Thursday, July 2, 2009

”ஆப்பிள் பாட்டுப் பாடும்மா”

உன் பேரு என்னம்மா?

”லாவண்யா”

வயசு?

“சிக்ஸ் இயர்ஸ்”

“என்ன பாட்டுப் பாடப்போறே?”

“உம்...உம்ம்...” கண்ணை உருட்டி யோசிக்கிறது குழந்தை.
”ஆப்பிள் பாட்டு!”

”சரி, நீயே ஆப்பிள் மாதிரி அழகா இருக்கே! பாடு பாடு”

அந்தக் குழந்தை என்ன பாடப் போகிறாள் என்று ஆவலுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

முக்கல் முனகல்களுடன் ஒரு ஹம்மிங்கைத் தொடர்ந்து, வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்ட ஒரு கள்ளத் தொண்டையில் பாடிய பாடல் “என் செல்லப் பேரு ஆப்பிள் நீ சைஸாக் கடிச்சுக்கோ...”

உடம்பெல்லாம் ஏதோ கூசப் படக்கென்று ஆஃப் செய்தேன் டி.வியை. ஆத்திரமாக வந்தது. ஏன் இவ்வளவு சுரணை கெட்டுப் போய் விட்டோம் நாம்?
அந்தக் குழந்தையின் அம்மா அப்பாவுக்கு வெட்கமாக இல்லையா தங்கள் குழந்தை இப்படி மட்டமான இச்சையைத் தூண்டும் ஒரு பாடலை உலகம் முழுதும் பார்க்கும்படி பாட விடுவதற்கு?

ஆமாம், அவ்வகையான பாடல்கள் வருகின்றன. இழவு, வந்து விட்டுப் போகட்டும். நீங்களும் உங்கள் குழந்தைகள் தூங்கியபின் மிட்நைட் மசாலாவில் கண்டு களியுங்கள். யார் வேண்டாமென்கிறார்கள். ஆனால் நாள் முழுதும் டி.வியில் இப்படிப்பட்ட பாடல்கள் ஒளிபரப்பாகின்றன. நாமும் குழந்தைகளோடு சேர்ந்து பார்க்கிறோம். அதைக் கேட்டு அர்த்தம் புரியாமல் அவர்கள் மழலையில் பாடுவதை ரசிக்கிறோம்.

சிலர் சில நேரம், “ஏய்! அடி வாங்குவே, அந்தப் பாட்டெல்லாம் பாடக் கூடாது” என்று போகிற போக்கில் அதட்டுவதையும் பார்க்கிறோம். இது மிகச் சாதாரணமான, நாம் தவிர்க்க முடியாத விஷயமாகி விட்டது. கொஞ்சம் மெனக்கெட்டால் தவிர்க்கலாம். அது வேறு விஷயம்.

ஆனால் ஒரு போட்டி நிகழ்ச்சியில் குழந்தையை இப்படி ஒரு பாடல் பாடச் சொல்லி மேடையேற்றிவிட்ட பெற்றோரை நினைத்தால் கண் மண் தெரியாமல் கோபம் வருகிறது.

ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் இப்படிப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு அதீதப் போட்டி மனப்பான்மையை விதைப்பதும், தேவையில்லாத டென்ஷனை ஏற்படுத்துவது, அதிகமான புகழுக்கு அவர்களைச் சிறுவயதிலேயே (அவர்களால் புரிந்து கொள்ளக் கூட இயலாத வயதில்) ஆட்படுத்துவதும் அவர்களைத் துன்புறுத்தும் செயல் தான் என்று ஒரு பக்கம் பேசிவந்தாலும்,
இளம் வயதிலேயே அற்புதமான திறமையுள்ளவர்கள் இனம்கண்டு பட்டைதீட்டப் படுவதால் அவர்களுக்குச் சரியான பாதை அமைவதும் எளிதாகிறது என்பதை மறுக்க முடியாது.

ஆனால் குறைந்தது பத்துப் பன்னிரண்டு வயதாவது இருக்க வேண்டும் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு.

