Showing posts with label த‌மிழாக்க‌ம். Show all posts
Showing posts with label த‌மிழாக்க‌ம். Show all posts

Sunday, August 29, 2010

யாரிடம் சொல்லி அழ?

அந்திமாலைப் பொழுது. தெருவிளக்குகளின் மீதும் சாலையோரம் படுத்துக் கிடந்த குதிரைகளின் முதுகின் மீதும் பனித்துளிகள் மெல்ல விழுந்து படிந்து கொண்டிருந்தன. குதிரை வண்டிக்காரன் ஐயோனா உடல் முழுதும் வெள்ளைப் பனியால் மூடப்பட்டுப் பிசாசு போல் உட்கார்ந்திருந்தான். வண்டியின் மீது அமர்ந்திருந்த அவன் உடல் எவ்வளவு மடங்க முடியுமோ அப்படி மடங்கி இருந்தது. தன் மீது விழும் பனியை உதறிக் கொள்ளக்கூடத் தோன்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனது குதிரையும் செயலற்று நின்றிருந்தது.

அசையாமல் அது நின்றிருந்த கோலமும், குச்சிபோல் நேராக இருந்த அதன் கால்களும், ஏதோ அரையணாவுக்குக் கிடைக்கும் பொம்மைக் குதிரையோ எனும்படியான தோற்றத்தைக் கொடுத்தது. குதிரையும் ஏதோ பலமான யோசனையில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றியது. ஆம், ஏர் கலப்பைகளிடமிருந்தும், நன்கு பரிச்சயமான வயல்வெளிகளிலிருந்தும் பிரிக்கப்பட்டு, கூச்சலும் குழப்பமும் நிறைந்த இந்தக் கொடூரமான நகரவெளியில், யந்திர மனிதர்களுக்கிடையே எறியப்பட்டால், மிருகங்கள் கூட கனத்த மௌனத்துடன் யோசனையில் ஆழ்ந்து விடக்கூடும்.

வெகு நேரமாக ஐயோனாவும் அவன் குதிரையும் அப்படியே இருந்தார்கள். மாலை மயங்கும் போதே அவர்கள் இங்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு சவாரி கூட வரவில்லை. ஆனால் இப்போது அந்தி சாயத் தொடங்கி விட்டது. இருளின் அடர்த்தியில் தெருவிளக்குகள் பளிச்சென்று எரியத்துவங்கின; சாலையில் நடமாட்டமும் அதிகரிக்கத் தொடங்கியது.

"ஹேய், குதிரை வண்டி, பஜாருக்கு வருமா?" ஒரு அதட்டலான குரல் வண்டிக்காரனின் காதில் விழுந்தது.

அவசரமாக எழுந்தவன் பனி மூடிய தன் கண்ணிமைகளின் வழியாகப் பார்த்தான்; இராணுவ அதிகாரி ஒருவன் கோட்டும் தொப்பியும் அணிந்து மிடுக்காக நின்று கொண்டிருந்தான்.

"என்னா தூங்க்குறியா? பஜாருக்குப் போகணும்யா" என்றான் அவன் மீண்டும்.
வண்டிக்காரன் ஒன்றும் பேசாமல் தலையாட்டி விட்டு குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான். பனித்துகள்கள் நாலாபக்கமும் சிதறின. குதிரை வேண்டாவெறுப்பாக எழுந்து நடக்கத் தொடங்கியது.

"யோவ், எங்கய்யா போறே? ஓரமாப் போய்யா" எதிரே வந்த ஒருவன் திட்டி விட்டுப் போவது லேசாகக் கேட்டது. உடனே வண்டியிலிருந்தவனும் கத்தினான். "வண்டி ஓட்டத்தெரியுமாய்யா உனக்கு? ஒழுங்காப் போய்யா..."

வண்டிக்காரன் குழப்பமும் பதற்றமுமாக குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான். வண்டி தாறுமாறாக ஓடியது. எதிரே வந்த இன்னொரு வண்டிக்காரனும் இவனை நாராசமாகத் திட்டிவிட்டுக் கடந்தான். இன்னொரு நடைபாதை வாசியும் சடாலென்று நகர்ந்து இவனைப் பார்த்து முறைத்து விட்டுச் சென்றான்.

"பொறுக்கிப் பயலுக..வேணும்னே நம்மளை விழவெக்கிறதுக்காக இதெல்லாம் பண்ணுவானுங்க..." மிலிட்டரிக்காரன் பின்னாலிருந்து முணுமுணுத்தது கேட்டது.

வண்டிக்காரன் திரும்பி ஏதோ சொல்ல நினைத்தான். ஆனால் அவனிடமிருந்து வெளிப்பட்டது ஒரு மெல்லிய விசும்பல் மட்டுமே.

"என்னய்யா?" அதட்டினான் மிலிட்டரிக்காரன்.
அவன் ஒரு கைத்த சிரிப்புடன் வறண்ட தொண்டையிலிருந்து அந்த வார்த்தைகளைக் கஷ்டப்பட்டு உதிர்த்தான்: " எம்மகன், எம்மகன் போனவாரம் இறந்து போயிட்டான் சார்."

"ஹும்ம்..எப்படி இறந்தான்?"
அவ‌ன் தன் உடலை முழுதும் திருப்பி மிலிட்டரிக்காரனைப் பார்த்து, "ஏன்னு யாருக்கு சார் தெரியும்; அவனுக்குக்க் காய்ச்சல் வந்துது. மூணு நாள் ஆஸ்பத்திரியிலயே கெடந்தான்; போயிட்டான், எல்லாம் ஆண்டவன் சித்தம்."

அப்போது ஒரு இருண்ட திருப்பத்திலிருந்து மீண்டும் ஒரு குரல்:
"டேய் சாவு கிராக்கி, எங்கெடா போறே? ரோட்டைப் பாத்து வண்டிய ஓட்டு."

உடனே மிலிட்டரிக் காரனும், "ஆமா, நேராப் பாத்து வண்டிய ஓட்டு. இந்த மாதிரி நீ போனா விடிஞ்சுடும். உம்! சீக்கிரம் சீக்கிரம்"

வண்டிக்காரன் பெருமூச்சுடன் திரும்பி உட்கார்ந்தான். அவ்வப்போது திரும்பிப் பார்த்தான். ஆனால் அந்த மிலிட்டரிக்காரனோ கண்களை இறுக்கி மூடியபடி, இவனிடம் தான் பேச்சுக்கொடுக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்தும் வகையில் அமர்ந்திருந்தான்.

பஜாரில் மிலிட்டரிக்காரனை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் அமைதியாக வண்டிக்குள் சுருண்டு உட்கார்ந்தான் வண்டிக்காரன். ஒரு மணி நேரம் போயிருக்கும்...இரண்டு மணி நேரம்...

அப்போது மூன்று வாலிபர்கள் வந்தார்கள். இருவர் ஒல்லியாக உயரமாக இருந்தனர். மூன்றாமவன் குள்ளமாகச் சற்றுக் கூன் முதுகுடன் இருந்தான்.
"ப்ரிட்ஜ் ஹோட்டலுக்குப் போகணும்; நாங்க மூணுபேர். இருபது கோபெக். ஓகேவா?"

வண்டிக்காரன் பதில்பேசாமல் குதிரையைக் கிளப்பினான். இருபது கோபெக் என்பது ரொம்பக் குறைவு தான். ஆனால் அவனுக்கு இப்போது ஐந்து கோபெக் கிடைத்தாலும் ஒரு முழு ரூபிளே கிடைத்தாலும் அதெல்லாம் பொருட்டில்லை. யாராவது சவாரிக்கு வரவேண்டும்; அவ்வளவு தான்.

அந்த மூன்று இளைஞர்களும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டும் கெட்ட வார்த்தைகள் பேசிக் கொண்டும் வண்டியில் ஏறினர். இப்போது யார் பின்னால் அமர்வது, யார் வண்டிக்காரனுடன் நின்று கொண்டு வருவது என்ற சர்ச்சை கிளம்பியது. இறுதியில் குள்ளமாக இருப்பதனால் கூனுடையவனே நிற்பது என்று முடிவானது.

அவனோ வண்டிக்காரனிடம் எரிந்து விழுந்தான். "என்ன நிக்கிறே. சீக்கிரம் போய்த்தொலை. இது என்ன தொப்பிய்யா போட்டிருக்கே. கண்ராவியா இருக்கு."
"ஹீ..ஹீ, அது சும்மாய்யா..." சிரித்தான் வண்டிக்காரன்.
"சரி சரி..போ. என்ன‌ இவ்ளோ மெதுவாப் போறே. உன் முதுகுல ஒண்ணு குடுக்கவா?"

பின்னாலிருந்த ஒருவன் சொன்னன், "தலை ரொம்ப வலிக்குது. நேத்து நானும் வாஸ்காவும் நாலு பாட்டில் பிராந்தி அடிச்சோம்."
"எப்படிரா இப்படி அள்ளி வுடரே? நீயாவது நாலு பாட்டிலாவது..." சிரித்தான் இன்னொருவ‌ன்.
"டேய், சத்தியமாடா..." ரோஷமானான் முதலாமவன்.

வண்டிக்காரன் இவர்களின் உரையாடலை ரசித்துச் சிரித்தான், "கவலையில்லாத சின்னப் பசங்க..."
உடனே குள்ளமானவன் கத்தினான். "யோவ், வேகமாப் போய்யா...இப்படியா குதிரைக்கு வலிக்காம் ஓட்டுவே? நல்லா சாட்டைய வீசி அடிய்யா..."

இவனது வசவில் அவனது நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். தன்னை அவர்கள் திட்டத் திட்ட, வண்டிக்காரனின் மனம் லேசாகியது. தனது கொடுமையான தனிமை கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து அவர்கள் யாரோ ஒரு பெண்ணைப் பற்றிச் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

பேச்சில் ஒரு சின்ன இடைவெளிக்குக் காத்திருந்த வண்டிக்காரன் திரும்பிப் பார்த்துச் சொன்னான்," என்மகன் செத்துப் போயிட்டான்யா.."

"ஹூம்..நம்ம எல்லாரும் ஒரு நாள் சாகத் தான் போறோம்..." அசுவாரசியமாகப் பதிலளித்தான் அவனுடன் நின்றிருந்தவன். உடனேயே, "ம்..ம்.. சீக்கிரம் போ. டேய், எவ்வளோ நேரம் தாண்டா நான் இவன் கூட நெருக்கியடிச்சிக்கிட்டு நிக்கிறது. எப்போடா போய்ச் சேருவோம்?"

"அவன் முதுகுல ஒண்ணு போட்டா சரியாப் போகும்." சிரித்தனர் மற்ற இருவரும்.
"யோவ் கெழவா, கேட்டியா. உன்னோட வண்டியில வரதுக்கு நாங்க நடந்தே போயிருக்கலாம். சீக்கிரம் போய்யா." நிஜமாகவே அவன் முதுலில் ஒரு தட்டு தட்டினான் கூட இருந்தவன்.

"யோவ், உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சாய்யா? பொண்டாட்டி புள்ள இருக்கா?" பின்னாலிருந்த ஒருவன் கேட்டான்.
"எனக்கா? ஹும்ம் இருக்கா சுடுகாட்டுல. அவளும் என் மகனும். அய்யோ..என்ன கொடுமை! நான் உயிரோட இருக்க, எம்மவன் போயிட்டான்யா...சாவு தப்பான கதவைத் தட்டிடுச்சே..."

வண்டிக்காரன் இது தான் சமயமென்று தன் மகன் இறந்த கதையைச் சொல்வதற்காகத் திரும்பினான். ஆனால் அதே கணம், அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதாக ஒருவன் அறிவிக்கவே, மூவரும் "அப்பாடா வென்று பெருமூச்சு விட்டபடி வண்டியிலிருந்து குதித்தனர். இருபது கோப்பெக்குக்ளை வண்டிக்காரனிடம் வீசிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டினர்.

அவர்கள் போய் வெகு நேரமாகியும் வண்டிக்காரன் காசைக் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் சென்று மறைந்த திக்கையே வெறித்தபடி இருந்தான்.

மீண்டும் அவன் தனியனானான். வெறுமையும் அமைதியும் அவனைச் சூழ்ந்தது. ஏக்கமும் தவிப்புமாகச் சுற்றும் முற்றும் பார்த்தான். பல ஆயிரம் பேர் குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்லும் இந்தச் சாலையில் அவன் பேசுவதைக் கேட்க ஒருவர் கூட இல்லையா? ஆனால் அந்த மாநகரமோ அவனது துயரத்தைப் பற்றிய பிரக்ஞையே இன்றிப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

அவன் மனப்பாரம் அதிகரித்துக் கொண்டே போனது. அப்போது மட்டும் அவன் இதயம் வெடித்துச் சிதறி இருந்தால் அவன் நெஞ்சில் இருந்த சோகம் அந்த ஊரையே முழ்கடித்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. சிறிது நேரத்துக்குக்குப் பிறகு ஒரு போர்ட்டர் அங்கு வந்தான்.

