Thursday, August 6, 2009

ஒரு சிறிய புட்டி

விடுதி உரிமையாளனும் ஊரில் ஓரளவு பணக்காரனுமான ஜுல்ஸ் ஷிக்கோ, தனது வண்டியை மதர் மாக்லோரின் பண்ணை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு இறங்கினான்.

நாற்பது வயது இருக்கும் அவனுக்கு. நல்ல உயரம்; அதற்கேற்ற பருமன்; சிவந்த முகம். தனது குதிரையை வாயிலருகே கட்டிப் போட்டு விட்டு வந்தான். கிழவி திண்ணையில் அமர்ந்து உருளைக்கிழங்குகளைத் தோலுரித்துக் கொண்டிருந்தாள்.

மதர் மாக்லோர் என்ற அந்தக் கிழவியின் பண்ணைக்கு அருகில் தான் அவனுக்கும் கொஞ்சம் நிலம் இருந்தது. அதன் மேல் ரொம்ப நாளாக அவனுக்கு ஒரு கண். அதை வாங்கிப் போடவும் வெகு நாளாக முயற்சி செய்து வந்தான். ஆனால் கிழவியோ தனது நிலத்தை விற்கத் திட்டவட்டமாக மறுத்து விட்டாள்.

“இங்க தான் நான் பொறந்தது வளந்தது எல்லாம். என் கட்டையும் இதே இடத்தில தான் போகணும்.“ என்பது தான் அவள் சொன்னதெல்லாம். அவளுக்கு எழுபத்திரண்டு வயதிருக்கும். ரொம்ப மெலிந்து, தோல் சுருங்கி, தேகாந்திரமும் மடங்கி வற்றிய தோற்றத்துடன் இருப்பாள். ஆனாலும் நல்ல ஆரோக்கியமாகத் தான் இருந்தாள். மேலும் ஒரு சிறுமிக்குரிய சுறுசுறுப்புடன் ஏதாவது வேலை செய்து கொண்டே வளைய வருவாள்.

உள்ளே வந்த ஷிக்கோ தோழமையுடன் அவள் முதுகைத் தட்டி விட்டு அவளருகில் கிடந்த ஸ்டூலில் அமர்ந்தான்.

“எப்படி மதர் எப்போவுமே இப்படி சுறுசுறுப்பாவும் உற்சாகமாவும் இருக்குறே.. பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.”

“நன்றி, எனக்கு ஒரு குறையுமில்ல, நீ எப்படி இருக்கே மெஸ்ஸியர் ஷிக்கோ?”

“ஓ! ரொம்ப நல்லா இருக்கேன், என்ன அப்பப்போ மூட்டு வலி தான் கொஞ்சம் தொந்தரவு கொடுக்குது. மத்தபடி ஒரு குறையுமில்ல.”

“நல்லது”

கிழவி மேலே எதுவும் பேசவில்லை. ஷிக்கோ அவள் வேலை செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முறுக்கேறிய மெல்லிய விரல்கள் நண்டின் கொடுக்குகளைப் போல உருளைக்கிழங்குகளைப் பற்றி, ஒரு பழைய கத்தியைக் கொண்டு அவற்றை லாகவமாகத் தோலுரித்து, நீர் நிரம்பிய இன்னொரு பாத்திரத்தில் எறிந்த வண்ணம் இருந்தன. வேகமாகவும் நீளநீளமாகவும் தோல்கள் உரிந்து விழுந்தன. பழக்கப்பட்ட கோழிகள் மூன்று பறந்து வந்து அவள் மடியில் குதித்துத் தோல்களைக் கவ்விக் கொண்டு தாவியோடின.

ஷிக்கோ தர்மசங்கடமாக உணர்ந்தான். ஏதோ சொல்ல வந்து முடியாமல் விழுங்குபவன் போல காணப்பட்டான்.

பின்பு அவசரமாக, “இங்கெ பாரு மதர் மாக்லோர்..”

“என்ன விஷயம்?”

