Friday, August 13, 2010

ஆண்டுவிழா அனுபவங்கள் - தொடர்பதிவு

நண்பரொருவர் தன் அலுவலகத்தில் நடைபெற்ற ஆண்டுவிழாக் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனுப‌வ‌த்தைப் பகிர்ந்து கொண்டார். கேட்கவே உற்சாகமாக இருந்தது. தொடர்ந்து நினைவலைகள் என் பள்ளி நாட்களின் ஆண்டுவிழா அனுபவங்களை நோக்கிச் சென்றது. ஹார்மோனியம் தபேலாவுடன் திரைமறைவில் பின்னணி இசைக்குழுவின‌ர், திரை மூடும் திறக்கும் தருண‌ங்கள், மேடைக்குப் பின் நிகழ்ச்சிக்காகக் காத்திருந்த நிமிடங்கள்...

இப்போதெல்லாம் பள்ளிகளில் ஆண்டுவிழா என்ற சாக்கில் பெரிய மண்டபங்களை வாடகைக்கு எடுப்பது, செலவுக்கெல்லாம் மாணவர்களிடமே நிதி வசூலிப்பது, கண்ட கண்ட சினிமாப் பாடல்களை ஓடவிட்டுப் பிள்ளைகளை இடுப்பை நெளித்து ஆடவிடுவது, என்று தொடங்கி இருக்கிறார்கள்.

எங்கள் பள்ளி சின்னப் பள்ளி தான். மைதானமும் சிறியது தான். ஆனாலும் அங்கு நடந்த ஆண்டு விழாக்கள் மிகவும் சிறப்பாகவே இருந்தன். அங்கு படித்த மாணவியான எனக்கும் ஒவ்வொரு ஆண்டு விழாவும் பசுமையாக நினைவிலிருக்கிறது என்பதைத்தவிர வேறென்ன சான்று வேண்டும் இதற்கு?

நிகழ்ச்சிகளும் தரமாக இருந்தன. சினிமாப்பாடல்களுக்கும் நடனம் ஆடி இருக்கிறோம். ஆனால் அந்தந்த நேரத்து ஹிட்பாடல்களுக்குக் குத்தாட்டம் போடுவது போலல்ல. நல்ல கருத்துள்ள பாடல்களுக்கு மட்டுமே.

பள்ளியில் எப்போதும் பிப்ர‌வ‌ரி மார்ச் மாத‌த்தில் தான் ஆண்டுவிழா ந‌ட‌த்துவார்க‌ள். அனேக‌மாக‌ மூன்றாம் ப‌ருவ‌த் தேர்வுக்கு முன்பாக.அத‌ற்குப் ப‌த்துப் ப‌தினைந்து நாட்க‌ளுக்கு முன்பாக‌வே க‌ளைக‌ட்ட‌த் தொட‌ங்கி விடும். ந‌ட‌ன‌ம், நாட‌க‌ம், சேர்ந்திசை என்று நிக‌ழ்ச்சிக‌ள் திட்ட‌மிட்டு அத‌ற்கேற்ப‌ பிள்ளைக‌ளைத் தேர்வு செய்வார்க‌ள். எதிலும் சேர்க்காத பிள்ளைகள் வருந்தத் தேவையில்லை. அவர்கள் விழா இறுதியில் பாடப்படும் சேர்ந்திசையில் சேர்க்கப்பட்டு அதற்கும் பயிற்சி நடக்கும். வெள்ளை உடையில் கையில் மெழுகு வர்த்தி வைத்துக் கொண்டு பாடும் அந்த நிகழ்ச்சியும் சிறப்பு வாய்ந்தது தான்.

விழாவை விட அதிகம் குதூகலம் தருவது அதற்கு முன் பயிற்சி நடக்கும் நாட்கள் தான். வகுப்புகள் பெரும்பாலும் நடக்காது. சில வகுப்புகளில் ஒத்திகைக்காக வேண்டி பெஞ்சுகளையெலாம் சுவரோரமாக நகர்த்தி வைத்திருப்பார்கள். அதனால் அந்த வகுப்புகள் மரத்தடியில் நடக்கும். ஜாலி!

