து கொண்டு பரிசையும் வாங்கியும் விட்டதால் அடுத்த ஆண்டு ஆர்க்கெஸ்ட்ராவில் என்னை உடனே அழைத்துக் கொண்டார்கள்.

ஆர்க்கெஸ்ட்ரா என்றால் ரொம்பப் பெரிதாக நினைத்து விட வேண்டாம். விளையாட்டு மைதானத்தின் காலரிக்குப் பின் புறம் தாழ்வான சாய்வு கூரையுடன் எட்டடிக்கு எட்டடியாக ஒரு சின்ன இடம். அதில் ஒரு மூலையில் எங்கள் பியானோ மாஸ்டர் கீபோர்டுடன் அமர்ந்திருப்பார். அவர் வேறு யாருமில்லை என்விரான்மெண்டல் லாபில் உதவியாளர். வெளியில் இசைக்குழுக்களுக்கும் வாசிப்பவர்.

அவருக்கு அருகில் ஒரு பழைய பியானோ. அதை யாரும் வாசித்துப் பார்த்ததில்லை. பாடகிகளான நாங்கள் அதன் பின் இருக்கும் ஸ்டூல்களில் அமர்ந்து அரட்டையடிக்கவும் கோரஸ் ப்ராக்டிஸ் செய்யவுமே பயன்பட்டது.

அவ்வப்போது ஷாக் அடிக்கும் இரண்டு மூன்று மைக்குகள். ஒரு ஒரு கிடார், ஒரு ட்ரம்ஸ் கிட், ஒரு டாம்பரின். இதெல்லாம் வழிவழியாக சீனியர்ஸ் சேர்த்த சொத்து என்றறிந்தோம்.

ட்ரம்ஸ் வாசிக்கும் ரவி அண்ணா வேலை பார்த்துக் கொண்டு மாலையில் பார்ட் டைம் பி.இ படித்துக் கொண்டிருந்தவர். மறக்க முடியாத மனிதர் இவர். நாங்கள் கல்லூரியில் விழா, ரிகர்சல் இருக்கு என்று சொல்லி விட்டால் உற்சாகமாக வந்து விடுவார். அற்புதமாக ட்ரம்ஸ் வாசிப்பார். யார் என்ன பாடல் பாடினால் நன்றாக இருக்கும் என்றும் டிப்ஸ் கொடுப்பார். சீனியர்களுக்கு ஏற்படும் ஈகோ பிரச்சனைகளையும் தலையிட்டுச் சமாதானப் படுத்துபவரும் அவரே.

ராதாகிருஷ்ணன் என்பவர், அற்புதமான புல்லாங்குழல் வித்வான் என்றே சொல்லலாம். வயலினும் வாசிப்பார். கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்யும் அளவுக்கு ஞானமும் திறமையும் உள்ள இவர் எங்கள் பாடல்களின் பின்னணி இசையில் வரும் ஃப்ளூட்/வயலின் பகுதிகளை அழகாக இசைத்து மெருகேற்றுவார்.
பூ மாலையே, நறுமுகையே, பூங்கதவே பாட்ல்கள் இவரால் மிகவும் சிறப்படைந்தன. இவரது அசரவைக்கும் அந்தத் தன்னடக்கம் நட்புக்கு இவர் காட்டிய மரியாதை என்றே எனக்குத் தோன்றுகிறது.


ஆம், ஏனென்றால் கர்நாடக இசை நன்றாகத் தெரிந்த ஒரு சில மாணவர்கள் ஆர்க்கெஸ்டரா பக்கம் வராதது மட்டுமல்ல அதை மதிக்காமல் பேசியதும் உண்டு. அதனால் எங்களுக்கு நிச்சயம் இழப்பு இல்லை, நிம்மதி தான்.