“உன் பண்ணையை விக்க முடியாதுன்னு நீ உறுதியாத் தான் சொல்றியா?

”நிச்சயமா. நீ உன் மனசை மாத்திக்கோ. நான் சொன்னா சொன்னது தான். இனிமே அந்தப் பேச்சையே எடுக்காதே.“

“ரொம்ப நல்லது. நான் வேற ஒரு வழி வெச்சிருக்கேன்; நம்ம ரெண்டு பேருக்குமே சாதகமா இருக்கற மாதிரி.“

”என்ன அது?“

“அப்படிக் கேளு. நீ எனக்கு அதை விக்கிறே. ஆனாலும் நீயே வெச்சிக்கிறே; எப்படி? புரியலீல்ல, இப்ப நான் சொல்லப் போறத கவனமாக் கேளு!”

கிழவி கைவேலையை நிறுத்தி விட்டுத் தனது அடர்ந்த புருவங்களுக்கு அடியிலிருந்து அவனையே உற்று நோக்கினாள்.

அவன் சொன்னான், “அதாவது உனக்கு நான் ஒவ்வொரு மாசமும் நூற்றம்பது ஃப்ராங்குகள், அதாவது முப்பது கிரவுன்கள் கொடுப்பேன். புரியுதா, ஒவ்வொரு மாதமும் நான் இங்க வந்து உனக்கு முப்பது க்ரவுன்கள் கொடுப்பேன். வேற ஒண்ணும் உன் வாழ்க்கையில மாற்றமே இருக்காது. நீ உன் பண்ணை வீட்டுலயே இருக்கலாம். பண்ணையையும் நீயே நடத்திக்கலாம். என்னைப் பத்திக் கவலையே பட வேண்டாம். நான் குடுக்கற பணத்தை வாங்கிக்கிட்டா போதும். என்ன சரியா?”

சொல்லி விட்டு அவளைப் பார்த்து நட்புடன் சிரித்தான். (கருணை ததும்ப என்று கூடச் சொல்லலாம்!) கிழவி அவநம்பிக்கையுடனே அவனைத் திருப்பிப் பார்த்தாள். என்னவோ சூழ்ச்சி இருப்பது போல் தோன்றியது அவளுக்கு. “எல்லாம் சரி தான். ஆனா உனக்கு அந்தப் பண்ணை கிடைக்காது.”

“அதைப் பத்தியே நீ கவலைப்படாதே. கடவுள் விரும்பற வரைக்கும் நீ எவ்வளவு காலம் வாழணுமோ இங்கேயே நீ இருக்கலாம். ஒண்ணே ஒண்ணு. உன் காலத்துக்கு அப்புறம் பண்ணை எனக்குச் சேரும்படியா ஒரு வக்கீலை வெச்சு நீ உயில் எழுதித் தரணும். உனக்கோ குழந்தைகள் இல்ல. உன் சொந்தக்காரங்களோடயும் உனக்கு ஒட்டு உறவு இல்ல. அப்புறம் என்ன? நீ உயிரோட இருக்கற வரைக்கும் பண்ணை உனக்கே சொந்தம். அத்தோட நான் வேற மாசாமாசம் உனக்கு முப்பது க்ரௌன் தருவேன். உன்னைப் பொறுத்த வரைக்கும் இது லாபம் மட்டுமே.”

கிழவி வியப்படைந்தாள். என்னவோ நெருடினாலும் இந்த ஒப்பந்தம் ரொம்பவே கவர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனாலும் அவள் சொன்னாள். “ நான் உடனே ஒத்துக்க முடியாது. கொஞ்சம் யோசிக்கணும். நீ ஒரு வாரம் கழிச்சுத் திரும்பி வா. என் முடிவைச் சொல்றேன்.”

மிக்க மகிழ்ச்சியுடன் ஒரு ராஜாங்கத்தையே வென்ற அரசனைப் போல களிப்புடன் திரும்பிச் சென்றான் ஷிக்கோ.