அவனிடம் பேசலாமென்று, "தம்பி மணி என்னப்பா" என்றான்.
"பத்தாகப் போகுது. இன்னும் இங்கெ என்ன பண்றே.. போ போ..." என்று விட்டு அவன் தன் நடையைத் தொடர்ந்தான்.

மெல்ல வண்டியைச் செலுத்தத் தொடங்கினான். அவன் நெஞ்சில் தேங்கி இருந்த சோகத்தைத் தாங்கவியலாமல் அவன் உடல் மேலும் வளைந்தது. பயங்கரமாகத் தலை வலித்தது. அவ்னால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. இனிமேலும் மனிதர்களுக்காகக் காத்திருப்பதில் பயனில்லை என்று புரிந்தது.

"ஷெட்டுக்கே போயிடலாம், வா", குதிரையைத் திருப்பினான்.
அரை மணி நேரம் கழித்து அவன் குதிரை வண்டிக்காரர்கள் தங்கும் ஷெட்டில் அடுப்பின் முன்னால் அமர்ந்திருக்கிறான். பெஞ்சுகளின் மேல், தரையின் மேல், அடுப்புப் பரணின் மேல் என்று அங்கங்கு பல வண்டிக்காரர்கள் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தார்க‌ள்.

அறை முழுதும் நைத்துப் போன வாடை வீசியது. தாடையைச் சொறிந்து கொண்டே தூங்குபவர்களைப் பார்த்தான்.

"ஹூம் தவிடு வாங்கக் கூட‌ இன்னிக்குக் காசு கிடைக்கல. ரொம்பக் கஷ்டமா இருக்கு. சே...தன் வேலையை ஒழுங்கா செய்யத் தெரிஞ்சவனுக்கு, வயிறாரச் சாப்பாடு இருக்கிற‌வனுக்கு, குதிரைக்கு ஒழுங்காத் தீனிகுடுக்க முடிஞ்சவனுக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. "

அப்போது மூலையில் படுத்திருந்த ஒரு இளம் வண்டிக்காரன் எழுந்து இருமிக் கொண்டே தண்ணீர்த் தொட்டியை நோக்கிச் சென்றான். அள்ளி அள்ளித் தண்ணீர் குடித்தான்.

"என்ன, ரொம்பத் தாகமா?" இவன் அவனைப் பார்த்துக் கேட்டான்.
"ம்..ஆமாம்."
"குடி குடி. இருமலுக்கு நல்லது. சரி, இங்கெ கேளேன், என் மகன்..என் மகன் இறந்துட்டான்யா இந்த வாரம். ஆஸ்பத்திரியில. திடீர்னு...கொடுமை தெரியுமா.."

சொல்லி விட்டுத் தன் வார்த்தைகள் அவனிடம் எத்தகைய விளைவை ஏற்படுத்துகிறதென்று பார்த்தான். அவனோ அதற்குள் படுத்துத் தூங்கிவிட்டிருந்தான். கிழவன மறுமடியும் முகத்தைச் சொறிந்து கொண்டு பெருமூச்செறிந்தான். யாரிடமாவது பேச‌ வேண்டுமென்று அளவற்ற‌ தாகம் ஏற்பட்டது அவனுக்கு; சற்று முன் அந்த இளைஞனுக்கு ஏற்பட்டக் குடிநீர் தாகத்தைப் போல.

இதோ, அவன் மகன் இறந்து ஒரு வாரமாகப் போகிறது. இன்னும் யாரிடமும் அதைப் பற்றி அவன் துக்கம் தீரப் பேசியாகவில்லை. அவனுக்கு உணர்ச்சிததும்ப அதைப் பற்றிப் பேச வேண்டியிருந்தது. எப்படி அவன் மகன் நோய்வாய்ப்பட்டான், எப்படியெல்லாம் கஷ்டப்பட்டான், சாகும் முன் என்ன பேசினான், எப்படிச் செத்துப் போனான்...எல்லாம்.

அவனது இறுதி ஊர்வலம், ஆஸ்பத்திரிக்குப் போய் அவன் அணிந்திருந்த உடைகளை எடுத்து வந்தது, எல்லாவற்றையும் பற்றிப் பேச வேண்டும் போலிருந்தது. அவனது ஒரே மகள் அனிஸ்யா கிராமத்தில் இருக்கிறாள். அவளைப் பற்றியும் யாரிடமாவது பேச வேண்டும். ஆம், அவனுக்குப் பேச ஏராளமாய் இருந்தன. யாராவது பெருமூச்சுடன், அவன் புலம்பல்களுக்கு ஈடுகொடுத்துக் கேட்க வேண்டும்.
பெண்களிடம் பேசுவது இன்னும் நன்றாக இருக்கும்; ஆனால் பெண்கள் பாவம், சில சமயம் முதல் வார்த்தையிலெயே கண்ணீர் சிந்தத் தொடங்கி விடுவார்கள்.

"வெளிய போய்க் குதிரையைப் பார்க்கலாம். தூக்கத்துக்கென்ன; மெதுவா வந்து தூங்கிக்கிட்டா போச்சு..." தனக்குள் பேசியவாறே வெளியே சென்றான்.
கோட்டை மாட்டிக் கொண்டு குதிரை லாயத்துக்குச் சென்று தன் குதிரையருகே போய் நின்று கொண்டான். குதிரைக்கு வாங்க வேண்டிய தவிடு பற்றி, வைக்கோல் பற்றி, பனி அதிகமாகப் பெய்வதைப் பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தான். தனியாக இருக்கும் போது அவனால் தன் மகனைப் பற்றிச் சிந்திக்க முடியவில்லை. யாராவது அருகில் இருந்தால் அதைப் பற்றிப் பேசலாம் என்று தோன்றியதே தவிர தனிமையில் அந்நினைவுகள் அவனைத் தாங்கவொண்ணா வேதனைக்குள்ளாக்கின.

"வைக்க‌ல் திங்கிறியா?" இருளில் பளபளத்த தன் குதிரையின் கண்களைப் பார்த்துக் கேட்டான்." "நல்லா தின்னு...தவிடு வாங்கத் தான் காசில்ல. வைக்கலயாச்சும் நல்லா தின்னு. ஹும்! என்ன பண்றது. எனக்கு வயசாயிப் போச்சு. முன்ன மாதிரி வண்டியோட்ட முடியல. என் மகன் இருந்திருந்தா நல்ல வண்டிக்காரனா இருந்திருப்பான். அவன் வாழ்ந்திருக்கணும்..."

சில கணங்கள் மௌனத்துக்குப் பின் தொடர்ந்தான்,
"ஆமாம்மா, நம்ம பையன் போயிட்டான்மா, என்னைத் தனியா விட்டுட்டு. எந்தக் காரணமுமே இல்லாம திடீர்னு செத்துப் போயிட்ட்டான்மா. இதோ பாரு, உனக்கு ஒரு குதிரைக் குட்டிப் பிறந்து அதுக்கு நீ தாயா இருந்திருந்தேன்னு வெச்சுக்கோ...ஒரு நா திடீர்னு உன் குட்டி இறந்து போச்சுன்னா உனக்கு எப்படி இருக்கும்? சொல்லு...ரொம்ப வருத்தமா இருந்திருக்கும்ல?"

அவன் குதிரை வைக்கலை மென்றபடியே தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது. அவனை நெருங்கி அவன் கைகளில் தன் மூக்கைத் தேய்த்தது. அதன் சூடான‌ சுவாசம் கைகளில் பட்டதும் அவனுக்கு நெஞ்சமெல்லாம் சிலிர்த்தது. சட்டென்று உடைந்து குதிரையிடம் தன் துக்கமெல்லாம் சொல்லி அழத் தொடங்கினான்.
********************************************************************************

பின் குறிப்பு:
சென்ற முறை பேச்சாளர் என்ற தலைப்பில் செக்காவ் கதையைத் தமிழாக்கம் செய்த போது செகாவ் கதைகளை ஏற்கனவே தமிழறிஞர்கள் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்களே, நீங்கள் மீண்டும் செய்வதனால் என்ன பயன் என்று ஒருவர் என்று கேட்டிருந்தார். அவருக்கு நான் சொன்ன விளக்கத்தை இங்கே தருகிறேன்.

நான் ஆங்கில‌த்தில் தான் இக்க‌தைக‌ளைப் ப‌டித்திருக்கிறேன். த‌மிழில் பிறமொழி எழுத்தாளர்களின் எந்தெந்த‌க் க‌தைக‌ள் மொழிபெய‌ர்க்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌ என்ப‌து என‌க்குத் தெரியாது. அப்ப‌டி த‌மிழில் ப‌டித்த‌ க‌தையை நான் மீண்டும் செய்ய‌ மாட்டேன்.

நான் முத‌லில் செய்த‌ போது அதற்கு வரவேற்பு இருந்ததாலும் சிலர் அப்போது தான் இக்கதைகளைப் படிப்பதாகவும் கூறவே அவ்வப்போது செய்து வ‌ருகிறேன்.

மேலும் ஒரு படைப்பை மொழியாக்கம் செய்யும் போது அதற்கு மூலப்படைப்பிலிருந்து மொழியாக்கம் செய்தவர்கள் பற்றிய‌ குறிப்புகளையும் தர வேண்டும் என்றும் ஒரு கருத்து வந்தது.

செய்தால் சிறப்பாகத் தான் இருக்கும். நான் இணையத்திலிருந்து ஆங்கில மொழியாக்கத்தை எடுத்திருக்கிறேன். மொழியாக்கம் செய்தவர் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. மன்னிக்கவும்.

மேலும், நண்பர்களின் ஆசைக்காகவும், என் சுய‌திருப்திக்காகவும், பயிற்சிக்காகவும் மட்டுமே இதைச் செய்கிறேன். வியாபார ரீதியாக மொழியாக்கம் செய்யும் பட்சத்தில் நிச்சயம் இந்த விதிமுறைகள் பின்பற்றப் படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது.

புரித‌லுக்கு மிக்க‌ ந‌ன்றி. எனது புரிதலில் ஏதாவ‌து த‌வ‌றிருப்பின் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.

Thursday, April 1, 2010

செல்லமே!

ஒலென்கா, ஓய்வு பெற்ற கல்லூரிப் பணியாளரின் மகள், எதையோ யோசித்துக் கொண்டு வீட்டுப் பின்கட்டில் உட்கார்ந்திருந்தாள். நல்ல வெயில், ஈக்கள் வேறு மொய்த்துக் கொண்டிருந்தன. இன்னும் சற்று நேரத்தில் பொழுது சாய்ந்து விடும் என்பதே ஆறுதலான விஷயமாக இருந்தது. கீழ்வானத்தில் திரண்டிருந்த கரிய மழைமேகங்கள் அவ்வப்போது லேசான ஈரக்காற்றை அனுப்பிக் கொண்டிருந்தன.

அந்த‌ வீட்டின் ஒரு ப‌குதியில் வாடகைக்குத் த‌ங்கியிருந்த‌ குகின் அப்போது அங்கே வ‌ந்தான். அவ‌ன் டிவோலி என்ற‌ திற‌ந்த‌வெளி நாடக‌க் க‌ம்பெனியை ந‌ட‌த்தி வ‌ந்தான். தோட்ட‌த்தின் ந‌டுவே நின்று கொண்டு வான‌த்தைப் பார்த்தான்.

"போச்சு, ம‌றுப‌டியும் இன்னிக்கு மழை பெய்யப் போகுது! என்னைச் சோதிக்கிற‌துக்காகவே தின‌மும் ம‌ழை பெய்யுது. நாண்டுக்கிட்டுச் செத்துட‌லாமான்னு இருக்கு. ஒவ்வொரு நாளும் எவ்வ‌ளோ ந‌ஷ்ட‌மாகுது." - கைக‌ளை விரித்துக் கொண்டு ஒலென்காவிட‌ம் புல‌ம்பினான் குகின்.

"பாருங்க‌ ஓல்கா எங்க‌ நெல‌மையை. கேட்டா அழுதுடுவீங்க‌. ராப்ப‌க‌லா தூங்காம‌ ஓய்வொழிச்ச‌லில்லாம‌ நாட‌க‌ம் எழுத‌றேன். சிற‌ந்த‌ ப‌டைப்புக‌ளை நாட‌க‌மாத் த‌ர‌ப் ப‌டாத‌ பாடு ப‌டறேன். க‌டைசில‌ என்ன‌ ஆகுது? இந்த முட்டாள் ஜ‌ன‌ங்க‌ளுக்கு எங்கே அதோட அருமை புரியுது? அவ‌ங்க‌ளுக்கு வேண்டிய‌தெல்லாம் கோமாளிக் கூத்துங்க‌ தான்.

அப்புற‌ம் இந்த‌ ம‌ழை. சொல்லி வெச்சா மாதிரி தின‌மும் சாய‌ங்கால‌ம் வ‌ந்து தொலைக்குது. மே ப‌த்தாம் தேதி ஆர‌ம்பிச்ச‌ ம‌ழை, இதோ ஜூன் தொடங்கியும் விட‌மாட்டேங்குதே. கொடுமை, கொடுமை. ஜ‌ன‌ங்க‌ வ‌ராங்க‌ளோ இல்லியோ, நான் மட்டும் வாட‌கையும் கொடுத்தாக‌ணும், நடிக‌ர்க‌ளுக்குச் ச‌ம்பள‌மும் கொடுத்தாக‌ணும்."


