Friday, July 17, 2009

ஒரு சின்ன கயிறு

காடர்வில் கிராமத்தில் அன்று சந்தை நாள். குடியானவர்கள் தத்தம் மனைவியருடன் ஊர் மத்தியில் இருந்த சதுக்கத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். கடும் உழைப்பினால் முறுக்கேறி மடங்கிய அவர்களது நீண்ட கால்கள் மெல்ல மெல்ல நடை போட்டன. விறைப்பாக கஞ்சி போடப்பட்ட அவர்களது மேற்சட்டைகள் காற்றில் பலூன் போலப் புடைத்து அவர்களைத் தூக்கிச் செல்வது போன்ற பிரமையை ஏற்படுத்தின. தொலைவிலிருந்து பார்த்தால் ஒவ்வொரு பலூனிலிருந்தும் தலை, கை கால்கள் முளைத்தது போல் இருந்தது.

சிலர் மாடுகளைக் கயிறு கட்டி இழுத்து வந்தனர். அவர்களது மனைவியர் கையில் கம்புடன் அவற்றை வேகமாக நடக்கும்படி அதட்டியவாறே வந்தனர். இவர்கள் கைகளில் பெரிய பெரிய கூடைகள் வைத்திருந்தனர். அவற்றினுள்ளே இருந்து கோழிக்குஞ்சுகளும் வாத்துக்களும் தலையை நீட்டி வெளியே பார்த்தன. தங்கள் கணவன் மார்களை விட இவர்கள் உற்சாகத்துடனும் சிறு துள்ளலுடனும் நடை போட்டனர். தங்கள் மெலிந்த உடலின் மீது சின்ன சால்வையும் வெள்ளைத் தலைக் குட்டையும் அதன் மீது ஒரு தொப்பியும் அவர்கள் அணிந்திருந்தனர்.

ஒரு ட்ரக் வண்டி பலமாக ஆடிக்கொண்டே கடந்து சென்றது. அதன் உள்ளே இரு ஆண்களும் பின் புறத்தில் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். வண்டியின் ஆட்டத்தைத் தாக்குப் பிடிக்க அவள் அதன் பக்கங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

காடர்வில்லின் சந்தை நடக்கும் சதுக்கத்தில் பெரிய கூட்டம் சேர்ந்திருந்தது. மனிதர்களும் கால்நடைகளும் கலவையாக அங்கு காணப்பட்டனர். மாடுகளின் கொம்புகளும் பணக்கார விவசாயிகளின் நீளமான தொப்பிகளும் குடியானவப் பெண்களின் தலை அலங்காரங்களும் துலாம்பரமாகத் தெரிந்தன. கிறீச்சிடும் குரல்களும், நல்ல திடமான கிராமத்தானின் நெஞ்சுக்கூட்டிலிருந்து வரும் பலத்த சிரிப்பும், கட்டப்பட்ட மாடுகளின் கத்தலுமாக அங்கு பேரிரைச்சல் நிலவியது.

குதிரை லாயம், மாட்டுக் கொட்டகை, வைக்கோல் போர், வியர்வை, சாணம், என்று மனிதனோடும் அவனுடன் வாழும் மிருகங்களோடும் ஒன்றிய, அந்த எளிய கிராம மண்ணுக்கே உரிய நெடி கலந்தடித்து வீசியது.

அப்போது அங்கு மேட்டர் (maitre) ஹாஷ்கோம் என்பவர் வந்து சேர்ந்தார். மெதுவாகச் சதுக்கத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தவர் சாலையில் ஒரு சின்ன கயிறு கிடப்பதைப் பார்த்தார்.

