ஒலென்கா, ஓய்வு பெற்ற கல்லூரிப் பணியாளரின் மகள், எதையோ யோசித்துக் கொண்டு வீட்டுப் பின்கட்டில் உட்கார்ந்திருந்தாள். நல்ல வெயில், ஈக்கள் வேறு மொய்த்துக் கொண்டிருந்தன. இன்னும் சற்று நேரத்தில் பொழுது சாய்ந்து விடும் என்பதே ஆறுதலான விஷயமாக இருந்தது. கீழ்வானத்தில் திரண்டிருந்த கரிய மழைமேகங்கள் அவ்வப்போது லேசான ஈரக்காற்றை அனுப்பிக் கொண்டிருந்தன.
அந்த வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குத் தங்கியிருந்த குகின் அப்போது அங்கே வந்தான். அவன் டிவோலி என்ற திறந்தவெளி நாடகக் கம்பெனியை நடத்தி வந்தான். தோட்டத்தின் நடுவே நின்று கொண்டு வானத்தைப் பார்த்தான்.
"போச்சு, மறுபடியும் இன்னிக்கு மழை பெய்யப் போகுது! என்னைச் சோதிக்கிறதுக்காகவே தினமும் மழை பெய்யுது. நாண்டுக்கிட்டுச் செத்துடலாமான்னு இருக்கு. ஒவ்வொரு நாளும் எவ்வளோ நஷ்டமாகுது." - கைகளை விரித்துக் கொண்டு ஒலென்காவிடம் புலம்பினான் குகின்.
"பாருங்க ஓல்கா எங்க நெலமையை. கேட்டா அழுதுடுவீங்க. ராப்பகலா தூங்காம ஓய்வொழிச்சலில்லாம நாடகம் எழுதறேன். சிறந்த படைப்புகளை நாடகமாத் தரப் படாத பாடு படறேன். கடைசில என்ன ஆகுது? இந்த முட்டாள் ஜனங்களுக்கு எங்கே அதோட அருமை புரியுது? அவங்களுக்கு வேண்டியதெல்லாம் கோமாளிக் கூத்துங்க தான்.
அப்புறம் இந்த மழை. சொல்லி வெச்சா மாதிரி தினமும் சாயங்காலம் வந்து தொலைக்குது. மே பத்தாம் தேதி ஆரம்பிச்ச மழை, இதோ ஜூன் தொடங்கியும் விடமாட்டேங்குதே. கொடுமை, கொடுமை. ஜனங்க வராங்களோ இல்லியோ, நான் மட்டும் வாடகையும் கொடுத்தாகணும், நடிகர்களுக்குச் சம்பளமும் கொடுத்தாகணும்."
அதற்கு மறு நாளும் மழைக்கான அறிகுறிகள் தோன்றும். வேதனையோடு சிரித்தபடி குகினும் மழையிடம் புலம்பத் தொடங்குவான்.
"ம்..நல்லா கொட்டித்தீர்த்துக்கோ. ஒரேயடியா என்னை மூழ்கடிச்சுடு! காசக் கொடுக்க முடியாததால என்னை உள்ள தள்ளப் போறாங்க. சைபிரியாவுக்குத் தான் போகப் போறேன் நான்... ஹா ஹா ஹா"
ஒவ்வொரு நாளும் ஒலென்கா வேதனையாக மௌனத்துடன் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பாள். சமயத்தில் அவள் கண்கள் கலங்கி விடும். இறுதியில் அவனது பரிதாபமான நிலை அவள் மனத்தைக் கொள்லை கொன்டுவிட்டது. அவள் அவனை நேசிக்கத் தொடங்கினாள்.
ஒல்லியான தேகமும் சோகையில் வெளுத்த முகமும், நெற்றியில் படிய வாரிய சுருள் முடிகளுமாய் இருந்தான் குகின். மெல்லிய குரலில் தான் பேசுவான். அவன் முகத்தில் நிரந்தரமான நிராசை குடிகொண்டிருந்தது. இத்தனை குறைகள் இருந்தாலும் அவன்பால் அவள் மனதில் உண்மையான ஆழ்ந்த காதல் ஏற்பட்டது. எப்போதுமே யாரையேனும் நேசிப்பதே அவளின் இயல்பாக இருந்தது. யார் மீதும் அன்பு கொள்ளாமல் அவளால் உயிர் வாழவே முடியாது. சிறுவயதில் அவள் தன் தந்தையை மிகவும் நேசித்தாள். பின்பு, ஒவ்வோராண்டும் பைரான்ஸ்கிலிருந்து அவளைப் பார்க்க வரும் அத்தையை; அதற்கு முன்பு பள்ளிடில் படித்த போது ஃப்ரெஞ்சு ஆசிரியரை.
இளகிய மனமும் இரக்க குணமும், கனிவு ததும்பும் கண்களும், ஆரோக்கியமான உடற்கட்டும் ஒருங்கே பெற்றவள் அவள்.
அவளது அழகிய கன்னங்களையும், சிறிய மச்சமொன்று காணப்படும் அவளது மெல்லிய கழுத்தையும், பிறர் பேசுவதைக் கவனமாகக் கேட்கையில் அவளது முகத்தில் தோன்றும் அந்தக் கள்ளங்கபடமில்லாத புன்னகையையும் பார்க்கும் ஆண்கள் கூட, "பாவம், நல்ல பொண்ணுடா அது..." என்று தங்களுக்குள் சிரித்தபடி சொல்லிக் கொள்வார்கள்.
பெண்களுக்கோ, "என் செல்லமே!" என்று உணர்ச்சிப் பெருக்கோடு அவள் கைகளைப் பிடித்துக் கொள்ளாமல் அவளுடன் பேசவே முடியாது.
அவள் தந்தை அவளுக்கு விட்டுச் சென்ற அவளது பூர்விக வீடு நகரத்தின் எல்லையில் டிவோலிக்கு அருகே இருந்தது. மாலை நேரங்களில் அங்கு நடைபெறும் ஒத்திகைகளையும் பாட்டு கூத்துக்களையும் கேட்டபடி வீட்டில் அமர்ந்திருப்பாள். இரவு நேரம் தாண்டியும் முடியாத அந்தச் சத்தங்களைக் கேட்கும் போது குகினின் வாழ்க்கைப் போராட்டத்தையும் அவனது கலையை மதிக்காத பொதுமக்களையும் நினைத்துப் பரிதாபப்பட்டுக் கொண்டிருப்பாள்.
காலையில் அவன் வீடு திரும்பியதும் அவன் அறைக் கதவோரம் நின்று மெதுவாக எட்டிப் பார்த்துப் புன்னகைப்பாள்.
அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டான். அவளும் சம்மதித்தாள். திருமணத்துக்குப் பிறகு அவளது அழகிய கழுத்தையும் தோள்களையும் நெருக்கமாகக் கண்டு மகிழ்ந்த அவன் உற்சாகத்துடன் சொன்னான், "என் செல்லமே!"
அவன் சந்தோஷமாகவே இருந்தான். ஆனாலும் அவர்கள் திருமணத்தன்று கூட விடாமல் மழை பெய்ததால் அவன் முகம் ஏனோ சுணக்கமாகவே இருந்தது.
அவர்கள் மிகவும் இனிமையாக வாழ்க்கை நடத்தினார்கள். அவள் அவனது அலுவலகத்துக்குச் சென்று கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொண்டாள். அவள் தன் அழகிய கன்னங்கள் மின்ன, கள்ளமில்லா சிரிப்பு சிரித்தபடி அவனுடைய அலுவலகத்திலும், கான்டீனிலும், நாடக மேடைக்குப் பின்புறமும் சரளமாக வளைய வந்தாள்.
தன் நண்பர்களிடமும் உற்றாரிடமும், மேடை நாடகங்கள் தான் உலகிலேயே மிக முக்கியமான விஷயமென்றும், மனித வாழக்கையைச் செம்மைப் படுத்த நாடகங்கள் எவ்வளவு இன்றியமையாதவை என்றும் அளக்க ஆரம்பித்திருந்தாள்.
"ஆனா இதெல்லாம் யாருக்குப் புரியுது? எல்லாருக்கும் தேவை ஒரு கோமாளி. நேத்திக்கு நாங்க அற்புதமான ஒரு இலக்கிய நாவலை நாடகமாப் போட்டோம். ஆளே இல்லை. இதே வானிட்ச்காவும் நானும் ஏதாவது கேவலமான ஒரு மொக்கை நாடகம் போட்டிருந்தா நீ நான்னு கூட்டம் அலை மோதியிருக்கும். நாளைக்கு வானிட்ச்காவும் நானும் "நரகத்தில் ஆர்ஃப்யூஸ்" போடப்போறோம். கண்டிப்பா வாங்க."
நாடகங்களைப் பற்றியும் நடிகர்களைப் பற்றியும் குகின் சொல்வதையெல்லாம் அப்படியே அவளும் ஒப்பித்தாள். அவனைப் போலவே பொதுமக்களை அவர்கள் அறியாமைக்காகவும் ரசனைக்குறைவுக்காகவும் பழித்தாள்; ஒத்திகைகளில் பங்கேற்றாள்; நடிகர்களைத் திருத்தினாள்; இசைக்கலைஞர்களைப் பார்வையிட்டாள். தாங்கள் நடத்திய நாடகத்தைப் பற்றிப் பத்திரிகைகளில் மோசமாக விமர்சனம் வந்தால் வருந்திக் கண்ணீர் விட்டாள். குறிப்பிட்ட பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று சமரசம் பேசித் திருத்தி எழுதச் செய்தாள்.
நடிகர்கள் அவள் மேல் ப்ரியமாக இருந்தனர். அவர்கள் அவளை 'வானிட்ச்காவும் நானும்' என்றும் 'செல்லமே' என்றும் பரிகாசமாக அழைத்தனர். அவள் அவர்கள் மேல் இரக்கங்கொண்டு அவர்கள் கேட்கும் போதெல்லாம் சிறு சிறு தொகைகள் கடன் கொடுத்து வந்தாள். அவர்கள் திருப்பித் தராமல் ஏமாற்றினால் தனிமையில் வருந்தினாளே ஒழிய கணவனிடம் புகார் செய்யவில்லை.
குளிர்காலம் வந்தது. அப்போதும் அவர்கள் நன்றாகவே இருந்தனர். நகரத்தின் மையத்திலிருந்த ஒரு தியேட்டரை விலைக்கு வாங்கி அவ்வப்போது அதைச் வேறு சிறிய கம்பெனிகளுக்கோ,மேஜிக் ஷோக்களுக்கோ வாடகைக்கு விட்டனர்.
எப்போதும் திருப்தியும் சந்தோஷமுமாக இருந்த ஒலென்கா பூரிப்பில் இன்னும் ஒரு சுற்றுப் பெருத்திருந்தாள். குகினோ இன்னும் மெலிந்தும் சோகையில் வெளுத்துக் கொண்டும் போனான். நிலைமை எவ்வளவோ தேறிவிட்டாலும் இன்னும் நஷ்டங்கள் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தான். இரவெல்லாம் இருமிக் கொண்டிருக்கும் அவனுக்குக் கஷாயம் வைத்துக் கொடுத்தும் தைலங்கள் தடவி விட்டும் பரிவுடன் பார்த்துக் கொன்டாள் ஒலென்கா. கதகதப்பான கம்பளிப்போர்வைகளைப் போர்த்திவிட்டுப் பாசத்துடன் அணைத்துக் கொள்வாள்.
அவன் தலையை ஆதரவுடன் கோதிவிட்டு, "என் செல்லம் தெரியுமா நீ! என் அழகுச் செல்லம்" என்று அன்புடன் கொஞ்சுவாள்.
பிப்ரவரி மாதத்தில் புதிய நடிகர் குழுவைத் தேர்வு செய்ய அவன் மாஸ்கோவுக்குப் போனான். அவனைப் பிரிந்து அவளால் இரவில் தூங்கவே முடியவில்லை. இரவெல்லாம் ஜன்னலருகே அமர்ந்து நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தாள். சேவலைப் பிரிந்து தவிப்புடன் அலைந்து கொண்டிருக்கும் ராக்கோழிகளுடன் தன்னை ஒப்பிட்டுக் கொண்டாள்.
ஈஸ்டர் பண்டிகை வரை மாஸ்கோவில் இருக்க வேண்டி இருப்பதாகவும், டிவோலியின் நிர்வாகம் குறித்துச் செய்யவேண்டியது பற்றியும் அவளுக்குக் கடிதம் எழுதினான் குகின். ஆனால் ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிறன்று யாரோ கதவைத் தட்டினார்கள். ஏனோ அவளுக்கு அது ஓர் அபாய அறிவிப்பாகத் தோன்றியது. அதற்கேற்றாற்போல் கனத்த குரலில் யாரோ அழைத்தார்கள். "தயவு செஞ்சு கதவைத் திறங்க. உங்களுக்குத் தந்தி வந்திருக்கு."