அத‌ற்கு ம‌று நாளும் ம‌ழைக்கான‌ அறிகுறிக‌ள் தோன்றும். வேத‌னையோடு சிரித்த‌ப‌டி குகினும் மழையிடம் புல‌ம்ப‌த் தொட‌ங்குவான்.

"ம்..ந‌ல்லா கொட்டித்தீர்த்துக்கோ. ஒரேயடியா என்னை மூழ்க‌டிச்சுடு! காச‌க் கொடுக்க‌ முடியாததால‌ என்னை உள்ள‌ த‌ள்ள‌ப் போறாங்க‌. சைபிரியாவுக்குத் தான் போக‌ப் போறேன் நான்... ஹா ஹா ஹா"

ஒவ்வொரு நாளும் ஒலென்கா வேத‌னையா‌க‌ மௌன‌த்துட‌ன் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பாள். ச‌ம‌ய‌த்தில் அவ‌ள் க‌ண்க‌ள் க‌ல‌ங்கி விடும். இறுதியில் அவன‌து ப‌ரிதாப‌மான‌ நிலை அவ‌ள் ம‌ன‌த்தைக் கொள்லை கொன்டுவிட்ட‌து. அவ‌ள் அவனை நேசிக்க‌த் தொட‌ங்கினாள்.

ஒல்லியான‌ தேக‌மும் சோகையில் வெளுத்த‌ முக‌மும், நெற்றியில் ப‌டிய‌ வாரிய‌ சுருள் முடிக‌ளுமாய் இருந்தான் குகின். மெல்லிய‌ குர‌லில் தான் பேசுவான். அவ‌ன் முக‌த்தில் நிர‌ந்த‌ர‌மான‌ நிராசை குடிகொண்டிருந்த‌து. இத்த‌னை குறைக‌ள் இருந்தாலும் அவன்பால் அவ‌ள் ம‌ன‌தில் உண்மையான‌ ஆழ்ந்த காதல் ஏற்ப‌ட்ட‌து. எப்போதுமே யாரையேனும் நேசிப்பதே அவளின் இயல்பாக இருந்தது. யார் மீதும் அன்பு கொள்ளாம‌ல் அவ‌ளால் உயிர் வாழ‌வே முடியாது. சிறுவ‌ய‌தில் அவ‌ள் த‌ன் த‌ந்தையை மிக‌வும் நேசித்தாள். பின்பு, ஒவ்வோராண்டும் பைரான்ஸ்கிலிருந்து அவ‌ளைப் பார்க்க‌ வ‌ரும் அத்தையை; அத‌ற்கு முன்பு ப‌ள்ளிடில் படித்த போது ஃப்ரெஞ்சு ஆசிரிய‌ரை.

இள‌கிய‌ ம‌ன‌மும் இர‌க்க‌ குண‌மும், க‌னிவு த‌தும்பும் க‌ண்க‌ளும், ஆரோக்கிய‌மான‌ உட‌ற்க‌ட்டும் ஒருங்கே பெற்ற‌வ‌ள் அவ‌ள்.
அவ‌ள‌து அழகிய க‌ன்ன‌ங்க‌ளையும், சிறிய‌ ம‌ச்ச‌மொன்று காண‌ப்ப‌டும் அவ‌ள‌து மெல்லிய‌ க‌ழுத்தையும், பிற‌ர் பேசுவ‌தைக் க‌வ‌ன‌மாக‌க் கேட்கையில் அவ‌ள‌து முக‌த்தில் தோன்றும் அந்த‌க் க‌ள்ள‌ங்க‌ப‌ட‌மில்லாத‌ புன்ன‌கையையும் பார்க்கும் ஆண்க‌ள் கூட‌, "பாவ‌ம், ந‌ல்ல‌ பொண்ணுடா அது..." என்று த‌ங்க‌ளுக்குள் சிரித்த‌ப‌டி சொல்லிக் கொள்வார்க‌ள்.
பெண்க‌ளுக்கோ, "என் செல்லமே!" என்று உண‌ர்ச்சிப் பெருக்கோடு அவ‌ள் கைக‌ளைப் பிடித்துக் கொள்ளாம‌ல் அவ‌ளுட‌ன் பேச‌வே முடியாது.

அவ‌ள் த‌ந்தை அவ‌ளுக்கு விட்டுச் சென்ற‌ அவ‌ள‌து பூர்விக‌ வீடு ந‌க‌ர‌த்தின் எல்லையில் டிவோலிக்கு அருகே இருந்த‌து. மாலை நேர‌ங்க‌ளில் அங்கு ந‌டைபெறும் ஒத்திகைக‌ளையும் பாட்டு கூத்துக்க‌ளையும் கேட்ட‌ப‌டி வீட்டில் அம‌ர்ந்திருப்பாள். இர‌வு நேர‌ம் தாண்டியும் முடியாத‌ அந்த‌ச் ச‌த்த‌ங்க‌ளைக் கேட்கும் போது குகினின் வாழ்க்கைப் போராட்ட‌த்தையும் அவ‌ன‌து க‌லையை ம‌திக்காத‌ பொதும‌க்க‌ளையும் நினைத்துப் ப‌ரிதாப‌ப்ப‌ட்டுக் கொண்டிருப்பாள்.
காலையில் அவ‌ன் வீடு திரும்பிய‌தும் அவ‌ன் அறைக் கதவோரம் நின்று மெதுவாக‌ எட்டிப் பார்த்துப் புன்ன‌கைப்பாள்.

அவ‌ன் அவ‌ளைத் திரும‌ண‌ம் செய்து கொள்ள‌க் கேட்டான். அவ‌ளும் ச‌ம்ம‌தித்தாள். திரும‌ண‌த்துக்குப் பிற‌கு அவ‌ள‌து அழ‌கிய‌ க‌ழுத்தையும் தோள்க‌ளையும் நெருக்க‌மாக‌க் க‌ண்டு ம‌கிழ்ந்த‌ அவ‌ன் உற்சாக‌த்துட‌ன் சொன்னான், "என் செல்ல‌மே!"

அவ‌ன் ச‌ந்தோஷ‌மாக‌வே இருந்தான். ஆனாலும் அவ‌ர்க‌ள் திரும‌ண‌த்த‌ன்று கூட‌ விடாம‌ல் ம‌ழை பெய்த‌தால் அவ‌ன் முக‌ம் ஏனோ சுண‌க்க‌மாக‌வே இருந்த‌து.

அவ‌ர்க‌ள் மிக‌வும் இனிமையாக‌ வாழ்க்கை ந‌ட‌த்தினார்க‌ள். அவ‌ள் அவ‌ன‌து அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்று க‌ண‌க்கு வ‌ழ‌க்குகளைக் க‌வ‌னித்துக் கொண்டாள். அவள் தன் அழகிய கன்னங்கள் மின்ன, க‌ள்ள‌மில்லா சிரிப்பு சிரித்தபடி அவனுடைய‌ அலுவ‌ல‌க‌த்திலும், கான்டீனிலும், நாடக மேடைக்குப் பின்புறமும் ச‌ர‌ள‌மாக‌ வ‌ளைய‌ வ‌ந்தாள்.

த‌ன் ந‌ண்ப‌ர்க‌ளிட‌மும் உற்றாரிட‌மும், மேடை நாட‌க‌ங்க‌ள் தான் உல‌கிலேயே மிக‌ முக்கிய‌மான‌ விஷ‌ய‌மென்றும், ம‌னித‌ வாழ‌க்கையைச் செம்மைப் ப‌டுத்த‌ நாட‌க‌ங்க‌ள் எவ்வ‌ள‌வு இன்றிய‌மையாத‌வை என்றும் அள‌க்க‌ ஆர‌ம்பித்திருந்தாள்.

"ஆனா இதெல்லாம் யாருக்குப் புரியுது? எல்லாருக்கும் தேவை ஒரு கோமாளி. நேத்திக்கு நாங்க‌ அற்புத‌மான‌ ஒரு இலக்கிய‌ நாவ‌லை நாட‌க‌மாப் போட்டோம். ஆளே இல்லை. இதே வானிட்ச்காவும் நானும் ஏதாவ‌து கேவ‌ல‌மான‌ ஒரு மொக்கை நாட‌க‌ம் போட்டிருந்தா நீ நான்னு கூட்ட‌ம் அலை மோதியிருக்கும். நாளைக்கு வானிட்ச்காவும் நானும் "ந‌ர‌க‌த்தில் ஆர்ஃப்யூஸ்" போட‌ப்போறோம். க‌ண்டிப்பா வாங்க‌."

நாட‌க‌ங்க‌ளைப் ப‌ற்றியும் ந‌டிக‌ர்க‌ளைப் ப‌ற்றியும் குகின் சொல்வ‌தையெல்லாம் அப்ப‌டியே அவ‌ளும் ஒப்பித்தாள். அவ‌னைப் போல‌வே பொதும‌க்க‌ளை அவ‌ர்க‌ள் அறியாமைக்காகவும் ரசனைக்குறைவுக்காகவும் ப‌ழித்தாள்; ஒத்திகைக‌ளில் ப‌ங்கேற்றாள்; ந‌டிக‌ர்க‌ளைத் திருத்தினாள்; இசைக்க‌லைஞ‌ர்க‌ளைப் பார்வையிட்டாள். தாங்க‌ள் ந‌ட‌த்திய‌ நாட‌க‌த்தைப் ப‌ற்றிப் பத்திரிகைகளில் மோச‌மாக‌ விம‌ர்ச‌ன‌ம் வ‌ந்தால் வ‌ருந்திக் க‌ண்ணீர் விட்டாள். குறிப்பிட்ட‌ ப‌த்திரிகை அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்று ச‌ம‌ர‌ச‌ம் பேசித் திருத்தி எழுத‌ச் செய்தாள்.

ந‌டிக‌ர்க‌ள் அவ‌ள் மேல் ப்ரிய‌மாக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் அவ‌ளை 'வானிட்ச்காவும் நானும்' என்றும் 'செல்ல‌மே' என்றும் ப‌ரிகாச‌மாக‌ அழைத்த‌ன‌ர். அவ‌ள் அவ‌ர்க‌ள் மேல் இர‌க்க‌ங்கொண்டு அவர்கள் கேட்கும் போதெல்லாம் சிறு சிறு தொகைக‌ள் க‌ட‌ன் கொடுத்து வ‌ந்தாள். அவ‌ர்க‌ள் திருப்பித் த‌ராம‌ல் ஏமாற்றினால் த‌னிமையில் வ‌ருந்தினாளே ஒழிய‌ க‌ண‌வ‌னிட‌ம் புகார் செய்ய‌வில்லை.

குளிர்கால‌ம் வ‌ந்த‌து. அப்போதும் அவ‌ர்க‌ள் ந‌ன்றாக‌வே இருந்த‌ன‌ர். ந‌க‌ர‌த்தின் மைய‌த்திலிருந்த‌ ஒரு தியேட்ட‌ரை விலைக்கு வாங்கி அவ்வ‌ப்போது அதைச் வேறு சிறிய‌ க‌ம்பெனிக‌ளுக்கோ,மேஜிக் ஷோக்க‌ளுக்கோ வாடகைக்கு விட்ட‌ன‌ர்.

எப்போதும் திருப்தியும் சந்தோஷ‌முமாக‌ இருந்த‌ ஒலென்கா பூரிப்பில் இன்னும் ஒரு சுற்றுப் பெருத்திருந்தாள். குகினோ இன்னும் மெலிந்தும் சோகையில் வெளுத்துக் கொண்டும் போனான். நிலைமை எவ்வ‌ள‌வோ தேறிவிட்டாலும் இன்னும் நஷ்‌ட‌ங்க‌ள் பற்றியே புல‌ம்பிக் கொண்டிருந்தான். இரவெல்லாம் இருமிக் கொண்டிருக்கும் அவ‌னுக்குக் க‌ஷாய‌ம் வைத்துக் கொடுத்தும் தைல‌ங்க‌ள் த‌ட‌வி விட்டும் ப‌ரிவுட‌ன் பார்த்துக் கொன்டாள் ஒலென்கா. க‌த‌க‌த‌ப்பான‌ க‌ம்ப‌ளிப்போர்வைக‌ளைப் போர்த்திவிட்டுப் பாச‌த்துட‌ன் அணைத்துக் கொள்வாள்.

அவ‌ன் த‌லையை ஆத‌ர‌வுட‌ன் கோதிவிட்டு, "என் செல்ல‌ம் தெரியுமா நீ! என் அழ‌குச் செல்ல‌ம்" என்று அன்புடன் கொஞ்சுவாள்.
பிப்ர‌வ‌ரி மாத‌த்தில் புதிய‌ ந‌டிக‌ர் குழுவைத் தேர்வு செய்ய‌ அவ‌ன் மாஸ்கோவுக்குப் போனான். அவ‌னைப் பிரிந்து அவளால் இர‌வில் தூங்க‌வே முடிய‌வில்லை. இர‌வெல்லாம் ஜ‌ன்ன‌ல‌ருகே அம‌ர்ந்து ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளை எண்ணிக் கொண்டிருந்தாள். சேவ‌லைப் பிரிந்து தவிப்புடன் அலைந்து கொண்டிருக்கும் ராக்கோழிக‌ளுட‌ன் த‌ன்னை ஒப்பிட்டுக் கொண்டாள்.

