ஏப்ரல் மே என்றாலே வெயிலின் கொடுமையையும் மீறி பள்ளிக் குழந்தைகளுக்கு லீவாயிற்றே என்ற சந்தோஷமும், பார்க்கும் குழந்தைகளிடமெல்லாம் "என்ன லீவ் விட்டாச்சா" என்று கேட்பதும் பதிலுக்கு அந்த உற்சாகச் சிரிப்பையும் எதிர்பார்ப்பது வழக்கமாகி விட்டது. பள்ளிப் படிப்பு கொடுமை என்று அர்த்தமில்லை.
ஆனால் இந்த கோடை விடுமுறையில் தான் குழந்தைகள் குழந்தைகளாக இருக்க முடியும்.
காலையில் எழுந்து பல் தேய்த்துக் காப்பி குடித்ததுமே விளையாட ஓடிப் போய்விட்டு மதியம் சாப்பிட அழைக்கும் வரை ஆடு ஆடென்று ஆட்டம்,
மதிய வேளையில் தூங்கும் அம்மாவுடன் ஒண்டிக்கொண்டு குண்டு கதைப்புத்தகம், ("வெயில்ல வெளையாடப் போகவேண்டாம்")
முன்மாலைப் பொழுதில் கிணற்றடியில், பின் வீட்டு சகாக்களுடன் சிரித்துப் போட்டி போட்டுக் கொண்டே இரும்புவாளியில் தண்ணீர் இறைத்துக் குளியல்,
பக்கத்து வீட்டு அக்கா "வைதேகி காத்திருந்தாள்" சினிமா பாட்டுப் புத்தகம் பார்த்து இஷ்டத்துக்கும் பாட குட்டிகள் எல்லோரும் அபினயத்துடன் ஆடியது
எதிர்வீட்டு அண்ணன் ராணி காமிக்ஸ் படித்துக் கதை சொல்ல சுற்றி உட்கார்ந்து நடுங்கிக் கொண்டே கேட்டது
மொட்டை வெயிலில், வீட்டில் சொல்லாமல் அண்ணனுடன் சைக்கிளில் பெரிய லைப்ரரிக்குச் சென்று புத்தகங்கள் அள்ளி வந்தது
ஐந்தாவது லீவில் முதல்முறையாக சுனிதா சித்ரா அக்காக்களிடம் சீட்டு விளையாடக் கற்றுக் கொண்டது
அந்தி சாய்ந்ததும் அக்கா கை பிடித்து வடபழனி கோவிலுக்குச் சென்று பின் மார்க்கெட்டில் வளையல், ஹேர்கிள்ப் வாங்கியது
சித்தப்பா பெண்கள் வீட்டுக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கப் போகிறார்கள் என்றதும் சொர்க்கமே தரையிலிறங்கியது போல் குதூகலித்தது.
(இரவெல்லாம் கதை பேசிச் சிரிக்க வயதொத்த ஆள் கிடைப்பதென்றால் சும்மாவா?)
வெயிலாவது ஒண்னாவது? வீட்டில் சாப்பிட, காபி குடிக்க என்று தொண்டை வலிக்க அழைக்கும் வரை பக்கத்து வீட்டிலோ தெருவிலோ புழுதி பறக்க விளையாடியது
சம்மர் கேம்ப், ஸ்விம்மிங் க்ளாஸஸ், சைக்கிள், பெயின்டிங் க்ளாஸஸ், பீச், சினிமா, கிஷ்கிந்தா, மாயாஜால், பாட்டு க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், கீ போர்ட் க்ளாஸ், இதற்கெல்லாம் இடையே மேற்கூறிய அவற்றை எப்படி நம் குழந்தைகளுக்கு மீட்டுத் தருவது?
17 comments:
well written
அந்தந்த சமயத்து விளையாட்டுகள் அந்த அந்த சமயம். இந்த காலத்து குழந்தைகளுக்கு இதான் பரிட்சயம் இதான் பிடிக்கும்.இதை அவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் .அந்த காலத்தில என நம் பாட்டி அத்தை ஆரம்பித்தால் சில சமயம் எரிச்சல் வருமல்லவா ?அது போல நாம் அவர்களை எரிச்சல் படுத்தாமல் இருப்போம். கால மாற்றங்களுக்கு நாம் உட்பட்டு தானே ஆக வேண்டும் .நமக்கு வேண்டுமானால் புழுதியில் விளையாடுவது சொர்க்கமாய் இருந்திருக்கலாம் ,அதை அவர்களும் விரும்ப வேண்டும் ,அது அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டாமே? என்ன சொல்றீங்க தீபா?
\\சம்மர் கேம்ப், ஸ்விம்மிங் க்ளாஸஸ், சைக்கிள், பெயின்டிங் க்ளாஸஸ், பீச், சினிமா, கிஷ்கிந்தா, மாயாஜால், பாட்டு க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், கீ போர்ட் க்ளாஸ், இதற்கெல்லாம் இடையே மேற்கூறிய அவற்றை எப்படி நம் குழந்தைகளுக்கு மீட்டுத் தருவது?\\
கஷ்டம்தான்..
