Sunday, July 19, 2009

பொம்மன், திம்மன், வம்பன் - குழந்தைகளுக்கு ஒரு கதை

ரத்னபாலா மணிப்பாப்பா என்ற இரு சிறுவர் இதழ்கள் நினைவிருக்கிறதா? அவற்றை வாசித்த எவருக்கும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடாது. செல்லம் அவர்களின் அழகு ஓவியங்களும், வண்ணப் படங்களும், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் கதைகளுமாகக் குழந்தை இலக்கியத்தின் பொக்கிஷமாகத் திகழந்தவை அவை.

இதன் ஆசிரியரான முல்லை தங்கராசன் என்ற மிகச்சிறந்த குழந்தை எழுத்தாளரின் திடீர் மரணத்தால் அவ்விதழ்கள் வருவதும் நின்று போயின.

இது தமிழ்க் குழந்தை இலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகி விட்டது என்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறேன்.

ஏனென்றால் என் அக்காவும் அண்ணனும் படித்துச் சேர்த்து வைத்த இதழ்களைத் தான் நான் படித்திருக்கிறேன். இப்போதெல்லாம் ஏன் அந்த இதழ் வருவதில்லை என்று கேட்ட போது அதன் ஆசிரியர் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். ரத்னபாலா இனிமேல் வரவே வராது என்பது ஒரு தனிப்பட்ட சோகமாக எங்களுக்கு இருந்தது.

முட்டாள் பட்டணம், மதியூகி மாப்பிள்ளை, ஜாம் ஜிம் ஜாக் போன்ற எண்ணற்ற கதைகளும் சித்திரக்கதைகளும் தாங்கிக் கனவுலகம் போல் வலம் வந்த அந்த இதழுக்கு ஈடாக வேறெதையுமே சொல்ல முடியாது.

குழந்தை இலக்கியமென்றால் நீதிக் கதைகள் இருந்தே ஆகவேண்டுமென்ற நியதி எல்லாம் இல்லாமல் பெரியவர்களும் ரசிக்கும் வண்ணம் அலாதியான நகைச்சுவைக் கதைகள் இடம்பெற்றிருந்தன.


எனக்கு நினைவில் நிற்கும் கதை ஒன்றை குட்டீஸ்களுக்கும் அவர்களுக்குக் கதை சொல்லும் பெற்றோருக்காகவும் தருகிறேன். இது ரத்னபாலாவில் வந்தது. எழுதியது யாரென்று உறுதியாகத் தெரியவில்லை.

மூலக்கதை இதைப்போல் பதின்மடங்கு சுவாரசியாமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். என் நினைவில் நின்ற வரை மீட்டெடுத்திருக்கிறேன்.

பொம்மன் திம்மன் வம்பன்

ஒரு ஊரில் பொம்மன், திம்மன், வம்பன் என்று மூன்று சகோதரர்கள் தங்கள் வயதான தாய் தந்தையுடன் வசித்து வந்தனர். அப்போது அவர்கள் ஊரில் திடீரென்று புயல் மழை பெய்தது. பயிர்களெல்லாம் நாசமாகிக் கடும் பஞ்சம் ஏற்பட்டது.

அப்போது பொம்மன் சொன்னான். “அப்பா, நீங்கள் பயிரிட்டதெல்லாம் நாசமாகி விட்டதே என்று வருந்தாதீர்கள். நான் பக்கத்து ஊருக்குச் சென்று ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன்.”

அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு பொம்மன் அண்டை ஊருக்குக் கால் நடையாகவே சென்று அடைந்தான். அந்த ஊரின் பண்ணையாரிடம் போய் வேலை ஏதாவது தருமாறு கேட்டான்.

அந்த ஊர்ப் பண்ணையாரோ மகாக் கஞ்சப் பேர்வழி. ஈவிரக்கம் இல்லாதவர். அவர் பொம்மனைப் பார்த்துச் சொன்னார்.

”தம்பி, உனக்கு தாராளமாக என் பண்ணையில் வேலை தருகிறேன். வேலை முடிந்ததும் சம்பளமும் சாப்பாடும் தருவேன்.
ஆனால் நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.”