ஒரு உண்மையான நார்மன் வாசியைப்போல சிக்கனக்காரரான அவர் பயன்பாடுள்ள எதுவுமே வீணாவதை விரும்பாமல் குனிந்து அந்தக் கயிற்றைக் கையிலெடுத்தார். வாதத்தினால் வளைந்த அவரது கால்களுக்கு அவ்வளவு குனிவதே மிகச் சிரமமாக இருந்தது. கையில் வைத்து அதைத் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருந்த போது சற்று தொலைவில் மேட்டர் மாலண்டெயின் (அவரும் கடிவாளம் செய்பவர் தான்) அவ்ரையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தார். சில நாட்களுக்கு முன்பு தான் இருவருக்கும் தொழில் ரீதியாக வாய்த்தகராறு ஏற்பட்டு பேச்சுவார்த்தை அற்றுப் போயிருந்தது.

தான் கீழே கிடக்கும் கயிறொன்றை எடுத்ததைத் தனது எதிரி பார்த்துவிட்டதால் வெட்கமடைந்த ஹாஷ்கோம் அவசரமாக அதைத் தனது சட்டைக்குள் மறைத்தார்; பின்பு காற்சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார். பிறகும் கீழே தவறவிட்ட எதையோ தேடுவது போன்ற பாவனையுடன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். கால்கள் வாதத்தினால் மடங்கி வலித்தன.

சற்று நேரத்துக்கெல்லாம் இறைச்சலும் முடிவில்லா பேரங்களும் நிறைந்து பரபரப்பாக இருந்த சந்தைக்கூட்டத்தினுள் சென்று கலந்து விட்டார். பொருட்கள் வாங்க வந்த குடியானவர்களின் முகங்கள் கவலையுடனே காணப்பட்டன. திடமான முடிவெடுக்க முடியாமல், வியாபாரி ஏமாற்றிவிடுவானோ என்ற சந்தேகத்துடனே குற்றம் கண்டுபிடிக்கும் மனோ நிலையுடனே வளைய வந்தனர்.

பெண்கள் தங்கள் பெரிய கூடைகளை இறக்கி வைத்துவிட்டு அதன் முன் அப்படியே அமர்ந்து கொண்டனர். கால்கள் கட்டப்பட்டு மருண்ட பார்வையுடன் துடிதுடித்த்க் கொண்டிருந்த கோழிகளையும் வாத்துக்களையும் வெளியே எடுத்து வியாபாரம் செய்யலாயினர்.

பேரங்களைக் கேட்டுச் சலனமடையாத முகத்துடன் திடமாக விலை கூறினர், பின்பு திரும்பிச்செல்லும் வாடிக்கையாளரை ஒருவித திடீர் மனமாற்றத்துடன், “சரி தான், மேட்டர் ஆதரின்! அந்த விலைக்குக் கொடுக்கிறேன்.“ என்ற ரீதியில் கூவி அழைத்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சதுக்கம் வெறிச்சோடியது.

ஜார்டெயினின் உணவகத்தில் அந்தப் பெரிய கூடம் முழுதும் நிறைந்து மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அதன் விசாலமான முற்றத்தில் எல்லா விதமான வாகனங்களும் நின்றிருந்தன. கட்டை வண்டிகள், ட்ரக்குகள், மாட்டு வண்டிகள், அழுக்கடைந்து மஞ்சளாக, பழுதுபார்க்கப்பட்டு, ஒட்டுப் போடப்பட்டு. கைப்பிடிகள் வானை நோக்கி உயர்ந்த நிலையில் அவையும் ஓய்வெடுக்கும் நிலையில் இருந்தன.

சாப்பிடுபவர்களுக்கு எதிராகப் பெரிய குமுட்டி எரிந்து அறையை இதமாகச் சூடுபடுத்திக் கொண்டிருந்தது. அந்தக் குமுட்டியில் கோழிக் குஞ்சுகளும் புறாக்களும் ஆட்டுக்கால்களும் வாட்டப்பட்டுக் கொண்டிருந்தன. இதனால் நாவூறும் மணம் அறையெங்கும் பரவி அனைவரையும் களிப்படையச் செய்தது.

