Friday, August 14, 2009

பாரதியின் நினைவோடு...

பாரதியை நினைக்காமல் ஒரு சுதந்திர தினமும் விடிவதில்லை. ஆடுவோமோ பள்ளு பாடுவோமே என்ற பாடலைப் பள்ளியில் பாடி ஆடிய காலத்திலும் அதற்கு முன் வீட்டில் சொல்லிக் கொடுத்த போதும் கேட்ட கேள்வி: சுதந்திரம் பிறந்த போது பாரதியார் உயிரோடு இல்லையே? பின்பு எப்படி சுதந்திரம் பிறந்ததற்காக மகிழந்து இப்பாடலை எழுதினார் என்று.

பாரதியார் ஒரு அசாத்திய தீர்க்கதரிசி என்று காலத்தைத் தாண்டி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆனால் அவருக்குத் தான் எத்தகைய பேராசை?
உண்மை தான், அந்தக் காலத்தைக் காட்டிலும் பலவிதமாக நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்றாலும் இத்தனை ஆண்டுகளில் அடிப்படை பிரச்னைகள் நம் நாட்டில் இன்னும் தீர்வு காணப்படாத நிலை ஏன்? வெட்கக்கேடான பல விஷயங்கள் நாட்டில் ஊடுருவி இருப்பது ஏன்?

ஒன்றும் வேண்டாம், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று பாடினானே அந்தப் பித்தன், உழவர்களுக்குச் சாவு மணி அடித்து விட்டுத் தொழிலைப் பரங்கியருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கிறோமே ஏன்?

இப்பாடலை ஒரு இந்தியனாவது வெட்கமில்லாமல், உண்மையான உள்ளத்துடன், கண்கள் கலங்காமல், சிறிது கசப்பு கூடத் தோன்றாமல் பாட முடியுமானால் அன்று தான் நாம் பரிபூரண சுதந்திரம் அடைந்தோம் என்று கொள்ள் முடியும் என்று தோன்றுகிறது.

ஆடுவோமே – பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே – பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே – நம்மை
ஏய்ப்போருக் கேவல் செய்யும் காலமும் போச்சே

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு;
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத்
தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே – பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே – இனி
நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே – கெட்ட
நயவஞ்சகக் காரருக்கும் நாசம் வந்ததே

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம் – வெறும்
வீணருக்கு உழைத்துடல் ஓயமாட்டோம்

நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் – பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்.


ஆனால் பாரதியை நாம் மொத்தமாக ஏமாற்றி விடவில்லை. இப்படியும் நடக்குமோ என்று இன்னொரு ஐயம் எழுந்துள்ளது அந்த அறிவுச்சுடருக்கு. கீழ்வரும் பாடல் நமக்கு எவ்வளவு தூரம் பொருத்தமாக இருக்கிறது என்று நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். ஒவ்வொரு சுதந்திர தினத்துக்கும் கொடியேற்றிக் கொண்டாடுவதோடு இப்பாடலின் கருத்தை அரசியலாரும் ஒவ்வொரு குடிமகனும் நினைவிற் கொள்ள வேண்டும்.
ஆசை தான்! இல்லையா?


வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுதுண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ

விண்ணிலரவிதனை விட்டுவிட் டெவரும் போய்
மின்மினி கொள்வாரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பாரோ?

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற்
கைகொட்டிச் சிரியாரோ?

வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ?

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

12 comments:

மாதவராஜ் said...

அருமை தீபா! பாரதியின் கவிதகளுக்குள்ளேயே ஒரு உரையாடலை நடத்தி பளாரென உண்மையை சொல்லியிருக்கிறாய். தெளிவான பார்வை.
//இப்பாடலை ஒரு இந்தியனாவது வெட்கமில்லாமல், உண்மையான உள்ளத்துடன், கண்கள் கலங்காமல், சிறிது கசப்பு கூடத் தோன்றாமல் பாட முடியுமானால் அன்று தான் நாம் பரிபூரண சுதந்திரம் அடைந்தோம் என்று கொள்ள் முடியும் என்று தோன்றுகிறது.//
ரொம்பச்சரி.
சுதந்திரதின வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

//பாரதியார் ஒரு அசாத்திய தீர்க்கதரிசி என்று காலத்தைத் தாண்டி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.//

அடையாத போதே அடைந்தோம் என கனவு கண்டவன்...
அடைந்தபின் எப்படி அதை போட்டுடைப்போம் என்பதையும் உணர்ந்த தீர்க்கதரிசிதான்..

அவசியமான பதிவு

சந்தனமுல்லை said...

நல்லதொரு இடுகை தீபா! யோசிக்க வைக்கும் பகிர்வு!!

காமராஜ் said...

//நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் – இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் – //

இப்படிச் சின்னச் சின்ன வார்த்தைகளைக்
கூட பெரும் சிந்தனைப் பொக்கிஷமாக்கியவன் பாரதி.
வெறும் விடுதலை என்றில்லாமல் அதற்கப்பாலான நடைமுறைக்
கனவுகளையும் கவிதையாக்கியவன். அவன் நினைவுகளோடு
வந்த இந்த பதிவு அருமை.

கவிக்கிழவன் said...

சுதந்திரதின வாழ்த்துக்கள்! Yathavan From Sri Lanka

Deepa said...

அன்புடன் வந்து கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி; வாழ்த்துக்கள்.

தேவன் மாயம் said...

தீபா
உங்கள்
உணர்வுகள் அருமை!!

தமிழ்நதி said...

பாரதியைப் பற்றி இப்போது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கிறார்கள். நறுக்குத் தெறித்தாற்போன்ற வார்த்தைகள், பொட்டிலடித்தாற்போன்ற கேள்விகள், சந்தமும் உண்மையும் கொஞ்சமும் பிழைக்காத பிரயோகங்கள்… பாரதி எப்போதும் பிரமிப்பூட்டுபவரே!

ஜெனோவா said...

Konjam late than..

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

jenova

selventhiran said...

ஒரு முறை ஜேகே சொன்னார் "இளவயதில் ஒருவனை பாரதி எனும் பேய் பிடித்து விட வேண்டும். அது அவனை தட்டி, நிமிர்த்தி முழுமையானவனாக்கி விடும்". வார்தைகளை அப்படியே சொல்லத் தெரியவில்லை. ஆனால், இப்படித்தான் சொன்னார். இப்போது உங்கள் முறை...

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாரதி - தீ

அருமையான இடுகை தீபா.

Radhakrishnan said...

மிகவும் சிந்திக்க வைக்கும் அழகிய இடுகை. மிக்க நன்றி தீபா.