“என்ன ஐயா அது?”

“எக்காரணம் கொண்டும் நீ என்னிடம் கோபம் கொள்ளக் கூடாது. நானும் உன்னிடம் கோபித்துக் கொள்ள் மாட்டேன். மீறி நீ என்னிடம் கோபம் கொண்டால் உன்னை வேலையை விட்டு நீக்கி விடுவேன். கூலி எதுவும் தரவும் மாட்டேன்.” என்றார்.

“நீங்கள் என்னிடம் கோபித்தால்” பொம்மன் கேட்டான்.

“அப்போது நான் உனக்கு இருபதாயிரம் ரூபாய் தருவேன்”

பொம்மனுக்கு இந்த நிபந்தனை நியாயமாகத் தோன்றியது. மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். உடனே தோட்டத்துக்குச் சென்று வேலை செய்யலானான்.

கடும் உழைப்பாளியான பொம்மன் உற்சாகமாக வேலை செய்தான். நாளெல்லாம் தோட்டத்தைச் சுத்தம் செய்தான், பாத்தி வெட்டிச் செடிகள் நட்டான், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான்.
மாலையில் மிகவும் களைத்துப் போனான். பயங்கரமாகப் பசி எடுத்தது. பண்ணையாரிடம் சென்று வேலை முடிந்தது என்று கூறிப் பசிக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்தினான்.

பண்ணையார் மலர்ந்த முகத்துடன் அவனைத் தன் பின்னால் வரும்படி அழைத்தார். தோட்டத்தின் மூலையில் ஒரு அறிவிப்புப் பலகை சாத்தி வைக்கப்பட்டிருந்தது. புன்னகையுடன் அதைச் சுட்டிக் காட்டினார். அதில்,

“பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுக்கு நாளை சம்பளமும் சாப்பாடும் கிடைக்கும்”

பொம்மனுக்குக் கோபமாக வந்தது. ஒப்பந்தத்தை எண்ணி ஒன்றும் பேசாமல் திரும்பினான். கஷ்டப்பட்டுப் பசியை அடக்கிக் கொண்டு உறங்கிப் போனான்.

மறு நாள் அதிகாலையிலேயே எழுந்து விரைவாக வேலைகளை முடித்துவிட்டு பண்ணையாரிடம் சென்று ஊதியம் கேட்டான்.
பண்ணையார் மறுபடியும் சிரித்துக் கொண்டே அதே அறிவிப்பினைக் காட்டினார்.

பொம்மன் அமைதியாகக் கேட்டான், “என்ன ஐயா இது, நேற்று தான் நாளை தருவதாகச் சொன்னீர்களே?”

அதற்குப் பண்ணையார் சொன்னார், “ஆமாம், நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு எல்லாம் என்னிடம் கிடையாது. எப்போதும் ஒரே பேச்சுத் தான்” என்று சிரித்தார்.

பொம்மனுக்குக் கோபம் பீறிட்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்.

மூன்றாம் நாள் வேலை முடிந்ததும் பண்ணையாரிடம் சென்றான். அன்றும் அவர் அதே பலகையைக் காட்டியதும் பொம்மனால் பொறுக்க முடியவில்லை.

“யோவ், என்ன ஆள் ஐயா நீர்? முதுகொடிய வேலை செய்பவனை இப்படி ஏமாற்றுகிறீர்? நீர் மனிதன் தானா?” என்று ஆத்திரம் தீரக் கத்தினான்.

நயவஞ்சகமான அந்தப் பண்ணையாரோ முகத்தில் புன்னகை மாறாமல், “அடடா, தம்பி பொம்மா, ஒப்பந்தத்தை மீறி விட்டாயே. என்னிடம் கோபித்துக் கொண்டு கத்தி விட்டாயே. நீ போகலாம்“ என்றார்.

அவமானமும் கோபமும் தாங்காமல், பொம்மன் ஊர் திரும்பினான். வீட்டுக்கு வந்து பெற்றோரிடமும் தம்பியரிடமும் தனக்கு நேர்ந்த அநியாயத்தைச் சொன்னான்.