மேட்டர் ஜார்டெயினின் உணவகம் பெரும் பணக்காரர்களும் கூடி சாப்பிடும் இடமாக இருந்தது. சாப்பாட்டுத் தட்டுக்களும் ஸைடர் பானக் கோப்பைகளும் மீண்டும் மீண்டும் நிறைந்து காலியாகிக் கொண்டிருந்தன. அனைவரும் தாங்கள் அன்று வாங்கியவை விற்றவை பற்றியெல்லாம் விஸ்தாரமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
பருவம் கோதுமைப்பயிருக்கு அல்ல, பச்சைக் காய்கறிகளுக்கே சாதகமாக இருக்கிறது போன்ற நுணுக்கங்களும் அலசப்பட்டன.

திடீரென்று அக்கூடத்து வாயிலில் தண்டோரா போடப்பட்டது. உடனே பலரும் ஆர்வத்துடன் எழுந்து வாயிலுக்கு ஓடினர்.


தண்டோரா போட்டவன் தனது நடுங்கும் குரலில் தொடர்பில்லாத வாசகங்களுடன் கத்தினான். “இதனால் காடர்வில் வாழ் மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், அத்துடன் இன்று சந்தையில் கூடிய அனைவருக்கும்; பென்ஸ்வில் போகும் சாலையில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணிக்குள் ஒரு கறுப்பு லெதர் பணப்பை, ஐந்நூறு ஃப்ராங்க்குளும் சில காகிதங்களும் கொண்டது, காணாமல் போயிருக்கிறது. அதைக் கண்டு எடுத்தவர் சற்றும் தாமதிக்காமல் மேயர் அலுவலகத்திலோ, அல்லது பொருளைப் பறிகொடுத்த, மேன்வில்லைச் சேர்ந்த மேட்டர் ஃபார்ச்சூன் ஹால்புக்கொர்க்கி, அவர்களிடமோ ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இருபது ஃப்ராங்க்குகள் சன்மானம்.”

அந்த ஆள் போய்விட்டான். இன்னும் சற்று தூரத்தில் அதே தண்டோராவும் செய்தியும் மீண்டும் கேட்டன.

எல்லோரும் இதைப்பற்றிப் பேசத் தொடங்கினர். தொலைத்தவனுக்குப் பொருள் மீண்டும் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் பற்றி அலசி ஆராய்ந்தனர்.

உணவு வேளை முடிந்து அனைவரும் காப்பி குடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காவல்துறை அலுவலர் வந்து விசாரித்தார். “மேட்டர் ஹாஷ்கோம் இங்கே இருக்காரா?”

உள்ளே அமர்ந்திருந்த ஹாஷ்கோம் குரல் கொடுத்தார், “நான் இங்கே தான் இருக்கேன்.”

“மேட்டர் ஹாஷ்கோம், தயவு செஞ்சு என் கூட மேயர் அலுவலகத்துக்கு வர முடியுமா? மேயர் உங்களைக் கூட்டிட்டு வரச் சொன்னார்.”

ஹாஷ்கோம் என்ற அந்த எளியக் குடியானவன் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தார். கையிலிருந்த பிராந்தியின் கடைசி மிடற்றை விழுங்கியபடி, முன்னெப்போதையும் விட தளர்ச்சியுடன் எழுந்து வந்தார். “வர்றேன், வர்றேன்”

மேயர் அவருக்காகக் காத்திருந்தார். அந்தப் பகுதியின் மிக முக்கியமான புள்ளி அவர். தடித்த உடலும், செருக்கும் கொண்ட அவர் டம்பமான மொழிக்கும் சொந்தக்காரர்.

“மேட்டர் ஹாஷ்கோம், இன்று காலையில் பென்ஸ்வில் செல்லும் சாலையில் நீங்கள் நின்றிருந்த போது கீழே இருந்து ஹால்புக்கொர்க்கின் பணப்பையைக் கண்டெடுத்ததாகச் சொல்லப்படுகிறீர்”

அந்தக் கிராமத்தான் வெலவெலத்துப் போனார். மேயரை நோக்கி வெறித்தபடி, “நானா? நானா? பணப்பையை எடுத்தேனா?”

