Monday, August 3, 2009

இடுக்கண் களைவதாம் நட்பு!

நேற்று காலை எழுந்ததும் முதல் அழைப்பு அவளது தான்.

“ஹேய் தூங்கு மூஞ்சி! இப்பத்தான் எழுந்தியா. Happy friendship day!”

“ஹேய் ஜோதி... என்ன, இப்பத் தான் உன்னைப் பாத்துட்டு வர்றேன்.”

”என்னது?”

“இல்லடி, என் கனவில வந்தே...அதை நினைச்சிக்கிட்டே வர்றேன், அதுக்குள்ள் நீ....” மேற்கொண்டு பேச முடியாமல் சிரிப்பும் ஆச்சிரியமும் சூழ்கின்றன என்னை.

“அப்படியா, என்ன கனவு சொல்லு சொல்லு!”

“ம்...சரியா ஞாபகம் இல்ல.. ஆனா ரெண்டு பேரும் பஸ்ல ஏர்றோம்... ஏதோ ஷாப்பிங் போகன்னு நினைக்கிறேன். நான் முதல்ல ஏறினப்புறம்..அய்யோ நேஹா வை கீழியே விட்டுட்டேனேன்னு நினைக்கிறேன். அப்போ நீ நேஹாவையும் தூக்கிட்டு ஓடற பஸ்ல ஏறை வர்றே. வந்து என்னை நல்லாத் திட்டற!”

“ம்க்கும்.. நல்ல கனவு போ.. சரி தான், குழந்தையை ஒழுங்காப் பாத்துக்கோடி..சரி பை.. நான் இப்போ வெளிய போறேன். ஈவினிங் ஃபோன் பண்றேன். ”

ஃபோனை வைத்த பிறகும் வெகு நேரம் அவள் நினைவு தான்.
ஜோதி. என் உயிர்த் தோழி.. யூ.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவர்கள் நாங்கள்.
அத்தனை வகுப்பிலும் முதல் ரேங்க் எடுத்தவள் அவள். (நான் என்ன எடுத்தேன் என்பது இங்கே முக்கியமில்லை! )

அற்புதமாக நடனமாடுவாள், விளையாட்டிலும் சிறந்து விளங்கினாள். சிக்கனம், நேர்மை, நேரம் தவறாமை, என பள்ளியின் உதாரண மாணவி அவள் தான். அந்தப் பரிசும் அவளையே சேர்ந்தது.

இப்படிப் பட்ட மாணவிகள் கர்வம் பிடித்தவர்களாக, பொதுவாக பலரும் விரும்பாத மாதிரி தானே இருப்பார்கள். ஜோதி அதற்கு நேரெதிர்.

ஆம், அவளும் ஐந்தாம் வகுப்பு வரை கொஞ்சம் அப்படித் தான் இருந்தாள். பின்பு தன்னைத் தானே வெகுவாக மாற்றிக் கொண்டாள். இலகுவாகப் பழகவும் விட்டுக் கொடுக்கவும் ஆரம்பித்தாள். அவளின் இந்த மாற்றங்களைக் கண்கூடாகப் பார்த்து மகிழ்ந்தவள் என்ற முறையில் அவளது சிறந்த நண்பி நான் என்று பெருமையாகக் கூறிக் கொள்கிறேன்.

ஆனாலும் அந்த அறியா வயதில் ஊரே போற்றும் படி படிப்பில் படுசுட்டியாக இருந்ததால் சற்றுத் திமிராக இருந்ததை எண்ணி இப்போதும் வெட்கப்படுகிறாள், என்னவோ அது பெரிய தவறு போல.

அதே போல், தேர்வு சமயங்களில் தன்னை விட என் படிப்பைப் பற்றி அதிகம் கவலைப்படுவாள். அவளுக்கு ஒரு எண்ணம் நான் பொறுப்பில்லாமல் மதிப்பெண்களைத் தவறவிடுவதாக. அதற்காக அவள் எடுத்துக் கொண்ட அக்கறையை என்னால் என்றும் மறக்க முடியாது.

கல்லூரி, வெவ்வேறு ஊர்களில் வேலை, திருமணம் என்று சில நாட்கள் தொடர்பு குறைந்திருந்தது. பின்பு சில ஆண்டுகளுக்கு முன்பு அவள் சென்னையிலேயே வந்து குடியேறிய பின் எங்கள் நட்பு மீண்டும் தடையின்றித் தொடர்கிறது. உண்மையில் கொடுத்து வைத்தவள் நான் தான்.

நான் கல்லூரி சேர்ந்தது வேறு ஊரில். என் குடும்பத்தாரை விட அதிகமாகக் கடிதம் எழுதியது அவள் தானென்று நினைக்கிறேன்.

