Wednesday, September 2, 2009

ரொம்ப நாளைய ஏக்கம்

வெகு நாட்களாக எதுவும் படிக்கவில்லையே என்ற ஏக்கம் தீர இந்த வாரம் இரண்டு நாவல்கள் படித்து முடித்தேன்.
ஒன்று Jane Austen எழுதிய Pride and Prejudice என்ற பழைய ஆங்கில நாவலின் மறு மறு மறு வாசிப்பு. 19 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தின் மேல்தட்டு மக்களையும் குறிப்பாக இளம்பெண்களையும் அவர்களது அக வாழ்வையும் பற்றியே எழுதிய இவரது எழுத்துக்கள் ரமணிசந்திரனின் நாவல்களைத் தான் நினைவூட்டும். ஆனாலும் அழகான மொழியும் ரசமான நடையும் சுகமான வாசிப்பனுபவம் தரக்கூடியவை. Just light and luxury reading!

இன்னொரு நாவல் – இல்லை அது நாவல் இல்லை, சுயசரிதை. அதிகமாக பரபரப்புடன் பேசப்பட்ட கமலாதாஸ் அவர்களின் என் கதை.

மேலே படிக்கும் முன் ஒன்றைத் தெளிவு படுத்திவிடுகிறேன். இது அவரது நூலின் விமர்சனம் அல்ல. படிக்கும் போதும் படித்து முடித்த பின்னும் என் மனதின் உணர்வுகளைப் பதிக்கிறேன். அவ்வளவே.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனதை உருக்கும் சோகக் காவியம் என்று நினைத்துக் கொண்டு படிக்கத் தொட்ங்கினேன். ஆனால் பக்கத்துக்குப் பக்கம் சுவாரசியங்களும் ஆச்சரியங்களும் அதிர்ச்சகளும் தந்திருக்கிறார் நூலாசிரியர்.

பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் செல்வச் செழிப்பு மிகுந்த நாயர் குடும்பத்தில் பிறந்த கமலா தாஸ் கல்கத்தாவில் கழித்த தனது சிறு வயது அனுபவங்களுடன் தொடங்குகிறார்.
பிரிட்டிஷ் குழந்தைகள் படிக்கும் பணக்கார ஆங்கிலப்பள்ளி ஒன்றில் படித்த போது அனுபவித்த இனவேறுபாடுகள், ஆங்கிலேய முறையில் அங்கு சில காலம் வாழ்ந்த வாழ்க்கை, பின்பு மலபாரில் நலாபட் வீட்டில் வாழ்ந்த காலத்தை விவரிக்கும் போது அந்த வீட்டின் பிரம்மாண்டம், தோட்டங்களின் அழகு, வீட்டில் தன் அண்ணனுடன் சேர்ந்து நடத்தி நடித்த மேடை நாடகங்கள், பெரும் பண்டிதரான அவரது தாத்தா, பாட்டிகள், அத்தைகள் பற்றிய வர்ணனைகள் என்று கேரளத்துக் கிராம வாழ்க்கையைக் கண் முன் நிறுத்தும் அவரது சிறு வயது நினைவுகள் மிகவும் சுவாரசியமாக இருக்கின்றன.

பின்பு இளம் பதின்ம பருவத்தில் அவர் செல்லும் கன்னியாஸ்திரிகளின் பள்ளியை நினைவு கூர்கிறார்.
அங்கிருந்து எழுதப்படும் கடிதங்கள் அனைத்தும் கன்னியாஸ்திரிகளால் எடிட் செய்யப்படும் என்பதால் வழக்கமாக சரளமாகவும் நகைச்சுவையாகவும் எழுதும் கமலா ஒழுங்குப் பிள்ளை போல கடிதம் எழுதியதை அவரது அண்ணன் கேலி செய்ததைப் படிக்கும் போது நம்மால் அந்தச் சிறுமியின் நேர்ந்த சிறு அவமானத்தை உணர முடிகிறது.

பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் கவிதைகள் புனையும் அளவுக்குத் திறமை சாலியாக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது. கேரள மண்ணுக்கே உரிய அழகும் வனப்பும் இருந்தாலும் மாநிறத்தவர் என்பதால் குடும்பத்தாரிடமே இருந்து கூட விதைக்கப் பட்ட தாழ்மை உணர்ச்சியும் வெகுவாகப் பாதித்ததாகக் குறிப்பிடுகிறார்.

அவர் வாழ்ந்த காலம், அவரது மேல் தட்டு வர்க்கம், (நடுத்தர வர்க்கம் என்று அவர் சொல்லிக் கொண்டாலும்) மொழி, ஊர், என்று எதையுமே நெருங்கித் தொடர்பு படுத்திப் பார்க்க முடியாததால் ஒரு வித அந்நியத் தன்மை ஏற்பட்டாலும் பெண்மை உணர்வுகளைச் சொல்லும் விதத்தில் நாம் அறியாமலே சில இடங்களில் உள்ளத்தைத் தொடுகிறார்.

