Sunday, December 30, 2012

ஒரு வேண்டுகோள்

நிர்பயாவுக்காகக் கண்ணீர் சிந்தும் அனைவருக்கும், குறிப்பாக சினிமாப் பிரபலங்களுக்கு ஒரு வேண்டுகோள்:


உங்கள் அறச்சீற்றத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் என் வணக்கங்கள். உங்கள் முக்கிய அலுவல்களுக்கிடையே கொடுமையான அநீதி இழைக்கப்பட்ட ஒரு சாமனியப் பெண்ணுக்காக நீங்கள் இரங்கலும் கோபமும் தெரிவிப்பது நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கிறது.


அத்துட‌ன்,

கயர்லாஞ்சியில் சாதி இந்துக்களின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்கவும், சுயகௌரவத்துடன் வாழவும் பௌத்த மதத்தைத் தழுவி இருந்த பய்யலால் போட்மாங்கேயின் மனைவி சுரேகா, மகள் பிரியங்கா (அவர்களின் சடலங்கள் கூட) சந்தித்த சொல்லொணாக் கொடூரங்களையும்,

குஜராத்தில், கலவரத்துக்குச் சிலகாலம் முன்புவரை மகளே என்று அழைத்தவர்களே ஐந்து மாதக் கர்ப்பிணி என்றும் பாராமல் வன்புணர்ச்சி செய்த பில்கிஸ் பானோவையும், அவர் கண்முன்னே கல்லில் தலை மோதிக் கொல்லப்பட்ட அவரது இரண்டு வயது மகளையும்,


சட்டீஸ்கர் காட்டில் பட்டாம்பூச்சியாய் உலவித்திரிந்த 16 வயது மீனா கால்கோவைக் காவல் துறையனரே கடத்திச் சென்று சின்னாபின்னப் படுத்தி, பின் அவளை நக்ஸல் என்றும் காமுகி என்றும் சித்தரித்த‌ அவலத்தையும்,



சோனி சூரியைச் சித்திரவதைக்கு ஆளக்கிய காவல் துறையினருக்கு நம் மாண்பு மிகு அரசு பதக்கம் அளித்து மகிழ்ந்ததையும்,



திருச்செந்தூர் அருகே கிராம‌த்தில் ப‌ள்ளி சென்று திரும்பிய 13 வயது சிறுமி புனிதாவை வ‌ன்புண‌ர்ச்சி செய்து கொல்ல‌ப்ப‌ட்டு முட்புத‌ரில் வீச‌ப்ப‌ட்ட‌தையும்,



மேலும், பல்லாயிரக்கணக்கான கொடூரத்தின் உச்சத்தை அனுபவித்த ஈழத் தமிழ்ச் சகோதர சகோத‌ரிகளையும்,


இன்னும் இன்னும் இளகிய மனங்களுக்குச் சட்டென்று எட்டிடாத வகையில் சின்ன எழுத்துக்களில், நாளிதழ் உள் பக்கத்தில் குற்றங்கள் பகுதியில் வந்து கொண்டிருக்கும், அல்லது மொத்தமாக மறைக்கப்பட்டிருக்கும், நாள்தோறும் பெண்க‌ளுக்கு இழைக்க‌ப்ப‌ட்டு வரும் எத்தனையோ அநீதிக‌ளையும்...


தயவு செய்து உங்கள் உணர்ச்சித் ததும்பும் உரைகளிலும் ட்வீட்டுகளிலும் முகநூல் நிலைச்செய்திகளிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சினிமா பிரபலங்களை சற்று அதிகமாகவே உற்று நோக்கும் கூட்டம் நாங்கள்.

Monday, December 10, 2012

பார‌தீ!

அக்கினிக் கவிஞன் அவதரித்த நாளின்று!





"கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும்

நடு வயதினனுக்குள்ள மனத் திடனும்

இளைஞனுடைய உத்ஸாகமும்

குழந்தையின் ஹ்ருதயமும்

தேவர்களே, எனக்கு எப்போதும்

நிலைத்திருக்கும்படி அருள் செய்க…”



"பொன்னை உய‌ர்வைப் புக‌ழை விரும்பிடும்

என்னைக் க‌வ‌லைக‌ள் தின்ன‌த் தகாதென்று"


பாடிய‌ க‌விஞ‌ன் வாழ்ந்த‌ இம்ம‌ண்ணில் தான்,

பொன் வேண்டும், பொருள் வேண்டும், புகழ் வேண்டும்...

உய‌ர்வைப் ப‌ற்றி என‌க்கேன் க‌வ‌லை என்று பொய் ப‌க‌ர்ந்து திரியும் பித்த‌ர்க‌ள் உல‌வுகிறார்கள்.




ச‌த்திய‌த்தின் நாடி துடிக்க‌ வேண்டும் க‌விஞ‌ன‌து எழுத்தில்.



சீற்றம் அழகு

காதல் அழகு

காமம் அழகு

சோகம் அழகு



க‌விதைக்கு ம‌ட்டும‌ல்ல‌, அலங்காரங்கள் எத்தனை புனைந்த போதும் பொய் என்றுமே அழ‌கில்லை.

மாயையே! மாயையே!

இந்தப் பாடலில் மகாகவியின் சீற்றமும் வேகமும் அதிகமாக வெளிப்பட்டாலும் எப்போது இதைப் படித்தாலும் மனதில் இனம்புரியாத சாந்தமும் அமைதியும் நிலவுகிறது.



என்ன ஒரு எழுத்து? தமிழ் தேனும் அமுதும் மட்டுமல்ல தீயைப் போல் கனன்று எரிய‌வும் வ‌ல்ல‌து என்பதை பாரதியின் எழுத்துக்களில் தான் முழுமையாகக் கண்டுண‌ர்ந்தேன்!

ஏனோ இன்று இதைத் தேடி எடுத்துப் படிக்கவும் பகிரவும் தோன்றியது.

உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ ?

மாயையே - மனத்

திண்மையுள்ளாரை நீ செய்வது

மொன்றுண்டோ ! - மாயையே !



எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்

மாயையே - நீ

சித்தத் தெளிவெனுந் தீயின்முன்

நிற்பாயோ ? - மாயையே!



என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்

கெட்ட மாயையே ! - நான்

உன்னைக் கெடுப்ப துறுதியென்

றேயுணர் - மாயையே !



சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு

மாயையே ! - இந்தத்

தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்

செய்வாய் ! - மாயையே !



இருமை யழிந்தபின் எங்கிருப்பாய், அற்ப

மாயையே ! - தெளிந்

தொருமை கண்டார் முன்னம் ஓடாது

நிற்பையோ ? - மாயையே !



நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ

மாயையே - சிங்கம்

நாய்தரக் கொள்ளுமோ நல்லர

சாட்சியை - மாயையே !



என்னிச்சை கொண்டுனை யெற்றி விட

வல்லேன் மாயையே ! - இனி

உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்

வராது காண் - மாயையே !



யார்க்கும் குடியல்லேன் யானென்ப

தோர்ந்தனன் மாயையே ! - உன்றன்

போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்

உன்னை - மாயையே !


(மீள்பதிவு)