“ஆமாம், நீங்க தான்.”

“என் தலை மேல சத்தியமா நான் எடுக்கலை. எனக்கு அதைப்பத்தி ஒண்ணுமே தெரியாது.”

“ஆனா நீங்க எடுத்ததைப் பாத்ததாச் சொல்றாங்களே.”

“யாரு? யாரு சொல்றாங்க?”

“மெஸ்ஸியர் மாலண்டெய்ன், கடிவாளம் செய்பவர்”

இவருக்கு இப்போது நினைவு வந்தது. கோபத்தில் முகமும் சிவந்தது.

“அட, இந்த லூஸு இதைத் தான் பார்த்தான். இதோ இந்தக் கயிறை நான் எடுத்தப்போ பாத்தான்”

பாக்கெட்டுக்குள் கைவிட்டு அந்தக் கயிற்றைத் தேடி எடுத்துக் காண்பித்தார்.

மேயர் நம்பமுடியாமல் தலையை அசைத்தார்.

“மேட்டர் ஹஷ்கோம், மெஸ்ஸியர் மேலண்டெய்ன் மாதிரி ஒரு கண்ணியமான ஆள் ஒரு கயிற்றைப் போய் பணப்பைன்னு தப்பா சொல்லுவார்னு நீங்க என்னை நம்ப வைக்க முடியாது”

ஹாஷ்கோமுக்குக் கோபம் தலைக்கேறியது. பக்கவாட்டில் திரும்பிக் காறித்துப்பிய அவர், “கடவுள் மேல் ஆணையாச் சொல்றேன். இது தான் உண்மை மேயர் ஸார். என் உயிரையே பணயம் வெச்சுச் சொல்றேன்.”

மேயர் தொடர்ந்தார். “அதை எடுத்தப்புறம் ரொம்ப நேரம் கீழே குனிஞ்சு பாத்துட்டு இருந்தீங்களாமே, ஏதாவது பண நோட்டு தவறி சிதறிடுச்சான்னு”

அந்த நல்ல மனிதனுக்கு ஆத்திரத்திலும் நடுக்கத்திலும் மூச்சடைத்தது.

“எப்படி இப்படி, எப்படி இந்த மாதிரி பொய்கள் சொல்ல முடியும், ஒரு நல்ல மனுஷனோட பெயரைக் களங்கப்படுத்த...யாரு இந்த மாதிரி செய்வாங்க”

அவர் என்ன சொல்லியும் பயனில்லை. யாரும் அவரை நம்பவில்லை. மாலண்டெய்னை அவரை நேரடியாக விசாரிக்க வைத்தனர். அப்போது இருவரும் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கடுஞ்சொற்கள் பேசிச் சண்டையிட்டனர். ஹாஷ்கோமே கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரைச் சோதனை போட்டனர். ஒன்றும் கிடைக்கவில்லை.

இறுதியாக மிகவும் குழப்பமடைந்த மேயர், அரசு தரப்பு வக்கீலைக் கலந்தாலோசித்த பின் மேற்படி விசாரணைக்கு அழைப்பதாக கூறி அவரை விடுவித்தார்.

சங்கதி ஊரெங்கும் பரவியது. மேயர் அலுவலகத்தை விட்டு வெளியேறியதுமே அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு ஆவலுடன் கேள்விகள் கேட்டுத் துளைத்தனர். ஆனால் அவர்களுக்குக் கோபமோ வெறுப்போ இல்லை. வம்பு கேட்கும் ஆவல் மட்டுமே. அவர் கயிறு கண்டெடுத்த கதையைச் சொன்னார். அவர்கள் யாரும் நம்பவில்லை. அவரைப் பார்த்துச் சிரித்தனர். அவர் தொடர்ந்து தனது நண்பர்களைக் கண்டு அதே கதையைச் சொன்னார். பார்த்தவர்களிடமெல்லாம் தன்னிலை விளக்கங்களையும் தனது நியாயங்களையும் சலிக்காமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு போனார். பாக்கெட்டுகளைத் திறந்து காண்பித்தார். “போடா லூஸுப் பயலே” என்றனர்.