நம்முடைய நிகழ்ச்சிக்கான‌ பயிற்சி முடிந்தாலும் பெரிய க்ளாஸ் மாணவர்கள் போடும் நாடகம், நடனம் இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பது; "ஒதெல்லோ ட்ராமால‌ யாசீன் அண்ணா சூப்பரா நடிக்கிறார். அவருக்குத் தான் இந்த தடவை பெஸ்ட் ஆக்டர் ப்ரைஸ்..." "இல்லல்ல‌ எப்பவும் போல ப்ரின்ஸியோட ஃபேவரிட் அஜிதாவுக்குத் தான் குடுப்பாங்க பாரேன்!" அப்பொவே சிலருக்குப் பாலிடிக்ஸ் எல்லாம் புரிந்திருந்தது எப்படி?

பெரிய‌ க்ளாஸ் பிள்ளைக‌ளின் நாட‌க‌ங்க‌ளில் வ‌ரும் வ‌ச‌ன‌த்தை எல்லாம் நாமும் அதே போல் சொல்லிப் பார்த்து ம‌கிழ்வ‌து; ச‌ரியாக‌ ந‌டிக்காத‌வ‌ர்க‌ளை டீச்ச‌ர்க‌ள் திட்டும் போது வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்ப‌து; அந்த‌ அண்ணாக்களும் அக்காக்களும் ந்ம்மை, "வெளிய‌ வா வெச்சுக்க‌ரேன்" என்ப‌து போல் முறைப்ப‌து! ஆஹா!

எப்படியோ, எதற்குத் தான் அவ்வளவு உற்சாகமோ?வீட்டுக்கு வந்தாலும் இதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பது. விழாவுக்கு முதல்நாள் தூக்கமே வராது!

நான் முத‌ல் வ‌குப்பு ப‌டிக்கும் போது சின்ட்ரெல்லா நாட‌க‌த்தில் சின்ட்ரெல்லாவைச் சுற்றி ஆடும் கூட்ட‌த்தில் ஒரு பெண்ணாக‌ இருந்தேன். என் தோழி தான் சின்ட்ரெல்லா. அவளுக்குத் தங்க நிறத்தில் முழு நீள‌ கவுன். எங்களுக்கெல்லாம் வயலட் நிறத்தில் ஃப்ரில் வைத்த ஃப்ராக்.
வேறுபாடெல்லாம் தெரியாமல் எல்லாமே எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது! ஆனால் கூட‌ ஆடிய‌ பைய‌னுட‌ன் என‌க்கு ஆகாது என்ப‌தால் அவ‌னுட‌ன் கை கோத்து ஆடுவ‌து வெறுப்பாக‌ இருந்த‌து!

பின்பு இர‌ண்டாம் வ‌குப்பில் ஜப்பான் ந‌ட‌ன‌ம். 'ல‌வ் இன் டோக்யோ' இந்திப் ப‌ட‌த்தில் வ‌ரும் ச‌ய்னோரா பாட‌லுக்கு ஆடினோம். நான் ந‌ன்றாக‌ ஆடினாலும் த‌லையைக் குனிந்து கொண்டு, சிரிக்காம‌ல் உம்மென்று இருப்பேன். அத‌னால் முத‌ல்வ‌ரிசையில் நின்றிருந்த‌ என்னை இர‌ண்டாம் வ‌ரிசைக்கு அனுப்பி விட்டார்க‌ள். அப்பாடாவென்று அத‌ன்பின் நிமிர்ந்து பார்த்துச் சிரித்து ஆடினேன். டீச்ச‌ருக்குத் தான் ப‌ல்ப்!

ஐந்தாம் வ‌குப்பில் தான் செம‌ காமெடி. ஆங்கில‌ ஆசிரிய‌ர், த‌மிழ் ஆசிரிய‌ர் இருவ‌ருமே அவ‌ர‌வ‌ர் நாடக‌த்தில் என்னைச் சேர்த்து விட்டார்க‌ள். த‌மிழ் நாடகத்தில் 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற கதையில் வரும் புல‌வ‌ர்க‌ளில் ஒரு வேட‌ம்.

