Thursday, July 30, 2009

”நான் உன்னை மாதிரி இருந்தப்போ…”

குழந்தைகளுக்குக் கதை கேட்கப் பிடிக்கும் என்பது நமக்கெல்லாம் தெரிந்ததே. ஆனால் நாம் சின்ன வயதில் செய்த குறும்புகள், அப்போது நடந்தவை இதை எல்லாம் சுவாரசியமாகச் சொன்னால் இன்னும் ரொம்பப் பிடிக்கும்.

நம் சிறு வயதில் நம் வீட்டில் கூட இப்படி நமக்குக் கதைகள் சொல்லி இருப்பார்கள். ”நான் சின்னப் பொண்ணா இருக்கும் போது உங்க பாட்டி...” என்றும், ”உங்க அப்பாவும் உன்னை மாதிரி தான்” என்று தொடங்கி உங்கள் பாட்டிகளும் சொன்ன சுவாரசியமான சம்பவங்களை நீங்கள் மறந்திருக்கவே மாட்டீர்கள்.

என் சிறு வயதில் When Daddy was a little boy என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். அதன் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் ராஸ்கின் தனது ஆறு வயது மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது அவளைக் களிப்படையச் செய்ய தனது குழந்தைப் பருவச் சம்பவங்களை நகைச்சுவையாகக் கூற ஆரம்பித்ததாகவும் அதை அவள் வெகுவாக ரசித்து மகிழ்ந்ததால் அதையே நூல் வடிவில் கொண்டு வந்ததாகவும் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்.

எப்போதும் தங்களையே கவனித்துக் கொண்டு தங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அப்பா அம்மாவும் ஒரு காலத்தில் தங்களைப் போலவே குழந்தைகளாக இருந்திருப்பார்கள்;
குறும்புகள், சண்டைகள், அசட்டுத்தனங்கள் நிரம்பியவர்களாகவும், அதற்காகத் திட்டும் தண்டனைகளும் கூடப் பெற்றிருப்பார்கள் என்பதும் குழந்தைகள் அறிந்து கொள்வது அவர்களுக்குச் சுவாரசியமானது மட்டுமல்ல அவசியமானதும் கூட என்கிறார் திரு. ராஸ்கின்.

ரொட்டி சாப்பிட மறுத்த தன்னை வழிக்குக் கொண்டு வர தனது பாட்டி ஒரு வாரம் ரொட்டியே சாப்பிட வேண்டாம் என்று அறிவித்ததும் எப்படி மகிழ்ந்தார் என்றும் மூன்றாம் நாள் உடல் சோர்ந்து பசி மேலிட ரொட்டியைத் திருடித் தின்றது உட்பட இந்தப் புத்தகத்தில் பல நகைச்சுவையான, சிந்திக்க வைக்கும் விஷயங்கள் உள்ளன.

அதே போல் தன்னைப் பற்றி சொல்ல எதுவும் தோன்றாவிட்டால் பிற அப்பா, அம்மாக்கள், அதாவது தனது நண்பர்கள், குழந்தையின் சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சித்தி, என்று யாரைப் பற்றியும் நல்ல கதைகள் சொல்லலாம்.

ஹாரிபாட்டர் கதையில் ஹாரியின் தலைமை ஆசிரியர் சொல்வார்; ”Old men are guilty if they forget what it was to be young” என்று. அது சத்தியமான வார்த்தை.
எனவே நாமும் நமது குழந்தைப்பருவத்தை நினைவு கூர்ந்து நம் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வோம். அது நிச்சயம் நமக்கும் நம் குழ்ந்தைகளுக்குமான புரிதலையும் பிணைப்பையும் பலப்படுத்தும்.

23 comments:

நாஞ்சில் நாதம் said...

:))

வடுவூர் குமார் said...

என் மகனுக்கும் எங்கள் கதை சொன்னால் மிகவும் பிடிக்கும்,அவ்வப்போது இடைச்செருகலும் இருக்கும்.

சந்தனமுல்லை said...

:-)) நல்லாயிருக்கு தீபா!
உண்மைதான்....இப்போவும் நான் டூப் விட்ட கதையெல்லாம் சொல்வாங்க!!

//”நான் சின்னப் பொண்ணா இருக்கும் போது உங்க பாட்டி...” என்றும், ”உங்க அப்பாவும் உன்னை மாதிரி தான்” //

அவங்க இதையெல்லாம் சொல்லும்போது, மார்க் பத்தி பேச்சு வந்தா நாங்க அதையே திருப்பிச் சொல்வோம் இல்ல!! :-)

Radhakrishnan said...

என்னிடம் ஆர்வமுடன் என்ன செய்தாய் இளம் வயதில் என கேட்கும் என் மகனுக்கு ஆர்வமுடன் நடந்தவைகள் சொல்வதுண்டு. வித்தியாசமான வாழ்க்கையை நான் வாழ்ந்திருப்பதாக அவன் வாழ்ந்து கொண்டிருப்பதாக எனக்கும் அவனுக்கும் தோன்றும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆமாம், இது நல்ல யுத்தி.

கற்பனைக்கு மெனக்கெடாம, நம்ம அனுபவத்தையே சொன்னா நல்லாதான் இருக்கும்.

கலையரசன் said...

நன்று.. நாங்களும் முயற்சிக்கிறோம்!!

தினேஷ் said...

ரொம்ப சந்தோசம் உங்க பதிவ பார்த்து ..

என் பாட்டி என்னிடம் என் அம்மா அப்பாவை(அம்மா அப்பா இருவரும் உறவினர்கள் அதனால் ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள்) பற்றி அவர்கள் சிறிய வயதில் செய்த சேட்டை நான் வளரும்போது என் அப்பா அம்மாவும் என் பாட்டியின் கதை சொல்வதில் வளருவார்கள்..