எனக்குக் கர்நாடக இசையில் கொஞ்சம் பயிற்சியும் ஆர்வமும் உண்டு. அப்பாவுக்கும் அக்காவுக்கும் அதில் பெரிய ஈடுபாடு இருந்ததனால் என்னைச் சில காலம் பாட்டுக் களாஸ் அனுப்பினார்கள். பள்ளிக்கு மேல் என்னால் அதைத் தொடர இயலவில்லை.

மேலும் கர்நாடக இசை தங்களின் குடும்பச் சொத்து என்று கருதும் சிலர் (உண்மையான ஆர்வமோ ஞானமோ இல்லாமலே) அதைப் பற்றிப் பேசுவதும் என் முப்பாட்டன், ஒன்று விட்ட அத்தை எல்லாம் வித்வான்கள் என்று பெருமை பேசியதும், பிறர் கருத்தைக் காது கொடுத்துக் கேட்கக்கூட விரும்பாததனாலும் கல்லூரிப் பருவத்தில் அத்தகையோர் சகவாசத்தை வெறுத்தேன்.

சரி, ஆர்க்கெஸ்ட்ரா மேட்டருக்கு வருவோம்.
நான், சுதா, ராஜகுரு, நந்தகுமார், செந்தில், பாலாஜி, வாணி, அனுராதா இவர்கள் நிரந்தரமான பாடகர்கள். சில விழாக்களில் அந்தந்த டிபார்ட்மெண்டைச் சேர்ந்த யாராவது ஆசைப் பட்டால், ஓரளவு நன்றாகப் பாடினால் அவர்களுக்கும் ஒரு பாடல் கொடுக்கப் படும்!

இருப்பதிலேயே ஜூனியர் என்பதாலோ என்னவோ! விரைவில் நான் அங்கு எல்லோருக்கும் செல்லமாகிப் போனேன். அதனால் பொதுவாகப் பாடகிகளுக்குள் ஏற்படும் ஈகோ எல்லாம் எனக்கும் சீனியர் மாணவிகளும் இடையே கொஞ்சமும் ஏற்படவில்லை.

மேலும் தனியாக மேடையில் நின்று போட்டிக்குப் பாடும் அனுபவத்தை விட ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுவது ஒரு டீம் வொர்க் செய்த ஆனந்தத்தைத் தரும். ஒரு பாட்டு நன்றாக பாடி முடிக்கப்பட்டால் அது மேடையிலிருந்த அனைவரின் வெற்றியாகவுமே பார்க்கப்பட்டது ஆரோக்கியமான சூழ்நிலையாக இருந்தது. தனிப்பட்ட பாராட்டும் கிடைக்கும்.


ஆனால் பெண்கள் ரொம்பக் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால் ஆளுக்கு மூன்று நான்கு பாடல்கள் கிடைத்து விடும். பசங்க தான் கொஞ்சம் அடித்துக் கொள்வார்கள். “டேய்! காலேஜோட எஸ்.பி.பின்னு என்னைத் தாண்டா சொல்றாங்க. ஸோ இந்தப் பாட்டு எனக்குத் தான்.”
“தோடா..அது உன் தொப்பையப் பாத்துச் சொன்னது. ஆனா (காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு) உன்னிகிருஷ்னன் யாருன்னு எல்லாருக்குமே தெரியும்.”

இந்த ரேஞ்சுக்கு இவர்கள் அலம்பல் தாங்க முடியாது. ரெகமண்டேஷனுக்காக பியானோ மாஸ்டருக்கு ஆளாளுக்குச் சரக்கு வாங்கிக் கொடுத்துத் தாஜா செய்யப் பார்ப்பார்கள். ஆனால் அவரும் ரவி அண்ணாவும் சரியாகச் சொல்லி விடுவார்கள். அவர்கள் இல்லாமல் நோ ஆர்க்கெஸ்ட்ரா. அதனால் அவர்கள் சொல்லுக்கு எப்போதும் மதிப்பு உண்டு.