ஆங்கில‌ நாட‌க‌த்தில் சொத‌ப்பி விட்டேன். ஒரு விடுதியில் வேலைக்கார‌ன் வேட‌ம்; ராஜா வ‌ர‌ப்போகிறார்; விடுதியை ஒழுங்காக‌ச் சுத்த‌ம் செய்து வை என்று எஜ‌மான‌ர்க‌ள் மிர‌ட்டி விட்டுப் போவார்க‌ள். மாறுவேட‌த்தில் வ‌ந்த‌ ராஜாவையே வேலைக்கு அம‌ர்த்தி ஏவுவது, பின் எஜ‌மானார்க‌ள் வ‌ந்து அதிர்ச்சிய‌டைவது, ஆனால் ம‌ன்ன‌ரோ வேலை செய்வ‌து த‌ன‌க்கு மிக‌வும் பிடித்திருந்தது என்றும் அந்த‌ வேலைக்கார‌னைப் பாராட்டிப் ப‌ரிசு கொடுப்ப‌து என்றும் முடிய‌ வேண்டும். இதில் ம‌ன்ன‌ரை மேசைக்கு அடியில் சுத்த‌ம் செய்ய‌ விட்டு ம‌ற்ற‌ இட‌ங்க‌ளைச் சுத்த‌ம் செய்வ‌து போல் நான் ந‌டிக்க‌ வேண்டும்.

நாட‌க‌ம் ந‌டைபெறும் நாள் வ‌ரை மேசை வைத்து ஒத்திகை ந‌ட‌க்க‌வில்லை. அத‌னால் என்ன‌ ஏதென்று புரியாம‌ல் நான் மேசைக்கு அடியில் சென்று புகுந்து கொண்டேன். அங்கிருந்து எழுந்து எழுந்து வ‌ந்து வ‌ச‌ன‌ம் பேசிக் கொண்டிருந்தேன். பார்வையாள‌ர்க‌ளுக்கு ஒன்றும் புரிய‌வில்லை.

நாட‌க‌ம் முடிந்த‌தும் டீச்ச‌ரிட‌ம் செம‌ டோஸ். ஆனால் அவ‌ர் என்னை ரொம்ப‌த் திட்டாம‌ல் த‌மிழாசிரிய‌ர் ஆறுத‌ல் கூறி அணைத்துச் சென்று விட்டார். பின்னே, அவங்களோட த‌மிழ் நாட‌கமாவது சொத‌ப்பாம‌ இருக்க‌ணுமே! அதில் ஒழுங்காக‌ ந‌டித்தேன். ஆனாலும் அந்த‌ ஆங்கில‌ நாட‌க‌த்தைச் சொத‌ப்பிய‌தை நினைத்தால் இன்றும் வெட்க‌மாக‌ இருக்கிற‌து!

ஏழாவ‌து ப‌டிக்கும் போது க‌ர‌காட்ட‌க்கார‌ன் பட‌ப்பாட‌லுக்கு நான்கு பேர் க‌ர‌காட்ட‌ம் ஆடினோம். யாரோ ஒருவ‌ர் க‌ர‌க‌ங்க‌ள் கொண்டுவ‌ந்து தலையில் வைத்துக் க‌யிற்றினால் தாடைக்குக் கீழ் இறுக்க‌க் க‌ட்டிவிட்டார். ரொம்ப‌வே வ‌லித்த‌து. த‌லையை அப்ப‌டி இப்ப‌டி அசைக்க‌க் கூடாதென்று விட்டார். என் தோழி ஜோதி ம‌ற்றும் இருவ‌ரும் ச‌ம‌ர்த்தாக‌ வைத்துக் கொண்ட‌ன‌ர். ந‌ம‌க்குத் தான் அர்த்தமில்லாமல் எந்த‌ அசௌகரிய‌த்தையும் கொஞ்சநேரம் கூடத் தாங்கிக் கொள்ள முடியாதே. 'என்ன‌ இது விழாம‌ல் இருக்க‌ லேசாக் க‌ட்டினா போதாதா' என்று நைஸாக‌ முடிச்சைத் த‌ள‌ர்த்தி விட்டுக் கொண்டேன். அத‌ன் விளைவு நிக‌ழ்ச்சி முடிந்து ப‌ட‌ங்க‌ள் பார்க்கும் போது தெரிந்த‌து. என்னுடைய‌ க‌ர‌க‌ம் ம‌ட்டும் பைசா கோபுர‌ம் போல் ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்று கொண்டிருந்த‌து!