மதர் மாக்லோர் அன்று இரவு தூங்காமல் இதைப் பற்றியே சிந்தித்தாள். அடுத்து வந்த் நான்கு நாட்களும் குழப்பமான மனநிலையிலேயே இருந்தாள். இதில் தனக்குப் பாதகமாக ஏதும் சூது இருக்குமோ என்று சிந்தித்த படியே இருந்தாள். ஆனால் மாதா மாதம் வரப்போகும் அந்த முப்பது கிரவுன்கள், வானத்திலிருந்து திடீரென்று அதிர்ஷ்டவமாகத் தனது மடியில் வீழ்வது போலத்தானே என்றும் எண்ணினாள்.

அடுத்த நாள் வக்கீலிடம் சென்று இதைப் பற்றிப் பேசினாள். அதை ஏற்றுக்கொள்ளும்படிச் சொன்ன அவர் மாதம் முப்பது கிரவுனுக்குப் பதில் ஐம்பது கிரவுன்களாகக் கேட்கும்படி அறிவுறுத்தினார். அவளது பண்ணை குறைந்தபட்சம் மதிப்பிட்டால் கூட அறுபதினாயிரம் ஃப்ராங்குகள் பெறும் என்று சுட்டிக் காட்டினார்.

”நீ இன்னும் பதினைந்து ஆண்டுகள் உயிரோடிருந்தால் கூட அவன் நாற்பத்தைந்தாயிரம் ஃப்ராங்குகள் தான் செலுத்தி இருப்பான்.”

கிழவி மாதம் ஐம்பது கிரவுன்கள் கிடைக்கப் போகும் மகிழ்ச்சியில் உடல் நடுங்கினாள். ஆனாலும் அவளுக்கு ஏனோ அச்சமாக இருந்தது. வெகு நேரம் வக்கீலைப் பல கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுத்தாள். இறுதியாக ஷிக்கோ கேட்டபடி உயில் எழுதுமாறு அவரைப் பணித்து விட்டு வீடு திரும்பினாள். நான்கு குடுவைகள் புதிய ஸைடர் மது அருந்தியது போல் அவளுக்குத் தலை கிறுகிறுத்தது.

அவளது முடிவை அறிந்துகொள்ள ஷிக்கோ வந்த போது ரொம்ப நேரம் ஒப்பந்தத்தை ஏற்க முடியாதது போல் பிகு செய்தாள்; உள்ளூர ஐம்பது கிரவுன்களுக்கு அவன் ஒத்துக் கொள்ளாமல் போய்விடுவானோ என்ற பயத்துடன். இறுதியாக அவன் பொறுமை இழப்பது போல் தோன்றியவுடன் தனது கோரிக்கையை முன் வைத்தாள். அவன் பெரும் வியப்படைந்தன்; மறுத்தான். அவனைச் சம்மதிக்க வைக்கும் வண்ணமாகக் கிழவி பேசத் தொடங்கினாள்.

“நான் நிச்சயமா இன்னும் அஞ்சாறு வருஷங்களுக்கு மேல உயிரோட இருக்க மாட்டேன். பாரு, எனக்கு எழுபத்தி மூணு வயசாகுது. ஆனா இந்த வயசுக்கே ரொம்ப தளர்ந்து போயிட்டேன். முந்தா நாளு கூட சாயங்காலம் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியல. போற வேளை வந்துடுச்சோன்னே நெனச்சேன்.”

ஆனாலும் ஷிக்கோ மசியவில்லை.

“அட சும்மா இரு கிழவி. நீ நல்லா குத்துக்கல்லாட்டம் இருக்கே. உனக்கு நூறாயுசு இருக்கு. என்னையும் மண்ணுக்குள்ள அனுப்பிட்டுத் தான் நீ போவே.”

