Monday, March 22, 2010

ஒரு அரசாங்க குமாஸ்தாவின் மரணம்

ஓர் இனிமையான மாலைப் பொழுதில், ஐவன் திமித்ரி என்ற அரசாங்க குமாஸ்தா தனது ஓபரா கண்ணாடியின் வழியாக "க்லாசஸ் த கார்ன்வில்" மேடை நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்தார். நாடகத்துடன் ஒன்றி ஒருவித மனோலயத்தில் திளைத்திருந்தார்.

திடீரென்று... - இந்தத் "திடீரென்று" என்ற சொல் கதைகளில் நிறைய வருகின்றன. ஆனால் அதிலொன்றும் வியப்போ மிகைப் படுத்தலோ இல்லை. வாழ்க்கை என்பதே திடீர் திருப்பங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது தானே!

அதைப் போல் திடீரென்று ஐவனின் முகம் சுழித்தது. கண்கள் செருகின...மூச்சு ஒரு கணத்துக்கு நின்றது; கண்ணாடிகளைக் கழற்றி விட்டுக் குனிந்து.. "ஹச்சூ" என்று தும்மினார். தும்முவதை யாரும் எப்போதும் குறை சொல்ல முடியாது. அரசன் ஆண்டி என்று பேதம் பார்க்காமல் வரும் விஷயம் அது. அதனால் ஐவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு, நல்லியல்புள்ள ஒருவனைப் போல், யாரையாவது சங்கடப்படுத்தி விட்டோமா என்று சுற்றும் முற்றும் பார்த்தார்.

அப்போது தான் அந்தக் காட்சியைக் கண்டார். அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த வயதான கனவான் ஒருவர் தன்க்குள் ஏதோ முனகியவாறே, தனது கையுறையினால் த‌ன‌து வ‌ழுக்கைத் த‌லையையும் பின்ன‌ங்க‌ழுத்தையும் துடைத்துக் கொண்டிருந்தார்.

அவ‌ர் வேறு யாருமல்ல‌, போக்குவ‌ர‌த்துத் துறையைச் சேர்ந்த‌ உய‌ர் அதிகாரி ப்ரிஜலோவ் என்ப‌தைக் க‌ண்டு கொண்டார் ஐவ‌ன்.

'அடடா இவ‌ர் மேல‌ துப்பிட்டோமே! இவ‌ர் ஒண்ணும் என் பாஸ் இல்ல‌.. இருந்தாலும் ச‌ங்க‌ட‌மா இருக்கு..ம‌ன்னிப்புக் கேட்க‌ணும்' என்று நினைத்துக் கொண்டார்.

லேசாக‌ச் செருமிக் கொண்டு த‌ன் முழு உட‌லையும் முன்னால் வ‌ளைத்து அந்த‌ அதிகாரியின் காத‌ருகே குனிந்தார் ஐவ‌ன்.

"ம‌ன்னிக்க‌ணும் ஸார். உங்க‌மேல‌ த‌வ‌றுத‌லா தும்மிட்டேன்"

"ப‌ர‌வால்ல‌, ப‌ர‌வால்ல...."

"க‌ட‌வுள் பேரால‌ என்னை ம‌ன்னிச்சுடுங்க‌. நான் வேணும்னு ப‌ண்ண‌ல‌."

"அட‌, பேசாம‌ உட்காருய்யா! நாட‌க‌த்தைக் கவ‌னிக்க‌ விடு."

ஐவ‌னுக்கு த‌ர்ம‌ச‌ங்க‌டமாகிப் போன‌து. அச‌ட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு நாட‌க‌த்தைப் பார்க்க‌லானார். ஆனால் அவர் ம‌ன‌ம் அதில் முன் போல் லயிக்க‌வில்லை. ந‌ட‌ந்த‌தையே நினைத்துச் ச‌ங்க‌ட‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தார்.

இடைவேளையின் போது ப்ரிஜலோவின் அருகே சென்றார். மிகவும் கஷ்டப்பட்டுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முணுமுணுத்தார்:

"உங்க‌ மேல தெரியாமத் துப்பிட்டேன், பெரியவங்க நீங்க, என்னை ம‌ன்னிச்சுடுங்க‌... நான் வேணும்னே செய்ய‌ல‌ பாருங்க‌..."