அவளோடு தொடர்ந்து படிக்க முடியாமல் போனதற்கு எவ்வளவு வருந்தி இருப்பேன்!

அந்த வருத்தம் வெகுவாகப் பாதிக்காமல் மாற்ற வந்தவர்கள் தான் சுதா, சுகந்தி, பாலா.

சுதா - என் அறைத்தோழியாக முதல்நாள் அறிமுகமான போது என்னைவிட பயந்த சுபாவமாய் சின்ன உருவமாகக் குழந்தை போலிருந்தாள்.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் எனக்கு சில் நாட்கள் தான் முன்னதாக சேர்ந்திருந்த அவளோ கலகலப்பாகவும் தனது குழந்தைத் தனமான பேச்சாலும் எல்லாருடனும் நட்பாகி இருந்தாள்.

முதல் நாள் மாலை, வீட்டு நினைவில் அழுது கொண்டு யாருடனும் பேசாமல் இருந்த நேரம். எல்லோரும் வராந்தாவில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அறைக்குள் நுழைந்த சுதா, அன்புடன் என்னைத் தேற்றியதும் முகத்தைத் துடைத்துக் கொள்ள எனக்குக் கொடுத்த அவளது புதுத்துவாலையின் வாசமும் என் நெஞ்சை விட்டு எந்நாளும் நீங்காது.

”சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து” பாடலை ஆர்க்கெஸ்ட்ராவில் பாடியதாலோ அல்லது எப்போதும் துறு துறுவென, யாருடனும் ஒரு வார்த்தை கூடக் கடிந்தோ, வன்மத்துடனோ பேசாத அவளின் நல்லியல்பாலோ நாங்கள் அவளுக்கு வைத்த பெயர் சிட்டுக் குருவி!

இயல்பு தான் இப்படியே தவிர மேடத்துக்கு நாக்கு நீளம். லீவுக்கு வீட்டுக்குச் சென்று திரும்பும் போது நல்லா குண்டாகி வருவாள். ஹாஸ்டல் சாப்பாடு நாக்கைத் தீண்டியதுமே மெலிந்து விடுவாள்.
சுத்தம் சுத்தம் என்று அறையைச் சுத்தம் செய்து ஒழித்து வைப்பதையே தொழிலாகக் கொண்டிருப்பாள்.

நானும் சுகந்தியும் (இன்னொரு தோழி) “உனக்கு இது ஒரு மேனியா மாதிரி, சுத்தம் செய்யற வியாதி வந்திருக்கு, சீக்கிரம் ஒரு டாக்டரைப் பாரு” என்று பயமுறுத்தியதை உண்மையென நம்பி பயந்து கிடந்தாள் சில காலம்!

சிட்டுக் குருவி இப்போது தனது கூட்டில் கணவரையும் இரு சிறிய ஆண் குருவிகளையும் பொறுப்பாகப் பேணி வருகிறார்.
நேஹா பிறந்த போது சந்தித்தோம். மற்றபடி தொலைபேசியில் நலம் விசாரிப்புகளுடன் தொடர்கிறது எங்கள் நட்பு.

சுகந்தி – இவளிடம் நான் கற்றுக் கொண்டது ஏராளம். அதில் முக்கியமானது கடும் உழைப்பு. சிறு வயதிலேயே இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதாலும் பெரிய குடும்பத்தின் க்டைக்குட்டி என்பதாலும் மிகவும் செல்லமாக வளர்ந்தவள். ஆனால் படிப்பதிலும், மற்ற வேலைகள் செய்வதிலும் அப்படிச் சூட்டிகையாக வளர்ந்திருந்தாள்.

அவளைப் போல் ஒரு ரூம்மேட் அமையாதிருந்தால் நான் கல்லூரிப் படிப்பைச் சீரியஸாக எடுத்துக் கொண்டிருப்பேனா என்பது சந்தேகமே.

அதே போல் வயதுக்கு மீறிய அவளது அறிவு முதிர்ச்சியும் நிதானமும் நான் இன்று வரை வியப்பவை.
என்னுடைய நிதானமற்ற சுபாவத்தால் தடம்மாறாமல் என்னைப் பல சமயம் தடுத்தாட் கொண்டது இவளது நட்பு தான்.

பாலா என்ற பாலமுருகன் - ஆண்கள் கூட பெண்களுக்கு அற்புதமான் நண்பர்களாக இருக்க முடியும் என்று முதன் முதலில் நிரூபித்ததற்கே நான் இவருக்கு நன்றி சொல்லவேண்டும். கல்லூரி இரண்டாம் ஆண்டு தொடங்கி எனக்கு உற்ற நண்பரானவர். வகுப்பறை தவிர வேறு எங்கும் என்னைச் சந்திக்க முயன்றது கூடக் கிடையாது. அதிபுத்திசாலி. ஆனால் படு சோம்பேறி!

