Saturday, August 29, 2009

சென்னை to கோவை to சென்னை

சென்னையைப் பற்றி அவரவர் பார்வையில் மிக அழகான சித்திரங்களாகத் தீட்டியுள்ளார்கள் சந்தனமுல்லை, மாது அங்கிள், அய்யனார், மற்றும் பைத்தியக்காரன் அவர்கள்.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இந்த ஊரைப் பற்றிச் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் இவ்வளவு இருக்கிறதா என்று அதிசயிக்கத் தான் தோன்றியது.

ஏனென்றால் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். பேச்சு வழக்கு, உணவு முறை, பெருமை மிக்க கோயில்கள், இடங்கள் என்று. சென்னையைப் பொறுத்தவரை மெரினா பீச், எல்.ஐ.சி என்று எண்ணற்ற monuments இருந்தாலும் மற்ற ஊரைச் சேர்ந்தவர்கள் ஊர்ப்பெருமை கொண்டாடுவது போல் இங்குள்ளவர்களுக்குக் கொண்டாட ஏதுமில்லை.

சிலேட்டில் அழித்து அழித்துச் சித்திரங்களைப் புதிது புதிதாகத் தீட்டுவது போல அசுர வேகத்தில் மாறியும் வளர்ந்தும் (வீங்கியும்) வரும் நகரத்தில் அங்கங்கே பொந்துகளில் வாழும் மனிதர்களுக்குச் (அவர்களும் புதிது புதிதாக முளைத்த் வண்ணம் இருக்கிறார்கள்) சொந்தம் கொண்டாடப் பெரிதாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் இங்குள்ளவர்களைப் பற்றிப் பிற ஊர்களில் என்ன அடையாளம் விழுந்திருக்கிறது, என்பதைப் புரிந்து கொள்ள எனது கோவை கல்லூரி வாழ்க்கை உதவியது.

விடுதி வாழ்க்கையில் தான் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் உண்டு. அந்த் ஊரில் வாழ்பவர்கள் எல்லாம் ஒரே மாதிரி தமிழ் பேசுவார்கள், உணவு முறை, வைக்கும் பெயர்கள்
ஏன், சில சம்யம் முக ஜாடை கூட ஒரே மாதிரி இருக்கும் என்றெல்லாம் புரிந்தது.

சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இப்படி எதுவும் கிடையாது. மாது அங்கிள் சொன்னது போல அடையாறு அண்ணா நகர் பகுதியிலிருந்து வந்தவர்களுக்கும் சைதாப்பேட்டை, திருமழிசை பகுதியிலிருந்து வந்தவர்களுக்கும் பொதுவாகப் பேசிக்கொள்ள எதுவுமே இருக்காது.

அவர்கள் கூட ”எங்க அம்மா ஊர் தஞ்சாவூர், தாத்தா உங்க ஊர் தான் – திருநெல்வேலி” என்று தங்கள வேர்களைத் தேடிச் சொந்தம் கொண்டாடத் துடிப்பவர்களாகத் தான் இருப்பார்கள்.

ரொம்பவும் மேட்டுக்குடி ஆட்களுக்குச் சென்னை அவர்கள் தரத்துக்குக் கீழே தான் தோன்றும்; எப்படா யு.எஸ் போவோம் என்று யு.எஸ் விசாவுக்காகத் தான் அவர்கள் பிறவியே எடுத்திருப்பார்கள். அதனால் அவர்கள் பேச்சும் அது பற்றித் தான் இருக்கும்.

எனக்குச் சொல்லிக் கொள்ளும் படியாக அப்படி எதுவும் இல்லை. உறவினர் வீடு என்று எந்த ஊரிலும் வீட்டிலும் தங்கிய அனுபவமும் இல்லை. (அனைவரும் இந்த அவசர ஊரிலேயே இருப்பதால் பழகும் வாய்ப்புகளே அற்றுப் போய் விட்டன கல்யாண வீடுகளில் குசலம் விசாரிக்கும் பலரை ரோட்டில் பார்த்தால் அடையாளம் கூடத் தெரியாது :o))
அக்ரஹாரங்களும், பேட்டைகளும் இரண்டுமே நல்ல பரிச்சயமாகியும் இருந்தது. அதனால் எந்த அடையாளமும் இல்லாமலே அல்லது எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்தே என்னால் இருக்க நேர்ந்தது. (கிட்டத்தட்ட ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஹென்றி போல – கொஞ்சம் ஓவர் இல்ல?!)

அனைவருடனும் பேதங்களில்லாமல் நட்பு பாராட்டுவதற்கு இந்த lack of social identity வசதியாகவே இருந்தது. வயது வளர வளர நம்மை அறியாமல் இது வெகுவாகக் குறைவது வேதனையான உண்மை தான்.