ஒரு பாடலில் மெயின் சிங்கர்ஸ் இரண்டு பேரென்றால் கோரஸ் பாட ஐந்தாறு பேர் தேவைப் படுவார்கள். நாங்கள் ரொம்பவும் என்ஜாய் செய்தது கோரஸ் ப்ராக்டிஸ் தான். அது உண்மையில் கொஞ்சம் சவாலான வேலை.

வாக்மெனில் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். பின்புலத்தில் வருகிற கோரஸில் ஆண் குரல் எது, பெண் குரல் எது, இசைக் கருவி எது என்று கண்டு பிடித்துப் பிறகு அவரவர் பங்கை நன்றாகக் கேட்டுப் பயிற்சி செய்ய வேண்டும். பாடலின் மெயின் சிங்கர்ஸ் கூட அந்தப் பாடலுக்குரிய கோரசிலும் சேர்ந்து கொள்வோம். ஆனால் இதை மாஸ்டர் தவிர்க்கச் சொல்வார்.

மறக்க முடியாத கோரஸ் அனுபவங்கள்:

மடை திறந்து - நிழல்கள்
சந்தைக்கு வந்த கிளி - தர்மதுரை
மாயா மச்சிந்த்ரா - இந்தியன்
கல்யாணம் கச்சேரி – அவ்வை சண்முகி
சொல்லாமலே – பூவே உனக்காக
பொதுவாக என் மனசு தங்கம் – முரட்டுக் காளை
பூந்தளிர் ஆட – பன்னீர் புஷ்பங்கள்
பூ பூக்கும் ஓசை – மின்சாரக் கனவு
ஊ லலல்லா - மின்சாரக் கனவு

நான் மெயின் சிங்கராகப் பாடிய பாடல்களையும் என்னால் என்றும் மறக்க முடியாது.

செம்பூவே பூவே – சிறைச்சாலை
சொல்லாமலே – பூவே உனக்காக
மாயா மச்சிந்த்ரா - இந்தியன்
சந்தைக்கு வந்த கிளி - தர்மதுரை
காதல் ஓவியம் – அலைகள் ஓய்வதில்லை
பூந்தளிர் ஆட – பன்னீர் புஷ்பங்கள்
பூ மாலையே – பகல் நிலவு
ஊலலல்லா – மின்சாரக் கனவு
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் – கந்தன் கருணை மல்லிகையே மல்லிகையே – நினைத்தேன் வந்தாய்
வான் மேகம் – புன்னகை மன்னன்
இன்னும் சில.

பூ மாலையே பாடலில் மாறி மாறி பின்னலாக வரும் சரணத்தைக் கஷ்டப்பட்டுப் பயின்றதும் பாடி முடித்ததும் எனக்கும் நந்தா அண்ணாவுக்கும் கிடைத்த பாராட்டையும் இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது.

இன்னொரு விஷயம். ஏ. ஆர். ரஹ்மான் பாடல்களைப் பாட பலருக்கும் ஆர்வம் இருந்தாலும் எங்கள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு அது முடியாது. அதற்கு என்ன செய்வோம் என்றால் பாடகர்களை மட்டும் தீவிரமாகப் பிராக்டிஸ் செய்யச் சொல்வோம். விழா நாளுக்கு முன்னதாக “கம்போஸர்” மற்றும் “எலக்ட்ரிக்” பேட் வாடகைக்கு எடுத்து விடுவோம். (அதெல்லாம் பட்ஜெட்டை எகிற வைக்கும்) கம்போஸரில் மொத்த பின்னணி இசை ட்ராக்கையும் ஒட விட்டு எங்கள் ட்ரம்ஸ் மற்றும் வாத்தியக் கலைஞர்கள் பிரமாதமாகக் ”கையசைப்பார்கள். ஆனால் இதில் பாடகர்களுக்கு ரிஸ்க். கொஞ்சமும் டைமிங் மிஸ்ஸாகாமல் பாட வேண்டும். அதுவும் த்ரில்லிங்காகத் தான் இருக்கும்.