ப‌த்தாம் வ‌குப்பில் ஒரு பிராம‌ண‌க் குடும்ப‌த்தை ஒட்டி ந‌ட‌க்கும் நாட‌க‌த்தில் என்னைக் க‌தையின் நாய‌கியாக‌ (ம‌டிசார் கட்டி மாமியாக‌) ந‌டிக்க‌ வைத்தார் நாட‌க‌த்தின் ஆசிரியை. எனக்கு என்ன ஆச்ச‌ரிய‌மென்றால் அந்தப் பாஷையை இய‌ல்பாக‌வே நன்றாகப் பேச‌க் கூடிய‌ மாண‌விக‌ள் இருக்கையில் என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ப‌து தான். ஆனால் யாருமே, என்னுட‌ன் ப‌டித்த‌ பிராமண‌‌‌வ‌குப்பைச் சேர்ந்த‌ தோழிகள், ஆசிரியர்கள் உட்ப‌ட‌ இத‌ற்கு மாற்றுக் க‌ருத்தே தெரிவிக்காத‌துட‌ன் நான் ந‌ன்றாக‌ப் பேசி ந‌டித்த‌தாக‌வும் பாராட்டினார்க‌ள். என்னால் ம‌ற‌க்க‌ முடியாத‌ அனுப‌வ‌ம் அது.

ஆண்டு விழாவென்றால் அதிக‌ம் எதிர்பார்க்கிற‌ இன்னொரு விஷ‌ய‌ம் ப‌ரிச‌ளிப்பு. மேடையில் ந‌ம‌து பேர் வாசிக்க‌ப்ப‌டுவ‌தும் க‌ர‌கோஷ‌த்துக்கிடையில் மேடையேறிச் சென்று சிற‌ப்பு விருந்தின‌ரின் புன்ன‌கையோடு ப‌ரிசை (புத்த்கங்கள் தான்) வாங்குவ‌தும் ப‌ட‌ப‌ட‌ப்பான‌ த‌ருண‌ங்க‌ள்.

வாங்கி இருக்கைக்கு வ‌ந்த‌ பின் அம்மா ம‌ற்றும் அக்காவின் கொஞ்ச‌ல்க‌ளுக்கிடையில் அது என்ன‌ புத்த‌க‌ம் என்று பிரித்துப் பார்ப்ப‌து அதை விட‌ ஆன‌ந்த‌ம்!

ப‌ள்ளியில் பேச்சு, கட்டுரை (ஆங்கில‌ம், த‌மிழ், ஹிந்தி) பாட்டு, ந‌ட‌ன‌ம், ஓவிய‌ம், மாறுவேட‌ம், ம‌ற்றும் வினாடிவினா ஆகிய‌ போட்டிக‌ள் ந‌ட‌க்கும்.இதில் பேச்சு, க‌ட்டுரை, பாட்டு, ஓவிய‌ம் இவ‌ற்றுள் எதிலாவ‌து இரண்டு மூன்று ப‌ரிசுக‌ள் கிடைத்து விடும். 'உன‌க்கு எத்த‌னை ப்ரைஸ் என‌க்கு எத்தனை' என்று என் தோழி ஜோதிக்கும் என‌க்கும் எண்ணிக்கையில் போட்டி துவ‌ங்கும். ஒரு முறை அவ‌ளை விட‌ என‌க்கு ஒரு ப‌ரிசு கூடுத‌லாகி நான் முன்ன‌ணியில் இருந்தேன். த‌லை கொள்ளாத‌ பெருமை தான். வேறென்ன‌ என‌க்கு ஒரு புத்த‌க‌ம் அதிக‌மாக‌க் கிடைக்குமே!

ஆனால் ஒரு விஷ‌ய‌த்தை நான் ம‌ற‌ந்து விட்டேன்! 'ஜென‌ர‌ல் ப்ரொஃபிஷியென்சி' என்ற‌ பிரிவில், அதாவ‌து ஆண்டு முழுதும் வ‌குப்பில் முத‌ல்மாண‌வியாக‌ வ‌ந்த‌த‌ற்குப் பெரிய‌ ப‌ரிசு அறிவிக்க‌ப்ப‌டும். அந்த‌வ‌கையில் அந்த‌ ஒரு பிரிவிலேயே அவ‌ளுக்கு நான்கைந்து புத்த‌க‌ங்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ன‌. வ‌ந்து என்னிட‌ம் காட்டிச் சிரித்த‌போது ஆஹா, வ‌டை போச்சே என்றிருந்த‌து!