அன்று நாள் முழுதும் இந்தப் பேரப் பேச்சு நடந்தது. கிழவி கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் போகவே ஷிக்கோ கடைசியில் ஐம்பது கிரவுன்கள் கொடுக்க இணங்க வேண்டியதாயிற்று. மேற்கொண்டு பத்து கிரவுன்களும் பேரத்தை முடித்ததற்காக ஒரே தடவையாகக் கேட்டு வாங்கிக் கொண்டாள் கிழவி.

மூன்று ஆண்டுகள் சென்றன. கிழவி கொஞ்சமும் உடல் தளரவில்லை. ஷிக்கோ கவலை கொள்ளத் தொடங்கினான். என்னவோ ஐம்பது ஆண்டுகளாகக் கப்பம் செலுத்தி வருவது போல் தோன்றியது அவனுக்கு. தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக, நயமாக வஞ்சிக்கப் பட்டதாக எண்ணினான். அறுவடைக்குப் பயிர் முற்றி விட்டதா என்று பார்த்து வரும் விவசாயியைப் போல, அவ்வப்போது கிழவியைச் சென்று பார்த்து வருவான். எப்போதும் அவனை ஒரு ஏளனப் பார்வையுடனேயே சந்திப்பாள் கிழவி. அது அவனை ஏமாற்றி விட்டதற்காகத் தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதைப் போல் இருக்கும்.

அவள் ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் இருப்பதைக் கண்டு மனம் வெம்பித் திரும்புவான் ஷிக்கொ, “கிழட்டுப் பைத்தியமே, நீ சாகவே மாட்டியா” என்று முனகியபடி.

என்ன செய்வதென்று தெரியாமல் அவளைப் பார்த்தாலே கழுத்தை நெறித்துக் கொன்றுவிட வேண்டும் போல் வெறி கொள்ள ஆரம்பித்தான். விஷம் போல் வெறுத்தான் அவளை. தன் சொத்தைக் கொள்ளை கொண்ட திருடனை வஞ்சம் தீர்க்க நினைப்பது போல அவளைத் தீர்த்துக்கட்டுவது பற்றியே எண்ணமிடலானான்.

ஒரு நாள் அவளைப் பார்க்க வந்தான். வரும்போது இரு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று தேய்த்துக் கொண்டே வந்தான். (முதன் முதலில் இந்த யோசனையைத் தெரிவிக்க வந்த போதும் அப்படித் தான் செய்து கொண்டு இருந்தான்.)

சிறிது நேர அரட்டைக்குப் பின் சொன்னான், “ஏன் நீ என் வீட்டுப் பக்கமே வரதில்ல. எப்ரெவில் வரும் போது எங்க வீட்டுக்கு வந்து ஒரு வேளை சாப்பிட்டுப் போகலாமில்ல? ஊர்ல எல்லாரும் உனக்கும் எனக்கும் ஏதோ பகை போல பேசிக்கிறாங்க. எனக்கு அது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. உனக்கு விருந்து கொடுக்கறது ஒண்ணும் எனக்குச் சிரமமில்ல. எப்போ விருப்பமோ வா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”

மதர் மாக்லோருக்கு இந்த விஷய்த்தில் அதிக உபசாரம் தேவைப்படவில்லை. அடுத்த நாளே சந்தை நாளாக இருந்ததால், வண்டி கட்டிக் கொண்டு டவுனுக்குப் போய்விட்டு விருந்தை எதிர்பார்த்து ஷிக்கோவின் வீட்டுக்குப் போனாள்.

விடுதிக்காரன் ஷிக்கோ பெரிதும் மகிழ்ந்தான். வறுத்த கோழி, ஆட்டுக் கால் சூப், இனிப்பு புட்டிங், பன்றிக்கறி, நிறைய காய்கறிகள் என்று ராஜோபசாரத்துடன் விருந்தளித்தான். ஆனால் கிழவி என்னவோ பேருக்குக் கொறித்தாள். அவள் எப்போதுமே கொஞ்சம் சூப்பும் ரொட்டியுமாக எளிமையாக சாப்பிட்டுப் பழகியவள். ஷிக்கோவுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவளை நன்றாகச் சாப்பிடும்படி வற்புறுத்திக் கொண்டே இருந்தான். அவள் மறுத்தாள். காப்பி கூட வேண்டாமென்று விட்டாள். அதனால் அவன் கேட்டான், “அது சரி, ஆனா ஒரு சின்ன பெக் பிராந்தியோ ஒயினோ கூட குடிக்க மாட்டியா?”