இந்த வகையில் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட ”ஊ லலல்லா” கோரஸ் பின்னணி இசைக்குப் பொருந்தாமல் வெறும் ஊளையாகிப் போனதை மறந்து விடுவோம்!

மூன்றாம் ஆண்டு வந்ததும் பாய்ஸ் ஹாஸ்டல் ஸ்ட்ரைக் நடந்து முடிந்ததும் எல்லா விழாக்களுக்கும் தடை போடப்பட்டது. ஆர்க்கெஸ்ட்ரா மந்தமானது. வெளியில் சென்று இரண்டு போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டு பரிசு வாங்கினோம்.

இறுதி ஆண்டு. இது தான் செம காமெடி. மூன்றாம் ஆண்டில் தான் ஆர்க்கெஸ்ட்ரா நிர்வாகம் புதிய பாடகர்களைக் கண்டு கொள்வது பற்றியெல்லாம் கற்றுக் கொள்ளலாம். அந்த ஆண்டு பிசுபிசுத்துப் போனதால் இறுதி ஆண்டில் சீனியர்களான நாங்கள் கொஞ்சம் தடுமாறினோம். பாடகர்கள் தேர்வு என் தலையிலும் நிர்வாகம் ராஜகுரு தலையிலும் விழுந்தது.

ஒரு வாரம் முழுதும் மாலை ஐந்து மணிக்குத் தேர்வு நடைபெற்றது. பாட வந்தவர்கள் “நான் எப்படிப் பாடினேன்” என்று கேட்டால் எல்லாரையுமே நல்லாப் பாடினீங்க என்று தான் சொல்வேன். பின்பு மற்றவர்களிடம் கல்ந்தாலோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என்ற நினைப்பில்.

இரண்டு நாட்களுக்குப் பின் ராஜகுரு கோபமாக வந்தான் என்னிடம். “நீ என்ன தான் நினைச்சிட்டிருக்க மனசுல. எவனாவது கேவலமா பாடினாலும் சூப்பரா இருக்கு, அட்டகாசமா இருக்குன்னு சொல்லி ஏத்தி விடுறியாமே?”


”அப்படில்லாம் இல்ல... மூஞ்சியில அடிச்ச மாதிரி எப்டி சொல்றது?”

“அதுக்கு? அந்த ராஜா என்னத்த பாடறான்? அவனைப் போயி நல்லாப் பாடறன்னு சொல்லி விட்டிருக்க. அவன் வந்து விடுற ரவுசு தாங்க முடியல. ’டேய் நீ எல்லாம் பாத்ரூம்ல பாடக்கூட லாயக்கில்ல டா’ ன்னு சொன்னா, ’போடா, நீ என்ன சொல்றது தீபலக்‌ஷ்மியே என்னை அப்படி பாடற, இப்படி பாடறன்னு என்னமா சொல்லுச்சு.. நீ போடா..உனக்குப் பொறாமை’ ன்னு சீன் விடறான். இனிமே நானே செலக்‌ஷன் பாத்துக்கறேன்” என்று சொன்னதும் அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் லடாய் ஆனது.

பின்பு ஒருவாறு சுமுகமாகி அந்த ஆண்டு இசை நிகழ்ச்சிகளையும் வெற்றிகரமாக நடத்தினோம். அனைத்துக் கல்லூரிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு கலக்கினோம்.
ஆனால் வாங்கிய பரிசுகளை விட, அவையின் கைதட்டல்களும், மேடைக்குப் பின் படபடக்கக் காத்திருந்த நிமிடங்களூம், பாடி முடித்து வந்ததும் நண்பர்களின் மனமார்ந்த பாராட்டும், மேலும் தீவிர இசையார்வம் கொண்டவர்களுடன் பகிர்ந்து கொண்ட உரையாடல் அனுபவங்களும் மறக்கமுடியாத இனிய நினைவுகள்.

