சிறுவயதில் என் வருங்காலக் கனவு ஆசிரியை ஆவது தான்.
என் குடும்பத்தில் நிறைய ஆசிரியர்கள் உண்டு.
என் அம்மா, அக்கா, மாமனார், நாத்தனார் எல்லோருமே அந்த தொழிலை விரும்பி பக்தியோடு ஆற்றும் ஆசிரியர்கள் என்பதில் பெருமையடைகிறேன்.
முல்லை இன்று எழுதிய பதிவைப் பார்த்ததும் நானும் என் பள்ளி ஆசிரியைகளின் நினைவுகளில் மூழ்கி விட்டேன்.
கல்லூரியில் வகுப்புகளில் ரொம்பக் கவனம் செலுத்தியதாக நினைவும் இல்லை, சுகி சார் (ரிட்டையராகி விட்டார்) தவிர எந்த புரஃபஸரும் ரொம்ப ஈர்த்ததும் இல்லை.
ஆனால் நான் எல்.கே.ஜி முதல் பத்தாவது வரை படித்த அந்தச் சிறு பள்ளியில் தரமான கல்வியும் ஒழுக்கமும் அமைய தன்னலமற்ற அதன் ஆசிரியைகளே முக்கியக் காரணம்.
ஜெயா மிஸ், ஜான்சிராணி மிஸ், லில்லி மிஸ், சரஸ்வதி மிஸ், ஒரே ஒரு வருடம் ஆங்கிலமும் சமூக அறிவியலும் எடுத்தாலும் மனதை விட்டு நீங்காத ரமோலா மிஸ், கொள்ளை அழகுக்கு மட்டுமல்லாமல் கண்டிப்புக்கும் பெயர் போன ஆஷா மிஸ்,
எல்.கே.ஜி யில் அன்புடன் அரவணைத்த விஜயலக்ஷ்மி மிஸ், இவர்களை எல்லாம் இந்த நன்னாளில் நினைத்துப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதில் ஜெயா மிஸ்ஸுக்கு எப்போதும் மனதில் ஒரு தனி இடம் உண்டு.
இரண்டாம் வகுப்பில் ஸயன்ஸ் டீச்சராக வந்தவர் ஆறாவது முதல் பயாலஜி எடுத்தார். நான்காம் வகுப்பில் மட்டும் எங்கள் வகுப்புக்கு ஆங்கிலம் எடுத்தார்.
அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது அத்தனை ஆண்டுகளிலும் அவர் எந்த ஒரு மாணவருக்கும் பாரபட்சம் காட்டியதே இல்லை.
வகுப்பில் பாடத்தைத் தவிர சொந்தக் கதை, சோகக் கதை என்று வெற்று அரட்டை அடிக்கவே மாட்டார். ஆனாலும் அவரது வகுப்பு அவ்வளவு சுவாரசியமாக இருக்கும்.
நகைச்சுவையாக அவர் மனதில் பதிய வைத்த அறிவியில் அடிப்படைகள் இன்றும் அவரைப் பல்வேறு சமயங்களில் நினைவு கூர வைக்கின்றன.
உதாரணத்துக்கு ஒன்றே ஒன்று - உயிரினங்களுக்கு இருக்கும் ஸைண்டிஃபிக் பெயர்கள் (செம்பருத்திக்கு Hibiscus rosa sinensis இப்படி) குறித்துப் பாடமெடுக்கும் போது அன்று வகுப்பை இப்படித் தான் தொடங்கினார்.
“உங்கள் வீட்டில் அப்பளம் பொரிக்க என்ன பாத்திரம் பயன்படுத்துவார்கள்?” என்று கேட்பார்.
ஒரு பிள்ளை எழுந்து “கடாய் மிஸ்” என்று சொல்லும்; இன்னொன்று “வாணால் மிஸ்”. இன்னொன்று “இலுப்பைச்சட்டி” என்று சொல்லும்.
”பார்த்தீர்களா, ஒரே வகுப்பில் படிக்கும் நீங்களே ஒரு பாத்திரத்துக்கு இவ்வளவு பெயர்கள் வைத்திருக்கிறீர்கள். உலகெங்கும் அறிவியலாளர்கள் ஒரு செடியையோ மிருகத்தையோ குறிப்பிட அவரவர் மொழியைப் பயன்படுத்தினால் என்ன ஆவது. அதனால் அறிவியல் பெயர்கள் அறிமுகப் படுத்தப்பட்டன” என்று கூறுவார்.
