Tuesday, February 2, 2010

பொறந்த கதை சொல்லவா!

எனக்கு ஒரு பாட்டி இருந்தார். அப்பாவைப் பெற்ற அம்மா.
எப்போதும் தூய வெள்ளை சேலை தான் உடுத்துவார். நெற்றியில் பட்டையும் கொஞ்சம் உருண்ட உடம்புமாய் அசப்பில் கே.பி சுந்தராம்பாளை நினைவு படுத்துவார்.

அவர் படுத்திருக்கும் கட்டிலில் கூடத் தன் பழைய சேலைகளைக் கொண்டு தைத்த மெத்தையையும் போர்வையையும் தான் போட்டிருப்பார். அவற்றின் மென்மையான ஸ்பரிசமும் மழை நாட்களில் குளிருக்கு இதமாகப் பாட்டியுடன் ஒண்டிக் கொண்டு படுத்திருந்ததும் பசுமையான நினைவுகள்.

மிகவும் கெட்டிக்காரர், சுறுசுறுப்பானவர், தைரியசாலி, சாமர்த்தியக்காரர், ஐம்பது பேருக்கு ஒண்டியாக விருந்து சமைப்பவர், புத்தக விரும்பி என்றெல்லாம் புகழப்பட்டாலும் மகா வாயாடி வம்புச்சண்டைக்காரர் என்ற பட்டப்பெயர்களும் பாட்டிக்கு நிலவின.

எனக்கு நினைவு தெரிந்த போது பாட்டி எங்கள் வீட்டில் தான் இருந்தார். சனி ஞாயிறுகளில் சித்தப்பா வீட்டுக்குச் சென்று வருவார். நான் பிறந்த பிறகு தான் அம்மா சமையலாம். ”அதற்கு முன்பு எங்கே அடுப்படியை எனக்கு விட்டார்” என்று அம்மா அலுத்துக் கொண்டாலும் வேலைக்குப் போகும் அம்மாவுக்குப் பெரும் ஆதரவாகவே இருந்ததாகக் குறிப்பிடுவார்.

பாட்டி நன்றாகப் பாடுவார் என்றாலும் ’பாட்டி என்றால் கதை சொல்லி’ என்று கதைப்புத்தகங்கள் மூலம் புரிந்திருந்த நான் கதை சொல்லும்படி அவரை நச்சரிப்பேன்.

அப்போதெல்லாம் ஒரே ஒரு பாட்டைத் தான் பாடுவார்:

“பொறந்த கதை சொல்லவா
வளந்த கதை சொல்லவா
மதி கெட்ட மன்னனுக்கு மாலையிட்ட கதை சொல்லவா
மதியுள்ள மக்களைப் பெத்த கதை சொல்ல்வா
மதி கெட்ட மக்கள் கிட்ட மாட்டிக்கிட்ட கதை சொல்லவா”

பொதுவாக ’வளந்த கதை’ வரும் போதே ”போ பாட்டி” என்று ஓடி விடுவேன். ஒரு நாள் முழுக்கதையும் கேட்கலாமென்று,
“மதி கெட்ட மன்னனுக்கு... அந்த கதை சொல்லு” என்றேன்.

அவ்வளவு தான். இளம் வயதில் மூன்று பிள்ளைகளுடன் தன்னைத் தவிக்க விட்டு ஓடி விட்ட தாத்தாவைப் பற்றி ஒரு மூச்சு அழுது தீர்த்தார். ஏண்டா கேட்டோமென்று ஆகிவிட்டது எனக்கு. மதியுள்ள மக்கள் யாரென்றால் என் அத்தை, அப்பா, மற்றும் சித்தப்பாவாம்.
அது சரி, ”மதிகெட்ட மக்கள்னியே அது யாரு பாட்டி” என்றால்.
பழிப்பது போல் கையை முன்னே நீட்டி ரகசியமாக, ”ஹூம்.. உன் அம்மாவும் அண்ணனும் தான். என்னைப் பாடாப் படுத்தறாங்களே” என்றார். நான் ஓடிப் போய் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட்டேன். அப்புறம் வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. J

ஆனால் அது ஏதோ சண்டை போட்ட தருணம் போல. உண்மையில் அம்மாவுக்கும் பாட்டிக்கும் பரஸ்பரம் மரியாதையும் அன்பும் இருந்தன.

ஆனால் அண்ணன் இருக்கிறானே. எனக்கு அடுத்தபடி அவனிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் பட்டது பாட்டி தான். அவரது மூக்குக் கண்ணாடியை எடுத்து ஒளித்து வைத்து விடுவான். அதுவும் சரியாக வாரப்பத்திரிகை வீட்டுக்கு வரும் நாளன்று. ”அவனே! இவனே! அதுல போறவனே...இப்படியானவனே..” என்று வாய்க்கு வந்தபடி புலம்பவிட்டுப் பிறகு கொண்டு வந்து தருவான்.