சேர்ந்திசை என்ற இந்த விஷயத்தினால் சொந்த விருப்பு, பெருமை இவற்றை ஒதுக்கி இசை என்னும் தேனில் நட்பு என்ற சர்க்கரையைக் கலந்து பருகியதால் ஆர்க்கெஸ்ட்ரா அனுபவங்களை என்றென்றும் தித்திக்கின்றன.

(பி.கு. பதிவு கொஞ்சம் நீ....ளம். பொறுத்தருள்க!)

26 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

Indian said...

//பூ மாலையே பாடலில் மாறி மாறி பின்னலாக வரும் சரணத்தைக் கஷ்டப்பட்டுப் பயின்றதும் பாடி முடித்ததும் எனக்கும் நந்தா அண்ணாவுக்கும் கிடைத்த பாராட்டையும் இன்று நினைத்தாலும் சிலிர்க்கிறது.//

My alltime favorite among Raaja's hitsongs.

I think there is one pronunciation mistake by S.Janaki in the song. Otherwise, it is such a lovely song!

Because of the complicated interludes (correctaa?), I always wonder how this song will be performed in stages. Good to know that you guys performed and pulled it through.

சந்தனமுல்லை said...

ஆகா...நீங்க சூப்பர் சிங்கர் போல இருக்கே! இதுலெ ஜட்ஜா வேற இருந்துருக்கீங்க...:-) நல்ல நினைவுகள்..எனக்கு இப்போ எங்க காலேஜ் பாட்டுக்குழுதான் நினைவுக்கு வர்றாங்க!! :-)

ஆயில்யன் said...

புடிச்ச சப்ஜெக்ட் ஆர்கெஸ்ட்ரா!


சூப்பரா நினைவுகளை மீட்டெடுத்து எழுதியிருக்கீங்க :)

அப்ப ஆடியோ பதிவுகளை எதிர்ப்பார்க்களாமோ ? :)

SK said...

என்னங்க இது கோவை நினைவுகள், கோவை கல்லூரி பாடல் நினைவுகள் இப்படி என்னைய ரொம்ப உசுப்பி விடறீங்க :-)

Deepa said...

நன்றி உலவு.காம்!

நன்றி இந்தியன்!
//complicated interludes // சரியாகச் சொல்கிறீர்கள்.

//I think there is one pronunciation mistake by S.Janaki in the song. //
என்ன அது?? அறிய ஆவல்.

நன்றி முல்லை!
பழி வாங்கிட்டீங்களே!
:-)

சந்தனமுல்லை said...

/“டேய்! காலேஜோட எஸ்.பி.பின்னு என்னைத் தாண்டா சொல்றாங்க. ஸோ இந்தப் பாட்டு எனக்குத் தான்.”
“தோடா..அது உன் தொப்பையப் பாத்துச் சொன்னது. ஆனா (காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு) உன்னிகிருஷ்னன் யாருன்னு எல்லாருக்குமே தெரியும்.”/


:-))))//சேர்ந்திசை என்ற இந்த விஷயத்தினால் சொந்த விருப்பு, பெருமை இவற்றை ஒதுக்கி இசை என்னும் தேனில் நட்பு என்ற சர்க்கரையைக் கலந்து பருகியதால் ஆர்க்கெஸ்ட்ரா அனுபவங்களை என்றென்றும் தித்திக்கின்றன.//

அழகா முடிச்சிருக்கீங்க..உண்மைதான்..

Deepa said...

நன்றி ஆயில்யன்!
ஆஹா.. நீங்களும் கிளம்பிட்டீங்களே.

நன்றி SK!

அமிர்தவர்ஷினி அம்மா said...

எழுதறீங்க, மொழிபெயர்க்கறீங்க, பாடவும் வேற செய்வீங்களா

கலக்கறீங்க தீபா !!!!!!!

(ஆஹா இங்கேயும் ஒரு ரவி அண்ணாவா :)

க.பாலாசி said...