ஈஸ்ட‌ர் ப‌ண்டிகை வ‌ரை மாஸ்கோவில் இருக்க‌ வேண்டி இருப்ப‌தாக‌வும், டிவோலியின் நிர்வாக‌ம் குறித்துச் செய்யவேண்டியது பற்றியும் அவ‌ளுக்குக் கடிதம் எழுதினான் குகின். ஆனால் ஈஸ்ட‌ருக்கு முந்தைய‌ ஞாயிற‌ன்று யாரோ க‌த‌வைத் த‌ட்டினார்க‌ள். ஏனோ அவ‌ளுக்கு அது ஓர் அபாய‌ அறிவிப்பாக‌த் தோன்றிய‌து. அத‌ற்கேற்றாற்போல் க‌ன‌த்த‌ குர‌லில் யாரோ அழைத்தார்க‌ள். "த‌ய‌வு செஞ்சு க‌த‌வைத் திற‌ங்க‌. உங்க‌ளுக்குத் த‌ந்தி வ‌ந்திருக்கு."

க‌ண‌வ‌னிட‌மிருந்து இத‌ற்கு முன்பு த‌ந்திக‌ள் நிறைய‌ வ‌ந்திருந்தாலும் இப்போது ஏனோ ப‌கீரென்ற‌து ஒல‌ன்காவுக்கு. ந‌டுங்கும் கைக‌ளால் த‌ந்தியை வாங்கிப் ப‌டித்தாள்.
"ஐவ‌ன் பெட்ரோவிச் குகின் இன்று திடீரென்று இற‌ந்து விட்டார். செவ்வாய‌ன்று அவ‌ர‌து இஇறுதி அட‌க்க‌ம். மேனும் விவ‌ர‌ங்க‌ளுக்காக‌க் காத்திருக்கிறோம்."

அப்ப‌டித்தான் இருந்த‌து அந்த‌த் த‌ந்து. "இஇறுதி" என்றும், பொருளே இல்லாத‌ "மேனும்" என்ற‌ வார்த்தையோடும். ஓப‌ராக் க‌ம்பெனி மேலாள‌ர் ஒருவ‌ர் அத‌னை அனுப்பியிருந்தார்.

"அய்யோ! வானிட்ச்கா என் அன்பே!" - நெஞ்சு வெடிக்கக் க‌த‌றிய‌ழுதாள் ஒலென்கா. "என் செல்வ‌மே! உன்னை ஏன் நான் ச‌ந்திச்சேன். ஏன் தான் உன்னைக் காத‌லிச்சுக் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்டேன். அய்யோ! உன் ஓல்காவை இப்ப‌டித் த‌னியா விட்டுட்டுப் போயிட்டியே"

குகினின் இறுதி ஊர்வ‌ல‌ம் செவ்வாய‌ன்று மாஸ்கோவில் ந‌டைபெற்ற‌து. புத‌ன் கிழ‌மையன்று த‌ன்ன‌ந்த‌னியாக‌ ஊர் திரும்பிய‌ ஒலென்கா வீட்டுக்குள் நுழைந்து ப‌டுக்கையில் வீழுந்து நெஞ்சுடைய‌ அழுதாள். அவ‌ள‌து ஓல‌ங்க‌ள் அடுத்த‌ தெரு வ‌ரைக்கும் கேட்ட‌ப‌டி இருந்த‌ன‌.

"பாவ‌ம் பொண்ணு... எப்ப‌டித் துடிக்கிறா பாருங்க‌" என்று ப‌ச்சாதாப‌ப்ப‌ட்ட‌ன‌ர் அவ‌ள‌து அண்டை வீட்டார்.

மூன்று மாத‌ங்க‌ள் க‌ழித்து ச‌ர்ச்சிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தாள் ஒலென்கா. அப்போது அவள் அண்டை வீட்டாரில் ஒருவனான வாஸிலி புஸ்தாலோவ் என்ப‌வ‌ன் அவ‌ளுட‌ன் சேர்ந்து ந‌ட‌ந்து வ‌ந்தான். அவ‌ன் விற‌குக்க‌டை முத‌லாளி ஒருவ‌ரிட‌ம் மேலாள‌னாக‌ வேலை பார்த்து வ‌ந்தான். ஆனால் வைக்கோல் தொப்பியும், வெள்ளி நிற‌ உள்கோட்டும், த‌ங்க‌க் கைக்கடிகார‌முமாய், ஒரு கிராம‌த்துக் க‌ன‌வான் போல‌வே தோற்ற‌ம‌ளித்தான்.

"எல்லாம் விதிப்ப‌டி தான் ந‌ட‌க்குது ஓல்கா. க‌ட‌வுள் மேல‌ பார‌த்தைப் போட்டுட்டுத் தைரிய‌மா இரு..." என்று அவ‌ளைப் ப‌ரிவான‌ குர‌லில் தேற்றிக் கொண்டிருந்தான்.

அன்று அவள் வீட்டு வாசல்வரை வந்து விட்டுச் சென்றான். அன்று முழுதும், அவனது கண்ணியமான கனத்த குரல் அவள் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் பின் எப்போது கண்களை மூடினாலும் அவனது முகமும் கறுத்த தாடியுமே அவள் நினைவில் நின்றது. அவனை அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதே போல் அவளும் அவனை ஈர்த்திருக்க வேண்டும். ஏனென்றால் சில நாட்களுக்கெல்லாம் அவளுக்கு ரொம்பவும் பரிச்சயமில்லாத‌ ஒரு முதிய பெண்மணி அவளைச் சந்திக்க வந்தாள். வ‌ந்த‌வ‌ள் புஸ்தாலோவைப் பற்றியே பேசலானாள். அவ‌ன் எவ்வ‌ள‌வு சிற‌ந்த‌ ம‌னித‌னென்றும், அவ‌னைத் திரும‌ண‌ம் செய்ய‌ப் போகும் பெண் கொடுத்து வைத்த‌வ‌ள் என்றும் அவ‌ன் புக‌ழ் பாடினாள்.

மூன்று நாட்க‌ள் க‌ழித்து புஸ்தாலோவே நேரில் வ‌ந்தான். அவளிடம் அதிகம் பேசக்கூட இல்லை; ப‌த்து நிமிட‌ம் இருந்து விட்டுச் சென்று விட்டான். ஆனால் அவ‌ன் சென்ற‌வுட‌ன் அவ‌ன் நினைவாக‌வே இருந்த‌து ஒலென்காவுக்கு. அவ‌னை ம‌ன‌தார‌ நேசிக்க‌த் தொட‌ங்கினாள். அன்று இர‌வு முழுதும் க‌ண்விழித்துக் காய்ச்ச‌லுற்ற‌வ‌ள் போல் கிட‌ந்தாள். ம‌றுநாள் உட‌ன‌டியாக‌ அந்த‌ முதிய‌ பெண்ம‌ணியைக் கூப்பிட்ட‌னுப்பினாள். இவ‌ர்க‌ளிருவ‌ருக்கும் அவ‌ள் திரும‌ண‌ம் பேசி முடித்தாள்.

ஒலென்காவும் புஸ்த‌லோவும் இனிதே வாழ்க்கை ந‌ட‌த்தினார்க‌ள். மதிய‌ உண‌வு வேளை வ‌ரை அவ‌ன் அலுவ‌ல‌க‌த்தில் அம‌ர்ந்திருப்பான். பிற‌கு வியாபார‌ விஷ‌ய‌மாய் வெளியில் செல்வான். அவ‌ன் சென்ற‌வுட‌ன் ஒலென்கா அவ‌ன‌து அலுவ‌ல‌க‌த்தில் அம‌ர்ந்து க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளைப் பார்ப்பாள். ஆர்ட‌ர்க‌ள் வ‌ந்தால் குறித்து வைப்பாள்.

"ம‌ர‌ விலை ஏறிட்டே போகுது. ஒவ்வொரு வ‌ருஷ‌மும் இருப‌து ச‌த‌ம் ஏறுது. முன்னெல்லாம் உள்ளூர்லையே வாங்கி வித்துட்டு இருந்தோம். இப்போ பாருங்க‌, வாஸிட்ச்கா ம‌ர‌ம் வாங்க‌ மொகிலேவுக்குப் போக‌ வேண்டி இருக்கு. வண்டிச் செல‌வு வேற‌." என்று மிகுந்த க‌‌‌வ‌லையும் க‌ரிச‌ன‌முமாய்த் த‌ன‌து தோழியரிடமும் வாடிக்கையாள‌ர்க‌ளிட‌மும் பேசிக் கொண்டிருப்பாள்.

என்ன‌மோ கால‌ம் கால‌மாய் ம‌ர‌வியாபார‌ம் செய்த‌வ‌ள் போல‌வும், உல‌கிலேயே அதைத் த‌விர‌ முக்கிய‌மானது வேறெதுவும் இல்லாத‌து போல‌வும் இருக்கும் அவ‌ள் பேச்சு. பேச்சினூடாக‌, "ம‌ர‌ம், ச‌ட்ட‌ம், தேக்கு, ப‌டாக்கு" என்று வார்த்தைக‌ளை அவ‌ள் அள்ளி விடுவ‌து சிரிப்பாக‌வும் ஏதோ வகையில் பரிதாபமாகவும் இருக்கும்.

இர‌வெல்லாம் அவள் கனவில் ம‌லை ம‌லையாய்க் குவிக்க‌ப் ப‌ட்டிருக்கும் ம‌ர‌ச்ச‌ட்ட‌ங்க‌ளும், லாரி நிறைய‌ ம‌ர‌க்க‌ட்டைக‌ளும் வ‌ரும். ஒரு நாள் ஆறடி உய‌ர‌த்துக்கு அடுக்கி வைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌க்க‌ட்டைக‌ள் ஒன்றோடொன்று மோதிச் ச‌ட‌ச‌ட‌வென்று கீழே ச‌ரிவ‌து போல் க‌ன‌வு க‌ண்டு திடுக்கிட்டுக் க‌த்தி விட்டாள்.
"என்ன‌டா ஆச்சு, கனவு கண்டு ப‌ய‌ந்துட்டியா... சாமிய‌ வேண்டிட்டுப் ப‌டு" என்று இத‌மாக‌ அவ‌ளைத் தேற்றினான் புஸ்தாலோவ்.

அவ‌ள் க‌ண‌வ‌ன‌து எண்ண‌ங்க‌ள் அவ‌ளுடைய‌துமாயின. அறை புழுக்க‌மாக‌ இருப்ப‌தாக‌ அவன் நினைத்தால் இவ‌ளுக்கும் உட‌னே விய‌ர்க்க‌த் தொட‌ங்கிவிடும்! வியாபார‌ம் ம‌ந்த‌மாக‌ப் போவ‌தாக‌ அவ‌ன் நினைத்தால் இவ‌ளுக்கும் அதே க‌வ‌லை தொற்றிக் கொள்ளூம்.

புஸ்தாலோவுக்குக் கேளிக்கைக‌ளில் விருப்ப‌மில்லை. விடுமுறை நாட்க‌ளில் வீட்டிலேயே இருக்க‌ விரும்பினான். இவ‌ளுக்கும் அதுவே ப‌ழ‌க்க‌மாயிற்று.
"ஏன் இப்படி வீட்ல‌யே அடைஞ்சு கிட‌க்கே ஒலென்கா. நாட‌க‌ம், ச‌ர்க்க‌ஸ், இப்ப‌டி எதுக்காவ‌து போயிட்டு வ‌ர‌லாம்ல‌?" என்று அவ‌ள‌து ந‌ண்பர்க‌ள் கேட்டால்,

"வாஸிட்ச்காவுக்கும் என‌க்கும் நாடகம் பாக்கவெல்லாம் நேர‌மே இல்ல‌. அந்த‌ மாதிரி வெட்டிப் பொழுது போக்க‌ என்ன‌ அவ‌சிய‌ம்?"

ச‌னிக்கிழ‌மைக‌ளில் புஸ்தாலோவும் அவ‌ளும் மாலை ச‌ர்ச்சுக்குச் செல்வார்க‌ள். விடுமுறை நாட்க‌ள‌ன்று காலையிலேயே சென்று விடுவார்க‌ள். அழ‌கிய‌ ப‌ட்டாடை ப‌ள‌ப‌ள‌க்க‌ அவ‌னுட‌ன் அவ‌ள் ந‌ட‌ந்து செல்கையில் அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் சுற்றி இனிய‌ ந‌றும‌ண‌மும் சாந்த‌மான‌ ஒரு அமைதியும் நில‌வுவ‌தை உண‌ர‌ முடியும்.