யாருமே தன்னை நம்பாததால் கோபமும் விரக்தியுமடைந்த அவர் என்ன செய்வதென்றறியாமல் பிதற்றிக் கொண்டே இருந்தார்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலரை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றார். தான் கயிற்றைக் கண்டெடுத்த இடத்தைக் காண்பித்தார். திரும்பி வரும் வழியெல்லாம் தனக்கு நேர்ந்த அநியாயத்தைப் பற்றி பிரஸ்தாபித்துக் கொண்டு வந்தார்.

மாலையில் மறுபடியும் கிராமத்துக்குள் எல்லோரிடமும் சென்று தன் மீது ஏற்பட்ட வீண்பழியைத் துடைக்க முயன்றர். எங்கு சென்றாலும் அவநம்பிக்கையே சந்தித்தார். இதனால் இரவு தூங்க முடியாமல் அவதிப்பட்டார்.

அடுத்தநாள் மதியம் ஒருமணிக்கு மிராசுதார் ஒருவனின் வேலையாள், மேரியஸ் பாமெல் என்பவன் பணப்பையைக் கண்டெடுத்து மேட்டர் ஹால்புக்கொர்க்கிடம் ஒப்படைத்து விட்டான்.

இச்செய்தியும் காட்டுத் தீ போல் பரவி ஊர்மக்கள் அனைவரையும் எட்டியது. மேட்டர் ஹாஷ்கோமிடம் முறையாகவே தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே மிகுந்த களிப்புடன் தனது சகாக்களிடம் சென்று தனது சோகக் கதையின் சந்தோஷ முடிவைப் பற்றிப் பேசலானார். வெற்றிக் களிப்பு அவர் முகத்தில் கூத்தாடியது.

“தண்டனைக்குக் கூட நான் பயப்படலை. பொய் சொல்லி வீண்பழி சுமத்திட்டாங்களேன்னு தான் ரொம்ப கஷ்டமா போச்சு. ஒரு பெரிய பொய் மூட்டையின் அடியில் அமுங்குன மாதிரி இருந்தது.”

நாளெல்லாம் தனது கதையை வருவோர் போவோரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டம் கூடும் இடமெல்லாம். ஞாயிறன்று மாதாகோயிலில், மதுக்கடையில் குடிக்க வருபவர்களிடம், என்று முகந்தெரியாதவர்களிடம் கூடச் சொல்லி மகிழ்ந்தார். அவர் மனம் இப்போது உளைச்சலற்று இருந்தது. ஆனாலும் என்னவோ ஒரு இனம்புரியா கலவரம் உள்ளே நிகழ்வது போலிருந்தது. அவர் முதுகுக்குப் பின் மக்கள் பேசுவது போல் தோன்றியது.

செவ்வாயன்று ஹாஷ்கோம் காடர்வில் சந்தைக்குச் சென்றார், முக்கியமாக தன்னைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று அறியத் தான்.

தனது கடையின் முன் நின்றிருந்த மாலண்டெய்ன் அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.
ஒன்றும் புரியாமல் அருகே சென்று கொண்டிருந்த குடியானவர் ஒருவரிடம் பேச்சுக் கொடுக்க முயன்றார், அவ்ரோ இவரைக் கண்டவுடன் வயிற்றில் செல்லமாகக் குத்தி விட்டு, “அடேய்! பெரிய போக்கிரி அய்யா நீர்” என்று பெரிதாகச் சிரித்தார்.

மேட்டர் ஹாஷ்கோம் பெரிதும் குழம்பினார். ஏன் தன்னைப் பார்த்து அவர் அப்படிச் சொன்னார்? வழக்கம் போல் ஜார்டெயின் உணவகத்துக்குச் சாப்பிடப் போன போது தனது கதையை மீண்டும் தொடங்கினார்.