பாருங்கள், இன்று வரை என் மனதில் பதிந்திருக்கிறது. அவரது பாடத்தில் தோல்வியடையும் மாணவர்கள் வெகு குறைவு. மேலும் படங்கள் வரைந்து எந்த விஷயத்தையும் அழகாக விளக்குவார்.
இன்னொரு முக்கியமான விஷயம், நான் பார்த்து அவர் மட்டும் தான் எல்லா ஆசிரியைகளோடும் நல்ல நட்பு வைத்திருந்தார். யாரைப் பற்றியும் புறம் பேசியும் நான் பார்த்ததில்லை.
அவரது பாடம் அறிவியல் என்றாலும் ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு ஆண்டு ஆங்கிலம் எடுக்க நேர்ந்த போது அதையும் அவரது பாணியில் எங்கள் விருப்பப் பாடம் ஆக்கினார். வகுப்புக்கு வெளியில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது கூட ஆங்கில உச்சரிப்பைச் சரி படுத்தியது நினைவுக்கு வருகிறது.
அவரிடம் எனக்கு ஒரே விஷய்ம் பயம். தேர்வு எழுதும் சமயம் தண்ணீர் கேட்டால் அவருக்குப் பிடிக்கவே பிடிக்காது. ”இரண்டு மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாதா. எழுத வரும் முன் குடித்து விட்டு வர வேண்டியது தானே” என்று திட்டுவார். அதனால் அவர் கண்காணிப்பாளராக இருந்தால் கேட்கவே மாட்டோம்.
இன்னொரு முக்கியமான விஷயம். ஐந்தாவது படிக்கும் போது நானும் என் தோழியும் அவரிடம் சென்று குழந்தை பிறப்பு பற்றி கேட்ட போது எங்களைத் திட்டித் தீர்க்காமல், அவமானப் படுத்தாமல், அலட்சியமும் படுத்தாமல், அந்த வயதுக்கு எவ்வளவு சொல்லலாமோ அதை அழகாக உண்மையாகச் சொல்லிப் புரியவைத்ததை இப்போது நினைக்கும் போதும் அவருக்குச் ஸல்யூட் வைக்கத் தோன்றுகிறது.
எங்கள் பள்ளியிலேயே தலைமை ஆசிரியையாகச் சிலகாலம் பணி புரிந்து பின்பு ஒய்வு பெற்றார் என அறிந்தேன்.
ஜெயா மிஸ் அவர்களுக்கும் தன்னலமற்ற கல்விச்சேவை புரியும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
பி.கு: கல்லூரியில் பல நல்ல புரஃபஸர்கள் இருந்தார்கள். நான் தான் சரியாக அவர்கள் பாடத்தைக் கவனிக்கவில்லை. நரசிம்மன் ஸார், இராஜகோபாலன் ஸார், மீனாம்பாள் மேம், அருமைராஜ் ஸார் இவர்களையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
வயசாகிக் கொண்டு வருகிறதா? அது தான் மறதி! :-)
15 comments:
அருமையாக எழுதி உங்கள் பள்ளி ஆசிரியர்களை நன்றியுடன் நினைத்துவிட்டீர்கள். குறிப்பாக ஜெயா டீச்சரை.
ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
வாவ்...தீபா..நல்ல நினைவுச்சரம்! மிக அழகாக எல்லா ஆசிரியர்களையும் நினைவுக் கூர்ந்தீர்கள்!! எனக்கும் என் பள்ளி ஆசிரியர்களின் நினைவுகளைக் கிளறி விட்டது இந்த இடுகை!
அப்புறம், அப்பளச்சட்டி - சூப்பர்...இதே மாதிரி எனது அறிவியல் ஆசிரியர் குழி லென்ஸ், குவி லென்ஸ் குழப்பத்திற்கு ஒன்றுச் சொல்லிக் கொடுத்தார்.