மேலும் கணவனின் முழு அன்பு தனக்கு எப்போதுமே கிடைக்கவில்லை என்று ஏங்கியதாகச் சொன்னாலும் சில சமயங்களில் இவரது கணவர் இவரை ஒரு குழந்தை போல் பார்த்துக் கொண்டதையும் ஆதுரத்துடன் இவரைப் புரிந்து கொண்டு பாதுகாப்பாக இருந்ததையும் சொல்கிறார்.

அதிகம் யோசிக்கும் பெண்ணுக்கு இச்சமூக வாழ்க்கையில் திருப்தி ஏற்படாது என்று தனது வாழ்க்கையிலிருந்தே இவர் சொல்லும் பாடத்தை மட்டுமே முழுமனதுடன் ஏற்க முடிகிறது.

கூர்மையான அறிவும், பெற்றோர்களின் தலையீடு பெரிதாகப் பாதிக்காமல் இள வயதில் கிடைத்த பரந்து பட்ட சுதந்திர அனுபவமும், வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் தாகமும் கூடிய பெண் ஒருத்தி பதினைந்து வயதில் ஏற்பட்ட பொருந்தாத திருமண வாழ்க்கையால் மனமும் உடலும் அலைக்கழிக்கப் படுவதை உண்மையுடன் அலாதியாகச் சொல்லி இருக்கிறார்.

வாசகர்களுக்குத் தன் மீது இரக்கம் ஏற்படவேண்டுமென்ற நோக்கமோ, தனது பொறுப்பற்ற பல செய்கைகளுக்குப் நியாயம் கற்பிக்கும் எண்ணமோ கமலா தாஸுக்குச் சிறிதும் இல்லை. அதனால் எனக்கும் அவர் மீது இரக்கமோ நியாயமோ தோன்றவில்லை.

அவரே சொல்லி இருப்பது போல் அவருடைய முழுப் பலமான உண்மை கதையில் தொனிக்கிறது. முற்பாகத்தில் சில இடங்களில் வெளிப்படும் மழுப்பல்கள் கூட இறுதியில் அவராலேயே விளக்கம் கொடுத்து விடப்படுவதால் மதிப்பில் உயர்ந்து தான் நிற்கிறார்.

இதை முதலில் படிக்கும் போது ஏற்படும் உணர்வுகளுக்கும் மறு வாசிப்பு செய்யும் போதோ இல்லை சில ஆண்டுகள் கழித்து இதை வாசிக்கும் போதோ ஏற்படும் உணர்வுகளுக்கும் வேறுபாடுகள் வர நிறைய வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. அதுவே ஒரு சிறந்த சுயசரிதை நூலின் வெற்றி என்று கருதுகிறேன். ஒருவரை நன்கு புரிந்து கொள்ள காலமும் ஒரு முக்கிய காரணம் அல்லவா?

My Story
Autobiography
by Kamala Das
Rs. 100

D C Books, Kottayam 686 001

Website: http://www.dcbooks.com/
Online shopping: http://www.dcbookshop.net/
e-mail: info@dcbooks.com

Labels: , ,

17 Comments:

At September 2, 2009 at 3:19 AM , Blogger நாஞ்சில் நாதம் said...

:))

 
At September 2, 2009 at 3:22 AM , Blogger Deepa said...

வருகைக்கும் சிரிப்புக்கும் நன்றி நாஞ்சில் நாதம்!

 
At September 2, 2009 at 3:30 AM , Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒருவரை நன்கு புரிந்து கொள்ள காலமும் ஒரு முக்கிய காரணம் அல்லவா?

மிக மிக மிகச் சரி.

உங்கள் நடையில் ஒரு தேர்ந்த விமர்சனம்.

இது போன்ற பதிவுகளைத் தொடருங்கள் தீபா

 
At September 2, 2009 at 3:43 AM , Blogger Deepa said...

நன்றி அமித்து அம்மா!
:-)

 
At September 2, 2009 at 3:44 AM , Blogger கவிக்கிழவன் said...

இது போன்ற பதிவுகளைத் தொடருங்கள்

 
At September 2, 2009 at 3:51 AM , Blogger சந்தனமுல்லை said...

தங்கள் உணர்வுகளை நல்லா சொல்லியிருக்கீங்க...புரிஞ்சுக்க முடியுது...நானும் வாசிக்கனும்னு ஒரு ஆவலை ஏற்படுத்துது! நன்றி!!