அவ‌ர்க‌ள் ஓர‌ள‌வு வ‌ச‌தியாக‌வே இருந்த‌ன‌ர். வீட்டில் எப்போதும், ப‌ல‌வ‌கை ரொட்டிக‌ளும் ஜாம்க‌ளும் கேக்குக‌ளும் இருந்த‌ன‌. தின‌மும் ப‌க‌ல் ப‌ன்னிர‌ண்டு ம‌ணிக்கு இறைச்சியும் காய்க‌றி வ‌கைக‌ளும் கொதிக்கும் ம‌ண‌மும், நோன்பு நாட்க‌ள‌ன்று மீன் வ‌றுக்கும் ம‌ண‌மும் அவ‌ர்க‌ள் வீட்டைக் க‌ட‌ந்து செல்ப‌வ‌ர்கள் வாயில் நீரூற வைக்கும்.

அலுவ‌ல‌க‌த்திலும் தேனீர் த‌யாரிக்கும் ச‌மோவார் கொதித்துக் கொண்டே இருக்கும். வரும் எல்லா வாடிக்கையாளர்களுக்குப் பிஸ்கெட்டுகளுடன் தேனீர் உப‌சரிப்பாள் ஒலென்கா.

வார‌ம் ஒருமுறை ஏரிக்க‌ரைக்குச் சென்று ஆசைதீர‌ நீராடி விட்டு வ‌ருவார்க‌ள்.

"ஆமாம், எங்க‌ளுக்கு ஆண்ட‌வ‌ன் புண்ணிய‌த்தால‌ ஒரு குறையுமில்ல‌. எல்லாரும் எங்க‌ளைப் போல‌ ச‌ந்தோஷ‌மா இருக்க‌ணும்னு நினைக்கிறேன்." என்பாள் ஒலென்கா.

புஸ்தாலோவ் ம‌ர‌ம் வாங்க‌ மொகிலேவுக்குச் செல்லும் போது ஒலென்கா பெரிதும் ஏக்க‌ம‌டைவாள். இர‌வெல்லாம் விழித்துக் கிட‌ந்து அழுவாள். அப்போது அவ‌ர்க‌ள் வீட்டின் ஒரு ப‌குதியில் வாட‌கைக்கு இருந்த‌ ஸ்மிர்ணின் என்ற‌ கால்ந‌டை ம‌ருத்துவ‌ன், அவ‌ளுட‌ன் சில‌ ச‌ம‌ய‌ம் வ‌ந்து பேசிக் கொண்டிருப்பான். மாலை வேளைக‌ளில் அவ‌ள் த‌னிமையைப் போக்க‌ அவ‌ளுட‌ன் வ‌ந்து சீட்டு விளையாடுவான்.
அவ‌ன் சொந்த‌ வாழ்க்கையைக் கேட்ட பிறகு ஒலென்காவுக்கு அவன் மீது மிகுந்த‌ க‌ரிச‌ன‌ம் ஏற்ப‌ட்ட‌து. அவ‌னுக்குத் திரும‌ண‌மாகி ஒரு சின்ன‌ ம‌க‌னும் இருந்தான். ஆனால் அவ‌ன் ம‌னைவி அவ‌னுக்குத் துரோக‌மிழைத்து விட்ட‌தால் அவ‌ளிட‌மிருந்து பிரிந்து வாழ்கிறான். அவ‌ளை வெறுத்தாலும் ம‌க‌னுக்காக‌ வேண்டி மாத‌ம் அவ‌ளுக்குப் ப‌ண‌ம் அனுப்பும்ப‌டி க‌ட்டாய‌த்திலிருக்குறான். இதையெல்லாம் கேட்ட‌ பின்பு ஒலென்காவுக்கு மிகுந்த‌ ப‌ரிதாப‌மேற்ப‌ட்ட‌து.

"க‌ட‌வுள் உன்னை ஆசிர்வ‌திக்க‌ட்டும். எனக்காக இங்கே வ‌ந்திருந்து பேசிக்கிட்டிருந்த‌துக்கு ந‌ன்றி." என்று அவ‌ன் விடை பெறும் போது அவன் கையில் ஒரு மெழுகு வர்த்தியையும் ஏற்றிக் கொடுத்து வ‌ழிய‌னுப்புவாள்.

மேலும், எப்போதும் த‌ன‌து க‌ணவனிடம் கண்டது போல‌வே பேச்சிலும் ந‌ட‌த்தையிலும் ஒரு மிடுக்கையும் நாக‌ரிக‌த்தையும் ப‌ழ‌க்கிக் கொண்டாள்.அவன் கடைசிப் படி இறங்கும் போது சொல்வாள்:
"இங்க‌ பாரு, நீ உன் ம‌னைவியோட‌ ச‌மாதான‌மா போயிட‌ற‌து தான் ந‌ல்ல‌து. உன‌க்காக‌ இல்லாட்டியும் உன் ம‌க‌னுக்காக‌ நீ அவ‌ளை ம‌ன்னிச்சுட‌ணும்."

புஸ்தாலோவ் திரும்பி வ‌ந்த‌தும் அவனிடம் ஸ்மிரினினைப் ப‌ற்றியும் அவ‌ன‌து துய‌ர‌மான‌ குடும்ப‌ வாழ்வைப் ப‌ற்றியும் சொன்னாள். இருவ‌ரும் அப்பாவைப் பிரிந்து ஏங்கும் அந்த‌ச் சிறுவ‌னை நினைத்து வ‌ருந்துவார்க‌ள். பின்பு ஏதேதோ பேச்சின் இறுதியாக‌ இருவ‌ரும் க‌ட‌வுள் படத்துக்கு முன் சென்று வ‌ண‌ங்கித் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டுமென‌ வேண்டிக்கொள்வார்க‌ள்.

இப்ப‌டியாக மிகுந்த அன்போடும் இசைவோடும் அவர்கள் வாழ்ந்து ஆறு ஆண்டுக‌ள் ஓடி விட்ட‌ன‌.

என்ன‌ கொடுமை...குளிர்கால‌த்தில் ஒரு நாள், ஏதோ அவ‌ச‌ர‌ வேலையாக‌ வெளியில் சென்றான் புஸ்தாலோவ். த‌லைக்குத் தொப்பி அணிந்து கொள்ளாம‌ல் கொடும்ப‌னியில் ந‌னைந்து வ‌ந்த‌ அவ‌ன் க‌டுமையாக‌க் காய்ச்ச‌லுற்றான். எவ்வ‌ள‌வோ சிற‌ந்த‌ ம‌ருத்துவ‌ர்க‌ளை வ‌ர‌வ‌ழைத்துப் பார்த்தாலும் ப‌ல‌ன‌ளிக்காம‌ல் நான்கு மாத‌ங்க‌ளுக்குப் பின் உட‌ல் மோச‌ம‌டைந்து இற‌ந்து போனான். ஒலென்கா ம‌றுப‌டியும் வித‌வையானாள்.

"அய்யோ! என‌க்கு யாருமே இல்லியே. கொடுமையான வேதனையைத் தந்துட்டு, இந்த‌ உல‌க‌த்துல‌ என்னைத் த‌னியா விட்டுட்டுப் போயிட்டியே... என‌க்காக‌ இர‌க்க‌ப்ப‌ட‌ யாருமே இல்லையா... " நெஞ்சொடியக் கதறினாள் ஒலென்கா.

அதன் பிறகு, இழ‌வுக்காக‌ அணியும் க‌றுப்பு உடைக‌ளையே எப்போதும் அணிய‌த் தொட‌ங்கினாள். தொப்பிக‌ளும் கையுறைக‌ளும் அணிவ‌தையே விட்டு விட்டாள். ச‌ர்ச்சுக்கும் த‌ன் க‌ண‌வ‌னின் க‌ல்ல‌றைக்கும் த‌விர‌ எங்கும் வெளியில் செல்வ‌தில்லை. ஒரு துற‌வியைப் போல‌ வாழ‌ ஆர‌ம்பித்தாள். ஆறு மாத‌ங்க‌ளுக்குப் பிற‌கு தான் வீட்டின் ஜ‌ன்ன‌ல்க‌ளையே திற‌ந்து விட்டாள். கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ க‌டைத்தெருவுக்கும் செல்ல‌ ஆர‌ம்பித்தாள். ஆனாலும் அவ‌ள் வீட்டில் எப்ப‌டித் தன்னந்தனியாகப் பொழுதைப் போக்கினாள் என்ப‌து எல்லாருக்கும் புதிராக‌வே இருந்த‌து.

பிறகு அதுவும் கொஞ்ச‌ம் புரிய‌ ஆர‌ம்பித்த‌து. சில‌ நாள் அவ‌ள் த‌ன‌து தோட்ட‌த்தில் அம‌ர்ந்து அந்த‌க் கால்ந‌டை ம‌ருத்துவ‌ன் ஸ்மிரினினுட‌ன் தேநீர் அருந்துவ‌தையும் அவ‌ன் அவ‌ளுக்குச் செய்தித் தாள்க‌ள் வாசித்துக் காட்டுவ‌தையும் சில‌ர் பார்த்த‌ன‌ர். மேலும் ஒரு நாள் அவ‌ளைச் சாலையில் ச‌ந்தித்த‌ பெண்ணிட‌ம் அவ‌ள் பேசும் போது, "இந்த‌ ஊர்ல‌ ஆடு மாடுங்க‌ளுக்கு ஒழுங்கான‌ ஆஸ்ப‌த்திரியே இல்ல‌. அதான் எல்லா நோய்த் தொற்றுக்கும் கார‌ண‌ம். குதிரைங்க‌ கிட்டேந்தும், மாடுங்க‌ கிட்டேந்தும், பால்லெந்தும் தான் ஜ‌ன‌ங்க‌ளுக்கு நிறைய‌ நோய் ப‌ர‌வுது. ம‌னுச‌ங்களுக்குப் பாக்கற‌ மாதிரியே அதுங்க‌ளுக்கும் ந‌ல்ல‌ வைத்திய‌ம் பாக்க‌ணும்."

அந்த‌க் கால்ந‌டை ம‌ருத்துவ‌னின் வார்த்தைக‌ளை அப்ப‌டியே ஒப்பித்தாள். இப்போது எல்லாவற்றிலும் அவ‌னுடைய‌ நிலைப்பாடு தான் அவ‌ளுக்கும்!யாரையும் நேசிக்காம‌ல் அவ‌ளால் ஒரு வ‌ருட‌ம் கூட‌ உயிர் வாழ‌ முடியாது என்ப‌து இப்போது தெள்ள‌த் தெளிவாகி விட்ட‌து.

வேறு யாராவ‌தென்றால் இம்மாதிரியான‌ ந‌ட‌த்தை கேள்விக்குள்ளாக்க‌ப் ப‌ட்டிருக்கும். ஆனால் ஒலென்காவைப் ப‌ற்றி யாராலும் த‌ப்பாக‌ நினைக்க‌ முடிய‌வில்லை. அவளது இய‌ல்புக்கு அது மிக‌வும் பொருத்த‌மாக‌வே இருந்த‌து. அதனால் அவளுக்கும் அவளது புதிய நண்பனுக்கும் எவ‌ரிட‌மும் த‌ங்க‌ள் செய‌ல்க‌ளுக்கு விள‌க்க‌ம் கொடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் ஏற்ப‌ட‌வில்லை. த‌ங்க‌ள் உற‌வை ம‌றைக்க‌வும் வேண்டி இருக்க‌வில்லை. அப்ப‌டியே முய‌ன்றிருந்தாலும் எந்த‌ ர‌க‌சிய‌த்தையுமே காப்பாற்ற‌ இய‌லாத‌ ஒலென்காவால் அது முடிந்திருக்காது.

அவ‌னைச் ச‌ந்திக்க‌ அவ‌ன‌து மருத்துவ‌ ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ரும் போது அவ‌ர்க‌ளுக்குத் தேனீரோ உண‌வு வ‌கைக‌ளோ கொடுத்து உப‌ச‌ரிக்க‌ வ‌ரும் ஒலென்கா கால்ந‌டை நோய்க‌ளைப் ப‌ற்றியும், க‌சாப்புக் க‌டைக‌ளின் சுத்த‌மின்மை ப‌ற்றியும் விலாவாரியாக‌ப் பேச‌த் தொட‌ங்குவாள். அவ‌னுக்கோ த‌ர்ம‌ச‌ங்க‌ட‌மாக‌ இருக்கும். விருந்தின‌ர்க‌ள் போன‌ பின்பு, அவ‌ள் கைக‌ளைப் ப‌ற்றி ஆத்திர‌த்துட‌ன்:

"உன‌க்கு எத்த‌னை வாட்டி சொல்ற‌து? உன‌க்குப் புரியாத‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌த்திப் பேசாதே. நாங்க‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் சீரியஸாப் பேசிக்கிட்டிருக்கும் போது வ‌ந்து க‌ண்ட‌ப‌டி இடையில‌ உள‌றாதே. ம‌கா எரிச்ச‌லா இருக்கு."

ஆச்ச‌ரிய‌மும் வ‌ருத்த‌முமாய் அவ‌னைப் பார்த்துக் கேட்பாள் ஒலென்கா."ஆனா நான் என்ன‌ தான் பேச‌ற‌து விள‌திமீர்?"

