என்ன சொல்வது. சில சமயம் வாழ்க்கை அதிசயங்களை அள்ளித் தருகிறது. எதிர்பாராத இடங்களிலிருந்து முகமறியாத யாரோ ஒருவரிடமிருந்து மிகப்பெரிய உதவியும் அக்கறையும் கிடைக்கும் போது அதற்கு எந்த வகையில் தகுதி பெற்றிருக்கிறோம் என்று மனம் நெகிழ்கிறது.
எதற்காக இந்தப் பீடிகை?
ஒரு மாதம் முன்பு தான் (அலையோ அலை என்று அலைந்து) எடுத்திருந்த என் ஒரிஜினல் ட்ரைவிங் லைசென்ஸைச் சில நாட்களுக்கு முன்பு தொலைத்து விட்டிருந்தேன்.
கைப்பையில் பக்கவாட்டுப் பாக்கெட்டில் அலட்சியமாக வைத்திருந்திருக்கிறேன். அதை ஜெராக்ஸ் எடுத்து ஒரிஜினலை வீட்டில் வைக்குமாறு நூறு முறையாவது ஜோ சொன்னதையும் அலட்சியப்படுத்தி இருந்தேன். ஒரு நாள், 'இவர் நச்சரிப்பு தாங்க முடியலையே. சரி ஜெராக்ஸ் எடுப்போம்' என்று பையைத் தேடினால் காணோம்!
வீடு முழுவதும் தேடியாகிவிட்டது. நேஹா எடுத்து எங்காவது போட்டிருப்பாள் என்று அவள் பாட்டி வீட்டிலும் தேடச் சொல்லி ட்ரில் வாங்கியாகி விட்டது. கிடைத்தபாடில்லை.
அப்படி இருக்க, நேற்று திடீரென்று ஜோ அதைக் கொண்டு வந்து கொடுத்தார். சந்தோஷக்கூக்குரலிட்டு அடங்கியதும் "எங்கே இருந்திச்சு? ஒளிச்சு வைச்சு விளையாடினியா" என்று கேட்டதற்குப் பதிலே பேசாமல் ஒரு கடிதத்தை நீட்டினார்.
"உங்கள் டிரைவிங் லைசன்ஸ் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே சாலையில் கிடந்தது. ஒரு மாதத்துக்கு முன்பு தான் பெற்றிருக்கிறீர்கள் என்று அறிகிறேன். அதற்குள் தொலைத்து விட்டீர்களே. கவனமாக இருங்கள்." என்ற அறிவுரையுடன்; பெயர் கூடக் குறிப்பிடாமல் இருந்தது.
ஒரே ஒரு இமெயில் முகவரி மட்டும். அதில் அவர் பிறந்த ஆண்டு 87 என்று இருந்தது. ஆணோ பெண்ணோ, என்னை விட வயதில் ரொம்பவும் இளையவர்; எத்தனை பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார்? வெகு நேரம் அந்தக் கடிதத்தைக் கையில் வைத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டிருந்தேன்.
அவரது முகவரிக்கு மெயில் அனுப்பி என் நன்றியையும் மகிழ்ச்சியையும் இயன்றவரை தெரிவித்துக் கொண்டேன். இதன் மதிப்பு தெரியாத எவர் கையிலாவது, ஏன் பிராணிகள் ஏதாவது கவ்விக் கொண்டு போயிருந்தால்? இன்னொரு லைசன்ஸ் எடுப்பது மிகக் கொடுமையான காரியமாமே.
காலையில் இந்தப் பரவசத்தோடே இருந்தேனா, மாலையில் இன்னொரு இன்ப அதிர்ச்சி! பல மாதங்களுக்கு முன் காணாமல் போன மோதிரம் (அது மிகவும் விசேஷமானது!) படு யதார்த்தமாக ஏதோ அடுக்கி வைத்திருந்த துணிகளுக்கிடையே அகப்பட்டது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!
ஆக, வழக்கமாகக் காலையில் தோன்றும் சிடுசிடுப்பும் பதட்டமும் இல்லாமல்
வாழ்க்கை என்னை எவ்வளவு அன்புடன் நடத்துகிறது என்ற நன்றியுணர்ச்சியுடன் இன்று காலையில் பரிபூரண சாந்தமான, மனநிலையுடன் எழுந்தேன். அந்த மனநிலையுடன் அடுப்படிக்குச் செல்ல இஷ்டமில்லை. இன்று மதிய உணவு சமைக்கவில்லை என்று முடிவெடுத்தாகி விட்டது. :)
நேஹா நேரம்!
சுவரில் கிறுக்கக் கூடாது என்பதாக ஒரு கதையைச் சொல்லி இருந்தேன். அது முதல் சுவரில் கிறுக்காதது மட்டுமல்ல, ஏற்கெனவே கிறுக்கி வைத்த சுவர்களைப் பார்த்து விட்டு, "செவத்துல கிறுக்கக் கோடாது. பேப்பர்ல தான் கிற்க்கனும். பக்கெட் தண்ணி புட்ச்சுத் தொடக்கனும்..." என்று சுவரைக் காட்டுகிறாள்.
