Tuesday, October 12, 2010

நான் தம்மடிக்கிற ஸ்டைலப் பாத்து...

குடியைப் பற்றி இந்தப் பதிவைப் படித்த‌தும் எனக்கு இன்னொரு விஷயத்தைப் பற்றி எப்போதோ எழுதி ட்ராஃப்டில் வைத்திருந்த இந்த‌ இடுகை நினைவுக்கு வந்தது. அது வேறோன்றுமில்லை - சிகரெட்! எனக்குச் சின்ன வயதிலிருந்தே சிகரெட் பிடிப்பதைப் பார்க்கப் பிடிக்கும்.

ரோட்டோரமாக‌ வெட்டியாக நின்று போகிற வருகிற பெண்களைக் கவர்வதற்காகப் பிலிம் காட்டுவார்களே, அதுவல்ல‌. சீரியஸாக ஏதாவது வேலை செய்து கொண்டே, (அல்லது புத்தக‌ம் படித்துக் கொண்டு, எழுதிக் கொண்டு) சிகரெட் பிடிப்பதைப் பார்க்க ரொம்பப் பிடிக்கும்.

வீட்டில் மோட்டார் ரிப்பேர் பார்க்க, ப்ளம்பிங் வேலை செய்ய ஒருவர் வருவார். அவர் வாயில் எப்போதும் சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும். வேலையினூடே சிகரெட்டைத் தன் அசிஸ்டென்டிடம் கொடுத்து விட்டு, அவ்வப்போது திரும்பிப் பார்க்காமல் கை நீட்டி வாங்கிக் கொள்வார். அந்த‌ச் செய்கையை ஏனோ ரொம்ப‌ ர‌சித்திருக்கிறேன்.

என் வீட்டில் எல்லா ஆண்களுமே (except Joe) இந்த விஷயத்தில் கெட்டுக் குட்டிச் சுவ‌ரான‌ த‌ண்ணி தெளிச்சு விட்ட‌ கேஸ்க‌ள் தான். அதுவும் நம் அபிமானப் ப‌திவர் இருக்கிறாரே, ஆண்டு தோறும் கடமை தவறாமல் என் அக்காவின் பிறந்த நாளன்று இந்தப் பழக்கத்தை அடியோடு நிறுத்துவார்!

அப்பா சிகரெட்டாகப் பிடித்துப் பார்த்ததில்லை. பைப்பில் புகையிலை போட்டுப் பிடிப்பார். ஆனால் எனக்கு பைப்பை விட விரல்களினூடே மெல்லிசாய்ப் புகை கசியும் சிகரெட் மீது தான் ஈர்ப்பு!

வளர்ந்ததும் பெண்ணாகி விடுவோம், நமக்கென்று வேறு வரையறைகள் இருக்கும் என்றெல்லாம் உணராத பருவம் அது. சயின்டிஸ்டாக வேண்டும் என்ற கனவு இருந்த போது கூட, தாடியும் கண்ணாடியுமாக என்னை உருவப்படுத்திப் பார்த்துக் கொண்ட ஞாபகம் வருகிறது! அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் நாமும் சிகரெட் பிடிக்கலாம் என்றே கனவு கண்டு கொண்டிருந்தேன்.

க‌ல்லூரியில் எப்போதும் ரேனால்ட்ஸ் பேனாவை வாயில் வைத்து ஸ்டைல் காட்டிக் கொண்டிருந்த எனக்கு, ஒரு பிறந்த நாளன்று ந‌ண்ப‌ர்கள் சிக‌ரெட்டும் திப்பெட்டியும் ப‌ரிச‌ளித்ததும், நானும் வீம்புக்கு வ‌குப்ப‌றையிலேயே அதைப் ப‌ற்ற‌ வைத்த‌தும் ப‌யந்து அவ‌ர்க‌ள் ஓட்ட‌மெடுத்த‌தும் நினைவுக்கு வ‌ருகிற‌து. ஆனால் என‌க்குச் சரியாகப் பிடிக்க‌த் தெரிய‌வில்லை. க‌ச‌க்கி எறிந்து விட்டேன்.

பிறகு அறிவு கொஞ்சம் வளர்ந்த பின், சிகரெட்டால் விளையும் கேடுகள், சீர் குலைந்த குடும்பங்கள், முக்கியமாய்ச் சதா சிகரெட் பிடித்து டிபி வந்து இறந்த எத்தனையோ பேரைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு சிகரெட் மீது தீரா வெறுப்பு வந்தது உண்மை. குடிப்ப‌தை விட‌ மோச‌மாக‌வும் வேக‌‌மாக‌வும் ஆட்கொள்ளும் ப‌ழ‌க்க‌ம் இது என்ப‌தையும் உண‌ர்ந்து கொண்டேன்.

இருந்தாலும் புகையிலைக்குப் ப‌திலாக‌, வேறேதாவ‌து, புகையாக‌ உட‌லுள்ளே சென்றால் ந‌ன்மை அளிக்க‌க் கூடிய‌ மூலிகை சிக‌ரெட் த‌யாரிக்க‌லாம் தானே?அப்ப‌டி சிக‌ரெட்டுக‌ள் வ‌ரும் நாளில் பெண்க‌ள் கூட ஸ்டைலாகப் புகை பிடித்துக் கொண்டு பாட‌லாம்..."நான் த‌ம்ம‌டிக்கிற‌ ஸ்டைல‌ப் பாத்து த‌ன‌சேக‌ர் விரும்புச்சு..."

19 comments:

sathishsangkavi.blogspot.com said...

புகை நம் உயிருக்கு பகை....

கவி அழகன் said...

சுவாரிசியமான படைப்பு
வாழ்த்துக்கள்

ரமேஷ் வைத்யா said...

pathivu azagu azagu azagu! 100% kachitham.