க‌ண்க‌ளில் க‌ண்ணீருட‌ன் அவ‌னை அணைத்துக் கொண்டு த‌ன்னிட‌ம் கோப‌ம் கொள்ள‌ வேண்டாமென்று இறைஞ்சுவாள். அவ‌ன் ச‌மாதான‌ம‌டைவான். இருவ‌ரும் ச‌க‌ஜ‌நிலைக்குத் திரும்பிவிடுவார்க‌ள்.

ஆனால் இந்த‌ ம‌கிழ்ச்சி ரொம்ப‌ நாள் நிலைக்க‌வில்லை. இராணுவ‌த்தைச் சேர்ந்த‌ மருத்துவனான‌ அவ‌ன் சைபீரியாவோ ஏதோ ஒரு இட‌த்துக்கு மாற்ற‌ப்ப‌ட்டான். ஒலென்கா மீண்டும் த‌னிய‌ளானாள்.

இப்போது தான் அவ‌ள் முற்றும் த‌னிமையை உண‌ர்ந்தாள். அவ‌ள‌து த‌ந்தை இற‌ந்து வெகு கால‌மாகி விட்ட‌து. அதோ, அவ‌ர‌து சாய்வு நாற்காலி ஒரு கால் உடைந்து ப‌ர‌ணில் கிட‌க்கிற‌து. அவ‌ள் உடல் மெலுந்து பொலிவிழ‌ந்து வ‌ந்தாள். தெருவில் அவ‌ளைப் பார்ப்ப‌வ‌ர்க‌ள் முன்போல் அவ‌ளைக் க‌ண்டு கொள்வ‌தோ சிரித்துப் பேசுவ‌தோ இல்லை. அவ‌ள் இள‌மையின் உச்ச‌க‌ட்ட‌ கால‌ங்க‌ள் முடிவ‌டைந்து விட்ட‌ன‌. எதிர்ப்ப‌டும் கால‌ம் எப்ப‌டி இருக்குமென‌ யோசிக்க‌வே அவ‌ளால் முடிய‌வில்லை.

இன்றும் வீட்டு வ‌ராந்தாவில் அம‌ர்ந்து டிவோலியின் நாட‌க‌ ஒத்திகைச் ச‌த்த‌ங்க்ளைக் கேட்கிறாள். ஆனால் இப்போது அது அவளுள் எவ்வித‌ ச‌ல‌ன‌த்தையும் ஏற்ப‌டுத்த‌வில்லை.எதையுமே சிந்திக்காம‌ல், எதையுமே விரும்பாம‌ல், எத‌ற்காக‌வும் ஏங்காம‌ல் இர‌வு வ‌ரை அங்கு அம‌ர்ந்திருந்து விட்டு ப‌டுக்கைக்குச் சென்றாள். இய‌ந்திர‌ம் போல் உண்டு உற‌ங்கினாள்.

அதை விட‌க் கொடுமை என்ன‌வென்றால் இப்போதெல்லாம் அவ‌ளுக்கென்று அபிப்பிராயங்களே இல்லை. எல்லாவ‌ற்றையும் பார்க்கிறாள், புரிந்து கொள்கிறாளே ஒழிய‌ எதைப் ப‌ற்றியும் ஒரு முடிவுக்கு வ‌ர‌ முடியாம‌ல் த‌வித்தாள். குகினோ, புஸ்தாலொவோ அந்த‌க் கால்ந‌டை ம‌ருத்துவ‌னோ அவ‌ளுட‌ன் இருந்த‌ போது எல்லாவ‌ற்றையும் ப‌ற்றிக் அழுத்த‌மான‌ க‌ருத்துக்க‌ள் வைத்திருந்தாள். இப்போது அவ‌ள‌து வீட்டைப் போல‌வே சிந்தையிலும் ஒரு வெறுமை குடி கொண்டிருந்த‌து. எட்டிக்காயை வாயிலிட்ட‌து போல் அது அவ‌ளுக்கு சொல்ல‌வொணாக் க‌ச‌ப்பைத் த‌ந்து கொண்டிருந்த‌து.

கால‌ம் வேக‌மாக ஓடி விட்ட‌து. ஊர் வ‌ள‌ர்ந்து கொண்டே இருந்த‌து. டிவோலி இருந்த‌ இட‌த்தில் புதிய‌ வீடுக‌ளும் க‌ட்ட‌ட‌ங்க‌ளும் வ‌ந்து விட்ட‌ன‌. ஒலென்காவின் வீடு ப‌ழுத‌டைந்து கூரையும் துருப்பிடித்து விட்ட‌து. தோட்ட‌ம் முழுதும் முட்செடிக‌ளும் புத‌ர்க‌ளும் நிறைந்திருந்த‌ன‌. ஒலென்காவும் இள‌மையின் ஒளி நீங்கிய‌வ‌ளாய் வ‌ய‌தாகிக் க‌ளைத்திருந்தாள். தாங்க‌ முடியாத வெறுமையோடு இர‌வு ப‌க‌லைக் க‌ட‌த்திக் கொண்டிருந்தாள்.

வ‌ச‌ந்த‌ கால‌ங்க‌ளில் ச‌ர்ச் ம‌ணிக‌ள் ஒலிக்கும் போது திடீரென்று ஏதேதோ ப‌ழைய‌ நினைவுக‌ள் அவ‌ள் நெஞ்சில் வ‌ந்து மோதும். ச‌ட்டென்று க‌ண்க‌ள் நிர‌ம்பும். ஆனால் அடுத்த‌க‌ண‌மே அவ‌ள்வாழ்வின் நீக்க‌ம‌ற‌ நிறைந்திருந்த‌ வெறுமை எட்டிப் பார்த்து எல்லாம் மாயையென்று உண‌ர‌ வைக்கும்.

அவ‌ள‌து செல்ல‌ப் பூனை வ‌ந்து அவள் காலை உர‌சிக் கொஞ்சுவ‌து கூட‌ அவ‌ள் ம‌ன‌துக்கு இத‌ம‌ளிப்ப‌தில்லை. அவ‌ளுக்கு அதெல்லாம் போத‌வில்லை. அவ‌ள் உட‌லையும் ஆன்மாவையும் ஒருங்கே கொள்ளை கொள்ளும்ப‌டியான‌தொரு அன்பை எதிர்பார்த்தாள். அவ‌ள் வாழ்க்கைக்கு ஒரு நோக்க‌மும் அர்த்த‌மும் அளிக்க‌க்கூடிய‌, சில்லிட்டுப் போன‌ அவ‌ள‌து உடலில் புது இர‌த்த‌ம் பாய்ச்ச‌க் கூடிய‌, அப்ப‌டி ஒரு அன்புக்காக‌ ஏங்கினாள். காலை ஒண்டிய பூனையை உத‌றிய‌ப‌டி, "போ அந்த‌ண்ட‌.." என்று எரிச்ச‌லுட‌ன் க‌த்துவாள்.

இப்ப‌டியாக‌ ஆண்டுக‌ள் க‌ட‌ந்த‌ன‌ - எந்த‌ ச‌ந்தோஷ‌மும் இல்லாம‌ல்; எவ்வித‌ நிலைப்பாடுக‌ளும் இல்லாம‌ல். வீட்டுச் ச‌மைய‌ல்காரி மாவ்ரா எது சொன்னாலும் ஆமோதித்தாள்.

ஜூலை மாத‌த்தில், க‌டுமையான‌ கோடைகால‌த்தில் ஒரு நாள், யாரோ வீட்டுக் க‌தவைத் த‌ட்டினார்க‌ள். க‌த‌வைத் திற‌ந்த ஒலென்கா ஆச்ச‌ரிய‌த்தில் பேச்சிழ‌ந்து போனாள். அந்த‌க் கால்ந‌டை ம‌ருத்துவ‌ன் ஸ்மிரினின் தான் நின்று கொண்டிருந்தான். த‌லையெல்லாம் ந‌ரைத்துப் போய்ச் சாமான்ய‌ ம‌னித‌னாய்க் காட்சிய‌ளித்தான்.

ச‌ட்டென்று அவ‌ன் நெஞ்சில் த‌லையைச் சாய்த்து அழ‌த்தொட‌ங்கினாள். உடைந்து பொங்கிய‌ உண‌ர்ச்சிக‌ளின் வீரிய‌த்தில், எப்ப‌டி அவனுடன் உள்ளே வ‌ந்து அம‌ர்ந்தோம் என்று கூட‌ அவ‌ளுக்குத் தெரிய‌வில்லை.

"என் அன்பே விள‌திமீர்...எப்ப‌டி இங்கே திடீர்னு?" ம‌கிழ்ச்சியில் அவ‌ளுக்குக் குர‌ல் ந‌டுங்கிய‌து.

"நான் இங்கேயே த‌ங்கிட‌லாம்னு வ‌ந்துட்டேன் ஓல்கா. இராணுவத்துல என் வேலையை ராஜினாமா ப‌ன்ணிட்டேன். சொந்த‌மா ம‌ருத்துவ‌ம் ப‌ண்ண‌லாம்னு. என் பைய‌னையும் இனிமே ப‌ள்ளிக்கூட‌த்துல‌ சேர்க்க‌ணும். இப்போ பெரிய‌ பைய‌னாயிட்டான். தெரியுமா, என் பொண்டாட்டியோட‌ நான் இப்ப‌ ராசியாயிட்டேன்."

"அவ‌ எங்கே?" ஒலென்கா கேட்டாள்.

அவ‌ பைய‌னோட‌ ஹோட்ட‌லில் இருக்கா. நான் வீடு தேடி இந்த‌ப் ப‌க்க‌ம் வ‌ந்தேன்.

"ந‌ல்லாக் கேட்டே போ. வீடு தேட‌றியா? ஏன், என் வீடு போதாதா? அட‌க்க‌ட‌வுளே! இங்கே தாராள‌மா இருந்துக்கோங்க‌. நான் வாட‌கை கூட‌ வாங்க‌ மாட்டேன். நீங்க‌ இங்க‌ பெரிய‌ வீட்ல‌ இருந்துக்கோங்க‌. நீ முன்ன‌ த‌ங்கின‌ சின்ன‌ போர்ஷ‌ன் என‌க்குப் போதும். ஹைய்யோ! எவ்ளோ ச‌ந்தோஷ‌மா இருக்கு என‌க்கு." ப‌ட‌ப‌ட‌வென‌ப் பேசிய‌தில் ஒலென்காவுக்கு மீண்டும் க‌ண்க‌ள் நிறைந்து வ‌ழிந்த‌ன‌.

அடுத்த‌ நாள் கூரைகளுக்குப் புது வ‌ர்ண‌ம‌டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. சுவ‌ர்க‌ள் வெள்ளைய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. ஒலென்கா புதுத் தெம்புட‌ன் கைக‌ளை இடுப்பிலூன்றிய‌ப‌டி எல்லாவ‌ற்றையும் சிர‌த்தையுட‌ன் மேற்பார்வையிட்டாள்.

அவ‌ள் முக‌த்தில் ப‌ழைய‌ சிரிப்பும் குதூக‌ல‌மும் தென்ப‌ட்ட‌து. நீண்ட‌ துயிலிலிருந்து எழுந்த‌வ‌ள் போல் சுறுசுறுப்பாக‌வும் உற்சாக‌த்துட‌னும் அங்குமிங்கும் அலைந்து ஆட்க‌ளை ஏவிக் கொண்டிருந்தாள். ம‌ருத்துவ‌னின் ம‌னைவி வ‌ந்து சேர்ந்தாள். அவ‌ள் பார்க்க ரொம்பவும் சாதாரணமாக, ஒல்லியாகவும் குட்டையான‌ த‌லைமுடியுடனும், சதா எரிச்சலான‌ முக பாவத்துடனும் இருந்தாள்.

அவ‌ளுட‌ன் அவ‌ள‌து பத்துவயது மகன் சாஷாவும் வ‌ந்திருஇந்தான். நீல நிறக் கண்களுடன், குழிவிழுந்த‌ க‌ன்ன‌ங்க‌ளோடு, அவ‌ன் வ‌ய‌துக்கு ரொம்ப‌ச் சின்ன‌ப் பிள்ளை போன்றிருந்தான். உள்ளே வ‌ந்த‌து தான் தாம‌த‌ம், தோட்ட‌த்தில் திரிந்து கொண்டிருந்த‌ பூனையின் பின் ஓடினான். சிரித்துக் கொண்டே ஒலென்காவிடம் கேட்டான். "இது உங்க பூனையா ஆன்ட்டி? இது குட்டி போட்டா எங்களுக்கு ஒண்ணு குடுக்க்றீங்களா? அம்மாவுக்கு எலிங்கன்னா ரொம்பப் பயம்."

ஒலென்கா அவ‌னுட‌ன் அன்பாக‌ப் பேசி அவ‌னுக்குத் தேனீர் கொடுத்தாள். அவ‌ள் இத‌ய‌த்தில் சொல்ல‌த் தெரியாத‌ ஒரு சுக‌மான‌ வ‌லி ஏற்ப‌ட்ட‌து. அவ‌ள் பெறாத‌ குழ‌ந்தையிட‌ம் உண‌ர்வ‌தைப் போன்றதொரு தனிப்பாச‌த்தை அவ‌னிட‌ம் உண‌ர்ந்தாள்.