//காலேஜோட எஸ்.பி.பின்னு என்னைத் தாண்டா சொல்றாங்க. ஸோ இந்தப் பாட்டு எனக்குத் தான்.”
“தோடா..அது உன் தொப்பையப் பாத்துச் சொன்னது. ஆனா (காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு) உன்னிகிருஷ்னன் யாருன்னு எல்லாருக்குமே தெரியும்.”//

என்னா வில்லத்தனம்...

எல்லாப்பாடல்களுமே அருமையானப் பாடல்கள்...

நீங்களும் சிங்கரா....வாழ்த்துக்கள்...

Deepa said...

நன்றி அமித்து அம்மா!
நன்றி பாலாஜி!

அதெல்லாம் ஒரு காலங்க. இப்போ நான் தொண்டையைத் திறந்தால் நல்ல சகுனம் என்கிறார்கள்.

;-)))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அழகான நினைவுகள் தீபா..

அந்த எஸ்.பி.பியையும் உன்னிகிருஷ்ணனையும் சொன்னது.. எங்க கல்லூரி நினைவுகளை நினைவுபடுத்தியது. கலக்கல் பதிவு.

Unknown said...

//பூ மாலையே பாடலில் மாறி மாறி பின்னலாக வரும் சரணத்தைக் கஷ்டப்பட்டுப் பயின்றதும்//

நாம் மேஸ்ட்ரோவின் பாடல்களை பாமரத்தனமாக ரசிக்கிறோம்.ஆனால் அதன் structure அல்லது டெக்னிகல் அபாரமானது.சாதாரணம் இல்லை.


நீங்கள் சொல்லும் பாடல் western classical Musicஇல் வரும் கவுண்டர் பாயிண்ட்(counter point) டெக்னிக்கல் போடப்பட்டது.இது வாய்ஸ் கவுண்டர் பாயிண்ட்.

கவுண்டர் பாயிண்ட்(counter point) என்றால் ஒரே சமயத்தில் பல டியூன்களை பல இசைக் கருவிகளால் வாசித்து அதே சமயத்தில் இனிமையாக (அசட்டுத்தனமாக இல்லாமல்) அதை ஒருங்கினைத்து இனிமை கொண்டு வருவது.

கவனிக்க...அசட்டுத்தனமாக இல்லாமல் இனிமை கொண்டு வருவது

இதில் ராஜா ஜீனியஸ்.ஒரு Master Blender.He has amazing grip on that front.

உதாரணம் -1:

"தென்றல் வந்து தீண்டும்போது” - அவதாரம்.இதில்prelude(ஆரம்ப இசை) பிறகு சரணம்-2க்கு முன் வரும் interlude(இடையிசை).இசைக் கருவிகளின் காதல் நர்ததனங்களை ஹெட் போனில் கேளுங்கள்.


உதாரணம் - 2:”ஆனந்த ராகம் பாடும்”
பன்னீர் புஷ்பங்கள்.இதில் வயலின்/பு.குழல்/ஷெனாய்,தபலாவின் கவுண்டர் பாயிண்ட்டுகளை கவனிக்கலாம். அதே சமயத்தில் “சிம்மேந்திர மத்யமம்’ கர்நாடக ராகமும் பின்னப்பட்டிருக்கும்.

Indian said...

//என்னங்க இது கோவை நினைவுகள், கோவை கல்லூரி பாடல் நினைவுகள் இப்படி என்னைய ரொம்ப உசுப்பி விடறீங்க :-)//

Is it TechMusic?

Deepa said...

நன்றி செந்தில்வேலன்!

நன்றி ரவிஷங்கர்!

சுவாரசியமான பல டெக்னிகல் தகவல்கள் தந்துள்ளீர்கள்.