மோன்விலியர் கிராமத்திலிருந்து வந்த குதிரைக்காரன் கத்திச் சொன்னான், “ஆமாம் ஆமாம், போதும்! உன் கயிறு கதை எங்க எல்லாருக்கும் தெரியும்”

ஹாஷ்கோம் திக்கித் திணறினார், “ஆனான் அந்தப் பணப்பை தான் கிடைச்சிடுச்சில்ல?”

அதற்கு அவன் சொன்னான், “நிறுத்துமய்யா, தொலஞ்சது ஒரு விதம், கிடைச்சது ஒரு விதம். எப்படியும் உன் கை அதில் இருக்குங்கறது நிச்சயம்.”

ஹாஷ்கோம் விக்கித்து நின்றார். அவருக்கு எல்லாம் புரிந்தது. பிடிபட்டபின் தானே அந்தப் பணப்பையை யார் மூலமாகவோ கொடுத்தனுப்பி விட்டதாக இவர்கள் எண்ணுகிறார்கள் என்று. எதிர்த்துப் பேச முயன்றார். அனைவரும் சிரிக்கத் தொட்ங்கினர். கூச்சலும் கேலியும் பொறுக்க முடியாமல் சாப்பிடாமலேயே வெளியேறினார்.

கோபமும் அவமானமும் கொப்புளிக்க, தனது புத்தி சாதுர்யத்தால் நினைத்துப் பார்க்க முடியாத கயமையின் பழிக்கு ஆளாகிவிட்டதை நினைத்து மறுகினார். அதையும் கூடப் பெருமையாகவே அவர் மீது சாத்தும் கொடிய வேடிக்கையை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கொஞ்சமும் உண்மையில்லாத அபாண்டமான அந்தப் பழியின் வலி அவரது நெஞ்சைத் துளைத்தது.

மீண்டும் தனது கதையைப் பேச ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் அதை மேலும் வளர்த்தபடி, அதிகமான உணர்ச்சிவேகத்தையும் கடுஞ்சொற்களையும் சேர்த்துக் கொண்டு பேசலானார். தனியாக இருக்கும் போது கூட பல விதமான தன்னிலை விளக்கங்களையும் என்ன சொல்லி உலகை நம்ப வைப்பது என்றுமே சிந்தித்த வண்ணம் இருந்தார். அவரது வாழ்வின் பயனே அந்தக் கயிறும் அதைச் சுற்றிய கதையும் தான் என்றானது.

”அதெல்லாம் சும்மாச் சப்பைக்கட்டு,” என்றனர் அவரது முதுகுக்குப் பின். அவர் இதை உணர்ந்தார். தனது இதயத்தையே இதற்காக நொறுக்கிக் கொண்டார். அவர்கள் கண் முன்னாலேயே மொத்தமாக உயிரும் உடலும் பழுதடைந்து கொண்டு வந்தார்.

பொழுது போகாதவர்கள் சிலர் அவரைக் கயிறு கதை சொல்லும் படி அழைப்பது வாடிக்கை ஆயிற்று. போர்முனையிலிருந்து திரும்பி வந்த முதிய சிப்பாய்களை அழைத்துக் கதை கேட்பது போல. அவர் மனம் வெதும்பினார்.

டிசம்பர் மாத இறுதியில் படுத்த படுக்கையானார்.

ஜனவரி மாதம் தொடங்கிச் சிறிது நாட்களில் மரணமடைந்தார்.
சாவுக்குப் போராடிய நிலையில் நினைவு தப்பியபோதும் அவரது குற்றமற்ற நெஞ்சம் பிதற்றிக் கொண்டே இருந்தது...”ஒரு சின்ன கயிறு, ஒரு சின்ன கயிறு தான்.. இதோ பாருங்கள் மேயர்.....”

பின் குறிப்பு: மாப்பஸான் என்ற ஃப்ரெஞ்சு எழுத்தாளரின் கதையின் தமிழாக்கம் இது.

அவரது இன்னொரு கதை இங்கே.