"ஐயோ! போதும்! நான் அதை மறந்தே போயிட்டேன். நீ ஏன் அதையே பேசிக்கிட்டு? " - பொறுமையிழந்து கத்தியதில் அவர‌து கீழ் உத‌டு துடித்த‌து.

'அவ‌ர் ம‌ற‌ந்திருக்க‌லாம், ஆனா அவ‌ர் க‌ண்ணுல‌ கோப‌ம் இன்னும் தெரியுது' என்று ம‌ன‌ம் ச‌மாதான‌மாகாம‌ல் அவ‌ரையே பார்த்தார் ஐவன். 'அவ‌ருக்கு என்னோட‌ பேச‌வே பிடிக்க‌ல‌. நான் வேணும்னே பண்ணல, இயல்பா தும்மல் வந்துடுச்சுன்னு அவ‌ருக்குப் புரிய‌வெச்சாக‌ணும். இல்லாட்டி இப்ப‌ இல்லான்னாலும் நாளைக்கு என் மேல‌ அவ‌ருக்குத் த‌ப்பெண்ண‌ம் வ‌ர‌லாம்!'

வீட்டுக்குப் போன‌தும் ம‌னைவியிட‌ம் த‌ன்னுடைய‌ ம‌ரியாதை கெட்ட‌ ந‌ட‌த்தையைப் ப‌ற்றிச் சொன்னார். அவ‌ர் ம‌னைவி அதைப் பெரிதாக‌ எடுத்துக்கொள்ளாத‌து அவ‌ருக்கு விய‌ப்பாக‌ இருந்த‌து. முத‌லில் ச‌ற்றுப் ப‌ய‌ந்தாலும் ப்ரிஜ‌லோவ் வேறு இலாகாவைச் சேர்ந்த‌வ‌ர் என்று அறிந்த‌தும் அவ‌ருக்குக் கொஞ்ச‌ம் தைரிய‌மாக‌ இருந்த‌து. இருந்தாலும் அவ‌ர் ஐவ‌னிட‌ம் சொன்னார், "நீ எதுக்கும் போய் ம‌ன்னிப்புக் கேட்டுடு. இல்லாட்டிப் பொது இட‌த்தில‌ எப்ப‌டி ந‌ட‌ந்துக்க‌ணும்னு கூட‌த் தெரியாத‌வ‌ர்னு உன்னை நென‌ச்சிட‌ப் போறார்."

"அதே தான். அதுக்காக‌த் தான் நான் உட‌னே ம‌ன்னிப்புக் கேட்டேனே. ஆனா அவ‌ர் அதைச் ச‌ரியா எடுத்துக்கிட்ட‌ மாதிரி தெரிய‌ல. ஒழுங்காப் பேச‌ அங்க‌ நேர‌மும் கிடைக்க‌ல‌."

ம‌றுநாள், புத்த‌ம்புதிய‌ சீருடை அணிந்து கொண்டு, த‌லைமுடியைச் சீராக‌ வெட்டிவிட்டுக் கொண்டு, ப்ரிஜ‌லோவிட‌ம் ம‌ன்னிப்புக் கேட்க‌ச் சென்றார் ஐவன். அவ‌ர‌து அலுவ‌ல‌க‌ வாயிலில் எண்ண‌ற்ற‌ பேர் ம‌னுக்க‌ளோடு காத்திருந்த‌ன‌ர். ஒவ்வொருவ‌ராக‌ விசாரித்துக் கொண்டு வ‌ந்த‌ ப்ரிஜ‌லோவ் ஐவனை ஏறிட்ட‌ போது, "அது வந்து ஸார்...நேத்திக்கு நாட‌க‌த்துல‌, ஞாப‌க‌மிருக்கா ஸார்? வ‌ந்து...நான் திடீர்னு தும்மி... "

"நான்சென்ஸ்! என்ன‌ பைத்திய‌க்கார‌த்த‌ன‌ம் இது...அடுத்த‌து யாருப்பா?" என்று ஐவ‌னுக்கு அடுத்த‌ ம‌னுதார‌ரை அழைத்தார் ப்ரிஜ‌லோவ்.

புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ராய்த் திரும்பிய‌ ஐவ‌ன், "அவ‌ர் என் கூட‌ பேச‌வே மாட்டேங்குறாரு. அப்ப‌டின்னா எவ்வ‌ளோ கோவ‌மா இருப்பாரு? இல்ல.. இதை இப்ப‌டியே விட‌க்கூடாது. நான் அவ‌ர் கிட்டெ பேசியே ஆக‌ணும்."

க‌டைசி ஆளையும் பார்த்து அனுப்பிவிட்டு உள்ளே போக‌ ய‌த்த‌னித்த‌ ப்ரிஜ‌லோவின் அருகே மீண்டும் சென்று குள‌றினார் ஐவன்:

"யுவ‌ர் எக்ஸ‌லென்ஸி, உங்க‌ளைத் தொந்த‌ர‌வு செய்றேன்னா அதுக்கு என் குற்ற‌வுண‌ர்ச்சி தான் கார‌ண‌ம். நான் வேணும்னு செய்ய‌ல‌ன்னு ம‌ட்டும்
த‌ய‌வு செஞ்சு ந‌ம்புங்க‌.."

"ஏன்யா என்னைக் கிண்ட‌ல் ப‌ண்றியா?" என்று கர்ஜித்து விட்டுக் க‌த‌வைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார் அந்த‌ அதிகாரி.


'அய்யோ நான் எங்க‌ கிண்ட‌ல் ப‌ண்ணேன்? இவ்ளோ பெரிய‌ அதிகாரியா இருந்துக்கிட்டு இந்த‌ச் சின்ன‌ விஷ‌ய‌த்தைப் புரிஞ்சுக்க‌ மாட்டேங்க‌றாரே? ச‌ரி இவ‌ர் இப்ப‌டி நினைச்சார்னா நான் அவ‌ர்கிட்ட‌ இனிமே போய் ம‌ன்னிப்புக் கேட்க‌ மாட்டேன். ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதி அனுப்பிட‌றேன். நேர்ல‌ இனிமே போய்ப் பேச‌ வேணாம்' என்று எண்ண‌மிட்ட‌ப‌டி வீடு நோக்கி ந‌ட‌ந்தார் ஐவ‌ன்.

வீட்டுக்குப் போய் ரொம்ப‌ நேர‌ம் யோசித்துப் பார்த்தார். அவ‌ரால் க‌டித‌ம் எழுத‌ முடிய‌வில்லை. ம‌றுநாளும் நேரிலேயே போய் ம‌ன்னிப்புக் கோருவ‌து என்று முடிவு செய்தார்.

அதிகாரி அவ‌ரைப் பார்த‌த‌தும், "உங்க‌ளை நேத்திக்குத் தொந்த‌ர‌வு செஞ்சுட்டேன். ஆனா நீங்க‌ சொன்ன‌ மாதிரி உங்க‌ளைக் கிண்ட‌ல் ப‌ண்ண‌ல‌ ஸார். உங்க‌ மேல‌ த‌வ‌றுத‌லா துப்பிட்ட‌துக்கு ம‌ன்னிப்புக் கேட்க‌த் தான் வ‌ந்தேன். உங்க‌ளைக் கிண்ட‌ல் ப‌ண்ண‌னும்னு க‌ன‌வுல‌ கூட‌ நினைக்க‌ மாட்டேன் ஸார்!"


"போய்யா இங்கேர்ந்து" க‌டும் கோப‌த்துட‌ன் க‌த்தினார் அதிகாரி ப்ரிஜ‌லோவ்.


"என்ன‌ ஸார்?" ப‌ய‌த்தில் ந‌டுங்கிய‌ப‌டியே கேட்டார் ஐவ‌ன்

"வெளிய‌ போய்யா " எழுந்து நின்று முக‌ம் சிவ‌க்க‌க் க‌த்தினார் அதிகாரி.

ஐவ‌னுக்கு வ‌யிற்றை என்ன‌மோ செய்த‌து. பிர‌க்ஞைய‌ற்று வாச‌ல் வ‌ழியே வெளியேறிய‌வ‌ர், தெருவில் இற‌ங்கித் த‌ள்ளாடி ந‌ட‌ந்தார். இய‌ந்திர‌க‌தியில் வீட்டை அடைந்த‌வ‌ர், உடையைக் கூட‌ மாற்றாம‌ல் சோஃபாவில் ச‌ரிந்து இறந்து போனார்.