“கிட்டப்பா குழியில் விழுந்தான்” - கிட்டப்பார்வைக்கு குழி லென்ஸ் என்பதற்கு க்ளு!! இது அவரது ஆசிரியர் அவருக்குச் சொல்லிக் கொடுத்ததாம்! :-)
எல்லா ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!! :-)
/சிறுவயதில் என் வருங்காலக் கனவு ஆசிரியை ஆவது தான்./
இந்த எண்ணத்திற்காகவே உங்களுக்கு வந்தனங்கள்!! இப்படி சொல்லிக் கேட்ட வெகுசிலரில் நீங்களும் ஒருவர்!! என் குடும்பத்தில் நான் பார்த்த அனைவருமே ஆசிரியர்கள் - அதனாலேயே, நானும் இதற்கு போகக் கூடாது என்று ஆழமான எண்ணம் இருந்தது!! :-) மக்கள் தப்பிச்சிட்டாங்க!!
நன்றி மஞ்சூர் ராஜா!
நன்றி முல்லை!
”கிட்டப்பா குழி” - நல்ல சூட்சுமம்!
//மக்கள் தப்பிச்சிட்டாங்க!!//
நாங்க மாட்டிக்கிட்டோமே? :-)))
நம் ஆசிரியர்களை நினைத்துப் பார்ப்பது என்றுமே மகிழ்ச்சி தருவது தான். நல்ல பதிவு தீபா.
ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
உண்மைதான்
இப்பதான், ஆசிரியை கனவில் பி.எட் சேர்ந்த எனக்கு, உங்கள் பதிவு ரொம்ப அழகாக தெரிகிறது. என் மலரும் நினைவுகளையும் கிளறி விட்டீர்கள்.
மிகவும் அழகாக ஆசிரியர்களை நினைவுகூர்ந்தமைக்கு எனது வணக்கங்கள். மிக்க நன்றி தீபா அவர்களே.
பள்ளிக்குச் செல்வது விசயங்களை விளக்கிக் கொள்வதற்குத்தான்! மிகவும் அருமையான ஆசிரியர்கள் கிடைக்கப் பெற்று இருக்கிறீர்கள்.
ஆசிரியையாக மாறவில்லையா?!
உள்ளத்தில் ஒளியுண்டென்றால் வார்த்தையில் ஒளியுண்டாம்.
அப்பளச்சட்டி வருடங்கள் கடந்தும் கூடவரும் விந்தை
அன்பினாற் பட்டது. அழகு.
எங்கள் பதிவுகளுக்கும் அடையாள
அட்டையோடுதான் வரவேண்டுமா?.
இது கொஞ்சம் ஓவர், தீபா.
அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
தரமான படைப்பாக உள்ளது பாராட்டுகள்
தலைப்பு வித்தியாசமாக இருந்தது. படிக்கும்போது அதன் அர்த்தங்கள் அழகாக இருந்தன. நல்ல பதிவு.
//கல்லூரியில் பல நல்ல புரஃபஸர்கள் இருந்தார்கள். நான் தான் சரியாக அவர்கள் பாடத்தைக் கவனிக்கவில்லை.//
ஆச்சரியமாக இருந்தது!
தலைப்பு சூப்பர்.. :) விசயமும் நல்லா சொல்லி இருக்கீங்க..
ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
அழகான தலைப்பு, அருமையான நினைவுகள்
ஹைய்யோ நானும் ஒரு தொடர்பதிவு எழுதிடுவேன் போல இருக்கே :))))))))
நன்றி செந்தில்வேலன்!
நீங்களும் நம்பர் போட்டுக்கிட்டீங்களா. குட்!
நன்றி கவிக்கிழவன்!
நன்றி சுமஜ்லா!
சிறந்த ஆசிரியையாக வலம் வர வாழ்த்துக்கள்.
நன்றி இராதாகிருஷ்ணன்!
இல்லை. அதற்கான பயிற்சியைப் பயிலவில்லை.
காமராஜ் அங்கிள்!
ரொம்ப நன்றி! அடையாள அட்டை பற்றி உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டிருக்கிறேன். என்ன செய்வது; கொஞ்ச நாளைக்கு இருக்கட்டும்.
மிக்க நன்றி தியாவின் பேனா!
நன்றி அங்கிள்!
//ஆச்சரியமாக இருந்தது// ஏனோ?
:-)
நன்றி முத்துலெட்சுமி!
:-)
நன்றி நாஞ்சில் நாதம்!
உங்கள் சிரிப்பான் எங்கே? மறந்து விட்டீர்களா?
நன்றி அமித்து அம்மா!
ஆஹா, எழுதுங்களேன்!
Post a Comment