17 comments:

சந்தனமுல்லை said...

நல்ல கதை தீபா! அழகான மொழி பெயர்ப்பு!

//”ஒரு சின்ன கயிறு, ஒரு சின்ன கயிறு தான்.. இதோ பாருங்கள் மேயர்.....”//

இது காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பது போல இருக்கிறது!!

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் தீபா,

சே ஒரு சின்ன துண்டு கயிறு ஒரு மனிதனுக்கு தூக்கு கயிறாக மாறி விட்டதே ??!! ரொம்ப நல்லவனாக இருந்தால் இது தான் கதியோ !

இது போல நடந்தவைகளுக்கு நாம் தன்னிலை விளக்கம் அளிக்க ஆரம்பித்தால் நம் கதி அதோ கதி தான். "போடாங் ஜட்டான்" என சொல்லி விட்டு நமது வேலையை பார்க்க வேண்டியது தான்.


இதைப்படித்தவுடன் எனக்கு முல்லா நசுருதீனும் அவர் மனைவியும் சேர்ந்து செய்த கழுதை பயணம் தான் ஞாபகம் வருகிறது. ஆச்சர்யமாக இது இப்போதுள்ள பதிவுலக சூழலுக்கும் பொருந்தி வருகிறது.



with care & love,

Muhammad Ismail .H, PHD,
gnuismail.blogspot.com

Unknown said...

ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்ததுதான் என்றாலும் நல்ல அருமையான மொழிபெயர்ப்பு.

rapp said...

super deepa

Joe said...

அட்டகாசமான மொழியாக்கம்!

உங்களுக்கு பிரெஞ்சு தெரியுமா?

Pattu & Kuttu said...

Very Nice and good story.. good Tamil flow .. Thanks for giving such good stories in tamil..

VS Balajee

ரவி said...

மொழிபெயர்ப்பில் முழுமையாக மூலக்கதையின் உணர்வை கொண்டுவந்திட்டீங்க, பாராட்டுக்கள்..

மாதவராஜ் said...

கதைத் தேர்வுக்கு முதலில் என் பாராட்டுக்கள். தேர்ந்த சிந்தனையும், பார்வையும் கொண்டிருக்கிறது. மொழியாக்கம் நெருடலில்லாமல், மிக இயல்பாய் கதைக்குள் வாசகனை உலவ விடுகிறது. இதுதான் உனக்கான இடமும், வெளியும். அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் நிறைய காரியங்கள் இதுபோல ஆற்ற முடியும். வாழ்த்துக்கள்.

கதை நினைவிலிருந்து இனி ஒரு போது அகன்று விடாது.

Deepa said...

நன்றி முல்லை!
நன்றி முகம்மது அலி!

நன்றி ரவிஷங்கர்!

நன்றி ராப்!

நன்றி ஜோ!
இல்லை. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தேன்.

நன்றி பாலாஜி!

நன்றி ரவி!

நன்றி அங்கிள்!
உங்கள் அன்பும் அறிவுரையும் என்றும் என்னைச் சரியாக வழிநடத்தும். மிக்க நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ம் ..:(

அபி அப்பா said...

வெல்கம் பேக் தீபா!

அகநாழிகை said...

தீபா,
கதையை இன்னும் படிக்கவில்லை. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Deepa said...

நன்றி முத்துலெட்சுமி
நன்றி அப் அப்பா
நன்றி ”அகநாழிகை”

Unknown said...

தீபா! நீங்கள் தேர்வு செய்த கதையும்,மொழிபெயர்பும் நன்றாக உள்ளது.மேலும் கதைகள் படிக்க ஆவல்...வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

மொழி பெயர்ப்பு சுவாரஸ்யமாக இருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகாக தெளிவாக சுவாரஸ்யமாக படிப்பவர்களின் எண்ணம் சிதறாமல் மொழிபெயர்த்துள்ளீர்கள் தீபா.

Deepa said...

நன்றி anto
நன்றி ஜமால்
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா