Wednesday, August 12, 2009

பொம்மை

”ஹேய்! அருண் வாடா, உள்ள வா..”

“அம்மா, இது என் ஃப்ரெண்டு அருண். என் கூட வெளையாட வந்திருக்கான்.”

”வா தம்பி... சரி ரமேசு, பாப்பாவைப் பாத்துக்கிட்டே ரெண்டு பேரும் வெளையாடிட்டு இருங்க, நான் வேலைக்குப் போயிட்டு வந்துடறேன்.”

அந்தச் சின்ன ஓட்டு வீட்டுக்குள் தன் நண்பனை அழைத்துச் சென்றான் ரமேஷ்.

ஒரு சின்னக் கூடம், அதை ஒட்டி ஒரு சமையலறை. அதனருகே குளியலறை. அவ்வளவு தான் வீடு. கூடத்தில் தூளியில் ரமேஷின் ஒன்றரை வயது தங்கச்சிப் பாப்பா தூங்கிக் கொண்டிருந்தது.

வீட்டை வித்தியாசமாகப் பார்த்தவாறே அருண் கேட்டான் ”உங்க அப்பா எங்கடா?”

“வேலைக்கிப் போயிருக்கார்டா”

”இன்னிக்கு ஸண்டே தானடா... லீவ் இல்ல?”

“அதெல்லாம் ஆஃபிஸ்ல வேல பாக்கற உங்க அப்பாக்குத் தான். எங்க அப்பா கார்ப்பெண்டராச்சே!” சிரித்தான் ரமேஷ்.

”சரி நாம வெளையாடலாமா?”

வீட்டைச் சுற்றும் முற்றும் பார்த்த அருணுக்கு அது கண்ணில் பட்டது.
மரத்தில் அழகாகச் செதுக்கப்பட்டு பிங்க், பச்சை என்று கண்ணைப் பறிக்கும் வர்ணங்கள் பூசப்பட்ட ஒரு வண்டி.

”என்னடா அது?”

”அதுவா! பாப்பாக்கு நடை வண்டி. எங்க அப்பாவே செஞ்சாரு. நான் கூட ஹெல்ப் பண்ணேன்.“ பெருமை பொங்கச் சொன்னான் ரமேஷ்.

ஆர்வத்துடன் அதனருகே சென்றான் அருண். தொட்டுப் பார்த்து, “நிஜம்மா உங்க அப்பாவே செஞ்சாரா.. சூப்பர்டா!” என்றான்.

இது மட்டுமில்ல, இங்க பாரு...ஷெல்பில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப்பொம்மைகளைக் காட்டினான்.

”இதெல்லாம் எங்க அம்மா செஞ்சது. அவங்களே பண்ணி சட்டையும் தெச்சுப் போட்டு விடுவாங்க. நல்லாருக்கா?”

“ரொம்ப அழகா இருக்குடா” உண்மையில் அருண் அதைப் போல் பொம்மைகளை அவன் பெற்றோர் அழைத்துச் செல்லும் எந்தக் கடையிலும் பார்த்ததில்லை.

”உனக்குப் பிடிச்சிருக்கா?”

“ரொம்ப!”

“அப்போ இந்தா, இந்த பொம்மையை எடுத்துட்டுப் போ. என்னோட கிஃப்ட்!”

“ஏய், வேனாண்டா, உங்க அம்மா வந்தாத் திட்டப் போறாங்க!”

“ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. இதை மாதிரி இன்னும் எவ்ளோ வேணும்னாலும் செஞ்சுடுவாங்க.”

கண்கள் விரிய அதை வாங்கிக் கொண்டான் அருண். “ரொம்ப தாங்க்ஸ்டா. உங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப டேலண்டட்!”

இருவரும் சிறிது நேரம் விளையாடிய பின் அருண் விடைபெற்றான்; அடுத்த ஞாயிற்றுக் கிழமை தனது வீட்டுக்கு ரமேஷை வரும்படி அழைப்பு விடுத்து விட்டு.

