Sunday, July 25, 2010

போபால் - மறக்கக் கூடாத துரோகம்


குழந்தையை அணைத்துக் கொண்டு படுக்கும் போதெல்லாம் மூடிய கண்களுக்குள் இந்தக் காட்சி வருகிறது.


போபால் - தாமதமாகும் நீதி அநீதி என்பார்கள்.

"நாங்கள் முப்பது கோடிப் பேர்களும் நாய்களோ பன்றிச் சேய்களோ" என்று கேட்டான் பாரதி. நூறு கோடியைத் தாண்டிய பின்பும் இந்நிலை தான் தொடர்கிறதென்றால் நெஞ்சம் கொதிக்கிறது.

அதுவும் வெள்ளைக்காரர்களல்ல; நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அதிகார வர்ககமே மக்களை வெள்ளை எலிகளாகப் பயன்படுத்திக் கொள்ளச் சம்மதித்திருக்கிறதென்றால் இது என்ன ஜனநாயகம்?

உணவில்லை, உடையில்லை, அடிப்படைத் தேவைகள் எதுவும் இல்லை; உயிர் வாழ அனுமதியும் பறிக்கப் படுகிறது இந்தச் சபிக்கப்பட்ட தேசத்தில். தொடர்ந்து பல சந்ததிகளுக்கு!

ஆம், போபால் கொடூரம் அன்று மடிந்த மக்களோடு முடிந்து விடவில்லை. நிலத்தடி நீரையும் காற்றையும் பெண்கள் கருப்பைகளையும் சந்ததி சந்ததியாய்த் தாக்கி வரும் அக்கிரமத்தை என்ன சொல்வது?

போர், ஆதிக்கம் என்று வந்த நாடுகள் கூட நம் நாட்டில் இத்தகைய கொடுமையை நிகழ்த்தியதாக நான் அறிந்ததில்லை. வாணிபம் செய்ய வந்த பேடி ஒருவன் நம் சொந்த சகோதரர்களின், அப்பாவி எளிய இன்னுயிர்களைக் கூறு போட்டுக் குதறிச் சென்றிருக்கிறான்.

அப்படுபாதகமான செயலைப் புரிந்தவனுக்குத் தங்கத் தட்டில் மரியாதை வைத்து உயிர்ப்பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது.
இப்போது கவன்க்குறைவு என்ற ஒரே காரணத்தைக் காட்டி இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

இன்றளவும் சுகபோகமான வாழ்வு வாழ்ந்து வரும் வாய்ப்பையும் அவன் சிறிதும் இழக்கவில்லை. ஏன்? அவன் அமெரிக்காக்காரன். காசு போடும் முதலாளி.
சீ சீ, காசுக்காகப் பெண்டு பிள்ளைகளை விற்கும் புரோக்கர்கள் கூட இந்த அரசியல் வாதிகளை விட மேலானவர்களாகத் தெரிகிறார்களே.

அதுவும் இது விபத்து அல்ல திட்டமிட்ட படுகொலை என்பதை ஆதாரங்களுடன் அறியும் போது...ஐயோ!


உலகெங்கும் பல இயக்கங்கள் போபாலில் இறந்த மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் சொந்த தேசத்தில் இப்படிப் பட்ட துரோகம் நிகழ்ந்திருக்கிறது. இம்மண்ணில் பிறந்ததற்காக அவமானப் படும் சூழல் கூட வருமென்று நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் போபால் விஷயத்தில் இது உண்மையாகிறது.

தயவு செய்து இந்த மின்னிதழைப் படியுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மால் குறைந்தபட்சம் செய்யக் கூடியது விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே. அதைச் செய்யத் தவற வேண்டாம்.

மேலும் படிக்க:







5 comments:

Madumitha said...

நடந்தவை(போபால்)
இனி நடக்கப் போகிறவை(அணு ஒப்பந்தம்)
ரத்தத்தையும், கண்ணீரையும்
தொட்டு எழுதுகிறார்கள்
இந்திய வரலாறை
நம் அரசியல்வாதிகள்.

'பரிவை' சே.குமார் said...

//அதுவும் வெள்ளைக்காரர்களல்ல; நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அதிகார வர்ககமே மக்களை வெள்ளை எலிகளாகப் பயன்படுத்திக் கொள்ளச் சம்மதித்திருக்கிறதென்றால் இது என்ன ஜனநாயகம்? //


kodumaiyana jananaayagam.... sorry 'PANA'nayagam

காமராஜ் said...

மிகுந்த கோடூரம்.
யார் பேசுறாங்க ?
வெளியில் தெரியாது போனது இன்னும் சோகம் தீபா.

போபால் said...

தீபா உங்களின் இந்தப் பதிவை போபால் தளத்தில் மீள்பதிவிட அனுமதி தேவை.

Deepa said...

@போபால்
பதிவிடுங்கள். மிக்க நன்றி.