Monday, October 18, 2010

ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம்!

நேஹாவை நேற்று பள்ளியில் சேர்த்து விட்டு வந்தோம்.சென்ற மாதமே சேர்த்துவிட விரும்பினேன். ஆனால் அடுத்தமாதம் விஜயதசமியோடு தான் சேர்க்கை நடக்கும் என்று சொல்லி விட்டார்கள்.அவளும் ஒரு மாதமாக அந்தப் பள்ளியின் பெயரைக் கூறிச் சேரப்போவதாக எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருப்பாள்.

நேற்றுப் போய் பணம் கட்டி விட்டு அவர்கள் கொடுத்த விண்ணப்பங்களையெல்லாம் பூர்த்தி செய்து, சொன்ன விதிமுறைகளுக்கெல்லாம் சிறிது நேரம் மண்டையை ஆட்டிக் கொண்டிருந்து விட்ட பின் குழந்தைகளையும் பெற்றோரையும் ஆக்டிவிட்டி ரூமுக்கு அழைத்துச் சென்றார்கள்.

நான்கு பேர் அமரக்கூடிய தாழ்வான மேஜை நாற்காலிகள் ஆங்காங்கே போடப்பட்டிருந்தன. ஒவ்வொரு குழந்தையையும் பெற்றோரையும் ஒரு மேஜையைச் சுற்றி அமரச் செய்து, வண்ணம் தீட்டும் புத்தகம் ஒன்றைக் கொடுத்து வர்ணம் தீட்டச் சொன்னார்கள்.

சில குழந்தைகள் சமர்த்தாகச் செய்ய ஆரம்பித்தன. நேஹா வயதுடைய ஒரு சிறுமி அழகாக கோடுகளுக்குள் சொன்னபடி தீட்டிக் கொண்டிருந்தாள்.
நேஹா என்ன செய்யப் போகிறாள் என்று ஆர்வமும் படபடப்பும் வந்தது எனக்கு. அவளை அழைத்து அமரச் சொல்லித் தேடினேன். பார்த்தால், அங்கு கரும்பலகையருகே நின்று கொண்டு சாக்பீஸால் கிறுக்கிக் கொண்டிருந்தாள். யார் கூப்பிட்டாலும் வரவே இல்லை. அழைப்பவர்களுக்கு சரமாரியான வசவு வேறு. :(

அவளைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த இன்னொரு சிறுவனும் எழுந்து போய் கிறுக்கத் தொடங்கி விட்டான். அவனிடம், "நீ ஏ எழுது, நான் பி எழுதறேன். ஏய், இந்தப் பக்கம் இல்ல, அங்க போய் எழுது" என்று கட்டளைகள் தூள் பறந்தன. " ஆசிரியை எவ்வளவு அன்புடன் அழைத்தும் "ம் வரமாட்டேன்.. போ!" எங்கள் மேஜைஅருகே வரவும் இல்லை அந்தப் புத்தகத்தைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. என்ன வளர்த்திருக்கிறார்கள் என்று நினைத்திருப்பார்களோ? :-(


கொஞ்ச நேரம் கழித்து வந்தாள். அவளாகவே கூட இருந்த‌ சிறுமியைப் பார்த்து "உன் பேர் என்ன, என் பேர் நேஹா" என்றாள். பொதுவாக அங்கிருந்த குழந்தைகளுடன் பேசவும் விளையாடவும் விரும்பினாள். பெரியவர்களை மதிக்கவே இல்லை. தர்மசங்கடத்துடன் அழைத்து வந்தோம். அவள் அப்பா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனக்குத் தான் இவள் எப்படிப் பள்ளியில் ஒழுங்காக இருப்பாளா, டோட்டோ சான் மாதிரி விரட்டப்பட்டு விடுவாளா என்றெல்லாம் விபரீதக் கற்பனை வளர்ந்தது.

இன்று முதல் நாள். காலையில் எழுப்பிக் குளிக்க வைத்து, எப்படியோ ஒரு தோசை சாப்பிட வைத்து அழைத்துச் சென்றோம். புறப்படும் முன் அவளுக்கு வாங்கி இருந்த பை, ஸ்னாக்ஸ் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் எல்லாம் எடுத்தாயிற்றா என்று நூறு முறை கேட்டுச் செக் செய்து கொண்டாள்.