//நாம் மேஸ்ட்ரோவின் பாடல்களை பாமரத்தனமாக ரசிக்கிறோம்.ஆனால் அதன் structure அல்லது டெக்னிகல் அபாரமானது.சாதாரணம் இல்லை.//

100/100 உண்மை.
ஆனால் பாமரனும் ரசித்து இன்பமடைய வேண்டும் என்று பாமரனுக்காகவே தான் பெரும்பாலும் அவர் இசையமைத்தார். அதன் சூட்சுமங்கள் நமக்குப் புரியவில்லையே என்று அவர் ஆதங்கப்பட மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. அதனாலேயே ஜீனியஸ் என்பதையும் தாண்டி அவர் ஒரு மாமனிதர்.

Radhakrishnan said...

அழகிய நினைவலைகள்.

இதுபோன்ற ஆர்க்கெஸ்ட்ரா எல்லாம் நான் படித்த கல்லூரியில் இல்லை. அட இப்படியெல்லாம் கல்லூரியில் இருக்குமா என நினைக்க வைத்துவிட்டது.

நல்லதொரு பாடகியாக வலம் வந்து இருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சி.

இசையால் வசமாக இதயம் எது, நட்பினால் உயராத இதயம் எது எனக் கேட்க வைத்துவிட்டது. மிகவும் அருமை.

காமராஜ் said...

கரைந்து போவதை நான் இன்னொரு இடத்திலும் உனர்ந்தது இசையில் தான்.
அது குறித்த இந்த நெடுநேர பிரஸ்தாபம் அலுக்கவில்லை. சிரைச்சாலையின்
செம்பூவே நான் கிறுக்குப்பிடித்து கேட்ட பல படல்களில் ஒன்று.
துள்ளித் துள்ளி பிராவகம் எடுக்கும் அதன் ஆரம்ப இசை முதல்
இறுதி வரை தேன் சுரக்கிற பாடல்.

நல்ல இடுகை.

கடைசியாக ஒன்று. இது எல்லாவற்றுக்குமா ?

\\”அப்படில்லாம் இல்ல... மூஞ்சியில அடிச்ச மாதிரி எப்டி சொல்றது?”\\

நல்ல ரிலாக்ஸ் பதிவு.

SK said...

இந்தியன் அண்ணா, என்னய்யா கேக்குறீங்க?

மணிப்பக்கம் said...

:) Sweet!

மாதவராஜ் said...

கல்லூரி ஆர்க்கெஸ்டிராவில் பாடியிருப்பதை தெரிந்திருக்கிறேன். அதற்குள் இவ்வளவு விஷயங்கள் இருப்பதை இப்போதுதான் அறிந்துகொள்கிறேன். மிக நுட்ப்மான அனுபவங்களைச் சொல்ல முடிகிறது உன்னால். சுவராசியமான பதிவு. பாராட்டுக்களும், கைதட்டல்களுமான அந்த நினைவுகள் வாழ்நாள் எல்லாம் கூட வருபவை. கல்லூரி நினைவுகளே எவ்வளவு இனிமையானவை! அதுவே இசையின் பின்னணியோடு இருந்தால்....! ஆஹா!!!

Indian said...
This comment has been removed by the author.
Indian said...

//இந்தியன் அண்ணா, என்னய்யா கேக்குறீங்க?//

Oops, the question is for Deepa.

Deepa said...

@Indian:
techmusic? இல்லை. அப்படி எந்தப் பெயரும் எங்கள் ஆர்க்கெஸ்ட்ராவுக்கு இருந்ததாக நினைவில்லை.

அபி அப்பா said...

ஆஹா! நான் எழுத நினைச்ச பதிவு! என் காலத்தில் தென்றலே என்னை தொடு படத்தில் வரும் "தென்றல் வந்து என்னை தொடும்" பாட்டுக்கு நான் நெம்ப பேமஸ்! தவிர மிருதங்கம் வாசிப்பேன் ஆர்கெஸ்ட்ராவிலே! ராதா அருமைய்யா கர்னாட்டிக் பாடுவான்!

நாஞ்சில் நாதம் said...

:))