அடுத்த சகோதரனான திம்மன் தான் அப்பண்ணையாரிடம் சென்று நியாயம் கேட்பதாகக் கூறிச் சென்றான். அவனையும் பண்ணையார் இதே போல ஏமாற்றி அனுப்பி விட்டார்.

இறுதியாகக் கடைக்குட்டி வம்பன் சொன்னான். “அண்ணன்மார்களே, நான் போகிறேன் அந்தப் பண்ணையாரிடம் வேலை செய்ய. அவரை என்ன செய்கிறேன் பாருங்கள்”

”அடேய் வம்பா, நீ சின்னவன். உன்னால் சும்மாவே பசி தாங்க முடியாது. வேலையும் எப்படியடா செய்வாய்? வேண்டாமடா” என்றனர் பொம்மனும் திம்மனும்.

வம்பன் அவர்களைக் கவலைப்படவேண்டாம் என்று கூறிப் புறப்பட்டான். துணைக்குத் தன் செல்ல நாயையும் அழைத்துச் சென்றான்.

பண்ணையார் வம்பனுக்கும் அதே நிபந்தனைகளைக் கூறி வேலைக்கமர்த்திக் கொண்டார்.

முதல் நாள் மாலை வேலை நேரம் முடிந்ததும் வம்பன் தன்னிடம் வருவான் என்று எதிர்பார்த்தார். அவன் வரவில்லை. அப்படியே மூன்று நாட்கள் கழிந்தன. வம்பன் அவரைப் பார்த்தால் முகம்மலர்ந்து வணங்குவதும் உற்சாகமாக வளைய வருவதுமாக இருந்தானே தவிர ஊதியமும் கேட்கவில்லை, சாப்பாடும் கேட்கவில்லை.”

அவனிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்தார். அவனைத் தேடிச் சென்ற போது தோட்டத்தில் மல்லாந்து படுத்துச் சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் வம்பன்.

“வம்பா, நீ எப்படி இத்தனை நாட்களாக ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறாய்?

பெரிதாகச் சிரித்த வம்பன், “நானா? சாப்பிடவில்லையா? நல்ல வேடிக்கை போங்கள், என்னால் ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருக்க முடியாது. மூன்று வேளையும் செட்டியார் கடையில்
மூக்குப் பிடிக்கச் சாப்பிடுகிறேனே. என் அம்மா கைப்பக்குவம் அவருக்கு அப்ப்டியே இருக்கிறது.”
“காசு...” என்று பண்ணையார் இழுக்க,

“இதோ நம் பண்ணையிலிருந்து தான் நெல் மூட்டைகளைக் கொடுத்துப் பதிலுக்குச் சாப்பாடு வாங்கிக் கொள்கிறேன். என் நாய்க்குக் கூடக் கஞ்சி ஊற்றாமல் சுடு சாதம் போடுகிறார். பாருங்கள் எப்படி வாலாட்டுகிறதென்று.” சொல்லிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டு குஷாலாகப் பாட ஆரம்பித்தான்.

பண்ணையாருக்குக் கோபத்தில் மீசை துடித்தது. சின்னப் பயல் எவ்வளவு சாதுர்யமாக நம்மை ஏமாற்றி இருக்கிறான் என்று கறுவினார். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோபப்பட்டால் இருபதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமே.

பொறுத்திருந்து தான் யோசிக்க வேண்டும் என்று திரும்பி விட்டார்.

மறு நாள் வம்பன் அவரிடம் வந்தான். “எசமான், பூங்குளம் ஊரில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டிகட்டிக் கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தான்.

பண்ணையாரும் பேராசைப்பட்டு அவனுடன் போகச் சம்மதித்தார். வம்பன் தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினான். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “டேய் மெதுவாடா மெதுவாடா”, என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.

பொழுது சாய்ந்து விட்டது. அவர்கள் கடந்து சென்ற சாலை ஓரமாக ஒரு சேற்றுக் குட்டை தென்பட்டது. அதனுள் பன்றிகள் விளையாடித் திளைத்துக் கொண்டிருந்தன.