அந்தத் தெருவுக்குள் நுழையும் போதே பிஞ்சுகளின் அழுகுரல்கள் காதைக் கிழித்தன. அந்தப் பெரிய கறுப்பு கேட்டுக்கு இந்தப் பக்கம் ஒரு நான்கைந்து அம்மாக்கள் தவிப்புடன் நின்று கேட்டில் இருந்த சின்ன இடைவெளி வழியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்திலெல்லாம் கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் தர்மசங்கடம், கொஞ்சம் வேதனை,அதையும் மீறி சேய்ப்பறவைக்கு முதல் சிறகு முளைத்து விட்ட ஒரு வகையான ஏக்கம் கலந்த நிம்மதி என்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உணர்ச்சிக் கலவை தென்பட்டது. எனக்கும் தான்!


நேஹாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றோம். அங்கு கண்ட காட்சி!மூன்று ஆசிரியர்கள், மூன்று காப்பாளர்கள், அனைவரும் இடுப்பிலொன்றும் கையிலொன்றுமாய் அழும் குழந்தைகளைச் சமாதானப்படுத்தும் பிரம்மபிரயத்தனத்தில் இருந்தார்கள். குழந்தைகளைவிட இவர்களைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அதுவரை அழாதவள் எங்கே இந்தக் களேபரத்தைப் பார்த்து அழத்தொடங்கிவிடுவாளோ என்று பயந்தேன்.


அதற்குள் அவளை வந்து வாங்கிக் கொண்ட ஆசிரியை 'குழந்தையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வேகமாக வெளியே சென்று விடுங்கள்' என்று எங்களைக் கிட்டத் தட்ட கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவைத் தாழிட்டுவிட்டார்கள். ஏனென்றால் லேசாகக் கதவு திறந்தாலும் பட்டாம்பூச்சிகள் வெளியே பறந்து விடத் தயாராக இருந்தன.

ஆனாலும் பட்டாம்பூச்சிகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிய பெரிய திறந்தவெளியும் காற்றோட்டமான கூடங்களும் அங்கு இருந்தததால் (ஏசி இல்லை!) எனக்கு அந்தப் பள்ளி பிடித்துத் தான் இருந்தது.

முதல் ஒரு வாரம் ஒரு மணிநேரம் மட்டும் விட்டு விட்டு வந்து அழைத்துச் செல்லச் சொல்லி இருந்தார்கள். நான் அலுவலகம் செல்லும் போது என்னைப் பிரிந்து இருந்து பழக்கம் தான் என்பதால் அவள் அழமாட்டாள் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் முதல் முறை முன்பின் அறியாதாவர்களிடம் விட்டு வந்ததால் கொஞ்சம் ஒரு மாதிரியாகவும் இருந்தது.

பத்தரை மணிக்கு நாங்கள் (நாளை முதல் அவளைப் பள்ளியிலிருந்து அழைத்து வரப்போகும் அகிலா அக்காவும் நானும்) சென்ற போது பெரும்பாலான பிள்ளைகள் அழைத்துச் செல்லப் பட்டு இருந்தார்கள். "நேஹா எங்கே" என்று கேட்ட போது, சிரித்துக் கொண்டே வ்ந்த ஒரு ஆசிரியா, "நேஹா அழவே இல்லை. ரொம்ப எஞ்சாய் பண்ணினா. என்ன, அவளுக்கு நீங்க குடுத்த் ஸ்ந்னாக்ஸைத் தவிர எல்லார் ஸ்னாக்ஸையும் வாங்கிச் சாப்பிட்டா." என்றார். அசடு வழிந்து கொண்டே "ஹி ஹீ." என்றேன்.மனதிற்குள் "அதுக்குள்ளே மானததை வாங்கிட்டாளே...வாடி, உனக்கு இருக்கு" என்று கறுவிக் கொண்டேன்.