அது மட்டுமல்ல.. பாட்டிக்குத் தான் முதலில் டிபனோ சாப்பாடோ தருவார் அம்மா. என் அண்ணன் எங்கிருந்தாவது வந்து விடுவான்... “ஆஹா, வெட்டு வெட்டுன்னு வெட்றியே” என்பான். ”ஊருக்கு முன்னாடி வந்து உட்காந்துகிட்டுப் பூந்து வெளயாடுற” என்று ஏதாவது சொல்வான். அம்மா எவ்வளவு திட்டினாலும் கேட்கமாட்டான்.

பாட்டிக்கு இவன் விளையாடுவது கொஞ்சமும் பிடிக்காது. திட்டிக் கொண்டே இருப்பார். ஆனாலும் அவன் தான் செல்லம். ஏதாவது வாங்கி வந்தால் முதலில் அவனுக்குத் தான் கொடுப்பார். அது ஏனென்று எனக்கும் அக்காவுக்கும் புரிந்ததே இல்லை.

ஆனால் என்னையும் அக்காவையும் கூடப் பாட்டிக்கு ரொம்பப் பிடிக்கும். அக்கா வேண்டி வேண்டிப் பிறந்த முதல் பெண் என்பதால் மகாலட்சுமி என்றும் வெகு காலம் கழித்துப் பிறந்த (கிட்டத்தட்ட எதிர்பாராமல்!) என்னைப் போனஸ் பிள்ளை என்றும் கொஞ்சுவார்.

பாட்டிக்குப் பிடிக்காத இன்னொன்றைச் செய்வதில் நானும் அண்ணனும் ஒற்றுமையாகக் கூட்டு சேர்ந்து கொள்வோம். அதாவது அவர் தூங்கும் போது முகத்தருகே ஓலை விசிறியால் வேகமாக விசிறுவது. அது தப்பென்றெல்லாம் அந்த வயதில் தெரியவில்லை; இப்போது வெட்கமாக இருக்கிறது. விழித்துக் கொண்டு கத்திக் கூப்பாடு போடுவார். ஆனால் அவர் கத்துபவராக இருந்ததனாலேயே எங்களின் இந்தச் சீண்டல்களுக்கு ஆளானாரோ என்று தோன்றுகிறது.

ஆனால் இச்செயலை நினைத்து நானும் என் அண்ணனும் விக்கி விக்கி அழுத நாளும் வந்தது. பாட்டி இறந்த போது கூடத்தில் அவரைக் கிடத்தி இருந்தனர். அப்போது ஈ, கொசுக்களை விரட்ட அருகே அமர்ந்திருந்த என்னையும் அண்ணனையும் அவ்ர் முகத்தருகே விசிறுமாறு கையில் விசிறியைக் கொடுத்தனர். அதுவரை சோகம் பெரிதாக பாதிக்காத எங்கள் குழந்தை உள்ளங்களுக்கு பீறிட்டு வந்தது அப்படி ஒரு அழுகை. என்னால் மறக்க முடியாத சம்பவம் அது.

16 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:(

\\அவர் படுத்திருக்கும் கட்டிலில் கூடத் தன் பழைய சேலைகளைக் கொண்டு தைத்த மெத்தையையும் போர்வையையும் தான் போட்டிருப்பார். அவற்றின் மென்மையான ஸ்பரிசமும் மழை நாட்களில் குளிருக்கு இதமாகப் பாட்டியுடன் ஒண்டிக் கொண்டு படுத்திருந்ததும் பசுமையான நினைவுகள்.//


பாட்டியானாலே மென்மை தானே.. என் குழந்தைகளும் இன்று மென்மையான பாட்டியின் சேலை மெத்தைகளை பயன்படுத்துவதுண்டு..

Sakthi said...

yethavathu kavithai irutntha sollunga

கிச்சான் said...

என்னைப் போனஸ் பிள்ளை என்றும் கொஞ்சுவார்.

உங்கள் பாட்டிக்கு நகைசுவை உணர்வு அதிகம் !!

"அதாவது அவர் தூங்கும் போது முகத்தருகே ஓலை விசிறியால் வேகமாக விசிறுவது. அது தப்பென்றெல்லாம் அந்த வயதில் தெரியவில்லை; இப்போது வெட்கமாக இருக்கிறது. விழித்துக் கொண்டு கத்திக் கூப்பாடு போடுவார்."

நானும் பாட்டியோடு சண்டை போடுவதில் சளைத்தவன் இல்லை //

"பாட்டி இறந்த போது கூடத்தில் அவரைக் கிடத்தி இருந்தனர். அப்போது ஈ, கொசுக்களை விரட்ட அருகே அமர்ந்திருந்த என்னையும் அண்ணனையும் அவ்ர் முகத்தருகே விசிறுமாறு கையில் விசிறியைக் கொடுத்தனர். அதுவரை சோகம் பெரிதாக பாதிக்காத எங்கள் குழந்தை உள்ளங்களுக்கு பீறிட்டு வந்தது அப்படி ஒரு அழுகை."