கணவனிடமிருந்து இதற்கு முன்பு தந்திகள் நிறைய வந்திருந்தாலும் இப்போது ஏனோ பகீரென்றது ஒலன்காவுக்கு. நடுங்கும் கைகளால் தந்தியை வாங்கிப் படித்தாள்.
"ஐவன் பெட்ரோவிச் குகின் இன்று திடீரென்று இறந்து விட்டார். செவ்வாயன்று அவரது இஇறுதி அடக்கம். மேனும் விவரங்களுக்காகக் காத்திருக்கிறோம்."
அப்படித்தான் இருந்தது அந்தத் தந்து. "இஇறுதி" என்றும், பொருளே இல்லாத "மேனும்" என்ற வார்த்தையோடும். ஓபராக் கம்பெனி மேலாளர் ஒருவர் அதனை அனுப்பியிருந்தார்.
"அய்யோ! வானிட்ச்கா என் அன்பே!" - நெஞ்சு வெடிக்கக் கதறியழுதாள் ஒலென்கா. "என் செல்வமே! உன்னை ஏன் நான் சந்திச்சேன். ஏன் தான் உன்னைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அய்யோ! உன் ஓல்காவை இப்படித் தனியா விட்டுட்டுப் போயிட்டியே"
குகினின் இறுதி ஊர்வலம் செவ்வாயன்று மாஸ்கோவில் நடைபெற்றது. புதன் கிழமையன்று தன்னந்தனியாக ஊர் திரும்பிய ஒலென்கா வீட்டுக்குள் நுழைந்து படுக்கையில் வீழுந்து நெஞ்சுடைய அழுதாள். அவளது ஓலங்கள் அடுத்த தெரு வரைக்கும் கேட்டபடி இருந்தன.
"பாவம் பொண்ணு... எப்படித் துடிக்கிறா பாருங்க" என்று பச்சாதாபப்பட்டனர் அவளது அண்டை வீட்டார்.
மூன்று மாதங்கள் கழித்து சர்ச்சிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தாள் ஒலென்கா. அப்போது அவள் அண்டை வீட்டாரில் ஒருவனான வாஸிலி புஸ்தாலோவ் என்பவன் அவளுடன் சேர்ந்து நடந்து வந்தான். அவன் விறகுக்கடை முதலாளி ஒருவரிடம் மேலாளனாக வேலை பார்த்து வந்தான். ஆனால் வைக்கோல் தொப்பியும், வெள்ளி நிற உள்கோட்டும், தங்கக் கைக்கடிகாரமுமாய், ஒரு கிராமத்துக் கனவான் போலவே தோற்றமளித்தான்.
"எல்லாம் விதிப்படி தான் நடக்குது ஓல்கா. கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டுத் தைரியமா இரு..." என்று அவளைப் பரிவான குரலில் தேற்றிக் கொண்டிருந்தான்.
அன்று அவள் வீட்டு வாசல்வரை வந்து விட்டுச் சென்றான். அன்று முழுதும், அவனது கண்ணியமான கனத்த குரல் அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் பின் எப்போது கண்களை மூடினாலும் அவனது முகமும் கறுத்த தாடியுமே அவள் நினைவில் நின்றது. அவனை அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதே போல் அவளும் அவனை ஈர்த்திருக்க வேண்டும். ஏனென்றால் சில நாட்களுக்கெல்லாம் அவளுக்கு ரொம்பவும் பரிச்சயமில்லாத ஒரு முதிய பெண்மணி அவளைச் சந்திக்க வந்தாள். வந்தவள் புஸ்தாலோவைப் பற்றியே பேசலானாள். அவன் எவ்வளவு சிறந்த மனிதனென்றும், அவனைத் திருமணம் செய்யப் போகும் பெண் கொடுத்து வைத்தவள் என்றும் அவன் புகழ் பாடினாள்.
மூன்று நாட்கள் கழித்து புஸ்தாலோவே நேரில் வந்தான். அவளிடம் அதிகம் பேசக்கூட இல்லை; பத்து நிமிடம் இருந்து விட்டுச் சென்று விட்டான். ஆனால் அவன் சென்றவுடன் அவன் நினைவாகவே இருந்தது ஒலென்காவுக்கு. அவனை மனதார நேசிக்கத் தொடங்கினாள். அன்று இரவு முழுதும் கண்விழித்துக் காய்ச்சலுற்றவள் போல் கிடந்தாள். மறுநாள் உடனடியாக அந்த முதிய பெண்மணியைக் கூப்பிட்டனுப்பினாள். இவர்களிருவருக்கும் அவள் திருமணம் பேசி முடித்தாள்.
ஒலென்காவும் புஸ்தலோவும் இனிதே வாழ்க்கை நடத்தினார்கள். மதிய உணவு வேளை வரை அவன் அலுவலகத்தில் அமர்ந்திருப்பான். பிறகு வியாபார விஷயமாய் வெளியில் செல்வான். அவன் சென்றவுடன் ஒலென்கா அவனது அலுவலகத்தில் அமர்ந்து கணக்கு வழக்குகளைப் பார்ப்பாள். ஆர்டர்கள் வந்தால் குறித்து வைப்பாள்.
"மர விலை ஏறிட்டே போகுது. ஒவ்வொரு வருஷமும் இருபது சதம் ஏறுது. முன்னெல்லாம் உள்ளூர்லையே வாங்கி வித்துட்டு இருந்தோம். இப்போ பாருங்க, வாஸிட்ச்கா மரம் வாங்க மொகிலேவுக்குப் போக வேண்டி இருக்கு. வண்டிச் செலவு வேற." என்று மிகுந்த கவலையும் கரிசனமுமாய்த் தனது தோழியரிடமும் வாடிக்கையாளர்களிடமும் பேசிக் கொண்டிருப்பாள்.
என்னமோ காலம் காலமாய் மரவியாபாரம் செய்தவள் போலவும், உலகிலேயே அதைத் தவிர முக்கியமானது வேறெதுவும் இல்லாதது போலவும் இருக்கும் அவள் பேச்சு. பேச்சினூடாக, "மரம், சட்டம், தேக்கு, படாக்கு" என்று வார்த்தைகளை அவள் அள்ளி விடுவது சிரிப்பாகவும் ஏதோ வகையில் பரிதாபமாகவும் இருக்கும்.
இரவெல்லாம் அவள் கனவில் மலை மலையாய்க் குவிக்கப் பட்டிருக்கும் மரச்சட்டங்களும், லாரி நிறைய மரக்கட்டைகளும் வரும். ஒரு நாள் ஆறடி உயரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்ட மரக்கட்டைகள் ஒன்றோடொன்று மோதிச் சடசடவென்று கீழே சரிவது போல் கனவு கண்டு திடுக்கிட்டுக் கத்தி விட்டாள்.