புதுவிதமாய் ஒரு அனுபவம் வாய்த்த சந்தோஷத்துடன் வெளியே வந்தவள்எங்களைப் பார்த்தவுடன் ஓடியெல்லாம் வரவில்லை. வழக்கம் போல் "என்ன வாயின்ட்டு வந்துக்கே" என்றாள். பின், "ஜூலா கொஞ்ச நேரம் வெளையாடிட்டு வரேன்" என்று வெளியிலிருந்த் ஊஞ்சலிலும் சீசாவிலும் அமர்ந்து விளையாடினாள். அங்கிருந்து அழைத்து வரத்தான் கொஞ்சம் பாடுபட்டோம்.

இன்று இப்படி. இனி வரும் நாட்கள் எப்படியோ! அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும். யாரையும் தொந்தரவு செய்து புகார் வாங்காமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசையாக இருக்கிறது.

Labels: , ,

32 Comments:

At October 18, 2010 at 2:55 AM , Blogger Dr.Rudhran said...

தினமும் அல்லாவிட்டாலும், ஒவ்வொரு வாரமும் எழுது. அடுத்த ஆண்டிற்குள் developmental psychology புத்தகமாய் ஆகிவிடும்.

 
At October 18, 2010 at 3:19 AM , Blogger V.Radhakrishnan said...

பார்த்தீர்களா! குழந்தையின் சுதந்திரத்தில் நாம் கட்டுபாடுகளை நம்மை அறியாமலே திணிக்க ஆரம்பித்து விடுகிறோம்.

எது சரி, எது தவறு என்பதை மட்டும் சொல்லுங்கள் போதும். குழந்தை தானாக சிந்தித்து வளரட்டும்.

தாயின் படபடப்பு அதிகம் தெரிகிறது.

நிச்சயம் ஒரு சிறந்த பெண்மணியாக வருவார் நேஹா.

 
At October 18, 2010 at 3:27 AM , Blogger சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்கு...நாங்களும் கூடவே வந்தமாதிரி!

நேஹாக்குட்டிக்கு வாழ்த்துகள்! இனிய ஆண்டாக அமையட்டும்!:-)
கொஞ்சம் ஃபோட்டோஸ் போட்டிருக்கலாம்.

 
At October 18, 2010 at 3:48 AM , Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...

நேஹாவுக்கு வாழ்த்துகள்..

 
At October 18, 2010 at 4:00 AM , Blogger விஜி said...

நேஹாவிற்கு எங்கள்
ஸ்பெஷல் வாழ்த்துக்கள் :))

 
At October 18, 2010 at 4:00 AM , Blogger Sethu said...

Very Nice. Congrats.

 
At October 18, 2010 at 4:10 AM , Blogger அம்பிகா said...

நேஹாவுக்கு வாழ்த்துக்கள்.
கவீஷ், மனோ வை ஸ்கூலில் விட்ட முதல் நாள் நினைவுக்கு வருகிறது.

கவீஷ், கீழேயே இறங்க மாட்டேன் என அப்படியோர் அழுகை.

மனோ, திரும்ப வீட்டுக்கு வர மாட்டேன் என்று சண்டை!!!

நேஹா... ஸோ க்யூட்.

 
At October 18, 2010 at 4:18 AM , Blogger நசரேயன் said...

நேஹாவுக்கு வாழ்த்துக்கள்

 
At October 18, 2010 at 4:38 AM , Blogger மாதவராஜ் said...

மிக இயல்பான விவரிப்பில், அற்புதமான உலகமொன்றை தொட்டு சென்றிருக்கிறாய். ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது.

//தினமும் அல்லாவிட்டாலும், ஒவ்வொரு வாரமும் எழுது. அடுத்த ஆண்டிற்குள் developmental psychology புத்தகமாய் ஆகிவிடும்//

ஆமாம், தீபா.

 
At October 18, 2010 at 4:42 AM , Blogger VELU.G said...

நேஹாக்குட்டிக்கு வாழ்த்துகள்

 
At October 18, 2010 at 5:18 AM , Blogger கையேடு said...

மொத்த இடுகையும் ரொம்ப அழகா வந்துருக்குங்க..
நேஹாவுக்கு வாழ்த்துகள்

 
At October 18, 2010 at 5:57 AM , Blogger அமுதா said...