சென்ற ஆண்டு கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ் என்ற சிறுவர்கள் ஒரு பாட்டுப் போட்டியில் தங்களது பாட்டுத் திறத்தால் உலகத் தமிழர்களைக் கட்டிப்போட்டதை மறக்க முடியாது. அப்படிப்பட்ட ரத்தினங்கள் இளம்வயதிலேயே கண்டெடுக்கப்பட்டது பாராட்ட வேண்டிய விஷயம் தான். ஆனால் அவர்களுக்குப் பதின்மூன்று பதினான்கு வயது. நன்றாகவே விவரம் தெரிந்து வாலிப வயதை நெருங்குபவர்களாக இருந்ததால் பிரச்னை இல்லை. ஆபாசமான பாடல்கள் எதையும் இவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பாடியதாகவும் நினைவில்லை. ஆறு வயது ஏழு வயது பிஞ்சுகளுக்கு என்ன தெரியும். அவர்களை ஏன் இப்படி வதைக்க வேண்டும்?

இன்னொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அலுவலக்த்திலிருந்து சுற்றுலா போன போது பஸ்ஸில் பாட்டுக்குப் பாட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஏதோ ஒரு எழுத்து வந்த போது என் அருகில் இருந்த பெண் ஒருவர் காது கூசும் வார்த்தைகள் கொண்ட் ஒரு பாடலைச் சத்தமாகக் கைதட்டிக் கொண்டு பாட ஆரம்பித்தார். என்னையும் சேர்ந்து கொள்ளுமாறு ஊக்கம் வேறு. யார் முகத்திலும் எந்தச் சலனமும் இல்லை. நான் மெதுவாக அவர் காதில், ”என்ன இது, வேற பாட்டே கிடைக்கலியா என்று சிரித்துக் கொண்டே கேட்ட போது,” நான் ஏதோ தப்பாகக் கேட்டு விட்ட மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, “வாட் இஸ் திஸ் யார்!, இட்ஸ் ஜஸ்ட் ஃபார் ஃபன்! ஏன் சீரியசாகணும். யார் வார்த்தைகளைப் பாக்கறாங்க இங்கே. ட்யூன் நல்லா இருக்கு. அவ்ளோ தானே?”

அந்தப் பாடலின் தரக்குறைவு அவரைக் கொஞ்சமும் பாதிக்காமல் வாய்விட்டு அனைவரின் முன்னும் பாடும் அவரது மெத்தனத்துக்கு என்ன் காரணம்? என்ன விளக்கம் சொன்னாலும் அது சரியாகுமா? என்னால் குழம்பாமலிருக்க முடியவில்லை.

எனக்கென்னவோ, அந்த ஆப்பிள் குழந்தை வளர்ந்த பின் அந்த வீடியோவைப் பார்த்தால் தன்னை அவமானப் படுத்தியதற்காக அதன் அம்மா அப்பாவை ஒரு வழி பண்ணி விடும் என்று தோன்றுகிறது. ஆனால், யார் கண்டது, அது தன் குழந்தையை இன்னும் மோசமான பாடலை அங்க அசைவுகளுடன் பாடத் தயார் செய்து கொண்டும் இருக்கலாம்!

விவஸ்தை கெட்டவர்களாக ஆகிக் கொண்டு இருக்கிறோம்.

Labels: ,

25 Comments:

At July 3, 2009 at 12:26 AM , Blogger பைத்தியக்காரன் said...

நல்ல பதிவு தீபா. உங்கள் தார்மீக அறம் சார்ந்த கோபம் புரிகிறது. ஆனால், இந்த விஷயத்தில் அந்தக் குழந்தையின் பெற்றோரை மட்டுமே குறை சொல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அனைத்தையுமே ஏற்றுக் கொள்ளவும், கடந்து செல்லவும் பழகிவிட்டோம் அல்லது பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம். இந்தநிலையில் ஒன்றிரண்டு பேராவது இதுமாதிரியான வினாக்களை எழுப்புவது அவசியம். பதிவுக்கு நன்றி.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

 
At July 3, 2009 at 12:56 AM , Blogger மயில் said...

இந்த நேரத்தில் தேவையான பதிவு தீபா, விவஸ்த்தை இல்லாமல் தான் போயிட்டு இருகோம்.

 
At July 3, 2009 at 1:26 AM , Blogger சந்தனமுல்லை said...

நல்ல இடுகை தீபா! என்ன சொல்றது...குறைந்த பட்சம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஆனால், இந்தமாதிரி பாடல்களை அவர்கள் அறியாமல் வளர்ப்பது சவாலான காரியம் என்றே தோன்றுகிறது!

 
At July 3, 2009 at 1:43 AM , Blogger பிரியமுடன்.........வசந்த் said...

தெளிவான பதிவு தீப்ஸ்

 
At July 3, 2009 at 2:06 AM , Blogger Deepa said...

நன்றி பைத்தியக்காரன்!

நன்றி மயில்!

நன்றி முல்லை!

நன்றி வசந்த்!
தப்பாக எண்ண வேண்டாம். தீபா என்றே குறிப்பிடுங்கள் ப்ளீஸ்!

 
At July 3, 2009 at 2:17 AM , Blogger அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹைய்யோ, இது மாதிரி ரெட்டை அர்த்தப் பாடல்களுக்கு இந்தக் குழந்தைகளை ஆட விடறதும், அதுக்கு ஜட்ஜஸ் !!!??? கமெண்ட் சொல்றதும்,

என்ன கொடுமையோ, எப்ப முடிவுக்கு வருமோ???

 
At July 3, 2009 at 3:04 AM , Blogger அமுதா said...

நல்ல பதிவு தீபா! முல்லை சொன்ன மாதிரி குறைந்த பட்சம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்துவதைத் தவிர்க்கலாம். பாருங்க... எங்க வீட்ல சுட்டி தவிர ஒண்ணும் ஓடாது. ஆனால், கார்ல போகும் பொழுது எப்.எம் போடுவோம். பாட்டு வரும். சில சமயம் கவனிப்போம்... மாத்துவோம்...சில சமயம் நாங்க கவனிக்க மாட்டோம் ஆனால் குழந்தைகள் கவனிப்பாங்க... சவால் தான். ஒரு தடவை இப்படி ஒரு பாட்டோட வரி பாடி "பாரும்மா ஜோக்..." என்றாள் குழந்தை. அது ஜோக்கல்ல என்று தெரியாமல் இரசிக்கிறாள், என்ன செய்வது?

 
At July 3, 2009 at 4:14 AM , Anonymous Anonymous said...

true ..we should expose good songs,books to kutties and make them taste the good !!but this is 2009! god know what they like !!

VS Balaje
F/o Nisha and Ananya

 
At July 3, 2009 at 5:19 AM , Blogger மாதவராஜ் said...

அருமையான பதிவு. அர்த்தங்களையறியாமலேயே வாய்கள் பாடல்களை முணுமுணுக்கின்றன. அப்படியொரு கதிக்கு பழக்கப்பட்டு இருக்கிறோம்.
ஆனால், நீ குறிப்பிட்டிருக்கும் விஷயம் அறிந்தே செய்ததாக இருக்கிறது. அதற்கு எதிரான் உன் கோபம் நியாயமானது. தேவையானதும்.

 
At July 3, 2009 at 5:25 AM , Blogger வித்யா said...

நேற்று நானும் ரகுவும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து இதேதான் பேசிக்கொண்டிருந்தோம். இம்மாதிரியான ஷோக்கள் அதீத மன அழுத்தத்தையே கொடுக்குமென்பதென் கருத்து. அந்த குழந்தை அடுத்து பாடிய பாட்டை விட்டுட்டீங்களே "டாடி மம்மி வீட்டில் இல்ல"??? என்னத்த சொல்ல?

 
At July 3, 2009 at 5:25 AM , Blogger SK said...

நியாயமான கோவம். ஆனால் எதிர் காலம் இதை விட மோசமாக உள்ளது தீபா. :(

 
At July 3, 2009 at 5:39 AM , Blogger Deepa said...

நன்றி அமித்து அம்மா!
:-) கடுப்பு தான் இல்ல?

நன்றி அமுதா!

//இப்படி ஒரு பாட்டோட வரி பாடி "பாரும்மா ஜோக்..." என்றாள் குழந்தை. அது ஜோக்கல்ல என்று தெரியாமல் இரசிக்கிறாள், என்ன செய்வது?//
:-( யோசிப்போம்!


முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாஜி!