அடுத்த வாரம்...

“அம்மா, என் ஃப்ரெண்ட் ரமேஷ் வந்திருக்காம்மா. இது அவன் தங்கச்சி ரம்யா.”

“ஹேய் குட்டிப்பாப்பா, ஸோ ஸ்வீட். சரி எல்லாரும் இங்க ஹால்லையே விளையாடுங்க. ரூமுக்குள்ள எல்லாம் போகக் கூடாது.. அப்பா ரெஸ்ட் எடுக்கறாங்க ஒகே? மம்மி ஷாப்பிங் போயிட்டு வரேன்.” அதட்டி விட்டு வெளியே செல்ல ஆயத்தமானாள் அந்த அம்மா.

அருண் தனது விளையாட்டுப் பொருள்களை எல்லாம் கொண்டு வந்து ரமேஷை அசத்த விரும்பினான்.

”ஹேய்! இங்க பார்த்தியா, இது எங்க அப்பா சிங்கப்பூர்லருந்து வாங்கிட்டு வந்தது.”

அந்தப் பெரிய ரிமோட் கண்ட்ரோல் காரை வேகமாக இயக்கிக் காண்பித்தான் அருண்.

”நல்லா இருக்குடா. ஆனா, எங்க அம்மா வேலை செய்யற வீட்ல அந்தப் பாப்பா இதே மாதிரி வெச்சிருக்கு, பாத்திருக்கேன்.”

”அப்படியா...” சற்றே ஏமாற்றமடைந்த அருண், “இதைப் பாரு இந்த வீடியோ கேம்....இது எங்க அம்மா என்னோட பர்த்டேக்குப் பிரஸண்ட் பண்ணாங்க..”


”அட! இது கண்ணா வீட்ல நான் விளையாடி இருக்கேன். நான் தான் அவனுக்கு எல்லா லெவலும் முடிக்க ஹெல்ப் பண்ணேன். ”

”சரி விடு, இந்த பார்பி டால் செட் பாத்தியா? நான் பொண்ணா தான் பொறப்பேன்னு நெனச்சு எங்க அம்மா அந்த கலெக்‌ஷன் பூரா வாங்கி வெச்சிருக்காங்க.”

அழகழகான பார்பி என்னும் பெண் பொம்மைகள், விதவிதமான அலங்காரத்தில், டாக்டர் செட், கிட்சென் செட், என்று அதற்கேற்ற உப பொருட்களும் ஒரு தனி அலமாரியில் அடுக்கப் பட்டிருந்தன.

ரமேஷ் உண்மையிலேயே அதிசயித்தான். ”ரொம்ப அழகா இருக்குடா... இந்தப் பொம்மைக்குச் சட்டையெல்லாம் உங்க அம்மாவே தெச்சாங்களா.. சூப்பர்டா”

“அடப்போடா, இதெல்லாம் அப்படியே வாங்கினது. ரொம்ப காஸ்ட்லி. அதான் ராப்பரைப் பிரிக்காம அப்படியே ஷோகேஸ்ல வெச்சிட்டாங்க. நான் கூட வெளையாடினதே இல்ல.”

ரமேஷுக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது.

அதற்குள் அவர்கள் பின்னால் தத்தித் தத்தி வந்து விட்ட ரம்யா, அந்த பொம்மைகளைக் கை காட்டி அழத் தொடங்கினாள்.

அவளைத் தூக்கிக் கொண்ட ரமேஷ், “இந்தா பாரு, அதெல்லாம் கேக்கக் கூடாது. நல்ல பாப்பா இல்ல. நமக்கு வீட்ல பொம்மை இருக்குல்ல..” என்று சமாதானப் படுத்த ஆரம்பித்தான்.

அருணுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அந்தப் பாப்பாவுக்குப் பொம்மையைக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. அம்மாவை நினைத்துப் பயமாகவும் இருந்தது.