ஆனால் பொதுவாகச் சென்னை வாசிகள் என்றால் திமிர் பிடித்தவர்கள், அலட்சியமானவர்கள், மரியாதை தெரியாதவர்கள் என்ற பிம்பம் மற்ற ஊர்க்காரர்களுக்கு ஓரளவு இருந்தது.

ஒரு சம்பவம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பிராக்டிகல் வகுப்பில் lab assistant எனக்கு ஒரு செயல்முறையை விளக்கிக் காண்பித்தார். நான் பேச்சு வாக்கில் “அப்படியா ஸார்” என்றதும் பரிவுடன் பேசிக் கொண்டிருந்த அவர் முகபாவம் சட்டென்று மாறியது. கோபமாக, “எந்த ஊரு?” என்றார். ஒன்றும் புரியாமல் “மெட்ராஸ்” என்றேன். ”அதான்...மரியாதை தெரியல” என்று இளக்காரமாகக் கூறிவிட்டு அகன்று விட்டார்.

எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது. நான் என்ன தவறு செய்தேன் என்றே புரியவில்லை. பிறகு மற்றவர்கள் பேசுவதிலிருந்து தான் புரிந்து கொண்டேன்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் “ங்க” போட்டுப் பேசுவது கொங்குத் தமிழின் தனிப் பண்பு, சிறப்பு என்பதையும் அது இல்லாவிட்டால் அந்த ஊரில் மிகப் பெரிய மரியாதைக் குறைவு எனபதையும். “அப்படிங்களா” என்று பேசப் பழகிக் கொண்டேன்!

கூட்டம் நெரியும் பஸ்ஸில், படு எரிச்சலில் இருக்கும் கண்டக்டர் கூட “முன்னால போங்கம்மிணி” என்று தான் எரிந்து விழுவார். அதனால் “த சாவுகிராக்கி, ஏறு மேல” என்பதைக் கூடச் சிரிப்புடன் செல்லமாக எடுத்துக் கொள்ள முடிந்த இந்தச் சென்னைவாசிக்கு அது ராஜ மரியாதையாக இருந்தது.

வெடுக் வெடுக் கென்று மனதில் பட்டதைப் பேசக் கூடியவர்கள் கோவை வாசிகள். லேசில் சிரிக்கவும் மாட்டார்கள் இலகுவாகப் பழகவும் மாட்டார்கள். ஆனால் பழகி அன்பு பாராட்டத் தொடங்கிவிட்டால் அதில் எதிர்பார்ப்பும் இருக்காது; கொஞ்சமும் பொய்யும் இருக்காது. இதற்கு உதாரணம் என் தோழி கவிதா தேவி. முதல் வருடம் எனக்கு lab mate; பின்பு நல்ல தோழி.

பல்லடத்துக்கு அருகில் வடுகபாளையம் அவளது சொந்த ஊர்.
நெடிய ஒடிசலான தோற்றமும் கூர்மையான பார்வையும், நீண்ட பின்னலும், சீரியஸான அவளது முகமும் என்னை வெகுவாகத் தள்ளி நிறுத்தியது. சென்னைக்குரிய பெரிய நாகரிகங்கள் எதுவும் இல்லையென்றாலும், என் போனி டெயிலோ சென்னைத் தமிழோ ஆங்கிலமோ, ஏதோ ஒன்று அவளுக்கும் இலகுவாக இருந்திருக்காது. ஆனாலும் ஏதோ ஒரு புள்ளியில் மிகவும் நட்பானோம். எங்கள் வேறுபாடுகளே வெகுவாக ஒருவரை ஒருவர் ஈர்த்தது. அன்பு கொள்ளச் செய்தது. மெட்ராஸ் புள்ளைங்க்ன்னாலே என்னுமோ நினச்சிருந்தேன். நீ அப்படி இல்ல” என்று அவள் சொன்னது என்னால் மறக்க முடியாதது. அவள் பேசும் கொங்குத் தமிழ் என்னை வெகுவாகக் கவர்ந்து சிலகாலம் நானும் அப்படியே பேசித் திரிந்தேன்!

அடுத்ததாகக் கோவையின் குளிர். செப்டம்பர் மாதம் காலையில் எட்டு மணிக்குக் கூடப் பச்சைத் தண்ணீரில் குளித்தால் இரத்தம் உறைந்து விடும்.