இன்று என் பாட்டி என்கூட இல்லை ,, இருந்தும் அவர் சொன்ன கதைகள் , அவர் தலை மடியில் என் உறக்கம் ,
அவரின் பாசம் என்றும் நீங்காமல் என் நெஞ்சில்..

துபாய் ராஜா said...

//ஹாரிபாட்டர் கதையில் ஹாரியின் தலைமை ஆசிரியர் சொல்வார்; ”Old men are guilty if they forget what it was to be young” என்று. அது சத்தியமான வார்த்தை.
எனவே நாமும் நமது குழந்தைப்பருவத்தை நினைவு கூர்ந்து நம் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வோம். அது நிச்சயம் நமக்கும் நம் குழ்ந்தைகளுக்குமான புரிதலையும் பிணைப்பையும் பலப்படுத்தும். //

நல்லதொரு பதிவு.வாழ்த்துக்கள்.

கே.என்.சிவராமன் said...

தீபா,

ரொம்ப அழகா, அழுத்தமா, ஒரு விஷயத்தை சொல்லாம சொல்லியிருக்கீங்க.

பதிவுகள்ல எழுதற நாம உட்பட எல்லாருமே எழுத்தாளர்கள்தான். ஆனா, யாருமே கதை சொல்லி(ஸ்டோரி டெல்லர்)யா இல்ல. இது அடுத்து வர்ற தலைமுறைய பெருமளவு பாதிக்கும்.

நாம உதாரணமா சொல்ற எல்லா ஆளுமைகளுக்கும் சின்ன வயசுல கதை சொல்லிகள் இருந்திருக்காங்க. அதனாலதான் அவங்களால கற்பனைல சிறகடிச்சு பறக்கவும் முடிஞ்சுது. சாதிக்கவும் முடிஞ்சுது. அது தொடரணும்.

நீங்களே ஆரம்பிச்சு வைங்களேன்? உங்களால அது முடியும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Anonymous said...

:))

மணிஜி said...

நாஞ்சில் நாதத்துக்கு சிரிச்ச முகம்தான்..ஒத்துக்கிறேன்..எங்க,எப்ப பார்த்தாலும் சிரிச்சுகிட்டே இருக்கான்யா மனுஷன்..(ஒரு வேளை டைப்பிங் தெரியாதோ)

Deepa said...

நன்றி நாஞ்சில் நாதம்
நன்றி வடுவூர் குமார்
நன்றி முல்லை
நன்றி இராதாகிருஷ்ணன்
நன்றி அமித்து அம்மா
நன்றி கலையரசன்
நன்றி சூரியன்
நன்றி துபாய் ராஜா
நன்றி பைத்தியக்காரன்
நன்றி மயில்
நன்றி தண்டோரா

Anonymous said...

உங்கள் பதிவைப் படித்ததும்

//
Sometimes in our attempt to give children what we did not have,

we forget to give our children what we did have.
//

என்ற வரிகள் ஞாபகம் வருகிறது.

அன்புடன் அருணா said...

அட! இது அடிக்கடி நான் சொல்வதுண்டே!

மாதவராஜ் said...

முக்கியமான விஷயத்தைச் சொல்கிறது இந்தப் பதிவு. குழந்தைகளிடம் சொல்வதற்கு நம்மிடம் நிறைய நிறைய இருக்கின்றன. அவர்களது கைபிடித்து அழைத்துச் செல்ல ஆயிரமாயிரம் கதைகள் இருக்கின்றன. ஆனால் எதுவுமில்லாததாய் நாம் பல நேரங்களில் விழிக்கிறோம். நாமே அவர்களுக்கு ஒரு கதைதான் என்பது நமக்குப் புரியாமலேயே இருக்கிறோம்.

நிறைய யோசிக்க வைக்கிறது இந்தப் பதிவு. நன்றி தீபா!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நீங்கள் சொல்வது மிகவும் உண்மையே.. நானும் எனது பாட்டி சொல்வதை எல்லாம் மிகவும் ரசித்துள்ளேன்.. நினைவிலும் உள்ளது.. :))

கிறுக்கன் said...

வடகரை வேலன் quote repeateeey.

நீ காணாததை உன்பிள்ளைக் காண
நீ கண்டதை காணாதாக்காதே.

-
கிறுக்கன்

rapp said...

கலக்கலா இருக்கு தீபா:):):)

Deepa said...

நன்றி வடகரைவேலன்
நன்றி அன்புடன் அருணா
நன்றி அங்கிள்
நன்றி செந்தில்வேலன்
நன்றி கிறுக்கன்
நன்றி ராப்

விக்னேஷ்வரி said...

மிக அழகான பதிவு தீபா.

யாத்ரா said...

\\நமது குழந்தைப்பருவத்தை நினைவு கூர்ந்து நம் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்வோம். அது நிச்சயம் நமக்கும் நம் குழ்ந்தைகளுக்குமான புரிதலையும் பிணைப்பையும் பலப்படுத்தும்.\\

மிகச்சரி.நல்ல பகிர்வு.

"உழவன்" "Uzhavan" said...

கதைகளின் மூலம்தான் பல நீதிகளை குழந்தைகளுக்கு ஊட்டியிருக்கிறார்கள். கதைகளைத் தேர்ந்தெடுத்தல் முக்கியமான ஒன்று.

ப்ரியா said...

எனக்கும் இந்த அனுபவம் உண்டு.. "எங்கப்பாவும் என்கிட்டே அடிக்கடி நானெல்லாம் உன் வயசில படிக்கும் போது" என்று புருடா விடுவார்..... நல்ல பதிவு...