சடக்கென்று வண்டியைச் சாய்த்தான் வம்பன்; பண்ணையார் ’தொபுக்கடீர்’ என்று குட்டையில் விழுந்தார். அவர் உடலெல்லாம் சேறு படிந்தது. அருகில் ஒரு பன்றி வேறு அவரை நோக்கி உறுமிக் கொண்டே கடிக்க வந்தது.

அவ்வளவு தான். கோபம் பொத்துக் கொண்டு, வம்பனைப் பார்த்துக் கண்டபடி ஏச ஆரம்பித்தார் பண்ணையார்.

சாலை மேலே நின்று கொண்டிருந்த வம்பன் புன்முறுவலுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான். பின் சொன்னான்.

“எசமான், ஒப்பந்தத்தை மீறிட்டீங்களே? கோபப்பட்டு என்னைத் திட்டிட்டீங்களே? எடுங்கள் ரூபாய் இருபதாயிரம்.” என்றான்.

“அதெல்லாம் ஒண்ணும் முடியாது போடா” என்றார் பண்ணையார்.

“அப்படியா. அப்போ இந்தச் சேத்துக் குட்டையிலேயே கிடங்க. இரவாகிவிட்டது, காலையில் யாராவது வந்து கை தூக்கி விடற வரைக்கும் இந்தப் பன்றிகளுடன் விளையாடிக் கொண்டிருங்கள்” என்று சிரித்தான்.

“சரி தர்றேன், கை தூக்கி விடுடா”

“ஹீம். இந்தக் கையில் பணம், இந்தக் கையால் தூக்கி விடுவேன்!” என்று கை நீட்டினான்.

வேறு வழியின்றி முனகியபடியே பணத்தை எடுத்து வம்பனிடம் கொடுத்தார் பண்ணையார்.

அவரைக் கைதூக்கி விட்டபின், வெற்றிக் களிப்புடன் பணத்துடன் தன் சொந்த ஊரை நோக்கி நடந்தான் வம்பன். அவனது செல்ல நாய் உற்சாகத்துடன் குரைத்தபடி அவனைப் பின்தொடர்ந்தது.
***************

முல்லை தங்கராசன் அவர்கள் தனியாகக் கதைகள் எழுதியும் நூல்கள் வெளியிட்டதாக ஞாபகம். அவை பற்றியும், பழைய ரத்னபாலா இதழ்கள் எங்கு கிடைக்கும் என்பது பற்றியும் யாருக்காவது தகவல் தெரிந்தால் தயவு செய்து வெளியிடவும்.

கன்னிமாரா நூலகத்தில் தேடிய போது கிடைக்கவில்லை. ரத்னபாலா பழைய இதழ்களும் அவர்களிடம் இல்லையாம்.


ஒரு பழைய மணிப்பாப்பா இதழுக்குச் சுட்டி இதோ!:
http://www.tamilcc.org/thamizham/ebooks/7/655/TM655.pdf

Labels: , , ,

33 Comments:

At July 19, 2009 at 11:26 PM , Blogger த.அகிலன் said...

ரத்னபாலா நின்றுபோனதில் எனக்கும் பயங்கரமான வருத்தம் உண்டு. இலங்கையில் இருந்துகொண்டே நான் அதைப்படித்திருக்கிறேன்.. அம்புலிமாமா.. கோகுலம்,ரத்னபாலா,பூந்தளிர்,ராணிகாமிக்ஸ்,பார்வதி சித்திரக்கதைகள்.. இப்படி அத்தனை புத்தகங்களையும் வாங்கி வாங்கி சேகரித்து வைத்திருப்பேன்.. என் எல்லாசேகரங்களும்.. ஒரு இடப்பெயர்வின் விடுபடலில் போயிற்று..