Disclaimer: புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர் ஆன்ட‌ன் செக்கோவ் எழுதிய‌ "Death of a government clerk" என்ற‌ சிறுகதையின் தமிழாக்கம்(ஆங்கிலத்திலிருந்து).

13 comments:

ரிஷபன் said...

ஆண்டன் செகாவின் இந்தக் கதை மறுபடி படித்த போதும் அதன் சுவை கொஞ்சங்கூட குறையவில்லை..

கே.என்.சிவராமன் said...

நல்ல முயற்சி. சீரான தமிழாக்கம். தொடருங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மாதவராஜ் said...

நன்று தீபா.

இந்தக் கதையை எத்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் புதுசாகவேத் தோன்றுகிறது. இப்போதும், உன் மொழியாக்கத்தில். இந்தக் கதை மட்டுமல்ல, செக்காவின் சிறப்பே இதுதான். இப்படியான சாதாரணர்கள் எத்தனை பேர் நம் கண்ணெதிரே இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அஞ்சி, அஞ்சிச் சாகும் மனிதர்கள். அதுதான் காலம் கடந்தும் இது போன்ற கதைகள் நிற்கின்றன.

கோவில்பட்டி சிருஷ்டிக்குழுவினர் இந்த கதையை வீதி நாடகமாக்கினார்கள். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர், சாரதி போன்றவர்களெல்லாம் நடித்திருப்பார்கள். 1990களின் பிற்பகுதியை நினைவிலாடச் செய்துவிட்டது இந்தக் கதை.

செக்காவின் கதைகள் மிகச்சிலவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடம் சொன்னார். அவருடைய கதைகள் பலவற்றை உன்னால் தமிழுக்கு அதன் நெருக்கத்தோடு கொண்டு வரமுடியும் என இந்தக் கதை நம்பிக்கையளிக்கிறது. செய். காலம் உன்னை வாழ்த்தும்.

பத்மா said...

நல்லா இருக்குங்க தீபா .ஒரிஜினாலிட்டி சிதையா வண்ணம் நல்லா வந்துருக்கு

அண்ணாமலையான் said...

சிறப்பாக அமைந்திருக்கிறது

செல்வநாயகி said...

சீரான தமிழாக்கம். தொடருங்கள்.

சந்தனமுல்லை said...

நல்ல முயற்சி!

Romeoboy said...

நல்லா இருக்குங்க கதை. உங்க நடை

Shyam said...

வாழ்க்கை என்பதே திடீர் திருப்பங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது தானே!

Correct Sir!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

திடீரென்று... - இந்தத் "திடீரென்று" என்ற சொல் கதைகளில் நிறைய வருகின்றன. ஆனால் அதிலொன்றும் வியப்போ மிகைப் படுத்தலோ இல்லை. வாழ்க்கை என்பதே திடீர் திருப்பங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது தானே! //

சூப்பர்.

எவ்வளோ நாள் ஆச்சு உங்க தமிழாக்கம் / மொழிபெயர்ப்பு படிச்சு.
அந்தக்குறையை இந்தக்கதையின் மூலம் தீர்த்துவெச்சுட்டீங்க.

இது போன்ற முயற்சிகள் தொடரட்டும். ப்ளீஸ்.

Thenammai Lakshmanan said...

ஆண்டன் செகாவ் கதை மொழிபெயர்ப்பு அற்புதம் தீபா இன்னும் அடுத்த கதைகளும் எதிர்பார்க்கிறோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

இதை நான் கூட படித்திருக்கிறேன்..சூப்பர் தீபா..

திடீரென்று என வருவதுபோல..இன்று அனைத்து நாடகங்கள். மெகா சீரியல்கள்,படங்கள் என எல்லாவற்றிலும் வரும் ஒரு வசனம்..'தெரியாமல்தான் கேட்கிறேன்" என்பதும்..

பா.ராஜாராம் said...

நல்ல பகிரல் தீபா.இப்பதான் வாசிக்கிறேன் இவரை. :-(