“அது வந்து, பரவாயில்லன்னு தான் நினைக்கிறேன்.” என்று கிழவி தயங்கியவாறே சம்மதிப்பதற்குள் ஷிக்கோ உரக்கக் கத்தினான். “ரோஸலி, அந்தப் சூப்பர் பிரந்தியை எடுத்துட்டு வா, உனக்குத் தெரியுமே, அந்த “ஸ்பெஷல்!”

பணிப்பெண் ஒரு அழகிய நீளமான பாட்டிலைத் தட்டில் ஏந்தியபடி வந்து இரு கிளாஸ்களில் நிரப்பினாள்.

“குடிச்சுப் பாரு, பிரமாதமா இருக்கும்.”

கிழவி அதன் சுவை நெடு நேரம் நாவில் தங்கும்படியாக கொஞ்சம் கொஞ்சமாக அதைச் சீப்பிக் குடித்தாள். காலி கிளாஸைக் கீழே வைத்ததும் சொன்னாள். “ஆமாம், ரொம்பப் பிரமாதம்”

அவள் சொல்லி முடிக்கும் முன் அவளது கோப்பையை மீண்டும் நிரப்பினான் ஷிக்கோ. மறுக்க நினைத்தாலும் கிழவியால் முடியவில்லை. மீண்டும் அதை ரசித்துப் பருகினாள். இன்னும் ஒரு கோப்பை குடிக்கும் படி வேண்டினான். அவள் பிடிவாதமாக மறுக்கவும்,

“அய்யோ இது பால் மாதிரி தான். ரொம்ப இதமானது. நான் ஒரு டஜன் கிளாஸ் கூடக் குடிச்சிருக்கேன். ஒண்ணுமே ஆகாது. சும்மா தேன் மாதிரி உள்ள போகும்; தலைவலி கூட வராது. நாக்கிலயே ஆவியாகிடற மாதிரி. உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது.“

அவள் வாங்கிக் கொண்டாள்; அவளுக்கு உண்மையிலேயே ஆசையாக இருந்தது அதைக் குடிக்க. ஆனால் பாதிக்கு மேல் அவளால் குடிக்க முடியவில்லை. ஷிக்கோ ரொம்பப் பெருந்தன்மையான பாவத்துடன் சொன்னான். “இங்கெ பாரு உனக்கு இது ரொம்பப் பிடிச்சிருக்கறதால் உனக்கு ஒரு சின்ன புட்டி தர்றேன், நம்மளோட நல்ல நட்புக்கு அடையாளமா!”

அவள் அதை வாங்கிக் கொண்டு விடைபெற்றாள்; தள்ளாடியபடியே.

அடுத்த நாள் அவள் வீட்டுக்கு மறுபடியும் போனான் ஷிக்கோ, அதே போல் இன்னொரு மதுக்குடுவையுடன். அதையும் ருசிபார்க்கச் சொன்னான். பின் இருவரும் அமர்ந்து மேலும் இரண்டு மூன்று கோப்பைகள் மது அருந்தினர். போகும் போது சொன்னான், “இதோ பாரு, தீர்ந்து போனவுடன் இன்னும் வேணும்னா தாராளமா என்னைக் கேளு, ஒண்ணும் தயங்கவேண்டாம். உனக்குக் குடுக்கறதுல எனக்குச் சந்தோஷம் தான்.”

நான்கு நாட்கள் கழித்து மீண்டும் வந்தான். கிழவி வாசலில் அமர்ந்து ரொட்டியைத் துண்டு போட்டுக் கொண்டிருந்தாள். அவளருகே சென்று குனிந்து லேசாக முகர்ந்து பார்த்தான். மது நெடியடித்தது. பரம திருப்தி அடைந்தான்.