சென்னைக்கு வந்ததும் இப்பொழுதும் அந்தப் புத்தகங்க்ள எல்லாம் வருகிறதா என்று பார்த்தேன். எல்லாமே நின்றுவிட்டன.. மிகுந்த வருத்தமாயிருந்தது. யாரும் தமது குழந்தைகள் தமிழில் படிப்பதையே விரும்பாதவர்கள் போல நடந்துகொள்கிறார்கள்.. கோகுலம் மட்டும் வந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.. மிக அற்புதமான என் பிள்ளைப்பராயத்து வாசிப்பின் நினைவுகளிற்குள் அழைத்துப் போனதற்கு நன்றி தீபா...

 
At July 19, 2009 at 11:27 PM , Blogger நட்புடன் ஜமால் said...

ரத்னபாலா -

மறக்க இயலாதது

வாசிப்பை கற்று தந்த முதல் நூல்.

நானும் பல நாட்கள் நினைத்ததுண்டு இது ஏன் வருவதில்லை என.

 
At July 19, 2009 at 11:29 PM , Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் நினைவிலிருந்து அழகாக மீட்டெடுத்திருக்கிறீர்கள் தீபா.

வாடகை நூலகத்திலிருந்து எடுத்து பழைய ரத்னபாலா படித்திருக்கிறேன்.
ஆனால் இவ்வளவு கூர்மையான ஞாபகமில்லை.

கதை ரொம்ப பிடிச்சிருந்தது.

 
At July 19, 2009 at 11:31 PM , Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்கள் கொடுத்த லின்க், பழைய ஞாபகங்களை கிளற ஆரம்பித்திருக்கிறது. :)

 
At July 19, 2009 at 11:35 PM , Blogger சந்தனமுல்லை said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு...மணிப்பாப்பா கேள்விப்படட்து இல்லை...ரத்னபாலா, பாலமித்ரா, பூந்தளிர், பாப்பா மஞ்சரி மற்றும் கோகுலம் படிச்சிருக்கேன். இதுல கோகுலம் தான் ஒன்பதாவது படிக்கும் வரை தொடர்ந்தது! மீதியெல்லாம் பாதியிலே நின்று விட்டது....மிஷா-வைப் போல!! ஒரு உற்ற நட்பை பிரிந்தது போல இருந்தது...

பூந்தளிரின் சுப்பாண்டி கேரக்டரை யாருக்காவது பேர் வைப்பதென்பது எங்கள் வகுப்பில் செக்ஷ்ன் பிரித்வுடன் நடைபெறும் வைபவம்! :-) எனது சிறுவயது நினைவுகளை நினைவு படுத்திவிட்டீர்கள்..நன்றி! பப்புவுக்கு சொல்லிப் பார்க்கிறேன்..இந்தக் கதையை!! :-)

 
At July 19, 2009 at 11:43 PM , Blogger rapp said...

super deepa:):):)

 
At July 19, 2009 at 11:58 PM , Blogger ☀நான் ஆதவன்☀ said...

நல்ல நினைவாற்றல்....கோகுலம் மட்டும் படித்த ஞாபகம் எனக்கு.

 
At July 20, 2009 at 1:10 AM , Blogger Vidhoosh said...

இந்தப் புத்தகங்களை நானும் நிறைய தேடினேன் தீபா. இதற்காகவே செயன்னையிலிருந்து பயணித்து கோயமுத்தூரில் ஒரு பதிப்பகத்தாரிடமும் கூட கேட்டு விட்டேன். கிடைக்க வில்லை.:(

 
At July 20, 2009 at 1:20 AM , Blogger Balaji said...

good !! true we miss rathna bala,muthu comics ..need good comics books in tamil for kutties..

I am buying magic pot (my kids are below 6 yrs) it good for kg kids..

VS Balajee
father of Nisha and Ananya

 
At July 20, 2009 at 2:53 AM , Blogger Deepa said...

நன்றி அகிலன்
நன்றி ஜமால்
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா
நன்றி முல்லை
நன்றி rapp
நன்றி ஆதவன்
நன்றி Vidhoosh

 
At July 20, 2009 at 3:23 AM , Blogger Dr.Rudhran said...

thanks for rekindling memories...by the way i was one of the artists in rathnabala!

 
At July 20, 2009 at 3:41 AM , Blogger Deepa said...

//Dr.Rudhran said...
thanks for rekindling memories...by the way i was one of the artists in rathnabala!//

Wow! no wonder the magazine looked so appealing, then!