மாலை வேளைகளில் அவன் தன் பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கையில் அவனருகே அமர்ந்து அன்பு ததும்ப அவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

"என் அழகுச் செல்லமே...! என் தங்கம், எவ்ளோ சமத்து, எவ்ளோ அறிவு" என்று ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருப்பாள்.

"தீவு எனப்படுவது எல்லாப்பக்கமும் நீரால் சூழப்பட்ட இடமாகும்" - அவன் உர‌க்க‌ப் ப‌டித்தான்.

"தீவு என‌ப்ப‌டுவ‌து...." அவ‌ள் திருப்பிச் சொன்னாள். வெறுமையும் மௌனமுமாய்க் கழித்த எத்தனையோ வருடங்களுக்குப் பிற‌கு அவ‌ள் அழுத்த‌மான‌ ந‌ம்பிக்கையுட‌ன் கொண்ட‌ முத‌ல் க‌ருத்து இது தான்.

இப்போது அவ‌ளுக்கு மீண்டும் நிலைப்பாடுக‌ளும் க‌ருத்துக்க‌ளும் ஏற்ப‌ட‌த் தொட‌ங்கின. தின‌மும் இர‌வு உண‌வின் போது சாஷாவின் பெற்றோரிட‌ம் பேசுவாள். ப‌ள்ளிக‌ளில் பாட‌ங்க‌ள் எவ்வ‌ள‌வு க‌டினமாய் இருக்கின்ற‌ன‌ என்றும், ஆனாலும் அது பிள்ளைக‌ள் ந‌ல்ல‌ நிலைக்கு வர ‍‍ (டாக்ட‌ராக‌வோ இஞ்சினிய‌ராக‌வோ) எவ்வ‌ள‌வு முக்கிய‌மென்றும்.

சாஷா ஒழுங்காகப் ப‌ள்ளி செல்ல‌த் துவ‌ங்கினான். அவ‌ன் அம்மா த‌ன‌து த‌ங்கை வீடு இருக்கும் ஹார்கோவ் என்ற‌ ஊருக்குச் சென்று விட்டாள்; திரும்பி வ‌ர‌வே இல்லை. அவ‌ன் அப்பாவோ கால்நடைக‌ளைப் ப‌ரிசோதிக்க‌ ஊர் ஊராக‌ச் சுற்றிக் கொண்டிருந்தார். சாஷா முற்றிலும் கைவிட‌ப்ப‌ட்ட‌வ‌னாக‌ ஒலென்காவுக்குத் தோன்றிய‌து. பிள்ளை ஒழுங்காக‌க் க‌வ‌னிக்க‌க் கூட‌ ஆளில்லாம‌ல் ப‌ட்டினி கிட‌ப்ப‌தாக‌ எண்ணிய‌ ஒலென்கா அவ‌னைத் தன் பகுதிக்கு அழைத்து வ‌ந்து த‌ங்க‌ வைத்தாள்.

அடுத்த‌ ஆறு மாத‌ங்க‌ள் சாஷா அவ‌ளுட‌ன் த‌ங்கி இருந்தான். தின‌மும் காலையில் ஒலென்கா அவ‌ன‌து அறைக்கு வருவாள். கன்னத்தின் அடியில் கை வித்து ஆழ்ந்து உற‌ங்கிக் கொண்டிருக்கும் அவனை பார்த்து அவ‌ளுக்கு எழுப்ப‌வே ம‌ன‌ம் வ‌ராது. மிக‌வும் க‌னிவாக‌, மெதுவாக‌ அழைப்பாள், "சாஷாக் க‌ண்ணு, எழுந்திருடா செல்லாம். ஸ்கூலுக்கு நேர‌மாச்சு பாரு."

அவ‌ன் எழுந்து குளித்து உடை மாற்றிச் சாப்பிட‌ வ‌ருவான். அவ‌னுக்குத் தேநீரும் பிஸ்க‌ட்டுக‌ளும், வெண்ணெய் த‌ட‌விய‌ ரொட்டியும் த‌ருவாள். தூக்க‌க்க‌ல‌க்க‌த்தில் ச‌ற்று எரிச்ச‌லுட‌ன் சாப்பிட்டுக் கொண்டிருப்பான் அவ‌ன்.

"நீ வாய்ப்பாடே ஒழுங்கா சொல்ற‌தில்ல‌ சாஷாக்குட்டி. உன்னால‌ என‌க்கு எவ்ளோ க‌வ‌லை தெரியுமா. நீ ந‌ல்லாப் ப‌டிக்க‌ணும். டீச்ச‌ருங்க‌ சொல்ற‌ப‌டி கேக்க‌ணும்." என்று நீண்ட தூரம் பயணம் போகிறவனுக்குச் சொல்வதைப் போல அவ‌னுக்கு அறிவுரை ம‌ழை பொழிய‌ ஆர‌ம்பிப்பாள்.

"அய்யோ..ஆளை விடு" என்பான் சாஷா.

பின்பு அவ‌ன் தலைக்குத் தொப்பியும் தோளில் புத்தகப் பையையும் மாட்டிக் கொண்டு ப‌ள்ளிக்கு ந‌ட‌ந்து செல்வான். ஒலென்கா ச‌த்த‌மில்லாம‌ல் அவ‌னைப் பின் தொட‌ருவாள்.

"சாஷாக் குட்டி" என்று அவ‌னை அழைத்து அவ‌ன் கையில் ஏதோ ஒரு தின்ப‌ண்ட‌த்தைத் திணிப்பாள். அவ‌ன் ப‌ள்ளி இருக்கும் தெரு வ‌ந்த‌தும், அவ்வள‌வு பெரிய மனுஷி ஒருத்தி த‌ன்னைப் பின்தொட‌ர்வ‌து ப‌ற்றி அவ‌ன் வெட்கம‌டைவான்.

"நீ வீட்டுக்குப் போ ஆன்ட்டி. நானே போய்க்கிறேன்."

அவ‌ள் அங்கேயே நின்று ப‌ள்ளி வாச‌ல் தாண்டி அவ‌ன் ம‌றையும் வ‌ரை பார்த்துக் கொண்டிருப்பாள்.

ஓ! அவ‌ள் தான் அவ‌னை எப்ப‌டி நேசித்தாள். அவ‌ள‌து முந்தைய பிரிய‌ங்க‌ளெல்லாம் இந்த‌ அள‌வு ஆழ‌மாக இருந்த‌தில்லை. இந்த‌ அள‌வு த‌ன்னிச்சையாக‌, எந்த‌வித‌ எதிர்பார்ப்புமில்லாம‌ல், முற்றிலுமாய் அவ‌ளது ஆன்மா எங்குமே ச‌ர‌ண‌டைந்த‌தில்லை. இந்த‌ச் சிறு பைய‌னுக்காக‌வும் அவ‌ன் க‌ன்ன‌த்தில் விழும் குழிக்காக‌வும் அவ‌ள் த‌ன் உயிரையே கொடுக்க‌த் த‌யாராக இருந்தாள்‍ ‍- அதுவும் ப‌ரிபூர‌ண‌ ச‌ந்தோஷ‌த்துட‌ன். ஏன்? ஏனென்று யாரால் தான் சொல்ல‌ முடியும்?

சாஷாவைப் ப‌ள்ளி வ‌ரையில் கொண்டு விட்ட‌தும் மிகுந்த‌ ம‌ன‌நிறைவுட‌னும் நெஞ்ச‌ம் நிறைந்து த‌ளும்பும் அன்புட‌னும் நிம்ம‌தியாக‌ வீடு திரும்புவாள். இந்த் ஆறுமாத‌ங்க‌ளாக லேசாகச் சதை போட்டுச் ச‌ற்று இள‌மை திரும்பி இருக்கும் அவ‌ள‌து முக‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ளிட‌மெல்லாம் சிரித்துப் பேசும்.

அவ‌ர்க‌ளும் அதே உற்சாக‌த்துட‌ன் கேட்பார்க‌ள்: "வ‌ண‌க்க‌ம் ஓல்கா செல்ல‌ம், எப்ப‌டி இருக்கே?"

"அதை ஏன் கேக்க‌றீங்க‌. ஸ்கூல்ல‌ பாட‌மெல்லாம் ரொம்ப‌க் க‌ஷ்ட‌மா இருக்கு. சேர்ந்த முதல் நாள்ளயே வாய்ப்பாட்டை ம‌ன‌ப்பாட‌ம் செய்ய‌ச் சொல்லி இருக்காங்க‌. அப்புற‌ம் ஒரு ல‌த்தீன் மொழிபெய‌ர்ப்பு, அப்புற‌ம் க‌ண‌க்குல வேற‌ வீட்டுப் பாட‌ம். சின்ன‌ப் பைய‌னுக்கு இதெல்லாம் ரொம்ப‌ அதிக‌மில்ல?"

அப்புற‌ம் ஆசிரிய‌ர்க‌ளைப் ப‌ற்றி, பாட‌ங்க‌ளைப் ப‌ற்றி, புத்த‌க‌ங்க‌ளைப் ப‌ற்றியெல்லாம் சாஷா என்னென்ன சொல்லி இருந்தானோ அதையெல்லாம் அப்படியே திருப்பிச் சொல்வாள்.

மூன்று ம‌ணிக்கு அவ‌ன் திரும்பிய‌தும் இருவ‌ரும் ஒன்றாக‌ அம‌ர்ந்து சாப்பிடுவார்க‌ள். அவ‌னுட‌ன் உட்கார்ந்து அவ‌ளும் பாட‌ம் ப‌டிப்பாள். அவ‌னைப் ப‌டுக்க‌ வைத்து வெகு நேர‌ம் ஜெப‌ம் செய்து அவ‌ன் நெஞ்சில் சிலுவைக் குறியிடுவாள். பின்பு த‌ன் ப‌டுக்கைக்குத் திரும்பி சாஷா ப‌டித்து முடித்து டாக்டாராவ‌து மாதிரி, இஞ்சினிய‌ராவ‌து மாதிரி எல்லாம் க‌ன‌வு காணுவாள்.

அவ‌ன் பெரிய‌ வீடு, குதிரைவ‌ண்டிக‌ள் வைத்திருப்பானாம். திரும‌ண‌மாகிக் குழந்தைக‌ள் இருக்குமாம். ஒவ்வொரு நாளும் இதே மாதிரிக் க‌ன‌வுக‌ளுட‌ன் அவ‌ள் தூங்கிப் போவாள். அவ‌ள் தூங்கிய‌ பின்பும் அவ‌ள் க‌ண்க‌ள் நிறைந்து க‌ண்ணீர் அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளை ந‌னைத்த‌வாறிருக்கும்.

அவ‌ள‌து பூனை ம‌ட்டும் அவ‌ள‌ருகில் அம‌ர்ந்திருக்கும் "மியாவ்..." என்று மெல்லக் க‌த்திய‌படி.

திடீரென்று யாரோ க‌தவைத் த‌ட்டும் ச‌த்த‌ம் கேட்கும். ஒலென்கா ப‌ட‌ப‌ட‌க்கும் இத‌ய‌த்துட‌ன் எழுந்திருப்பாள். அரை நிமிட‌ம் க‌ழித்து மீண்டும் கேட்கும்.

'ஹார்கோவ்ல‌ருந்து த‌ந்தி வ‌ந்திருக்கும்" த‌லை முத‌ல் கால் வ‌ரை ந‌டுங்கிய‌ப‌டி எண்ண‌மிடுவாள். "சாஷாவோட‌ அம்மா அவ‌னைக் கூப்பிட்ட்ட‌னுப்பி இருப்பாங்க‌..அய்யோ அப்படி இருக்கக் கூடாது, க‌ட‌வுளே இர‌க்க‌ம் காட்டு!"

உட‌லெல்லாம் சில்லிட்டுப் போக‌ உல‌கிலேயே துய‌ர‌ம் தோய்ந்த பெண் தான்தான் என்று அவளுக்கு தோன்றும். அடுத்த‌ நிமிட‌ம் சமையற்காரியின் குர‌லிலிருந்து புரிந்து கொள்வாள். ம‌ருத்துவ‌ர் தான் சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பி வ‌ருவ‌தாக‌.

"ஹ‌ப்பாடா. க‌ட‌வுளுக்கு ந‌ன்றி!"
மெல்ல‌ மெல்ல‌ இத‌ய‌த்தில் ஏறி இருந்த‌ பார‌ம் நீங்கி அமைதிய‌டைவாள். மிண்டும் ப‌டுக்கையில் வீழ்ந்து சாஷாவின் எதிர்கால‌த்தைப் ப‌ற்றிய‌ க‌ற்ப‌னையில் மூழ்கி விடுவாள். அவ‌னோ சில‌ ச‌ம‌ய‌ம் தூக்க‌த்தில் உள‌றுவ‌தைக் கேட்க‌லாம்.