ஹூம்! அதெல்லாம் ஒரு கால‌ம். க‌ள்ள‌ம் க‌ப‌ட‌மில்லாம‌ல் சுற்றித் திரிந்த‌ அந்த‌க் கால‌ங்க‌ளை மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தாவ‌து அத்த‌கைய‌ இத‌ய‌த்தைத் த‌க்க‌ வைத்துக் கொள்ளும் முய‌ற்சி தான் இந்த‌க் கொசுவ‌த்திக‌ள். கொசுவத்தி அணையாமல் மீண்டும் ப‌ற்ற‌ வைக்க‌ இவ‌ர்க‌ளை அழைக்கிறேன்.

ஹுஸைன‌ம்மா - இவ‌ர‌து இய‌ல்பான‌ ந‌கைச்சுவை எழுத்தை வெகுவாக‌ ர‌சிக்கிறேன். இவ‌ர‌து 'ச‌ப்பாத்தி டேஸ்' ப‌டித்துவிட்டீர்க‌ளா?

அம்பிகா - இப்பவே இவ்ளோ சேட்டைக்காரியா இருக்க்ற‌ இவ‌ங்க‌ ப‌ள்ளிக் கால‌த்துல‌ எப்ப‌டி இருந்திருப்பாங்க? எழுதுங்க‌க்கா உங்க‌ள் ப‌ள்ளி ஆண்டு விழா அனுப‌வ‌ங்க‌ளை.

ஸ்ரீஅகிலா - பதிவுலகில் நம்பிக்கை தரும் புதுவரவு. இவரது பள்ளிக்கால நினைவுகளை அசைப்போடச் சொல்வோமா. வாம்மா மின்னல்!

ச‌ந்த‌ன‌முல்லை - அழுத்த‌மான‌ ச‌மூக விஷயங்களுக்கு ம‌ட்டும‌ல்ல, அழகான நினைவலைகளை எழுதுவதிலும் என் டாப் ஃபேவ‌ரிட் இவ‌ர்தான். வாங்க‌ மேட‌ம். வ‌ந்து சுத்துங்க‌!

வெறும்ப‌ய‌ - இப்போது தான் இவ‌ரைப் ப‌டிக்க‌ ஆர‌ம்பித்திருக்கிறேன். இய‌க்குந‌ர் ட‌ங்க‌ன் ப‌ற்றி அருமையான‌ த‌க‌வ‌ல்க‌ளைப் ப‌கிர்ந்திருக்கிறார். புட்டு ச‌மைத்த‌ க‌தையை எழுதிய‌ வித‌ம் சுவார‌சிய‌ம். இப்ப‌திவினையும் அதே போல் சுவாரசியமாக‌த் தொட‌ர்வார் என்று ந‌ம்புகிறேன்.

ஜோ ஆனந்த் - ‍இவரையும் இப்போது தான் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். இவர் எழுதும் விஷயங்கள் எனக்குப் பிடித்திருக்கின்றன. குழந்தைகளை அடிக்காதீர்கள் என்ற இவரது இடுகை மிகவும் முக்கியமானது.

பி.கு. 1: விளையாட்டுக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் என்பதால் விளையாட்டு விழாவைப் பற்றி எழுதவில்லை. விருப்பமுள்ளவர்கள் அதையும் எழுதலாம்.

பி.கு. 2: ப‌திவு கொஞ்ச‌ம் நீ....ள‌ம்; பொறுத்த‌ருள்க‌.

15 comments:

ஆயில்யன் said...

ஹைய்யோ ஹய்யோ இந்த காலேஜ் பங்ஷன் நினைவுகளை பகிர்ந்துகிடறதுன்னா ஆசையாத்தான் இருக்கு ஆனா அதில சொல்லவேண்டிய விசயங்கள் எம்புட்ட்ட்டு இருக்கு ! தீம் ஸாங்கு ஆடறதுக்கு தீம் தேடி புடிக்கிறதுல ஆரம்பிச்சு ஸ்டேஜ் பர்ஃபாமென்ஸ்ல தெரிஞ்சவங்க/புரிஞ்சவங்கிட்ட பல்பு வாங்காம இருக்கறது வரைக்கும் ஆல் ஸ்டோரிஸ் - ப்ளாக்ல எழுதுறதுக்கு - நாட் பாசிபிள் :)))