எப்போதும் மிதமான குளிர், எண்ணற்ற மரங்கள் நிறைந்த எங்கள் கல்லூரி, மருதமலை, காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், உக்கடம் பழைய புத்தகக் கடை, டவுன் ஹால், கே.ஜி தியேட்டர், கேஜி ஹாஸ்பிட்டல், வ.உ.சி. பார்க், அன்னபூர்ணா ஓட்டல், தேங்காய் பன், மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் (how I miss it!) விற்கும் பேக்கரிகள் (எல்லா பேக்கரிகளுமே டீக்கடைகளாகவும் இருக்கும்) இவையெல்லாம் எனக்கு கோவையை என்றென்றும் மனதில் பசுமையாக வைத்திருப்பவை.

முக்கியமாக நமது பதின்பருவ காலத்தை வெகுவாகப் பாதிக்கும் எந்த ஒரு இடமுமே எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கும். அந்த வகையில் என் எவர்கிரீன் கல்லூரிக்காலத்தை அடைகாத்த கோவை என்றுமே மனதுக்கினிய ஊர் தான்.

16 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எங்கூருக்காரங்களப்பத்தி நீங்க சொல்றது சரி தாங்க தீபா..

சின்ன வயசுல பெரியவங்க எங்களுக்கு சொல்லித் தந்ததே "ங்க" போட்டுப்பேசறது தாங்க.

"என்னங்க தம்பி வேணும்"னு கேட்டுப் பழகின எனக்கு சென்னை வந்த பொழுது பேருந்துகளிலோ, கடைத்தெருக்களினோ "இன்னா வோணும்"னு கேக்கறதே எரிச்சலூட்டுவதாக இருந்தது. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு அடையாளம். இது அனைத்தையுமே சென்னையில் உள்ள கல்லூரிகளில் காணமுடியும். நல்ல பதிவு.

மாதவராஜ் said...

சென்னையிலேயே இருப்பவர்களுக்கு, அதுகுறித்துச் சொல்வதற்கு எதுவும் இல்லாதது போல இருப்பதே ஒருவித அடையாளமற்ற தன்மைதான். கோவை பற்றிச் சொல்லியிருந்தது அருமை. ஒரு மனிதருக்கு அவருடைய ஆறிலிருந்து பதினாறு வயது காலங்களில் வாழ்ந்த எப்போதும் கூடவே வரும். அதில் குறிப்பாக பதின்மப்பருவம்.

Anonymous said...

எங்க ஊரை பத்தி நல்லா சொன்னதுக்கு, நன்றி.

நான் கூட ரெண்டு மாசம் சென்னையில் இருந்தேன், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள், ரொம்ப திணறி விட்டேன், எப்படா கோவை வருவேன் என்று. :(

துபாய் ராஜா said...

உங்கள் கோவை அனுபவங்களால் சென்னை நடைமுறை வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் கூறியுள்ளமை நன்று.

Deepa said...

வருகைக்கும் கருத்துக்கும்

நன்றி செந்தில்வேலன்!

நன்றி அங்கிள்!

நன்றி மயில்!

நன்றி துபாய் ராஜா!

சந்தனமுல்லை said...

:-) அழகாக சொல்லியிருக்கீங்க..அடையாளமற்ற தன்மைன்னு! அதுவும் ஒரு அடையாளமோ?!! ஹிஹி!
அப்புறம், 'சென்னை பொண்ணுங்கன்னா' எங்க ஊர்லே/ எங்க ப்ரெண்ட்ஸ் வட்டதுலே பொதுவா ஒரு எண்ணம்...ரொம்ப ஷ்ரூடா இருப்பாங்க அல்லது உஷாரா இருப்பாங்க, தைரியம் ஜாஸ்தின்னு!

கோவை பத்தி சொல்லியிருக்கறதும் அருமை. எனக்கும் கோவை பிடிச்சதுக்குக் காரணம் என்னோட காலேஜ் நண்பர்கள்! லதாவையும் கோபிகாவையும் நினைவுபடுத்திவிட்டீர்கள்! நன்றி!

thiyaa said...

சென்னை பற்றி சொன்ன விசயங்கள் சரி
நான் நேரில் பார்த்தவை
ஆனால்
கோவை பற்றி நீங்கள் சொன்ன பின்னர்
பார்க்க வீண்டும் போல் உள்ளது

பழூர் கார்த்தி said...

உங்க கல்லூரித் தோழியைப் பற்றிய வரிகள் சிலிர்ப்பூட்டின.. பதின்ம பருவத்தில் நாம் இருந்த இடம், நமக்கு பிடித்தாமானதாயிருக்கும் என்பது உண்மையே!!

எனக்கும் கோவையை நிரம்ப பிடிக்கும் அதன் அற்புதமான வானிலையால்..

manjoorraja said...