****
அம்மா...சாக்கீ, சாக்கீ, தாங்க...
"நோ நேஹா, ஒன்னு சாப்டேல்ல, அதிகமா சாப்டா வயத்துல பூச்சி வரும்."அடம் பிடித்து அழ ஆரம்பிக்கிறாள்.
அப்போது முதல்நாள் இரவு சூப் செய்து தரச் சொல்லிக் கேட்டது என் நினைவுக்கு வருகிறது.
"குட்டிம்மா, அம்மா சூப் செஞ்சு தரேன் என்ன? அழக்கூடாது" என்றேன். உடனே அழுகையை நிறுத்தி விட்டுக் கலங்கிய கண்களோடு "சூப்" என்று சிரித்தாள்.
அப்பாடா, என்று சூப் வைக்கப் போனேன்.
வந்து காலைக் கட்டிக் கொண்டு, "அம்மா, லவ் யூம்மா. சாக்க்கி சாப்டக் கோடாது. வய்த்துல பூச்சி வரும். இல்லம்மா?"
"?!!!!" - நான்.
12 comments:
SO CUTE அந்த குட்டி பாப்பா..,
AND ஆனந்தமான அந்த மனநிலையை ரசித்து மகிழுங்கள்....!
டிரைவிங் லைசென்ஸ், மோதிரம், நோ குக்கிங், நேஹா - Life is indeed beautiful.
//அந்த மனநிலையுடன் அடுப்படிக்குச் செல்ல இஷ்டமில்லை.///
ஹை... இப்டி ஒரு சாக்கா...
http://vaarththai.wordpress.com
அடிப்பாவி ஹோட்டலுக்கு போக, சமைக்காமல் இருக்க இப்படியெல்லாம் கூட வழியிருக்கா. ட்ரை பண்ரேன் :))
:-) இதே சந்தோஷமான மனநிலை என்றும் நிலைக்கட்டும்!
சோ..சமைக்காம இருந்தாத்தான் எதுவும் தொலைய மாட்டேங்குதுன்னு புரியுது!! :)
நேஹா...செம க்யூட்! ரொம்ப ரசிச்சேன்! ஃபோட்டோலே வளர்ந்துட்டா மாதி்ரி இருக்கு!
@@@சந்தனமுல்லை--//
:-) இதே சந்தோஷமான மனநிலை என்றும் நிலைக்கட்டும்! //
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
இந்த வயதில் சுவரில் கிறுக்காமல் வேறு எப்போது கிறுக்குவது? சுதந்திரமாக கிறுக்க விடுங்கள்.. கொஞ்ச நாள் கழித்து பெயிண்ட் அடித்துக் கொள்ளலாம்.
\\\அப்படி இருக்க, நேற்று திடீரென்று ஜோ அதைக் (ட்ரைவிங் லைசென்ஸை) கொண்டு வந்து கொடுத்தார்.///
\\\மாலையில் இன்னொரு இன்ப அதிர்ச்சி! பல மாதங்களுக்கு முன் காணாமல் போன மோதிரம் (அது மிகவும் விசேஷமானது!) படு யதார்த்தமாக ஏதோ அடுக்கி வைத்திருந்த துணிகளுக்கிடையே அகப்பட்டது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!///
மேலே கூறிய இரண்டும் மிக சந்தோஷமான விஷயம்!!!
ஏதாவது ஏழைக்கு ஏதேனும் உதவி செய்யலாமே???
தொலைந்தது கிடைக்கும் நா.......ள்
அப்டீ னு கொண்டாடியிருக்கலாமே.!
நேஹாவுக்கு வாழ்த்துக்கள்.
சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க்கை அழகுதான்!
இப்படித்தான் அமைந்துவிடுகிறது. யாரோ வழிப்பறி செய்தான் என்பதற்காக லிஃப்ட் கேட்கும் அவசரக்காரர்களை உதாசீனப்படுத்தவேண்டாமென்று ஒரு கவிதை படித்த ஞாபகம். எங்கிருந்தாவது நானிருக்கிறேன் என்று சொல்லி நம்பிக்கை கைகொடுத்துக்கொண்டே இருக்கும்.
நன்றி லெமூரியன்!
நன்றி உமா!
நன்றி சிதம்பரம்!
நன்றி மயில்!
பண்ணிட்டுச் சொல்லுங்க.
நன்றி முல்லை!
நன்றி ஜெய்லானி!
நன்றி பொன்ராஜ்!
அருமையான சிந்தனை; கண்டிப்பாகச் செய்கிறேன். நன்றி.
நன்றி அம்பிகா அக்கா!
நன்றி அங்கிள்!
நன்றி காமராஜ் அங்கிள்!
Post a Comment