Btw, do you happen to have any of the old issues, doctor? Would love to borrow some. :)

 
At July 20, 2009 at 3:54 AM , Blogger வண்ணத்துபூச்சியார் said...

கொசுவத்திய சுத்த வச்சிடீங்க...

அடம் பிடித்தது அடி வாங்கி படித்தது எல்லாம் நினைவுக்கு வருது..

ஆனாலும் செம ஜாலி...

 
At July 20, 2009 at 3:57 AM , Blogger செந்தழல் ரவி said...

அம்புலிமாமாவும் அதில் வரும் கபீஷும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்...!!!!

அப்புறம் காமிக்ஸ் எல்லாம் அறிமுகம் ஆனபிறகு டெக்ஸ் வில்லர், ஆர்ச்சி, ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி, லக்கிலுக்...!!!

 
At July 20, 2009 at 3:58 AM , Blogger செந்தழல் ரவி said...

வாண்டு மாமா அப்படீன்னு ஒருத்தர் எழுதுவாரே ?

 
At July 20, 2009 at 3:58 AM , Blogger செந்தழல் ரவி said...

இப்போது உள்ள குழந்தைகள் புத்தகங்களை இழந்துவிட்டன என்று தோன்றுகிறது...

டிவியை ஒழிக்கனும்...!!!

 
At July 20, 2009 at 6:34 AM , Blogger Deepa said...

நன்றி வண்ணத்துப்பூச்சியார்
நன்றி ரவி

//இப்போது உள்ள குழந்தைகள் புத்தகங்களை இழந்துவிட்டன என்று தோன்றுகிறது...

டிவியை ஒழிக்கனும்...!!!//

உண்மை தான்.

 
At July 20, 2009 at 7:34 PM , Blogger மாதவராஜ் said...

ஆஹா... இந்தக் கதைகள்தான் எவ்வளவு சுவராசியமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கின்றன. நினைவு படுத்தியதற்கும், பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி. நம் குழந்தைகளுக்கு இவைகளை எப்படி கொடுக்கப் போகிறோம் என்பதுதான் கவலை. மிஸ்டர் பீன் தான் நம் குழந்தைகளுக்கு இப்போது கதாநாயகன்.

 
At July 21, 2009 at 12:06 AM , Blogger " உழவன் " " Uzhavan " said...

அருமையான கதை. இப்படிப்பட்ட இதழ்கள் இல்லாமல் போனது துரதிஷ்டமே.

 
At July 21, 2009 at 2:01 AM , Blogger Deepa said...

நன்றி பாலாஜி
நன்றி அங்கிள்
நன்றி உழவன்

 
At July 21, 2009 at 4:24 AM , Blogger அமுதா said...

அருமையான கதை. என் குழந்தைகளுக்கு கூற ஒரு சுவாரசியமான கதை. பகிர்வுக்கு நன்றி

 
At July 22, 2009 at 4:45 AM , Blogger Krishna Prabhu said...

நல்ல பதிவு தொடருங்கள் தீபா.

 
At July 22, 2009 at 7:40 AM , Blogger anto said...

தீபா..கதை ரொம்ப நல்லாயிருக்கு. நான் கோகுலம்,சிறுவர்மலர் ஆகிய இரண்டின் தொடர் வாசகனாக இருந்துள்ளேன்.ராணி காமிக்ஸ் அவ்வப்போது படித்ததுண்டு.தினமும் என் அம்மாவோ அப்பாவோ கதை சொல்லவில்லை என்றால் எனக்கு தூக்கம் வராது....என் அம்மாவுடன் ஆன கதை இரவுகளை ஞாபகப் படுத்தியுள்ளது உங்கள் பதிவு. நன்றி தீபா...

 
At July 22, 2009 at 9:12 AM , Blogger ranjani basu said...

hi,

i enjoyed the story and i got it for todays bedtime story to my daughter.. thanks a lot.. It is happy to know that thismuch of people miss these tamil comics.. I remember the day when I read the first issue of poonthalir..
ranjani basu

 
At July 22, 2009 at 10:44 AM , Blogger அய்யனார் said...

