Wednesday, August 19, 2009

சின்னச் சின்னக் கையாலே!

என் சிறு வயதில் வீட்டில் அம்மாவைத் தவிர என்னைக் கவனித்துக் கொள்ள என் அக்கா, அப்புறம் ஒரு மாமியும் இருந்தார்கள். இதனால் வெகு காலம் வரையில் ஒரு வேலையும் செய்யத் தெரியாமல் தான் இருந்தேன்.

எப்படி என்றால் பத்தாவது படிக்கும் வரையில் என் ஷூக்களுக்குப் பாலிஷ் கூடப் போட்டதில்லை. விட மாட்டார்கள். பிறகு திடீரென்று புத்தி வந்து கொஞ்சம் எதிர்க்க ஆரம்பித்து என் வேலைகளை நானே செய்து கொள்ளப் பழகினேன்.

ஆனால் என் அக்காவுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். பல வகையில் என்னைக் கொஞ்சிக் கெடுத்ததாகச் சொல்லப் பட்டாலும் பல விஷயங்களில் என் மண்டையில் தட்டிச் சொல்லிக் கொடுத்தவரும் அவர் தான்.

விடுமுறை நாட்களில் காலையிலேயே ஏதாவது கதைப் புத்தகமும் கையுமாக உட்காரும் என்னை “இந்த ரூமைச் சுத்திப் பாரு. இதைக் கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டு அப்புறம் அந்தச் சந்தோஷத்தோட இந்தப் புக்கைக் கையிலெடுக்கக் கூடாதா? வேலை செஞ்சோம்ற அந்தத் திருப்தியோட ஜாலியா படிக்கலாம்ல?” – இப்படி வீட்டு வேலை செய்வதில் ஆர்வமேற்படுத்தும் வகையில் அக்கா சொன்ன வார்த்தைகளை மறக்கவே முடியாது.


மேலும் அழகாக உடுத்திக் கொண்டு தேவதை போல் வெளியில் கிளம்பும் அதே அக்கா தான் வீட்டில் புடவையை
இழுத்துச் செருகிக் கொண்டு பம்பரமாக வேலை பார்ப்பாள்; தோட்டம் முழுதும் பெருக்குவது, சாக்கடை அடைத்துக் கொண்டால் தயங்காமல் சென்று குத்தி விடுவது உட்பட.

பின்பு அக்காவுக்குத் திருமணமாகிச் சென்றதும் தான் அம்மாவும் என்னிடம் சிறு சிறு வேலைகளைத் தயங்காமல் வாங்கித் தட்டிக் கொடுத்துப் பாராட்டவும் செய்யத் தொடங்கினார். வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு உரிப்பது, மிக்ஸி போட்டுத் தருவது, தேங்காய் துருவுவது, என்று விடுமுறை நாட்களில் ஏதாவது செய்யச் சொல்வார். அன்றைய சமையலில் என்னுடைய சிறு பங்கும் இருந்தது என்பது அந்தச் சிறு வயதில் மிகவும் பெருமையாக இருக்கும்.

இப்படியாக வீட்டு வேலைகளில் ஒருவாறாக ஆர்வம் வந்தது.
(தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்த காலத்தில்) இருபது குடங்கள் தண்ணீர் தூக்கி வந்து வீடெங்கும் நிரப்பி விட்டு உட்காரும் போது கிடைக்கும் நிம்மதிக்கும், வீடு முழுதும் சுத்தப்படுத்தி விட்டு நிமிரும் போது கிடைக்கும் திருப்திக்கும் ஈடாக எதையுமே சொல்ல முடியாது.

பல வீடுகளில் குழந்தைகள் படிக்கிறார்கள் என்று அம்மா அப்பாவே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து விட்டுப் பின்பு கொஞ்சம் வயதானவுடன் முடியாத போது, “ஒரு வேலை சொன்னா செய்ய மாட்டேங்குதுங்க...பெத்தவங்க கஷ்டம் தெரியாம இப்படி இருக்குதுங்களே” என்று புலம்புவதைக் கண்கூடாகக் காணலாம். ஐந்தில் வளையாதது பதினைந்தில் கூட வளைவது கடினம் தான்!

அதனால் நமது குழந்தைகளுக்கு நாம் கண்டிப்பாகச் சிறு வயதிலேயே வீட்டு வேலைகளில் பங்கெடுக்க ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் அவரவர் வேலைகளாவது.

இதில் முக்கியமான விஷயம், ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி எல்லா வேலைகளையும் பழக்கப் படுத்த வேண்டும்.