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நீளமா இருக்கு.... படிச்சிட்டு வரேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

இர‌ண்டாம் வ‌குப்பில் ஜப்பான் ந‌ட‌ன‌ம். 'ல‌வ் இன் டோக்யோ' இந்திப் ப‌ட‌த்தில் வ‌ரும் ச‌ய்னோரா பாட‌லுக்கு ஆடினோம். நான் ந‌ன்றாக‌ ஆடினாலும் த‌லையைக் குனிந்து கொண்டு, சிரிக்காம‌ல் உம்மென்று இருப்பேன். அத‌னால் முத‌ல்வ‌ரிசையில் நின்றிருந்த‌ என்னை இர‌ண்டாம் வ‌ரிசைக்கு அனுப்பி விட்டார்க‌ள். அப்பாடாவென்று அத‌ன்பின் நிமிர்ந்து பார்த்துச் சிரித்து ஆடினேன். டீச்ச‌ருக்குத் தான் ப‌ல்ப்!

//

ரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே டீச்சரை ஏமாத்த ஆரம்பிச்சாச்சா.....ரைட்டு...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அடடா.. அக்கா கடைசில நம்மளையும் மாட்டி விட்டிட்டீங்களே...

சரி.. நடப்பது நடக்கட்டும்...

யாரங்கே....

முழங்கட்டும் போர் முரசு...

படை கிளம்பட்டும்...

நம் பள்ளி மற்றும் கல்லூரி நினைவுகளை நோக்கி..

கூடிய விரைவில் வெற்றியோடு திரும்புகிறேன்...

எல் கே said...

kosu varthi pattha vachiteenga....

சௌந்தர் said...

டீச்ச‌ருக்குத் தான் ப‌ல்ப்!//

என்ன ஒரு வில்ல தனம்

Sriakila said...

இதோ வந்து...ட்டே.............ன். எப்படி மின்னல் மாதிரி வந்தேன்? ஸ்கூல் ஆண்டு விழாவா? ம்ம்.. அதெல்லாம் அந்தக் காலம். எனக்கு விவரம் தெரிந்து, 5 ம் வகுப்பிலிருந்து 8 ம் வகுப்பு வரை ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் நம்ம டான்ஸ் கண்டிப்பா இருக்கும். பார்ப்பவர்களுக்குத் தானே கொடுமை! நமக்கென்ன.

தொந்தரவுகள் அதிகமா இருக்கு.. பின்னாடி வர்றேன்..

செ.சரவணக்குமார் said...

நல்லா எழுதியிருக்கீங்க தீபா.

அம்பிகா said...

தீபா,
மறுபடியும் பள்ளி நாட்களை நினைவூட்டும் தொடர்பதிவு..
அழைப்புக்கு நன்றி தீபா. ஆனால் இந்த சேட்டைக்காரி அடைமொழி...!

பனித்துளி சங்கர் said...

நேர்த்தியான எழுத்து நடை மிகவும் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் . இந்த பதிவை தொடராக எழுதப் போகும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .

பா.ராஜாராம் said...

நல்லது..

கொழுந்து விட்டு எரியட்டும்! :-)

ஹுஸைனம்மா said...

அழைப்பிற்கும், பாராட்டிற்கும் நன்றி தீபா. விரைவில் எழுதுகிறேன்.

'பரிவை' சே.குமார் said...

Athusari.... kosu varthi m eendum pattha vachchachaaaaaa?

nadakkattum... nadakkattum...

Deepa said...

நன்றி ஆயில்யன்!
நீங்களும் எழுதுங்களேன்.
ஒரு glance ப‌டிக்கும் போதே ந‌ல்லா இருக்கு உங்க‌ அனுப‌வ‌ங்க‌ள்.

ந‌ன்றி வெறும்ப‌ய‌!

ந‌ன்றி LK!

ந‌ன்றி அகிலா!

ந‌ன்றி ச‌ர‌வ‌ண‌க்குமார்!

ந‌ன்றி அம்பிகா அக்கா!

ந‌ன்றி ப‌னித்துளி ச‌ங்க‌ர்!

ந‌ன்றி ராஜாராம்!

ந‌ன்றி ஹுஸைன‌ம்மா!

ந‌ன்றி சே.குமார்!

Gokul Rajesh said...

Nice...