"நல்லா குடுப்பேன் உன‌க்கு. எட்டிப் போ என்கிட்டேந்து... வாயை மூடு."

பின் குறிப்பு: ருஷ்ய எழுத்தாளர் ஆன்ட‌ன் செகாவ் எழுதிய‌ The Darling என்ற‌ சிறுக‌தையின் த‌மிழாக்க‌ம். (ஆங்கில‌த்திலிருந்து)

Monday, March 22, 2010

ஒரு அரசாங்க குமாஸ்தாவின் மரணம்

ஓர் இனிமையான மாலைப் பொழுதில், ஐவன் திமித்ரி என்ற அரசாங்க குமாஸ்தா தனது ஓபரா கண்ணாடியின் வழியாக "க்லாசஸ் த கார்ன்வில்" மேடை நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்தார். நாடகத்துடன் ஒன்றி ஒருவித மனோலயத்தில் திளைத்திருந்தார்.

திடீரென்று... - இந்தத் "திடீரென்று" என்ற சொல் கதைகளில் நிறைய வருகின்றன. ஆனால் அதிலொன்றும் வியப்போ மிகைப் படுத்தலோ இல்லை. வாழ்க்கை என்பதே திடீர் திருப்பங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது தானே!

அதைப் போல் திடீரென்று ஐவனின் முகம் சுழித்தது. கண்கள் செருகின...மூச்சு ஒரு கணத்துக்கு நின்றது; கண்ணாடிகளைக் கழற்றி விட்டுக் குனிந்து.. "ஹச்சூ" என்று தும்மினார். தும்முவதை யாரும் எப்போதும் குறை சொல்ல முடியாது. அரசன் ஆண்டி என்று பேதம் பார்க்காமல் வரும் விஷயம் அது. அதனால் ஐவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு, நல்லியல்புள்ள ஒருவனைப் போல், யாரையாவது சங்கடப்படுத்தி விட்டோமா என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.

அப்போது தான் அந்தக் காட்சியைக் கண்டார். அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த வயதான கனவான் ஒருவர் தன்க்குள் ஏதோ முனகியவாறே, தனது கையுறையினால் த‌ன‌து வ‌ழுக்கைத் த‌லையையும் பின்ன‌ங்க‌ழுத்தையும் துடைத்துக் கொண்டிருந்தார்.

அவ‌ர் வேறு யாருமல்ல‌, போக்குவ‌ர‌த்துத் துறையைச் சேர்ந்த‌ உய‌ர் அதிகாரி ப்ரிஜலோவ் என்ப‌தைக் க‌ண்டு கொண்டார் ஐவ‌ன்.

'அடடா இவ‌ர் மேல‌ துப்பிட்டோமே! இவ‌ர் ஒண்ணும் என் பாஸ் இல்ல‌.. இருந்தாலும் ச‌ங்க‌ட‌மா இருக்கு..ம‌ன்னிப்புக் கேட்க‌ணும்' என்று நினைத்துக் கொண்டார்.

லேசாக‌ச் செருமிக் கொண்டு த‌ன் முழு உட‌லையும் முன்னால் வ‌ளைத்து அந்த‌ அதிகாரியின் காத‌ருகே குனிந்தார் ஐவ‌ன்.

"ம‌ன்னிக்க‌ணும் ஸார். உங்க‌மேல‌ த‌வ‌றுத‌லா தும்மிட்டேன்"

"ப‌ர‌வால்ல‌, ப‌ர‌வால்ல...."

"க‌ட‌வுள் பேரால‌ என்னை ம‌ன்னிச்சுடுங்க‌. நான் வேணும்னு ப‌ண்ண‌ல‌."

"அட‌, பேசாம‌ உட்காருய்யா! நாட‌க‌த்தைக் கவ‌னிக்க‌ விடு."

ஐவ‌னுக்கு த‌ர்ம‌ச‌ங்க‌டமாகிப் போன‌து. அச‌ட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு நாட‌க‌த்தைப் பார்க்க‌லானார். ஆனால் அவர் ம‌ன‌ம் அதில் முன் போல் லயிக்க‌வில்லை. ந‌ட‌ந்த‌தையே நினைத்துச் ச‌ங்க‌ட‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தார்.

இடைவேளையின் போது ப்ரிஜலோவின் அருகே சென்றார். மிகவும் கஷ்டப்பட்டுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முணுமுணுத்தார்:

"உங்க‌ மேல தெரியாமத் துப்பிட்டேன், பெரியவங்க நீங்க, என்னை ம‌ன்னிச்சுடுங்க‌... நான் வேணும்னே செய்ய‌ல‌ பாருங்க‌..."


"ஐயோ! போதும்! நான் அதை மறந்தே போயிட்டேன். நீ ஏன் அதையே பேசிக்கிட்டு? " - பொறுமையிழந்து கத்தியதில் அவர‌து கீழ் உத‌டு துடித்த‌து.

'அவ‌ர் ம‌ற‌ந்திருக்க‌லாம், ஆனா அவ‌ர் க‌ண்ணுல‌ கோப‌ம் இன்னும் தெரியுது' என்று ம‌ன‌ம் ச‌மாதான‌மாகாம‌ல் அவ‌ரையே பார்த்தார் ஐவன். 'அவ‌ருக்கு என்னோட‌ பேச‌வே பிடிக்க‌ல‌. நான் வேணும்னே பண்ணல, இயல்பா தும்மல் வந்துடுச்சுன்னு அவ‌ருக்குப் புரிய‌வெச்சாக‌ணும். இல்லாட்டி இப்ப‌ இல்லான்னாலும் நாளைக்கு என் மேல‌ அவ‌ருக்குத் த‌ப்பெண்ண‌ம் வ‌ர‌லாம்!'

வீட்டுக்குப் போன‌தும் ம‌னைவியிட‌ம் த‌ன்னுடைய‌ ம‌ரியாதை கெட்ட‌ ந‌ட‌த்தையைப் ப‌ற்றிச் சொன்னார். அவ‌ர் ம‌னைவி அதைப் பெரிதாக‌ எடுத்துக்கொள்ளாத‌து அவ‌ருக்கு விய‌ப்பாக‌ இருந்த‌து. முத‌லில் ச‌ற்றுப் ப‌ய‌ந்தாலும் ப்ரிஜ‌லோவ் வேறு இலாகாவைச் சேர்ந்த‌வ‌ர் என்று அறிந்த‌தும் அவ‌ருக்குக் கொஞ்ச‌ம் தைரிய‌மாக‌ இருந்த‌து. இருந்தாலும் அவ‌ர் ஐவ‌னிட‌ம் சொன்னார், "நீ எதுக்கும் போய் ம‌ன்னிப்புக் கேட்டுடு. இல்லாட்டிப் பொது இட‌த்தில‌ எப்ப‌டி ந‌ட‌ந்துக்க‌ணும்னு கூட‌த் தெரியாத‌வ‌ர்னு உன்னை நென‌ச்சிட‌ப் போறார்."

"அதே தான். அதுக்காக‌த் தான் நான் உட‌னே ம‌ன்னிப்புக் கேட்டேனே. ஆனா அவ‌ர் அதைச் ச‌ரியா எடுத்துக்கிட்ட‌ மாதிரி தெரிய‌ல. ஒழுங்காப் பேச‌ அங்க‌ நேர‌மும் கிடைக்க‌ல‌."

ம‌றுநாள், புத்த‌ம்புதிய‌ சீருடை அணிந்து கொண்டு, த‌லைமுடியைச் சீராக‌ வெட்டிவிட்டுக் கொண்டு, ப்ரிஜ‌லோவிட‌ம் ம‌ன்னிப்புக் கேட்க‌ச் சென்றார் ஐவன். அவ‌ர‌து அலுவ‌ல‌க‌ வாயிலில் எண்ண‌ற்ற‌ பேர் ம‌னுக்க‌ளோடு காத்திருந்த‌ன‌ர். ஒவ்வொருவ‌ராக‌ விசாரித்துக் கொண்டு வ‌ந்த‌ ப்ரிஜ‌லோவ் ஐவனை ஏறிட்ட‌ போது, "அது வந்து ஸார்...நேத்திக்கு நாட‌க‌த்துல‌, ஞாப‌க‌மிருக்கா ஸார்? வ‌ந்து...நான் திடீர்னு தும்மி... "

"நான்சென்ஸ்! என்ன‌ பைத்திய‌க்கார‌த்த‌ன‌ம் இது...அடுத்த‌து யாருப்பா?" என்று ஐவ‌னுக்கு அடுத்த‌ ம‌னுதார‌ரை அழைத்தார் ப்ரிஜ‌லோவ்.

புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ராய்த் திரும்பிய‌ ஐவ‌ன், "அவ‌ர் என் கூட‌ பேச‌வே மாட்டேங்குறாரு. அப்ப‌டின்னா எவ்வ‌ளோ கோவ‌மா இருப்பாரு? இல்ல.. இதை இப்ப‌டியே விட‌க்கூடாது. நான் அவ‌ர் கிட்டெ பேசியே ஆக‌ணும்."

க‌டைசி ஆளையும் பார்த்து அனுப்பிவிட்டு உள்ளே போக‌ ய‌த்த‌னித்த‌ ப்ரிஜ‌லோவின் அருகே மீண்டும் சென்று குள‌றினார் ஐவன்:

"யுவ‌ர் எக்ஸ‌லென்ஸி, உங்க‌ளைத் தொந்த‌ர‌வு செய்றேன்னா அதுக்கு என் குற்ற‌வுண‌ர்ச்சி தான் கார‌ண‌ம். நான் வேணும்னு செய்ய‌ல‌ன்னு ம‌ட்டும்
த‌ய‌வு செஞ்சு ந‌ம்புங்க‌.."

"ஏன்யா என்னைக் கிண்ட‌ல் ப‌ண்றியா?" என்று கர்ஜித்து விட்டுக் க‌த‌வைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார் அந்த‌ அதிகாரி.


'அய்யோ நான் எங்க‌ கிண்ட‌ல் ப‌ண்ணேன்? இவ்ளோ பெரிய‌ அதிகாரியா இருந்துக்கிட்டு இந்த‌ச் சின்ன‌ விஷ‌ய‌த்தைப் புரிஞ்சுக்க‌ மாட்டேங்க‌றாரே? ச‌ரி இவ‌ர் இப்ப‌டி நினைச்சார்னா நான் அவ‌ர்கிட்ட‌ இனிமே போய் ம‌ன்னிப்புக் கேட்க‌ மாட்டேன். ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதி அனுப்பிட‌றேன். நேர்ல‌ இனிமே போய்ப் பேச‌ வேணாம்' என்று எண்ண‌மிட்ட‌ப‌டி வீடு நோக்கி ந‌ட‌ந்தார் ஐவ‌ன்.

வீட்டுக்குப் போய் ரொம்ப‌ நேர‌ம் யோசித்துப் பார்த்தார். அவ‌ரால் க‌டித‌ம் எழுத‌ முடிய‌வில்லை. ம‌றுநாளும் நேரிலேயே போய் ம‌ன்னிப்புக் கோருவ‌து என்று முடிவு செய்தார்.

அதிகாரி அவ‌ரைப் பார்த‌த‌தும், "உங்க‌ளை நேத்திக்குத் தொந்த‌ர‌வு செஞ்சுட்டேன். ஆனா நீங்க‌ சொன்ன‌ மாதிரி உங்க‌ளைக் கிண்ட‌ல் ப‌ண்ண‌ல‌ ஸார். உங்க‌ மேல‌ த‌வ‌றுத‌லா துப்பிட்ட‌துக்கு ம‌ன்னிப்புக் கேட்க‌த் தான் வ‌ந்தேன். உங்க‌ளைக் கிண்ட‌ல் ப‌ண்ண‌னும்னு க‌ன‌வுல‌ கூட‌ நினைக்க‌ மாட்டேன் ஸார்!"


"போய்யா இங்கேர்ந்து" க‌டும் கோப‌த்துட‌ன் க‌த்தினார் அதிகாரி ப்ரிஜ‌லோவ்.


"என்ன‌ ஸார்?" ப‌ய‌த்தில் ந‌டுங்கிய‌ப‌டியே கேட்டார் ஐவ‌ன்

"வெளிய‌ போய்யா " எழுந்து நின்று முக‌ம் சிவ‌க்க‌க் க‌த்தினார் அதிகாரி.

ஐவ‌னுக்கு வ‌யிற்றை என்ன‌மோ செய்த‌து. பிர‌க்ஞைய‌ற்று வாச‌ல் வ‌ழியே வெளியேறிய‌வ‌ர், தெருவில் இற‌ங்கித் த‌ள்ளாடி ந‌ட‌ந்தார். இய‌ந்திர‌க‌தியில் வீட்டை அடைந்த‌வ‌ர், உடையைக் கூட‌ மாற்றாம‌ல் சோஃபாவில் ச‌ரிந்து இறந்து போனார்.

Disclaimer: புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர் ஆன்ட‌ன் செக்கோவ் எழுதிய‌ "Death of a government clerk" என்ற‌ சிறுகதையின் தமிழாக்கம்(ஆங்கிலத்திலிருந்து).