"என்னடா ஆச்சு, கனவு கண்டு பயந்துட்டியா... சாமிய வேண்டிட்டுப் படு" என்று இதமாக அவளைத் தேற்றினான் புஸ்தாலோவ்.
அவள் கணவனது எண்ணங்கள் அவளுடையதுமாயின. அறை புழுக்கமாக இருப்பதாக அவன் நினைத்தால் இவளுக்கும் உடனே வியர்க்கத் தொடங்கிவிடும்! வியாபாரம் மந்தமாகப் போவதாக அவன் நினைத்தால் இவளுக்கும் அதே கவலை தொற்றிக் கொள்ளூம்.
புஸ்தாலோவுக்குக் கேளிக்கைகளில் விருப்பமில்லை. விடுமுறை நாட்களில் வீட்டிலேயே இருக்க விரும்பினான். இவளுக்கும் அதுவே பழக்கமாயிற்று.
"ஏன் இப்படி வீட்லயே அடைஞ்சு கிடக்கே ஒலென்கா. நாடகம், சர்க்கஸ், இப்படி எதுக்காவது போயிட்டு வரலாம்ல?" என்று அவளது நண்பர்கள் கேட்டால்,
"வாஸிட்ச்காவுக்கும் எனக்கும் நாடகம் பாக்கவெல்லாம் நேரமே இல்ல. அந்த மாதிரி வெட்டிப் பொழுது போக்க என்ன அவசியம்?"
சனிக்கிழமைகளில் புஸ்தாலோவும் அவளும் மாலை சர்ச்சுக்குச் செல்வார்கள். விடுமுறை நாட்களன்று காலையிலேயே சென்று விடுவார்கள். அழகிய பட்டாடை பளபளக்க அவனுடன் அவள் நடந்து செல்கையில் அவர்கள் இருவரையும் சுற்றி இனிய நறுமணமும் சாந்தமான ஒரு அமைதியும் நிலவுவதை உணர முடியும்.
அவர்கள் ஓரளவு வசதியாகவே இருந்தனர். வீட்டில் எப்போதும், பலவகை ரொட்டிகளும் ஜாம்களும் கேக்குகளும் இருந்தன. தினமும் பகல் பன்னிரண்டு மணிக்கு இறைச்சியும் காய்கறி வகைகளும் கொதிக்கும் மணமும், நோன்பு நாட்களன்று மீன் வறுக்கும் மணமும் அவர்கள் வீட்டைக் கடந்து செல்பவர்கள் வாயில் நீரூற வைக்கும்.
அலுவலகத்திலும் தேனீர் தயாரிக்கும் சமோவார் கொதித்துக் கொண்டே இருக்கும். வரும் எல்லா வாடிக்கையாளர்களுக்குப் பிஸ்கெட்டுகளுடன் தேனீர் உபசரிப்பாள் ஒலென்கா.
வாரம் ஒருமுறை ஏரிக்கரைக்குச் சென்று ஆசைதீர நீராடி விட்டு வருவார்கள்.
"ஆமாம், எங்களுக்கு ஆண்டவன் புண்ணியத்தால ஒரு குறையுமில்ல. எல்லாரும் எங்களைப் போல சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன்." என்பாள் ஒலென்கா.
புஸ்தாலோவ் மரம் வாங்க மொகிலேவுக்குச் செல்லும் போது ஒலென்கா பெரிதும் ஏக்கமடைவாள். இரவெல்லாம் விழித்துக் கிடந்து அழுவாள். அப்போது அவர்கள் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்கு இருந்த ஸ்மிர்ணின் என்ற கால்நடை மருத்துவன், அவளுடன் சில சமயம் வந்து பேசிக் கொண்டிருப்பான். மாலை வேளைகளில் அவள் தனிமையைப் போக்க அவளுடன் வந்து சீட்டு விளையாடுவான்.
அவன் சொந்த வாழ்க்கையைக் கேட்ட பிறகு ஒலென்காவுக்கு அவன் மீது மிகுந்த கரிசனம் ஏற்பட்டது. அவனுக்குத் திருமணமாகி ஒரு சின்ன மகனும் இருந்தான். ஆனால் அவன் மனைவி அவனுக்குத் துரோகமிழைத்து விட்டதால் அவளிடமிருந்து பிரிந்து வாழ்கிறான். அவளை வெறுத்தாலும் மகனுக்காக வேண்டி மாதம் அவளுக்குப் பணம் அனுப்பும்படி கட்டாயத்திலிருக்குறான். இதையெல்லாம் கேட்ட பின்பு ஒலென்காவுக்கு மிகுந்த பரிதாபமேற்பட்டது.
"கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். எனக்காக இங்கே வந்திருந்து பேசிக்கிட்டிருந்ததுக்கு நன்றி." என்று அவன் விடை பெறும் போது அவன் கையில் ஒரு மெழுகு வர்த்தியையும் ஏற்றிக் கொடுத்து வழியனுப்புவாள்.
மேலும், எப்போதும் தனது கணவனிடம் கண்டது போலவே பேச்சிலும் நடத்தையிலும் ஒரு மிடுக்கையும் நாகரிகத்தையும் பழக்கிக் கொண்டாள்.அவன் கடைசிப் படி இறங்கும் போது சொல்வாள்:
"இங்க பாரு, நீ உன் மனைவியோட சமாதானமா போயிடறது தான் நல்லது. உனக்காக இல்லாட்டியும் உன் மகனுக்காக நீ அவளை மன்னிச்சுடணும்."
புஸ்தாலோவ் திரும்பி வந்ததும் அவனிடம் ஸ்மிரினினைப் பற்றியும் அவனது துயரமான குடும்ப வாழ்வைப் பற்றியும் சொன்னாள். இருவரும் அப்பாவைப் பிரிந்து ஏங்கும் அந்தச் சிறுவனை நினைத்து வருந்துவார்கள். பின்பு ஏதேதோ பேச்சின் இறுதியாக இருவரும் கடவுள் படத்துக்கு முன் சென்று வணங்கித் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டுமென வேண்டிக்கொள்வார்கள்.
இப்படியாக மிகுந்த அன்போடும் இசைவோடும் அவர்கள் வாழ்ந்து ஆறு ஆண்டுகள் ஓடி விட்டன.
