Monday, August 23, 2010

சோறு வடிக்கிற ராச்சியம்

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

இந்த‌ நூலை வெகு நாட்க‌ள் க‌ழித்து ம‌றுவாசிப்பு செய்தேன்.எத்த‌னை முறை ப‌டித்தாலும் ம‌ன‌தில் நின்ற‌து வெளிப்பாடு ம் வீட்டின் மூலையில் ஒரு ச‌மைய‌ல‌றையும் தான்.

முத‌ல் க‌தை ஆசிரிய‌ரின் சொல்வ‌ழி வெளிப்படுகிற‌து. கிராமப்புறத்தில் வீட்டுப் பெண்க‌ளின் வாழ்க்கைமுறை ப‌ற்றிய‌ ஆராய்ச்சிக்காக‌ ஆசிரியை இரு வீடுக‌ளுக்குச் செல்கிறார்.

வீட்டை விட்டு வெளியில் எங்கும் போகாத‌, "சோறு வ‌டிக்கிற‌ ராச்சியந்தான்" என்று பெருமை பேசுகிற‌, "ச‌முத்திர‌ம் பார்க்க‌ணும்" என்கிற‌ ர‌க‌சிய‌க் காத‌லைத் தன‌க்குள் வைத்துப் புழுங்கிய, சில கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் திருச்செந்தூர் கடற்கரைக்குச் செல்ல ஆசைப்பட்டு அப்படி அடம்பிடிக்கும் போதெல்லாம் புருசனிட‌ம் அடி வாங்குவ‌தை மிக‌ இய‌ல்பாக‌ப் ப‌கிர்ந்து கொள்கிற‌ ஐம்ப‌து வ‌ய‌துப் பெண்ம‌ணியைச் ச‌ந்திக்கிறார்.அவ‌ர் வாழ்வில் எத்த‌னை இட்லிக‌ள் தோசைக‌ள், அடைக‌ள் சுட்டிருப்பார் என்ப‌தைக் க‌ண‌க்குப் போட்டு ம‌லைக்கிறார்.

மேலும், இவ‌ர் ப‌டித்த‌வ‌ர் என்ப‌தால் ச‌ற்றே ம‌ரியாதையுட‌ன் பேசும் அந்த‌ வீட்டுக் குடும்ப‌த் த‌லைவன் தன் மனைவியிடம் இவர் சுவாரசியமாக உரையாடிக் கொண்டிருப்பது கண்டு வியந்து "இவ கூட என்ன பேசிட்டிருக்கீங்க? இவளுக்கு ஒன்றும் தெரியாது, மீன் கொள‌ம்பு வேணா ந‌ல்லா ஆக்குவா" என்கிறார்.

இன்னொரு வீட்டில் இதே க‌தை. ஆனால் இங்கு ஓர் இள‌ம் பெண். அவளுக்கும் வீட்டில் சோறு சமைப்பது, சகோதரர்களின் துணிகளைத் துவைத்துக் காப்பது, கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளில் கதைகள் படிப்பது என்பதைத் தவிர வேறு உலகம் தெரியாது. தெருவில் காலை வீசி நடக்க வேண்டும் என்பதே அவளுக்கு இருக்கும் ரகசியக் கனவாக இருக்கிறது.

திரும‌ண‌ம் செய்து கொண்டால் க‌ண‌வ‌னுட‌ன் நாலு இடங்களுக்குச் செல்லும் பாக்கிய‌ம் கிடைக்கும் என்ப‌த‌ற்காக‌வே திரும‌ண‌த்தை எதிர்நோக்கி நிற்கிறாள் இந்த‌ப் பெண். என்ன, தன்னை மணந்து கொள்ளப் போகிறவன் நல்லவனாக இருக்க வேண்டும்; அதாவது கை நீட்டி அடிக்கக் கூடாது என்று மட்டும் விரும்புகிறாள்.

இர‌ண்டு த‌லைமுறைக‌ள் தாண்டியும் பெண்க‌ள் நிலை சிறிதும் மாற‌வில்லை என்ப‌தை அழ‌காக‌ச் சொல்கிற‌து இந்த‌க் க‌தை.

'வீட்டின் மூலையில் ஒரு ச‌மைய‌ல‌றை' என‌க்கு மிக‌வும் பிடித்த‌து. ஒரு ராஜ‌ஸ்தானி குடும்ப‌ம். ப‌ல‌ அறைக‌ள் கொண்ட‌ விசால‌மான‌ அந்த‌ வீட்டில் ச‌மைய‌ல‌றை ம‌ட்டும் ஓர் இருண்ட‌ மூலையில்.