“எனக்கு ஒரு க்ளாஸ் ஸ்பெஷல் தர மாட்டியா?” அவன் கேட்டான்.

ஆளுக்கு மூன்று கிளாஸ்கள் குடித்தனர். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு மதர் மாக்லோர் குடிப்பது அக்கம்பக்கத்தில் செய்தியாய்ப் பரவ ஆரம்பித்தது. கிழவி எப்படியோ தானாகவே குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விட்டதாகக் கிசுகிசுக்கத் தொடங்கினர். அடுப்பங்கரையில், தெருவோரங்களில் என எங்காவது கட்டை போல் விழுந்து கிடக்கும் அவளைத் தூக்கி வருவதும் நிகழத் தொடங்கியது.

ஷிக்கோ அவள் வீட்டுப் பக்கம் போவதையே நிறுத்திவிட்டான்.
அவ்ளைப் பற்றிய பேச்சு வந்தால் முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு, “இந்த வயதில் கிழவிக்குக் குடிப்பழக்கம் ஏற்பட்டது ரொம்ப துரதிர்ஷ்டம் தான். இனிமே நிறுத்தறது முடியவே முடியாது. பாவம் சீக்கிரமே மண்டையைப் போட்டுடுவான்னு தோணுது.”

நிச்சயமாக அது தான் நடந்தது. குளிர்காலம் வந்ததும் சில நாட்களில் கிழவி இறந்து போனாள். கிறிஸ்துமஸ் சமயம் குடித்து விட்டு பனியில் மயங்கி விழுந்தவளை, அடுத்தநாள் உயிரற்ற சடலமாகக் கண்டெடுத்தார்கள்.

பண்ணையைச் சொந்தமாக்கிக் கொள்ள வந்த ஷிக்கோ சொன்னான், “முட்டாள் கிழவி. அவ மட்டும் குடிக்காம இருந்திருந்தா இன்னும் பத்து வருஷம் நல்லா இருந்திருப்பா.”

(மூலக்கதை மாப்பஸான் ஃப்ரெஞ்சில் எழுதியது. The Little Cask என்ற அதன் ஆங்கிலப் பெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது.)

18 comments:

சந்தனமுல்லை said...

ரொம்ப அழகா வந்திருக்கு தீபா! நல்ல தமிழாக்கம்!

நேசமித்ரன் said...

நல்ல மொழிபெயர்ப்பு
பகிர்வுக்கு நன்றி .ஓட்டளித்தாயிு இரண்டு திரட்டிகளிலும்

காமராஜ் said...

எண்பதுகளில் தோழர் SAP பேசும்போது கேட்டு
அபிமானமாகிப்போன (மிரட்டப்பட்ட) எழுத்தாளர்களில் மாப்பசானும் ஒருவர்.
இப்போது தான் முதல் கதை படிக்கிறேன். நல்ல கதை, நல்ல செயல்
வாழ்த்துக்கள் தீபா.

Deepa said...

நன்றி முல்லை!

நன்றி நேசமித்ரன்!
ஓட்டளிப்புக்கு நன்றி. ஆனால் அதை விட நீங்கள் இதைப் படிப்பது தான் அதிக சந்தோஷம்.

நன்றி காமராஜ் ஸார்!

Deepa said...

காமராஜ் ஸார்,
மாப்பஸானின் இன்னும் இரு கதைகள் இங்கே இருக்கின்றன.

ஒரு சின்ன கயிறு:
http://deepaneha.blogspot.com/2009/07/blog-post_17.html

The necklace - part 1
http://deepaneha.blogspot.com/2009/03/blog-post_22.html

The necklace - part 2
http://deepaneha.blogspot.com/2009/03/necklace-part-2-end.html

நேரமிருக்கும் போது வாசித்துப் பாருங்கள். நன்றி.

அகநாழிகை said...