ஆனால் அன்று தான் ரசித்துப் பார்த்ததற்கே ரமேஷ் அவன் அம்மா செய்த பொம்மையைக் கொடுத்தனுப்பினானே.

சட்டென்று அலமாரியைத் திறந்து ஒரு பொம்மையைக் குழந்தையிடம் கொடுத்தான்.

“டேய் வேண்டாம்டா.. உங்க அம்மா திட்டுவாங்க.”

அருணுக்குச் சுருக்கென்றது. ”போடா, அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க... நீ வெச்சிக்கோடா செல்லம்” என்று பாப்பாவைக் கொஞ்சினான்.
பாப்பா அழுகையை நிறுத்து விட்டுப் பூஞ்சிரிப்புச் சிரித்தது.

********

”அருண்...எங்கே, இங்க டாக்டர் செட்ல இருந்த பார்பி எங்க காணோம்? எடுத்து விளையாடிட்டு எங்கயாச்சும் போட்டுட்டியா?”

“அம்மா.. அது வந்து... ரமேஷோட குட்டித் தங்கை அதைக் கேட்டு அழுதுச்சும்மா. அதான்.. “ என்று இழுத்தான்.

“டேய் ஃபூல்! அறிவிருக்காடா உனக்கு? அது எவ்ளோ காஸ்ட்லி தெரியுமா. ஒண்ணொண்ணும் த்ரீ ஹண்ட்ரட் பக்ஸ்! இட் வாஸ் மை ட்ரெஷர்ட் கலெக்‌ஷன்! அதை எதுக்குடா கொடுத்தே?”

“குழந்தை ரொம்ப அழுதாம்மா...”

“அழுதுச்சுன்னா நீ வெளையாடி உடைச்ச வேற ஏதாவது டாய்ஸ் கொடுத்திருக்கலாம்ல? நீ எது தந்திருந்தாலும் அவங்களுக்கு உசத்தியாத்தான் இருந்திருக்கும். ஸ்டுப்பிட்! பார்பி டாலைப் போய்..”

”அருண்..அருண்...” வாசல் பக்கம் குரல் கேட்டது.

“அம்மா, இதைக் கொண்டு கொடுத்துட்டு வரச்சொன்னாங்க ஆண்ட்டி. பாப்பா தெரியாம எடுத்துட்டு வந்துடுச்சி. நான் வரேன் ஆண்டி. வரேன் அருண்”

”ஓ, தாங்க்ஸ் பா” என்றபடி அதை வாங்கிக் கொண்டு திரும்பிய அம்மாவை அருண் பார்த்த பார்வையில் ஆயிரம் கேள்விகள் தொனித்தன. ஆனால் அது அந்த அம்மாவுக்குப் புரியுமா என்பது ஐயமே.

16 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

எக்சலெண்ட் தீபா

நிறைய உணர்வுகள் மேலிடுகின்றன இந்தக் கதையைப் படித்த பின்.

(ஆழ்மனதில் இதுபோன்ற அனுபவங்கள் நிறைய. :(

Unknown said...

குழந்தைகள் உணர்த்தும் பாடம் பெரும்பாலும் ”பெரியவர்களுக்கு” புரிவதில்லை.இது நிச்சயம் புரிதலில் உள்ள கோளாறு தான்.

கதை சூப்பர்....வாழ்த்துக்கள்!

thiru said...

Dear Deepa!

Your story tells in clear terms how we, adults are prejudiced and how that impress upon our kids. In the story, it may be for the toy, but in real life, it may be for a costly book, gadgets, any material we feel possessive, we are prejudiced that others are not deserving and discriminate others based on our narrow perspective.

It happens all the time in different levels for different reasons. Your story pin points the base line, Giving is Godly whereas keeping is human practice.

Thanks,
Thiru

த. ஜார்ஜ் said...

பல நேரங்களில் குழந்தைகளின் செயல்களே நமக்கு கன்னத்தில் அறைந்த மாதிரியாகி விடுகிறது.

நல்ல கருத்து.

Deepa said...

நன்றி அமித்து அம்மா!
//(ஆழ்மனதில் இதுபோன்ற அனுபவங்கள் நிறைய. :(//

!???

நன்றி anto!
நீங்கள் சொல்வது உண்மை தான்.


Thiru!

Thanks for your first visit and comment.
You have perfectly expressed the essence of the story, in the first paragraph of your comment.

நன்றி ஜார்ஜ்!
சரியாச் சொன்னீங்க.

Nathanjagk said...

குழந்தைகளின் உலகை அழகாக படம் பிடித்து விட்டீர்கள்!

மாதவராஜ் said...

நல்ல கதை. சீரான எழுத்து நடை. குழந்தைகளைப் பற்றி பெரியவர்களாகிய நமக்குச் சொல்லிக்கொள்ள எவ்வளவு இருக்கின்றன?

ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய ‘பொம்மை’ படித்திருக்கிறாயா?

அதில் வருகிற அண்ணனுக்கும், உன் கதையில் வருகிற அண்ணனுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்?

கதைகள் ஓவ்வொருவருவரிடமிருந்தும் எப்படியெல்லாம் வெளிப்படுகின்றன!

வாழ்த்துக்கள் தீபா...!

காமராஜ் said...

நல்ல கதை.

பெரியவர்களுக்கு சொல்லப்படவேண்டிய
நிறைய்யப் பாடங்களில் இதுவும் ஒன்று.
இந்த ஏரியாவில் நீன்ங்கள் ரொம்ப ஈடுபாடு
கொண்டவராக இருக்கிறீர்கள்.

உங்கள் முதல் கதை நினைவுக்கு வருகிறது.

Deepa said...

நன்றி ஜெகநாதன்!

நன்றி காமராஜ் ஸார்!


நன்றி அங்கிள்!
ஆம், படித்திருக்கிறேன். இந்தக் கதைக்குத் தலைப்பு வைக்கும் போது நினைவுக்கும் வந்தது.

கே.என்.சிவராமன் said...

உண்மையில் குழந்தைகளிடமிருந்துதான் பாகுபாடற்ற நேசத்தையும், அன்பையும், பிரியத்தையும் பெரியவர்கள் கற்க வேண்டும் இல்லையா?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சந்தனமுல்லை said...

மிக அருமையான கதை தீபா! நல்ல நடை....என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை பாதியிலே ஊகிக்க முடிந்தாலும், முடிவு வரை வாசிக்க வைக்கிறது...கதையின் இயல்பான நடை! வாழ்த்துகள்!!

நேசமித்ரன் said...

கடவுள் மீதமிருக்கும் மனதைக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள்
நாம் மிருகம் வளர்ந்து நிற்கும் மனதோடு என்பதை மிக நுண்ணிய குழந்தைகளின் உலகை முன்னிறுத்தி சொல்லி இருக்கிறீர்கள்

நாஞ்சில் நாதம் said...

கதை சூப்பர்....வாழ்த்துக்கள்

Deepa said...

நன்றி பைத்தியக்காரன்!
நன்றி முல்லை!

நன்றி நேசமித்ரன்!
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றி நாஞ்சில் நாதம்!

valaivikadan said...

தங்கள் படைப்பு வந்துள்ளதா என அறிந்துகொள்ளுங்கள்

http://valaivikadan.blogspot.com/2009/08/blog-post_12.html

தினேஷ் ராம் said...

அவங்க மகனுக்கே பொம்மையை தராதவங்களை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அவர்கள் பொம்மை மேல் வைத்திருக்கும் 'அந்த' பாசத்தின் பின்புலமாக அவர்களின் பாலக பருவத்தின் தீராத வலிகள் இருக்கின்றனவோ என்னமோ?