வாயில் நீரூற‌ வைக்கும் ப‌ல‌வித‌மான‌ ப‌தார்த்த‌ங்க‌ள் நாள் தோறும் த‌யாராகிற‌, விருந்திர்ன‌ர்க‌ள் வ‌ந்தால் தேனீருட‌ன் நிறுத்தாம‌ல் உபசரிக்கப் ப‌ல‌விதமான‌ ப‌ண்ட‌ங்க‌ள் த‌யாரிக்க‌ப்ப‌டுகிற‌ அந்த‌ வீட்டின் ச‌மைய‌ல‌றையில் எரிவ‌து ஒரு பூஜ்ய‌‌ம் வாட் விள‌க்கு. பாத்திர‌ங்க‌ள் தேய்க்க‌ச் ச‌ரியான‌ தொட்டி இல்லை. வெளிச்ச‌மோ காற்றோ புக சரியான சாள‌ர‌ம் இல்லை.

இதில் தான் அந்த‌க் குடும்ப‌த்த‌லைவியான‌ ஜீஜீ த‌ன‌து ராஜ்ஜிய‌த்தை அமைத்துக் கொண்டுள்ளாள். அவ‌ள‌து ம‌ரும‌க‌ள்க‌ளும் விடுமுறைக்கு வ‌ரும் நாட்க‌ளில் அங்கேயே அடைந்து கிட‌க்க‌ வேண்டி வ‌ருகிற‌து.

க‌டைசி ம‌ரும‌க‌ளான‌ மீனாட்சி தான் அந்த‌ச் ச‌மைய‌ல‌றையின் கேடான‌ நிலையைப் ப‌ற்றி முத‌ல் முறை அக்குடும‌ப்த்த் த‌லைவ‌ர் ப‌ப்பாஜியிட‌ம் வாய் திற‌க்கிறாள். இது வீட்டினரிடையே மிக‌ப் பெரிய‌ ஆச்ச‌ரிய‌மாக‌ப் பார்க்க‌ப்ப‌டுகிற‌து. ஆனால் மாற்ற‌ங்க‌ள் ஏதும் ந‌டைபெற‌வில்லை. அது அந்த வீட்டுப் பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற அமைதியான அடக்குமுறை என்பது தெளிவாகப் புலனாகிறது.

உல்லாசப்ப‌ய‌ண‌ம் போக‌லாமென்று முடிவு செய்த‌ நாள‌ன்று வீட்டுப் பெண்க‌ள் அத்தனை பேரும் அந்த‌ வெக்கையான‌ ச‌மைய‌ல‌றையில் அதிகாலை நான்கு ம‌ணி முத‌ல் க‌டுமையாக‌ வேலை செய்ய‌ வேண்டி வ‌ருகிற‌து. இருப‌து பேருக்கு நூறு பூரிக‌ள், சான்ட்விச்சுக‌ள், தயாரிக்க வேண்டி இருக்கிறது. இது தவிர குழ‌ந்தைக‌ளுக்குப் பால் பாட்டில்க‌ள், மாலை ப‌க்கோடா சாப்பிடுவ‌த‌ற்கும் அடுப்பு, அரிந்த‌ வெங்காய‌ம், எண்ணெய், என்று எடுத்து கொள்ள‌ வேண்டி வ‌ருகிற‌து. குழ‌ந்தைக‌ளை எழுப்பிக் குளிக்க‌ வைத்துக் கிள‌ப்புவ‌தும் பெண்க‌ள் வேலை தான்.

இடையே இவ‌ர்க‌ள் சத்த‌த்தால் தூக்க‌ம் க‌லைகிற‌ ஆண்க‌ள் போடும் அத‌ட்ட‌லால், ர‌க‌சியமாக‌வே பேசிக் கொண்டு வேலையில் ஈடுப‌டுகிறார்க‌ள். எல்லா ம‌ரும‌க‌ள்க‌ளும் ப‌டித்த‌வ‌ர்க‌ள் என்ப‌தும் இருவ‌ர் ந‌ல்ல‌ வேலையில் இருப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தும் இங்கே குறிப்பிட‌த்த‌க்க‌து.

கணவனை இழந்தவர்களுக்கு மாமிசம் உணவும் இனிப்பு வகைகளும் மறுக்கப்படுவது அங்கே மரபென்பதால் படி ஜீஜீ என்கிற வயதான பெண்மணி சில நாள் தன்மீது பெண்தெய்வம் அம்பை வந்து விட்டதாகச் 'சாமியாடி'த் தான் விரும்பும் உணவு மற்றும் மதுவகைகளைக் கேட்டு உண்பது ஒரு சோக நாடகம்.