நன்றி அங்கிள்!
ஆமாம், நாமும் அறியாமல் இவற்றை முணுமுணுப்பதை நிறுத்த வேண்டும்!

நன்றி வித்யா!
நான் தான் அதற்குள் ஆஃப் பண்ணிட்டேனே!

நன்றி SK!
பயமுறுத்துகிறீர்களே! :-)

 
At July 3, 2009 at 10:29 AM , Blogger ramesh said...

அருமையான பதிவு.....ஆனால் 27 வருடங்களுக்கு முன்னமே, யே ஆத்தா ஆத்தோரமா வாரியா என்று விவரம் தெரியாத வயதில் பாடிய போது கந்தக பூமியின் கன்னிப் பெண்கள் என் கன்னத்தை மட்டுமே கிள்ளிச் சென்றதை இப்போதும் நினைத்து பார்க்கிறேன்....ஆனாலும் அந்த வயதினிலே நேத்து ராத்திரி எம்மா பாடலைப் பாட பயப்படுவேன்...சிறிது கவனம் கொண்டு பெற்றோர்களால் இதை சரி செய்ய இயலும் என்று நீங்கள் நினைப்பது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்று தெரியவில்லை .....ஏனென்றால் அப்போது இசை வடிவத்தை மட்டுமே வானொலியில் கேட்டு கொண்டிருந்தோம் ......இன்றோ அலைபேசியிலேயே இந்த வகை ஆபாச பாடல்களை காட்சியுடன் பார்க்கும் வசதிகள் வந்து விட்டன....நாம் வீட்டில் குழந்தைகளை கண்டித்தாலும்...பள்ளியில் சக மாணவர்கள் இவ்வகை பாடலை முனுமுனுக்கும்போது நம் குழந்தைகளும் ஆர்வத்தோடு கவனிக்க ஆரம்பிக்கிறார்கள்...அடுத்த தலைமுறையை சற்று கலக்கத்தோடும், சற்று கலவரத்தொடுமே பார்க்கிறேன்...இதற்க்கு நேரிடையாக நாமும் ஏதோ ஒரு வகையில் உடன்பட்டிருக்கிறோம் எனும்போது வேதனைதான் மிஞ்சுகிறது...

 
At July 3, 2009 at 1:51 PM , Blogger rapp said...

அந்த வயசு மேட்டரை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன். சரியா மழலைக் கூட மாறாத குழந்தைங்கள கூட்டிட்டு வந்து டான்ஸ் கிளாஸ்ல இருந்து ஒவ்வொன்னுத்துலையும் டார்ச்சர் பண்ற பெற்றோர் தொல்லை தாங்கல, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

 
At July 3, 2009 at 2:31 PM , Blogger மணிநரேன் said...

நியாயமான கோபம் தீபா.

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் தற்போதைய ஹிட் பாடல்கள் என்று பாடும் சில பாடல்களை கேட்கவே அதிர்ச்சியாக உள்ளது. பல பாடல்களை முதல்முறையாக கேட்கபெற்றேன்; இவ்வாறான பாடல்களெல்லாம் எப்படி மக்களை கவர்ந்துள்ளது என்ற கேள்விக்கான விடை மட்டும் தெரியவில்லை. நல்கருத்தற்ற பாடல்களை வடிகட்டி பிள்ளைகளிடம் கொண்டு செல்வது பெற்றோர்களுக்கு பெரிய சவாலாகத்தான் இருக்கும். தவறான ஊக்கமளிக்கும் பெற்றோரும் அதனை உணரவேண்டும்.

 
At July 3, 2009 at 3:20 PM , Blogger சுல்தான் said...

நல்ல பதிவு. நியாயமான கோபம். ஒரு சிலராவது இப்படி யோசிக்கிறார்களே என்பதில் சிறிய ஆறுதல். அசிங்கமான பாடலை அருவெறுப்பில்லாமல் பாடுவது, நடிகர்களெல்லாம் உடம்பின் எல்லா பகுதியும் மறைய உடை உடுத்தியிருக்க, நடிகைகள் இயன்றவரை திறந்து கொண்டு நடிப்பதும், நற்பண்புகள் யாவும் சிறிது சிறிதாக பின் தள்ளப்பட்டு உலகமே மெடீரியலிஸத்துக்கு மாறி வருவதும் எரிச்சல் தரும் விடயங்கள்தான்

 
At July 3, 2009 at 9:51 PM , Blogger " உழவன் " " Uzhavan " said...