என்ன கொடுமை...குளிர்காலத்தில் ஒரு நாள், ஏதோ அவசர வேலையாக வெளியில் சென்றான் புஸ்தாலோவ். தலைக்குத் தொப்பி அணிந்து கொள்ளாமல் கொடும்பனியில் நனைந்து வந்த அவன் கடுமையாகக் காய்ச்சலுற்றான். எவ்வளவோ சிறந்த மருத்துவர்களை வரவழைத்துப் பார்த்தாலும் பலனளிக்காமல் நான்கு மாதங்களுக்குப் பின் உடல் மோசமடைந்து இறந்து போனான். ஒலென்கா மறுபடியும் விதவையானாள்.
"அய்யோ! எனக்கு யாருமே இல்லியே. கொடுமையான வேதனையைத் தந்துட்டு, இந்த உலகத்துல என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டியே... எனக்காக இரக்கப்பட யாருமே இல்லையா... " நெஞ்சொடியக் கதறினாள் ஒலென்கா.
அதன் பிறகு, இழவுக்காக அணியும் கறுப்பு உடைகளையே எப்போதும் அணியத் தொடங்கினாள். தொப்பிகளும் கையுறைகளும் அணிவதையே விட்டு விட்டாள். சர்ச்சுக்கும் தன் கணவனின் கல்லறைக்கும் தவிர எங்கும் வெளியில் செல்வதில்லை. ஒரு துறவியைப் போல வாழ ஆரம்பித்தாள். ஆறு மாதங்களுக்குப் பிறகு தான் வீட்டின் ஜன்னல்களையே திறந்து விட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக கடைத்தெருவுக்கும் செல்ல ஆரம்பித்தாள். ஆனாலும் அவள் வீட்டில் எப்படித் தன்னந்தனியாகப் பொழுதைப் போக்கினாள் என்பது எல்லாருக்கும் புதிராகவே இருந்தது.
பிறகு அதுவும் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. சில நாள் அவள் தனது தோட்டத்தில் அமர்ந்து அந்தக் கால்நடை மருத்துவன் ஸ்மிரினினுடன் தேநீர் அருந்துவதையும் அவன் அவளுக்குச் செய்தித் தாள்கள் வாசித்துக் காட்டுவதையும் சிலர் பார்த்தனர். மேலும் ஒரு நாள் அவளைச் சாலையில் சந்தித்த பெண்ணிடம் அவள் பேசும் போது, "இந்த ஊர்ல ஆடு மாடுங்களுக்கு ஒழுங்கான ஆஸ்பத்திரியே இல்ல. அதான் எல்லா நோய்த் தொற்றுக்கும் காரணம். குதிரைங்க கிட்டேந்தும், மாடுங்க கிட்டேந்தும், பால்லெந்தும் தான் ஜனங்களுக்கு நிறைய நோய் பரவுது. மனுசங்களுக்குப் பாக்கற மாதிரியே அதுங்களுக்கும் நல்ல வைத்தியம் பாக்கணும்."
அந்தக் கால்நடை மருத்துவனின் வார்த்தைகளை அப்படியே ஒப்பித்தாள். இப்போது எல்லாவற்றிலும் அவனுடைய நிலைப்பாடு தான் அவளுக்கும்!யாரையும் நேசிக்காமல் அவளால் ஒரு வருடம் கூட உயிர் வாழ முடியாது என்பது இப்போது தெள்ளத் தெளிவாகி விட்டது.
வேறு யாராவதென்றால் இம்மாதிரியான நடத்தை கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்கும். ஆனால் ஒலென்காவைப் பற்றி யாராலும் தப்பாக நினைக்க முடியவில்லை. அவளது இயல்புக்கு அது மிகவும் பொருத்தமாகவே இருந்தது. அதனால் அவளுக்கும் அவளது புதிய நண்பனுக்கும் எவரிடமும் தங்கள் செயல்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தங்கள் உறவை மறைக்கவும் வேண்டி இருக்கவில்லை. அப்படியே முயன்றிருந்தாலும் எந்த ரகசியத்தையுமே காப்பாற்ற இயலாத ஒலென்காவால் அது முடிந்திருக்காது.
அவனைச் சந்திக்க அவனது மருத்துவ நண்பர்கள் வரும் போது அவர்களுக்குத் தேனீரோ உணவு வகைகளோ கொடுத்து உபசரிக்க வரும் ஒலென்கா கால்நடை நோய்களைப் பற்றியும், கசாப்புக் கடைகளின் சுத்தமின்மை பற்றியும் விலாவாரியாகப் பேசத் தொடங்குவாள். அவனுக்கோ தர்மசங்கடமாக இருக்கும். விருந்தினர்கள் போன பின்பு, அவள் கைகளைப் பற்றி ஆத்திரத்துடன்:
"உனக்கு எத்தனை வாட்டி சொல்றது? உனக்குப் புரியாத விஷயங்களைப் பத்திப் பேசாதே. நாங்க மருத்துவர்கள் சீரியஸாப் பேசிக்கிட்டிருக்கும் போது வந்து கண்டபடி இடையில உளறாதே. மகா எரிச்சலா இருக்கு."
ஆச்சரியமும் வருத்தமுமாய் அவனைப் பார்த்துக் கேட்பாள் ஒலென்கா."ஆனா நான் என்ன தான் பேசறது விளதிமீர்?"
கண்களில் கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டு தன்னிடம் கோபம் கொள்ள வேண்டாமென்று இறைஞ்சுவாள். அவன் சமாதானமடைவான். இருவரும் சகஜநிலைக்குத் திரும்பிவிடுவார்கள்.
ஆனால் இந்த மகிழ்ச்சி ரொம்ப நாள் நிலைக்கவில்லை. இராணுவத்தைச் சேர்ந்த மருத்துவனான அவன் சைபீரியாவோ ஏதோ ஒரு இடத்துக்கு மாற்றப்பட்டான். ஒலென்கா மீண்டும் தனியளானாள்.
இப்போது தான் அவள் முற்றும் தனிமையை உணர்ந்தாள். அவளது தந்தை இறந்து வெகு காலமாகி விட்டது. அதோ, அவரது சாய்வு நாற்காலி ஒரு கால் உடைந்து பரணில் கிடக்கிறது. அவள் உடல் மெலுந்து பொலிவிழந்து வந்தாள். தெருவில் அவளைப் பார்ப்பவர்கள் முன்போல் அவளைக் கண்டு கொள்வதோ சிரித்துப் பேசுவதோ இல்லை. அவள் இளமையின் உச்சகட்ட காலங்கள் முடிவடைந்து விட்டன. எதிர்ப்படும் காலம் எப்படி இருக்குமென யோசிக்கவே அவளால் முடியவில்லை.