எங்கே, பெரும்பாலான வீடுகளில் நாமே அதைச் செய்வதில்லை. எல்லா விதமான வீட்டு வேலைக்கும் ஆள் வைத்துக் கொண்டு அலுவலகத்துக்குப் பறந்து விடுகிறோம். அது அவரவர் சூழ்நிலை; தவறில்லை. அப்படி இருந்தாலும் கூட, சின்னச் சின்ன வேலைகள் செய்யக் குழந்தைகளைப் பழக்கலாம்.

நீங்கள் நன்றாகக் கவனித்தால் தெரியும். இயல்பாகவே குழந்தைகள் நான்கு அல்லது ஐந்து வயதாகும் போது எல்லாவற்றையும் தானே செய்யவேண்டும் என்று விரும்புவார்கள். “நானே குளிப்பேன், நானே சாப்பிடுவேன்” இப்படி. (என் அக்கா மகன் இதை “நீயாவே குளிக்கறேன்”) என்பான். நமது அவசர வேலைகளில் இது எரிச்சல் ஏற்படுத்தும் தான். ஆனாலும் இதை இயன்றவரை வரவேற்று ஊக்கப் படுத்துதல் நல்லது என்கிறார்கள்.

அத்தோடு நாம் வீட்டைச் சுத்தப் படுத்தும் போது அவர்களை விரட்டி அடிக்காமல், அவர்கள் கையில் ஒரு சின்ன பிரஷ் கொடுத்து அவர்கள் ரூமையோ ஏன் சேர், டேபிளையாவது சுத்தப் படுத்தச் சொல்லலாம். துணி துவைக்கும் போது சின்ன கர்சீப், ஷூ லேஸ் போன்றவற்றைத் துவைக்கக் கற்றுத் தரலாம்.

குழந்தைகள் செய்த இந்தச் சிறு சிறு வேலைகளை மறக்காமல் மற்றவர் முன் பாராட்டியும் சொல்ல வேண்டும்.

(நன்றி: மிஷா)


இதனால் குழந்தைகள் ஆர்வமாக அந்த வேலைகளை மட்டுமல்ல உழைப்பின் அருமையை மதிக்கவும் கற்றுக் கொள்வார்கள்.

உடல் உழைப்பு என்பது மூளை உழைப்பை விட எந்த விதத்திலும் குறைந்ததில்லை. சொகுசான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு உடல் பருமன் அடைவது, அதைத் தொடர்ந்து வரவழைத்துக் கொள்ளும் நோய்கள், அதன் பின் மருத்துவ ஆலோசனைப் படி செய்யும் உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சிகள் என்று தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பரிதாப நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

உடல் உழைப்பின் அருமையையும் வீட்டு வேலைகளின் சிறப்பையும் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவோம். எந்த வேலையும் இழிவானது அல்ல என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போம்.

சிறு கை அளாவிய கூழை விட ருசியானது எது? அதனால் ஒரு வேலைக்கு இரு வேலை அவர்கள் வைத்தாலும் பரவாயில்லை. அச்சின்னஞ்சிறு கைகளால் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று தான் பார்ப்போமே!

பி.கு: புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என் அக்கா மகன் நிகில் (ஏழு வயது) சென்ற கோடை விடுமுறையில் மதியம் அக்கா ஒய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது பாத்திரங்கள் அனைத்தையும் கழுவிச் அடுப்பு மேடையையும் சுத்தம் செய்திருக்கிறான், யாரும் சொல்லாமலே!

17 comments:

கிறுக்கன் said...

சிரிசில் சுயவேலையை சுவையாக்கினால் பெரிசில்
பொதுவேலை பெரிதாய் தெரியாது.

-
கிறுக்கான்

மாதவராஜ் said...

தீபா!

நான் என்ன சொல்ல....
இதைப் படிக்க நேரம் இல்லாமல் அம்மு வேலை செய்து கொண்டிருக்கிறாள்.
குற்ற உணர்ச்சி மேலோங்குகிறது.

Deepa said...

கிறுக்கன்!
அழகா சொல்லிட்டீங்க. நன்றி.

அங்கிள்!

ஓங்கட்டும் ஓங்கட்டும்! :-)

தினேஷ் ராம் said...

அதை ஏன் சிறு சிறு வேலைகள் என்று பெரிய வார்த்தைக் கொண்டு சின்னச் சின்னக் கைகளில் சுமத்த வேண்டும். இவ்வகை நல்ல பழக்கங்களை வேடிக்கையாக விளையாட்டு போல் பழக்கலாமே! அவர்கள் விரும்பும் வண்ணம் சொன்னால், குழந்தைகள் விளையாட மாட்டேன் என்றா சொல்லுவார்கள்?