நல்ல கதை. மது என்பது மட்டுமின்றி ஒரு விஷயத்திற்கு அடிமையாகிப் போன பிறகு அதிலிருந்து மீளவியலாமல்,அழிவைச் தேடிச்செல்வதை அழகாகச் சொல்லியிருக்கிறார் மாப்பசான். வாசிக்கத் தடங்கலற்ற மொழிபெயர்ப்பு.

நன்றாயிருக்கிறது, தீபா.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

தினேஷ் said...

மதுக்கு குடிமகன்கள் மட்டுமில்ல பெருங்கிழடிகளும் நாசமா போயிடுவாங்கனு சொல்ற நல்ல நீதி கதை :):)..

அது சரி(18185106603874041862) said...

கதை நல்லாருக்கு...மொழி பெயர்ப்பு....ரொம்ப உயிரோட்டமா இருக்கு...சிறப்பான மொழி பெயர்ப்பு...நன்றி.

செல்வநாயகி said...

நல்ல மொழிபெயர்ப்பு.

Deepa said...

நன்றி அகநாழிகை
நன்றி சூரியன்
நன்றி அது சரி
நன்றி செல்வநாயகி

நாஞ்சில் நாதம் said...

நன்றாயிருக்கிறது மொழி பெயர்ப்பு

நாஞ்சில் நாதம் said...

நன்றாயிருக்கிறது மொழி பெயர்ப்பு

அமுதா said...

நல்ல கதை. நல்ல மொழிபெயர்ப்பு. நன்றி தீபா

மாதவராஜ் said...

முக்கியமான கதை. சொல்லாமல் சொல்லும் விஷயங்கள் ஏராளம். ஒருவரின் மரணத்திற்கு காத்திருக்கும் ஒருவன் என்பதாக வாழ்க்கை இருப்பது எவ்வளவு மோசமானது. அடுத்தவரின் பலவீனங்களை அளப்பது எவ்வளவு இழிவானது. பொருள் குறித்தும், மனித உறவுகள் குறித்தும் மாப்பாசன் கதைகள் நிறைய பேசுகின்றன. உலகமயமாக்கல் முன்னிலைப்படுத்தப்படும் இந்நாட்களில் இக்கதை தனிமனிதர்களுக்கு மட்டுமில்லாது, நாடுகளுக்கும் பொருத்தமாகிறது. தீபா!ஒவ்வொரு கதைக்கும், உன் மொழியாக்கத்தின் வளமை கூடுகிறது. வாழ்த்துக்களும், நன்றியும்.

Unknown said...

Wonderful. Feeling proud of you, friend.
--Ramki

Deepa said...

நன்றி நாஞ்சில் நாதம்
நன்றி அமுதா
நன்றி அங்கிள்,

//ஒருவன் என்பதாக வாழ்க்கை இருப்பது எவ்வளவு மோசமானது. அடுத்தவரின் பலவீனங்களை அளப்பது எவ்வளவு இழிவானது. பொருள் குறித்தும், மனித உறவுகள் குறித்தும் மாப்பாசன் கதைகள் நிறைய பேசுகின்றன. //

மிகச்சரியாகச் சொன்னீர்கள் அங்கிள்.
அதுவும் இதையெல்லாம் மிக இயல்பான நிகழ்வுகள் மூலம் அழுத்தமாகக் கூறுகிறார் மாப்பஸான். அதனாலேயே அவரின் எழுத்துக்கள் மீது அலாதியான ஒரு ஈடுபாடு ஏற்படுகிறது.

நன்றி ராம்கி!
நீங்கள் பதிவு தொடங்கிவிட்டீர்களா? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் உங்கள் எழுத்துக்களை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அருமையான மொழிபெயர்ப்பு தீபா!

இன்னும் இன்னும் நிறைய எழுதவேண்டுகிறேன் இது போல.

ஜெனோவா said...

Nalla Pathivunga,arumaiyaana mozhipeyarppum kooda...

thodarnthu eluthungal,
vazthukal,
Joe