Sunday, December 30, 2012

ஒரு வேண்டுகோள்

நிர்பயாவுக்காகக் கண்ணீர் சிந்தும் அனைவருக்கும், குறிப்பாக சினிமாப் பிரபலங்களுக்கு ஒரு வேண்டுகோள்:


உங்கள் அறச்சீற்றத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் என் வணக்கங்கள். உங்கள் முக்கிய அலுவல்களுக்கிடையே கொடுமையான அநீதி இழைக்கப்பட்ட ஒரு சாமனியப் பெண்ணுக்காக நீங்கள் இரங்கலும் கோபமும் தெரிவிப்பது நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கிறது.


அத்துட‌ன்,

கயர்லாஞ்சியில் சாதி இந்துக்களின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்கவும், சுயகௌரவத்துடன் வாழவும் பௌத்த மதத்தைத் தழுவி இருந்த பய்யலால் போட்மாங்கேயின் மனைவி சுரேகா, மகள் பிரியங்கா (அவர்களின் சடலங்கள் கூட) சந்தித்த சொல்லொணாக் கொடூரங்களையும்,

குஜராத்தில், கலவரத்துக்குச் சிலகாலம் முன்புவரை மகளே என்று அழைத்தவர்களே ஐந்து மாதக் கர்ப்பிணி என்றும் பாராமல் வன்புணர்ச்சி செய்த பில்கிஸ் பானோவையும், அவர் கண்முன்னே கல்லில் தலை மோதிக் கொல்லப்பட்ட அவரது இரண்டு வயது மகளையும்,


சட்டீஸ்கர் காட்டில் பட்டாம்பூச்சியாய் உலவித்திரிந்த 16 வயது மீனா கால்கோவைக் காவல் துறையனரே கடத்திச் சென்று சின்னாபின்னப் படுத்தி, பின் அவளை நக்ஸல் என்றும் காமுகி என்றும் சித்தரித்த‌ அவலத்தையும்,சோனி சூரியைச் சித்திரவதைக்கு ஆளக்கிய காவல் துறையினருக்கு நம் மாண்பு மிகு அரசு பதக்கம் அளித்து மகிழ்ந்ததையும்,திருச்செந்தூர் அருகே கிராம‌த்தில் ப‌ள்ளி சென்று திரும்பிய 13 வயது சிறுமி புனிதாவை வ‌ன்புண‌ர்ச்சி செய்து கொல்ல‌ப்ப‌ட்டு முட்புத‌ரில் வீச‌ப்ப‌ட்ட‌தையும்,மேலும், பல்லாயிரக்கணக்கான கொடூரத்தின் உச்சத்தை அனுபவித்த ஈழத் தமிழ்ச் சகோதர சகோத‌ரிகளையும்,


இன்னும் இன்னும் இளகிய மனங்களுக்குச் சட்டென்று எட்டிடாத வகையில் சின்ன எழுத்துக்களில், நாளிதழ் உள் பக்கத்தில் குற்றங்கள் பகுதியில் வந்து கொண்டிருக்கும், அல்லது மொத்தமாக மறைக்கப்பட்டிருக்கும், நாள்தோறும் பெண்க‌ளுக்கு இழைக்க‌ப்ப‌ட்டு வரும் எத்தனையோ அநீதிக‌ளையும்...


தயவு செய்து உங்கள் உணர்ச்சித் ததும்பும் உரைகளிலும் ட்வீட்டுகளிலும் முகநூல் நிலைச்செய்திகளிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சினிமா பிரபலங்களை சற்று அதிகமாகவே உற்று நோக்கும் கூட்டம் நாங்கள்.

Labels:

3 Comments:

At December 31, 2012 at 12:01 AM , Blogger ஹுஸைனம்மா said...

இவர்கள் பெண்களை திரைகளில் கவர்ச்சிப் பதுமைகளாகச் சித்தரிக்காமல் இருந்தாலே போதும். அதுவே பெண்ணினத்திற்கு ஆற்றும் பெருந்தொண்டு.

 
At January 1, 2013 at 7:45 AM , Blogger மாற்றுப்பார்வை said...

சிறப்பான பதிவு..

 
At January 2, 2013 at 7:12 PM , Blogger வல்லிசிம்ஹன் said...

சினிமாவில் நிகழும் கொடுமைகளைச் சித்தரிக்காமல் இருந்தாலே கால் பகுதி மக்களினம் திருந்தும்.
நன்றி.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home