இன்றும் வீட்டு வராந்தாவில் அமர்ந்து டிவோலியின் நாடக ஒத்திகைச் சத்தங்க்ளைக் கேட்கிறாள். ஆனால் இப்போது அது அவளுள் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.எதையுமே சிந்திக்காமல், எதையுமே விரும்பாமல், எதற்காகவும் ஏங்காமல் இரவு வரை அங்கு அமர்ந்திருந்து விட்டு படுக்கைக்குச் சென்றாள். இயந்திரம் போல் உண்டு உறங்கினாள்.
அதை விடக் கொடுமை என்னவென்றால் இப்போதெல்லாம் அவளுக்கென்று அபிப்பிராயங்களே இல்லை. எல்லாவற்றையும் பார்க்கிறாள், புரிந்து கொள்கிறாளே ஒழிய எதைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தாள். குகினோ, புஸ்தாலொவோ அந்தக் கால்நடை மருத்துவனோ அவளுடன் இருந்த போது எல்லாவற்றையும் பற்றிக் அழுத்தமான கருத்துக்கள் வைத்திருந்தாள். இப்போது அவளது வீட்டைப் போலவே சிந்தையிலும் ஒரு வெறுமை குடி கொண்டிருந்தது. எட்டிக்காயை வாயிலிட்டது போல் அது அவளுக்கு சொல்லவொணாக் கசப்பைத் தந்து கொண்டிருந்தது.
காலம் வேகமாக ஓடி விட்டது. ஊர் வளர்ந்து கொண்டே இருந்தது. டிவோலி இருந்த இடத்தில் புதிய வீடுகளும் கட்டடங்களும் வந்து விட்டன. ஒலென்காவின் வீடு பழுதடைந்து கூரையும் துருப்பிடித்து விட்டது. தோட்டம் முழுதும் முட்செடிகளும் புதர்களும் நிறைந்திருந்தன. ஒலென்காவும் இளமையின் ஒளி நீங்கியவளாய் வயதாகிக் களைத்திருந்தாள். தாங்க முடியாத வெறுமையோடு இரவு பகலைக் கடத்திக் கொண்டிருந்தாள்.
வசந்த காலங்களில் சர்ச் மணிகள் ஒலிக்கும் போது திடீரென்று ஏதேதோ பழைய நினைவுகள் அவள் நெஞ்சில் வந்து மோதும். சட்டென்று கண்கள் நிரம்பும். ஆனால் அடுத்தகணமே அவள்வாழ்வின் நீக்கமற நிறைந்திருந்த வெறுமை எட்டிப் பார்த்து எல்லாம் மாயையென்று உணர வைக்கும்.
அவளது செல்லப் பூனை வந்து அவள் காலை உரசிக் கொஞ்சுவது கூட அவள் மனதுக்கு இதமளிப்பதில்லை. அவளுக்கு அதெல்லாம் போதவில்லை. அவள் உடலையும் ஆன்மாவையும் ஒருங்கே கொள்ளை கொள்ளும்படியானதொரு அன்பை எதிர்பார்த்தாள். அவள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கமும் அர்த்தமும் அளிக்கக்கூடிய, சில்லிட்டுப் போன அவளது உடலில் புது இரத்தம் பாய்ச்சக் கூடிய, அப்படி ஒரு அன்புக்காக ஏங்கினாள். காலை ஒண்டிய பூனையை உதறியபடி, "போ அந்தண்ட.." என்று எரிச்சலுடன் கத்துவாள்.
இப்படியாக ஆண்டுகள் கடந்தன - எந்த சந்தோஷமும் இல்லாமல்; எவ்வித நிலைப்பாடுகளும் இல்லாமல். வீட்டுச் சமையல்காரி மாவ்ரா எது சொன்னாலும் ஆமோதித்தாள்.
ஜூலை மாதத்தில், கடுமையான கோடைகாலத்தில் ஒரு நாள், யாரோ வீட்டுக் கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்த ஒலென்கா ஆச்சரியத்தில் பேச்சிழந்து போனாள். அந்தக் கால்நடை மருத்துவன் ஸ்மிரினின் தான் நின்று கொண்டிருந்தான். தலையெல்லாம் நரைத்துப் போய்ச் சாமான்ய மனிதனாய்க் காட்சியளித்தான்.
சட்டென்று அவன் நெஞ்சில் தலையைச் சாய்த்து அழத்தொடங்கினாள். உடைந்து பொங்கிய உணர்ச்சிகளின் வீரியத்தில், எப்படி அவனுடன் உள்ளே வந்து அமர்ந்தோம் என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
"என் அன்பே விளதிமீர்...எப்படி இங்கே திடீர்னு?" மகிழ்ச்சியில் அவளுக்குக் குரல் நடுங்கியது.
"நான் இங்கேயே தங்கிடலாம்னு வந்துட்டேன் ஓல்கா. இராணுவத்துல என் வேலையை ராஜினாமா பன்ணிட்டேன். சொந்தமா மருத்துவம் பண்ணலாம்னு. என் பையனையும் இனிமே பள்ளிக்கூடத்துல சேர்க்கணும். இப்போ பெரிய பையனாயிட்டான். தெரியுமா, என் பொண்டாட்டியோட நான் இப்ப ராசியாயிட்டேன்."
"அவ எங்கே?" ஒலென்கா கேட்டாள்.
அவ பையனோட ஹோட்டலில் இருக்கா. நான் வீடு தேடி இந்தப் பக்கம் வந்தேன்.
"நல்லாக் கேட்டே போ. வீடு தேடறியா? ஏன், என் வீடு போதாதா? அடக்கடவுளே! இங்கே தாராளமா இருந்துக்கோங்க. நான் வாடகை கூட வாங்க மாட்டேன். நீங்க இங்க பெரிய வீட்ல இருந்துக்கோங்க. நீ முன்ன தங்கின சின்ன போர்ஷன் எனக்குப் போதும். ஹைய்யோ! எவ்ளோ சந்தோஷமா இருக்கு எனக்கு." படபடவெனப் பேசியதில் ஒலென்காவுக்கு மீண்டும் கண்கள் நிறைந்து வழிந்தன.
அடுத்த நாள் கூரைகளுக்குப் புது வர்ணமடிக்கப்பட்டன. சுவர்கள் வெள்ளையடிக்கப்பட்டன. ஒலென்கா புதுத் தெம்புடன் கைகளை இடுப்பிலூன்றியபடி எல்லாவற்றையும் சிரத்தையுடன் மேற்பார்வையிட்டாள்.