சென்னைக்கு தனியாக எதுவும் அடையாளம் இல்லையென்றாலும் சென்னை வாழ்க்கை ஒரு வித்தியாசமான வாழ்க்கை என்பதில் சந்தேகம் இல்லை. அதனாலெயே பலரின் மனதில் அவ்வாழ்க்கை பதிந்துவிடுகிறது. நானும் சில வருடங்கள் சென்னையில் இருந்தேன் அது ஒரு மறக்கமுடியாத அனுபவம் தான்.

ஒப்பீடு செய்வது தேவையில்லை என்றாலும்

கோவை மிகவும் நல்ல மரியாதையான அருமையான சிதோஷ்ண நிலையுடன் கூடிய சுவையான குடிநீர் கிடைக்கும் நல்ல உணவகங்கள் அடங்கிய ஊர் என்பதில் சந்தேகம் இல்லை (கோவை அனைத்து நகரவசதிகளுடன் கூடிய ஒரு பெரிய கிராமம் என்றே வைத்துக்கொள்ளலாம்).எனக்கென்னமோ கோவைதான் ரொம்ப பிடிச்சிருக்கு.

Kumky said...

சென்னை டூ கோவை நல்ல ஒப்பீடு.

பதிவினை படிக்கையிலேயே “முடிஞ்ச வரைக்கும் உள்ர போங்க” என்ற பேருந்து நடத்துனரின் ஓசை காதில் விழுகிறது.

தோழியினை பற்றிய வர்னணை கோவை மகளிர் சகலருக்கும் பொருந்தும் போல.

சென்னை பற்றிக்கூற யாதொன்றுமில்லை.ஒரு நாளைக்கு மேல் அங்கே சகிக்க முடிவதில்லை வந்தால்.எப்படித்தான் சகித்துக்கொண்டு வாழ்ந்திருக்கிறார்களோ என எண்ணம் தோன்றுவதுண்டு.

ராம்மோகன் said...

வெடுக் வெடுக் கென்று மனதில் பட்டதைப் பேசக் கூடியவர்கள் கோவை வாசிகள். லேசில் சிரிக்கவும் மாட்டார்கள் இலகுவாகப் பழகவும் மாட்டார்கள். ஆனால் பழகி அன்பு பாராட்டத் தொடங்கிவிட்டால் அதில் எதிர்பார்ப்பும் இருக்காது; கொஞ்சமும் பொய்யும் இருக்காது.

100 % T.R.U.E!

Deepa said...

நன்றி முல்லை!
நீங்களும் கோவையில படிச்சிருக்கீங்களா? இப்போ தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

நன்றி தியாவின் பேனா!

நன்றி மஞ்சூர் ராஜா!
//சென்னை வாழ்க்கை ஒரு வித்தியாசமான வாழ்க்கை என்பதில் சந்தேகம் இல்லை. //
உண்மை தான்.

நன்றி கும்க்கி!

//ஒரு நாளைக்கு மேல் அங்கே சகிக்க முடிவதில்லை வந்தால்.//

மாசு நிறைந்த சுற்ற்ச்சூழல் தான் இதற்குக் காரணம் என்று நம்ப விழைகிறேன். :-)
மனிதர்கள் எல்லா இடங்களிலும் எல்லா வகையாகவும் இருக்கிறார்கள் என்பதே என் கருத்து!

மிக்க நன்றி ராம்மோகன்!
நீங்கள் கோவையா? :-)

KarthigaVasudevan said...

கண்டக்டர் கூட “முன்னால போங்கம்மிணி” என்று தான் எரிந்து விழுவார். அதனால் “த சாவுகிராக்கி, ஏறு மேல” என்பதைக் கூடச் சிரிப்புடன் செல்லமாக எடுத்துக் கொள்ள முடிந்த இந்தச் சென்னைவாசிக்கு அது ராஜ மரியாதையாக இருந்தது.

நல்லா இருக்குங்க நீங்க சொல்றது .
:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

கூட்டம் நெரியும் பஸ்ஸில், படு எரிச்சலில் இருக்கும் கண்டக்டர் கூட “முன்னால போங்கம்மிணி” என்று தான் எரிந்து விழுவார். அதனால் “த சாவுகிராக்கி, ஏறு மேல” என்பதைக் கூடச் சிரிப்புடன் செல்லமாக எடுத்துக் கொள்ள முடிந்த இந்தச் சென்னைவாசிக்கு அது ராஜ மரியாதையாக இருந்தது.

:)))))))))))))

அழகா எழுதியிருக்கீங்க.

பட்டாம்பூச்சி said...

எனக்கும் கோவையை நிரம்ப பிடிக்கும்.
அழகா எழுதியிருக்கீங்க.

Sanjai Gandhi said...

//கே.ஜி தியேட்டர்,//

Now KG Big cinemas :)