ஜெயந்த் கிருஷ்ணா said...

சுவாரஸ்யமான பதிவு..

அம்பிகா said...

இப்படி ஒரு ஆசையா? குட்...
ஆமா..., பதிவை அபிமான பதிவர் இன்னும் படிக்கலியா...?

சின்னப்பயல் said...

எழுத்து சுவாரசியமா இருக்கு.!
புகைத்து வாழ வாழ்த்துக்கள்..:-))

அன்புடன் அருணா said...

/எனக்குச் சின்ன வயதிலிருந்தே சிகரெட் பிடிப்பதைப் பார்க்கப் பிடிக்கும்./
அட! எனக்கும்!

மாதவராஜ் said...

@தீபா!

//பிறகு அறிவு கொஞ்சம் வளர்ந்த பின்//

இதை ஜோவிடம் காண்பித்தாயா?
டேமேஜ்க்கு டேமேஜ்! :-))))))


@அம்பிகா!

யாரு அது?

Deepa said...

நன்றி சங்கவி!
உண்மை தான்.

நன்றி யாதவன்!

நன்றி ரமேஷ் வைத்யா!

நன்றி வெறும்பய!

நன்றி அம்பிகா அக்கா!

நன்றி சின்னப்பயல்!

நன்றி அன்புடன் அருணா!

நன்றி அங்கிள்!
ஓ! காண்பித்தேனே.
அந்தப் பதிவர் யாரா? அம்முவிடம் கேளுங்கள்.

Chitra said...

Nice....

Whenever you have time, read:

http://www.hsph.harvard.edu/news/press-releases/archives/2005-releases/press05292005.html

Gokul Rajesh said...

டேமேஜ்க்கு டேமேஜ்...
இரண்டு டேமேஜும் first class... :)

மூலிகை சிகரெட் idea நல்லா இருக்கேன்னு தேடி பாத்தேன்.
http://en.wikipedia.org/wiki/Herbal_cigarette

Menaga Sathia said...

நல்ல பதிவு!!

'பரிவை' சே.குமார் said...

சுவாரஸ்யமான பதிவு..

ஹுஸைனம்மா said...

//புகையிலைக்குப் ப‌திலாக‌, வேறேதாவ‌து, புகையாக‌ உட‌லுள்ளே சென்றால் ந‌ன்மை அளிக்க‌க் கூடிய‌//

ம்.. கொதிக்கிற வெந்நீயில விக்ஸ் போட்டு வர்ற புகையைப் (ஆவியை) பிடிங்க. அதுவும் உள்ளுக்குப் போனா ரொம்ப நல்லதுதான்!!

:-)))

அமுதா said...

ரொம்ப வெளிப்படையா உங்க ஆசையை சொல்லிட்டீங்க... ”மூலிகை சிக‌ரெட்” நல்ல ஐடியா ... அப்புறம் பிடிக்கிறது சிகரட்டா, மூலிகையானு யாருக்கு தெரியும்?

Radhakrishnan said...

ஹா ஹா! நம்ம ஊரிலதான் இப்படி தீபா.

இன்று காலை ஏழு மணிக்கு கையில் சிகரெட்டுடன் மூன்று பெண்களை பார்த்தேன். அப்பொழுது மனதில் நினைத்தேன், நமது ஊரிலும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என!

ஒரு நாளைக்கு குறைந்தது பத்து சிகரெட்டுகள் குடிக்கும் பெண் வேலை பார்த்த இடம் நுரையீரல் சம்பந்தபட்ட வியாதிக்கு மருந்து கண்டுபிடிப்பது. ம்ஹீம்.

வித்தியாசமான ஆசை. நல்ல பதிவு.

Madumitha said...

சில விஷயங்கள் பார்க்க மட்டுமே
நல்லாயிருக்கும்.

Deepa said...

நன்றி சித்ரா!

நன்றி கோகுல்!

ந‌ன்றி மேன‌கா!

ந‌ன்றி குமார்!

நன்றி ஹுஸைன‌ம்மா!
:))) LOL!

ந‌ன்றி அமுதா!

ந‌ன்றி இராதாகிருஷ்ண‌ன்!

ந‌ன்றி ம‌துமிதா!
உண்மை தான்.

Sriakila said...

நான் கூட என் கோபத்தைக் காட்ட சிகரெட் பிடிக்க ட்ரை பண்ணியிருக்கேன்.

ஆனா அந்தக் கர்மத்தை எப்படித்தான் குடிக்கிறாங்களோ? இப்போ நினைச்சாலும் வாந்தி, வாந்தியா வருது... ஒரே குமட்டல்.. இருமல் தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்தது.

இது போல விபரீதமான வேலையை இனிமே செய்யவே கூடாதுன்னு முடிவு செஞ்சேன்.

எத்தனைப் பேர் எடுத்துச் சொன்னாலும் சிகரெட் பிடிப்பவர்கள் தானாகத் திருந்தினால்தான் உண்டு. இதன் பாதிப்பு வாழ்க்கையின் அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிக்கும். இது சம்பந்தப்பட்டவர்களுக்குப் புரிவதே இல்லை.

இதைக் கைவிட எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் நான் தோற்றுத்தான் போனேன்.

//இருந்தாலும் புகையிலைக்குப் ப‌திலாக‌, வேறேதாவ‌து, புகையாக‌ உட‌லுள்ளே சென்றால் ந‌ன்மை அளிக்க‌க் கூடிய‌ மூலிகை சிக‌ரெட் த‌யாரிக்க‌லாம் தானே?//

இது போல நல்ல விஷயம் மட்டும் நடந்தால் முதலில் சந்தோஷப்படுபவள் நானாகத்தான் இருப்பேன்.