அவள் முகத்தில் பழைய சிரிப்பும் குதூகலமும் தென்பட்டது. நீண்ட துயிலிலிருந்து எழுந்தவள் போல் சுறுசுறுப்பாகவும் உற்சாகத்துடனும் அங்குமிங்கும் அலைந்து ஆட்களை ஏவிக் கொண்டிருந்தாள். மருத்துவனின் மனைவி வந்து சேர்ந்தாள். அவள் பார்க்க ரொம்பவும் சாதாரணமாக, ஒல்லியாகவும் குட்டையான தலைமுடியுடனும், சதா எரிச்சலான முக பாவத்துடனும் இருந்தாள்.
அவளுடன் அவளது பத்துவயது மகன் சாஷாவும் வந்திருஇந்தான். நீல நிறக் கண்களுடன், குழிவிழுந்த கன்னங்களோடு, அவன் வயதுக்கு ரொம்பச் சின்னப் பிள்ளை போன்றிருந்தான். உள்ளே வந்தது தான் தாமதம், தோட்டத்தில் திரிந்து கொண்டிருந்த பூனையின் பின் ஓடினான். சிரித்துக் கொண்டே ஒலென்காவிடம் கேட்டான். "இது உங்க பூனையா ஆன்ட்டி? இது குட்டி போட்டா எங்களுக்கு ஒண்ணு குடுக்க்றீங்களா? அம்மாவுக்கு எலிங்கன்னா ரொம்பப் பயம்."
ஒலென்கா அவனுடன் அன்பாகப் பேசி அவனுக்குத் தேனீர் கொடுத்தாள். அவள் இதயத்தில் சொல்லத் தெரியாத ஒரு சுகமான வலி ஏற்பட்டது. அவள் பெறாத குழந்தையிடம் உணர்வதைப் போன்றதொரு தனிப்பாசத்தை அவனிடம் உணர்ந்தாள்.
மாலை வேளைகளில் அவன் தன் பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கையில் அவனருகே அமர்ந்து அன்பு ததும்ப அவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.
"என் அழகுச் செல்லமே...! என் தங்கம், எவ்ளோ சமத்து, எவ்ளோ அறிவு" என்று ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருப்பாள்.
"தீவு எனப்படுவது எல்லாப்பக்கமும் நீரால் சூழப்பட்ட இடமாகும்" - அவன் உரக்கப் படித்தான்.
"தீவு எனப்படுவது...." அவள் திருப்பிச் சொன்னாள். வெறுமையும் மௌனமுமாய்க் கழித்த எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அவள் அழுத்தமான நம்பிக்கையுடன் கொண்ட முதல் கருத்து இது தான்.
இப்போது அவளுக்கு மீண்டும் நிலைப்பாடுகளும் கருத்துக்களும் ஏற்படத் தொடங்கின. தினமும் இரவு உணவின் போது சாஷாவின் பெற்றோரிடம் பேசுவாள். பள்ளிகளில் பாடங்கள் எவ்வளவு கடினமாய் இருக்கின்றன என்றும், ஆனாலும் அது பிள்ளைகள் நல்ல நிலைக்கு வர (டாக்டராகவோ இஞ்சினியராகவோ) எவ்வளவு முக்கியமென்றும்.
சாஷா ஒழுங்காகப் பள்ளி செல்லத் துவங்கினான். அவன் அம்மா தனது தங்கை வீடு இருக்கும் ஹார்கோவ் என்ற ஊருக்குச் சென்று விட்டாள்; திரும்பி வரவே இல்லை. அவன் அப்பாவோ கால்நடைகளைப் பரிசோதிக்க ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தார். சாஷா முற்றிலும் கைவிடப்பட்டவனாக ஒலென்காவுக்குத் தோன்றியது. பிள்ளை ஒழுங்காகக் கவனிக்கக் கூட ஆளில்லாமல் பட்டினி கிடப்பதாக எண்ணிய ஒலென்கா அவனைத் தன் பகுதிக்கு அழைத்து வந்து தங்க வைத்தாள்.
அடுத்த ஆறு மாதங்கள் சாஷா அவளுடன் தங்கி இருந்தான். தினமும் காலையில் ஒலென்கா அவனது அறைக்கு வருவாள். கன்னத்தின் அடியில் கை வித்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் அவனை பார்த்து அவளுக்கு எழுப்பவே மனம் வராது. மிகவும் கனிவாக, மெதுவாக அழைப்பாள், "சாஷாக் கண்ணு, எழுந்திருடா செல்லாம். ஸ்கூலுக்கு நேரமாச்சு பாரு."
அவன் எழுந்து குளித்து உடை மாற்றிச் சாப்பிட வருவான். அவனுக்குத் தேநீரும் பிஸ்கட்டுகளும், வெண்ணெய் தடவிய ரொட்டியும் தருவாள். தூக்கக்கலக்கத்தில் சற்று எரிச்சலுடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பான் அவன்.
"நீ வாய்ப்பாடே ஒழுங்கா சொல்றதில்ல சாஷாக்குட்டி. உன்னால எனக்கு எவ்ளோ கவலை தெரியுமா. நீ நல்லாப் படிக்கணும். டீச்சருங்க சொல்றபடி கேக்கணும்." என்று நீண்ட தூரம் பயணம் போகிறவனுக்குச் சொல்வதைப் போல அவனுக்கு அறிவுரை மழை பொழிய ஆரம்பிப்பாள்.
"அய்யோ..ஆளை விடு" என்பான் சாஷா.
பின்பு அவன் தலைக்குத் தொப்பியும் தோளில் புத்தகப் பையையும் மாட்டிக் கொண்டு பள்ளிக்கு நடந்து செல்வான். ஒலென்கா சத்தமில்லாமல் அவனைப் பின் தொடருவாள்.
"சாஷாக் குட்டி" என்று அவனை அழைத்து அவன் கையில் ஏதோ ஒரு தின்பண்டத்தைத் திணிப்பாள். அவன் பள்ளி இருக்கும் தெரு வந்ததும், அவ்வளவு பெரிய மனுஷி ஒருத்தி தன்னைப் பின்தொடர்வது பற்றி அவன் வெட்கமடைவான்.
"நீ வீட்டுக்குப் போ ஆன்ட்டி. நானே போய்க்கிறேன்."
அவள் அங்கேயே நின்று பள்ளி வாசல் தாண்டி அவன் மறையும் வரை பார்த்துக் கொண்டிருப்பாள்.