சலனமற்ற குளமான மனதில் ....கல்லை எந்துவிட்ட மாதிரி இருக்கிறது .

Romeoboy said...

என்னோட பாட்டி இறந்த சமயத்தில் என்னால் அவருக்கு காரியம் செய்ய முடியாமல் போனதை நினைத்து இப்போது வருத்தபடுகிறேன். :(

நாஸியா said...

எனக்கு என் பூட்டிக்கம்மா (தந்தையின் பாட்டி: எனக்கு கொள்ளுப்பாட்டி) நினைவுக்கு வராங்க.. இறைவனின் அருளால் இன்னும் இருக்காங்க.. என்ன கொஞ்சம் இயலல, இருந்தாலும் அபாரமான ஞ்யாபக சக்தி.. அவங்களையும் அவங்க கணவர் விட்டுட்டு போயிட்டாங்களாம்.. அவங்களும் வெள்ளை சீலை தான் உடுத்துவாங்க.. தலையும் பஞ்சு பொட்டி போல வெள்ளையா இருக்கும்.. :)

அம்பிகா said...

தீபா,
உன் பதிவு, எங்கள் தாத்தாவை, அம்மாவின் அப்பாவை நினைவு படுத்துகிறது. அவங்க கிட்ட இப்படித்தான் நாங்களும் சண்டை போடுவோம்.

பாட்டியின் பாட்டு அருமை.
போனஸ்பிள்ளை:=}}}}

அண்ணாமலையான் said...

டச்சிங்கா எழுதிட்டீங்க....

சந்தனமுல்லை said...

ம்ம்..எல்லோர் வீட்டிலும் ஒரு வெள்ளை புடவை ஆயா இருக்கத்தான் செய்கிறார்கள். எங்க ஆயாவுக்கு வெள்ளைபுடவை டீச்சர் என்றே பெயர்.
ஜாலியா படிச்சுட்டே வந்தேன்...கடைசிலே மனசை கஷ்டப்படுத்திட்டீங்க! :-(

துபாய் ராஜா said...

கலகலப்பாக ஆரம்பித்து முடிவில் கலங்க வைத்துவிட்டீர்கள்.

பா.ராஜாராம் said...

கடைசியில் கலங்க வச்சுட்டீங்களே போனஸ் பிள்ளை.

மாதவராஜ் said...

நம் நினைவுகளைத்தான் நிலவாக பாவித்து, பாட்டி வடை சுடுவதாகச் சொல்லியிருக்கக் கூடும். அற்புதமான, ஈரம் சுரக்கும் நினைவுகள்.

Deepa said...

நன்றி முத்துலெட்சுமி!

நன்றி சக்தியின் மனம்!

நன்றி கிச்சான்!

நன்றி ரோமியோ!
வருந்தாதீர்கள்.

நன்றி நாஸியா!
//பஞ்சு பொட்டி// :))

நன்றி அம்பிகா அக்கா!

நன்றி அண்ணாமலையான்!

நன்றி முல்லை!

நன்றி துபாய்ராஜா!

நன்றி ராஜாராம்!

நன்றி அங்கிள்!

Radhakrishnan said...

அழகிய நினைவுகளை கோர்த்தவிதம் மிகவும் சிறப்பு. எனது பாட்டி எனக்கு நினைவில் இல்லை. ஆனால் எனது பாட்டியை நான் சிறுவயதில் அடித்து விட்டு ஓடிவிடுவேன் என சொல்வார்கள், அதை அவர் மிகவும் ரசிப்பாராம். பாட்டி இல்லையே எனும் குறையை நாமக்கல்லில் நான் சந்தித்த ஒரு பாட்டி அதிகப்படுத்திவிட்டார்கள்.

அமுதா said...

நெகிழ்வாக முடிந்துள்ளது. பாட்டி என்றால் இன்னும் அதிக உரிமை.

/*பொறந்த கதை சொல்லவா
வளந்த கதை சொல்லவா
*/
இப்படி தான் எங்க பாட்டியும் கதை சொல்ல ஆரம்பிப்பாங்க... வாழ்ந்த கதை சொல்லவா தாழ்ந்த கதை சொல்லவானு சேர்த்து அப்புறம் கதை சொல்லுவாங்க... கொஞ்ச கதைகள் தான்... ஆனால் அவங்க சொல்ற அழகுல அப்படியே கதையுலகில் சஞ்சரிப்போம்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

போனஸ் பிள்ளை :-)

நானும் அந்த கேட்டகிரிதான்;)

கடைசியில் :(

எல் கே said...

en appavim amma athiga naal illai(nan 5 vayathaga irukayil iranthu vittargal). ammavoda ammakooda niraya vilayadi iruken