சம்மர் லீவுன்டாலே எனக்கு நினைவுக்கு வருவது எங்க கம்மா (அம்மா வழி பாட்டி) வீடும் மதியம் ஆனா தோலை சீவி துண்டு துண்டா வெட்டி தர்ற மாம்பழமும் தான்..
நீங்க எழுதுறதை பார்த்தா எனக்கும் லீவு நாட்களை பத்தி எழுதனும்னு ஆசையா இருக்கு..
ஹ்ம்ம்... இந்நாட்களில் கிடைக்கும் நல்ல விளையாட்டுப் பொருட்களைக் கண்டு எனக்கு வரும் பொறாமை, இப்போதைய குழந்தைகள் இழப்பதை நினைத்து காணாமல் போய்விடுகிறது.
Nice one
// padma said...
அந்தந்த சமயத்து விளையாட்டுகள் அந்த அந்த சமயம்.//
ஆமாம். என் பாட்டி, என் அப்பா பள்ளிக்கு நடந்து போனார், நீங்கலாம் வலிக்காம பஸ்ல போறீங்க என்றபோது, கோவத்துடன் ”அப்ப பஸ் இல்ல, அதனால நடந்தாங்க; இப்ப இருக்குது, போறேன்” என்று கோபம் காட்டியது ஞாபகம் வருகிறது.
இருப்பினும், முடிந்தவரை ஓடியாடி விளையாடவும் அறிவுறுத்துவது நல்லது. வீட்டினருகே அதற்கு வசதி இல்லாதவர்கள், ஸ்விம்மிங், டான்ஸ் கிளாஸ்களில் சேர்த்துவிடுவதே நல்லது. எல்லாம் ஒன்றுதானே?
ஒரு காலத்தில் நம் பெற்றோர்கள் சொன்னார்கள்..இப்போது நாம் சொல்வோம்..
"போயே போச்சு..அந்தக் காலம்.."
//இந்த கோடை விடுமுறையில் தான் குழந்தைகள் குழந்தைகளாக இருக்க முடியும்.//
உண்மையான வார்த்தைங்க... எத்தனை இனிமைகள்...
இந்த கோடையில் நம் குழந்தைகளுக்கும் இதை கிடைக்கச்செய்யவேண்டும்....
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தீபா... அழகா சொல்லி இருக்கீங்க...
//கோடை விடுமுறையில் தான் குழந்தைகள் குழந்தைகளாக இருக்க முடியும்.//
உண்மை. இறுதியில் கேட்டிருப்பது மிக முக்கியமான கேள்வி.
இன்றையக் குழந்தைகள்
இழந்தது மட்டுமல்ல
பெற்றதும் அதிகம் தான்.
கிராமத்து பின்னணி கொண்ட குழந்தைகள் கூட ஸ்பெசல் கிளாஸ் போவதை சகிக்க முடியவில்லை
நல்ல நினைவு மீட்டல் தீபா!எனக்கும் என்னுடைய கோடை விடுமுறைகள் நினைவுக்கு வந்துவிட்டன. விடுமுறைக்கு உறவினர் ஊர்களுக்கு வீடுகளுக்கு செல்வது ஒரு மகிழ்ச்சி என்றால் சம்மர் கேம்ப்-களுக்குச் செல்வதும் இன்னொரும் மகிழ்ச்சி.நானுமே சம்மர் கேம்ப் அட்டெண்ட் செய்து வளர்ந்தவள்தான் - அது 15 நாட்களோடு முடிந்துவிடும்.புது நண்பர்கள்,புதிய கற்றல்கள்! விடுமுறைக்கு கோடை வாசஸ்தலங்களுக்குச் செல்வதைவிட உறவினர் வீடுகளுக்கு சொந்த ஊருக்கு செல்வதே விருப்பம்!:-)
நல்ல பதிவு தீபா.
இயந்திரமயமான வாழ்விலிருந்து கொஞ்சம் விடுமுறை அவசியம் தேவை.
mudintha varai, summer campgalai avoid seyvom ...
தீபா!
இந்த விஷயத்தை நானும் சில நாட்களாக யோசித்துக்கொண்டு இருக்கிறேன். முன்னெல்லாம் லீவு விட்டவுடன் நாங்களெல்லாம் உறவினர்களின் வீட்டுக்கு ஓடுவோம்.
என் மகள் பிரீத்துவுக்கு அப்படியெல்லாம் ஆசையில்லை. செல்போனின் உபயமும் இதற்கு ஒரு காரணம்.
ஆனால் தோழிகளின் வீட்டுக்குச் செல்வது, அவர்களை தன் வீட்டுக்கு வரவழைத்துப் பேசிக்கொண்டு இருப்பதில் நாட்டமிருக்கிறது.
உறவினர்களின் இடத்தை நட்புவட்டம் எடுத்துக் கொண்டு இருக்கிறதோ எனத் தோன்றுகிறது.
விடுமுறை என வந்துவிட்டால் வேலைக்கு ஏது வேலை! :) என்ன ஒரு கஷ்டம், ஊரில் இருப்பது போல உற்றார் உறவினருடன் குதூகலித்து இருக்க இயல்வதில்லை.
Post a Comment