ஓ! அவள் தான் அவனை எப்படி நேசித்தாள். அவளது முந்தைய பிரியங்களெல்லாம் இந்த அளவு ஆழமாக இருந்ததில்லை. இந்த அளவு தன்னிச்சையாக, எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல், முற்றிலுமாய் அவளது ஆன்மா எங்குமே சரணடைந்ததில்லை. இந்தச் சிறு பையனுக்காகவும் அவன் கன்னத்தில் விழும் குழிக்காகவும் அவள் தன் உயிரையே கொடுக்கத் தயாராக இருந்தாள் - அதுவும் பரிபூரண சந்தோஷத்துடன். ஏன்? ஏனென்று யாரால் தான் சொல்ல முடியும்?
சாஷாவைப் பள்ளி வரையில் கொண்டு விட்டதும் மிகுந்த மனநிறைவுடனும் நெஞ்சம் நிறைந்து தளும்பும் அன்புடனும் நிம்மதியாக வீடு திரும்புவாள். இந்த் ஆறுமாதங்களாக லேசாகச் சதை போட்டுச் சற்று இளமை திரும்பி இருக்கும் அவளது முகம் பார்ப்பவர்களிடமெல்லாம் சிரித்துப் பேசும்.
அவர்களும் அதே உற்சாகத்துடன் கேட்பார்கள்: "வணக்கம் ஓல்கா செல்லம், எப்படி இருக்கே?"
"அதை ஏன் கேக்கறீங்க. ஸ்கூல்ல பாடமெல்லாம் ரொம்பக் கஷ்டமா இருக்கு. சேர்ந்த முதல் நாள்ளயே வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்யச் சொல்லி இருக்காங்க. அப்புறம் ஒரு லத்தீன் மொழிபெயர்ப்பு, அப்புறம் கணக்குல வேற வீட்டுப் பாடம். சின்னப் பையனுக்கு இதெல்லாம் ரொம்ப அதிகமில்ல?"
அப்புறம் ஆசிரியர்களைப் பற்றி, பாடங்களைப் பற்றி, புத்தகங்களைப் பற்றியெல்லாம் சாஷா என்னென்ன சொல்லி இருந்தானோ அதையெல்லாம் அப்படியே திருப்பிச் சொல்வாள்.
மூன்று மணிக்கு அவன் திரும்பியதும் இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். அவனுடன் உட்கார்ந்து அவளும் பாடம் படிப்பாள். அவனைப் படுக்க வைத்து வெகு நேரம் ஜெபம் செய்து அவன் நெஞ்சில் சிலுவைக் குறியிடுவாள். பின்பு தன் படுக்கைக்குத் திரும்பி சாஷா படித்து முடித்து டாக்டாராவது மாதிரி, இஞ்சினியராவது மாதிரி எல்லாம் கனவு காணுவாள்.
அவன் பெரிய வீடு, குதிரைவண்டிகள் வைத்திருப்பானாம். திருமணமாகிக் குழந்தைகள் இருக்குமாம். ஒவ்வொரு நாளும் இதே மாதிரிக் கனவுகளுடன் அவள் தூங்கிப் போவாள். அவள் தூங்கிய பின்பும் அவள் கண்கள் நிறைந்து கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்தவாறிருக்கும்.
அவளது பூனை மட்டும் அவளருகில் அமர்ந்திருக்கும் "மியாவ்..." என்று மெல்லக் கத்தியபடி.
திடீரென்று யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கும். ஒலென்கா படபடக்கும் இதயத்துடன் எழுந்திருப்பாள். அரை நிமிடம் கழித்து மீண்டும் கேட்கும்.
'ஹார்கோவ்லருந்து தந்தி வந்திருக்கும்" தலை முதல் கால் வரை நடுங்கியபடி எண்ணமிடுவாள். "சாஷாவோட அம்மா அவனைக் கூப்பிட்ட்டனுப்பி இருப்பாங்க..அய்யோ அப்படி இருக்கக் கூடாது, கடவுளே இரக்கம் காட்டு!"
உடலெல்லாம் சில்லிட்டுப் போக உலகிலேயே துயரம் தோய்ந்த பெண் தான்தான் என்று அவளுக்கு தோன்றும். அடுத்த நிமிடம் சமையற்காரியின் குரலிலிருந்து புரிந்து கொள்வாள். மருத்துவர் தான் சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பி வருவதாக.
"ஹப்பாடா. கடவுளுக்கு நன்றி!"
மெல்ல மெல்ல இதயத்தில் ஏறி இருந்த பாரம் நீங்கி அமைதியடைவாள். மிண்டும் படுக்கையில் வீழ்ந்து சாஷாவின் எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையில் மூழ்கி விடுவாள். அவனோ சில சமயம் தூக்கத்தில் உளறுவதைக் கேட்கலாம்.
"நல்லா குடுப்பேன் உனக்கு. எட்டிப் போ என்கிட்டேந்து... வாயை மூடு."
பின் குறிப்பு: ருஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் எழுதிய The Darling என்ற சிறுகதையின் தமிழாக்கம். (ஆங்கிலத்திலிருந்து)
10 comments:
எத்தனையோ வருடங்களுக்கு முன்பு படித்த கதையை, மேலும் நெருக்கமாக அறிய முடிந்தது. உன் தமிழாக்கத்துக்கு மிக்க நன்றி. பல இடங்களில் கண்களில் ஈரம் படர்ந்தது.
ஓலென்கோ எவ்வளவு அழகான, அற்புதமான படைப்பு. வாழ்வின் ஓட்டத்தில், இணைத்துக்கொண்டு எத்தனை பேர் இப்படி சிரிக்கிறார்கள், அழுகிறார்கள். மனதின் வெளியை அறிய முடியாதவர்கள் அவளைப் பற்றி என்னவெல்லாம் பேசுவார்கள்.
மீண்டும், மீண்டும் நன்றி. அடுத்த செகாவ் கதைக்கு இப்போதிலிருந்தே காத்திருக்கிறேன்.
நல்லா இருக்கு தீபா ..
நன்றி
தொடருங்கள்
அருமையான பகிர்வு.
வெள்ளை மனசும் மென்மையான உணர்வுகளும் இருந்தால் தான் எல்லோரிடமும் இப்படி அன்பு செலுத்த முடியும்.
மனதில் நிற்கும் பதிவு.
well written deepa, keep going.
நல்ல மொழிபெயர்ப்பு. எங்குமே தடங்கலில்லாத ஃப்ளோ. செல்லமே for "The Darling" is too good!
ரெம்ப அழகா தன்மை மாறாம மொழி பெயர்த்து இருக்கீங்க. வாழ்த்துக்கள்
Really nice translation. Thanks.
Really nice translation. Keep it up. And thanks.
Very good translation , thanks to cyril for sharing .
மிக முக்கியமான முயற்சி இது
மேலும் தொடர வாழ்த்துக்கள்
Post a Comment