Deepa said...

நன்றி சாம்ராஜ்யபிரியன்.

விளையாட்டாகவே பழக்க வேண்டும் என்பது தான் என் கருத்தும்.

ஆனால் வேலை என்பது ஒன்றும் தவறான வார்த்தை அல்ல. குழந்தைகளிடம் “அப்பாக்கு ஒரு சின்ன வேலை (அல்லது உதவி) செஞ்சு தர்றியா செல்லம்” என்று கேட்டு ஏதாவது செய்யச் சொல்லுங்கள். தன்னையும் பெரிய ஆளாக மதித்த சந்தோஷத்துடன் ஆர்வமாகச் செய்வார்கள்.

ஈரோடு கதிர் said...

அருமையான பதிவு

பாசம் என்ற போர்வையில் குழந்தைகளை இந்தத் தலைமுறை ஏன் இப்படி பொத்தி பொத்தி வைக்கிறது

படித்தவுடன் மனதிற்குள் ஒரு சிறு வெளிச்சக் கீற்று பளிச்சிடுகிறது

தினேஷ் said...

வரவேற்க்கதக்கது பெற்றோர்கள் கண்டிப்பா பின்பற்றப்பட வேண்டிய ஒன்று .. காலம் வரும் போது நான் இதை பின்பற்றுவேன் சகோதரி.

நாஞ்சில் நாதம் said...

பொதுவா இருவரும் (அப்பா அம்மா) வேலைக்கு போகிற குடும்பத்தில் குழந்தைகள் சின்ன சின்ன வேலைகளை செய்வார்கள் (வேறு வழியிலாமல்)

சந்தனமுல்லை said...

நல்ல இடுகை தீபா! :-) அவரவர் வேலையை செய்துக்கொள்ளவாவது பழக்கி விட வேண்டும்!

நேசமித்ரன் said...

Really interesting & thought provoking post

:)

நிலாமதி said...

பெற்றவர்களுக்கும் தாயாக போகிறவர்களுக்கும் பயனுள்ள பதிவு....இளமையில் கற்பவை சிலையில் எழுத்து போல உடற்பயிற்சியும் நல்ல பண்பும் ஆகும் .

காமராஜ் said...

//இதில் முக்கியமான விஷயம், ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி எல்லா வேலைகளையும் பழக்கப் படுத்த வேண்டும்.

0

உடல் உழைப்பு என்பது மூளை உழைப்பை விட எந்த விதத்திலும் குறைந்ததில்லை//

hats off deepa...

Vetirmagal said...

நல்ல பதிவு.

இப்போதெல்லாம் கவலையே இல்லை.
ஒரு முறை அமெரிக்கா சென்று விட்டால் எல்லோரும் அழகாக தங்கள் வேலைகளை செய்ய கற்று கொண்டு, இனிதே இருக்கிறார்கள். :)))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

உடல் உழைப்பு என்பது மூளை உழைப்பை விட எந்த விதத்திலும் குறைந்ததில்லை //

அழகான கருத்தை அப்படியே உங்கள் அனுபவம் வாயிலாக சொல்லியிருக்கிறீர்கள் தீபா.

அருமை

Deepa said...

நன்றி கதிர்!
அப்படியா இருக்கிறார்கள் இத்தலைமுறையினர்?

நன்றி சகோதரர் சூரியன்!
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

நன்றி நாஞ்சில் நாதம்!

நன்றி முல்லை!

நன்றி நேசமித்ரன்!

நன்றி நிலாமதி!

நன்றி காமராஜ் ஸார்!

நன்றி வெற்றிமகள்!
நல்ல கருத்து :-)))

நன்றி அமித்து அம்மா!

அமுதா said...

நல்ல பதிவு.... பெற்றோருக்கு அவசியமான பதிவு.

/*இதில் முக்கியமான விஷயம், ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடின்றி எல்லா வேலைகளையும் பழக்கப் படுத்த வேண்டும். */
வழிமொழிகிறேன்

Prapa said...

என்னங்க பன்றது நம்மால் முடிஞ்ச விசயங்கள சொல்லலாம் ......
என்னென்னு ஒரு தடவ வந்து பாருங்கோவன்,
பிடிச்சிருந்தால் ஒருத்தருக்கிட்ட சொல்லுங்க, பிடிக்கலையா ஒரு 10 பேருக்காவது
சொல்லி போடுங்க....!!!