நல்ல குடும்பப் பாங்கான படம் என்பதுபோல, இது நல்ல குடும்பப் பாங்கான பதிவு என்றுதான் சொல்லவேண்டும். நண்பர் சிவராமன் அவர்கள் சொன்னதுபோல, நாம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம்.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி, அந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் பாடல்களும், செய்கைகளும் வெகுவாக நம்மைக் கவருகின்றன. எவ்வளவு பார்த்துக்கொண்டிருந்தாலும் சலிப்புத் தட்டவில்லை.

 
At July 3, 2009 at 10:12 PM , Blogger Deepa said...

நன்றி ரமேஷ்!

நீங்கள் சொல்லி இருக்கும் கருத்துக்கள் அனைத்துமே ஏற்புடையன.


நன்றி rapp!
:-)

நன்றி மணிநரேன்!

நன்றி சுல்தான்!

நன்றி உழவன்!

குடும்பப்பாங்கான பதிவு என்று நீங்கள் சொல்லவருவது என்ன? புரியவில்லை!

குடும்பப்பாங்கான பெண்ணும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைத் தான் குறிப்பிட்டுள்ளேனே. :-)


ஆனால் ஒரு விஷயம் நீங்கள் சொல்வது உண்மை. எனக்கும் குழந்தைகளின் அந்த நிகழ்ச்சிகள் ரொம்பப் பிடிக்கும் என்பதாலேயே இந்தப் பதிவு.
குழந்தைகள் அவர்களின் இயல்போடு எது செய்தாலும் கொள்ளை அழகு தான். பெரியவர்கள் தங்கள் விருப்பத்துக்காகத் திணிக்கும் விஷயங்கள் தான் கடுப்பேற்றுகின்றன.

 
At July 3, 2009 at 11:02 PM , Blogger ராம்.CM said...

சரியாக சொன்னீர்கள் தீபா.என் மனதில் இருந்த எண்ணத்தை பதிவாக போட்டுவிட்டீர்கள். நானும் சில நேரங்களில் டி.வியை கோபத்தில் அணைத்துவிடுவேன்.பிறகு இதை பற்றி என் மனைவியிடம் சொல்லி வருத்தபடுவேன்.நாகரீகம் என்ற போர்வையில் சமுதாயம் சீரழியும் நிலை,அதுவும் வளரும் குழந்தைகளை அது அடிமைபடுத்தும்விதம்.மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எதிர்காலம் என்ன செய்யுமோ?....

 
At July 4, 2009 at 10:40 AM , Blogger Deepa said...

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி ராம்!

 
At July 5, 2009 at 5:37 AM , Blogger பட்டாம்பூச்சி said...

//விவஸ்தை கெட்டவர்களாக ஆகிக் கொண்டு இருக்கிறோம்.//
தேவையான பதிவு தீபா, விவஸ்தை இல்லாமல் தான் போயிட்டு இருகோம்.

 
At July 5, 2009 at 8:01 AM , Blogger MayVee said...

ஒன்னும் சொல்வதற்கு இல்லை ......

மனித உரிமை சங்கங்கள் இதையெல்லாம் மனிதம் மீரல்கள் இல்லை என்று முடிவு செய்து விட்டார்களோ என்னவோ ........

 
At July 5, 2009 at 9:43 AM , Blogger Deepa said...

நன்றி பட்டாம்பூச்சி!

நன்றி MayVee!

//மனித உரிமை சங்கங்கள் இதையெல்லாம் மனிதம் மீரல்கள் இல்லை என்று முடிவு செய்து விட்டார்களோ என்னவோ ........//

மிகவும் முக்கியமான கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.

 
At July 5, 2009 at 11:04 PM , Blogger வண்ணத்துபூச்சியார் said...

அவசியமான பதிவு தீபா..

 
At July 10, 2009 at 12:35 AM , Blogger Triumph said...

Even I get angry when I see such things. Dont know whom to blame. or whom to slap...

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home