ரத்னபாலா,அம்புலிமாமா வை விட எனக்கு பாலமித்ரா அதிகம் பிடிக்கும் ஏனெனில் அதில்தான் அதிக கதைகள் இருக்கும்.:)

இந்த வம்பன் கதை நினைவிருக்கிறது. பெரும்பாலான சிறுவர் கதைகளில் கடைக்குட்டிகள் சுட்டியாய் இருப்பார்கள்
கடைக்குட்டிச் சுட்டியிடத்தில் என்னைப் பொருத்திக் கொண்டு வாசித்த பால்யங்கள் அற்புதமானவை.

இந்த இடுகைக்கு நன்றி..

 
At July 22, 2009 at 11:18 PM , Blogger Deepa said...

நன்றி அமுதா
நன்றி Krishna prabhu
நன்றி anto
நன்றி ranjani basu
நன்றி அய்யனார்

 
At July 24, 2009 at 2:45 AM , Blogger Krishna Prabhu said...

தீபா,

என்னுடைய நண்பரின் பரிந்துரையின் பேரில் உங்களை நான் 'சுவாரஸ்யப் பதிவராக' எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். அதைக்காண இங்கு செல்லவும்:

http://thittivaasal.blogspot.com/2009/07/blog-post.html

நன்றிகள் பல...

கிருஷ்ண பிரபு, சென்னை.

 
At July 24, 2009 at 5:22 AM , Blogger நாஞ்சில் நாதம் said...

:))))

 
At July 24, 2009 at 5:36 AM , Blogger நாஞ்சில் நாதம் said...

இந்த கத சின்ன வயசுல படிச்ச ஞாபகம் . ரத்னபாலா மணிப்பாப்பா மாதிரி வந்த அம்புலிமாமா சிறுவர் இலக்கிய சுட்டி. இங்கே தேடவும்.

http://www.chandamama.com/lang/index.php?lng=TAM

இந்த இடுகைக்கு நன்றி

 
At July 25, 2009 at 12:25 AM , Blogger யுவகிருஷ்ணா said...

பூந்தளிர் என்னோட பேவரைட். ரத்னபாலா அட்டைப்படம் அருமையா இருக்கும் :-)

 
At July 25, 2009 at 12:26 AM , Blogger யுவகிருஷ்ணா said...

அமர்சித்திரக்கதா தமிழில் வந்ததே? யாராவது படித்திருக்கிறீர்களா?

 
At July 26, 2009 at 10:29 PM , Blogger Deepa said...

நன்றி Krishna Prabhu
விருதுக்கும் நன்றி

நன்றி நாஞ்சில் நாதம்
நன்றி யுவகிருஷ்ணா

 
At October 12, 2011 at 1:20 AM , Blogger V S Raju said...

ஏன் நினைவில்லாமல் ...! 'மணிப்பாப்பா' விளம்பரம் பார்த்துவிட்டு அண்ணனை தொல்லை செய்து வாங்கினேன்.(இப்போ நான் 43.).என் மானாமதுரை தொடக்கப்பள்ளி நாட்களில் "மணிப்பாப்பா" வந்தது. ஓரிரு வெளியீடுகளுக்குப் பின் அது நின்று போனது பெரிய சோகம்.அந்த வெளியீடுகளை ரொம்ப நாள் பொத்திப் பொத்தி வைத்திருந்தேன். அட்டை embossed மாதிரி கிண்ணென்று இருக்கும். 'மயில் அரசன் ' கதை முதலில் அட்டைப்படத்துடன் வந்தது. ஜாம்-ஜிம்-ஜாக் இலவச இணைப்புகள் வேறு...'தொட்டில் சுட்டி','குரங்கு மார்க் சனியன் கம்பெனி' ஜோக்குகள் நினைவில் உள்ளன.முல்லை தங்கராசன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அணுகினால் ஒருவேளை அந்த பழைய ஏடுகளைப் பார்க்க முடியுமோ, என்னவோ..

-வெ.சீ.ராஜூ
சென்னை-11.
-------------------------

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home