இறுதியில் உட‌ல் நிலை மோச‌ம‌டைந்த‌ நிலையில் ப‌டுத்திருக்கும் ஜீஜீ தான் திருமணமாகி வந்த புதிதில் இந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற எவ்வளவு கடுமையாக உழைத்தாள் என்பதையும் அலங்காரமும் சமையலறை ஆதிக்கமும் தான் வீட்டில் பெண்களுக்கு மரியாதை ஏற்படுத்துபவை என்று தன் தாய் சொன்னதை சத்தியவாக்காக ஏற்றுக் கொண்டு ஒரு நாளைக்கு முன்னூறு பூரிகள் சுட்டதையும் ஐந்து கிலோ கோதுமை மாவு பிசைந்ததையும், அதைக் கண்டு அவள் கணவன் பூரித்து "நீ நல்ல உழைப்பாளி" என்று மகிழ்ந்ததையும் மீனாட்சியிடம் பகிர்ந்து கொள்கிறாள்.

ஆனால் தன் முதல் மகன் சின்னஞ்சிறுவனாக இருந்தபோது மாடியிலிருந்து விழுந்து இறந்த போதிலும் அந்தக் கொடூரமான நேரத்திலும் சமையலறையில் நுழைந்து பாதியில் விட்ட பூரிக்களைப் பொரித்தெடுத்ததைச் சொல்லும் போது மீனாட்சிக்கு மட்டுமல்ல நமக்கும் அங்கமெல்லாம் அதிர்கிறது.

பெண்க‌ள் த‌ங்க‌ள் ராஜ்ஜிய‌மென்று வ‌ரித்துக் கொண்ட‌வை எதுவுமே அவ‌ர்க‌ளுடைய‌த‌ல்ல‌, அத‌னால் அவ‌ர்க‌ளுக்கு யாதொரு சிற‌ப்பும‌ல்ல‌ என்ப‌தை அழுத்த‌மாக‌ நிறுவுகிற‌து இக்க‌தை.

இக்க‌தையைப் ப‌டிக்கும் போது இப்போதிருக்கும் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், பெரும்பாலான‌ ந‌டுத்தர‌ வ‌ர்க்க‌ வீடுக‌ளில் ச‌மைய‌ல‌றைக‌ள் அவ்வ‌ள‌வு மோச‌மாக‌ இல்லை. வெளிச்ச‌மும் காற்றோட்ட‌மும், எளிதில் சுத்த‌ம் செய்ய்க்கூடிய‌ மேடைக‌ளுமாய் ந‌ன்றாக‌த் தான் இருக்கின்ற‌ன‌. ஆனாலும் ச‌மைய‌ல‌றை ராஜ்ஜிய‌த்தைப் பெண்கள் தங்கள் ஏகபோகப் பெருமையாக‌க் க‌ருதும் ம‌ன‌ப்போக்கு ம‌ட்டும் மாறிவிட்ட‌தா என்ன‌?

நூற்குறிப்பு: வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. எழுத்தாளர் : அம்பை. க்ரியா வெளியீடு, இரண்டாம் பதிப்பு: 1998, விலை: ரூ. 60, பிரிவு: சிறுகதைகள்.

18 comments:

Dr.Rudhran said...

good deepa
\also read kaattil oru maan and ammaa oru kolai seythaal

Dr.Rudhran said...

good one deepa
also read kaattil oru maan and ammaa oru kolai seythaal

பத்மா said...

அருமையான தொகுப்பு தான் தீபா அது.எனக்கு மிகவும் பிடித்ததும் கூட. நிஜமாகவே அந்த இட்லி தோசை கணக்கு மலைக்க வைக்கும் ..நல்ல தொரு பகிர்தல் ..

Anonymous said...

படிக்கத்தூண்டும் எழுத்து .. குட் :))

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

ஆஹா என்ன தொகுப்பு கொள்ளை கொண்டுவிட்டீர்கள்

Sriakila said...

// பெரும்பாலான‌ ந‌டுத்தர‌ வ‌ர்க்க‌ வீடுக‌ளில் ச‌மைய‌ல‌றைக‌ள் அவ்வ‌ள‌வு மோச‌மாக‌ இல்லை. வெளிச்ச‌மும் காற்றோட்ட‌மும், எளிதில் சுத்த‌ம் செய்ய்க்கூடிய‌ மேடைக‌ளுமாய் ந‌ன்றாக‌த் தான் இருக்கின்ற‌ன‌. ஆனாலும் ச‌மைய‌ல‌றை ராஜ்ஜிய‌த்தைப் பெண்கள் தங்கள் ஏகபோகப் பெருமையாக‌க் க‌ருதும் ம‌ன‌ப்போக்கு ம‌ட்டும் மாறிவிட்ட‌தா என்ன?//

உண்மைதான் தீபா. ஆனால் பெண்களுக்கு மட்டும்தான் மற்றவர்கள் வயிற்றைக் காயவிடும் அளவிற்குத் துணிவில்லாத ஈர நெஞ்சம் உள்ளது. அதனால் தான் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பெண்கள் சமையலறைப் பக்கம் ஒதுங்க வேண்டியுள்ளது. என்னைப் பொறுத்தவரை, சமையலறை என்பதில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல், நம்மைப் போன்ற சக மனிதன், சக மனுஷி என்ற மனிதாபிமானமும், அவர்களுக்காகச் செய்துக் கொடுப்பதில் சந்தோஷமும் முக்கியம் என்று நினைக்கிறேன். இதை ஆண்களும் சரி, பெண்களும் சரி உணர்ந்தாலே போதும்.