//அதிகம் யோசிக்கும் பெண்ணுக்கு இச்சமூக வாழ்க்கையில் திருப்தி ஏற்படாது என்று தனது வாழ்க்கையிலிருந்தே இவர் சொல்லும் பாடத்தை மட்டுமே முழுமனதுடன் ஏற்க முடிகிறது.//

எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க!! :-) சூப்பர்!

 
At September 2, 2009 at 4:00 AM , Blogger Vidhoosh/விதூஷ் said...

ஒரு அருமையான புத்தக விமர்சனம். நீண்ட நாள் கழித்துப் படிக்கிறேன்.
:) ரொம்ப அருமைங்க.

--வித்யா

 
At September 2, 2009 at 4:38 AM , Blogger யுவன் பிரபாகரன் said...

தொடருங்கள்

 
At September 2, 2009 at 4:43 AM , Blogger "அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...

தீபா,
கமலாதாஸ் எழுதிய ‘என் கதை‘ நல்ல பகிர்வு. ஒளிவு மறைவற்ற திறந்த புத்தகமாக வாழ்ந்தவர். அவரது வெளிப்படையான வாழ்வே பலராலும் விமர்சனத்துக்குள்ளாக காரணமாயிருந்தது.
Jane Austen எழுதிய Pride and Prejudice அருமையான புத்தகம்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

 
At September 2, 2009 at 4:49 AM , Blogger Kalyani Suresh said...

இதை முதலில் படிக்கும் போது ஏற்படும் உணர்வுகளுக்கும் மறு வாசிப்பு செய்யும் போதோ இல்லை சில ஆண்டுகள் கழித்து இதை வாசிக்கும் போதோ ஏற்படும் உணர்வுகளுக்கும் வேறுபாடுகள் வர நிறைய வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. அதுவே ஒரு சிறந்த சுயசரிதை நூலின் வெற்றி என்று கருதுகிறேன். ஒருவரை நன்கு புரிந்து கொள்ள காலமும் ஒரு முக்கிய காரணம் அல்லவா?

100 சதம் சரியே. இந்த புத்தகத்தை நானும் வாசிக்க வேண்டும் என்ற ஏக்கத்தை உண்டு பண்ணிவிட்டீர்கள். நன்றி.

 
At September 2, 2009 at 4:54 AM , Blogger Deepa said...

நன்றி கவிக்கிழவன்!
நிச்சயம் முயல்கிறேன்.

நன்றி முல்லை!
படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

மிக்க நன்றி விதூஷ்!

நன்றி யுவன்பிரபாகர்!
முயல்கிறேன்.

நன்றி அகநாழிகை!
உண்மை தான்.

 
At September 2, 2009 at 6:18 AM , Blogger செல்வேந்திரன் said...

நல்ல பகிர்வு!

 
At September 2, 2009 at 8:54 AM , Blogger மாதவராஜ் said...

அந்தப்புத்தகம் குறித்த இப்போதைய உனது பார்வைகளை மிகத் தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்லியிருக்கிறாய். கடைசி வரி மிகத் தெளிவு மட்டுமல்ல, கமலாதாஸ் ஒரு புதிர் என்பதையும் சொல்லாமல் சொல்கிறது. உன்னைப்பற்றிய மதிப்பீடாகவும்கூட இருக்கிறது. தொடர்ந்து வாசி. எழுது. வாழ்த்துக்கள்.

 
At September 2, 2009 at 9:45 AM , Blogger காமராஜ் said...

மலாதாஸ் எனப்பெயரிட்டாலே போதும் என்னை அந்த பெயர் இழுக்கிறது.
தீபாவின் மொழியில் இன்னும் கூடுதல் ஈர்ப்பு பெறுகிறது. மாது வீட்டில்
விடுதலையின் நிறம் எனும் நாவல் இருக்கிறது முடிந்தால், இல்லை, கட்டாயம்
படிக்கவேண்டும். நல்ல பகிர்வு தீபா.

 
At September 2, 2009 at 9:47 AM , Blogger Deepa said...

கல்யாணி சுரேஷ்!

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நன்றி செல்வேந்திரன்!

நன்றி அங்கிள்!

 
At September 2, 2009 at 9:48 AM , Blogger Deepa said...

நன்றி காமராஜ் அங்கிள்!

 
At March 14, 2010 at 12:33 PM , Blogger Hakuna said...

\\அதிகம் யோசிக்கும் பெண்ணுக்கு இச்சமூக வாழ்க்கையில் திருப்தி ஏற்படாது\\
ஆணுக்கும்தானோ என்று சந்தேகம் தோன்றுகிறது தோழர்!!

My story தமிழில் வந்திருக்கிறதா? வருமா? வாசிக்க வேண்டும்போலிருக்கிறது (தமிழிலில் மட்டுமே)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home