மிகவும் ஜாலியான பேர்வழி. எனக்கு மட்டுமல்ல, பல இனம் ஊர்களிலிருந்தும் வந்து படித்த என் வகுப்பு மாணவர்களிடையே பல வேறுபாடுகள், குழுக்கள் இருந்தன. ஆனால் வகுப்பில் அனைவருக்கும் இனிய நண்பர் பாலா தான். இவரது நட்பு முழுமையாகக் கிடைத்ததில் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.

கல்லூரி முடிந்தும் பல ஆண்டுகள் கடிதம் அல்லது இமெயில் தொடர்பு இருந்தது. பின்பு காலப் போக்கில் காரணமேயின்றி சற்றே இடைவெளி தோன்றியது.

ஆனால் நட்பின் பலம் என்னெவென்று சில வாரங்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட சோதனையின் போது புரிந்தது. மிகவும் வேதனையில் இருந்த போது என்னைத் தொடர்பு கொண்டு,

“உன் பதிவுகள் அனைத்தையும் அமைதியாகப் படித்துக் கொண்டு வருகிறேன். எதற்கும் கவலைப்ப்படாதே; மனம் தளராதே. எழுதுவதையும் நிறுத்திவிடாதே” என்ற ரீதியில் அவரது வார்த்தைகளைக் கண்டு அப்படியே உட்கார்ந்து அழுது விட்டேன்.

எதிர்பாராத நேரத்தில், வெகு நாள் தொடர்பு இல்லாமலிருந்த போதும், நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்ன மாதிரி இருந்தது. மிகப்பெரிய பலம் வந்தது. நண்பா, உனது நட்புக்குத் தலை வணங்குகிறேன்.

இன்னும்...ஸ்ரீவித்யா, அனு, ராம்கி, ராஜி, என்று இப்பதிவில் நான் சொல்லாமல் விட்ட, தனித்துவம் வாய்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள். இப்பதிவுலகம் மூலம் கிடைத்த நண்பர்கள் உட்பட. அவர்கள் அனைவர் பற்றியும் எழுத இன்றொரு நாள் போதாது. ஆனால் வேறொரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக எழுதுவேன். அன்பு, நட்பு, நேசம் என்பதைத் தவிர மனித வாழ்க்கையில் அர்த்தம் மிகுந்ததாக வேறு என்ன இருக்கிறது?

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

13 comments:

மணிஜி said...

ஒளி வீச வாழ்த்துக்கள் தீபா..

சந்தனமுல்லை said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் தீபா! :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நண்பர்கள் தின வாழ்த்துகள் :)-

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net

மாதவராஜ் said...

சுகமான நினைவுகளை பகிர்ந்திருக்கிறாய். ஒவ்வொருவரிடமும் உள்ள சிறப்புக்களை கவனித்தும் அவதானித்தும் சொல்லியிருக்கிறாய். நட்பின் அர்த்தமே இதுதான்.
//அன்பு, நட்பு, நேசம் என்பதைத் தவிர மனித வாழ்க்கையில் அர்த்தம் மிகுந்ததாக வேறு என்ன இருக்கிறது?//
வேறு எதுவும் இல்லை.

நேசமித்ரன் said...

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.

Deepa said...

நன்றி தண்டோரா!
நன்றி முல்லை!
நன்றி அமித்து அம்மா!
நன்றி ராம்!
நன்றி அங்கிள்!
நன்றி நேசமித்ரன்!

Unknown said...

Happy (belated) Friendship Day wishes, Deeps.
--Ramki

அமுதா said...

/*அன்பு, நட்பு, நேசம் என்பதைத் தவிர மனித வாழ்க்கையில் அர்த்தம் மிகுந்ததாக வேறு என்ன இருக்கிறது?*/
வேறு ஒன்றும் இல்லை. வாழ்த்துக்கள்

நாஞ்சில் நாதம் said...

:))

Deepa said...

நன்றி ராம்கி!
நன்றி அமுதா!
நன்றி நாஞ்சில் நாதம்!

தீபாதேன் said...

Happy Friendship Day, Deepa!

pavithrabalu said...

அன்பு தீபா

அருமையான பதிவு. நண்பர்கள் குறித்த நினைவுகள் பகிரும் பொழுது பல மடங்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனாலும் எனக்கு ஒரு குறை உண்டு. நமது சமுகத்தில் பெண் ஒருத்தி எனது தோழி என்று ஒருவரை அறிமுகம் செய்யும் விதமாக எனது நண்பர் என்று ஒருவரை இயல்பாக சொல்ல முடியவில்லையே.. நீங்க என்ன சொல்றீங்க.

பவித்ரா