செல்வநாயகி said...

Tanks for this post deepa.

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி தீபா.

ஜெய்லானி said...

நல்ல கதை

Madumitha said...

அம்பை எழுத்தாளர்களில்
தனித்துவம் மிக்கவர்.
அவரின் காட்டிலே ஒரு மான்
படித்து விட்டீர்களா?

ஹுஸைனம்மா said...

பாட்டி காலங்களில் இருக்கும் இருட்டான சமையலறைகளுக்கும், தற்போதைய மாடுலர் கிச்சன்களுக்கும் உள்ள வித்தியாசமே சொல்லும் மாற்றம் வந்துள்ளதை. (சமைக்கும் விதத்திலும்கூட!! :-)))) )


//ச‌மைய‌ல‌றை ராஜ்ஜிய‌த்தைப் பெண்கள் தங்கள் ஏகபோகப் பெருமையாக‌க் க‌ருதும் ம‌ன‌ப்போக்கு ம‌ட்டும் மாறிவிட்ட‌தா//

விதவிதமாகச் சமைப்பவர்களைக் கண்டு, அவ்வாறு சமைக்கத் தெரியாத எனக்கு ஏற்படும் பொறாமையும் இதில் சேர்த்தியா? :-)))

Deepa said...

நன்றி டாக்டர்.
அவசியம் படிக்கிறேன்.

ந‌ன்றி ப‌த்மா.
நாம் சுட்டிருப்பதைக் கூட‌க் க‌ண‌க்கிட்டுப் பார்க்க‌லாம். :)

ந‌ன்றி ம‌யில்!

ந‌ன்றி யாத‌வ‌ன்!

ந‌ன்றி அகிலா!
//சமையலறை என்பதில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல், நம்மைப் போன்ற சக மனிதன், சக மனுஷி என்ற மனிதாபிமானமும், அவர்களுக்காகச் செய்துக் கொடுப்பதில் சந்தோஷமும் முக்கியம் என்று நினைக்கிறேன்.//அழ‌கான‌ சிந்த‌னை.

ந‌ன்றி செல்வ‌நாய‌கி!

ந‌ன்றி ச‌ர‌வ‌ண‌க்குமார்!

ந‌ன்றி ஜெய்லானி!

ந‌ன்றி ம‌துமிதா!
இதுவ‌ரை இல்லை; ப‌டிக்கிறேன்.

ந‌ன்றி ஹுஸைன‌ம்மா!
//விதவிதமாகச் சமைப்பவர்களைக் கண்டு, அவ்வாறு சமைக்கத் தெரியாத எனக்கு ஏற்படும் பொறாமையும் இதில் சேர்த்தியா? :-)))//

LOL!!:))) அப்ப‌டித் தான் நினைக்கிறேன். Btw, என்னையும் சேர்த்துக் கொள்ளுங்க‌ள்!

மாதவராஜ் said...

நல்ல பகிர்வு தீபா.
மதுமிதா சொல்வது போல அவரது ’காட்டிலே ஒரு மான்’ தொகுப்பையும் படிக்கவும். என்னிடம் இருக்கிறது. அடுத்தமுறை சென்னை வரும்போது கொண்டு வருகிறேன்.

'பரிவை' சே.குமார் said...

படிக்கத்தூண்டும் எழுத்து.

வாழ்த்துக்கள்.

லெமூரியன்... said...

அம்பை தனித்துவம் மிக்க ஒரு எழுத்தாளர்...!
அதிக வீரியம் மிக்க எழுத்துக்களும் கூட...!
இப்பொழுது சமையலறைகள் மாறிக் கொண்டே வருகிறது...
மாற்றத்தின் அறிகுறி எனக் கொள்ளலாம்...!
:-) :-)

kunthavai said...

இன்று தான் உங்கள் பக்கம் வந்தேன் தீபா. ரெம்ப அருமையான புத்தக விமர்சனம்.

R. Gopi said...

சூப்பர்.

காலச்சுவடு அம்பையின் எல்ல சிறுகதைகளையும் ஒரே தொகுப்பாக வெளியிட்டுள்ளது.

Rathnavel Natarajan said...

நல்ல கதை.