நேஹாவுக்கு வாழ்த்துக்கள். யாழ் முதல் நாள் ஸ்கூல் சென்ற பொழுது, நான் பர்மிஷன் எல்லாம் போட்டு, காத்திருக்கலாம் என்று சென்றால், “அம்மா... பை அஞ்சு மணிக்கு வந்து கூட்டிட்டு போ” என்று சென்று விட்டாள் . நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்...

 
At October 18, 2010 at 7:04 AM , Blogger Chitra said...

ஆனாலும் பட்டாம்பூச்சிகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிய பெரிய திறந்தவெளியும் காற்றோட்டமான கூடங்களும் அங்கு இருந்தததால் (ஏசி இல்லை!) எனக்கு அந்தப் பள்ளி பிடித்துத் தான் இருந்தது.

......இது முக்கியமான ஒன்றல்லவா? I am sure that Neha will enjoy and have loads of fun. :-)

 
At October 18, 2010 at 7:54 AM , Blogger இனியா said...

vaazthukal nehavirku...

 
At October 18, 2010 at 9:46 AM , Blogger அமைதிச்சாரல் said...

பள்ளி செல்வதென்பது நேஹாவிற்கு ஒரு இனிய அனுபவமாக அமைய வாழ்த்துக்கள் :-))

 
At October 18, 2010 at 11:25 AM , Blogger லெமூரியன்... said...

சிறு வயதில் பள்ளிக்கு போக அழுது அடம் பிடித்து அம்மாவின் முந்தானைக்கு பின் ஒழிந்தது நியாபகத்தில்......
இப்போதுள்ள குழந்தைகள் நெறைய சிந்திக்கிறார்கள் என நினைக்கிறேன் :) :)
அல்லது தயார் படுத்தப் படுகிறார்கள்.....
வாழ்த்துக்கள் நேஹாவிற்கு..........

 
At October 18, 2010 at 6:44 PM , Blogger மணிநரேன் said...

இடுகை நன்றாக உள்ளது.
நேஹாவிற்கு ரசனையான நாட்கள் அமைய வாழ்த்துக்கள்.;)

 
At October 18, 2010 at 8:28 PM , Blogger blogpaandi said...

சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.

 
At October 18, 2010 at 9:58 PM , Blogger Sriakila said...

நேஹா ஸ்கூலுக்குப் போனதைப்பத்தி நானே கேட்கணும்னு நெனைச்சேன் தீபா. அவ பண்ணின சேட்டைகளை இங்கேயேப் படிச்சு ரசிச்சிக்கிட்டேன்.

நேஹா குட்டியின் முத‌ல் ப‌ய‌ண‌ம் ரொம்ப‌வும் ர‌சிக்க‌வே வைக்கிற‌து.

//அவளாகவே கூட இருந்த‌ சிறுமியைப் பார்த்து "உன் பேர் என்ன, என் பேர் நேஹா" என்றாள் //
என்ன ஒரு அழகான அறிமுகம்.

//ஒரு சின்னஞ்சிறு பறவையின் முதல் பயணம்.//
பொருத்தமான தலைப்பு.

 
At October 19, 2010 at 12:07 AM , Blogger க.பாலாசி said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க...சுவாரசியமும்கூட...
அதுவும் குழந்தைகள் அனைவரையும் பட்டாம்பூச்சிகளாய் பாவித்த இடம்..

சமத்தான நேஹா பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்..

 
At October 19, 2010 at 1:02 AM , Blogger LK said...

நேஹா அநேகமா என் மகளின் வயதை ஒட்டியவள் என்று எண்ணுகிறேன். அடுத்த வருடம்தான் பள்ளியில் சேர்க்கப் போகிறேன். எனக்கு இந்த கவலைகள் இல்லை. எனக்கு இவளுக்கு வரப் போகிறான் ஆசிரியையை நினைத்துதான் பயமாய் இருக்கிறது

 
At October 19, 2010 at 1:03 AM , Blogger ஜெயந்தி said...

அவங்க எல்லாத்தையும் சமாளிப்பாங்க. நாமக்குத்தான் பயமா இருக்கும்.

 
At October 19, 2010 at 1:07 AM , Blogger velji said...

i travelled five years back to my ammu's first day in school.

best wishes for Neha!

 
At October 19, 2010 at 1:59 AM , Blogger சே.குமார் said...

நேஹாக்குட்டிக்கு வாழ்த்துகள்!

 
At October 19, 2010 at 2:07 AM , Blogger எஸ்.கே said...

நெகிழ்ச்சியான பதிவு! குழந்தைக்கு வாழ்த்துக்கள்!

 
At October 19, 2010 at 3:45 AM , Blogger ஹுஸைனம்மா said...

ஏன்ப்பா மூணு வயசுகூட ஆகலைபோல, அதுக்குள்ளே ஸ்கூலா??!! :-(

பள்ளிச்சேர்க்கை என்பது ஜூன் மாதம்தானே நடக்கும்? அக்டோபர் மாதம் என்பது ஆச்சர்யமாக உள்ளது!!

ஹேப்பி ஸ்கூலிங் நேஹா!!

 
At October 19, 2010 at 5:15 AM , Blogger Deepa said...

நன்றி டாக்டர்!
நிச்சயம் முயற்சி செய்கிறேன். :)

நன்றி இராதாகிருஷ்ணன்!
//எது சரி, எது தவறு என்பதை மட்டும் சொல்லுங்கள் போதும். குழந்தை தானாக சிந்தித்து வளரட்டும்.// மிக‌ச்ச‌ரி.

ந‌ன்றி முல்லை!
ஃபோட்டொஸ் இன்னொரு இடுகையாக‌ப் போடுகிறேன். :D

ந‌ன்றி முத்துலெட்சுமி!

ந‌ன்றி விஜி!

ந‌ன்றி சேது!

ந‌ன்றி அம்பிகா அக்கா!
க‌வீஷ் ம‌னோவை எல்லாம் எப்ப‌டித் தான் ச‌மாளித்தீர்க‌ளோ? :))

ந‌ன்றி ந‌ச‌ரேய‌ன்!

ந‌ன்றி அங்கிள்!
எழுதுகிறேன்.

ந‌ன்றி வேலு!

ந‌ன்றி கையேடு!

ந‌ன்றி அமுதா!
யாழ் கொடுத்த ப‌ல்ப் சூப்ப‌ர். :)

ந‌ன்றி சித்ரா!
ஆமாம், அத‌னால் தான் அந்த‌ப் ப‌ள்ளியை விரும்பித் தேர்ந்தெடுத்தோம்.

ந‌ன்றி இனியா!

ந‌ன்றி அமைதிச்சார‌ல்!

ந‌ன்றி லெமூரிய‌ன்!

ந‌ன்றி ம‌ணிந‌ரேன்!

ந‌ன்றி ப்ளாக்பாண்டி!

ந‌ன்றி அகிலா!
will call you da.

ந‌ன்றி பாலாசி!

ந‌ன்றி LK!
//எனக்கு இவளுக்கு வரப் போகிறான் ஆசிரியையை நினைத்துதான் பயமாய் இருக்கிறது// :))


ந‌ன்றி ஜெய‌ந்தி!
உண்மை தான்.

ந‌ன்றி வேல்ஜி!

ந‌ன்றி குமார்!

ந‌ன்றி எஸ்.கே!

ந‌ன்றி ஹுஸைன‌ம்மா!
ப்ளே ஸ்கூல் தான்பா. :)

 
At October 19, 2010 at 9:02 AM , Blogger அன்புடன் அருணா said...

இப்போலாம் குழந்தைகள் அப்பாம்மாவ நீங்க போங்கன்னு சொல்றதைக் கூடப் பார்க்கிறோம்.Very smart kids!

 
At October 19, 2010 at 1:26 PM , Blogger ILA(@)இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன், நன்றி!

 
At October 20, 2010 at 2:06 AM , Blogger radhika said...

ரொம்ப நல்ல இருக்கு.

வாழ்த்துக்கள் உங்களுக்கும் குட்டிக்கும்

 
At October 21, 2010 at 8:30 PM , Blogger Uma said...

Sorry I missed being here on time! Heartfelt wishes and love to Neha.

 
At October 21, 2010 at 10:55 PM , Blogger Deepa said...

நன்றி அருணா!

நன்றி இளா!
உங்கள் தொகுப்பைப் பார்த்தேன். நன்றி.

ந‌ன்றி ராதிகா!

Thank you Uma!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home